• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 14

STN 23

New member
அன்று காலையே ராகவியை பெண் பார்க்க வரும் விஷயத்தை பார்த்தசாரதி வீட்டில் சொல்ல, பரிமளாவும் சுந்தரவல்லியும் திகைத்துப் போயினர்.

ஆனால் பண்ணைக்கு கிளம்பி கொண்டிருந்த ராகவி தந்தையை அசராமல் பார்த்திருந்தாள்.

“உனக்கு தனியா சொல்லணுமா? போ… போய் புடவை கட்டு தயாராகு..” என்றார் கட்டளையாக.

“எந்த நம்பிக்கையில ப்பா அவங்களை வர சொல்லி இருக்கீங்க?” என்று இரு கரங்களையும் கட்டிக்கொண்டு தந்தையை அழுத்தமாக பார்த்தாள்.

“என் பொண்ணு என் விருப்பப்படி தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னதா ஞாபகம். அந்த நம்பிக்கையில தான் வர சொல்லி இருக்கேன்…” என்றவர் மகளருகே வந்து,

“சொன்னா புரிஞ்சுக்கோ தங்கம்மா, நம்மோட வாழ்க்கையில நாம மட்டும் இல்ல. நம்மை சுற்றி இருக்குறவங்களும் சேர்ந்து தான்.. நாலு பேரை மீறி நடக்க முடியாது டா அது தான் நிஜம்…”

“ஊருக்கு தலை கட்டா இருக்கிறவன் எடுத்துகாட்டா இருக்கிறது மட்டுமில்லை சில நேரம் தன்னிச்சையா முடிவு எடுத்திட முடியாது. அதுவும் மத்தவங்க எதிர்க்கிற ஒரு விஷயத்தை எக்காரணம் கொண்டும் செய்ய கூடாது..”

“அப்புறம் நாலு பேர் நாக்கு மேல பல்லை போட்டு நம்மளை பேசுவான். பரம்பரை பரம்பரையா ஊருக்கு நல்லது கெட்டது பார்க்கிறது நாம தான். அதுக்கு ஏத்த மாதிரி சில விஷயங்களை விட்டு கொடுத்து அனுசரிக்க கத்துக்கணும்..”

“அவனை மறந்துட்டு நீ உன் வாழ்க்கையை பார்க்கிறது தான் எல்லாருக்கும் நல்லது. நீ புத்திசாலி கண்டிப்பா முட்டாள்தனமான எந்த காரியமும் பண்ண மாட்டன்னு நம்புறேன்..” என்றிட அதற்கு மேல் வாதிடாமல் அமைதியாக சென்று தயாராக தொடங்கினாள் ராகவி.

ராகவி அமைதியாக இருந்த போதும் சுந்தரவல்லி, பரிமளாவால் அப்படி இருக்க முடியவில்லை. முரளி தான் இந்த வீட்டு மருமகனாக வர வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கின்றனர் அப்படி இருக்கையில் இந்த திடீர் பெண் பார்க்கும் படலம் அவர்கள் வயிற்றில் புளியை கரைத்தது.

என்னதான் பார்த்தசாரதி தங்கை குடும்பத்துடன் உறவை முறித்துக் கொண்டாலும், மற்றவர்களால் அப்படி இருக்க முடியவில்லை. அதிலும் சுந்தரவல்லிக்கு மகன், மகள் இருவருமே இரண்டு கண்கள் போல.

மகளுக்காக ஊர் உறவின் மத்தியில் மகன் கொண்ட இழப்பு சாதாரணமானது கிடையாது. அதை கண்டு வருந்தியவருக்கு அதற்கு மேலும் மகனை எதிர்த்து மகளுக்கு துணை நின்று சாரதியை வருத்த செய்ய மனமில்லை.

அதே நேரம், மருமகன் செய்த தவறுக்காக மகளை அவரால் ஒதுக்க முடியவில்லை.

பார்த்தசாரதி சொன்னது போல மங்கை அவர்கள் வீட்டோடு வந்து இருந்திருக்கலாம் ஆனால் வரவில்லை.

அந்த அளவுக்கு அவருக்கு தன் கணவர் மீது நம்பிக்கை.

நிச்சயம் அவரின் செயலுக்கு பின்னால் பலமான ஒரு காரணம் இருக்கும் என்று நம்பியவருக்கு, “அவரின் மனைவி” என்ற அடையாளத்தை இழக்க மனமில்லை.

சாரதியும் மனமுவந்து தங்கையை தாலியை கழற்றி போட்டு விட்டு வர சொல்லவில்லை. உறவுகள் கொடுத்த அழுத்தத்தில் தான் அந்த முடிவிற்கு தள்ளபட்டார் என்று சொல்ல வேண்டும்.

சுந்தரவல்லியால் வெளிப்படையாக மகளோடும், அவள் குடும்பத்தோடும் உறவாட முடியாத நிலையில், ரகசியமாக தான் அவர்களைப் பார்த்து வந்தார்.

எப்படியாவது பேரனுக்கும் பேத்திக்கும் ஒரு முடிச்சை போட்டு இருபது வருட இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதுதான் அவர் வாழ்நாள் ஆசை.

ஆனால் இன்று மகன் செய்து வைத்திருக்கும் காரியத்தை கண்டு பதறிப் போய் விட்டார். உடனே யாருக்கும் தெரியாமல் அறையினுள் வந்து பேரனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டார்.

பக்கத்து ஊருக்கு சென்று இருந்த முரளி சுந்தரவல்லியின் அழுகையில், “இப்போ என்ன நடந்துடுச்சுன்னு நீ அழற ஆயா? என்னை மீறி எவனும் அவ கழுத்துல தாலி கட்ட முடியாது. அதுக்கு முதல்ல என் பொண்டாட்டியும் ஒத்துக்க மாட்டா…”

“என்ன யா சொல்ற?”

“தைரியமா இருன்னு சொல்றேன் ஆயா.. கண்டவனும் பொண்ணு பார்க்க வந்துட்டானா, ஆச்சா? நான் ஊருக்கு தான் வந்துட்டு இருக்கேன் நீ அழுகையை நிறுத்திட்டு போய் ராகவிக்கு துணையா இரு..” என்று அவரை தேற்றினான்.

சொன்ன நேரத்தில் பெண் பார்க்க வந்தவர்களை வாசலுக்கே சென்று வரவேற்று அமர்த்தினார் பார்த்தசாரதி.

“என்ன பார்த்துட்டு நிற்கிற? போய் தண்ணி கொண்டு வா..” என்றார் மனைவியிடம்.

ஆனால் அவர் சுந்தரவள்ளியை பார்த்திருக்க, “போடி!!” என்பதாக வாய் அசைத்தார்.

சமையல் அறையில் தண்ணீரை தயாராக வைத்திருந்த மகளை கண்டவருக்கு கண்கள் நிறைந்து போனது.

“சொன்னா கேளு ராகவி, உங்க அப்பாவை எப்படியாவது நம்ம சரி கட்டலாம்.. நீ அங்கே வராதடி”

“ம்மா, புடவை கட்டிட்டு போய் நின்னாலே கல்யாணம் என்று அர்த்தம் கிடையாது. இது அப்பாவோட ஆசைக்காக தான்!! அதோடு இங்க வந்த பிறகு நான் புடவை கட்டி ரொம்ப நாளாச்சு இல்லையா?! எல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ எடுத்துட்டு போம்மா” என்று அவருக்கு தைரியம் சொன்னாள்.

தண்ணீரைக் குடித்து முடித்த பார்த்தசாரதியின் பங்காளி ஒருவர், “அப்புறம் என்னப்பா, நல்ல நேரத்துலயே பொண்ணு வர சொன்னீங்கன்னா பார்த்துட்டு, பேச வேண்டியதை பேசிடலாம்..” என்றார்.

கூடத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்த ராஜீவ் ஆணழகன் தான்!! மறுப்பதற்கு இல்லை. அதிலும் ஆங்கில வாசனை அதிகமாக வீசிய அவன் பேச்சை கேட்பவர் யாராக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு அவனுக்கு சம்மதம் கொடுப்பார்கள். அந்தளவு மொழி ஆளுமை பெற்றிருந்தான்.

இங்கே வரும் முன்பாகவே அவனுக்கு ராகவியின் புகைப்படம், அவளின் படிப்பு, வேலை குறித்த விபரங்களை கொடுத்திருந்தனர். அதிலேயே அவனுக்கு ஏற்ற ஜோடி ராகவி தான் என்றும் வெளிநாட்டில் அவளுக்கும் வேலை வாங்கி விடலாம் என்று கணக்கு போட்டிருந்தான்.

இருவரும் சிறுவயதில் ஒரே பள்ளியில் தான் படித்தனர். அவளை விடவும் ராஜீவ் இரண்டு வயது பெரியவனாக இருந்த போதிலும், பேர் சொல்லி அழைப்பது தான் ராகவியின் பழக்கம்.

சிறுவயதில் இருந்தே ஆளுமையான குணம் கொண்ட ராகவியை ராஜீவிற்கு மிகவும் பிடிக்கும். அவள் தான் பெண் என்று சொல்லவும் மனமார திருமணத்திற்கு சம்மதித்தான்.

பெண் பார்க்க வருவதெல்லாம் சம்பிரதாயத்திற்கு தான்!! இப்போதே தாலியை கொடுத்து கட்ட சொன்னாலும் அவன் அதற்கு தயார்.

ராகவி அனைவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுக்க, முக்கிய தலைகள் எல்லாம் ஆளாளுக்கு ராகவியிடம் ஒரு கேள்வியை கேட்க, அவளும் என்றுமில்லாத வகையில் அதீத பணிவோடு பதில் சொன்னாள்.

“எனக்கு ராகவி கிட்ட பேசணும், பேசலாமா?” என்று ராஜீவ் கேட்க ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள்.

ஒருவேளை அவன் இதைக் கேட்காமல் போயிருந்தால் அவளாகவே அவனோடு தனித்து பேசுவதை குறித்து சபையில் பேசியிருப்பாள். ஆனால் அவன் தனக்கு வேலை வைக்காததில் எழுந்த ஆச்சரியம் தான் அது!

“இந்த காலத்து பசங்க ரொம்பவே வேகமா இருக்காங்க..” என்று சிரித்த பெரியவர் “கூட்டிட்டு போ ராகவி” என்றார்.

ராஜீவை அழைத்து கொண்டு பின்புறம் இருந்த தோட்டத்திற்கு சென்றாள்.

அங்கிருந்த திண்ணையை அவனுக்கு காண்பித்து அதன் ஒரு ஓரத்தில் ராகவி அமர்ந்தாள்.

சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்திருந்தவன், “எவ்ளோ சேஞ்சஸ் ராகவி உன்கிட்ட. அப்போ பாவாடை சட்டையில் ரெட்டை குடுமி போட்டுக்கிட்டு இருந்த குட்டி பொண்ணா இதுன்னு பார்க்கிறேன்… ரியலி யூ லுக் வெரி ஃபென்டாஸ்டிக்!” என்றான் எடுத்ததுமே.

“பட் உன்கிட்ட எந்த மாற்றமும் இல்ல ராஜீவ். அப்போ போலவே தான் இப்பவும் இருக்க...” என்றாள் தீவிரமான குரலில்.

“அப்படியா?”

“ஆமா. எடுத்ததுமே பொண்ணுங்க கிட்ட ஃபிளர்ட் (Flirt) பண்ணுறது, ஜொள்ளு ஊத்துறதை இப்போ வரைக்கும் நீ விடவே இல்லையே?!” என்றாள் சிரிப்போடு.

அவள் பேச்சில் எழுந்த அதிர்ச்சியோடு ராஜீவ் ராகவியை பார்த்துக்கொண்டிருக்க, “லிசென் ராஜீவ், எனக்கு எப்பவுமே சுத்தி வளைச்சு பேச தெரியாது.. எதுவா இருந்தாலும் ஃபேஸ் டூ ஃபேஸ் ஸ்ட்ரெயிட் டீலிங் தான்!!”

“சின்ன வயசுல இருந்தே நீ அப்படி தானே?! எப்பவும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா இருக்கும் உன் பேச்சு..”

“எஸ், எக்ஸாக்ட்லி!! அதை தான் நானும் சொல்ல வந்தேன்..”

“சொல்லு ராகவி..” என்றான் சிறு தலையசைப்போடு.

“ராஜீவ் நான் என் மாமூவை லவ் பண்றேன். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அவரோடு தான்!!”

“அப்போ இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானே?”

“ஊருக்கே தெரிஞ்ச விஷயத்தை புதுசா நான் என்ன சொல்றது? எங்க வீட்டுல இருக்கிறவங்க தொடங்கி உன்னை கூட்டிட்டு வந்த பெருசுங்க வரைக்கும் எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியும்..”

“ரியலி?!”

“ஆமா. அப்புறம் ஏன் உன்னை கூட்டிட்டு வந்து இங்க உட்கார வச்சுருக்காங்கன்னு நீ அவங்களைத்தான் கேட்கணும். என்ன கேட்டா நான் என்ன சொல்ல?” என்றாள் தலை சாய்த்து.

அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவன் ஒரு முடிவோடு, “ஓகே ஃபைன் ராகவி. ஐ அண்டர்ஸ்டான்ட் பட் இப்போலாம் ஃபாஸ்ட் இல்லாத ஆட்கள் என்று யாரும் கிடையாது. இது ரொம்ப காமன்.. நான் பெருசு படுத்த மாட்டேன்..” என்றான் பெருந்தன்மையாக.

“ஹே!! வைட், வைட்.. நான் எப்ப இது ஃபாஸ்ட்னு சொன்னேன்? ஃபாஸ்ட் மட்டுமில்லை இதுதான் ப்ரசென்ட், ஃபியூச்சரும் கூட. இதுல மாற்றமே கிடையாது…”

“மாற்ற நினைச்சாலும் அதுக்கு நான் விட மாட்டேன்.. ஒருவேளை இதுக்கு குறுக்கு யாராவது வந்தா நிச்சயம் சின்னா பின்னமாகிடுவீங்க.. அதை சொல்றதுக்கு தான் உன் கூட வந்தேன்…”

“என்ன சொல்ற?”

“டேய்… என் மனசுல மாமூ தான் இருக்காருன்னு சொல்றேன் அதுக்கப்புறமும் என்ன உட்கார்ந்துட்டு ஃபாஸ்ட் ப்ரெசென்ட்னு கிளாஸ் எடுத்துட்டு இருக்க?” என்று கோபத்தோடு கேட்க மிரண்டு போனான் ராஜீவ்.

“என்.. என்ன.. என்ன சொல்ற நீ”

“ப்ச் தமிழ்ல தானே பேசிட்டு இருக்கேன்.. புரியலையா? ஆர் டூ யூ வான்ட் மீ டூ டாக் இன் இங்கிலீஷ்” என்றிட ‘இல்லை’ என்று தலை அசைத்தான்.

“லுக், நான் இவ்ளோ எச்சரித்த பிறகும் அதை மீறி நீ என்னை கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்பட்டேனா?” என்றவள் ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தி ஆழ்ந்த மூச்சை எடுத்து, “கல்யாணம் என்கிற அசம்பாவிதத்துக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.. இருந்தாலும் சொல்றேன் உன் உசுரு உனக்கு இல்ல. புரியுதா?”

“என்ன ராகவி ரவுடி மாதிரி பேசுற?”

“எப்படி பேசினா என்ன? உனக்கு விஷயம் ஒழுங்கா கன்வே ஆகுதான்னு தான் பார்க்கணும்…” என்றவள்,

“ஆமா, நீ நியூஸ் எல்லாம் பார்க்கறதில்லையா? ஈவன் வாட்ஸ் அப்ல முக்கியமான நியூஸ் வருமே அது கூட ஃபாலோ பண்ண மாட்டியா?”

“என்ன விஷயம்னு சொல்லு ராகவி… இப்படி கேள்வியா கேட்டு கொல்லாத…”

“இதோ பார் எந்த பெண்ணா இருந்தாலும் முதல்ல, கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கா? இந்த கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டு கல்யாணம் பண்ணு…”

“ஏன் அப்படி சொல்ற?”

“ஏன்னா இப்போல்லாம் எத்தனையோ பொண்ணுங்க அப்பா அம்மா வற்புறுத்தலுக்காக, இன்னும் சில கட்டாய காரணங்களுக்காக கல்யாணம் பண்ணிட்டு, ஃபர்ஸ்ட் நைட் இல்லை ஹனிமூன்ல அந்த பசங்களை போட்டு தள்ளிடுறாங்க…”

“பாவம் பொண்ணுங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம அழகுக்காகவும், பணத்துக்காகவும் கல்யாணம் பண்ணிட்டு அல்ப ஆயுசுல போயிடுறாங்க.. அதனால தான் சொல்றேன்…”

“கல்யாணம் என்பது ஒரு நாள் கூத்து கிடையாது. வாழ்க்கை முழுக்க வரக்கூடிய பந்தம். அதுல ரெண்டு பேரோட விருப்பமும் முக்கியம். நீ சொல்ற மாதிரி ஃபாஸ்ட் இல்லாத மனுஷங்க யாருமே இல்லன்னாலும்.. அதைப் பற்றி தீர விசாரிச்சுட்டு புரிஞ்சுக்கிட்டு அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கணும்..”

“முடிஞ்சா அந்த பொண்ணோட மனசை புரிஞ்சுகிட்டு அவ விருப்பத்துக்கு ஹெல்ப் பண்ணு. முடியலைன்னா விருப்பம் இல்லைன்னு சொல்லி கிளம்பிடு. ஆனா கல்யாணம் என்ற பெயரில் நாளைக்கு உசுர விட்டுடாதீங்க..” என்றிட அவன் முகம் வெளிறிப்போனது.

“பயப்படாத ராஜீவ், நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன். அதுக்கு முதல்ல கல்யாணம் நடக்கணும். என்னை மீறி அது நடக்காது ஆனா மத்தவங்க சொன்னாங்க என்பதற்காக ஒரே பொண்ணு, வசதி ஜாஸ்தி, மொத்த சொத்தும் உனக்குத்தான்னு கணக்கு போட்டுட்டு எதுவும் செஞ்சு தொலைக்காத… புரியுதா?”

“கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல வைஃப் கிடைப்பாங்க. இப்ப நீ என்ன பண்ற., வெளியே போயிட்டு எங்க அப்பா கிட்ட ‘எனக்கு பிடிக்கல, பேசின வரையில் ரெண்டு பேரோட டேஸ்டும் வேற மாதிரி இருக்கு’ன்னு சொல்லிட்டு கிளம்பிடு..”

“இதெல்லாம் உன் மேல உள்ள அக்கறையால தான் சொல்றேன்..” என்றதில் புன்னகையோடு எழுந்து கொண்டவன், “இவ்வளவு வருஷம் ஆகியும் நீ மாறவே இல்ல ராகவி. உருவம் மட்டும் தான் மாறி இருக்கு பட் நீ அப்படியே தான் இருக்க..” என்றிட அவள் முகத்திலும் புன்னகை.

“ஸ்கூல் டேஸ்ல ரெண்டு மூணு பேரு உன்னை லவ் பண்ணாலும், எவனுக்கும் உன்கிட்ட வந்து சொல்ல தைரியம் கிடையாது. உன்னோட விருப்பம் தெரியாம இங்க வந்தது தப்பு, ஐ’ம் ஸாரி…”

“எதுக்கு ராஜீவ் ஸாரி எல்லாம்?! அப்படி பார்த்தா உன்னை இவ்வளவு தூரம் பயமுறுத்தினதுக்கு நான் தான் ஸாரி சொல்லணும். ஆனா யாரும் சொல்ல வேண்டாம். மியூச்சுவலா விஷ் பண்ணிட்டு அவங்க அவங்க வழியை பார்த்துக்கலாம்..”

புன்னகையோடு அவள் பேச்சை ஆமோதித்தவன் வெளியில் வந்து, “தனக்கு பெண்ணை பிடிக்கவில்லை” என்றான்.

உடனே அங்கே சலசலப்பு எழ பார்த்தசாரதி மகளை தான் பார்த்தார்.
அவளோ அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

அதிலேயே ‘இது மகளின் வேலை’ என்பது அவருக்கு நன்கு புரிந்தது.

ராஜீவ் அவன் குடும்பத்துடன் கிளம்ப, மற்றவர்களும் எழுந்துக் கொண்டனர்.

“ஒரு நிமிஷம்…” என்று அவர்களை தடுத்தவள், “உங்க கிட்ட பேசணும், உட்காருங்க..” என்றாள்.

‘எதற்காக தங்களை இருக்க சொல்கிறாள்’ என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அவர்களும் அமர்ந்தனர்.
 
Top Bottom