• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 15

STN 23

New member
ராஜீவ்வின் குடும்பம் கிளம்பவுமே மற்றவர்களை அங்கேயே இருக்க சொன்னாள் ராகவி.

“எதுக்கு மா எங்களை இருக்க சொன்ன?” என்று ஒருவர் கேட்க,

“சொல்றேன் சொல்றேன்.. அதுக்கு முன்ன உங்களில் யாரு இந்த சம்பந்தத்தை கொண்டு வந்தது?” என்றாள்.

“ஏன்? நான தான்!!” என்றார் அவளின் பெரியப்பா.
“அடடே… இந்த நல்ல விஷயத்தை செஞ்சது நீங்க தானா பெரியப்பா?” என்று புன்னகைத்தவள்,

“உங்களுக்கு இந்த யோசனை எப்படி வந்தது?” என்றாள்.

“சின்ன புள்ள நீ, விவரம் புரியாம கண்டவனையும் ஆசைப்படலாம்.. அதுக்காக நாங்க அப்படி விட்டுட முடியுமா? ஏற்கனவே எங்க யாரையும் மதிக்காம உன் அப்பன் ஒரு தப்பை பண்ணிட்டான் அதனால் ஊருக்கே எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா?”

“இன்னொரு முறை அந்த தப்பு நடக்காமல் பார்க்க வேண்டியது எங்களோட கடமை இல்லையா? நாங்களும் கண்டுக்காம விட்டுட்டா நம்ம குடும்ப கவுரவம் என்ன ஆகறது?”

“கண்டிப்பா!! கண்டிப்பா குடும்ப கௌரவம் ரொம்பவே முக்கியம் பெரிப்பா ஆனா இவ்ளோ உரிமையா எனக்கு மாப்பிள்ளை பார்த்த உங்களோட கடமை இத்தோடு முடியலை…”

“எனக்கு செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கு பெரிப்பா?” என்றவள், “என்ன மாமா நான் சொல்றது?” என்றாள் மற்றொருவரிடம்.

“பார்த்தீங்களா? படிச்ச பொண்ணு படிச்ச பொண்ணு தான்!! எடுத்து சொன்னா ராகவி புரிஞ்சுக்கும்னு நான் சொன்னேன்ல?!” என்று மிதப்பாக மற்றவர்களை பார்த்தார் சாரதியின் சித்தப்பா.

“உங்களுக்கு என் மேல இருக்கிற அக்கறையை புரிஞ்சுக்கிட்டதால தான் மறுப்பே சொல்லாம ரெடியாகி வந்திருக்கேன். ஆனா என்ன பண்ண இந்த மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கலையாம்..” என்றாள் வருத்ததோடு.

“அதனால என்ன மா.. ஊர் உலகத்துல இவன் ஒருத்தன் தான் மாப்பிள்ளையா? நீ பாரு இனி தினம் நாலு மாப்பிளையை கூட்டிட்டு வரோம்.. உன் கல்யாணத்தை நடத்தி காட்டுறோம்..” என்றார் சப்தமான சிரிப்போடு.

“ரொம்ப சரியா சொன்னீங்க சித்தப்பா. அதனால் தான் அடுத்த மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி அதைப் பற்றி கொஞ்சம் விளாவரியா பேசிடலாம்னு உங்களை இருக்க சொன்னேன்..”

“என்ன விஷயம் மா… உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்? என்ன வேலை செய்யணும்? மாசம் எவ்ளோ சம்பாதிக்கணும்னு சொல்லு அதே மாதிரி பார்த்துடலாம்..” என்று அவளின் மாமா சொல்ல குரலை செருமிய ராகவி,

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் என் மாமூவை விரும்புறது ஊருக்கே தெரியும். அப்படி இருந்தும் நீங்க என்னோட கல்யாணத்தை நடத்த ஆவலா இருக்கிறதுக்கு காரணம் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள்.

“இதோ பாரும்மா… நீ சின்ன புள்ள உனக்கு சில விஷயம் புரியாது. ஏதோ வயசு கோளாறுல தகுதி தராதரம் தெரியாம அவனை நீ ஆசை பட்டு இருக்கலாம். அதுக்காக நாங்க எப்படி ஏத்துக்க முடியும்?! நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது...”

“உங்க எல்லாரையும் விட என் மாமூ அப்படி என்ன தகுதி, தராதரத்துல குறைஞ்சு போயிட்டாரு?” என்ற மறுகணமே, “அவன் கொலைகாரன் பிள்ளை!!” என்றனர் ஒருமித்த குரலில்.

“எங்க மாமா கொலை பண்ணினதை நீங்க பார்த்தீங்களா?”

“நாங்க வேற தனியா பார்க்கனுமா என்ன? அது தான் அவனே கொலை பண்ணினதை ஒத்துகிட்டு இருக்கானே.. அதனால தானே கோர்ட்டும் குற்றவாளின்னு தீர்ப்பு கொடுத்து அவனை உள்ள தள்ளி இருக்கு?”

“இப்போ எதுக்கு இந்த பேச்சு? பெரியவங்க சொல் பெருமாள் சொல்லுன்னு சொல்லுவாங்க… பொட்ட புள்ளை பெரியவங்களுக்கு அடங்கி நடக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது..” என்றார் அவள் தாத்தா.

“இதோ பாரு ராகவி சூதுவாது இல்லாத சுத்தமான ஒருத்தன் கையில் உன்னை புடிச்சு கொடுக்க நினைக்கிறோம். புரிஞ்சுக்கோ...”

“ஓ! அப்போ நீங்க எல்லாரும் யோகிய சிகாமணிகளா? உங்க மேல எந்த தப்பும் கிடையாதா? உத்தமர்கள்!! கிட்டத்தட்ட ஸ்ரீ ராமர் வம்சம்னு சொல்லலாமா?”

“என்னமா பேசற?”

“கத்தியால குத்தி கொன்றால் தான் கொலைன்னு கிடையாது. கத்தி இல்லாம ரத்தம் சிந்த வைக்காம இத்தனை வருஷமா எங்க அத்தை குடும்பத்தை தள்ளி வச்சு, கிடைக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் சித்ரவதை பண்ணிட்டு இருக்கீங்களே அதுக்கு பேரும் கொலை தான்!!”

“ராகவி!!”

“நீங்க கத்தறதால இது உண்மை இல்லைன்னு ஆகிடாது சித்தப்பா. எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, என் வாழ்க்கை என்னைக்கு இருந்தாலும் என் மாமூ கூட தான். அதுவும் என் அப்பா விருப்பத்தோட தான் நடக்கும். மாமூவை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன். அதுக்காக உங்களோட கோமாளித்தனத்துக்கு நான் உடன்படணும் என்ற அவசியமே கிடையாது...”

ராகவியின் பேச்சில் அனைவரும் அதிர்ந்திருக்க, மற்றவர்கள் பேசும் முன் “ஏய், என்னடி பேசற?” என்றார் சுந்தரவல்லி.

“சரியா தான் பேசிட்டு இருக்கேன் கிழவி, என்ன நினைச்சுட்டு இருக்காங்க இவங்கெல்லாம்?” என்றவள்,

“நீங்க மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்ததுக்காக ஒன்னும் நான் புடவை கட்டி அலங்கரிச்சுட்டு இங்கே வந்து நிற்கலை. என் அப்பாவோட வார்த்தைக்காக தான் அதேநேரம் நீங்க எல்லாரும் அவரை ஆட்டி படைக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?”

“ஏன்டி, அவனால என் மகன் தலை நிமிர்ந்து நடக்க முடியாம போயிடுச்சு. அந்த குடும்பத்தோட உறவாட பார்க்கிறியா? என் மகனுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய எல்லாமே அவங்களால கிடைக்காம போயிடுச்சு தெரியுமா?..”

“அவங்களால கிடையாது கிழவி இவங்களால!!” என்று அங்கே இருந்தவர்களை சுட்டி காண்பித்தவள்,

“எங்கப்பா தங்கச்சி நல்லா வாழணும்னு விரும்பினவரை கட்டி வச்சவர். ஆனா ஒரு அசம்பாவிதம் நடக்கவும் இவங்க அவர் மண்டையையே கழுவி, அழுத்தம் கொடுத்து தங்கச்சியை கை கழுவ வச்சிருக்காங்க. முதல்ல இப்படி குடியை கெடுக்கிற ஆட்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை நிறுத்துங்க!”

“தங்கம்மா போதும், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத!” என்றார் பார்த்தசாரதி.

“நானும் பேசக்கூடாதுன்னு தான் பா நினைச்சேன் ஆனா ஊரு உறவுக்காக நம்ம குடும்ப நிம்மதியை கெடுத்துக்காதீங்க. எந்த உறவும் நமக்கு சம்பாதிச்சு கொடுக்கல. யாரும் எனக்கு சோறு போடல. எனக்கு செய்தது எல்லாமே நீங்க தான்! ஆனா இப்ப மட்டும் என்ன ஊர் உறவுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறீங்க?”

“வேலை மெனக்கெட்டு என் கல்யாணத்தை நடத்த வந்திருக்கவங்க என்ன ஆளாளுக்கு பத்து சவரன் போட்டு என்னை கட்டி வைக்க போறாங்களா?”

“இல்லை இதோ என் சித்தப்பா எனக்கான மொத்த நகையும் போடப் போறாரா? பெரிப்பா இருபத்தி ஐந்து லட்சத்துல கார் வாங்கி கொடுக்கப் போறாரா? என் மாமா கல்யாணத்தை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடத்தப் போறாரா?” என்றதில் அனைவரும் அரண்டு போயினர்.

“அப்படி இருந்தா சொல்லுங்க… இவங்க என்னோட கல்யாணத்தை முடிவு பண்ணட்டும். அப்படி இல்லாத போது நான் இவங்க சொல்றதை கேக்கணும் என்ற அவசியமே கிடையாது…”

“என்னை கஷ்டப்பட்டு பெத்து வளர்த்த என் அப்பா அம்மாவை தவிர்த்து வேறு யாருக்கும் என் கல்யாணத்தைப் பற்றி முடிவு எடுக்க உரிமை கிடையாது...”

“ஒருவேளை உரிமை இருக்குன்னு சொன்னா அவங்களுக்கு கடமையும் இருக்கு. எங்கே என் கல்யாணத்துக்கு நகை, கார், வீடு, சீர்வரிசை கல்யாண செலவை இவங்களை ஏத்துக்க சொல்லுங்க பார்ப்போம்?” என்றிட அங்கே கனத்த அமைதி!!

“இது எதுவும் செய்ய மாட்டாங்க… ஆனா எனக்கு நல்லது செய்ய மட்டும் வந்துடுவாங்க.. நானா கேட்டேன் இவங்களோட அக்கறையை? இனி யாரா இருந்தாலும் குறைஞ்சது ஐம்பது லட்சத்தை எண்ணி வச்சுட்டு மாப்பிள்ளையை கூட்டிட்டு வர சொல்லுங்க.. அப்போ இவங்க காட்டுற மாப்பிள்ளைக்கு நான் கழுத்தை நீட்டுறேன்..” என்றாள் ராகவி கட்டுபடுத்தப்பட்ட கோபத்தோடு.

“இன்னும் என்னபா உட்கார்ந்துட்டு இருக்கிங்க? இவனாச்சு இவன் பொண்ணாச்சு.. நமக்கு என்ன வந்தது” என்று துண்டை உதறி தோளில் போட்டார் அவள் பெரியப்பா.

“அதானே! நல்லதுக்கே காலம் இல்லாம போச்சு..” என்று ஆளாளுக்கு பேசியபடி கிளம்பி சென்றனர்.

மற்றவர்களை போலவே மகளின் பேச்சில் அதிர்ந்து போயிருந்த சாரதி வீட்டில் இருந்து வெளியேறிய அனைவரையும் சமாதானம் செய்ய முயன்று தோற்றவர் மகளிடம் “அதிகம் பேசிட்ட தங்கம்மா” என்றார்.

“பேச வேண்டிய நிலையை கொண்டு வந்துட்டாங்க பா” என்றவள் “நான் அத்தை வீட்டுக்கு போயிட்டு வரேன்..” என்று கிளம்பிய நேரம் வெளியில் முரளியின் புல்லட் சப்தம்.

“நல்ல நேரத்துல வந்த மாமூ..” என்று அவன் பின்னே ஏறி அமர்ந்தவள், “போலாம்” என்றாள்.

“ராங்கி வந்தவனை அடிச்சு கிடிச்சு வச்சுடலையே..!” என்றான் அவளை கண்ணாடியில் பார்த்தபடி.

“அப்போ அவனை காப்பாத்த தான் இங்கே வந்தியா?” என்று முறைத்தாள்.

“பின்னே! உனக்காக வந்தேன்னா நினைச்ச?” என்று அவளை சீண்டியவன் ராகவியின் கோபப்பார்வையில் எழுந்த புன்னகையோடு,

“இப்போ சண்டை சீனுக்கு நான் ரெடியா இல்லை எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் வச்சுக்கலாம் வா..” அவள் கீழே இறங்கும் முன் வண்டியை கிளப்பி கொண்டு சென்றான்.
மேலும் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில்…

முரளியின் உழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வேலையில் மும்முரமாக இருந்த ராகவி சொன்னது போலவே அனைத்து சமூக ஊடகங்களிலும் முரளியின் பேட்டியை பிரபலபடுத்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மாட்டு பண்ணை வைக்கும் யோசனையில் இருந்த சிலர் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை பெறுவதற்காக பண்ணையை நேரில் பார்வையிட அங்கே வருகின்றனர். அதோடு பிரபல யூடியூப் சேனலில் இருந்தும் அவனை பேட்டி எடுத்து சென்றனர்.

முன்பிற்கு இப்போது முரளியின் வேலை பளு சற்று கூடி தான் போனது ஆனால் ராகவி உடன் இருப்பதால் அவனால் சமாளிக்க முடிகிறது.

முன்பு பெரிதாக கணினி இயக்குவதில் ஆர்வம் காண்பிக்காமல் இருந்தவன் இப்போது அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.

அன்று அலுவலகத்தில் அமர்ந்து கணினியில் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்த முரளியின் அலைபேசி ஒலித்தது.

அது அறிமுகமில்லாத வெளிநாட்டு எண் என்றதும் ‘ஏதாவது விளம்பர அழைப்பாக இருக்கும்’ என்று கணக்கை பார்த்தவாறே எடுத்தான்.

ஆனால் மறுமுனையில் “ஹலோ... மிஸ்டர் முரளி?” என்ற குரல் கேட்டதும் நிமிர்ந்து அமர்ந்தவன், “ஆமா, சொல்லுங்க...” என்றான்.

எதிர்முனையில் இருந்தவர் தங்களை மலேஷியாவில் உள்ள உணவுப் பொருள் இறக்குமதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சில வாரங்களுக்கு முன் அனுப்பியிருந்த மாதிரி பொருட்கள் தரப் பரிசோதனையில் வெற்றி பெற்றதாகவும், முதல் கட்டமாக பெரிய அளவிலான ஆர்டர் தர விரும்புவதாகவும் கூறி மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ள ஒப்பந்தத்தை பார்க்கச் சொன்னார்.

ஒரு நொடி முரளிக்கு அவர் சொல்வது புரியாது போக, “என்ன சொன்னீங்க?” என்று மீண்டும் கேட்டான்.

எதிர்முனையில் இருந்தவர் சிரித்தபடி மீண்டும் விளக்க வெளிநாட்டிலிருந்து முதல் முறையாக ஆர்டர் பெற்றதில் அதீத மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் முரளிதரன்.

வேலை செய்பவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை விநியோகம் செய்ய சொன்னவன் தன்னைத் தேடி வந்த ராகவியை தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.

“என்ன மாமூ, என்னாச்சு உனக்கு? எதுக்கு இவ்ளோ வேகமா சுத்துற? எனக்கு தலை சுத்துது..” என்ற பிறகே அவளை கீழே இறக்கினான்.

அவன் இறக்கிய வேகத்தில் தள்ளாடிய ராகவியை அணைத்து கொள்ள, “என்ன விசேஷம் மாமூ?” என்றாள் அவன் மகிழ்ச்சியை கண்டு.

“நம்ம எதிர்பார்த்த மாதிரியே வெளிநாட்டு ஆர்டர் வந்துருச்சு ராகா..”

“நிஜமாவா எப்போ?”

“கொஞ்ச முன்னாடி தான் மலேசியாவில் இருந்து கால் வந்துச்சு..”

“அப்படியா? ரொம்ப சந்தோஷம்” என்று இனிப்பை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டவள், மலேஷியாவில் இருக்கும் ஒரு தோழி மூலமாக இந்த முயற்சியை எடுத்திருந்தாள்.

இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கை பெரிதாக இல்லை என்றாலும் முரளி அதற்கு தேவையான அத்தனை ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தான்.

“உனக்கு என்ன வேணும் கேளு..”

“என்ன கேட்டாலும் குடுப்பியா?” என்றாள் புருவம் உயர்த்தி.

“ஆமா, என்ன வேணும்னாலும் கேளு இப்ப நான் இருக்குற சந்தோஷத்துக்கு எதையும் கொடுக்க தயாரா இருக்கேன்..”

“பரவாயில்லயே அப்போ இந்த சந்தோஷத்தோடவே மொத்த சொத்தையும் எழுதி வாங்கிடலாம் போல..” என்றவள் அங்கே வந்த அபிராமியிடம், “என்ன அபி, வாங்கிடட்டுமா?” என்றாள் கண் சிமிட்டி.

“அதுக்கென்ன அண்ணி, நீங்க கேட்டா அண்ணா நிச்சயம் எழுதி கொடுத்துடுவாரு.. அவருக்கு இதை நம்பவே கொஞ்ச நேரம் எடுத்துச்சு.நம்மளோட ப்ராடக்ட்ஸ் இப்போ கொஞ்சம் கொஞ்சமா இந்தியா முழுக்க விநியோகம் பண்றதுலயே அவர் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. இப்போ வெளிநாட்டு ஆர்டர் கிடைச்சதுல அண்ணா டபுள் ஹேப்பி..”

“சரி நீ சொல்லு என்ன வேணும்?”

“நான் கேட்கிறதை மறுக்காம கொடுப்பேன்னு முதல்ல சத்தியம் பண்ணு, அப்புறம் கேட்கிறேன்..”

“என்னடி நீ?! நீ கேட்டு செய்யாம போவேனா?”

“உனக்கு நம்பிக்கை இருக்குன்னா எதுக்கு தயங்குற? சத்தியம் பண்ணு” என்றதில் அவனும் அது போலவே சத்தியம் செய்து கொடுத்தான்.

“இப்போ சொல்லு”

“இப்போ இல்லை, எனக்கு தேவையான போது கேட்பேன் அப்போ செய்தால் போதும். ஆனா இதை மறக்க கூடாது..” என்றவள் அன்று எடுக்க வேண்டிய வீடியோவிற்கான ஆயத்த பணிகளில் இறங்கினாள்.

இன்னும் ஐந்து அத்தியாயங்களில் கதை நிறைவு பெற்று விடும் மக்களே!!
 
Top Bottom