• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 4

STN 23

New member
ராகவி க்ரிஷ்ஷை மருத்துவமனையில் அனுமதிக்க, ‘என்ன நடந்தது?’ என்று விசாரித்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் போலீசார் அங்கே வந்த போது தன் பி.ஜி க்கு வந்து சேர்ந்த ராகவி எடுத்திருந்த வீடியோக்களை பார்வையிட தொடங்கி இருந்தாள். இரண்டு புறம் வைத்திருந்த கேமராவில் ஒன்று இருவரையும் கவர் செய்வது போலவும் மற்றொன்று க்ரிஷ்ஷை மட்டும் ஃபோக்கஸ் செய்வது போலவும் வைத்திருந்தாள்.

க்ரிஷ்ஷை மட்டும் ஃபோக்கஸ் செய்திருந்ததை அவளுக்கு தேவையான வகையில் எடிட் செய்ய தொடங்க மருத்துவமனைக்கு வந்திருந்த போலீஸார் அவள் கொடுத்த கைப்பேசிக்கு எண்ணுக்கு அழைக்க அதுவோ க்ரிஷ் மனைவிக்கு சென்றது.

போலீஸார் விசாரிக்க முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, பின் விஷயத்தை எடுத்து சொல்லவும் பதறியவள் முதலில் அவன் நண்பர்களுக்கு அழைத்து தகவல் கொடுத்தாள். அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த போது க்ரிஷ் மனைவியும் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிளம்பி இருந்தாள்.

“இவரை இங்கே சேர்த்தின அந்த பொண்ணு யாருன்னு தெரியலையா சிஸ்டர்?”

“எங்களுக்கு தெரியாது ஸார்.. இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை செய்வதாகவும் பார்க்கில் பேசி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் இப்படி ஆகிடுச்சுன்னு சொன்னாங்க..”

மேலும் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைத்தவர்கள் ‘க்ரிஷ்ஷை அடித்த நபர் புதியவர் என்றும் அவரை இருவருக்குமே தெரியாது’ என்றும் ராகவி சொன்னதாக வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.

“ராகவி, உன்னை தேடி விசிட்டர் வந்திருக்காங்க..” என்று மற்றொரு அறையில் தங்கியிருக்கும் பெண் வந்து சொல்ல லேப்டாப்பை மூடி வைத்து விட்டு வெளியில் வந்தாள்.

அவர்கள் பிஜி சற்று விஸ்தாரமானது. கட்டிடத்தின் முன்னே தோட்டம், நடைபாதை என்று மரங்கள் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

என்ன தான் பார்வையாளர்களுக்கு என்று கட்டிடத்தின் நுழைவிலேயே அறை இருந்தாலும் அங்கே தங்கி இருக்கும் பெண்களை பார்க்க வருபவர்கள் பொதுவாக தோட்டத்து மரநிழலில் தான் காத்திருப்பார்கள்.

வெளியில் வந்த ராகவியின் விழிகள் தோட்டத்தை அல்லாமல் நடைபாதையை அளவிட அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் நின்றிருந்தான் அவள் மனதை கொள்ளை கொண்ட கள்வன்.

அலை அலையாய் புரண்ட தலைமுடியை ஒரு கையால் கோதியபடி, மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டையில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை சற்றே உயர்த்தி வைத்திருந்த தனது புல்லட்டின் மீது சாய்ந்து இரு கரங்களையும் மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு அவளை பார்த்த படி தான் நின்றிருந்தான் முரளிதரன்.

க்ஷணப்பொழுது அவன் கம்பீரத்தை ரசித்தவள் மறுநொடியே ஊடல் கொண்டு திரும்பி நடந்தாள், “ஹே எங்கடி போற? உனக்காக தானே வந்தேன், நில்லு” என்று அவள் பின்னே வந்தான் முரளி.

“ஏதே!! எனக்காக வந்தியா? எப்போ இருந்து பொய் சொல்ல கத்துக்கிட்ட? இன்னைக்கு நீ செய்திருக்க வேலைக்கு.. ப்ச் என் வாயை கிளறாத மாமூ.. நான் செம்ம கோபத்துல இருக்கேன், சொல்லிட்டேன்..” என்றவள் இன்னும் வேகமாக நடந்தாள்.

“ஹே! நீ பண்ணின காரியத்துக்கு நான் தான்டி கோவப்படனும். ஆனா நீ மூஞ்சியை திருப்பிகிட்டு போவியா?” என்று அவளுக்கு குறையாத கோபத்தோடு கேட்க அவனை கண்டு கொள்ளாது ராகவி தோட்டத்தினுள் நுழைந்தாள்.

“அடியே ராங்கி இங்க ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன் உன் இஷ்டத்துக்கு போயிட்டு இருக்க, நில்லுடி!!” என்று வேகமாக அவள் துப்பட்டாவை பிடித்து இழுக்க தடுமாறி அவன் நெஞ்சில் வந்து மோதினாள் ராகவி.

“நீ சொன்னா நான் நிற்கனுமா? யோவ் சண்டியரே! அதுக்கு வேற ஒருத்தியை பாருயா..” என்று நகர முயன்றாள்.

ஆனால் அதற்கு முரளி அனுமதித்தால் தானே?!

தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை ஒரே சுழற்றாக சுழற்றி தன் கைவளைவில் நிறுத்தி, “என் பொண்டாட்டி நீ இருக்கிறப்போ நான் எதுக்குடி வேற ஒருத்தியை பார்க்கணும்?” என்று புருவம் உயர்த்தியவனின் சிரிப்பில் லயித்திருந்த ராகவியின் மனம் அவன் மீதிருந்த கோபத்தை மறந்து அவன் புறம் நழுவியது.

“ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..?” என்று தன்னை மறைக்கும் பொருட்டு இதழ்களை சுழித்தாள்.

“ஏன்டி, எனக்கு விஷயத்தை சொல்லலை? எவ்ளோ தைரியம் இருந்தா அந்த பொறுக்கியை தனியா பார்க்க போயிருப்ப? கிடைச்சது வாய்ப்புன்னு அந்த நாயும் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கான்.. ராஸ்கல்!! இழுத்து ஒன்னு விடாம அமைதியா பார்த்துட்டு இருக்க நீயும்?!..” என்றான் காட்டமாக.

“மாமூ நான் ஒன்னும் அமைதியா கேட்டுட்டு இருக்கலை… அவனோட வீர தீர பராக்கிரமங்களை அவன் வாயால சொல்ல வச்சு வாக்குமூலம் வாங்கிட்டு இருந்தேன்..” என்று அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து அவளின் திட்டத்தை பற்றி சொன்னாள்.

“அப்படி இல்லை ராங்கி, நீ தனியா ஒதுக்குபுறமா அவன் கிட்ட சிக்கினதை சாதகமா வச்சு உன்னை ஏதாவது செய்திருந்தா என்னடி பண்ணி இருப்ப?!… அவன் பேசினதை கேட்ட தானே?! இவனால ஒரு பொண்ணு தற்கொலையே பண்ணி இருக்கு ஆனா பரதேசி அதையும் பெரிய சாதனை மாதிரி சொல்லிட்டு இருக்கான்..”

“அப்பேற்பட்டவன் எதுக்கும் அஞ்ச மாட்டான். அந்நேரத்துக்கு பார்க்ல பெருசா கூட்டமில்லை, நீ இருந்த இடத்தில் இருந்து கூப்பிட்டிருந்தாலும் உடனே உதவிக்கு யாரும் வந்திருக்க முடியாது..”

“பெப்பர் ஸ்ப்ரே வச்சுருக்கேன் மாமூ, அதோடு இந்த மாதிரி நேரத்துல எப்படி தற்காத்துக்கனும் நீ கத்து கொடுத்ததை நான் மறக்கலை ஸோ எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்தேன். அதோடு அங்கே இருந்த உன்னை மீறி அவன் என்னை, என்ன செய்திட முடியும்?” என்றவள்,

“ப்ச் அவனுக்கு கட்டம் கட்டி இருந்த இடத்துக்கு உன்னை யார் மாமூ வர சொன்னா?”

“என் பொண்டாட்டிக்காக நான் வருவேன்டி!! அதுக்கு கூட இன்னொருத்தன் கிட்ட குறி கேட்டுட்டு வரணும்னு சொல்லுவியா?” என்றான் காட்டமாக.

“அடேங்கப்பா சண்டியருக்கு எவ்ளோ கோபம் வருது?” என்று முறைத்த முரளியை இழுத்து தன்னருகே அமர்த்தியவள்,

“என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும். எல்லா நேரமும் என் ஹீரோ வந்து காப்பாத்தனும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கிற ஆள் நான் இல்லை மாமூ..” என்று சுடிதார் காலரை தூக்கி விட்டாள்.

“அதுக்காக நான் கைகட்டி பார்த்துட்டு இருக்கணும்னு சொல்றியா? நான் தான் அந்த பொறுக்கி உன்கிட்ட எதாவது வால் ஆட்டினா சொல்லு ஒட்ட வெட்டிடுறேன்னு ஏற்கனவே சொன்னேனே?! ஏன்டி சொல்லலை?” என்றவனின் உரிமையான கோபத்தில் தன்னை மீறி புன்னகைத்தாள்.

“சிரிக்காதடி!!”

“ப்ச் அப்படி இல்லை மாமூ, இவனை பற்றி தெரிஞ்சா நீ என்ன செய்வன்னு நான் பயந்தேனோ அதையே தான் செய்திருக்க.. நல்லவேளை அவனை நீ அடிக்கிறப்போ யாரும் அங்க இல்லை.. ஒருவேளை யாராவது பார்த்திருந்தா இந்நேரத்துக்கு நீ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்திருப்ப..”

“அதனால தானேடி மாஸ்க் போட்டிருந்தேன்!! வண்டியையும் தூரமா நிறுத்திட்டு நடந்து வந்தேன். அவனும் இதுவரை என்னை பார்த்தது கிடையாது அதனால் அடையாளம் காட்டுறதோ, கண்டுபிடிக்கிறதோ கஷ்டம்..”

“மாஸ்க் மட்டுமா? முதல்முறையா ஜீன்ஸ் டிஷர்ட் போட்டுட்டு எப்படி இருந்த தெரியுமா? ஆனா எனக்கு ஒரு ஃபோட்டோ கூட எடுத்து அனுப்ப தோணலை இல்லை உனக்கு?!”

“அடியேய்!! இப்போ நான் ஜீன்ஸ் போட்டது, அதை ஃபோட்டோ எடுத்து அனுப்பாதது தான் உனக்கு பிரச்சனையா?”

“இல்லையா பின்னே?! நானும் எத்தனை முறை உன்னை வேஷ்டி சட்டையில் பார்த்து போர் அடிக்குது மாமூ, ஜீன்ஸ் போடு அட்டகாசமா இருப்பன்னு சொல்லி இருப்பேன்.. ஒருமுறையாவது கேட்டிருப்பியா?” என்றவள் பி.ஜி நோக்கி நகர,

“ஹே ராங்கி, என்ன தான்டி உன் பிரச்சனை? உன் பிறந்தநாளுக்காக வந்திருக்கேன்..”

“பொய் சொல்லாத, நீ ஒன்னும் எனக்காக வரலை அவனுக்காக வந்திருக்க.. இந்த தகவலை உனக்கு ரேவதி தானே கொடுத்தா?! இரு அவளுக்கும் இருக்கு கச்சேரி..” என்று கண்களை உருட்டினாள்.

“உன் கச்சேரியை அப்புறம் வச்சுக்கோ. இப்போ கிளம்பு வெளியே போகலாம்..”

“எங்கே?”

“கோவிலுக்குடி!! அவனை கொத்து பரோட்டா போட போற கொண்டாட்டத்துல கோவிலுக்கு போறதை மறந்திருப்பியே?!” என்று கேட்க புன்னகையோடு ஆமோதித்தாள்.

ராகவியின் காதை செல்லமாக பிடித்து இழுத்தவன், “ஒரு நிமிஷம் இரு…” என்று அவளுக்காக வாங்கியிருந்த புடவையை கொண்டு வந்து கொடுத்து, “சீக்கிரம் மாத்திட்டு வா..” என்றான்.

பெட்டியை திறந்து பார்த்தவள், “புடவையா?” என்று முகத்தை சுருக்கினாள்.

“என்னடி மூஞ்சி இம்புட்டு நீளுது?! ஏன், இந்த புடவைக்கு என்ன குறை?”

“குறை இல்லை ஆனா புடவை கட்டிகிட்டா என்னால வண்டியில ஃப்ரீயா உட்கார்ந்துட்டு வர முடியாது மாமூ. இந்த சுடிதாரும் பொங்கலுக்கு நீ எடுத்து கொடுத்தது, நல்லா தானே இருக்கு?! இப்படியே வரேன்” என்றாள்.

“ராகா…” என்று முரளி அழுத்தமாக பார்க்க, “இப்படி அரட்டி உருட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம், கார் எடுத்துட்டு வந்திருந்தாலும் பரவால்ல புல்லெட்ல கஷ்டம் சண்டியரே!! புரிஞ்சுக்கோங்க..” என்று சிணுங்கினாள்.

அப்போதும் முரளி இளகாமல் இருக்க, “நான் பர்த்டே பேபி! எனக்கு பிடிச்ச ட்ரெஸ் தான் போடுவேன் போ மாமூ..” என்றாள்.

“எல்லாத்துக்கும் நிமிந்துகிட்டு நிக்காதடி. புருஷன் சொல்றதை கேட்டு பழகு.. போ போய் புடவை கட்டிட்டு வா..” என்றான் அதிகாரமாக.

“என்ன சண்டியரே, இன்னைக்கு ரொம்ப தான் அதிகாரம் தூள் பறக்குது?” என்று இன்னும் அவனோடு வாயாடி கொண்டு நின்றாள்.

“ஏன்டி நான் சொல்றதை மறுத்து பேசணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருப்பியா? சொன்னதை செய்றியா இல்லை நான் கிளம்பட்டுமா?”
“கார் எடுத்துட்டு வராம போனதும் இல்லாம என்னையே குறை சொல்ற மாமூ நீ?! போறதுன்னா போ, நானும் போறேன்..” என்றதும் தான் தாமதம் முரளி வேகமாக நடையை கட்டி விட்டான்.

“யோவ்… யோவ் சண்டியரே!!” என்று அவன் பின்னே ஓட்டமும் நடையுமாக சென்றவள், “ஒரு வார்த்தை சொல்லிட கூடாதே உடனே மூக்குக்கு மேல கோபம் வந்துடும்..” என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டி, “நீ இங்கே உட்கார் மாமூ பத்து நிமிஷத்துல வந்துடுறேன்..” என்றாள்.

“லேட் பண்ணாத ராங்கி…”

“இரண்டு நிமிஷத்துல புடவை கட்டிடுவேன், ஆனா எடிட்டிங் பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டேன் அதை முடிச்சு வீடியோவை அப்லோட் பண்ணிட்டு வரேன். அப்போ தான் போலீஸ் அவனை உள்ள தள்ள சுலபமா இருக்கும்…”

“சரி!” என்றவன் மங்கை கொடுத்து விட்ட திரட்டு பாலை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டு, “ஹாப்பி பர்த்டே ராகா..” என்று அவள் உச்சியில் முத்தமிட்டான்.

“வாவ்!! இதை தானே முதல்ல கொடுத்திருக்கணும்.. எப்பவும் போல டேஸ்ட் அமர்க்களம்!!” என்று ரசித்து ருசித்தவள், டிஃபன் பாக்ஸை வாங்கி அவனுக்கும் ஊட்டி விட்டு, “சீக்கிரம் வந்துடுறேன்..” என்று கிளம்பினாள்.

தன் அறைக்கு சென்ற ராகவி வீடியோவை தயாரித்து “ஐடி ஊழியரின் அட்டூழியம் - தன்னிடம் பணிபுரியும் பெண்களின் இயலாமையை, ஏழ்மையை உபயோகித்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் பட்டபகலில் தன் வீர தீர பராக்கிரமங்களை அப்பட்டமாக பகிர்ந்து மற்றொரு பெண்ணையும் படுக்கைக்கு அழைக்கும் கொடூரம்!!” என்று சமூக வலைதளங்களில் பதிவேற்றி புடவை மாற்றிக்கொண்டு வந்தாள்.

முரளி, ராகவியின் சொந்த அத்தை மகன்.

பார்த்தசாரதியுடன் பிறந்த தங்கை தேவமங்கை - பாரிநேயன் தம்பதியரின் மகன் முரளி மகள் அபிராமி. என்ன தான் பல வருடங்களாக இரு குடும்பத்திற்கும் இடையில் உறவும் பேச்சும் நின்று போயிருந்தாலும் இவர்களின் பந்தம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அத்தை மகன் மாமன் மகள் என்ற உரிமை உணர்வும், பாசமும் எந்த கட்டத்தில் காதலாக உருமாறியது என்பதை இருவருமே அறிந்திருக்கவில்லை.

அறியவில்லையே தவிர்த்து ராகவி படிப்பிற்காக ஊரில் இருந்து கிளம்பி வந்த காலத்தில் இருவருமே பிரிவின் துயரில் உணர்ந்திருந்தனர்.

இன்று வரையிலும் வார்த்தையால் தங்களின் உணர்வை மற்றவரிடம் பரிமாறி கொள்ளவில்லையே தவிர்த்து ஒருவர் மீதான மற்றவரின் காதல் சிறு புன்னகை தொடங்கி கோபம், ஆதங்கம், சிரிப்பு, சண்டை என்று அத்தனை ரூபத்திலும் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.

“போலாமா மாமூ?” என்று ராகவி புல்லட்டில் அமர்ந்தாள்.

“பத்திரமா பிடிச்சுட்டு உட்காருடி” என்றதும் புன்னகையோடு அவன் தோளை பற்றிக்கொள்ள அவளுக்கு குறையாத புன்னகையோடு முரளி வண்டியை எடுத்தான்.

“இந்நேரத்துக்கு கோவில் இருக்குமா மாமூ? மணி இப்போவே பன்னிரண்டு ஆக போகுதே?!”

“ஏதாவது ஒரு கோவில் இருக்கும் பார்த்துக்கலாம். சரி ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க?”

“என்ன மாமூ நீ எவ்ளோ கோபம் இருந்தாலும் இப்படியா அடிச்சு வைப்ப? எடுத்ததுமே எத்தனை பேர் அடிச்சாங்க எங்கே கலவரம் நடந்ததுன்னு தான் நர்ஸ் கேட்டாங்க..” என்றதில் அட்டகாசமாக சிரித்த முரளி,

“லேசா நாலு தட்டு தட்டிட்டு போக தான்டி நானும் முதல்ல நினைச்சேன் ஆனா அவன் பேசினதை கேட்ட பிறகு எப்படி சும்மா விட சொல்ற?”

“மாஸ்க் போட்டு இருந்ததால அடிச்சது யாருன்னு எங்களுக்கு தெரியாதுன்னு சொன்னேன் அப்புறம் முன்பகையான்னு கேட்டாங்க?”

“என்ன சொன்ன?”

“அதுக்கும் இல்லைன்னு சொன்னேன்.. ஆனா வாய் தகராறு கை சண்டையா மாறினாலும் இப்படியா அடிப்பாங்கன்னு கேட்டாங்க?..”

“எனக்கு என்ன தெரியும்னு சொல்லிட்டு வந்துட்டேன்..” என்று அங்கு நடந்ததை சொல்லி முடிக்கவும் முரளி கோவிலின் முன் வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது.

அர்ச்சனை தட்டை வாங்கி ராகவியிடம் கொடுத்தவன் “பூ வைக்கலையா?” என்றான்.

“என்னமோ தோட்டத்துல இருந்து நீ பறிச்சுட்டு வந்து கொடுத்த மாதிரியும் அதை நான் வைக்காம போன மாதிரியும் கேட்கிற?” என்று இதழ்களை சுழித்தாள்.

“மறந்துட்டேன்டி, வேணும்னு வாயை திறந்து கேட்டா தான் என்னவாம்?!”

“கேட்காமலே வாங்கி கொடுத்தா என்னவாம்?!” என்று அவளும் சரிக்கு சரி நிற்க,

“உன்கிட்ட கேட்டேன் பாரு, என்னை சொல்லணும்?!” என்றவன் இரண்டு முழம் பூவை வாங்கிட அவனிடம் பின் கொடுத்து “வச்சு விடு மாமூ..” என்றாள்.

பூவை வைத்தவன், “இப்போ தான் அழகா இருக்க, என் பூவழகி!” என்று கொஞ்சியவன் கோபுர பின்னணியில் இருவரையும் செல்ஃபி எடுக்க, “சாப்ட்டாச்சா மாமூ?” என்றாள்.

“இன்னும் இல்லை..” என்றவன் ராகவியின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர் வீடியோ காலில் தன் அன்னைக்கு அழைத்து கொடுத்தான்.

மங்கை, அபிராமியிடம் பேசியவள், “எந்த ப்ரோக்ராம் இருந்தாலும் சாப்ட்டுட்டு பார்த்துக்கலாம் மாமூ..” என்று அவனை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றாள்.

உணவை முடித்து கொண்டு பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது “மாமூ நிறுத்து.. நிறுத்து..” என்று அவசரபடுத்தினாள்.

“எதுக்கு?”

“சொல்றேன், முதல்ல நிறுத்து மாமூ..”

“யாரையாவது பார்க்க போறியா?!

“இல்லை..” என்றவள் முரளியை அழைத்து கொண்டு மாலினுள் சென்றாள்.

“என்னடி வாங்க போற? இந்த புடவை பிடிக்கலையா?”

“ப்ச், பிடிக்காததை செய்யற ஆளா நான்!!”

“அதுதான் எனக்கு தெரியுமே, வேற என்ன காரணம் சொல்லு, நேராமாகுது..”

“சொல்றேன்..” என்றவள் மென்ஸ் செக்ஷனுக்கு சென்று முரளிக்கான உடையை தேர்ந்தெடுக்க தொடங்கினாள்.

“எதுக்குடி இதெல்லாம்?”

“பர்த்டே கிஃப்ட்..” என்று கண் சிமிட்டினாள்.

“ஹே!! உன்னோட பர்த்டேக்கு நான் தான்டி கிஃப்ட் பண்ணனும். நீ பண்ற?!..”

“பொண்டாட்டி வாங்கி கொடுத்தா அனுபவிக்கனும் கேள்வி கேட்க கூடாது..” என்று அவன் நிறத்திற்கு பொருத்தமான ஜீன்ஸ் டீஷர்ட் கொடுத்தவள், “போட்டுட்டு வா மாமூ..” என்றாள்.

“இது போட்டு எனக்கு பழக்கம் இல்லை ராகா..”

“இதை போட்டுட்டு உன்னால சண்டை மட்டும் போட முடியுதா?” என்று முறைத்தாள்.

“எனக்கு வேஷ்டி சட்டை தான்டி சௌகரியம்..”

“நீ ஜீன்ஸ் போட்டா தான் என் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். பொண்டாட்டிக்காக இதை கூட செய்ய மாட்டியா?” என்று முறைத்தாள்.

அதற்கு மேல் மறுக்க முடியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்தவன் அவளுக்கும் உடை தேர்ந்தெடுக்க தொடங்கினான்.

வெஸ்டர்ன் டாப்ஸ், குர்தி, ஜீன்ஸ், லெக்கிங்ஸ், என்று அவள் அணியும் விதத்தில் ஆடைகளை கண்டவள், “யாருக்கு எடுக்கறீங்க, அபிக்கா?! அவ தான் இதெல்லாம் போட மாட்டாளே?!...”

“அவளுக்கு இல்லை, உனக்கு!!”

“எனக்கா?!”

“ஆமா, புடவையில உன்னால வசதியா உட்கார முடியலைன்னு சொன்னியே.. கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு, மாத்திட்டு வா” என்றான் புன்னகையோடு.

“மாமூன்னா மாமூ தான்!! என் செல்ல மாமூ..” என்று அவன் தாடையை பிடித்து கொஞ்சியவள் உடை மாற்றி கொண்டு வந்து இருபுறமும் காலிட்டு வசதியாக அமர முரளிதரன் பைக்கை பீச் நோக்கி விரட்டினான்.
 
Last edited:

ஷமீம்

Active member
ஹீரோ என்ட்ரி ரொமான்டிக்கா இருக்கு.. ஆனால் ஆள் முரட்டு பீஸ் போலவே..
 
Top Bottom