• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அலையாடும் மேகங்கள் - 1

Vishakini

Moderator
Staff member
அலையாடும் மேகங்கள்
அத்தியாயம் – 1
மங்கள ஒலி இசைக்காமல் சொற்பமான உறவுகள் சூழ முருகனின் சன்னிதானத்தின் முன் மலர்கள் தலையில் விழ கிருத்திகாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட அமர் அவள் முகம் பார்த்து மெல்ல புன்னகைத்தான்.
அமரின் புன்னகை தனக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அவளுக்குள் ஆயிரம் சந்தேக எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. சந்தேகக் கண்களோடு இதழில் கடினப் புன்னகையை உதிர்த்தாள் கிருத்திகா.
குருக்கள் தன் கடமையைச் செய்து கொண்டிருக்க, உறவுகள் சிலரின் பேச்சுகள் கிருத்திகாவின் செவியை நிறைத்திருந்தது. சொந்தங்களின் பேச்சைத் தவறாக நினைப்பதில் தப்பொன்றுமில்லை தனக்கே அந்தச் சந்தேகம் இருக்கிறதேயெனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
சிறிதுளி சந்தேகம் ஊற்றெடுத்தாலும் பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஆழிப் பேரலையாக உருவெடுத்துக் குடும்பம் என்ற கூட்டை அழித்துச் சென்றுவிடும். சந்தேகத் தீயை அணைக்க மனம் அணை கட்டினாலும், தன் திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டவளுக்கு, நடப்பதையெல்லாம் கண்டு தனக்குள் உதிக்கும் எண்ணங்களுக்குப் பூட்டு போட முடியாமல் தவித்தாள்.
பலமுறை கிருத்திகாவை திரும்பிப் பார்த்த அமர் அவள் முகத்தில் இருக்க வேண்டிய மகிழ்ச்சி இல்லாமல் இருக்க, ‘எல்லா உண்மையும் சொல்லித்தானே சம்மதம் கேட்டேன். அவளும் ஏற்றுக் கொண்டு சரியென்று சொன்ன பிறகுதானே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், அவளிடம் மகிழ்ச்சியே இல்லையே ஏன்?’ என்று முகம் கவலை ரேகையைத் தத்தெடுத்திருந்தது.
முதல் முறை அமைந்த வாழ்க்கை தொடங்கிய சில காலங்களிலே முடிந்து போனது. தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாமல் போய்விட்டதே என்ற கவலையில் இருந்தவனுக்கு நண்பர்கள் உறவுகளின் அறிவுரையால் இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அடியெடுத்து வைத்துவிட்டான். பழைய சம்பவங்களைக் கூறி அவள் சம்மதம் சொன்ன பிறகே திருமணத்தை எளிய முறையில் நடத்தி மூன்று முடிச்சியையும் போட்டவனுக்கு அவளின் முக மாற்றம் நெருடலை உண்டாக்க, மறக்க நினைத்த பழைய நினைவுகள் மனதில் குடைய ஆரம்பித்தது.
புது வாழ்க்கையில் பழைய எண்ணங்களோடு தொடங்கினால் இதுவும் பாதியிலே கழன்றுவிடும் என்ற பயம் மனதில் குத்த, இதை இப்படியே விடக் கூடாது என எண்ணியவன், “கிரு, ஏன் ஒரு மாதிரி இருக்க? எதுவும் உடம்பு சரியில்லையா? இல்லை, வேற எதுவும் பிரச்சனையா?” என அவள் காதில் மெல்ல குனிந்து கேட்டான்.
திடீரென்று அமரின் குரல் காதில் ஒலிக்க, திடுக்கிட்டு நிமிர்ந்த கிருத்திகா, “அதெல்லாம் ஒன்னுமில்லை. காலையிலே எழுந்தது. அதான் கொஞ்சம் அசதியா இருக்கு” என இதழில் சிறு புன்னகையைத் தவழவிட்டாள்.
“ப்பூ! அவ்வளவுதானா? சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாம். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டுட்டு கிளம்பிருவாங்க. நாம வீட்டுக்குப் போயி ஓய்வெடுத்துட்டு மதியம் சாப்பிட ஹோட்டலுக்கு வரலாம்.”

சுற்றி இருந்தவர்களைப் பார்த்தவள், ‘எண்ணி ஒரு இருபது பேர்தான் இருப்பாங்க. யாருமே வீட்டுக்கு வரலையா? ஏன்?’ என்ற எண்ணம் தோன்றினாலும் கேட்கத் தயங்கி நின்றாள்.
சாப்பிட்டு முடித்தவர்கள் ஒவ்வொருவராகப் புறப்படத் தொடங்கினர். கிருத்திகாவின் மனம் மெல்ல மெல்ல கனக்கத் தொடங்கியது. ஆனால், அமருக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவன் சாதாரணமாக இருந்தது கிருத்திகாவுக்கு ஏமாற்றமாக இருக்க, கண்களில் குளம் வழியக் காத்திருக்க, யாரும் பார்க்கும் முன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
எல்லோரையும் அனுப்பிவிட்டு அமர் வர, அவன் கால் டாக்சி பதிவு பண்ணியிருந்த காரும் வர, இருவரும் காரில் ஏற அவர்களுடன் இருவரின் பெற்றோரும் ஏற, கோயிலிருந்து மெல்ல ஊர்ந்த கார் நெடுஞ்சாலையில் பறக்கத் தொடங்கியது.
வீடு வந்ததும் வெளியில் இருவரையும் நிற்கச் சொல்லிவிட்டு அமரின் தாய் ஆரத்தி தட்டுடன் வந்தார். இருவரும் உள்ளே சென்று உட்கார, தான் வாழப் போகும் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள் கிருத்திகா.
சின்னச் சின்ன மூன்று அறைகளுடன் கூடிய ஒரு குடும்பத்திற்கு ஏற்ற வீடு. வீட்டைக் கண்டு மகிழ்வாக இருந்தாலும் சொந்தங்கள் யாரும் வந்தால் தங்குவது சிரமமாக இருக்குமேயென யோசித்தவள் மாடியில் அறை இருக்கும் என நினைத்துக் கொண்டாள்.
ஒருத்தருக்குள் ஒருத்தர் எந்தப் பேச்சுக்களும் இல்லாமல் அறை முழுவதும் அமைதி கொட்டிக் கிடந்தது. அமரின் தாய் பத்மா அவனைத் தனியாகச் சமையல் அறைக்குள் கூப்பிட உள்ளே சென்றான்.
“என்னம்மா அங்கயே பேச வேண்டியதுதானே, எதுக்குத் தனியா கூப்பிடுறீங்க? அவங்க ஏதாவது தப்பா நினைக்கப் போறாங்க” எனக் கேட்டுக் கொண்டே அடுப்பு மேடையில் சாய்ந்து நின்றான்.
“ம்க்கூம்… இப்ப மட்டும் எல்லாம் நல்லாவா பேசிட்டு இருக்காங்க? நாங்க விசாரிச்ச வரைக்கும் கிருத்திகா ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்லியிருக்காங்க. அவ கூட ஒழுங்கா குடும்பம் நடந்துற வேலையைப் பாரு” பத்மாவின் சத்தம் ஓங்கி ஒலிக்க, கிருத்திக்காவின் காதில் விழுந்து விடுமோ என்று கோபம் வர, அதை அடக்கிக் கொண்டான் அமர்.
“அம்மா, நான்தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்ன்ற மாதிரி சொல்றீங்க. முழுக் காரணம் அவதான்…” என்றவனை அதற்கு மேல் பேசவிடாமல் தடுத்த பத்மா, “பழையதைப் பேசிப் பிரயோஜனம் இல்லை. குடும்பம்னா பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளித்துப் போனாதான் நல்ல வாழ்க்கை வாழ முடியும் எடுத்ததுகெல்லாம் விவாகரத்துன்னு போனா யாரும் சேர்ந்து இருக்க முடியாது” என்றவர் காபி டம்ளரை அவன் கையில் திணித்தார்.
“இப்ப என்ன சொல்ல வரீங்க? அதைச் சீக்கிரம் சொல்லுங்க” என்றான் சலிப்பாக.
“சின்னச் சின்னப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாம விவாகரத்து பண்ணிட்டு வந்து நின்றவனுக்கு இன்னொரு கல்யாணம் எதுக்கு? இன்னொரு பொண்ணோட வாழ்க்கையிலும் விளையாடனுமா? அதுக்குக் காரணமா இருக்க நாங்க விரும்பலைன்னு உன் கல்யாணத்துக்கு வரமாட்டோம்னு உன் கூடப் பிறந்த மூனு பேரும் வரலை. இதுக்கு மேல நான் உனக்குச் சொல்ல எதுவுமில்லை” என்றார் பத்மா.
இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த வெங்கடேஷன், “நாங்க சொல்றதைச் சொல்லிட்டோம். பெத்த கடமைக்கு என்ன செய்யனுமோ செய்திட்டோம். உன் வாழ்க்கையை வாழ வேண்டியது நீ. அதை எப்படி நல்லபடியா அமைச்சுக்கனுமோ அது உன் கையில் இருக்கு” என்றவர் பத்மாவின் பக்கம் திரும்பி, “பஸ்ஸுக்கு நேரமாச்சு கிளம்பலாமா?” என்றார்.
“எதுக்கு உடனே கிளம்பறீங்க? ரெண்டு பேரும் இருந்துட்டு போலாமில்ல…” என அமர் இழுத்தான்.
“போதும்! எதுக்கு இவ்வளவு சின்ன வீடா பார்த்திருக்கேன்னு எங்களுக்குப் புரியாதா என்ன? சம்பந்தியும் சம்பந்தியும்மாவும் எங்க கூடதான் வராங்க” வெளியிலிருந்து மூவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருத்திகா அதிர்ச்சியில் தன் தாய் கற்பகத்தைப் பார்க்க, அவரும் ஆம் என்று கண்களை மூடித் திறந்தார்.
ஒரு வாரமாவது தன்னுடன் இருப்பார்கள் என நினைத்தவளுக்குத் தனி மரமாக விட்டுச் செல்வதை ஏற்க மனம் இல்லாமல் அமரிடம் பேச எழ, அவள் கையைப் பிடித்து உட்கார வைத்தார் பெருமாள்.
“மருமகனுக்கு நாங்கெல்லாம் இருக்கக் கூடாதுன்ற எண்ணமில்லை. அவரோட பழைய வாழ்க்கையில் பட்ட அடி இப்படி நடக்கார். அவரை உனக்கேற்ற மாதிரி அவரை மாற்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்றது உன் கையில் இருக்கு. பார்த்துப் பக்குவமா நடந்துக்கோமா” என்றார்.
பெருமாள் சொல்வதைக் கேட்டபடியே பத்மா, வெங்கடேஷன் வெளியில் வர, “பெற்றவங்க எப்படியும் போகட்டும்னு விட்ருவாங்க. ஆனால், அவரை நான் மாற்றனும். திருத்தறது என் வேலைன்னா என் வாழ்க்கையை நான் எப்போ வாழ்றதுப்பா?” பெருமாளுக்கு மட்டுமில்லை அங்கிருந்த அனைவருக்கும் கிருத்திகாவின் கேள்வி சுருக்கென்று குத்தியது.
திருமணத்தில் ஒட்டாமல் கடமைக்குச் செய்ற மாமனார், மாமியாரை ஆரம்பத்திலிருந்தே கவனிக்கும் போதே உள்ளுக்குள் நெருடல் இருந்தது. அமருக்கு உடன் பிறந்தோர் இருவர் இருந்தும் திருமணத்திற்கு வரமால் இருந்தது மேலும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. தவறான ஒருவனுக்குத் தன்னைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என முடிவு செய்துவிட்டாள் கிருத்திகா.
படிக்காததால் கிடைத்த வேலையைச் செய்து கற்பகமும் பெருமாளும் குடும்பம் நடத்தினர். வேலை கிடைத்தால் ஊதியம், இல்லையென்றால் பட்டினி. இந்த நிலையில் ஒற்றைப் பெண் பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்று, அரசாங்க பள்ளியில் சேர்த்துவிட, படிப்பு மட்டுமின்றி இரண்டு வேலை உணவும் கிருத்திகாவுக்குக் கிடைத்துவிட, இரவு உணவை மட்டும் கற்பகம் கொடுத்து வளர்த்தார்.
வயிறு நிறைந்தாலும் பெற்றவர்களின் கஷ்டம் புரிந்தவள், அதனால், நல்ல மதிப்பெண்களை எடுத்துப் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். மேற்கொண்டு கல்லூரியில் படிக்க வைக்க வழியின்றித் தவித்தவர்களுக்கு அரசாங்கம் இளநிலை படிப்பு படிக்க அறிவித்திருந்த திட்டத்தின் மூலம் படிக்கலாமென ஆசிரியர்கள் வழி காட்ட, இளநிலை பட்டம் வாங்கிவிட்டாள். முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கப் போகும் நேரம் தெரிந்தவர்கள் மூலம் பெற்றோருடன் அமர் பெண் கேட்டுச் சென்றிருந்தான்.
இரண்டாம் தாரமாகப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க விருப்பம் இல்லாமல் இருந்த பெருமாளிடம், கிருத்திகாவின் முதுநிலை படிப்புச் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்க, பெருமாளும் கற்பகமும் யோசிக்க ஆரம்பித்து அமரைப் பற்றி விசாரித்தனர்.
அமரின் பேச்சும் பெற்றோரின் கனிவும் இருவருக்கும் பிடித்துவிட, அவனுக்கு இரண்டாம் திருமணம் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. நான் நன்றாக விசாரித்துவிட்டேன். இப்படியொரு நல்ல குடும்பம் நம்ம ஊர்ல தேடினாலும் கிடைக்காது. சீர் நிறையச் செய்து கட்டிக் கொடுக்கிற அளவுக்கு எங்களாலும் முடியாது என்பதை கிருத்திகாவிடம் சொல்ல, இதுவரை தன் சொல்லை மீறாதவள் இதற்கும் சரி என்பாளென நினைத்தார்.
தன் எதிர்கால வாழ்வுக்காக இதுவரை செய்தது எல்லாம் நல்லதுதான் என்பதை ஆணித்தரமாக அடித்து எங்கும் சொல்வாள். ஆனால், இப்போது அப்பா சொல்வது தன்னை வாழ வைக்குமா? நிர்முலமாக்குமா? என்ற பயப் பந்து உள்ளுக்குள் உருள ஆரம்பித்தது.
பெற்றவர்களிடம் வேண்டாமெனச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டாமென்று தன் பயத்தை மறைத்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தாள். அமர் பார்க்க வந்த போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனின் முதல் திருமணம் என்னவென்ற கேள்வியும் அவளிடம் இல்லை. அவளின் ஒரே காரணம் தன் வறுமைதான் என்ற எண்ணம் அனைத்திற்கும் அவளைத் தலையை ஆட்ட வைத்தது.
அமரின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் இரண்டாம் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்தான். நண்பர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் குடும்பத்தோடு வருவதைக் கண்டவன், தான் மட்டும் தனி மரமாக நிற்பதை நினைத்து எங்கும் செல்வதைத் தவிர்த்தான். அவன் நிலை உணர்ந்த நண்பர்கள் மறுதிருமணத்திற்குக் கட்டாயப்படுத்த, இரண்டாம் திருமணமும் தோல்வியில் முடிந்துவிடக் கூடாதென்று பெற்றோருடன் தேடிக் கண்டுபிடித்தவள்தான் கிருத்திகா.
பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகளைப் பேசி தீர்க்காமல் விவாகரத்து வேண்டாமெனச் சொல்லியும் கேளாமல் உறுதியாக இருந்தான் அமர். அவளுடன் எனக்கு வாழ்வே வேண்டாம் என்று விவாகரத்துக்குப் போனவன் திடீரென்று இரண்டாவது திருமணம் என்று வந்து நின்றதும் பத்மாவும் வெங்கடேஷனும் சம்மதிக்க மறுத்துவிட்டனர்.
நிதானமாக யோசித்தபின் அமருக்கு என்ன வயதாகிவிட்டது, நல்ல வாழ்க்கையை இப்போது அமைத்து கொள்ளவில்லை என்றால் அவன் எதிர்காலம் பாலைவனமாக மாறிவிடுமென, தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்க, அவர்கள் மூலம் வந்தவள்தான் கிருத்திகா.
அமரின் முன்னால் வாழ்க்கையைப் பற்றிய முழு விபரங்களையும் கூறி கற்பகம் பெருமாள் சம்மதம் சொன்ன பிறகே திருமண ஏற்பாட்டைச் செய்தனர். கிருத்திகாவின் கேள்வி முள்ளாகக் குத்த, அவள் பெற்றோருடன் மட்டும் பேசாமல் அவளிடமும் பேசியிருக்க வேண்டுமோ காலம் கடந்து யோசித்தனர்.
“நீ திருத்தனும்ன்ற அளவுக்கு அமர் மோசமானவன் கிடையாதும்மா. உன் வாழ்க்கை உனக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொண்டு அவனுடன் சந்தோஷமா இரு. அதுக்கு அவன் என்ன செய்யனுமோ அதைக் கண்டிப்பா செய்வான்” என அமரின் முகம் பார்த்துவிட்டு கிருத்திகாவின் தலையை வருடினார் பத்மா.
ஒரே நாளில் தனியாக அமரிடம் விட்டுச் செல்வதால் இந்தக் கேள்வி கேட்கிறாள் என நினைத்த வெங்கடேஷன், “யாம்மா மருமகளே, நீ என்ன பண்ணுவியோ தெரியாது. அடுத்த முறை வரும் போது ஒரு மாதம் தங்கிட்டு போற மாதிரி வீடு பார்க்கச் சொல்லி மாறியிருக்கனு” என்ற மாமனாரைப் பார்த்துச் சிரித்தாலும், தன்னைச் சமாதானம் செய்வதற்காகச் சொல்லும் வார்த்தைகள் என்றே நினைத்தாள்.
தொடரும்…
 
Top Bottom