• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அலையாடும் மேகங்கள் - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அலையாடும் மேகங்கள்

அத்தியாயம் – 3

விடியற்காலை வரை விழித்திருந்தவன் அதற்குமேல் முடியாமல் கிருத்திகாவின் அருகிலே படுத்துவிட்டான் அமர். மருந்துகள் செய்த வேலையால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கிருத்திகா மெல்ல கண் திறந்து பார்க்க, அமரின் அரவணைப்பில் அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்தாள்.

அதைக் கண்டு திடுக்கிட்டவள் மடமடவென எழுந்து, சினிமாவில் வருவது போல் அதிகமா தனக்குக் குளிர, நடக்கக் கூடாதது நடந்துவிட்டதோ எனப் பயந்து தலையிலிருந்து கால்வரை தன்னைப் பார்த்துக் கொண்டவள், ‘அப்பாட!’ எனப் பெரு மூச்சுவிட்டாள்.

தன் செயலைக் கண்டு பின்னந்தலையில் அடித்துக் கொண்டு அலங்கோலமாகக் கிடந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தவள் சுத்தம் செய்த பிறகு சமையல் அறைக்குள் நுழைந்து அங்கும் எல்லாத்தையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டுச் சமைக்கப் பொருட்கள் இல்லாமல் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. கட்டைப் பையைத் தூக்கியவள் பக்கத்து வீட்டிற்குச் சென்று என்னென்ன கடைகள் எங்கிருக்கு எனக் கேட்டுத் தெரிந்து கொண்டவள் நடக்க ஆரம்பித்தாள்.

கிருத்திகா சென்ற அரைமணி நேரம் கழித்து எழுந்த அமர், அவளைத்தான் முதலில் தேடினான். அவளும் இல்லை உடமைகளும் இல்லாமல் வீடு சுத்தமாக இருப்பதைக் கண்டு தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான்.

சமாதானம் செய்துவிடலாமென நினைத்தவனுக்கு ஒரேடியாக வேண்டாமென்று சென்றுவிட்டாளே என்பது பேரிடியாக இருந்தது. மற்றவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பது அதைவிடப் பெருங்கவலையாகத் தொற்றிக் கொள்ள, குளித்து வந்தும் மூளையின் போரட்டத்தை நிறுத்த முடியவில்லை.

கைப்பேசி சத்தம் போட அம்மா எனத் திரையில் தெரிய, கிருத்திகா இல்லை சென்றுவிட்டாளென எப்படிச் சொல்ல என்று கைப்பேசியை வெறித்துப் பார்த்திருந்த நேரம் வெளியில் ஆட்டோ சத்தம் கேட்க எட்டிப் பார்த்தவனின் முகம் ஆயிரம் வால்ட் பல்பாகப் பிரகாசமடைந்தது.

மனம்மாறி திரும்ப வந்துவிட்டாளென ஓடி வந்தவன், ஆட்டோகாரர் கையில் அரிசி மூட்டையுடன் வருவதையும் கிருத்திகா இரண்டு கட்டைப் பையுடன் வருவதைக் கண்டு, இரண்டு பையையும் வாங்கி வர, ஆட்டோக்காரர் அரிசி மூட்டையை இறக்கி வைத்திருந்தார்.

ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்த கிருத்திகாவிடம், “இராத்திரி முழுக்கக் காய்ச்சலில் இருந்துட்டு ரெஸ்ட் எடுக்காம எதுக்குக் கடைக்குப் போன. என்னை எழுப்பியிருக்கலாமில்ல. நான் வேற என்னமோ நினைச்சிட்டேன்.”

சமையல் அறைக்குள் செல்லப் போனவள் திரும்பி, “என்ன நினைச்சீங்க? ஊரைவிட்டு ஓடிட்டேன்னா” எனக் கேட்டவளிடம் வலம் இடமாகத் தலையை ஆட்டிவிட்டு, மேலும் கீழுமாக ஆட்டினான்.

“இல்லை அப்படியில்லை. நேற்றிலிருந்து கோபத்தில் இருந்தியா… அதான்…” என ரப்பராக இழுத்தான் அமர்.

“அப்படி ஓட நினைச்சிருந்தா, கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருக்கமாட்டேன். இராத்திரி முழுக்கக் கவனிச்சதுனால நீங்க ரொம்ப நல்லவருன்னு நினைச்சிட்டேன்னு நினைக்காதீங்க” என வாங்கி வந்த பொருட்களை அலமாரியில் அடுக்க ஆரம்பித்தாள்.

“சரிதான். நீ என்னை அயோக்கியன்னு நினைச்சாலும் பரவாயில்லை. செலவு எவ்வளவு ஆச்சு சொல்லு. பணம் வச்சிருந்தியா?”

“மிஸ்டர் நான் படிச்சதே உதவித் தொகை மூலம்தான். நான் வேலைக்குப் போய் என் அம்மா, அப்பாவை வீட்ல உட்கார வைத்து அழகு பார்க்க நினைச்சேன். அது எல்லாம் பாழா போயிட்டு. இந்த இலட்சணத்துல நான் மூவாயிரம் செலவு பண்ணுவேன். எல்லாத்தையும் உங்க பணத்தில்தான் வாங்கினேன்”

“என் பணமா எப்படி? நான் பாக்கெட்ல அவ்வளவு பணம் வைக்கலையே!” துவைக்கப் போட்ட சட்டையை எடுத்து வேறு பணம் எதுவும் இருக்கா என்று தேடினான் அமர்.

“பணம் வைக்கலை டெபிட் கார்டு வச்சிருந்தீங்கல்ல. அதை எடுத்துகிட்டேன்” என அவனிடம் பற்று அட்டையைக் கொடுத்தாள்.

“ஓ!” என்றவன், “ஆ! அதெப்படி பின் நம்பர் தெரியாம யூஸ் பண்ண?” அட்டையைத் திருப்பித் திருப்பிப் பார்த்த்தான்.

“அடடா! எதுக்கு இத்தனை கேள்வி உங்க சொத்தையா எடுத்துட்டேன். நேற்று ஹோட்டல்ல அமவுண்ட் கொடுக்கும்போது நீங்க பின் நம்பர் போட்டதைப் பார்த்தேன். முதல்ல எழுப்பலாம்னு நினைச்சேன். இராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தீங்களா பாவமா இருந்துச்சு. அதான் கார்டை எடுத்துட்டுப் போயிட்டேன்” சாதாரணமாகக் கிருத்திகா சொல்லிவிட்டாள். அமருக்கோ உள்ளுக்குள் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது.

நடந்த யுத்த களத்தில் பழைய நினைவுகள் முண்டியடித்து வர, “என்னைக் கேட்காம டெபிட் கார்டை எல்லாம் எடுக்கிற வேலை வச்சுக்காத. என்ன வேணுமோ என்னிடம் கேள். நானே வாங்கித் தரேன்” முகத்தில் அடித்தாற் போல் பதில் உரைத்தான்.

அடுக்கிக் கொண்டிருந்த பொருட்களை அப்படியே வைத்துவிட்டு, மளிகை சாமான் ரசீதை அமரிடம் கொடுத்து, “நான் வாங்கிட்டு வந்த பொருள் எல்லாம் அங்க இருக்கு. அதுக்குள்ள பில் இது. நான் தேவையில்லாம ஏதாவது வாங்கியிருக்கேனா? பில்லில் இருக்கிற பணத்தைத் தவிர வேறு எதுவும் செலவு ஆகியிருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. உங்க சட்டைப் பையில் இருநூறு ரூபாய் இருந்துச்சு. அதை ஆட்டோக்குக் கொடுத்தேன். உங்க வீட்டுக்கு நான் ஏன் செய்யனும்? இனிமே நீங்களே பார்த்துக்கோங்க”

“உங்க வீடா ஏன் நம்ம வீடுன்னு சொல்லமாட்டியா?”

“ம்க்கூம் மளிகை சாமான் வாங்க ஏடிஎம் கார்டை எடுக்க உரிமை இல்லாதப்போ, இந்த வீட்டில் எனக்கு என்ன உரிமை இருக்கு? உங்க வீட்டுக்கு என்ன செய்யனுமோ செஞ்சிக்கோங்க. எனக்கு மூனு வேலையும் சாப்பாடு கரெக்டா வந்திரனும்” புத்தகம் ஒன்றை கையில் எடுத்தவள் கவனத்தை அதில் திருப்பினாள்.

“மூனு வேளைக்கும் சாப்பாடு வரனுமா, யார் சமைக்கிறது?” சமையல் அறை பக்கமே போகதவனைப் போக வைத்துவிடுவாளோ என்ற பயம் அமருக்குத் தொற்றிக் கொண்டது.

“நீங்க சமைத்தாலும் சரி ஆள் வைத்துச் செய்தாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” புத்தகத்திலிருந்து பார்வையை அகற்றாமல் சொன்னாள் கிருத்திகா. கைப்பேசி வங்கியில் கணக்கைச் சரிபார்த்த அமர் அவசரப்பட்டுப் பேசியதை நினைத்து வருந்தினாலும் கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதே.

******

அலுவலகம் விட்டு வந்த அமரின் வீடு விழாக் கோலம் பூண்டிருப்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் நிற்க, பலரின் கைத்தட்டல்களுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சுஜியை புரியாமல் பார்க்க, அவனை அரவணைத்து முதல் திருமண வாழ்த்துகளைக் கூற முகம் பூரித்துப் போனான்.

நண்பர்களுடன் கேளிக்கை கொண்டாட்டங்களுடன் விழா முடிந்ததும் ஒவ்வொருவராகச் செல்ல, மிகுந்த மகிழ்ச்சியில் அவளை அணைத்து, “சாரி சுஜி மறந்துட்டேன். நாளைக்கே உன்னைக் கடைக்குக் கூட்டிட்டு போய் என்ன வேணுமோ வாங்கித் தரேன்” என்றவன் தன் கைப்பேசியை எடுத்துப் பார்க்க வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, அதைக் கண்டு அதிர்ந்தான்.

ஒவ்வொரு குறுஞ்செய்தியாகப் பார்த்துவிட்டு மெல்ல கணக்கு போட, சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்று சிறுகச் சிறுக சேர்த்த பணத்தில் ஒரு இலட்சம் காலியாகிருந்தது.

“சுஜி, ஒரு இலட்சம் பணம் எடுத்திருக்க ஏன்?”

“என்ன கேள்வி இது? நம்மளோட முதல் திருமண நாளை ஃப்ரெண்ட்ஸோட கிராண்டா கொண்டாட நினைச்சேன். உனக்குச் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லலை. மூனு மணி நேரம் எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தோம். அதுக்கு முன்னாடி பணமெல்லாம் தூசி அமர்”

“நாம சொந்த வீட்டில் வாழ் நாள் முழுக்க மகிழ்ச்சியா இருக்க, இதைச் சம்பாதிக்க ஆறு மாசம் கஷ்டப்பட்டேன். ஆனால், நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாத ஒன்றுக்கு மூனு மணி நேரத்தில் பணத்தைக் காலி பண்ணியிருக்க.”

“ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? அவங்களுக்கு முனியாண்டி விலாஸ்லையா வாங்கிக் கொடுக்க முடியும் புரிஞ்சிக்கோ அமர்” என அவன் தோள்களில் கைப்போட்டு கழுத்தைச் சுற்றி பிடித்தாள்.

கைகளைத் தட்டிவிட்ட அமர், “வந்தவங்க யாரும் என் ஃப்ரெண்ட்ஸ் இல்லையே. உன் ஃப்ரெண்ட்ஸ்தானே நீ சம்பாதிச்சதிலிருந்து செலவு பண்ணியிருக்க வேண்டியதுதானே. என்னோட பணத்தை ஏன் எடுத்த?”

கோபமான சுஜி, “அமர், நான் நீன்னு பிரிச்சுப் பேசுற. இப்ப என்ன உனக்குப் பணம்தானே முக்கியம் நான் கொடுக்கிறேன் போதுமா?” என்றவள் கைப்பேசியை எடுத்து அமருக்கு அனுப்பினாள்.

‘நாளைக்குக் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னல்ல. அப்ப இந்தப் பணத்தை வசூல் பண்ணிக்கிறேன்’ என உள்ளுக்குள் நகைத்தாள்.

மறுநாள் அலுவலகம் புறப்பட்ட அமரை மறித்து நின்ற சுஜி, “இன்னைக்கு என்னைக் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு ஆபீஸ் கிளம்பியிருக்க.”

“அதான் இலட்சம் பணம் செலவு பண்ணி ஃப்ரெண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுத்திருக்கியே. இதுக்கு மேல் என்ன வேணும்?” சுஜியின் எண்ணம் தவிடு பொடியாகிவிட முகம் சிறுத்தது. அவள் முக மாற்றத்தைக் கண்டும் காணாமல் போனான் அமர்.

“அமர், இது ஏமாத்து வேலை. முதல் திருமண நாளே உனக்கு ஞாபகம் இல்லை. அட்லீஸ்ட் கிஃப்ட் கூடவா வாங்கித் தரமாட்ட” தன் பணம் போன ஆதங்கம் கோபமாக வெடிக்க.

“கண்டிப்பா வாங்கித் தர முடியும். நான் வாங்கிக் கொடுக்கிறதை நீ வாங்கமாட்ட. ஏன்னா நேத்து நீ அனுப்பின பணத்தை எப்படித் திரும்ப வாங்குறதுன்னு ஒரு லிஸ்ட் போட்டிருப்ப. நான் சொல்றது சரிதானே. இனிமே என் டெபிட் கார்டை எடுக்காத. நமக்குத் தேவைகள் நிறைய இருக்கு. வீண் செலவு வேண்டாம். திருமண நாளை நாம ரெண்டு பேரும் கொண்டாடி இருக்கலாம். எதுக்கு ஃப்ரெண்ட்ஸைக் கூப்பிட்டுத் தேவையில்லாத செலவு?”

“என்ன செலவு பண்ணிட்டேன். நம்ம திருமண நாளை கிராண்டா பண்ண நினைச்சேன். அது ஒரு தப்பா?” சுஜியின் ஆத்திரம் எல்லை கடந்திருந்தது.

“தப்பில்லை ஒரு வரைமுறை இருக்கு. அதைத் தாண்டிப் போகாதேன்னு சொல்றேன்”

“ஆண்ங்கிற திமிரில் பேசுறீயா அமர்? என்னை அடக்கி ஆள நினைக்கியா?”

“இதில் ஆணென்ன? பெண்ணென்ன? நான் இதைச் செய்திருந்தாலும் நீ என்னைக் கண்டிக்கனும். நாம மகிழ்ச்சியா வாழனுமில்ல. பணம் நமக்குத் தேவைதான். ஆனால் வீண் விரயம் வேண்டாம்னு சொல்றேன் புரிஞ்சிக்கோ.”

“கல்யாணம் பண்ணிட்டா பொட்டி பாம்பா அடங்கி உள்ளையே இருக்கனும்னு சொல்றீயா? எந்தச் சுகங்களையும் அனுபவிக்கக் கூடாதுன்னு சொல்ற அப்படித்தானே”

“இதுக்கு மேல பேசிப் புரிய வைக்க முடியாது. எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு. கொஞ்சமாவது யோசி. அடுத்து நமக்குக் குழந்தைன்னு வந்தா செலவு அதிகமாகும். இப்பவே நாம சேர்த்து வைக்க வேண்டாமா?”

“நம்ம சந்தோஷத்துக்குக் குழந்தை இடைஞ்சலா இருக்கும்னா எதுக்குப் பெத்துக்கனும்?” சுஜியின் வாதம் விதண்டா வாதமாக மாற, கோபத்தில் பேசுகிறாள் என்று அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வெளியேறினான்.

தனக்குத் தேவையானதற்கு அமர்தான் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அளவுக்கு மீறிப் போனாள். ஆனால், அது தனக்குத் எதிராகத் திரும்பும் என எதிர்பார்க்காதவள் தலையில் கல்லை விட்டது போல் பணத்தை வாங்க வழியின்றித் தவிக்க, அதுவே அவளுக்குள் பிரளயமாக உருவாக ஆரம்பித்தது.

அமர் சிறுக சிறுக சேமித்த பணத்தைச் செலவு செய்யும்போது தெரியாத வலி, தன்னுடையது என்று வரும்போது வலி அதிகமாகியது. அது புரிந்தால் அவளுடன் வாழும் வாழ்க்கை சுமூகமாகப் போகும் என்று நினைத்துப் பணத்தை அவளிடமிருந்து வாங்குவதில் கறாராக இருந்தான் அமர். ஆனால், அதுவே பெரிய பிரளயத்தை உண்டாக்கப் போகிறது என்பது தெரியாமல் போனது.

*****

மளிகைப் பொருட்களையும் இரசீதையும் பார்க்க, தேவையில்லாத எந்தப் பொருளையும் வாங்கவில்லை என்பது புரிந்தது. சுஜியால் ஏற்பட்ட அனுபவத்தைக் கிருத்திகாவின் மீது காட்டியதை எண்ணி வருந்தினாலும் அவளைச் சமாதானம் செய்வது எப்படியெனத் திணறி நின்றான்.

“கிரு, மன்னிச்சிரு. நான் ஏன் அப்படிச் சொன்னேன்னா…” என்று இரப்பராக இழுத்தவன் நடந்ததைச் சொல்லி முடித்தான்.

“என்னவா இருந்தாலும், என்ன நடந்ததுன்னு கேட்காம, என்னைப் பற்றி எதுவும் தெரியாம, நீங்க எப்படிச் சொல்லலாம்?” என்ற கிருத்திகாவின் கேள்விக்கு இரண்டு கையையும் தலைக்கு மேல் தூக்கி, அவள் முன் மண்டியிட்டு நின்றான். அமரின் செய்கையில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

“கிரு, நேத்து இராத்திரி முழுக்கக் காய்ச்சலில் இருந்த. இப்ப எதுக்கு எல்லா வேலையும் இழுத்துப் போட்டுச் செய்ற? நீ ரெஸ்ட் எடு. உடம்பு சரியானதும் எல்லா வேலையும் பார்த்துக்கலாம்” என்றான் அமர்.

“எனக்கு இருட்டுன்னா பயம். உடனே காய்ச்சல் வந்திரும். நேத்து நீங்க கோபத்தில் வெளியில் போனதும் சோபாவில் படுத்ததும் தூங்கிட்டேன். திடீர்னு முழிச்சுப் பார்த்தா வீடு இருட்டா இருக்கு. சுவிட்சு எங்க இருக்குன்னு தேடுறதுக்குள்ள, கை, கால் எல்லாம் ஆட ஆரம்பிச்சுட்டு. அப்படியே நின்ன இடத்தில் சுருண்டு படுத்துட்டேன். அதுக்குப் பிறகு நடந்த எதுவும் தெரியாது.”

“அட! ரொம்பத் தைரியசாலின்னு நினைச்சேன். இருட்டுக்குப் போய் இப்படிப் பயப்படுற? என்ன நடந்துன்னு தெரியாதா? அப்ப என்ன நடந்திருந்தாலும் தெரிஞ்சிருக்காதா?” என்றவனின் தலையில் பாத்திரத்தால், ‘நங்’ என்று வைத்தாள்.

“காலையில் எழுந்ததும் எதுவும் எனக்குத் தெரியாம நடந்திருக்கான்னு செக் பண்ணிட்டேன். நடந்திருந்தா என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கமாட்டீங்க” என்றாள்.

என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? காய்ச்சல் இருக்கிறப்போ அதையெல்லாமா யோசிப்பாங்க? அப்போ பயத்தில்தான் என்னைக் கட்டிப் பிடிச்சியா? நான் என்னமோ ஆசையில் பிடிச்சிருக்கியோன்னு நினைச்சிட்டேன்” எனக் காய்ந்த இலையாக முகம் தொங்கியது.

“கொஞ்சம் வெளிய போறீங்களா? நான் சமையல் வேலை பார்க்கனும். சும்மா தொணதொணன்னு பேசிட்டு இருக்கீங்க” என்றவள் கையை வாசலை நோக்கி நீட்டினாள்.

“இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் புரிஞ்சிக்கவே முடியாது எப்ப எப்படி இருப்பாங்கன்னே தெரியமாட்டேங்குது” எனப் புலம்பியபடியே செல்ல, “கிரு, நான் கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வரேன். உனக்கு ஏதாவது வேணுமா? வரும்போது வாங்கிட்டு வரேன்” வாசலில் நின்று கத்தினான் அமர். கிருத்திகாவிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் உள்ளே வந்து, “நான் கேட்டுட்டே இருக்கேன் பதிலே சொல்லாம இருக்க?”

“எதுவும் வேணும்னா கேட்டு வாங்கத் தெரியும். ஏழு ஊருக்கு கேட்கிற மாதிரி வெளியில் நின்னு கத்த வேணாம்” என்றவளை, ‘ஆஹா!’ எனப் பார்த்தவன் தலையை ஆட்டியபடியே போனான்.

இரண்டு மணி நேரம் கழித்து வந்த அமர் கையில் பெரிய பெட்டியுடன் வர, கூடவே ஒருவரையும் அழைத்து வந்திருந்தான். உள்ளே நுழையவும் அவன் நாசிகளைச் சாம்பாரின் மணம் துளைத்தது.

“சார், உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா? வாசனை ஆளையே தூக்குது” உடன் வந்தவன் கேட்க, கல்யாணமான ஒரே நாளில் என்ன தெரியும்? கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்துச் சமாளித்தான்.

மின் பணியாளர் (Electrician) அமரிடம் இருந்த பெட்டியை வாங்கிப் பிரித்து வந்த வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்துச் செல்ல, “கிரு, இனிமே இருட்டுன்னு பயப்பட வேண்டாம். கரெண்ட் போனா உடனே எல்லா ரூம்லையும் லைட் எரியும். இன்வெர்ட்டர் மாட்டிட்டேன்” என்னமோ செய்கிறாரெனத் தன் வேலையுண்டு என்றிருந்தவள் வியந்து அமரை பார்த்தாள்.

“எதுக்குத் தேவையில்லாத செலவு? எப்பவாது போகும் கரெண்டுக்கு எதுக்கு இன்வெர்ட்டர்?”

“நான் சில நேரம் ஆபிஸிலிருந்து வர நேரமாகும். இங்க கரெண்ட் எப்ப ஆஃப் ஆகும்னு யாருக்கும் தெரியாது. திரும்பப் பயந்து காய்ச்சல் வந்திரக் கூடாதுல்ல. சரி அதைவிடு. சாயங்காலம் ரெடியா இரு, கடைக்குப் போயிட்டு வரலாம். இப்ப ரொம்பப் பசிக்குது சாப்பாடு போடேன். சாம்பார் வாசனை வாவாங்குது” என்றவன் பானையோடு வந்து உட்கார்ந்துவிட்டான்.

கிருத்திகா பரிமாற அவளை இழுத்து உட்கார வைத்துத் தட்டில் சாப்பாடு எடுத்துப் போட, “நான் வீட்டில் இருக்கும்போது நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்றவன் அலுவலகக் கதையில் ஆரம்பித்துப் பல கதைகளை அவன் மட்டுமே பேசினான்.

மாலைப் பொழுதில் கடை வீதிக்கு அழைத்துச் சென்று முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியைக் கிருத்திகாவை தேர்ந்தெடுக்கச் சொல்ல, “யாருக்கு மொபைல்?” கிருத்திகா கேட்க.

“உனக்குத்தான் கிரு” என்றதும் கையிலிருந்த கைப்பேசியைக் கீழே வைத்தாள் கிருத்திகா.

கடைக்காரரிடம், “சார், ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரத்துக்குள் மொபைல் காட்டுங்க” என்றாள்.

“சாரே வாங்கித் தரும்போது நீங்க ஏன் மேம் வேண்டாம்னு சொல்றீங்க” கடைக்காரர் சொல்ல.

“அவர் வாங்கித் தந்தாலும் எனக்கு எது தேவையோ அது போதும்” பட்டென்று சொன்னாள்.

கடைக்காரர் எந்தப் பதிலும் சொல்லாமல் கைப்பேசிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான். அமரும் கடையில் வைத்து எதுவும் கேட்க வேண்டாமென்று அமைதியாக இருக்க, கைப்பேசி ஒன்றை எடுத்து அமர் கையில் கொடுத்து, “இதைப் பில் போடுங்க” என்றாள்.

வீட்டிற்கு வந்ததும், “ஏன் கிரு விலை அதிகமுள்ள மொபைலை வேண்டாம்னு சொன்ன?” அமர் கேட்க.

“வீடு கட்ட பணம் சேர்த்து வைக்கிறதா சொன்னீங்க. அப்ப எதுக்குத் தேவையில்லாத செலவு? விலை கம்மியா இருந்தா பேச முடியாதா? இல்லை, யார் பேசுறதும் கேட்காதா?” என்றவளைக் கண்டு ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தான்.

“சந்தோஷமா இருக்கு கிரு. நான் சரியாத்தான் உன்னைச் செலக்ட் பண்ணியிருக்கேன்” எனப் பூரித்துப் போனான் அமர்.

“ரொம்ப மேல போகாதீங்க. நாளைக்கு ஏதாவது பிரச்சனையில் மொபைலுக்குப் பணத்தைக் கேட்டா நான் எங்க போறது? சம்பாதிக்கிறதுனால இலட்சத்தை அசால்டா திருப்பிக் கொடுத்துட்டா சுஜி. நான் என்ன பண்றது?”

“ஆமா! ஆமா! அதுவும் சரிதான். அப்பக் காலையில் இன்வெர்ட்டர் மாட்டினப்போ திருப்பிக் கொடுக்கச் சொல்லலையே ஏன்? அதுவும் உனக்காகதானே வாங்கினேன்.”

“அதை நான் தூக்கிட்டு போக முடியாது. நீங்க வீடு கட்டினாலும் அதுக்கு இது தேவைப்படும். ஆனால், மொபைல் அப்படியில்லை. அடுத்து, காரணமில்லாம நீங்க எதையும் செய்யலை. உங்க தேவைக்கு நான் தேவை. ஆண்கள் கையாளும் யுத்திகளில் இதுவும் ஒன்று” என்றவளைப் பார்த்து ஆந்தையைப் போல் முழித்தான்.

“நானே அதைப் பற்றி நினைக்கலை. நீ ஏன்மா அதையே சுற்றிச் சுற்றி வர?”

“நீங்க நினைக்கலைன்னு சொல்லலாம். ஆனால், நீங்க செய்ற ஒவ்வொரு செயலும் காட்டிக் கொடுத்திரும். கல்யாணம் முடிஞ்சு முழுசா ரெண்டு நாள் கூட முடியலை. அதுக்குள்ள எனக்காக இன்வெர்ட்டர், மொபைல்… இதெல்லாம் எதுக்காம்?”

“அட! நீ என் பொண்டாட்டி. ரெண்டு நாளில் அதை மறந்துட்டியா? உனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன்? மனைவின்னு உரிமையில் என்னால் என்ன வேணாலும் பண்ணலாம். ஆனால், அப்படிச் செய்ய நினைக்கலை. நான் என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ அன்னைக்கே பிடிச்சுப் போச்சுன்னு சொல்லமாட்டேன். ஏன்னா, பழைய வாழ்க்கை எனக்கு நிறையச் சொல்லிக் கொடுத்திருக்கு. நமக்குள்ள புரிதல் வரும்னு எல்லாம் பண்றேன். அது உனக்குத் தப்பா தெரியுதுன்னு எதையும் நிறுத்த போறதில்லை. நீ என்னை மனசார ஏற்றுக்கிற வரை காத்திருப்பேன்” என்றான்.

வாங்கி வந்த கைப்பேசியில் சிம் கார்டை போட்டு, தன்னுடைய கைப்பேசிக்கு கால் செய்து பார்த்தான். கிருத்திகாவின் வங்கி கணக்கு எண்ணைப் பெருமாளிடம் கேட்டு வாங்கியிருந்தான். அதை ஜிபேவில் செயல்படுத்தித் தன் கணக்கிலிருந்து பத்தாயிரம் பணத்தை அவள் கணக்கிற்கு மாற்றினான்.

கைப்பேசியை அவள் கையில் கொடுத்து, எல்லாவற்றையும் மெல்ல சொல்லிக் கொடுத்தபிறகு, “உன் அம்மா, அப்பாக்கு கால் பண்ணி பேசு” என்றான்.

“அவங்களிடம் மொபைல் இல்லை. நான்…”

“நீ சம்பாதிச்சு வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்ச. ஆனால், இப்ப நான் வாங்கிக் கொடுத்திருக்கேன். அவங்க நம்பரை உன் மொபைல்ல பதிவு பண்ணியிருக்கேன். கால் பண்ணி பேசு” என்றதும் மடமடவெனக் கைப்பேசியைப் பார்க்க, அம்மா என்ற எழுத்தைப் பார்த்ததும், அவள் விரல்கள் தானாகக் கால் பொத்தானை அழுத்தியது.

“அம்மாடி நல்லா இருக்கியாமா? இப்பத்தான் மருமகன் அவருக்குத் தெரிஞ்சவரிடம் மொபைலை வாங்கிக் கொடுத்துவிட்டிருக்கார். முதல் கால் நீதான்மா பண்ணியிருக்க” என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கண்களில் அருவி ஊற்றெடுத்தது.

விழிகளில் நீர் வடிய அமரை கிருத்திகா பார்க்க, கைகளால் கண்ணீரைத் துடைக்கப் போனவன் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று டவலை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து நீயே துடைத்துக்கொள் என்று சைகையால் சொன்னான். அவன் செய்கையில் சிரித்தவள், தன் பெற்றோருடன் அளவளாவ ஆரம்பித்தாள்.

தொடரும்…
 
Top Bottom