• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அலையாடும் மேகங்கள் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அலையாடும் மேகங்கள்

அத்தியாயம் – 4

கண்ணை மூடித் திறப்பதற்குள் திருமணத்திற்காக எடுத்த பத்து நாள் விடுப்பு காற்றாகப் பறந்திருந்தது. காலையில் பரபரவென்று புறப்பட்டுக் கொண்டிருந்த அமர், கிருத்திகாவையும் கிளம்ப அவசரப்படுத்தினான். எங்கு அழைத்துச் செல்கிறான் என்று சொல்லாததால் ஆமையாக ஊர்ந்து கொண்டிருந்தாள்.

“என்னென்னு சொன்னா என்ன? சஸ்பென்ஸ்னு இம்சை பண்ணிட்டு இருக்கீங்க” சலித்துக் கொண்ட கிருத்திகா நீண்டக் கூந்தலை மெல்ல தடவிக் கொண்டிருந்தாள்.

“எனக்கு இன்னையோட லீவு முடியுது. அப்புறம் இதுக்குன்னு லீவ் எடுக்க முடியாதுமா. அதான் இன்னைக்கே வேலையை முடிச்சிரனும்” எனப் படபடத்தான்.

“வேலையா? ஓ! நான் வேலை வாங்கித் தாங்கன்னு சொன்னேனே அதுவா?” தலை வாருவதை நிறுத்திவிட்டு கேட்க.

“ஐயோ! உளறிட்டேனா? ஆமா! ஆமா! அதுக்குத்தான் சீக்கிரம் கிளம்பேன்” காலில் எண்ணெய் ஊற்றியது போல் பரபரத்தான்.

“அச்சச்சோ! இதை நேற்றே சொல்லியிருக்கலாமில்ல. கொஞ்சம் பிரிபர் பண்ணியிருப்பேன்ல. இன்டர்வியூல நான் என்ன பதில் சொல்றது?” என்றவள் பின்னலை வேகமாகப் போட ஆரம்பித்தாள். மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள் மனம் திருப்தி அடைய கதவைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தாள்.

இரு சக்கர வாகனம் புறப்பட்ட அடுத்த நொடி, என்ன கம்பெனி, வேலையென ஆரம்பித்தவள் போக வேண்டிய இடம் வரும் வரை விடாமல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், அமரோ ஆமா! இல்லை! என்ற சொல்லைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை.

பொறுமையிழந்து வண்டியிலிருந்து கீழே இறங்கிய கிருத்திகா, “என்ன கேட்டாலும் ஆமா இல்லைன்னே சொல்லிட்டு இருக்கீங்க. எதுவும் தயார் பண்ணாம நான் இன்டர்வியூ எப்படி அட்டெண்ட் பண்றது?” எனப் படபடவெனப் பொரிந்தாள்.

கடுகடுவென்றிருந்த முகத்தைத் திருப்பி மேலே பார்க்கச் சொல்லிக் கண்ணைக் காட்டினான் அமர். நிமிர்ந்து பார்த்தவள், “காலேஜ்ல எனக்கு என்ன வேலை? ஆபீஸ்ல வேலையா?” புருவம் இரண்டு ஒரே இடத்தில் குவிய கேட்டாள்.

“ஆமா எம்.காம் படிக்கிற வேலை. அத்தை மாமாவிடம் உன்னைப் படிக்க வைக்கிறேன்னு சொன்ன மாதிரி காலேஜில் அட்மிஷன் வாங்கிட்டேன். முதலில் படி அப்புறம் வேலை வாங்கித் தரேன். இன்னைக்குத்தான் கடைசித் தேதி. எனக்கு இராத்திரிதான் தெரியும். அதான் அவசர அவசரமா கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

“அத்தை, மாமாவா யார் அவங்க?”

“ம்ம்ம்… என்னோட மாமனார், மாமியார். நேரமாச்சு வா” என்று அவள் கையைப் பிடித்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“நில்லுங்க. நான் என்னோட சர்டிபிகேட்ஸ் எதையும் எடுத்துட்டு வரலை. காலேஜில் ஜெராக்ஸ் காபியாவது கொடுக்கனுமில்ல.”

“ரெண்டு நாள் முன்னாடி என்னோட மாமியார் வீட்டுக்குப் போய் வாங்கிட்டு வந்துட்டேன். நைட்டே எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி ஆன்லைன்லையே அப்ளை பண்ணிட்டேன். மூனு செட் ஜெராக்ஸ் காபியும் ஒரிஜினலும் இதில் இருக்கு. இப்ப போலாமா?” என்று கையிலிருந்த கோப்பைக் காண்பித்தான்.

“அம்மா வீட்டுக்குப் போயிருக்கீங்க, என்னைக் கூட்டிட்டு போயிருக்கலாமில்ல. ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. அம்மாவும் என்னிடம் சொல்லலை” என்றவளின் முகம் வாடிய மலராகச் சுருங்கியது.

“அத்தையிடம் நான்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். கூட்டிட்டுப் போக ஆசைதான். என் மேல உள்ள கோபத்தில் நீ திரும்ப வரமாட்டேன்னு சொல்லிட்டா நான் எப்படிமா உன்னை லவ் பண்ண வைக்கிறது?” எனக் கண்ணடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

“நீங்க ஒரு சுயநலவாதி. இப்படியெல்லாம் பண்ணா லவ் வராது வெறுப்புதான் வரும். அப்பா ஃபீஸ்க்கு என்ன பண்ணாங்க?” கேட்டபடியே அவன்பின் ஓடினாள்.

முன்னே சென்ற அமர் நின்று திரும்பி, “நான் உன் புருஷன்மா” என்றவன் இடையில் பேச வந்தவளை தடுத்து, “பணத்தை நான் கடனா தரேன். நீ படிப்பை முடித்து வேலைக்குப் போய் எனக்கு வட்டியோட திருப்பிக்கொடு. போதுமா? இப்ப போலாமா?” என இரு கைகளையும் முன்னே நீட்ட, அதற்கு மேல் கேள்வி கேட்க வழியின்றி அமைதியானாள்.

கல்லூரியில் வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்து நேராகப் பயிற்சி மையம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். கிருத்திகா ஏன் எனப் பார்க்க, “பேங்க் எக்ஸாம்க்கு இங்க கோச்சிங் கொடுக்கிறாங்க. காலேஜ் மூனு மணிக்கு முடியும். நீ வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஆறு மணிக்கு இங்க வந்திரு. எனக்கு ஒரு ஆசை நீ சிஏ படிக்கனும்னு. உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு அதில் சேர்த்துவிடுறேன்” என்றான்.

“நான் எம்.காம் முடிச்சா போதும். அதான் பேங்க் எக்ஸாம்க்கு படிக்கப் போறேன்ல அது போதும். பஸ் ரூட் எப்படின்னு சொல்லிடுங்க. காலேஜ்ல பஸ் கிடையாதுன்னு சொல்லிட்டாங்கல்ல.”

“நான் தினமும் உன்னைக் கூட்டிட்டு போயிட்டு வந்துடுறேன். எனக்கும் ஆபீஸ் பக்கத்தில்தான் பிரச்சனையில்லை இருந்தாலும் பஸ் ரூட் சொல்றேன். நான் வர முடியாத அன்னைக்கு நீ பஸ்லதானே வரனும்” என்றவன் தேநீர் கடை முன் வண்டியை நிறுத்தினான்.

தினமும் எப்படிக் கூட்டிட்டுப் போக முடியும்? காலையில் பிரச்சனை இல்லை. ஆனால், சாயங்காலம் ரெண்டு நேரம் அலையனும். அது எப்படி முடியும்? என்ற சந்தேகம் எழத் தீவிர யோசனைக்குச் சென்றாள். அமர் பேசியது எதுவும் அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

பலமுறை அமர் கூப்பிட்டும் பதில் இல்லாததால் அவள் தோளைப் பிடித்து உலுக்கினான். சிந்தனையிலிருந்து விடுபட்ட கிருத்திகா, “ஆ! என்ன கேட்டீங்க?” என்றாள்.

“என்ன பிரச்சனை உனக்கு? நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பதிலே சொல்லாம என்ன யோசனையில் இருக்க? காபியா, டீயா?”

“டீச்சொல்லுங்க. பிரச்சனை எனக்கு இல்லை உங்களுக்குத்தான்” என்று அவன் நீட்டிய வடையை வாங்கினாள்.

“எனக்கா? எனக்கு என்ன பிரச்சனை? எதுவும் இல்லையே” வடையைக் கடித்தபடி யோசனையில் கேட்க.

“அதை நீங்கதான் சொல்லனும். என்மேல் என்ன சந்தேகம்? எதுக்காகத் தினமும் காலேஜ்க்கு கூட்டிட்டு வரேன்னு சொல்றீங்க? சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்க நினைக்கீங்க ஏன்?” வார்த்தைகளில் சூடேற்றிவிட்டுத் தொண்டை குழிக்குள் ஒரு மிடறு தேநீரை சூடாக இறக்கினாள்.

கிருத்திகாவின் கேள்வியில் தேநீர் இறங்காமல் நாக்கை பதம் பாத்திருக்க, “அப்படி எதுவும் இல்லை கிரு. நான் எதுக்குச் சந்தேகப்படப் போறேன்” பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

எல்லாவற்றிலும் மாட்டிக் கொண்டு முழிக்கிறியே அமர். உனக்கு இது தேவையா எனத் தன்னைத் தானே உள்ளுக்குள் திட்டிக் கொண்டான்.

“ஹாய் அமர், புதுப் பொண்டாட்டி கூட ஹனிமூன் போவன்னு பார்த்தா. காலேஜில் அட்மிஷன் போட்டுட்டு வந்திருக்க. இவ படிப்பை எப்ப முடிச்சு, குடும்பம் எப்ப நடத்துறது?” என்ற குரல் கேட்க, இருவரும் திரும்பிப் பார்க்க சுஜி நின்றிருந்தாள்.

சுஜியைக் கண்டதும் நூலற்ற காத்தாடியாய்த் திசையறியாமல் அலை பாய்ந்தது அமரின் உள்ளம். சுஜியை யாரெனத் தெரியாமல் காற்றடித்த குளத்தின் அலைகளைப் போல நிலை கொள்ளாத சிந்தனையில் ஆழ்ந்தாள் கிருத்திகா.

“அதைப் பற்றிய கவலை எனக்கு. உனக்கு அந்தக் கவலை தேவையில்லை. நீ வந்த வேலை எதுவோ அதை மட்டும் பார்த்துட்டுப் போ” மதகொண்ட யானையின் கம்பீரத்தை அவன் பேச்சில் காண்பித்து, தனது பைக்கில் ஏறினான். கிருத்திகாவை ஏறுமாறு கண்களால் மொழி பேசினான்.

பைக் சாவியைக் கையில் எடுத்த சுஜி, “விலாங்கு மீனைப் போல நழுவிட்டே போனா எப்படி? படிப்புக்குன்னு செலவு பண்ற பணத்தை எனக்காகப் பண்ணியிருந்தா, நம்ம வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருந்திருக்கும்” ஒட்டுப் புல்லைப் போல் ஒட்டிக் கொள்ள நினைக்கும் சுஜி யாரெனப் பிடிபடச் சிந்தனையிலிருந்து மீண்டாள் கிருத்திகா.

“இப்படியெல்லாம் பேசித் திரும்ப ஒட்டிக்கலாம்னு நினைக்கிறியா? அது ஒரு நாளும் நடக்காது. இனிமே எனக்கு எல்லாம் கிரு மட்டும்தான். அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்” தாமரை இலைத் தண்ணீர் போல அந்தப் பந்தத்திலிருந்து விலகி விட்டான். முதல் அத்தியாயம் கிழிந்ததற்காகப் புத்தகத்தை எறிந்துவிட முடியாது. அடுத்தப் பக்கத்தில் புதுக் கவிதை தொடங்கும் என்று அவன் நம்பினான்.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கரையேறியவன், கடலின் ஆழத்தை உணர்ந்து நீந்துவதைப் போல, அவன் வாழ்க்கையை நிதானமாகக் கிருத்திகாவுடன் கையாள எண்ணினான். அவளை முதுநிலை பட்டத்தைப் பெற வைத்து, சுயமாகத் தன் காலில் நின்ற பிறகே குடும்பம் என்னும் கூட்டை உருவாக்குவது என்பதில் உறுதியாக இருந்தான்.

“அட! இதோ பாரப்பா. அப்போ நான் உன் பொண்டாட்டி இல்லையா? எனக்கு மட்டும் பணத்தைச் செலவு பண்ண யோசிச்ச. இப்ப வீடு கட்ட சேமிக்கிற எண்ணம் இல்லையா?” நெய்யூற்றப்பட்ட நெருப்பாய் கொழுந்துவிட்டு எரியும் ஆத்திரம் வந்தாலும் அடக்கினான் அமர்.

“கிருவுக்குப் பண்றது அவளோட படிப்புக்கு. என்னைக்கும் அவ யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது. அதுக்கு நான் போடுற உரம்தான் அந்தப் பணம். உன்னோட ஊதாரிதனத்துக்குச் செஞ்சா என்னை மாதிரி முட்டாள் யாரும் இருக்கமாட்டாங்க” இருண்ட அறையில் ஏற்றப்பட்ட ஒற்றைச் சுடரைப் போல அவன் வார்த்தைகள் இருக்க, நீலக்கடலின் ஆழத்தை ஒளித்து வைத்திருக்கும் விழிகளை விரித்துப் பார்த்தாள் கிருத்திகா.

“ஆமா! ஆமா! உன்னைப் பற்றி தெரியாது. நீ போடுற உரத்துக்கு காய், பழம்னு அசலும் வட்டியும் சேர்த்து வாங்கிடமாட்ட” அமாவாசை இருட்டில் சட்டெனத் தெறித்த மின்னல் கீற்றாய் களகளவென கிருத்திகா சிரிக்க, அவள் தன்னை ஏளனம் செய்வதாக நினைத்து இரவின் கருமையை வாரியணைத்துக் கொண்ட கருவிழிகளால் துளைத்தாள் சுஜி.

******

அலுவலகத்தில் அவசர மீட்டிங் என்பதால் அதுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கோப்புகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான் அமர். கைப்பேசி ஒலிக்கக் காதில் வைக்க, “அமர், இன்னைக்குப் பரத் வீட்டில் ஃபேமிலி ஃபங்ஷன் இருக்கு. இராத்திரி நான் வர லேட்டாகும். அப்புறம் அவனுக்குக் கிஃப்ட் கொடுக்கனும் ஐந்தாயிரம் எனக்கு அனுப்பிவிடேன்” சுஜி கேட்க.

“அவன் ஃபேமிலி ஃபங்ஷன்ல உனக்கு என்ன வேலை? அதுக்கு ஐந்தாயிரத்தில் கிஃப்ட் வாங்கிக் கொடுக்கனுமா? மாசம் எழுபதாயிரம் சம்பாதிக்கிற நீ ஐந்தாயிரம் கூடவா இல்லாம இருக்க? எனக்கும் அஞ்சு பைசா தரதில்லை. கேட்டா என் உழைப்பில் வந்தது என் செலவுக்கு மட்டும்தான்னு டயலாக் அடிப்ப.”

“ஐயோ! அமர் எதுக்கு இத்தனை கேள்வி? ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் இன்வைட் பண்ணியிருக்கான். சும்மா கையை வீசிட்டு போக முடியுமா? என்னால் பணம் எடுக்க முடியலை. நெட்வொர்க் பிராப்ளம்னு வருது புரிஞ்சிக்க அமர். நான் வட்டியோட திரும்பத் தரேன்” எனக் கெஞ்சுதலாகக் கேட்டாள்.

“நான் பணம் போட்டா வேலை செய்யாத நெட்வொர்க் கிளியர் ஆகிடுமா? பொய் சொல்றதுன்னு முடிவு பண்ணிட்ட, அதைத் திருந்தச்செய். எனக்கு ஆபீஸ்ல அவசர மீட்டிங் இருக்கு. ஃபைல் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு” என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் கைப்பேசியைத் துண்டிக்க, கோபத்தில் எரிமலையாக உள்ளுக்குள் வெடித்தாள் சுஜி.

என் உழைப்பில் வரும் பணம் எனக்கு மட்டும் சொந்தம். நான் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற மனநிலையில் இருப்பவள் வாங்கும் சம்பளத்தில் தேவை போக மீதியை நட்புகள் என்ற பெயரில் நடத்தும் கேளிக்கை கொண்டாட்டங்களுக்குத் தண்ணீராக இறைத்துவிடுகிறாள்.

மீதமிருக்கும் கொஞ்ச பணம் வங்கி கணக்கில் இருக்க, அது சிறுக சிறுகச் சேர்ந்து ஒரு இலட்சம் சேர்ந்திருக்க, அதையும் திருமணநாள் விழாவிற்கு செய்த செலவுக்கு அமரிடம் கொடுத்துவிட்டாள்.

சம்பளமும் கரைந்து சேமிப்பும் காணாமல் போக, விருந்து உபசரிப்பு போதையாகைவிட பணத்திற்கு வழியின்றி மண்டைக்குள் புழுவாகக் குடைந்தது. மழையில் உதித்த காளான்போல, பெற்றோரின் ஞாபாகம் வர அழைத்துவிட்டாள்.

பொறுப்பு இல்லாமல் இருக்கும் மகளுக்குத் திருமணம் முடித்துவிட்டால், குடும்பம் என்ற பொறுப்பு வந்துவிடுமெனத் தப்பு கணக்கு போட்டு, அமருக்கு திருமணம் முடிக்க, தங்கள் சுமையைத் தேவை இல்லாமல் மருமகன் மீது ஏற்றி வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் அமரை பார்ப்பதையே தவிர்த்து வந்தனர். அப்படிப்பட்டவர்களிடம் மன்றாடுடியதற்கு மௌனமாக இருந்திருக்கலாமோ என நேரம் கடந்து கருதினாள்.

நண்பர்கள் முன் பகட்டாக இருப்பதே கௌரமாக இருக்குமென நினைப்பவளுக்கு பூங்கொத்தை வாங்கிச் செல்வது தன் மரியாதைக்கு இழுக்காகும் என்பவள், தனக்கு வந்த பூங்கொத்துகளை அடுத்த நாளே குப்பையில் எறிவதை மறந்து போயிருந்தாள்.

திருமணம் என்ற ஒன்று தன் சுதந்திரத்தை பறித்துவிட்டதாக எண்ணம் கொண்டவளின் ஆத்திரம் அமரிடம் திரும்பியது. அவனால் தன் நிம்மதி போனதே, அதனால், அவன் அமைதியை சிதைப்பதே தன் நோக்கமாகக் கொண்டாள்.

அலுவகம், கல்லூரி, பள்ளி நட்புகளென அனைவரிடமும் தானே சென்று பழைய நட்பைப் புதுப்பித்ததின் பலன் நாளொரு வண்ணம் கேளிக்கை களியாட்டமென ஆட ஆரம்பித்தாள். வீட்டிற்கு தாமதமாக வருவது. இல்லையெனில், அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து புகையும் நெருப்பு போல அண்டை வீட்டாரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தாள்.

"நல்ல நட்புகள் பல இருந்தாலும், சுஜியைச் சுற்றியிருந்ததோ போலித்தனம். அவளது செயல்களை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் விலகிப்போக, அவளைத் தங்கள் ஆதாயத்திற்கு ஆட்டுவிக்க நினைத்தவர்கள் மட்டும் தஞ்சாவூர் பொம்மையாய் தலை அசைத்து அவளுடனேயே ஒட்டிக்கொண்டனர். அந்தப் போலி நிழல்களால் அவளது வாழ்க்கை இருண்ட பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது."

*****

வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருத்திகாவிடம் அனைத்தையும் கூறியிருந்தான் அமர். இடையில் எதுவும் பேசாமல் அமைதியாகக் கேட்டு வந்தவள், கீழே இறங்கியதும், “இதுதான் உங்க பிரச்சனையா? என்னையும் அவளை மாதிரி நினைச்சிட்டீங்க. அதான், கணவனா அக்கைறையில் வர நினைக்காம, சிபிஐயா வரலாம்னு இருக்கீங்க. நான் தடம் மாறிப் போகனும்னு நினைச்சா, நீங்க சிபிஐ வேலை பார்த்தாலும் போகதான் செய்வேன். எனக்குனு சுயக் கட்டுப்பாடு இல்லைன்னா, நான் போற வழி தப்பாத்தான் இருக்கும். அந்தப் புரிதல் எனக்கு நிறையவே இருக்கு” என்றவளின் காலனி வழுக்கிச் சென்று இடமாறி விழுந்தது.

பொய் சொன்னது அம்பலமானதும், கிருத்திகாவை சமாதானம் செய்வது எப்படியென வேட்டைக்காரனைக் கண்ட மான் மிரட்சியுடன் பார்ப்பதைப் போல அமரின் கண்கள் நிலைகொள்ளாமல் தவித்தன.

பேசத் துடித்த வார்த்தைகள் எல்லாம் அவள் விழி பார்த்ததும் ஊமையாகிப் போக, மொழி இல்லா மௌனத்தில் என் காதல் உனக்குள் முழுமையாய் வாழுமா? என்ற சந்தேகம் அவனுள் தீப்பொறியாக எரிந்து கொண்டிருந்தது.

கடிகார முட்களைவிட நத்தையின் வேகம் அதிகமோ என்ற சந்தேகம் அமருக்கு எழாமல் இல்லை. வாய்த் திறவாமல் செவியை மட்டும் தீட்டியிருப்பவள், இன்று அதையும் இறுக மூடியிருந்தாள் கிருத்திகா.

பத்து நாள்களாகக் கிருத்திகாவிடம் பேசிப் பேசியே சலித்தவனால், சிறிது நேரம் கூடத் தன் வாய்க்குப் பூட்டு போட முடியாமல் தவித்தான். மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால், இனிமேலும் அமைதி காப்பது சரியல்ல என்று, “கிரு, உன் இஷ்டப்படியே செய். நான் எதுக்கும் குறுக்க வரலை. என்ன சொன்னாலும் அது தப்பா போகுது. காலையில் மட்டும் நான் விடுறேன். அந்த உரிமைகூட எனக்கு இல்லையா? பஸ் ரூட் என்னென்னா…? என முடிப்பதற்குள்,

“எனக்குத் தெரியும். நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கனும்னு அவசியமில்லை. சலோ ஆப்பிலிருந்து நானே தெரிஞ்சிகிட்டேன்” என்றவளிடம் சப்பாத்தி மாவு உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

“நான்தான் தப்பா நினைச்சு சொல்லலைன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்குக் கோபத்தில் இருக்க? அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணனும். நீ விபரம் சொன்னால்தான் பண்ண முடியும். இன்னைக்கு விட்டா நேரம் கிடைக்காது” தோசைக் கல்லில் சப்பாத்தி உருண்டு புரள்வதிலே அவள் மலையிலிருந்து இப்போதைக்கு இறங்கமாட்டாள் என்பது புரிய இருள் சூழ்ந்த மேகமாக முகம் மாறியது.

ஊரிலே பிறந்து வளர்ந்தவளுக்குச் சென்னையின் பழக்கம் கஷ்டமாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தாலும், சுஜியால் ஏற்பட்ட அனுபவம் அவன் குணத்தையும் செயல்களையும் கொஞ்சமாகக் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்திருந்தால் கிருத்திகாவின் விலகலை தவிர்த்திருக்கலாம்.

சுஜியை போல் மாறிவிடுவாளோ என்ற பயத்தில் இருந்தவனுக்கு, தானே அதற்கான வழியைக் காட்டிக் கொண்டிருப்பதை மூளை அவனுக்கு உணர்த்த மறந்திருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணக் கனவு என்னவென்பதை தன் இடத்திலிருந்து அமர் யோசிக்க மறந்திருந்தாலும், இரண்டாம் திருமணத்தின் வலியை அவனிடத்திலிருந்து சிந்தித்ததால் மேற்கொண்டு அதைப் பற்றிய பேச்சை முதல் நாளோடு நிறுத்திக் கொண்டாள்.

கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாடி முன் நிற்பவனிடம், சுஜியின் இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பதைவிட்டு, தனக்கான இடத்தை எப்போது தரப் போகிறானென, பாறையிடம் காதலை எதிர்பார்ப்பது கானல் நீராக மறைந்துவிடுமோ என்ற எண்ண அலைகள் கிருத்திகாவுக்குள் மோதி மோதிச் சென்றன.

இரவு உணவு வயிற்றுக்குள் இறங்கியதும் விண்ணப்ப படிவத்துடன் உட்கார்ந்த அமரிடமிருந்து படிவத்தை வாங்கியவன் ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் படித்துப் பூர்த்திச் செய்து கொண்டே வந்தாள். தந்தை/கணவன் பெயர் என்ற இடத்தில் நிறுத்த, “வி. அமர். வயசு இருபத்தாறு” அமர் சுறுசுறுப்புடனும் கண்கள் இரண்டும் ஆசையை வெளிக்காட்டிச் சொல்ல, கணவனை அடித்துவிட்டு பெருமாள் என்று எழுதினாள் கிருத்திகா.

தொட்டாச் சிணுங்கியாகச் சுருங்கிப் போனவன், “என் பேரை எழுதினா என்னவாம்? செலவு நான்தானே செய்யப் போறேன்” என்றான்.

“வட்டியோடு சேர்த்துத் திரும்பக் கொடுக்கச் சொல்லியிருக்கீங்கல்ல”

“நானா வட்டி கேட்டேன்”

“நான் வட்டி தரேன்னு சொன்னேனா” பதிலுக்குப் பதில் வாதம் புரிந்தவளிடம் பதிலுரைக்க முடியாமல் திணறினான் அமர்.

பணத்திற்கு அப்பா என்ன பண்ணாங்க என்று கேட்டதும், ‘நான் உன்னைப் படிக்க வைக்கமாட்டேனா? நீ என் மனைவி இனிமே நான்தான் உனக்கு எல்லாம் செய்வேன்” என அமர் சொல்லவில்லையே வட்டியோடு திரும்ப வாங்கிக் கொள்கிறேன் என்றவனின் பெயரை எழுதுவதைவிடத் தந்தையின் பெயரை எழுதுவதில் தவறொன்றும் இல்லையே என்றெண்ணினாள் கிருத்திகா.

தனக்குள்ளாகவே முனுமுனுத்துக் கொண்டிருந்தவனிடம், “உங்களுக்கு வயசு இருபத்தாறுதானா?” புது வெள்ளத்தைப் பார்க்கும் குழந்தையைப் போலப் புரியாத வியப்பில் பார்த்திருந்தான்.

தொடரும்…
 
Top Bottom