• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 1

ரோசி கஜன்

Administrator
Staff member
பூந்தென்றலூர் பெயருக்கேற்றாற் போலவே எப்பொழுதும் செவ்வந்தி, ரோஜா, மல்லிகை, சூரியகாந்தி எனப் பல மலர்களின் வாசம் கலந்த தென்றல் தவழும் ஊர்.

ஊரின் எல்லையிலேயே விழுதுகள் பரப்பி நிற்கும் ஆலமரங்களும், அரசமரங்களும், களைத்து வரும் வழிப்போக்கர்களைக் குடைபிடித்து அன்புடன் வரவேற்கும்.

அங்கிருந்து ஊருக்குள் நுழையும்போது, வயல்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்கள் அந்தக் காற்றின் இசைக்கேற்பத் தாளம் தட்டி அசைந்தாட, செம்மண் வீதிகளின் இருமருங்கிலும் ஓடும் ஓடை நீர் கூழாங்கற்களுடன் மோதி எழுப்பும் இன்னிசையும் காதில் வந்து மோதும் பொழுது அழகான சுரங்களை மீட்டி ஒரு பாடல் கேட்கும் தன்னிறைவைத் தரும்.

அப்படியே அந்த இயற்கையை ரசித்தபடி தலையை நிமிர்ந்து பார்த்தால், ஊருக்கே பெருமை சேர்க்கும் விதமாக வானுயர்ந்த கோபுரத்துடன் குன்றின் மேல் வீற்றிருப்பான் மௌனமலை முருகன். அந்த வேலவனே தங்கள் ஊர் மக்களைக் கண் இமை போலக் காத்து வருகிறான் என்பது அந்த ஊர்வாசிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அங்கே வாழும் மக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்புடனும், பாசத்துடனும் விட்டுக் கொடுத்து நல்ல ஊருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்துவருகின்றார்கள்.

அப்படிப் பட்ட அந்த மண்ணிலே காலடி எடுத்துவைத்த உள்ளூர் வாசிகள், வெளியூர் வாசிகள் என்று யாருமே அந்த மண்ணை இகழ்ந்து பேசியதில்லை. எல்லோரும் சொல்வது இங்கே காலை எடுத்து வைத்தால் மனது அமைதியாகிவிடுகிறது எனும் ஒரு வாசகத்தை மட்டுமே..

அப்படிப்பட்ட பூந்தென்றலூரின் அமைதியைக் குலைக்கும் வண்ணம், “அண்ணே… மகனுக்குச் சொல்லியனுப்பியாச்சா?” என்ற அந்தக்குரலில் அழுகையும் கவலையும் தேங்கி நிற்க, வார்த்தைகள் மட்டும் கரகரப்புடன் வெளிவந்தன.

காலையிலேயே வயலைப் பார்க்கப் போய்விட்டுத் திரும்பி வந்த நீலகண்டன், சற்று நேரத்துக்கு முன்னே வீட்டிலே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் முடங்கியிருந்த தன் மனைவியைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றவருக்கு, அவரின் அசையாத் தன்மையைக் கண்டு அதிர்ச்சி ஏற்பட, பதற்றத்துடன் மனைவியின் கையைப் பிடித்துப் பார்த்தார். அந்தக்கை சில்லிட்டுப் போயிருந்ததுடன் அவர் தூக்கிப் பார்க்க தொய்ந்து கீழே விழுந்தது. தான் கண்டறிந்தது உண்மைதானா? என்று வைத்தியரை உடனே வரவழைத்துப் பரிசோதித்துப் பார்த்தார்.

வீட்டுக்கு வந்த வைத்தியரும் மனைவியின் உயிர் உடற்கூட்டை விட்டு வெளியேறிவிட்டது என்று உறுதிகூற, அப்படியே மனைவியின் உடலுக்குப் பக்கத்தில் இடிந்து போய் துக்கத்துடன் அமர்ந்திருந்தவர் இல்லை என்பது போலத் தலையசைத்தார்.

நீலகண்டனுக்குப் பக்கத்திலிருந்த அவர் தாய் மங்கம்மாவோ, “அந்தச் சிறுக்கி தான் வேணுமுன்னு நம்மளோட ஒட்டும் வேணாம் உறவும் வேணாம் என்றவனை போய்க் கூப்பிடனுமாக்கும்?” என்று சலிப்பாக முணுமுணுத்தார்.

“அண்ணே, யாரையாவது அனுப்பி வீட்டுக்குக் கூப்பிட்டுப் பார்ப்போமா?” என்று முதல் குரலுக்கு உரியவரும் மங்கம்மாவின் மகளும், நீலகண்டனின் தங்கையுமான பாக்கியம் கேட்க, ‘அவன் கூப்பிட்டால் மட்டும் வந்துவிடவா போகிறான்?’ என்று நீலகண்டனின் மனம் நிராசையுடன் முணுமுணுத்தது

அப்பொழுது அங்கே ஓடிவந்த பாக்கியத்தின் மகன் மாரிமுத்து, “அத்தான் தான் இங்கே இருக்குற பெரிசு செத்தா ஒழிய இந்த வீட்டுப் பக்கம் வரமாட்டேன்னு சொல்லிட்டுப் போச்சே...” என்றவன், தன் அம்மத்தாவை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “இந்தக் கெழவி மண்டையைப் போட்டாத்தான் அன்பு அத்தான் வரும் போல!” என்றான்.

“டேய்... சும்மா இருடா! வயசானவங்களை இப்படிப் பேசி வருத்தப்படுத்தாதே" என்று பாக்கியம் மகனைக் கடிந்துகொண்டார்.

“இந்தக் கெழவியால தானே அத்தை செத்துப் போயும் அன்பு அத்தான் வீட்டுக்கு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கு!” என்று வெறுப்பான குரலில் கூறினான் மாரிமுத்து.

தாய் இறந்த செய்தியைக் கேட்டால் மருமகன் வந்துவிடுவான் என்று எண்ணியிருந்த பாக்கியம், அவன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டதை நம்பமுடியாமல், "அண்ணி செத்துட்டாங்கன்னு தகவல் தெரிஞ்சும், மருமகன் வரமாட்டேன்னு சொல்லிவிட்டானா?" என்று மாரிமுத்துவிடம் ஆதங்கமாகக் கேட்டார்.

"ம்ம்... போன்ல சொன்னேன் அம்மா… வீட்ல இருக்கிறவங்களே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும், நான் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. நானும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன்" என்று மாரிமுத்து தன் இயலாமையை விரக்தியுடன் சொன்னான்.

மாரிமுத்துவும் பாக்கியமும் பேசியதைக் கேட்ட நீலகண்டன், தன் ஆற்றாமையை அடக்க முடியாமல், "சரிடா... மகன் தன்னை இன்னும் மன்னிக்கலையேன்னு அந்தப் படுக்கையில கிடந்து ஏங்கியே செத்துப் போன இந்த மகராசியைப் பார்க்கக்கூட உன் அன்பு அத்தான் வரமாட்டேன்னு சொல்லிட்டானா?" என்று கேட்டார்.

நீலகண்டனின் மகன் அன்பிற்கினியவன். சிறு வயதிலிருந்தே வயல்வெளியில் வெயிலிலும் மழையிலும் கிடந்து உழைத்தவன். அதன் விளைவோ என்னவோ, உடற்பயிற்சிக் கூடத்துக்கே செல்லாமல் ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடலோடும், அடர் திராவிட நிறத்தோடும் பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பான்.

இயற்கை விவசாயத்தையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு, அதையே கல்லூரியில் பாடமாகவும் படித்துத் தேர்ந்தவன், இப்போது தன் நண்பனின் இரண்டு ஏக்கர் நிலத்தில் அவனோடு கைக்கோர்த்து, விவசாயத்தில் ஒரு சிறு புரட்சியையே செய்து வருகிறான்.

அதுமட்டுமன்றி, விவசாயத்தின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு, இளைஞர்களுக்கு வகுப்புகளும் எடுத்துக்கொண்டு பக்கத்து ஊரிலேயே நண்பனுடன் தங்கியிருக்கிறான் அன்பிற்கினியவன்.

ஊரில் இருப்பவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் அன்பும், மாறாத கருணையும் கொண்டவன் அவன். அப்படிப்பட்டவன், தன் பெற்ற தாயின் மரணச் செய்தியைக் கேட்டும் வரமாட்டேன் என்று பிடிவாதமாகச் சொன்னதுதான், மாரிமுத்துவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.

அதனால் தன் தாய்மாமானிடம், மாரிமுத்து குரலைத் தாழ்த்தி, “அவர் வரமாட்டேன்னு பிடிவாதமாக சொல்லிட்டார் மாமா…” என்று சொன்னான்.

‘தன் மனைவியின் உடல் நிலை மகன் சென்றதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு அதன் பின் கடந்த ஏழு வருடமாக நோய்நொடியோடு படுத்த படுக்கையாகவே கிடந்து, இன்று எல்லாவற்றிற்கும் விடுதலை கொடுக்கும் நோக்குடன் இறைவனடி சேர்ந்தபின்னும், மகனுடைய கோபம் இன்னும் குறையவில்லை’ என நினைத்த நீலகண்டனுக்கு நெஞ்சு பொறுக்காமல்,

"அப்ப என் பொண்டாட்டியோட சவத்தைத் தூக்கிட்டுப் போயி அவன் வீட்டு வாசல்லயே போடுங்கடா! அவனோட கோபம் அடங்குற வரைக்கும் அங்கனயே கிடக்கட்டும்... அவனே கோபம் தீர்ந்த பிறகு கொள்ளியும் வைக்கட்டும்!" என்று ஆத்திரமும் அழுகையுமாக வெடித்தார் நீலகண்டன்.

“மாமா...” என்று மாரிமுத்து பதற, “அண்ணே..” என்று பாக்கியம் பதற,

மங்கம்மாவோ சிறிதும் பதற்றப்படாமல், ‘ஊரில் யாருடைய வீட்டில் சாவு விழுந்தாலும், முதல் ஆளாக அங்கே போய் நின்று, எல்லாவற்றையும் முன்னின்று கவனிக்கும் குணம் கொண்டவன் தன் பேரன். அப்படிப்பட்டவன், தன் பெற்ற தாய் இறந்த செய்தியைக் கேட்டும் வராமல் இருந்துவிடுவானா என்ன? கட்டாயம் வருவான்' என்று ஆணித்தரமாக நம்பினார்.

‘அவன் ஒருமுறை வீட்டுக்கு வந்துவிட்டால் போதும்... எப்படியாவது பேசிச் சரிக்கட்டி, மீண்டும் இதே வீட்டிலேயே அவனைத் தங்க வைத்துவிடலாம். என் பேரனுக்கு ஒரு பெரிய இடத்துப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்துவிட்டால், காலப்போக்கில் என் மீதுள்ள கோபம் தானாகவே கரைந்துவிடும்’ என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த மங்கம்மா, பேரன் அந்த வீட்டுக்குள் நுழையும் அந்த நொடிக்காக ஆவலோடு காத்திருந்தார்.

அவரின் எண்ணப் போக்கை அறியாத நீலகண்டனோ, “பின்ன என்னடா பண்ணச் சொல்ற? உன் அன்பு அத்தானால நான் இன்னும் இந்த ஊர் உலகத்துக்கிட்ட கூட என் பொண்டாட்டி செத்த செய்தியைச் சொல்லலை. அவன் தான் கொள்ளி வைக்கணும்னு சொல்லிட்டேயிருந்து கண்ணை மூடிட்டா. பெத்த புள்ளை கையால கொள்ளி வாங்கணுங்கிறது அவளோட கடைசி ஆசை. அதுக்குக் கூட அவன் வரமாட்டேன்னா நான் என்னத்தச் செய்ய?” என்று ஆதங்கப்பட்டார்.

“மாமா, இருங்க... நான் மறுபடியும் அவர்கிட்டப் பேசிட்டு வர்றேன்.” என்று தன்னுடைய போனைத்தூக்கிக்கொண்டு மறைவான இடம் நோக்கி ஒடினான் மாரிமுத்து.

மாரிமுத்து இங்கே பேசினால் மங்கம்மா பேச்சின் நடுவே குறுக்கிடக்கூடும் என்றுதான், யாருமில்லாத தனியிடம் தேடிச் செல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட நீலகண்டன் அமைதியாக இருந்தார்.

மகன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த பாக்கியமோ, "இங்கேயே பேசியிருந்தால், நானும் ஒன்று, இரண்டு வார்த்தை பேசி மருமகனை எப்படியாவது வரச் சொல்லியிருப்பேனே… நான் சொன்னால் தட்டாமல் வருவானே" என்று முணுமுணுத்தார்.

அத்தை கதைப்பதற்கு எல்லாம் செவிசாய்த்துக் கேட்கும் மகனின் குணம் எப்பவோ போய்விட்டது என்பதை அறியாமலிருக்கும் தங்கையை எண்ணி அவர் உதடுகளில் விரக்தி சிரிப்பு என்று தோன்ற, “இரு... வந்திடுவான்,” என்று பாக்கியத்திற்குச் ஆறுதல் சொன்ன நீலகண்டன், தன் பார்வையைத் திருப்பி, இறக்கும் பொழுதும் ஒருவிதச் சாந்தத்துடன் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவர், “உன் மகன் வருவானா?” என்று அவரிடம் மானசீகமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்த மாரிமுத்து, ஒருவித ஆசுவாசத்துடன், “மாமா, அன்பு அத்தான் வந்து வீட்டுக்கு வெளிய நிக்கிறாராம். ஆனா, உங்க அம்மா மட்டும் அவர் கண்ணு முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லிட்டார்," என்றான்.

அவன் முகத்திலேயே அன்பிற்கினியவனை சிரமப்பட்டு ஒத்துக்கொள்ள வைத்த பாவம் தெரிய, “அம்மாவை நான் வீட்டுக்குள்ளயே இருக்கச் சொல்றேன்டா" என்று இடைமறித்த பாக்கியம், “இப்படியாவது அவன் மனசு இறங்கி வந்தானே, அதுவே போதும்" என்று தன் தாயைப் பார்த்தார்.

மௌனமாக அமர்ந்திருந்த மங்கம்மாவின் முகத்தில் எந்தப் பாவமும் தெரியவில்லை. ஆனால், நீலகண்டனுக்குள் மகன் வரப்போகிறான் என்ற செய்தி ஒரு மெல்லிய நிம்மதியைத் தந்தது. அந்த நிம்மதியோடு சேர்ந்து, கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளும் அவர் மனக்கண்ணில் நிழலாடின.

நீலகண்டன் அம்புஜம் தம்பதியினரின் ஒரே வாரிசு அன்பிற்கினியன்.

அந்த வீட்டில் பாக்கியத்தின் கணவன், மாரிமுத்துவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி இறந்து போனார். அதன் பிறகு பாக்கியமும் அவர் மகன் மாரிமுத்துவும் இந்த வீட்டில்தான் தஞ்சமடைந்தனர். அம்புஜமும் தன் நாத்தனாரிடம் எவ்விதப் பிரிவினையும் காட்டாமல் அன்பு பாராட்ட, அந்தப் பெரிய குடும்பம் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் தான் இருந்தார்கள்.

அன்பிற்கினியன், மாரிமுத்துவை விட நான்கு வயது மூத்தவன் என்றாலும் இருவரும் நண்பர்களாகவே வளர்ந்தனர். வீட்டில் இருந்த பெரியவர்களும் அவர்கள் இருவருக்கும் இடையே எவ்வித வேற்றுமை விதையையும் விதைக்கவில்லை.

அந்தச் சந்தோஷமான நாட்களுக்கு, அன்பிற்கினியவனின் பத்து வயதில் முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருநாள் வயலில் விளையாடிக்கொண்டிருந்த அன்பிற்கினியனைப் பாம்பு தீண்டிவிட, அவன் உயிருக்குப் போராடி, பெரும் போராட்டத்திற்குப் பின் உயிர் தப்பி மீண்டு வந்தான்.

அன்பிற்கினியவன் பிறந்த சில காலத்திலேயே, கருப்பைக் கட்டி காரணமாக அம்புஜத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கருப்பை நீக்கப்பட்டது. அதன் விளைவாக, தனக்கு இருக்கும் ஒரே வாரிசு இவன் மட்டும்தான் என்பதால் அம்புஜத்திற்குள் ஒருவித இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது.

தன் ஒற்றை மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும், அவனுக்குக் கண்டம் ஏதும் இருக்குமோ, அவனின் உயிருக்கு மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ எனக் கண்டறிய அம்புஜம் முதன்முதலாக ஜோதிடரைப் பார்க்கச் சென்ற பிறகுதான், எல்லாப் பிரச்சினைகளும் வரிசைகட்டிக்கொண்டு வந்தன.

தன் பேரனின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது செய்வதாக நினைத்து மங்கம்மா செய்த அந்த ஒரு காரியம், இன்று அந்தப் பேரனே அவரைத் தீண்டத்தகாதவர் போல ஒதுக்கித் தள்ளும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இத்தனை நடந்த பிறகும் தன் தவறை ஒப்புக்கொள்ள அந்தப் வயதான பிடிவாதக்காரிக்கு மனமில்லை. 'நான் செய்ததுதான் சரி' என்கிற அதே ஆணவத்தோடுதான் இன்றும் இருக்கிறார்.

அன்று மங்கம்மா செய்த தவறுக்கு அவர் பக்கம் நின்று ஆதரவு தந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அன்பிற்கினியனுக்குத் தன் பெற்ற தாய் அம்புஜமே ஓர் அந்நிய மனுஷியாகிப் போனார். அந்த வீட்டின் ஒற்றை வாரிசான அன்பிற்கினியவன் ஆத்திரத்தில் எல்லாவற்றையும் உதறிய அந்த நிமிடம், இப்போதும் நீலகண்டனுக்குப் பச்சை ரணமாக வலிக்கிறது.

"இந்தச் சொத்து சுகமெல்லாம் பத்தாதுன்னு இன்னும் வேணும்னுதானே இவ்வளவும் செய்தீங்க? போங்க... எனக்கு இந்தச் சொத்துல ஒரு பைசா கூட வேணாம்!" என்று வீசியெறிந்துவிட்டுப் போனவன்தான், இன்று வரை இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

மருமகள் அம்புஜமோ, மாமியாரை எதிர்த்துப் பேசத் தெரியாத அப்பிராணி. மங்கம்மா சொல்வதற்கெல்லாம் தலையாட்டிப் பழகியவர் என்பதால், அந்தக் கசப்பான சம்பவம் நடந்த அன்று என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.

அவர் கண்முன்னால் நடந்தவை எல்லாம் ஒரு திரைப்படக் காட்சி போலத் தெரிந்தன. அதனுள் சென்று எதையும் மாற்றும் வலிமை அவருக்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் மங்கம்மாவே முன்னின்று கவனித்துக் கொண்டார். ஆனால், இறுதியில் நடந்ததோ மங்கம்மாவே எதிர்பார்க்காத ஒன்று.

அந்தச் சம்பவம் முடிந்த பிறகு, மகனின் முகத்தை அம்புஜத்தால் ஏறெடுத்துப் பார்க்கவே முடியவில்லை. மகனுக்கு நல்லது செய்வதாகச் சொன்ன மாமியாரை ஆதரித்ததால், தன் மகனே தனக்கு எதிரியாகிப் போனதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

‘தன் மாமியாரால்தான் தன் மகன் பிரிந்து போனான்’ என்ற கசப்பான உண்மை அவரைத் துளைக்க, அவர் வீட்டின் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டார். மகனின் பிரிவால் ஏற்பட்ட தனிமையும் மனக்கலக்கமும் அவரை மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கின. என்ன நோய் என்றே கண்டறிய முடியாத நிலையில் அவர் உடல் நலிவுற்று, படுத்த படுக்கையானார்.

அம்புஜத்தின் உயிரைக் காக்க நீலகண்டன் பார்த்த வைத்தியங்களுக்கு, வங்கியில் சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் கரைந்து போயின. வேறு வழியின்றி, தன் தந்தை பாடுபட்டு ஆரம்பித்து அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்ந்த அரிசி மில்லை வங்கியிடம் அடகு வைத்தார்.

‘என்றாவது ஒருநாள் மகன் மனம் மாறித் திரும்பி வரமாட்டானா?' என்ற ஏக்கத்திலேயே மிகுதி ஐந்து வருடங்கள் உருண்டோடின. அந்த ஐந்து ஆண்டுகளின் முடிவில், மகன் இனி வரப்போவதில்லை என்ற உண்மை நெஞ்சில் உறைக்கத் தொடங்கியபோது, நீலகண்டனுக்குத் தன் தொழிலையும் அந்த மில்லையும் கவனிக்கும் தெம்பே அற்றுப்போனது.

மனைவியின் அருகிலேயே இருந்து பணிவிடைகள் செய்யத் தொடங்கியதால், மில்லில் வேலை வாங்க ஆளில்லை. நிர்வாகச் சீர்கேடுகளும் கையாடல்களும் பெருக, அந்த மில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்தது.

சில வருடங்களுக்குப் பிறகு, வங்கியிலிருந்து மில்லை ஏலத்திற்கு விடப்போவதாக வந்த இறுதி அறிவிப்புக் கடிதம் கூட நீலகண்டனை அசைக்கவில்லை. "இதை மீட்டு யாருக்குக் கொடுக்கப் போகிறோம்?" என்ற விரக்தியில், "போனால் போகட்டும்" என்று அப்படியே விட்டுவிட்டார்.

அதன்பின் ஒருமுறை அவர் வங்கிக்குச் சென்றபோது, அந்த மில்லை வங்கியிடமிருந்து யாரோ ஒரு பெரிய பணக்காரர் ஏலத்தில் எடுத்துவிட்டதாகத் தெரியவந்தது. அந்த இடத்தில் ஒரு நவீன நெல் ஏற்றுமதித் தொழிற்சாலையை நிறுவப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவர், 'தன் கிராம மக்களுக்கு அவர்களால் ஏதேனும் நன்மை நடந்தால் சரி' என்று மனதைத் தேற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

பாக்கியத்தின் மகன் மாரிமுத்துவும் அந்த வீட்டின் நிலையைக் கண்டு நொந்து போயிருந்தான். தான் மட்டுமே அந்த வீட்டில் தங்கியிருந்தால், சொத்துக்காகத்தான் அங்கே இருக்கிறான் என்று மற்றவர்கள் எண்ணிவிடுவார்களோ எனப் பயந்தவன், "அத்தான் வேணாம்னு உதறுன சொத்து எனக்கும் வேணாம்" என்று தன்மானத்தோடு மறுத்து, தான் படித்த படிப்புக்கு ஆசிரியர் வேலையைத் தேடிக்கொண்டு, தன் தாயையும் அழைத்துக்கொண்டு வேறொரு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டான்.

நான்கு நாட்களுக்கு முன் அம்புஜத்தின் உடல்நிலை மோசமானபோது, நீலகண்டன் அழைத்துத்தான் பாக்கியமும் மாரிமுத்துவும் வந்திருந்தனர்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவருக்குத் தன்பாட்டில் ஒரு பெருமூச்சு நெஞ்சிலிருந்து மேலெழுந்தது. பாரம் தாளாமல் தன் நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டவருக்கு, 'மகன் வரப்போகிறான்' என்ற செய்தி அவரைச் செயல்பட வைத்தது. அதுவரை சோகத்தைத் தனக்குள் புதைத்து வைத்திருந்தவர், அவன் வருகையை உறுதி செய்த பின்பே மற்ற சொந்தங்களுக்கு அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

வீட்டு முற்றத்தில் பந்தல் போடப்பட்டுச் சொந்தங்கள் குவியத் தொடங்கின. அப்போதும் மகன் வந்து சேராததால், நீலகண்டன் மாரிமுத்துவைத் தேடும் பார்வையால் வினவ, அவனோ, “அத்தான் சென்னைக்குப் போயிருந்தாரு மாமா... முக்கால்வாசித் தூரம் வந்திட்டாரு, இதோ இப்ப வந்திடுவாரு…” என்று தேற்றினான்.

‘இவன் எதுக்கு இப்ப சென்னைக்குப் போனான்?’ என்று நீலகண்டன் குழப்பமாகப் பார்க்க, "அத்தானுக்குக் கொஞ்சம் காசு சேர்த்து வைச்சுட்டு, அதுக்கப்புறம் ஏதாச்சும் தோட்டம் வாங்கி அதுல சொந்தமா விவசாயம் பண்ணனும்னு ஆசை. அதுக்காகத்தான் வேலை தேடிட்டு இருந்தாரு. நேத்துதான் இந்தக் காலேஜ்ல ஆள் தேவைன்னு இன்டர்வியூவுக்குப் போனாரு," என்று விளக்கினான் மாரிமுத்து.

மகன் தங்களோடு இல்லாவிட்டாலும், பக்கத்து ஊரில் நண்பனுடன் தங்கி விவசாயம் பார்க்கிறான் என்ற நிம்மதியே நீலகண்டனுக்கு இத்தனை காலம் மருந்தாக இருந்தது. ஆனால், இப்போது அவன் வெகுதூரம் சென்னைக்கே சென்றுவிடுவான் என்று தெரிந்ததும், அவர் நெஞ்சில் வலி கிளம்பியது. அவன் வந்த பிறகு எப்படியாவது அவனைப் பேசி மறித்து, இந்த வீட்டிலேயே தங்கிவிடச் செய்ய வேண்டும் என்று அவரும கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் விதி வேறு விதமாகத் திட்டமிட்டிருந்தது. அன்று நடந்ததோ முற்றிலும் வேறொன்று. நீலகண்டனே அந்த வீட்டை விட்டு வெளியேறி, அதே ஊரில் வேறொரு வீட்டுக்குக் குடிபோக வேண்டிய சூழல் உருவானதுதான் அந்தப் பெரும் துயரம்.
 
Top Bottom