• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 11

ரோசி கஜன்

Administrator
Staff member
நிகாரிகா அந்த பங்களாவிற்குள் நுழைய, குருமூர்த்தியும் அகத்தியனும் தங்களுடைய பெட்டிகளை ஆயத்தம் செய்துவிட்டு தயாராக சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவளின் கார் சத்தத்தைக் கேட்டதும், முகம் மலர்ந்த குருமூர்த்தி மகளைக் காண்பதற்காக வாசலுக்கே நடந்தார். காலையில் அவர் ஸூம் டிஸ்கஷனில் இருந்ததால், நிகாரிகா கோவிலுக்குச் சென்றபோது பார்க்கவில்லை.

இப்பொழுது மகள் காரிலிருந்து கீழே இறங்கியபோது, குருமூர்த்திக்கு ஒரு கணம் வியப்பு மேலிட்டது. மலைக்கோவில் என்பதால் வீசும் காற்றுக்குச் சேலை வசதியாக இருக்காது என எண்ணி, அவள் சுடிதார் அணிந்திருந்தாள். நெற்றியில் மெல்லிய விபூதி, சந்தனம் மற்றும் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும்படி நெற்றி வகிட்டில் ஒரு சிறு குங்குமப் பொட்டு என அவள் தேவதையாய் நின்றாள்.

அவளின் உயிர்நாடியே இங்குதான் இருக்கிறது என்பதால், படித்து முடித்துத் தங்களுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒன்றை இழந்தவளைப் போல நடமாடிய மகளைக் கண்டுதான் அவர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவளின் விருப்பத்திற்குச் சம்மதம் சொன்னார். இப்பொழுது அவளின் முகம் தெளிவாகவும் நிறைவாகவும் இருப்பதைப் பார்த்தபோது, தான் எடுத்த முடிவு சரிதான் என அவர் அகமகிழ்ந்தார்.

தந்தைக்கும் தமையனுக்கும் அவளே பிரசாதத்தை கொடுத்தவள், "சாப்பிட்டுப் போங்க” என்று சொல்லி தான் உணவை வேண்டிக் கொண்டு வரச் சொன்ன பாதுகாவலனைப் பார்க்க, “மேடம் மேசையில் எல்லாம் எடுத்து வைச்சிட்டேன்” என்றான் அவன்.

மூவருமாக சாப்பிட்டு முடிந்து கையைக் கழுவிய பின்னர் புறப்படத் தயாராகிய குருமூர்த்திக்கு மகளைப் மீண்டும் பிரிந்திருக்க வேண்டும் என்ற சோகத்துடன், "பத்திரமா இருக்கணும்டா. சீக்கிரமே அன்பு ஊர்ல ஒரு வீடு வாங்குற வழியைப் பார். இல்லைன்னா அங்கே போக ரெண்டு மணி நேரம், வர ரெண்டு மணி நேரம்னு நாலு மணி நேரம் வீணாகிடும்" என்று அக்கறையாகச் சொன்னார்.

நிகாரிகாவிற்கும் தந்தையைப் பிரியும் வலி கண்ணில் தெரிய அவரின் இடுப்பைக் கட்டிக் கொண்டவள், "தேடிக்கிட்டுதான் இருக்கேன் டாடி... கிடைச்சதும் அங்கே ஷிப்ட் ஆகிடுவேன்" என்றாள் நிகாரிகா.

அகத்தியனும் தன் தங்கை தலையைப் பரிவாக தடவிக் கொடுத்தவன் "சிற்பி.. யாராவது பிரச்சினை பண்ணினா மறக்காம எங்களுக்குப் போன் பண்ணு" என்ற அகத்தியன்,பின் "உனக்குத்தான் கருப்பசாமி மாதிரியே ஒருத்தன் காவலுக்கு இருக்கான். அவனுக்குத் துணையாக இன்னும் இரண்டு முரட்டுச் சிங்கிளும் உனக்கு காவலுக்கு இருப்பாங்க" என்றான் அவனாகவே..

மகள் லண்டனிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முதலே வந்துவிட்டாலும், இரண்டு நாட்களுக்கு முன்னமே இந்தவீட்டுக்கு வந்திருந்தாள் என்பதால், "அவனுக்கு நிகாவை இன்னும் அடையாளம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைடா" என்று குருமூர்த்தி சொல்ல, "அவர் நம்ம சிற்பி ஊருக்குள் காலடி எடுத்து வைச்ச முதல் நாளிலேயே கண்டுபிடிச்சுட்டார் டாடி" என்று அகத்தியன் உறுதியாகச் சொன்னான்.

"எப்படி?" என்று குருமூர்த்தி ஆச்சரியமாக வினவ,

"முந்தாநாள் ஷோரூம் வந்து நம்ம எல்லாரைப் பத்தியும் காவலாளிட்ட விசாரிச்சிருக்கார்.” என்றான் அகத்தியன்.

தந்தையின் தோள்வளைவில் நின்ற நிகாரிகாவிற்கும், முதல் நாள் மட்டுமே அன்பிற்கினியவன் அவளை யாரென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தான். மறுநாளே அவன் தன்னைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டான் என்பது நிகாரிகாவுக்குப் புரிந்துவிட்டது.

நேற்று அவனை இனியன் என்று உரிமையோடு அழைத்தபோதே, தென்னவனுக்கும் உண்மை ஓரளவுக்குப் புரிந்திருக்கும். இன்று கோவிலில் தன்னை மறைந்திருந்து பார்த்த அந்த விழிகளுக்குச் சொந்தக்காரன் யாரென்று, அவள் படியிலிருந்து இறங்கும்போதே கவனித்துவிட்டாள்.

அவன் மாரிமுத்து. நிகாரிகா அந்த வீட்டில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கக் காரணமே அவன்தான். ரத்த உறவு இல்லையென்றாலும், அவளுக்கு இவன் ஒரு உடன் பிறவாச் சகோதரன். சொல்லப்போனால், அவளோடு பிறந்த அகத்தியன் காட்டும் பாசத்தை விட, மாரிமுத்து அவளிடம் காட்டும் அன்பு ஒருபடி மேலானது.

பாக்கியத்திற்கு ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு மாதக் கிருத்திகை அன்றும் முருகனைத் தரிசித்து, தன் குடும்பம் நல்லாயிருக்க வேண்டும் என்று அர்ச்சனை செய்வார். இந்த முறை வீட்டில் அண்ணி இறந்த துக்கத்தில் அவரால் கோயிலுக்கு வர முடியாத காரணத்தால் மகனை அனுப்பி யாரிடமாவது கொடுத்து அர்ச்சனை செய்து கொண்டு வா என்று அனுப்பியிருக்கலாம் என்று நிகாரிகா கணித்திருந்தாள்.

அவளையே மறைந்திருந்து கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்களில் அளவிட முடியாத சந்தோஷம் மின்னியது. அவளுக்கும் அவனைப் பார்த்தவுடன் யாரைக் கோயிலுக்கு போகும் பொழுது நினைத்துக் கொண்டாலோ அவனை நேரில் காணும் பொழுது மாரிமுத்துவிடம் ஓட வேண்டும் என்றுதான் மனம் துடித்தது.

அங்கேயே அந்தச் சந்திப்பு நடந்திருந்தால் ஒரு கண்ணீர் படலமும் பாசப் போராட்டமும் நிச்சயம் நிகழ்ந்திருக்கும். இப்பொழுது தன்னைப் பற்றிய உண்மை ஊராருக்கு தெரியவருவது விருப்பமில்லை என்பதால் அந்தச் சூழலைத் தவிர்க்கவே அவள் தன் மனதை இறுக்கிக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டாள். மாரிமுத்து தன்னை அடையாளம் கண்டு கொண்டான் என்றால், அவன் எப்படியும் தன்னைத் தேடி வருவான் என்று நிகாரிகா உறுதியாக நம்பினாள்.

குருமூர்த்தி தன் மகளை ஏறிட்டுப் பார்த்து, "ஏம்மா... அவன் உன்னைப் பார்த்தப்போ அடையாளம் கண்டுக்கிட்டு ஏதாச்சும் கேட்டானா?" என்று வினவினார்.

அதற்கு நிகாரிகா, "அவர் என்னை ஒருபோதும் மறக்கவே இல்லைப்பா... எட்டு வருஷமா என்னோட நினைவுகளோடயே வாழ்ந்துட்டு இருந்தவருக்கு, அந்த நினைவே நிஜமா முன்னாடி வந்து நிக்கும்போது அடையாளம் தெரியாமலா போகும்? ஆனா, நானே அவருகிட்ட போகணும்னு அவர் காத்துட்டு இருக்கிறது போல எனக்குத் தோணுச்சு. அதனால இப்போதைக்கு நான் எதையும் வெளிப்படையா காட்டிக்கப் போறது இல்லை. இப்போ அவர் மட்டும் இல்லப்பா... தென்னவன் அண்ணாவுக்கும், மாரியண்ணாவுக்கும் கூட என்னைத் தெரிஞ்சிருச்சு" என்று ஆழ்ந்த குரலில் நிதானமாகச் சொன்னாள்.

"அது எப்படி அவ்வளவு சீக்கிரம்..." என்று அகத்தியன் வியப்புடன் கேட்க,

"முக அமைப்பு, உடை என நான் வளர்ந்த பிறகு ஓரளவுக்கு மாறியிருந்தாலும், என்னோட நடத்தையில் பெருசா மாற்றமில்லையே! தென்னவன் அண்ணா நேற்று அன்புக்குக் காலில் அடிபட்ட பொழுது, பதற்றத்தில் இனியன் என்று கத்தினேன். அதிலேயே அவர் கண்டுபிடிச்சிட்டார்.

இன்று கோவிலில் அன்பு குடும்பத்திலிருக்கிறவங்க வரமாட்டாங்க என்ற நம்பிக்கையில் கொஞ்சம் அசட்டையா இருந்தேன். மாரியண்ணா பார்த்தபோது, நான் முன்பு விளையாடுவது போலவே கடம்ப மர இலையைப் பிடிச்சு எறிஞ்சு விளையாடிக்கிட்டு இருந்தேன். பழைய அதே பழக்கத்தைப் பார்த்ததும் அவரும் கண்டுபிடிச்சிட்டாங்க போல" என்று அவள் கூறினாள்.

"இருந்தாலும் பெரியவங்க யாரும் இன்னும் உன்னைக் கண்டுபிடிக்கலையே?" என்று குருமூர்த்தி இழுக்க,

"நான் இங்கே இருந்த அந்தக் காலத்தில் எனக்குப் பெண் நண்பிகள் என்று யாரும் கிடையாது. அப்போ இவங்க கிரிக்கெட் விளையாடப் போனாலும் சரி, எங்கே போனாலும் சரி... இந்த மூன்று பேரோட வாலையும் பிடிச்சுக்கிட்டுத்தான் அலைவேன்.

இவங்களும் வீட்ல நின்றால் பாட்டி ஏதாவது வேலை ஏவிக்கிட்டே இருப்பாங்கன்னு பயந்து, என்னை எப்போதும் அவங்க கூடவே வைச்சிருப்பாங்க. அதனால்தான் இவ்வளவு சீக்கிரமா என்னைக் கண்டுபிடிச்சிட்டாங்க. சொல்லப்போனால், நீங்களே அத்தனை வருஷத்துக்கு அப்புறம் என்னைக் கண்டுபிடிச்சீங்களே... அதைவிட இது சுலபம் தானே!" என்றாள் நிகாரிகா.

"நாங்க உன்னைக் கண்டுபிடிக்கிறது என்னவோ இடியாப்பச் சிக்கல் மாதிரிதான் இருந்துச்சு. ஆனா அப்பா, உன்னைக் கண்டுபிடிச்சே தீருவேன்னு வெறியா இருந்தார். எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமாத் துப்புத் துலக்கி, உன்கிட்ட வந்து சேர எங்களுக்கு சரியா பதின்மூன்று வருசம் ஆகிடுச்சு.

எங்ககிட்ட கடல் அளவுக்குக் காசு இருக்கலாம், ஆனா உன்னைப் பத்தித் தேடச் சொன்னா ஒருத்தன் கூட உருப்படியாத் தேடலை.

கடைசில நானும் அப்பாவும் நேரடியா இறங்கி வேலை பார்த்தோம். அப்படியும் உன்னைப் பத்தி ஒரு சின்னத் தடயம் கூடக் கிடைக்காம இரண்டு வருசம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? எங்களைப் போலவே அவனும் இந்த எட்டு வருஷமா நரகத்தையே பார்த்திருக்கான். உனக்காக நாங்க பட்ட கஷ்டத்தை அவன் பட வேண்டாம்னுதான், நீ இந்தக் கிராமத்துலதான் இருக்கப் போறன்னு தெரிஞ்சும், உன்னைப் பிரிவதற்கு நாங்க எதுவும் சொல்லல" என்றான் அகத்தியன்.

குருமூர்த்தி தன் ஆசை மகளுக்குப் பார்த்துப் பார்த்துச் சூட்டிய பெயர் நிகாரிகா. அவர் எப்போதும் அவளை அந்தப் பெயரால் கூப்பிடத்தான் ஆசைப்பட்டார். ஆனால், மாரிமுத்து அவளுக்கு அன்போடு சிற்பிகா என்று பெயர் வைத்திருக்க, அகத்தியனுக்கும் தன் தங்கையை அந்தப் பெயரால் அழைப்பதுதான் பிடித்துப் போனது.

ஆனாலும் என்னவோ தெரியவில்லை, அவளுக்கு அந்த இரண்டு பெயர்களை விடவும், அழகு என்ற பெயர்தான் மனதிற்கு நெருக்கமாக ஒட்டிக்கொண்டது. அவளுடைய அன்புக்குரியவர்கள் அவளை எப்படி அழைத்தாலும் சரியென்று விட்டுவிட்டாள்.

“இங்கே அடிக்கடி வந்து போங்க.. என் பிரிவு உங்களைத் தாக்காது” என்று நிகாரிகாவும் சொல்ல,

“நீ சொல்லாட்டியும் நாங்க அடிக்கடி வருவோம்” என்று அகத்தியன் சொன்னாலும் அது வெறும் பேச்சு மட்டுமே...

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தைப் போன்றவர்கள் அவர்கள். ஒரு நிமிடம் தன் ஓட்டத்தை நிறுத்தினால் கூட, அது மிகப்பெரிய பண இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதை விட, சிறுவயது முதலே தொழிலையும் நேரத்தையும் அத்தனை உயர்வாக மதித்து வளர்க்கப்பட்டவர்கள். அந்தத் தொழில் பக்திதான் இன்று அவர்களை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது.

நிகாரிகா அந்தப் பரம்பரையின் வாரிசு என்பதால், அவளது ஒவ்வொரு அசைவிலும் அந்த நிதானமும் வேகமும் கலந்தே இருந்தது. தந்தை குருமூர்த்தியின் அதே பிடிவாதமும், அண்ணன் அகத்தியனின் அதே நுணுக்கமும் அவளுக்குள் இயல்பாகவே ஊறியிருந்தது.

"அப்பா... இவளுக்குப் பிளான் பண்ணத் தெரியாம சொதப்பிட்டு இருக்காளா?" என்று அகத்தியன் கேட்க,

"சில அன்புக்குரியவங்ககிட்ட தோற்கும்போது கூட நமக்கு ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும்டா. அதைத்தான் என் பொண்ணு இப்ப அனுபவிச்சுட்டு இருக்கா. நீயே நினைச்சுப் பாரேன்... இப்போ அன்புவோ இல்ல மத்தவங்களோ அவளை அடையாளம் தெரிஞ்சுக்கலைன்னா, இவங்க கூட பதிமூணு வருஷம் பழகியிருக்கேன், ஆனா என்னை எட்டு வருஷம் பார்க்காததுனாலேயே மறந்துட்டாங்களேன்னு அவளுக்கு அந்த வலிதான் அதிகமா இருக்கும்.

அவ இப்போ தள்ளியிருக்கிறது அன்பிற்கினியனோட பாட்டியை வழிக்குக் கொண்டு வரணும், இந்த ஊரைச் செழிப்பாக்கணும்னு மட்டும்தான். பழிவாங்கி உறவுகளைப் பக்கத்துல வச்சுக்கிறதுல என்ன லாபம் இருக்கு? என் பொண்ணுடா அவ... தப்பான வழிக்கு போக மாட்டா" என்றார் குருமூர்த்தி.

"நாம பிசினஸ்னு வந்துட்டா யாரையும் விட்டு வைக்க மாட்டோம்" என்று அகத்தியன் சொல்ல,

"நீயே சொல்லிட்டியே... தொழிலில் மட்டும் தான்னு!" என்று சிரித்தார் குருமூர்த்தி.

நிகாரிகா அப்பா சொல்வது போல மங்கம்மாவை திருத்த முயற்சிக்கவில்லை ஓரு உயிரைத் தன்னிடமிருந்து பிரித்து தன்னுடைய வாழ்க்கையை இருளடைய செய்த மங்கம்மாவுக்கு கடுமையான தண்டனை தர முயல்கிறாள். அது பழிவாங்கல் சேர்த்திதான்.

உறவுகளைத் தானே பழிவாங்கக் கூடாது. மங்கம்மாவை அவள் தான் உறவாக ஒருபொழுதும் நினைத்தது இல்லை அவரும் நினைக்க விட்டதில்லை. அந்தளவுக்கு நிகாரிகா அவரிடம் நிறைய கொடுமைகளை அனுபவித்திருக்கிறாள். அதனால் தன் தந்தையிடம் அமைதி காத்தாள்.

தான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்த குருமூர்த்தி, தன் பயணப் பைகளை எடுத்தபடி, “நிகா.. சரிடா... நீங்க ரெண்டு பேரும் இப்ப என்னதான் அடிச்சுப் பிடிச்சு சண்டை போட்டுக்கிட்டாலும், கடைசியில ஒண்ணா சேர்ந்தா அதுவே எனக்குப் போதும்!” என்று சொன்னார்.

கிளம்பும்போது அகத்தியன் தன் தங்கையின் தலைமேல் கையை வைத்து, "பத்திரமா இரு சிற்பி" என்று சொன்னான்.

அவளுடனான அந்தப் பதிமூன்று வருட காலத்தை இழந்தது அவனுக்கு ஒரு ஆறாத வலி என்றால், பெற்ற மகளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் தந்தையின் வேதனைக்கு நிகரான மற்றொரு வலி அவனுக்குள் இப்போது கனன்று கொண்டிருந்தது. ஆனால், தன் தங்கை தன் கணவன் மற்றும் குழந்தையுடன் இணைந்து ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்றால், இந்த வலியைத் தான் தாங்கிக்கொள்ளப் பழக வேண்டும் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், சொடுக்குப் போடும் நேரத்தில் எல்லாம் கைகூடிவிடும் என்றாலும், வெறும் பணத்தை வைத்து மட்டுமே எதையுமே சாதிக்க முடியாது என்பதையும், பணத்தால் வாங்க முடியாத உணர்வுகள் உலகில் ஏராளம் உண்டு என்பதையும் அகத்தியன் நன்கு அறிந்திருந்தான்.

அதனால், வெளியுலகத்திற்குத் தான் ஒரு கடுமையான, அதிகாரமிக்க மனிதனாகத் தெரிந்தாலும், வீட்டுக்குள் அவன் நிகாரிகாவுக்கு ஒரு நல்ல அண்ணன். இது குருமூர்த்தியின் வளர்ப்பு. குருமூர்த்தியைச் செதுக்கிய அவரின் தாத்தா ஞானவேல், சிறுவயதிலிருந்தே அவருக்குச் சொன்ன ஒரே அறிவுரை இதுதான்.

'எந்தக் காலத்திலும் பணத்தையும் உறவையும் ஒரே தராசில் வைக்காதே! பணத்தைச் சம்பாதிக்கிறதை விட உறவுகளைச் சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். தொழிலில் விட்டுக்கொடுக்காமல் எவ்வளவு உறுதியாக இருக்கிறாயோ, அதற்கு நேர்மாறாக வீட்டுக்குள் அன்பாகவும் மென்மையாகவும் இரு’ என்று பல உன்னதங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் அவர்.
 
Top Bottom