• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 13

ரோசி கஜன்

Administrator
Staff member

அத்தியாயம் 13

அன்பிற்கினியன் நிலைகுலைந்து அப்படியே புல் தரையில் சரியப்போக, அவன் தடுமாறி விழுவதைக் கண்ட தென்னவன் பதறியடித்து ஓடி வந்தவன், “பார்த்துடா அன்பு... பார்த்து! திரும்பவும் விழுந்து வைக்காதே...” என்று சொல்லிக்கொண்டே நண்பனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

அன்பிற்கினியனின் கண்கள் கலங்கி, குரல் நடுங்க, தான் உணர்ந்ததை ஜீரணித்துக் கொள்ளமுடியாமல், “குழந்தை இல்லை போலடா... என் குழந்தை என்னவாகியிருக்கும்?” என்று ஆற்றாமையுடன் கேட்டான்.

“எனக்கும் அழகு பேசினது கேட்டுச்சுடா” என்ற தென்னவன், அவனைத் தேற்றும் விதமாக, “உன் பிள்ளை உயிரோட நல்லாத்தான் இருக்கு... சும்மா அழுதுட்டு இருக்காதே” என்றான்.

அந்த வார்த்தை அன்பின் காதுகளில் தேனாகப் பாய்ந்து, அவனுக்குள் ஒரு பெரிய ஆசுவாசத்தைத் தர, "பிள்ளைதானா? நீ பார்த்தாயா? உனக்கு எப்படித் தெரியும்?" என்று தாள முடியாத ஆவலில் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினான்.

ஆரியனின் வயதையும், அவனது சாயலையும் வைத்து தென்னவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அதனாலேயே அன்பிற்கினியனிடம், “உன் பையனும் ஊருக்கு வந்திருக்கான்டா. அப்படியே நம்ம சின்ன வயது அழகு எப்படி இருப்பாளோ, அதே அச்சாக இருக்கான். தமிழ் பேசுறான்... ஆனா கொஞ்சம் வெளிநாட்டு குணம் தெரியுது. அவன் உன் கூட ஒட்டுவானான்னு தெரியலை. அதுமட்டும் இல்லாம, அவன் அழகை அம்மான்னு கூப்பிடாம அத்தைன்னுதான் கூப்பிடுறான்” என்று தான் ஊகித்து தெரிந்து கொண்டவைகளை யோசனையுடன் சொன்னான்.

“அத்தைன்னா... ஏன்?” என ஒருவிதமான வேதனைக் குரலில் அன்பிற்கினியன் கேட்க,

“சின்னப் பொண்ணுக்குப் பிள்ளை பிறந்ததை மறைச்சு வச்சிருப்பாங்க போலிருக்கு. பெத்த பிள்ளையே தன்னை அத்தைன்னு கூப்பிடும்போது அந்தத் தாய்க்கு எப்படியிருக்கும்? அந்த வலிதான் அவளுக்குக் கோபமா வருது போல... பிள்ளை உயிரோடதான் இருக்கு, ஆனா அவ இழந்ததுன்னு எதைச் சொன்னான்னுதான் புரியலை” என்றான் தென்னவன்.

தென்னவன் சொன்ன முன்பாதியை மட்டும் பிடித்து, “அவளுக்கு அப்போது இருபது வயது இருக்குமே... பதினெட்டு ஆனாலே திருமண வயதுதானே? அப்புறம் ஏன் இப்படி?” என்று கேட்ட அன்பிற்கினியனால், தன் பிள்ளை தன் மனைவியை அத்தை என்று கூப்பிடும் அவலத்தைத் தாள முடியவில்லை.

“நீ திருட்டுத்தனமாகத் தாலி கட்டி குடும்பம் நடத்தப் போய் தான் இவ்வளவு பிரச்சனையும்...” என்று தென்னவன் ஆரம்பிக்க,

அன்பிற்கினியன் தன் பக்க நியாயத்தை வார்த்தைகளால் கொட்டும் பொருட்டு,“டேய்... நான் கல்யாணமாகி ஐந்து வருஷம் அவளைக் காதலிச்சுட்டு மட்டும்தான் இருந்தேன். எனக்குச் சாகும் வரை பெண்டாட்டினா அது அவதான் என்று முடிவுக்கு வந்த பிறகுதான், நாங்க கணவன் மனைவியா வாழவே ஆரம்பிச்சோம். அதுவும் ஒரு நாலு மாசம்தான் பாட்டிக்குத் தெரியாமல் அவகூட வாழ்ந்திருப்பேன். ஆனால், அதுக்குள்ள அவங்க மோப்பம் பிடிச்சிட்டாங்க." என்றவன் தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிபடி,

"எனக்கு ஒரு பிள்ளை என்று வந்துவிட்டால், அந்தப் பிள்ளையைச் சாக்காக வைத்து அவளையும் வீட்டில் ஒருத்தியாகச் சேர்த்துப்பாங்கன்னு நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்டா. அந்த ஒரு தப்புதான் இன்னைக்கு எல்லாவற்றையும் தலைகீழாக மாத்திடுச்சு” என்று கலங்கினான் அன்பிற்கினியன்.

மங்கம்மாவின் பிடிவாதத்தால், பதினைந்து வயதிலேயே ஒரு இக்கட்டான சூழலில் நிகாரிகாவுக்குக் கட்டாயக் கல்யாணம் நடந்தது தென்னவனுக்குத் தெரியும். ஆனால், அதன் பின்னணியில் இருந்த முழுமையான காரணங்கள் அவனுக்குப் புரியவில்லை. இருப்பினும், நிகாரிகா எப்படி ஏழு வயதில் இந்த ஊருக்குள் முதல் முதலாகக் காலடி எடுத்து வைத்தாளோ, அதே ஏழு வயதில் ஆரியனையும் அழைத்து வந்திருப்பது, அவன் அன்பிற்கினியனின் மகன் என்பதற்குப் பலமான சாட்சியாக அமைந்தது.

“வா... என் பையனைப் போய் பார்ப்போம்!” என்று அன்பிற்கினியன் ஆவலுடன் கிளம்பினான்.

அவர்கள் இருவரும் தன்னைப்பற்றி என்ன பேசுகிறார்கள், குறிப்பாக அன்பிற்கினியன் தான் சொன்னதை உணர்ந்த பிறகு என்ன வினையாற்றுகிறான் என்பதைச் சற்றுத் தூரத்தில் நின்றபடி கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிகாரிகா.

அன்பி முகத்தில் தெரிந்த அந்தத் தவிப்பையும், அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அவனது நிலையையும் ரசித்தவள், மெல்ல அவர்களை நெருங்கி, “ உன் பையனிட்டப் போய் மாமான்னு சொல்லு அப்படியே உள்ளம் பூரிச்சுப் போயிடும்!” என்று நக்கலாகச் சொன்னாள்.

தென்னவனுக்கும் தான் ஊகித்தது நூறு சதவீதம் சரிதான் என்பதில் ஒரு பெரும் நிம்மதி ஏற்பட்டது. தன் நண்பன் இழந்தவைகள் எல்லாம் அவன் கையில் மீண்டும் கிடைத்துக் கொண்டு இருப்பதை எண்ணி, அவன் முகத்தில் பெரும்புன்னகை ஒன்று தவழ்ந்தது.

தென்னவன் தன் சிந்தையில் இருக்கும் பொழுது அன்பிற்கினியனோ நிகாரிகாவிடம், “நான் ஏன் மாமான்னு சொல்லணும்? அப்பான்னுதான் சொல்லுவேன்!” என்று அன்பிற்கினியவன் பிடிவாதமாகச் சொன்னான்.

“அதெல்லாம் சின்னப் பையனிடம் சட்டென்று சொல்லக் கூடாது” என்று நிகாரிகா தடுக்க, “போடி... நீ மட்டும் என் பிள்ளையோடு இத்தனை வருஷம் சந்தோஷமா இருந்திருக்காய். நான் தான் உன்னை நினைச்சுப் பித்துப் பிடிச்சு அலைஞ்சுட்டு இருந்தேன்” என்றான் அன்பிற்கினியன் ஆற்றாமையுடன்.

“நீ பைத்தியம் பிடிச்சு லூசாகுறதுக்கு முன்னாடியே நான் வந்துட்டேன் இல்லையா?” என்று அவளும் இடக்காகப் பதில் சொன்னாள்.

“ஓ... மேடத்துக்கு நான் பைத்தியம் வேற ஆகணுமா? வா... உன்னை இப்பவே பைத்தியம் ஆக்கிவிடுறேன்” என்று அன்பிற்கினியன் சீறினான்.

“அடேய்! நீங்க ரெண்டு பேரும் ஒரு பிள்ளைக்கு அப்பா, அம்மா மாதிரியா பேசுறீங்க? முதல்ல வாயை மூடுங்க. ஆரியனிடம் உண்மையை எப்படிச் சொல்றதுன்னு யோசிங்க” என்று தென்னவன் அவர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தவன், “இவங்களுக்கு நாட்டாமை பண்ணியே எனக்கு வயசாயிடும் போலயே...” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

ஆரியன் இத்தனை காலமும் அகத்தியனையே அப்பா என்று அழைத்துப் பழகியவன். திடீரென்று போய் அவர் அப்பா இல்லை, அன்பிற்கினியன்தான் உன் அப்பா என்று சொல்ல முடியாது என்பதால் நிகாரிகா நிதானமாகச் செயல்படவே எண்ணினாள்.

அதனால் “இப்போதைக்குச் சொல்ல முடியாது அண்ணா... இவரும் அவனும் பழகி ஒரு பிணைப்பு வரட்டும், அப்புறம் சொல்லுவோம்” என்று தென்னவனிடம் சொன்னாள்.

அன்பிற்கினியன் கோபமாக, “அதுவரைக்கும் அவன் என்னை அங்கிள்ன்னும் மாமான்னும் கூப்பிடணுமா?” என்று எகிறினான்.

“நான் ஏழு வருஷமா அவன் என்னை அத்தைன்னு கூப்பிடுறதைத்தான் கேட்டுட்டு இருக்கேன். எனக்கே இல்லாத வலி உனக்கு வந்துடுச்சா? சும்மா இரு... பிள்ளையிடம் திடீரென்று சொன்னால் அவன் அதிர்ச்சியாகி உடம்புக்கு ஏதாவது ஆயிட்டா என்ன பண்றது?” என்று அவனை அடக்கினாள் நிகாரிகா.

“சண்டாளி... பிள்ளையையும் காட்டிட்டு, இப்ப கொஞ்சக் கூடாதுன்னு கையைக் கட்டிப்போடுறாளே!” என்று புலம்பினான் அன்பிற்கினியவன்

“தாராளமாகக் கொஞ்சு... ஆனா இப்போதைக்கு அப்பான்னு மட்டும் சொல்லாதே, முக்கியமா அவனை ஊருக்குள்ள நீ தூக்கிட்டுப் போய் உன் வீட்டுக்கிழவிக்கு சந்தேகத்தை வரவழைக்காதே அவ்வளவுதான்” என்றாள் நிகாரிகா.

நீ சொன்னதை நான் ஏன் கேட்கனும் என்ற பாவனையோடு,“நான் என் பிள்ளையைப் பார்க்கப் போறேன்” என்று அவளின் பேச்சை மதிக்காமல் அன்பிற்கினியன் கிளம்ப,

அவனை அடக்கி வைப்பது கஷ்டம் என்பதால், அவளும் கொஞ்சம் இறங்கிவந்து, “வா... அவனுக்கு உன்னைத் தெரியாது, நானும் கூட வந்து அறிமுகப்படுத்தித் தொலையுறேன்” என்றவளுக்கும் அன்பிற்கினியனை எப்படி ஆரியனிடம் அறிமுகப்படுத்துவது என்று குழம்பியே நின்றாள்.

அவளின் முகத்தைப் பார்த்து, அவள் மட்டும் அன்பிற்கினியவன் தான் தன்னுடைய கணவன் என்று ஒரு வார்த்தை சொன்னால் எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடுமே அதைச் சொல்லாமல் இருப்பவளை எண்ணிப் பல்லைக் கடித்தபடியே, “ஏண்டி... இப்படி உடம்பு முழுக்கத் திமிரோடு திரியுறாய்?”என்றான்.

“எல்லாம் நீ சாப்பாடு போட்டு வளர்த்த திமிர்தான்!” என்று அவளும் சொல்ல,

“நீ சொல்லாட்டியும் அதுதான் உண்மையாக்கும்” என்று மனதிற்குள் உருகினான் அன்பிற்கினியன்.

காருக்கு வரும் வரை இந்த உரையாடல்கள் நீடிக்க,அவர்கள் சண்டைக்கு நடுவில் சென்றால் தன் முக்குத்தான் உடைபடும் என்பது புரிந்துபோன தென்னவன் எதுவும் எனக்குக் கேட்கவில்லை என்ற பாவனையில் சற்று இடைவெளி விட்டுப் பின்னால் நடந்து வந்தான்.

நிகாரிகா தன் கையில் இருந்த ரிமோட் சுவிட்ச் மூலம் காரைத் திறக்க, அன்பிற்கினியன் தானே சென்று டிரைவர் சீட்டில் முதலில் ஏறி அமர்ந்து கொண்டான்.

தென்னவன் பின் சீட்டுக்குச் செல்ல, நிகாரிகா பின் கதவைத் திறக்க, “ஒழுங்கா முன்னாடி ஏறு... இல்லைன்னா உன் பையனிடம் உன் அம்மா வேற என்று சொல்லிடுவேன்” என்று மிரட்டினான் அன்பிற்கினியவன்.

“இப்போ மட்டும் என்னவாம்?” என்று மனதுக்குள் எழுந்த வலியுடன் முணுமுணுத்தவள், முன்பக்கக் கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள்.

வண்டியை பூந்தென்றலூர் சாலையில் லாவகமாக ஓட்டிக்கொண்டு, அவளை ஒரு பார்வை பார்த்த அன்பிற்கினியன், “இங்கேயே தெரியுமா?” என்று கேட்டான்.

அவன் எதைக் கேட்கிறான் என்பது புரிந்து,“இல்லை...” என்று தலையை அசைத்தவள், ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, தன் கடந்த காலத்தின் அந்தக் கொடுமையான நாளுக்கு பயணித்தாள்.

“நான் ஊரிலிருந்து வெளியே போன அன்று, நீங்க நீலகண்டன் மாமா, அம்மா, அண்ணா என்று எல்லோரும் வெளியே போகுமட்டும் காத்திருந்த உங்க பாட்டி என்னை கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டாங்க...

ஒண்ட வந்த பிடாரி, தன் பேரனோட சொத்துக்காகப் படுக்கைக்கு அலையுறாள். சின்ன வயசுலேயே உடம்பு சுகத்துக்கு ஆசைப்பட்டு என் பேரனை மயக்கப் பார்க்கிறாள்னு கேட்கவே நாக்கூசுகிற மாதிரி அசிங்கமாப் நிறையப் பேசிட்டாங்க. உங்க அம்மாவும் அமைதியாகத் தான் நின்றாங்க.

எனக்கு எப்படியும் இப்படி ஒரு நாள் வரும் என்று உங்க கூட வாழத்தொடங்க முன்னமே தெரியும் என்றாலும் நீங்க எப்படியும் சப்போட்டுக்கு இருப்பீங்க என்று தான் பெருசா யோசிக்கலை. அது தீடுமென ஒருநாள் நடக்கும் பொழுது என்னால் வாயைத் திறந்து பேச திராணியில்லாமல் போய்விட்டது.

அப்பதான் சரியாக அப்பாவோட கார் உங்க வீட்டுக்கு முன்னால் வந்து நின்னுச்சு. அங்கே நடப்பவற்றை பார்த்து உங்க பாட்டியோட நெற்றிப்பொட்டுல துப்பாக்கியை வச்சு, 'யார் வீட்டுப் பிள்ளையிடம் உங்க வேலையைக் காண்பிக்கிறீங்க?' என்று எங்கப்பா கத்தினார்.

அந்தத் தரம் தாழ்ந்த இழிமொழிகளைக் கேட்டு அப்படியே ஒடுங்கிப் போய் நின்ன என்னை, என் பொண்ணுன்னு உரிமையோட அணைச்சு அழைச்சுட்டுப் போனார். எனக்கும் பாட்டி கீழே தள்ளிவிட்டதிலே இழந்த பழைய நினைவுகளில் அவரைச் சின்ன வயசுல பார்த்த ஞாபகம் லேசாக இருந்தது, அதனால பயமில்லாம அவரோடு கிளம்பிட்டேன்.

நாங்க காரில் போய்க்கொண்டிருந்த போதே எனக்கு ரத்தப்போக்கு. அதை முதல் மாதவிடாய்ன்னுதான் நான் தப்பா நினைச்சேன். ஆனா, மூணு நாளைக்கு மேலாகியும் அது நிக்கலை... அடிவயித்துல உயிர் போற மாதிரியும் தோன்ற நான் துடிக்கிறதைப் பார்த்துப் பதறிப்போன அம்மா உடனே டாக்டரை வரவழைச்சுப் பார்த்தாங்க. அப்பதான் உண்மை தெரிஞ்சுது.

என் வயித்துல இரட்டைப் புள்ளைங்க உருவாகியிருந்திருக்கு... அதுல ஒரு குழந்தை அப்பவே கலைஞ்சுடுச்சுன்னும், இன்னொரு குழந்தையையும் இழக்க வாய்ப்பிருக்கு, ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கணும்னு டாக்டர் எச்சரிச்சாங்க.

அவன் பிறக்கிற வரைக்கும் நான் முழுமையான பெட் ரெஸ்ட்ல தான் இருந்தேன். அவனை என் கண்ணால பார்க்கிற வரைக்கும் நான் பட்ட தவிப்பு இருக்கே... அது எனக்கு மட்டும்தான் தெரியும்.

அவன் பிறந்து மூணு மாசம் வரைக்கும் அம்மாவோடுதான் இந்த நாட்டுலே இருந்தேன். ஒருநாள் அப்பா என்கிட்ட வந்து, உன்னைத் திரும்ப உன் கணவர்கிட்டயே கொண்டு போய் விட்டுடவா?ன்னு கேட்டார். ஆனா, அந்த நிமிஷம் உங்க முகத்தைப் பார்க்கக்கூட எனக்குப் பிடிக்கலை. அதனால அப்பாவோடவே லண்டனுக்குப் போயிட்டேன்.”

“அங்கே போனதும், அண்ணாவோட பையன் சின்ன வயசுல ஒரு பொண்ணோட தடம் மாறிட்டான், அந்தப் பொண்ணு பிரசவத்துல இறந்துட்டான்னு ஒரு கதையை அப்பா கிளப்பி விட்டார். அந்தப் பேச்செல்லாம் அடங்குற வரைக்கும் காத்திருந்துட்டு, அதுக்கப்புறம்தான் காணாமல் போன என் மகளைக் கண்டுபிடிச்சுட்டேன்னு உலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அப்பதான் என்னைப் பற்றிய சந்தேகங்கள் வராது என்று அவர் சரியாக காய் நகர்த்தப்போய்த்தான் இப்பொழுது என் மானம் தப்பிச்சு இருக்கு.

மகள் திரும்ப வந்துவிட்டாள் என்று மிடியாக்கு போய் அவரே சொன்னாலும் அப்பவும் என்னை வெளியுலகத்துக்குக் காட்டாம மறைச்சுதான் வச்சிருந்தார். நான் படிப்பை முடிச்சுத் தொழில் செய்ய ஆரம்பிச்ச பிறகும்கூட, என் போட்டோ எதுவும் மீடியால வர்றதை நான் விரும்பலை அதனால் தான் உங்களுக்கு என்னைத் தெரியலை” என்று தன் கடந்த கால வலிகளை ஒரு நீண்ட பெருமூச்சோடு பகிர்ந்து முடித்தாள் நிகாரிகா.

அவளும் தனக்கு குறையாத வலிகளை அனுபவித்திருக்கிறாள் என்று புரிந்தாலும், “இப்ப என்ன பண்ணப் போறீங்க மேடம்?” என்று அன்பிற்கினியன் நக்கலாகக் கேட்டான்.

அவள் தன் கஷ்டத்தைச் சொல்லும்போது, அதைச் சற்றும் மதிக்காமல் நக்கல் செய்த அன்பிற்கினியனின் செயல் தென்னவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் “நீ வாயை மூடு அன்பு! எல்லாம் உன்னால்தான்...” என்று அவன் மேல் சீறினான் தென்னவன்.

“டேய்... உனக்குத்தான் புரியவில்லை. நிவாஸ் குடும்பம் தன் பகையை மிச்சம் வைக்கக் கூடாது என்று நினைக்கும் பரம்பரை. மேடமும் அதற்காகத்தான் ஏதோ பெரிய திட்டத்தோடுவந்திருக்காங்க. என்ன பண்ணப் போறீங்கன்னு சொன்னால், நானும் கொஞ்சம் சுதாரித்துக் கொள்வேன்” என்றுதென்னவனிடம் பேச்சைத் தொடங்கி நிகாரிகாவைப் பார்த்து முடித்தான்.

நிகாரிகாவை வீட்டை விட்டு வெளியேற்றியதே அந்த மங்கம்மாதான். அப்படியிருக்க, ஊர் உலகத்திடம் எல்லாம் அவள் 'யாரோ ஒரு பெரிய பணக்காரனைப் பிடித்துக்கொண்டு ஓடிப்போய்விட்டாள்' என்று எப்படி அந்தப் பாட்டியால் வாய் கூசாமல் சொல்ல முடிந்தது? ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைத் தரம் தாழ்ந்து விலை பேசுவதற்கு அவருக்கு எப்படி மனம் வந்தது?

தனது பேரனுக்கு ஒரு பெரிய இடத்துப் பெண் மனைவியாக வரவேண்டும் என்ற பேராசைக்காக, ஒரு அப்பாவியை இப்படித் தண்டிப்பதா? அதுவும் அவரும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இன்னொரு பெண்ணின் வாழ்வைச் சிதைக்கத் துணிந்ததை நினைக்கும்போது, தென்னவனின் உள்ளம் ஆத்திரத்தில் கொதித்தது.

அன்பிற்கினியன் மட்டுமே, "நீங்கதான் ஏதோ பண்ணியிருக்கீங்க" என்று தன் அப்பத்தாவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தான். அந்த ஒரு காரணத்திற்காகவே தென்னவன் தன் நண்பனையும் விட்டுக் கொடுக்காமல், “என் தங்கச்சி என்ன செய்தாலும் அது நியாயமாகத்தான் இருக்கும். நீ உன் அப்பத்தாவுக்கு ஜால்ரா தட்டாமல் பேசாமல் இரு!” என்று அன்பிற்கினியனை அதட்டினான் தென்னவன்.

“நியாயமா? அது இவள் பக்கம் இருக்கிறது என்பதாலேயே அவள் செய்வதெல்லாம் நியாயமாகி விடாது” என்று அன்பிற்கினியன் வாதிட,

தென்னவன் நிகாரிகாவிடம் “ஏன்மா... உனக்கு வேற ஆளே கிடைக்கவில்லையா? நீ யாருக்கும் கிடைக்க முடியாத ஒரு மாணிக்கக்கல் என்று தெரிந்தும், உன்னை எப்போதும் உதாசீனப்படுத்தும் இவன் தான் உனக்கு வேண்டுமா?” என்றான்.

“டேய் அவகூட ஊனும் உயிருமாக வாழ்ந்த எனக்குத் தான் அவளின் ஆதிமுதல் அந்தம் வரை தெரியும். உனக்குத்தான் புரியவில்லை" என்ற அன்பிற்கினியன் "அவளோட இந்த அமைதியே அவள் ஏதோ பெரிய காரியம் செய்யப்போகிறாள் என்பதைக் காட்டவில்லையா?” என்றான்.

நிகாரிகா அவர்கள் இருவரையும் பார்த்து, “ஆரியனை அழைத்துக்கொண்டு நான் அடுத்த வாரம் மீண்டும் லண்டன் போய்விடுவேன். நீங்கள் இரண்டு பேரும்தான் இங்கே எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கார் ஷோரூமை எனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டேன். அது இனி அவர் பொறுப்பு. நீங்கள் விவசாயத்தையும், மற்ற வேலைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவன் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் வேறு விளக்கம் சொன்னாள்.

“பார்த்தாயா... ஏதோ பெருசா பண்ணப்போறாளடா!” என்று அன்பிற்கினியன் பதறினான்.

“பண்ணட்டும்... நீ நல்லா அனுபவி!” என்றான் தென்னவன் கிண்டலாக.

“உன்கிட்ட சொன்னேன் பாரு...” என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டான் அன்பிற்கினியன்.

அன்பிற்கினியனின் கணிப்பு எவ்வளவு சரி என்பதை காலம் உணர்த்தக் காத்திருந்தது.
 
Top Bottom