• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 3

ரோசி கஜன்

Administrator
Staff member
“டேடி, சிற்பியை நீங்க அங்க அனுப்பியிருக்கக்கூடாது!” எனத் தன் தந்தையிடம் கோபத்தைக் காட்டிக்கொண்டிருந்தான் அகத்தியன் நிவாஸ்.

தன்னுடைய கண்ணாடியின் வழியே மகனை ஆழ்ந்து பார்த்த குருமூர்த்தி நிவாஸ், “அவ சந்தோஷம் நமக்கு முக்கியம்டா... அவளுக்கு அங்கதான் உயிர்ப்பு இருக்கு” என்று சொல்ல,

“அதுக்காக ஒரு பட்டிக்காட்டுக்கா அனுப்புறது? அவளால் அங்க எப்படிச் சமாளிக்க முடியும்?” என்று முகம் சுளித்துக் கேட்டான் அகத்தியன்.

“உன் தங்கச்சி எங்க இருந்தாலும் சமாளிச்சிடுவா, டோண்ட் வொரி!” என்று குருமூர்த்தி நிதானமாகச் சொன்னார்.

அதே நேரத்தில் பூந்தென்றலூர் கிராமத்தில் திடீரென செம்மண் சாலையைப் புழுதி மறைக்க, அந்த ஊரின் பழைய நெல் மில்லுக்கு முன்னால் பத்து கறுப்பு நிறச் சொகுசு கார்கள் அணிவகுத்து வந்து நின்றன.

ஒரு காலத்தில் ஊருக்கே சோறு போட்ட அந்த மில், யாருடைய கவனிப்பும் இல்லாததால் இப்போது கூரைகள் சேதமடைந்து, சுவர்கள் எல்லாம் பாசி பிடித்துப் உடையும் நிலையிலிருந்தது.

கார் நின்றவுடனேயே மற்றைய காரிலிருந்த பாதுகாப்புக்கு என வந்த கறுப்புப் படை ஒரு காரையே சுற்றி வட்டமிட்டு நின்றுகொண்ட பின் காரிலிருந்து வெளியே காலை வைத்த அந்த 'ஹைகீல்ஸ்' காலணிகளைக் கண்டதும் அந்த ஊரே வியந்து பார்த்தது.

வயலில் வேலை செய்த இடைவெளியில், வரப்புகளில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்த விவசாயிகள், இவ்வளவு நேரமும் அந்த ஆடம்பரக் காரிலிருந்து ஒரு ஆண்தான் இறங்கப்போகிறான் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, அங்கே தெரிந்த அந்தப் பாதணிகள் ஒரு பெண்ணுக்குரியது என்று தெரிந்ததும், அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கஞ்சி குடிப்பதைக்கூட மறந்து, கண்களை அகலவிரித்து அந்தக் காரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த நொடி, இரும்பென இறுக்கமுடைய இதயம் கொண்ட, தலைக்கனம், அகம்பாவம், திமிர் என எல்லாம் உச்சமாக ருந்த பெண் காரிலிருந்து மிடுக்குடன் இறங்கினாள். அவள் நிகாரிகா நிவாஸ். உலகத்தின் முதல் பணக்காரரான குருமூர்த்தி நிவாசின் இரண்டாம் வாரிசு. நிவாஸ் குழுமத்தின் அதிகாரமிக்க பங்குதாரர்.

உலகளவில் விவசாயத்தில் முதலாவதாகத் திகழும் வாகனிங்கன் பல்கலைக்கழகத்தில் மண்ணில் மகத்துவத்தையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் கற்றுத் தேர்ந்தவள்.

அவளின் தோற்றமோ பல லட்சம் மதிப்புள்ள இத்தாலியின் கிடன் எனும் உலகத்தரம் வாய்ந்த பிராண்டின் கோட் சூட் , ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது என்பதை பார்த்துத் தெரிந்து கொள்ள கையில் பிளட்டினம் பதித்த ரொலக்ஸ் கடிகாரம், காதில் நிலவின் வடிவில் உயர்தர வைரம் பதித்த தோடு, என நவீன நாகரிகத்தின் உச்சமாய் அவள் நின்றாள்.

அவளைப் பார்த்த அந்த விவசாயிகளுக்கோ, சில வருடங்களுக்கு முன் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் வந்த கஜோல் தான் நினைவுக்கு வந்தார். அந்தப் படத்தின் வசுந்தரா பரமேஷ்வர் போலவே ஒரு மிரட்டலான தோரணை.

அவள் தன் முகத்தை மறைத்திருந்த கறுப்புக் கண்ணாடியை மெல்லக் கழற்றிவிட்டு, அந்த ஊரை ஒருமுறை ஆழமாகச் சுற்றிப்பார்த்தாள். அந்த ஊரின் ஒவ்வொரு இடங்களும் அவளுக்குப் பரிச்சயமானவைதான், இன்று சிறு சிறு மாற்றங்கள் தெரிந்தாலும் மொத்தமாக மாறிப்போய்விடவில்லை என எண்ணியபடி பார்வையை மெல்ல விலக்கி சிதிலமடைந்த அந்த மில்லின் சுவர்கள் மீது நிலைக்க விட்டாள்.

‘இப்பொழுதே இடிந்து விழுந்துவிடுவேன்’ என்ற நிலையிலுருந்த அந்த மில்லில் சுவர்களைப் பார்த்த நிகாரிகாவின் இதழ்கள் எள்ளலுடன் ஒரு பக்கமாகச் சரிந்தன. ஒரு காலத்தில் அதிகாரத்தின் சிம்மாசனமாகத் திகழ்ந்த அந்த மில், இன்று சிதைந்து கிடப்பதைக் காண்பது அவளுக்குள் ஒரு விசித்திரமான, குரூரமான திருப்தியைத் தந்தது.

ஒரு காலத்தில் இதே மண்ணிலிருந்து அவள் அநாதையாகத் துரத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று, அதே மண்ணின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பணபலத்துடனும், அதிகாரத் தோரணையுடனும் அவள் மீண்டும் கால் பதித்திருந்தாள்.

அவளது உதவியாளர் உதயகுமார் அருகாமையில் வந்து, “மேடம்... இடிக்கிறதுக்கு எல்லாம் தயாரா இருக்கு.” என்று பணிவான குரலில் சொன்னார்.

நிகாரிகா அந்த மில்லைப் பார்த்தபடியே, “எந்த அடையாளமும் மிச்சமிருக்கக் கூடாது குமார். இன்னைக்குச் சூரியன் மறையறதுக்குள்ள இந்த இடம் தரைமட்டமாகியிருக்கணும். கிளீன் இட் அப்!” என்று அதிகாரத் தோரணையில் உத்தரவிட்டாள்.

“மேடம், அந்த வேலையை சார் மேற்பார்வை பார்க்கட்டும். விவசாயிகளுடனான சந்திப்பு பதினொருமணிக்கு இருக்கு. நீங்க அதுக்குப் போகணும்,” என அவளது இன்னுமொரு உதவியாளர் சரிகா அன்றைய பணிகளை நினைவூட்டினாள்.

“லெட்ஸ் கோ சரிகா!" என்றவள், தன் உத்தரவுக்காகக் காத்திருந்த உதயகுமாரிடம், "நான் நாளை வந்து பார்ப்பேன், அப்ப இந்தக் கட்டிடம் இருந்த அடையாளமே இருக்கக்கூடாது. மைண்ட் இட்!” என்று சொல்லிவிட்டு, வந்த வேகத்திலேயே புயலென அங்கிருந்து கிளம்பினாள் நிகாரிகா.

உண்மையிலேயே, அங்கிருந்த விவசாயிகளுக்கும் அந்த ஊர் மக்களுக்கும் அவள் வந்து சென்றது ஒரு மின்னல் வந்துவிட்டுப் போனதைப் போன்ற பிரமிப்பையே தந்தது.

யார் இந்தப் பெண்? இத்தனை அதிகாரத்தோடும், இவ்வளவு பெரிய ஆள் பட்டாளத்தோடும் வந்து நின்று, பல ஆண்டுகளாக ஊரின் அடையாளமாக இருந்த மில்லை இடிக்க உத்தரவிடுகிறாளே!" என்று அனைவரும் வாயடைத்துப் போய் நின்றனர். அவளது பேச்சில் இருந்த வேகம், கண்களில் தெரிந்த உறுதி, எதற்கும் அஞ்சாத அந்தத் தோரணை என இவை அனைத்தும் அந்தக் கிராமத்து மக்களுக்கு முற்றிலும் புதியதாக இருந்தன.

அவள் சொல்லிவிட்டுப் போனது போலவே, அந்த மில் அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் உருத்தெரியாமல் அழிக்க நவீன காலத்து எஸ்கவேட்டர்கள், ராட்சத புல்டோசர்கள் மற்றும் அணிவகுத்து நின்ற டிப்பர் லாரிகள் எனப் பெரும் இயந்திரப் பட்டாளமே அந்த இடத்தை ஆக்கிரமித்தன.

பல தசாப்தங்களாக அந்த ஊரின் அடையாளமாக, நீலகண்டனின் உழைப்பாக உயர்ந்து நின்ற அந்த மில்லின் சுவர்கள், கனரக வாகனங்களின் ஆக்ரோஷமான தாக்குதலில் நிலைத்து நிற்கமுடியாமல் சரிந்து கீழே விழுந்தது .

இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகளைக் கூட அங்கிருக்க விடவில்லை. மின்னல் வேகத்தில் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மாலையில் சூரியன் மறையும்போது, அங்கே ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் இருந்ததற்கான சுவடு கூட இல்லாமல், அந்த இடம் ஒரு வெட்ட வெளியாகக் காட்சியளித்தது.

காலையிலேயே நிகாரிகா தங்களுடைய பழைய மில்லை இடிக்க ஆணை பிறப்பித்துவிட்டாள் என்பதை நீலகண்டன் அறிவார். தன் தகப்பனின் உழைப்பில் உருவான மில் உடைந்து விழுவதைப் பார்க்கத் தெம்பு இல்லாமல், அவர் அந்தப் பக்கமே போகாமல் இருந்தார்.

அம்புஜம் இறந்து அன்றுடன் இருபத்தியொரு நாட்கள் முடிந்திருந்தன. தந்தையோடு அன்பிற்கினியவன் இந்த வீட்டிலேயே தங்கிவிட, தனிக்கட்டையான தென்னவனும் இவர்களுடன் வசிக்க வந்துவிட்டான்.

எட்டு வருடங்களாக அன்பிற்கினியவனும் தென்னவனும் சமையலில் நன்றாகவே கற்றுத் தேர்ந்திருந்ததால், மூவருக்குமே சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லாமல் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

மங்கம்மாவும் எத்தனையோ முறை மகனை மட்டுமாவது வீட்டுக்கு வா என்று ஆட்களிடம் தூது சொல்லியனுப்பினார். ஆனால் நீலகண்டனின் பதில், 'முடியாது' என்ற ஒன்றாக மட்டுமே இருந்தது.

இப்பொழுது கருப்பண்ணாவின் வயலில் ஒரு சிறு பகுதியை குத்தகைக்குக் கேட்டிருந்தார் நீலகண்டன். அவரும் நெல் அறுவடை முடிந்ததும் தருகிறேன் என்று சொல்லியிருக்க, நீலகண்டனும் அன்பிற்கினியவனும் சேர்ந்து அதில் பயறு அல்லது உளுந்து பயிரிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.

வீட்டின் திண்ணையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்த நீலகண்டனிடம், "அப்பா... கருப்பட்டிக் காபி," என்று தென்னவன் கொடுக்க, அதைக் கைநீட்டி வாங்கியவரிடம், "என்ன ஒரே யோசனை?" என்று கேட்டபடி அவன் அருகில் அமர்ந்தான்.

"நம்ம மில்லை இடிக்கிறாங்களாம்..." என்று கவலையுடன் சொல்ல,

"அது இப்ப உங்களுடையது இல்லைதானே... அப்புறம் என்ன?" என்று தென்னவன் கேட்க,

"நான் எங்க அப்பா உழைச்சு முன்னேத்தினதை அழிச்சிட்டேன்னு கவலையா இருக்குடா..." என்று வருந்தினார் நீலகண்டன்.

"அங்கத்த சொத்தை உங்க பையன் தொடமாட்டான், அப்புறம் சொத்தைச் சேர்த்து யாருக்குக் கொடுக்கப் போறீங்க? யாருக்காக அடமானம் வைச்சிங்க.. அம்மாக்காகத் தானே விடுங்க..." என்று தென்னவன் சமாதானப்படுத்த முயல,

"என்னமோ நெஞ்சு பிசையற மாதிரி இருக்குடா..." என்று நீலகண்டன் கவலைப்பட்டார்.

அப்போது வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்த அன்பிற்கினியவன், "நம்ம எல்லோரையும் விவசாய சங்கக் கூட்டத்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. எல்லோருக்கும் முறையா அழைப்பு வந்திருக்கு," என்றபடி தனது புல்லட்டிலிருந்து இறங்கினான்.

மனைவி இறந்ததிலிருந்து எந்த இடத்திற்கும் போகாமல் வீட்டிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்த தந்தையிடம், "நான் போகப்போறேன், கருப்பு மாமாவும் வராரு. நீங்களும் வீட்ல தனியா இருக்காம வாங்க. அங்க என்னதான் பேசறாங்கன்னு பார்த்துட்டு வருவோம்," என்று அழைத்தான்.

"யார் மீட்டிங் வைக்கப் போறாங்களாம்?" என்று தென்னவன் கேட்டான்.

"அந்தக் கிழவியோட மில்லை வாங்கின பார்ட்டிதான்..." என்று அன்பு சொல்லும்போதே, அவனுக்கு 'அப்பத்தா' என்று சொல்லக்கூட நாக்கு வரவில்லை என்பதை நீலகண்டன் உணர்ந்துகொண்டார்.

‘வீட்டில் மொட்டுமொட்டென அமர்ந்து உத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காமல், போய்விட்டு வருவோம்’ என்று நீலகண்டனும் சம்மதித்தார்.

***

பூந்தென்றலூரிலுள்ள விவசாயிகளையும், அதைச் சுற்றியுள்ள ஊர் விவசாயிகளையும் விவசாய சங்கத்தின் மூலம் முறையான அழைப்புக் கொடுத்து, அந்தத் திருமண மண்டபத்திற்கு வரவழைத்திருந்தாள் நிகாரிகா நிவாஸ். அனைவரும் வந்து காத்திருக்க, சரியாகப் பதினொரு மணிக்கு விவசாய சங்கத் தலைவருடன் அந்த மண்டபத்தினுள் நுழைந்தாள்.

இப்பொழுது நிகாரிகாவின் உடையில் ஒரு மாற்றம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக ஒரு நாவல் பழ நிறச் சேலையில், அளவான அலங்காரத்துடன், ஒரு ரிச் லுக்கில் வந்தாள். கண்களில் மெல்லிய புன்னகை, நிமிர்ந்த நடை என வேகமான எட்டுகளுடன் அவள் மேடையை நோக்கி விரைய, அவளுக்குப் பின்னால் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து கொண்டிருந்தார்கள்.

"வணக்கம்" என எல்லோரையும் பார்த்துக் கைகூப்பியபடி அமர்ந்து கொள்ள, விவசாயச் சங்கத் தலைவர் அவளுடைய குடும்பப் பின்னணி பற்றி விவரித்துவிட்டு, அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதை அவளே விளக்குவாள் என்று கூறி அமர்ந்தார்.

"வணக்கம், நான் நிகாரிகா நிவாஸ்" எனத் தமிழில் உரையைத் தொடங்கினாள். காலையில் அவளை மில்லுக்கு முன்னால் கண்டவர்கள், அவள் வெளிநாட்டுப் பெண் எனத் தவறாகக் கணித்திருந்தனர். ஆனால், அவளின் பிசிறில்லாதத் தமிழைக் கேட்டு ஆச்சரியத்தில் கண்ணை விரித்துப் பார்த்தார்கள்.

தன்னை அறிமுகம் செய்த பின், "நான் இங்கே வந்திருப்பது என் எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். இங்கே இருக்கும் விவசாய நல்லுள்ளங்களுக்குப் பயிர் செய்யத் தெரிந்த அளவுக்கு, அதில் எப்படி லாபம் ஈட்டலாம் என்பது தெரிவதில்லை. உங்கள் தேவைக்குப்போக மிஞ்சும் விளைச்சலை நானே கொள்முதல் செய்து கொள்கிறேன்.

அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான். எக்காரணம் கொண்டும் உங்கள் பயிர்களுக்குச் செயற்கை உரங்களையோ, பூச்சிகொல்லிகளையோ பயன்படுத்தக்கூடாது. எல்லாமே இயற்கையிலிருந்து எடுத்துதான் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு அது கடினமாக இருந்தால், விதையிலிருந்து அறுவடை வரை தேவையான எல்லாவற்றையும் நாங்கள் பொறுப்பேற்போம்," என்று சொன்னவள் சிறிது இடைவெளி விட்டாள்.

"நான் சொன்னது உங்களுக்குப் புரியவில்லை என்றால், உங்கள் கிராமத்தைச் சேர்ந்த மிஸ்டர் அன்பிற்கினியவனையும், மிஸ்டர் தென்னவனையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்," என்று அவர்களை நோக்கிக் கைகாட்டிவிட்டு அமர்ந்தாள்.

"தென்னவா, நம்மளப் பத்தியும் விசாரிச்சுட்டுதான் வந்திருக்காங்க போல" என்று அன்பிற்கினியவன் காதில் முணுமுணுக்க, நிகாரிகா தன் உதவியாளர் சரிகாவின் காதில் ஏதோ சொன்னாள். சரிகா இவர்களிடம் வந்து, "மேடம் உங்களைக் கூப்பிடுறாங்க" என்று சொன்னாள்.

"நாங்க கொஞ்சம் பேசிட்டு வரோம்" என்று அன்பிற்கினியவன் சரிகாவை அனுப்பி வைத்தான்.

தன் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த அன்பிற்கினியவனிடம், தலையைத் திருப்பி, "என்னடா?" என்று மெதுவான குரலில் கேட்டான் தென்னவன்.

"என்னமோ தப்பாத் தெரியுதுடா... உலகத்தோட முதல் பணக்காரக் குடும்பத்துப் பொண்ணு, தனக்கு லாபமே இல்லாம விவசாயிகளுக்கு நல்லது செய்யணும்னு கொடியைத் தூக்கிட்டு வர்றது நம்புற மாதிரியே இல்லை. கொஞ்சம் யோசிக்கணும்," என்றான் அன்பிற்கினியவன் சந்தேகத்துடன்.

"டேய், இன்னைக்கு இருக்கிற காலத்துல யாரும் நமக்கு உதவ முன்வர மாட்டாங்க. அப்படி ஒருத்தங்க தானா வந்து உதவும்போது, நாம அதைத் தட்டிக்கழிக்கக் கூடாதுடா" என அருகிலிருந்த நீலகண்டனோ மகனுக்குப் புத்தி சொன்னார்.

தென்னவனும் அவரோடு சேர்ந்து கொண்டு, "ஆமாடா, எனக்கும் நம்பிப் பார்க்கலாம்னுதான் தோணுது. அவங்ககிட்ட இல்லாத சொத்தா நம்மகிட்ட இருக்கு? நம்மளை ஏமாத்தி என்ன பிடுங்கப்போறாங்க?" என்றான்.

அன்பிற்கினியவனுக்கு மட்டும் அவள் மனதில் வேறு ஏதோ ஒரு பெரிய திட்டத்தை வைத்துக்கொண்டுதான் காய்களை நகர்த்துகிறாள் என்று தோன்றியது. அவளை நம்ப மனம் இடங்கொடாமல் அமைதியாகவே இருந்தான்.

"நிவாஸ் குடும்பம் கால்பதிக்காத தொழிலே இல்லைன்னு ஒருமுறை இன்டர்நெட்டுல பார்த்தேன். இப்ப விவசாயத்தையும் விட்டு வைக்கக்கூடாதுன்னு இதுல இறங்கிட்டாங்க போல!" எனத் தென்னவன் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்தான்.

பிடிப்பே இல்லாமல் இருந்த அன்பிற்கினியவன், "அதை மட்டுமா பார்த்தாய்? நிவாஸ் குடும்பத்தைப் பகைக்கிறவங்களை, தங்களோட அதிகாரத்தைப் பயன்படுத்தி உருத்தெரியாம அழிச்சிடுவாங்களாம்... அதை நீ படிக்கலையா?" என்று தென்னவனை மடக்கிக் கேட்டான்.

"டேய்... ஏண்டா எப்பவும் கண்டதையும் யோசிக்கிறாய்? வா, எதுக்குக் கூப்பிட்டாங்கன்னு கேட்டுட்டு வருவோம்," என்று தென்னவன் அவன் கையைப் பிடித்து பலவந்தமாக இழுத்தான்.

“உனக்கு எப்ப பார்த்தாலும் என் கையைப் பிடித்து இழுக்கிறதே வேலை.. பார்.. ஒருநாள் எவனாவது பார்த்திட்டு தப்பாக் கதைக்கப்போறான்” என்று கள்ளச் சிரிப்புடன் அன்பிற்கினியவன் சொல்ல,

“நான் என் பிரண்ட்டோட கையைத் தானே பிடிச்சு இழுக்கிறேன்.. பாக்கிறவனுக்கு நொள்ளக் கண்ணு என்றால் நான் ஒன்றும் செய்யமுடியாது.. இந்தக் காலத்திலே தங்கச்சியை வெளியே கூட்டிட்டுப் போனால் கூட உன் ஆளா என்று சிண்டுறாங்க.. அவங்களுகெல்லாம் நட்பின் இலக்கணமும் தெரியலை, குடும்ப பாசமும் தெரியலை அதுக்கு நான் என்ன செய்ய நீ வா” என்று சொல்லியபடி கூட்டிச் சென்றான் தென்னவன்.



அன்பிற்கினியன் மண்டபத்தைச் சுற்றிப் பார்த்தான். அங்கிருந்தவர்கள் எல்லாம் என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல் தங்களுக்குள் குழப்பமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியே மேடைக்குத் தன் பார்வையைத் திருப்பினான்.

நிகாரிகாவோ, "உங்கள் நன்மைக்கு என்று சொல்லிவிட்டேன். என் பக்கம் வர விருப்பமிருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான்" என்ற இளக்காரமானத் தோரணையில், கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி தன் கைப்பேசியில் மூழ்கியிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த விதமே அவளின் மொத்தத் திமிரையும் பறைசாற்றியது. "அங்கே பார் அந்தப் பெண்ணோட திமிரை!" என்று தென்னவனுக்குக் காட்டினான் அன்பிற்கினியவன்.

"அவங்க முதலாளி வர்க்கம்டா, அப்படித்தான் இருப்பாங்க. நாம உழைப்பாளி வர்க்கம், கொஞ்சம் வளைஞ்சுதான் போகணும்," என்று தென்னவன் அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்குச் சென்றான்.
 
Top Bottom