• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 4

ரோசி கஜன்

Administrator
Staff member
அவளோடு சரி சமமாக அமர்ந்திருந்த ஒரு சிலருக்கு அவளின் பணக்காரத்தோற்றமும் அவளின் முக பாவனையுமே அச்சமூட்ட கீழே விவசாயிகளோடு பேசும் சாக்கில் எழுந்து போய்விட்டிருந்தனர். அதனால் மேடையில் நிகாரிகா மட்டுமே தனித்து அமர்ந்திருந்தாள்.

அவளின் பாதுகாவலர்கள் கீழ்ப்படியில் யாரும் அவளை நெருங்கா வண்ணம் அரணாக அவளைப் பாதுகாத்து நின்றிருந்தவர்கள், அன்பிற்கினியவனும், தென்னவனும் மேடைப் படியில் காலை வைத்து ஏற முயற்சி செய்தபொழுது, நிகாரிகாவிடம் போகவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

அதைக் கவனித்த நிகாரிகா, "லீவ் தெம்!" என்று அதிகாரத்தோடு தன் பாதுகாப்பு ஊழியர்களுக்கு உத்தரவிட்டாள்.

அவளின் பாதுகாவலர்களுக்குக் கேட்காத தூரம் மேடையில் ஏறி மேலே வந்ததும், "இவ்வளவு நேரமும் என்ன அழகாத் தமிழ் பேசினாங்க இப்ப பார்த்தியா... இங்கிலீஷை!" என்று முணுமுணுத்தான் அன்பிற்கினியவன்.

நிகாரிகா அவர்கள் இருவரும் வருவதைக் பார்வையால் அளந்து கொண்டிருப்பதைக் கண்டு, நண்பனிடம் "கம்முனு இருடா!" என்று மெதுவாக அதட்டினான்.

“பார்த்தியா யாருக்காகவோ என்னையே அதட்டுறாய்” என்று தென்னவனிடம் சண்டை வலுக்கப் பார்க்க, தென்னவனோ நண்பனைப் பார்வையால் கண்டித்து, “டேய் அவங்க நம்மளைத்தான் பார்க்கிறாங்க.. அதனால் அமைதியாக வா” என்று அன்பிற்கினியவனுக்கு தன்மையாகவே எடுத்துக் கூறினான்.

நிகாரிகாவின் முன் சென்று மரியாதை நிமித்தமாகக் கைகூப்பி, "வணக்கம்" என்றான் தென்னவன்.

அன்பிற்கினியவன் வேண்டா வெறுப்பாகக் கூட வணக்கம் சொல்லாமல் அசட்டையாக நிற்பதைக் கண்ட நிகாரிகா, "வணக்கம்" என்று மிக இறுகிய குரலில் தென்னவனைப் பார்த்து மட்டுமே பதில் சொன்னவள்,

அவளுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த வெறுமையான நாற்காலிகளைக் காட்டி, "இதைத் தூக்கி முன்னால் போட்டுட்டு எனக்கு முன்னாடி உட்காருங்க. அப்பதான் பேசுறதுக்கு வசதியா இருக்கும்" என்றாள்.

நிகாரிகா சொன்னது போலவே ஒரு நாற்காலியை எடுத்துப் அவளுக்கு முன்னால் போட்டு அமர்ந்துகொண்ட தென்னவனுக்கோ தான் உலகத்தின் முதல் பணக்காரரின் வாரிசுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறேன் என்பதையே நம்பமுடியாமல் உள்ளங்கை வியர்க்க தொடங்கியது.

ஆனால் அன்பிற்கினியனோ, 'இவள் பெரிய மகாராணி... இவள் சொன்னதைக் கேட்டு அப்படியே கும்பிடு போட்டு, சரி எஜமானின்னு கேட்கணுமா?' என்று நினைத்தபடி, நாற்காலியை நகர்த்தாமல் அப்படியே நின்றான்.

நிகாரிகா தன் ஒற்றைப் புருவத்தை மட்டும் லேசாக உயர்த்தி, 'என்ன விஷயம்?' என்பது போன்றதொரு கூர்மையான பார்வையை அவன் மீது வீசினாள்.

தன்னுடைய வலக்கையைத் தூக்கி அவளிடம் காட்டியவன், "கையில சுளுக்கு மேடம்... கையைத் தூக்கி நாற்காலியைப் போட முடியாது" என்று ஒரு பொய்யை உண்மை போல அடித்துவிட்டவன், வலதுகையில் வலியிருப்பது போல வேறு நடிக்க,

அவன் பொய் சொல்கிறான் என்று தெரிந்தாலும், அதைத் தான் கண்டு கொள்ளவில்லை என்று காட்டிக் கொண்டபடி, "ராபர்ட், இந்த சாருக்கு நாற்காலியை எடுத்துப் போடுங்க" என்று தன் பாதுகாவலனுக்குக் கட்டளையிட்டாள் நிகாரிகா.

அந்தப் பாதுகாவலன் நாற்காலியைத் தூக்கிப் போட்ட பின்னரே, அதில் கெத்தாக அமர்ந்த அன்பிற்கினியன், "எங்களை எதுக்கு வரச் சொன்னீங்க? நிறையச் சோலி கிடக்கு, அதைப் பார்க்கப் போகணும்" என்று தெனாவெட்டாகக் கேட்டான்.

அவனின் அந்தத் தெனாவெட்டைத் தகர்த்தெறிய அவளுக்குச் சில நொடிகள் போதும் என்றாலும், அவனிடம் ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.

அதனால் கோபத்தை அடக்கிக்கொண்டு, "இது உங்களோட ஊர். நீங்க எனக்கும் விவசாயிகளுக்கும் இடையில ஒரு மீடியேட்டரா இருந்தா என் வேலை சுலபமா முடியும். அதனால், உங்களை எனக்குக் கீழ வேலைக்கு நியமிக்க விரும்புறேன்" என்றாள் நிகாரிகா.

‘நிகாரிகாவிடம் வேலையா?’ என்று தென்னவன் பிரமிப்பாய் அவளை நோக்க,

"எங்களை மாதிரி எத்தனையோ பேர் இருப்பாங்களே... எங்களை மட்டும் ஏன் செலக்ட் பண்ணீங்க?" என்று அன்பிற்கினியவன் அவளை மடக்கிக் கேள்வி கேட்டான்.

நிகாரிகா அசராமல், "உங்களுக்கு இயற்கை விவசாயத்துல நிறைய ஆர்வம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். ஒரு வேலையைச் சம்பளத்துக்காகச் செய்யுறவனை விட, ஆத்மார்த்தமா செய்யுறவன் என் பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. உங்களோட காலேஜ்லயும் உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பேர். அதுவும் ரெண்டு பேரும் கோல்டு மெடல் வாங்கிப் பாஸ் பண்ணியிருக்கீங்க. அதனாலதான் இந்தச் சலுகை!" என்று அவர்களைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விசாரித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்னாள்.

அவளிடம் வேலைக்குப் போய்த் தான் தங்கள் ஊர்மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்பது இல்லையே… இப்பொழுதே அன்பிற்கினியவனும் அவனுமாக, தங்கள் ஊர் மக்களிடம் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு விவசாயிகள் லாபம் போதாது. விவசாயம் செய்யவே நிறைய காசு செலவாகும் என்று தங்கள் பிடித்தமின்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியிருக்க பணத்தில் உயர்ந்தவள் வந்து சொன்னால் மட்டும் கேட்டுக் கொள்ளவா போகிறார்கள், அவளோடு தேவையில்லாமல் தாங்களும் ஏன் நேரத்தை விரயம் பண்ணனும் என எண்ணி "நாங்க கொஞ்சம் யோசிச்சுட்டுச் சொல்லட்டுமா?" என்று தென்னவன் கேட்க,

"வேலை ஒப்பந்தம் எப்படி இருக்கும்?" என்று குறுக்கே கேள்வியை எழுப்பினான் அன்பிற்கினியன்.

“இவன் என்ன இங்கே வேலைக்கு வர ஆசைப்படுகிறானோ” என்று தென்னவன் அன்பிற்கினியவனைப் பார்த்துவைக்க, அன்பிற்கினியவனின் முகத்தில் அப்படி ஒரு பாவமும் தெரியாமல் முகம் மிகவும் நிர்மூலமாகத் தெரிந்தது.

‘வேலைக்கு வர முதலே சம்பளத்தை அறிய ஆசைப்படுகிறான்’ என நினைத்த நிகாரிகா "நீங்க எதிர்பார்க்கிறதை விடச் சம்பளம் அதிகமாவே தருவேன், டோண்ட் வொரி " என்று அசால்ட்டாகத் தோளைக் குலுக்கினாள்.

‘யாருக்கு வேணும் உன் காசு’ என்று மனதுக்குள் குமுறிய அன்பிற்கினியவன், வெளியே நல்லபிள்ளையாக "இல்ல... எவ்வளவு காலத்துக்கு வேலை?" என்று அன்பிற்கினியவன் விடாமல் கேட்க, அவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

அவளின் பார்வையைச் சட்டைசெய்யாமல், "உங்களோட தொழில் ரீதியான ஒப்பந்தம் எல்லாம் ரொம்பக் கடுமையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்ககிட்ட வேலைக்கு ஒருத்தர் சேர்ந்தா, நீங்க அவரை விடுவிக்கிற வரைக்கும் அங்கதான் வேலை செய்யணும்னு ரூல்ஸ் இருக்குமாமே?" என்று இழுத்தான்.

அவன் தங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்று மெச்சிய பார்வை பார்த்த நிகாரிகாவிற்கு தன்னை பற்றி மட்டும் அறிந்து வைக்கத் தவறிவிட்டானே.. அதுவும் நல்லது தான் என மனதுக்குள் சிரித்து,வெளியே "வேலை தெரியாதவங்களுக்கு நாங்க ட்ரெய்னிங் கொடுத்து, அனுபவம் மிக்க ஆளா மாத்தினதும், இன்னொரு இடத்துல நல்ல ஆஃபர் வந்தா எங்களை விட்டுட்டுப் போயிடுறாங்க. அதுக்காகத்தான் சில நேரங்கள்ல கடினமான ஒப்பந்தம் போட வேண்டியிருக்கு. ஆனா, உங்ககிட்ட நான் அப்படி எந்த ஒப்பந்தமும் போடப்போறதில்லை. உங்களுக்கு எப்ப என்கிட்ட வேலை செய்யப் பிடிக்கலையோ, அப்பவே நீங்க போகலாம்" என்றாள்.

"நான் என் அப்பாகிட்ட கலந்து பேசாம எந்த முடிவும் எடுக்க மாட்டேன். அவர்கிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்" என்று புழுகினான் அன்பிற்கினியவன்.

“நான் உங்களை வைத்து உங்க விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்று தான் இங்கே வந்திருக்கிறேன்.. நீங்க என்கூட கைகோர்த்தால்.. அவங்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும். நான் இதைக் காசு சம்பதிக்கும் நோக்கில் ஆரம்பிக்கலை. எனக்கும் நம்ம நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு ஒரு சின்னச் சலுகையாகவே இதை மேற்க்கொள்ள விரும்புகிறேன். அவங்களுக்குத் தேவையான அத்தனை செலவையும் என் கம்பனி ஏத்துக்கும்” என்று நிகாரிகா அன்பிற்கினியவனையும், தென்னவனையும் சம்மதிக்க வைக்கப் வார்த்தைகளை சுழட்டி போட்டு அவர்களை தன் பக்கம் இழுக்க முயற்சித்தாள்.

அன்பிற்கினியனோ கழுவுற மீனில் நழுவுற மீனாக, “எங்களுக்கும் உங்ககிட்ட வேலை செய்ய ஒகேதான் ஆனால்.. என் அப்பா சொல்லனும்.. நான் அவர் சொல்லுறதை அப்படியே கேட்கிற நல்ல பிள்ளை” என்றான்.

தென்னவன் ‘நீயா?’ என்பது போல அன்பிற்கினியவனைக் கிண்டலாகப் பார்க்க, ‘பின்னே... வேற யாரு?’ என்பது போல நண்பனைத் கெத்தாகப் பார்த்தான் அன்பிற்கினியவன்.

அவர்கள் இருவரையும் எப்படியும் இன்றே சம்மதிக்க வைத்துவிடலாம் என்று எண்ணியிருந்த நிகாரிகாவிற்கு, அன்பிற்கினியவனின் பேச்சு சிறு சறுக்கலாகத் தோன்றியது. ஆனாலும், ‘அவர்கள் தன்னிடம் தானாக வந்து சேருவார்கள்... அப்படியே வராவிட்டாலும், வரவைக்கத் தனக்குத் தெரியாதா என்ன?’ என்ற கர்வத்தோடு கூடிய தன்னம்பிக்கை அவள் முகத்தில் தோன்ற,

"நாளைக்கு உங்க கிராமத்து நிலத்தை அளக்குற வேலை இருக்கு. அப்போ உங்க முடிவைச் சொல்லுங்க" என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, உதவியாளர் சரிகா மாதுளைச் சாறு அடங்கிய தட்டைக் கொண்டு வந்து நிகாரிகாவின் முன் நீட்டினாள்.

நிகாரிகாவோ அதில் தெரிந்த சிவப்பு நிறத்தைக் கண்டே முகத்தைத் சுழித்து, "எனக்கு மாதுளை ஜூஸ் பிடிக்காது சரிகா. ஆரஞ்சு இல்லன்னா மாம்பழ ஜூஸ் இருந்தா கொண்டு வாங்க" என்று பணித்தாள்

அந்தத் தட்டை தன் பக்கமாக நகர்த்திய சரிகா, நிகாரிகாவிடம், "சாரி மேடம்... இது ஃப்ரெஷ் ஜூஸ்னு கொடுத்தாங்க, அதான் கொண்டு வந்தேன்" என்று மன்னிப்பைக் கோரினாள்.

அவள் வேலைக்கு சேர்ந்து சில நாட்களே ஆகியிருக்க, தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைப் பற்றி அவளுக்குத் தெரிந்திருக்காது என்பதைப் புரிந்து கொண்ட நிகாரிகா,"அது சாருக்குப் ரொம்பப் பிடிக்கும், சாருக்கே கொடுங்க" என்று அன்பிற்கினியவனைக் கைகாட்டினாள் நிகாரிகா.

சரிகாவும் அந்த மாதுளைச் சாறு அடங்கிய தட்டை அன்பிற்கினியனிடம் நீட்டினாள். நிகாரிகாவை ‘நம்பலாமா? வேண்டாமா?’ என்ற ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தவன், அவர்கள் பேசியதைக் கவனிக்காமல், தன் முன் மாதுளை சாறு நீட்டப்பட்டதும், அதன் மேல் அலாதி பிரியமுள்ள அவன், தன்னை மறந்து "ஓ... தேங்க்ஸ்!" என்று வாங்கிக்கொண்டான்.

இதைக் கண்ட தென்னவன், 'இவனுக்கு என்ன பிடிக்கும்ங்கிறதைக்கூடத் துல்லியமா விசாரிச்சு வச்சிருக்காங்களே!' என்று மனதிற்குள் வியந்து போனான்.

நிகாரிகாவே தென்னவனுக்கும் பிரத்தியேகமாக தோடம்பழச் சாற்றை வருவித்துக் கொடுக்க, தென்னவனின் கண்களோ வியப்பில் விரிந்து கொண்டபடி அந்த தோடம்பழச் சாற்றை எடுத்துக் கொண்டது.

நீலகண்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தென்னவன் கீழே பார்க்க அவரும் ஏதோ ஒரு கண்ணாடிக் குவளையைக் கையில் வைத்துக் குடித்தபடி, கருப்பண்ணாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

தென்னவனின் பார்வை நீலகண்டனை நோக்கிச் சென்று மீள்வதைக் கவனித்த நிகாரிகா, தன் தோடம்பழச் சாறை ஒரு மிடறு அருந்தியபடி,

"உங்களுக்கு உங்க நண்பனோட அப்பா மேல எப்பவுமே ஒரு தனிப் பாசம் உண்டு போல! கடந்த எட்டு வருஷமா இவருக்கும் இவரோட அப்பாவுக்கும் நடுவுல ஒரு பாலமா இருந்து நீங்கதான் எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்ல நண்பன் அமையறதுங்கிறது ஒரு வரம்... அது உங்க ரெண்டு பேருக்கும் கிடைச்சிருக்கு!" என்றாள் ஒரு மெல்லிய புன்னகையுடன்.

அன்பிற்கினியவன் தன்னுடைய மாதுளைச் சாறைக் குடித்து முடித்த பின், சம்பிரதாயமாக "மேடம்... நாங்க நாளைக்குச் சந்திக்கலாம்" என்று நாற்காலியிலிருந்து எழுந்தான்.

அவர்கள் இருவரும் இருக்கையிலிருந்து எழ முயற்சிக்கும் பொழுதே, "எனக்கு நீங்க இன்னுமொரு உதவியும் பண்ணணும்" என்று வேண்டுகோள் விடுத்தாள் நிகாரிகா.

“என்ன மேடம்?" என்று அன்பிற்கினியவன் மரியாதைக்காகக் கேட்க,

"எனக்கு இங்கே சுற்றுவட்டாரத்துல ஒரு பழைய வீடு வேணும். உங்களுக்குத் தெரிஞ்ச யாருடைய வீடாவது விற்பனைக்கு வருதான்னு பார்த்துச் சொல்லுங்க" என்று சற்றுத் தாழ்வான குரலிலேயே கேட்டாள் நிகாரிகா.

தாங்கள் தேடிக்கொடுக்கும் வீட்டிற்கும் நீலகண்டனின் மில்லுக்கு ஏற்பட்ட அதே கதி உண்டாகுமோ எனும் சந்தேகத்துடனேயே, "பழைய வீடுன்னா... இடிச்சிட்டுப் புதுசா கட்டவா மேடம்?" என்று மெல்லக் கேட்டான்.

"நோ! என் அம்மாவுக்குப் பாரம்பரியம்னா ரொம்பப் பிடிக்கும். அப்படி ஒரு வீட்டை வேண்டி, நான் ரெனோவேட் மட்டும் தான் பண்ணுவேன். அம்மாவுக்கு முற்றம், திண்ணை அப்படியிருந்தா ரொம்பப் பிடிக்கும். அந்த மாதிரிப் பாருங்க" என்றாள்.

"நீங்க நம்ம ஊர்லயே தங்கப் போறீங்களா?" என்று தென்னவன் ஆச்சரியமாகக் கேட்டான்.

"எங்க வேலை நடக்குதோ அங்கே முதலாளியும் இருந்தால்தானே சரியாகும்? இல்லைன்னா உங்களோட ஃப்ரெண்டோட அப்பா மாதிரி, தொழிலைக் கவனிக்காம இழுத்து மூடிட்டுப் போற நிலைமை எனக்கும் வந்திடும்" என்று நக்கலாகச் சொன்னாள்.

தன் தந்தையை பேசியது பிடிக்காத அன்பிற்கினியவன் "பார்க்கிறோம் மேடம்" என்று கடினமான குரலில் சொல்லிவிட்டு, நண்பனையும் இழுத்துக்கொண்டு கீழே இறங்கிச் சென்றான்.

அன்பிற்கினியவன் நடந்து செல்வதையே, தன் ஆழ்ந்த பார்வையால் தொடர்ந்தாள் நிகாரிகா.
 
Top Bottom