• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 6

ரோசி கஜன்

Administrator
Staff member
அடுத்த நாள் காலை. அந்த பழைய மில்லை இடித்துத் தரைமட்டமாக்கிய நிலத்தில், புதிய கட்டிடம் எழுப்புவதற்காக அளவீடுகளை எடுக்கும் பணியில் ஆட்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

நிகாரிகா இன்னும் வராததால், ஊர் மக்கள் அந்த மொட்டை நிலத்தைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நிலத்துக்கு நடுவே நீலகண்டன், அன்பிற்கினியவன் மற்றும் தென்னவன் ஆகிய மூவரும் ஒரு வித உணர்ச்சிக் குவியலோடு நின்று கொண்டு இருந்தார்கள்.

தரைமட்டமாக்கப்பட்டிருந்த அந்த இடத்தைப் பார்த்தபோது நீலகண்டனின் உடல் ஒருகணம் துடித்தது. தன் தந்தையின் பல வருட உழைப்பு மண்ணோடு மண்ணாகிக் கலந்து போய் விட்டதைக் கண்டு அவர் உள்ளம் குமுறியது.

சிறிது நேரத்தில், நேற்று போலவே தன் அதிகாரப் பட்டாளத்துடன் வந்து இறங்கினாள் நிகாரிகா. கார் கதவு திறந்ததும் வெளிப்பட்ட அவளது கூர்மையான பார்வை, நிலத்தின் நடுவே தடையாக நின்றிருந்த அந்த மூவர் மீதும் படிந்தது.

காரிலிருந்து இறங்கிய நிகாரிகாவைக் கண்டு, நில அளவீடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த உதயகுமார் அவளிடம் ஒடிவந்தார்.

“எதுக்கு இவ்வளவு பேரை உள்ளே அனுமதிச்சீங்க?” என்று உதயகுமாரிடம் சீறியவளின் பார்வை ஊர்மக்களிடம் இல்லாமல் நீலகண்டன் மேலேயே அதிகமாக பதிந்திருந்தது.

அவளது அந்தக் குரலில் இருந்த கோபம் உதயகுமாரை பயம் கொள்ள வைக்க, “என்னால கட்டுப்படுத்த முடியலை மேடம்...” என்று உதயகுமார் பதற்றத்தில் தடுமாற, தன் பாதுகாப்புப் படையில் இருந்த வீரர்களிடம் அங்கே சுற்றி நிற்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு சைகை காட்டினாள்.

ஆஜானுபாகுவான தோற்றமும், கறாரான பார்வையும் கொண்ட அந்தப் பாதுகாப்பு வீரர்களைக் கண்டதுமே ஊர்மக்கள் ஒருவித அச்சத்தில் அந்த நிலத்தை விட்டு வெளியேற, அந்த நிலத்தின் நடுவிலேயே கல்லாய் சமைந்து நின்று போயிருந்த நீலகண்டனிடம் நிகாரிகாவின் பார்வை மீண்டும் செல்ல,

“மேடம்... அவர்தான் இந்த இடத்தோட முன்னாள் உரிமையாளர்" என்று உதயகுமார் தயங்கியபடி மென்று விழுங்கினார்.
“அது கடந்த காலம் மிஸ்டர் குமார்! இப்போ இது என்னோட சொத்து. அவங்களை முதல்ல இங்கிருந்து கிளியர் பண்ணுங்க!” என்று தயவு தட்சண்யம் பார்க்காது கட்டளையிட்டாள்.

அருகிலிருந்த சரிகாவோ, “மேடம், இங்கே இருக்கிற விவசாயிகள்கிட்ட நேற்று விசாரிச்சேன். அவர் மனைவி இறந்து கொஞ்ச நாள்தான் ஆகுதாம்...” என்று இரக்கத்துடன் இழுக்க,

அவர்கள் மூவரும் விடியற்காலையில் என்ன சாப்பிட்டார்கள் என்பது வரை அத்தனைச் செய்திகளையும் தன் கைக்குள் வைத்திருப்பவளுக்கு, இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. ஆனாலும், சரிகாவின் பார்வை அங்கே நின்றிருந்த நீலகண்டனைத் தாண்டி, அன்பிற்கினியவனிடம் ஒருவித அசுசையுடன் படிவதைக் கண்டதும், நிகாரிகாவின் முகம் சட்டெனக் கல்லாய் மாற,

“பிறக்கிறவங்க எல்லாரும் சாகத்தான் வேணும் சரிகா. அதுக்காக பிசினஸை நிறுத்த முடியாது" என்று கல் நெஞ்சத்தோடு உரைத்தவள், தொடர்ந்து, “நீங்க போய் அவங்களைக் கிளம்பச் சொல்றீங்களா... இல்லை என் செக்யூரிட்டியை வச்சு துரத்தி விடவா?” என்று துளியும் தயவுதாட்சண்யமின்றிச் சீறினாள் நிகாரிகா.

சரிகாவும் உதயகுமாரும் தயங்கி நிற்க, “என்னோட ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. இங்கே அளவீடுகள் முடிந்ததும் நான் என் அண்ணாவோட லஞ்சுக்குப் போகணும், அதுக்கு அப்புறம் எங்க கார் சோரூம் திறப்புவிழா இருக்கு. அதனால் இங்கே லேட்டானால் என் நாளே சொதப்பும் ” என்று கூறிவிட்டு அவர்களை நோக்கி நிகாரிகாவே நடைபோட்டாள்.

அவள் ஏதும் கடினமாகப் பேசிவிடுவாள் என்று அஞ்சிய சரிகா, “மேடம், நானே சொல்லிடுறேன்" என்று நீலகண்டன் இருக்குமிடம் நோக்கி ஓடினாள்.

அங்கே திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த உதயகுமாரைக் கண்ட நிகாரிகா, “நாளைக்கு அந்த முருகன் கோயிலுக்குப் போகணும்... அதுக்கு நேரமிருக்கா?” என்று தன் அன்றாடப் பணி அட்டவணையை அவரிடம் விசாரித்தாள்.

நிகாரிகாவின் அன்றாட அட்டவணையைச் பரிசோதித்த உதயகுமார், “நேரமிருக்கு மேடம், தாராளமாப் போகலாம்" என்றார். கோயிலுக்குப் போவதென்றால் நிகாரிகா அசைவம் உண்ணமாட்டாள் என்பதை நன்கு அறிந்திருந்த உதயகுமார், மேலும் “அப்படியே நாளைக்கு உங்களுக்குச் சைவ உணவு ஏற்பாடு செய்யச் சொல்லிடுறேன் மேடம்" என்றார் பவ்யமாக.

“சரி" என்று தலையசைத்தவள், “நாம வாங்கப்போற மற்ற வயல்களையும் நாளைக்குப் பார்க்கணும், அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. இங்கே விவசாயிகளை விட, விவசாயம் படிச்ச ஆட்கள் இருந்தா எத்தனை பேர் வேணும்னாலும் வேலைக்கு எடுங்க" என்று அடுத்தடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தாள்.

சரிகா வந்து நிலத்தை விட்டு வெளியேறுமாறு கெஞ்சிக் கேட்க, நீலகண்டன் கனத்த இதயத்துடன் அந்த நிலத்திலிருந்து நகரத் தொடங்கினார். தங்களால் அங்கே வேலை தடைபடுவதை உணர்ந்த அன்பிற்கினியவன், தன் தந்தையைத் தனியே நடக்க விடவில்லை. ஆதரவாக அவரின் கையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு போய், நிலத்துக்கு வெளியே ஒரு நிழலில் அவரை அமரவைத்துவிட்டு மீண்டும் நிகாரிகாவிடம் வந்தான்.

அவன் அருகில் தென்னவனும் வந்து நிற்க, தூரத்தில் இருந்தாலும் தரைமட்டமான அந்த நிலத்தைப் பார்த்துத் தவித்துக் கொண்டிருந்த நீலகண்டனைச் சுட்டிக்காட்டிய நிகாரிகா, “எதுக்கு அவரை இங்கே கூட்டிட்டு வந்தீங்க? நான் உங்க ரெண்டு பேரைத்தானே வரச் சொன்னேன்?” என்று தென்னவனிடம் கேட்டாள்.

தென்னவன் ஏதோ விளக்கம் சொல்ல முயல, அவனைத் தடுத்த நிகாரிகா, “உங்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியலையா? இந்த இடத்துல அவரோட அப்பாவோட நினைவுகள் நிறைய இருக்கும். அதுவும் அவர் மனைவி இறந்த துக்கத்துல இருக்கிறப்போ எதுக்கு அவரை இன்னும் வேதனைப்படுத்துறீங்க? முதல்ல அவரைக் கூட்டிட்டுப் போய் அந்த கிழக்கு வீட்டுல விட்டுட்டு வாங்க. நேத்து அவர் மருமகனும் தங்கச்சியும் வீட்டுக்கு வந்ததா எனக்குத் தகவல் கிடைச்சது... அவங்களை இவருக்குத் துணையா இருக்கச் சொல்லுங்க" என்றாள் படபடவென்று.

அவளது பேச்சில் தெறித்த அந்தத் திடீர் அக்கறையும், நீலகண்டனின் குடும்பத்தைப் பற்றி அவள் விரல் நுனியில் வைத்திருக்கும் தகவல்களும் சரிகாவைத் திகைக்க வைத்தது. ஆனால் அன்பிற்கினியவனோ, 'யாரோ... யாருக்கோ வந்த விருந்தோ' என்பது போல எவ்விதச் சலனமும் இன்றி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்பிற்கினியவனை நேருக்கு நேராக ஏறிட்டுப் பார்த்தாள் நிகாரிகா. அவனது கண்கள் காட்டிய அந்தப் புரியாத பாவனையும், எதற்கும் அசையாத நிதானமும் அவளை ஒரு கணம் யோசிக்க வைக்க, சட்டெனத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், “இன்னைக்குச் சூரியகாந்தி விதைகளைப் பதப்படுத்தி, அதை எப்படிப் புரதச் சத்து மிகுந்த உணவா மாத்துறதுங்கிற முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு... அதுக்கு நீங்க கண்டிப்பா வரணும்" என்று ஒரு கட்டளையைப் பிறப்பிப்பது போலவே கூறினாள்.

அவனிடம் அதுக்கும் பதிலில்லாததைக் கண்டு, தென்னவனைப் பார்க்க “சரி மேடம்..” என்றான் அவன்.

அவர்களிடம் பேசிவிட்டு பார்வையைச் சுழற்றியவள், தரைமட்டமாகக் கிடந்த அந்தச் செம்மண் பூமியையே ஒருவித ஏக்கம் கலந்த வலியுடன் பார்த்துக் கொண்டிருந்த நீலகண்டனின் மேல் நிலைத்தன.

தளர்ந்த தோள்களும், சுருங்கிய முகத்தில் தேங்கி நின்ற வேதனையும் நிகாரிகாவின் இரும்பான மனதை ஒருகணம் சுண்டியிழுத்துச் சங்கடப்படுத்தியது.

சட்டெனத் தன் குரலை மாற்றிக் கொண்டவள் சரிகாவிடம் திரும்பி, “சரிகா, அவருக்கு எங்கேயாவது கருப்பட்டிக் காபி கிடைச்சா வாங்கிக் கொடுங்க" என்ற அவளின் குரலில் இதுவரை இல்லாத ஒரு மென்மை இழையோடியது.

“புதிய ஊரில் நான் எங்கே போய் கருப்பட்டிக் காபியைத் தேடுவேன்?” என்று சரிகா தலையைப் பிடித்துக் கொள்ள, அவளின் நிலையைப் புரிந்தவள் போல “இன்னும் செல்வம் அண்ணாவோட டீ கடை இருக்கா?” என்று தென்னவனிடம் கேட்டாள் நிகாரிகா.

அவளின் கேள்வியே தென்னவனை திகைப்பில் ஆழ்த்த, “இருக்கு" என்று சொல்ல, “நேரே போய் வலப்பக்கம் திரும்பு.. அங்கே சின்னதாக செல்வம் தேநீர் விருந்து என்று ஒரு கடையிருக்கும்”என அந்த தேநீர்க் கடைக்கு வழி சொல்ல, சரிகாவும் உதயகுமாரைக் துணைக்கு கூட்டிக் கொண்டு சென்றாள்.

அங்கே அளவுகள் எடுப்பதில் ஏதோ பிரச்சனை எனக்கண்டு, அந்த இடம் நோக்கி நிகாரிகா விரைய,

“என்னடா நடக்குது இங்கே?” என்று தென்னவன் திகைப்புடன் அன்பிற்கினியவனிடம கேட்க, அவனிடம் ஒரு மர்மமான புன்னகையைச் சிந்திய அன்பிற்கினியவன் நிகாரிகாவைத் தொடர்ந்து செல்ல,

"ஆத்தி... எல்லாமே ஒரு திணுசாத் திரியுதே!" என்று மனதுக்குள் பயந்த தென்னவன், அங்கே தனியே அமர்ந்திருந்த நீலகண்டனிடம் சென்று பாதுகாப்பாக நின்றுகொண்டான். அங்கே சேலையில் கம்பீரமாக நின்றபடி ஆட்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த நிகாரிகாவைத் தென்னவன் பெரும் யோசனையுடன் பார்த்தான்.

அப்போது அன்பிற்கினியவனுடன் நிகாரிகாவும் அங்கே வர, தந்தையை நெருங்கிய அன்பிற்கினியவன், "அப்பா, இந்த நிலத்தோட தாய்ப்பத்திரம் எங்கே?" என்று கேட்டான்.

"என்னாச்சுப்பா?" என்று நீலகண்டன் பதற்றமாக வினவினார்.

“நீங்க பத்திரத்துல எழுதியிருக்கிற காணியோட அளவும், இப்போ இவங்க அளந்து பார்த்த காணியோட அளவும் வித்தியாசமா இருக்குப்பா" என்று அன்பிற்கினியவன் விளக்கினான்.

"முந்தியெல்லாம் எல்லை மரத்தை வச்சுத்தானே கணக்கு பண்ணுவோம்... இப்போ இருக்கிற மாதிரி சரியா அளக்க முடியாது. அதனாலதான் சின்ன வித்தியாசம் இருக்கலாம். இதைச் சுத்தி இருக்கிறதும் நம்ம இடம்தானே, அதனால மத்த இடத்திலிருந்தும் சேர்த்து எடுக்கச் சொல்லுங்க" என்று நீலகண்டன் எதார்த்தமாகச் சொல்ல,

"அப்பா... அந்தச் சுத்தி இருக்கிற இடம் உங்ம்மாபேர்ல இருக்கு" என்றான் யோசனையுடன்.

நிகாரிகாவின் மனதில் புதிய திட்டமொன்று உருவாக அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சரி, நான் என்ன செய்யணும்னு பார்க்கிறேன்...” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் சென்றதும், “எவ்வளவுடா குறையுது?” என்று நீலகண்டன் கவலையுடன் கேட்டார்.

“ஒரு கால் பரப்புக்குக் கிட்டக் குறையுதுப்பா...” என்று அன்பிற்கினியவன் சொல்ல,

நீலகண்டன் தன் நிலத்தை இதற்கு முன் அளந்து பார்க்க வேண்டிய கட்டாயம் வராததால், அளவு சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே விட்டுவிட்டார். வங்கி அதிகாரிகளும் நீலகண்டனின் நேர்மையைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால், பெரிய அளவில் சோதனைகள் இன்றி நிலத்தை அப்படியே நிகாரிகாவிடம் கைமாற்றிவிட்டார்கள்.

ஆனால், இப்போது உண்மை தெரிந்ததும் தன் நேர்மைக்கு ஏதோ பெரிய களங்கம் வந்துவிட்டது போல் அவர் துடித்து, "அச்சோ... நாம ஏதோ அவங்களை ஏமாத்திட்டோம்னு இல்ல அந்தப் பிள்ளை இப்ப நினைக்கப்போகுது!" என்று நீலகண்டன் மிகுந்த சங்கடத்தோடு புலம்பினார்.

“அப்பாவுக்கு அந்தக் காப்பியை வாங்கிக் கொடுத்திட்டு நாம இங்கிருந்து கிளம்புவோம்" என்றான் அன்பிற்கினியவன்.

“ஏன்டா?” என்று தென்னவன் கேட்க, “நடக்கிறது எதுவும் நல்லதுக்கில்லை... இது எதுவரைக்கும் போகுதுன்னு பார்ப்போம்" என்று அழுத்தமாகச் சொன்னான் அன்பிற்கினியவன்.

தென்னவனுக்குப் புரியாமல் பார்க்க"ஒரு நாள் உனக்கும் புரியும் தென்னவா... அப்போ எல்லாமே நம்ம கையை விட்டுப் போயிருக்கும்" என்றான் அன்பிற்கினியவன்.

“அவங்களால் நம்ம விவசாயிகளுக்கு ஏதும் பிரச்சனை வருமா?” என்று தென்னவன் அச்சத்துடன் கேட்க, அன்பிற்கினியவன் மெதுவாகத் தலையசைத்தான். “இல்லை... அவங்களோட இலக்கு விவசாயிகள் இல்லை. நானும் என் குடும்பமும்தான்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் அன்பிற்கினியவன்.

அன்பிற்கினியவன் தன் தந்தை நீலகண்டனைப் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பினான். அங்கே, அவளுக்காகவே பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஏசி வசதி கொண்ட காரவானில் அமர்ந்தபடி, வெளியே வேலைகள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிகாரிகா.

திரும்பி வந்த அன்பிற்கினியவனைக் கண்டதும் நிகாரிகா, "இன்னும் சில மணி நேரத்துல சிமெண்ட் லோடு வந்திடும். அதை எங்கே பத்திரப்படுத்துறது?" என்று கேட்டாள்.

அந்த வெட்ட வெளியில் எப்படிப் பத்திரப்படுத்த முடியும்? தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என மனதிற்குள் எண்ணியபடியே, "எத்தனை மூட்டை?" என்று கேட்டான் அன்பிற்கினியவன்.

"இப்போதைக்கு ஒரு ஐந்நூறு மூட்டை வரும்" என்று நிகாரிகா சாதாரணமாகச் சொன்னாள். அந்த எண்ணிக்கையைக் கேட்டதும் அவன் ஒரு நிமிடம் யோசித்தான். பின்னர், "எனக்குத் தெரிஞ்சு இங்கே டெண்ட் போட்டு வைக்கிறதுதான் பாதுகாப்பு. எல்லாப் பக்கமும் தார்ப்பாய் போட்டு மூடணும்" என்றான்.

"களவுப் பயம் இருக்கேடா?" என்று தென்னவன் மெல்லக் கேட்க, நிகாரிகா தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, "எனக்கும் பாதுகாப்புதான் முக்கியம். இந்த ஊர்ல யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியாது" என்று அவனை ஒரு தீர்க்கமான பார்வையால் அளவெடுத்தாள்.

அன்பிற்கினியவன் லேசாகப் புன்னகைத்து "என்னை நம்புங்க மேடம்.. நான் இங்க எங்க ஊர் இளைஞர்களைக் காவலுக்கு போடுறேன்" என்றான்.

தென்னவன் இடையில் புகுந்து, "ஏண்டா... இவ்வளவு சிமெண்ட் வருதே, அப்போ மில் வேலை இன்னைக்கே ஆரம்பிச்சிடுமா?" என்று ஆர்வமாகக் கேட்டான்.

நிகாரிகா அவனைப் பொருட்படுத்தாமல் அன்பிற்கினியவனிடம், "மீட்டிங்கிற்கு நேரமாகுது. நீங்க கிளம்புங்க. உங்களுக்காக ஒரு கார் வரும்" என்று சொல்லிவிட்டுத் தன் மடிக்கணினியில் மூழ்கினாள்.

அன்பிற்கினியவன் அங்கிருந்து நகர முற்பட்டபோது, அவள் மீண்டும் நிமிர்ந்து பார்த்து, "ஒரே ஒரு விஷயம் அன்பிற்கினியவன்... அங்கே நீங்க வெறும் வேடிக்கை பார்க்க வரல. அந்தச் சூரியகாந்தித் திட்டத்தோட தரக்கட்டுப்பாட்டை நீங்கதான் கவனிக்கப் போறீங்க" என்று ஒரு பெரிய பொறுப்பை அவன் தலையில் ஏற்றினாள்.

"அப்பாடா... நான் தப்பிச்சேன்!" என்று தென்னவன் நிம்மதிப் பெருமூச்சு விட, "இந்த மில்லில் ஒரு குண்டூசி காணாமல் போனால் கூட நீங்கதான் பொறுப்பு" என்று அவன் தலையிலும் ஒரு பெரிய பணியைச் சுமத்தினாள்.

"நானே களவாடிக்கொண்டு போனால் என்ன செய்வீங்க?" என்று தென்னவன் துடுக்காகக் கேட்க, "அதுக்கு உங்களுக்கு முகராசியில்லை" என்று அவள் சொல்லி முடித்து, மடிக்கணினிக்குள் மீண்டும் பார்வையைச் செலுத்தவும் சரியாக இருந்தது.

தென்னவன் திரும்ப பேச எத்தனிக்க அவனின் கையைப் பிடித்து அழுத்தித் தடுத்தவன் போவோம் என்று தென்னவனுக்கு கண்யாடை காட்டி அங்கிருந்து இருவரும் நகர,சற்று நேரத்தில் நிகாரிகா சொன்னது போலவே, ஒரு கறுப்பு நிறச் சொகுசு கார் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றது.

"ஏண்டா... மேடம் சொல்றதெல்லாம் பார்த்தா ஏதோ பெரிய பிளான்னு தோணுது. சூரியகாந்தி விதை, புரதச் சத்துன்னு என்னென்னமோ பேசுறா. இதெல்லாம் நம்ம ஊரு மண்ணுக்கு ஒத்து வருமா?" என்று தென்னவன் தன் சந்தேகத்தைக் கிளப்பினான்.

அன்பிற்கினியவன் அந்தக் கார் அவளுடையது என்று கண்டுகொண்டவன், அந்த சாரதியை வைத்துக் கொண்டு ஒன்றும் பேசப் பிரியப்படாமல், ட்ரிவரைக் சைகை காடி எச்சரிக்கை செய்தவன்,

வெளியே தன் ஊரின் அழகை உள்வாங்கியபடி, தென்னவனின் கேள்விக்குப் பத்லை மானசிகமாக மனதிலேயே, "ஒத்து வர வைப்பாடா... அவளோட நோக்கம் விவசாயம் மட்டும் இல்லை. இந்த ஊரோட மொத்தக் கட்டுப்பாட்டையும் தன் கைக்குள்ள கொண்டு வரணும்னு நினைக்கிறா. அதுக்கு முதல் படிதான் இது" என்று தீர்க்கமாக எண்ணிக்கொண்டான்
 
Top Bottom