• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 9

ரோசி கஜன்

Administrator
Staff member

காலையில் கண் விழிக்கும்போதே, நெய்யில் சுட்ட தோசையின் வாசம் அன்பிற்கினியனின் மூக்கைத் துளைத்தது. அந்த வாசனையை நுகர்ந்தபடியே எழ முயன்றவனுக்கு, காலில் சட்டென ‘சுரீர்’ என்று ஒரு வலி எடுத்தது. அந்த வலியில் தான், நேற்றுத் தன் காலில் காயம் பட்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

வலிக்கின்ற காலைப் பலமாக அசைக்க முடியாமல் சிரமப்பட்டு எழும்பி அமர்ந்தவன், பக்கத்தில் பார்த்தான். தென்னவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் தூங்குவதைப் பார்த்த அன்பிற்கினியன், "அத்தையா அடுப்படியில் கிடக்குது? அவங்களுக்கு வேற வேலையே இல்லையா... இங்கே வந்து ஓய்வா இருங்க, நாங்க என்ன வேலையென்றாலும் பார்ப்போம்னு சொன்னாலும் கேக்கிறதே இல்லை" என்று பாக்கியத்தைச் செல்லமாகத் திட்டியபடியே, காயம் பட்ட காலை நொண்டியபடி எழும்பி சமையலறைக்கு வந்தான்.

அங்கே பாக்கியம் தோசை வார்க்க, நாற்காலியில் அமர்ந்து அதைச் சாப்பிட்டபடியே அவரோடு பேசிக் கொண்டிருந்தார் நீலகண்டன்.

"இங்க என்ன நடக்குது?" என்று இடுப்பில் கை வைத்தபடி, அப்பாவையும் அத்தையையும் போலிச் கோபத்துடன் முறைத்தான் அன்பிற்கினியன். மகனைப் பார்த்ததும், தான் சாப்பிடுவதை அவன் பார்த்துவிடக் கூடாதே என்று, கையில் இருந்த தட்டை அவனுக்குத் தெரியாமல் மறைக்கப் பார்த்தார் நீலகண்டன்.

அதைப் பார்த்த அன்பிற்கினியன், "உங்க நெய் வாசனை அங்க ரூம் வரைக்கும் வீசுது... இதுல இவரு தோசையை மறைக்கிறாராம்!" என்று நக்கலாகச் சொன்னவன் பாக்கியத்திடம், "அத்தை... இவருக்கு நெய் கொடுக்காதீங்கன்னு சொன்னேன்ல? இவருக்குக் கொலஸ்ட்ரால் எகிறிக் கிடக்கு" என்றான்.

"ஒரு நாள் தானேடா... சாப்பிடட்டும் விடு" என்று பாக்கியம் நீலகண்டனுக்குப் பரிந்து பேச, "நீங்க வர்றதுக்கு நாலைஞ்சு நாளுக்கு கண்ணைத் திறக்க முடியலை, தலை சுத்துது, எந்திரிக்க முடியலை, உடம்பே தள்ளாடுதுன்னு எங்களைப் போட்டுப் படுத்தி எடுத்தது யாருன்னு உங்க அன்பு அண்ணன்கிட்ட கேளுங்க!" என்று அன்பிற்கினியன் தந்தையைப் போட்டுக் கொடுத்தான்.

“யாருப்பா அது?” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டபடி, ஒரு துண்டுத் தோசையை எடுத்து வாயில் வைத்தார் நீலகண்டன். தந்தையை அன்பிற்கினியன் முறைக்க, “விடுடா, நான் இருக்கும் போதே ஆசைப்படுறதைச் சாப்பிடட்டும்” என்றார் பாக்கியம்.

“அப்படிச் சொல்லு!” என்றவர், இன்னொரு தோசைத் துண்டையும் பிய்த்து வாயில் போட்டபடியே, “பாக்கியம், நீ வைக்கிற தக்காளிச் சட்னி அவ்வளவு ருசியா இருக்கு. அந்தப் பக்குவத்தை இவனுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு. இவன் சட்னின்னு ஒண்ணு வைக்கிறானே... அதை மனுஷன் நாக்குல கூட வைக்க முடியல!” என்றார் நீலகண்டன்.

தானும் தென்னவனும் சமைத்துக் கொடுக்கும் போதெல்லாம், “நல்லா இருக்கு” என்று சொல்லி வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட்டவர், இப்போது இப்படிச் சொன்னதும் அன்பிற்கினியனுக்குக் கோபம் வந்துவிட, “அப்பா!” என்று அவரை அதட்டினான்.

"என்ன அப்பா? நான் இருந்து என்ன பண்ணப் போறேன்? சாகுற நேரத்துல வாயைக் கட்டிப் போடாதேடா... எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு நிம்மதியாச் சாகுறேன்" என்றார் நீலகண்டன் சாதாரணமாக.

அப்போது அங்கே வந்த மாரிமுத்து, "என்ன மாமா இப்படிச் சொல்றீங்க? உங்களுக்கு அத்தான் பிள்ளையைப் பார்க்கணும், அத்தானுக்கு ஒரு கால்கட்டு போடணும்னு எல்லாம் ஆசை இல்லையா?" என்று கேட்டான்.

வீட்டில் கேட்ட சத்தங்களால் தூக்கம் கலைய, கொட்டாவியை விட்டபடியே வந்த தென்னவனும், “டேய் மாரி... பிளோவை மாத்திச் சொல்ற! முதல்ல கால்க்கட்டு போடணும், அப்புறம் தானே பேரப்பிள்ளைகள்னு சொல்லணும்" என்றான்.

“கால்கட்டா? அதான் இப்பவே போட்டுக்கிட்டுத் தானே இருக்கான்!” என்று நேற்றைய கால் சுளுக்கிற்காகப் போடப்பட்ட மஞ்சள் பத்தைக் காட்டி நீலகண்டன் சிரிக்க , அன்பிற்கினியன் கடுப்பானான்.

“நடக்கத் தெரியாம வாரி விழுந்துட்டு வந்திருக்கான் உன் அத்தான். முதல்ல ஒழுங்கா நடக்கப் பழகச் சொல்லு... அப்புறம் கல்யாணம், காதுகுத்து எல்லாம் பார்த்துக்கலாம். பாக்கியம், எனக்கு தோசை போதும்... இந்த மூணு கழுதைக்கும் போடு. இதைச் சாப்பிட்டாவது உருப்படியா வளருவாங்களா பார்ப்போம்" என்று நக்கல் அடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் நீலகண்டன்.

அவர் சாப்பிடுவதை அன்பிற்கினியன் இடையில் வந்து கெடுத்துவிட்டான் என்ற சிறு வருத்தத்துடன், “டேய்... அப்பாவை பாதிச் சாப்பாட்டுல எழுப்பி விட்டியேடா" என்றார் பாக்கியம்.

சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டபடிச் செல்லும் நீலகண்டனைப் பார்த்து, “உங்க அண்ணாவையா? அவரு வயிறு ஃபுல்லாகாம எந்திரிக்கிற ஆளே இல்லை!” என்ற அன்பிற்கினியன், “அத்தை, இதுவரைக்கும் எத்தனை தோசை ஆச்சு?” என்று கேட்டான்.

“தோசையையெல்லாம் யாராவது எண்ணுவாங்களா? போடா அங்கட்டு!” என்று பாக்கியம் அவனைச் செல்லமாகத் தள்ளிவிட்டு, பதில் சொல்லாமல் தோசை சுடுவதில் கவனமானார். தன் அத்தையை அன்பிற்கினியன் முறைக்க, “அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி!” என்று தென்னவன் முணுமுணுத்தான்.

“உங்களுக்கும் தோசை வார்க்கிறேன் சாப்பிடுங்க” என்று பாக்கியம் சொல்ல,

“நான் தூங்கி எழும்பி அப்படியே இங்கே வந்திட்டேன்” என்றான் தென்னவன். “நானும் இன்னும் பல் கூட விளக்கலை” என்று அன்பிற்கினியனும் சொல்ல ,

“போய் முகத்தைக் கழுவிட்டு வாங்க, தோசை சுடுறேன்” என்றார் பாக்கியம்.

“அத்தை, நீங்க முதல்ல உட்காருங்க, மாரி தோசை சுட்டுத் தருவான், நீங்க சாப்பிடுங்க” என்று அன்பிற்கினியன் சொல்ல,

“நான் கிருத்திகை விரதம்டா, மதியம்தான் சாப்பிடுவேன்” என்றார் பாக்கியம்.

“விரதத்தோடயா அடுப்படியில் நிற்கிறீங்க? நீங்க போங்க, நாங்களே மாறி மாறிச் சுட்டுச் சாப்பிடுவோம்” என்று அன்பிற்கினியன் வற்புறுத்திச் சொன்னான்.

“டேய், உங்களுக்குச் சுட்டுத் தந்துட்டுப் போறேண்டா...” என்று அவர் மறுத்தார்.

“மூச்...” என்று வாயில் கைவைத்து அவரைப் பேசவிடாமல் தடுத்தவன், “டேய் இவங்களை வெளியே அனுப்பி சமையலறையைப் பூட்டுங்கடா. பெண்ணா பிறந்தாலே சமைக்கிறதுக்குத்தான் லாயக்குனு எவன் சொல்லி வைச்சானோ!” என்று அலுத்துக் கொண்டான் அன்பிற்கினியவன்.

தென்னவனும், “அத்தை போங்க, இல்லைன்னா இவன் இங்கே ஒரு சொற்பொழிவே நடத்திடுவான்” என்றான். மாரிமுத்துவும், “அம்மா, அவருக்குக் கால் வேற முடியாது, பாவமில்லையா?” என்று கிண்டல் பண்ண, "நான் போறேன் மூன்று தடிமாடுகளும் என்னவும் செய்ங்க" என்று பாக்கியம் அலுத்தபடி அங்கிருந்து வெளியேறினார்.

அன்பிற்கினியன் காலை நொண்டியபடி கிணற்றடிக்குச் செல்ல முயல, "வா, நான் பிடிச்சுட்டுப் போறேன். நேற்று நீ புதையல் எடுத்தது தான் இங்கே பெரிய பேச்சா இருக்கு. திரும்பவும் விழுந்தால் வீடு தாங்காது" என்று தென்னவன் வம்புக்கு இழுத்தான்.

"நான் என்ன வேணும்னா விழுந்தேன்? அந்தக் கல்லு தடுக்கிடுச்சு" என்று அன்பிற்கினியன் சொல்ல, "அந்தக் கல்லு அங்கே தான் முதல்லயும் இருந்தது. நீதான் கண்ணைத் திறந்து பார்த்து நடக்கணும்" என்று பேசியபடியே அவனைத் தென்னவன் அழைத்துச் சென்றான்.

மாரிமுத்து மூவருக்குமாக தோசை சுடத் தொடங்கினான். அன்பிற்கினியனும் தென்னவனும் பல் தேய்து முகம் கழுவிவிட்டு வர, மாரிமுத்து சுடச் சுடத் தோசையை அவர்கள் தட்டில் எடுத்துப் போட, அன்பிற்கினியன் அதை ரசித்துச் சாப்பிட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், சட்டென்று ஒரு துண்டு தோசையைச் சட்னியில் தொட்டு மாரிமுத்துவின் வாய்க்கு நேரே நீட்டிம் "இந்தாடா மாரி... சாப்பிடு" என்று அன்பிற்கினியன் ஊட்ட, மாரிமுத்து திகைத்துப் போய் நின்றான்.

பழைய நினைவுகள் அவன் நெஞ்சில் நிழலாடின. சிறு வயதில் இப்படித்தான் அன்பிற்கினியன் எதைச் சாப்பிட்டாலும் தனக்கும் ஊட்டி விடுவான். அந்தப் பழைய பாசம் மாறாமல் அவன் ஊட்டுவதைப் பார்த்ததும் மாரிமுத்துவுக்குக் கண்கள் கலங்கின.

கண்ணில் தேங்கிய நீருடன் அவன் தோசையைச் சாப்பிட, இதைப் பார்த்துக் கொண்டிருந்த தென்னவன், "என்னடா மாரி... கண்ணு கலங்குது? அவன் பழைய ஃபார்முக்கு வருவாண்டா... கவலைப்படாதே. முன்னாடி இருந்த மாதிரியே பழைய அன்பிற்கினியனா அவன் மாறிடுவான்" என்று தோளில் தட்டி ஆறுதல் கூறினான்.

"அவர் மாறினால் சந்தோசப்படுற முதல் ஆள் நான்" என்று மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் சொல்ல, "சரி சரி... சென்டிமென்ட் பேசி நேரத்தை ஓட்டாதீங்க. தோசை ஆறிடப் போகுது, சீக்கிரம் சுடு" என்று சூழலை மாற்றினான் அன்பிற்கினியன்.

மாரிமுத்துவுக்கு அங்கே வந்திருக்கும் நிகாரிகா அன்பிற்கினியனின் மனைவி என்கிற உண்மை இதுவரைக்கும் தெரியவில்லை. அவள் மீண்டும் வந்துவிட்டதால்தான் தன் அத்தானிடம் இழந்த சிரிப்பும் மகிழ்ச்சியும் திரும்பியிருக்கிறது என்பதை அறியாத மாரிமுத்து, அத்தானின் பழைய பாசம் திரும்பக் கிடைத்த நெகிழ்ச்சியிலேயே திளைத்திருந்தான்.

மாரிமுத்துவின் அந்த அப்பாவித்தனமான சந்தோஷத்தைப் பார்த்த தென்னவனுக்குத் தான் உள்ளுக்குள் 'இவன் என்னடான்னா விஷயம் தெரியாம அத்தான் பாசம் கிடைச்சிருச்சுன்னு இவ்வளவு உருகிட்டு இருக்கான். நாளைக்கு இவனுக்கு உண்மை தெரியும்போது, என்னையும், அன்பையும் வைச்சுச் செய்யப்போறான்' என்று மனதிற்குள் பயந்தபடியே மாரிமுத்துவை ஒரு பார்வை பார்த்தான் தென்னவன்.

சாப்பிட்டு முடித்ததும், "இன்னைக்கு வெளிய எங்கயாவது போவோமா?" என்று மாரிமுத்து மெதுவாகக் கேட்டான்.

"இல்லடா மாரி... காலை வேற அசைக்க முடியல. எனக்கு நல்லா ஓய்வு வேணும், நான் எங்கேயும் வரலை" என்று அன்பிற்கினியன் சொல்லியபடியே கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டான்.

"ஆமா மாரி... இவனை இப்போதைக்கு எங்கேயும் கூட்டிட்டுப் போக முடியாது. நான் இவனை மதியம் திரும்பவும் அந்த பாட்டிக் கிட்ட கூட்டிட்டுப் போகணும். அப்பதான் அந்தச் சுளுக்கு முழுசா இறங்கும்" என்றான் தென்னவன்.

"அப்ப நான் என்ன செய்ய?" என்று மாரிமுத்து கேட்க, "அத்தை ஏதோ வேலை இருக்குன்னு காலையில சொல்லிட்டு இருந்தாங்க. நீ போய் அத்தைக்கு என்ன உதவி வேணும்னு கேட்டு அவங்க கூட இரு" என்று தென்னவன் சொன்னான்.

சாப்பிட்டு முடித்த மூவருமே திண்ணைக்கு வந்தனர். அங்கே பாக்கியம் ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, எதையோ நீலகண்டனிடம் கேட்டு எழுதிக் கொண்டிருந்தார்.

“என்னம்மா இது?” என்று அவர் எழுதுவதை எட்டிப் பார்த்தான் மாரிமுத்து. அதில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அம்புஜத்தின் படையலுக்காகத் தேவையான பொருட்களின் பட்டியல் தயாராகிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே சமையல் செய்பவர் ஒரு பட்டியலும், ஐயர் ஒரு பட்டியலும் கொடுத்திருந்தனர். அந்த இரண்டு பட்டியல்களில் இருந்த சாமான்களைத்தான் மாரிமுத்து அதிகாலையிலேயே அடுத்த ஊரிலிருக்கும் பெரிய சந்தைக்குச் சென்று குட்டியானை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தான். அப்படியிருக்க, பாக்கியம் இப்போது இன்னுமொரு பட்டியல் போடுவதைப் பார்த்ததும் அவனுக்குக் குழப்பமாக, “எல்லாச் சாமானும்தான் வாங்கிட்டு வந்தாச்சே... அப்புறம் இது எதுக்கு?” என்று கேட்டான் மாரிமுத்து.

“நாம வீட்டில் சமைக்கணும்டா, அதுக்குத் தேவையான பொருட்கள் இது" என்றார் பாக்கியம் பொறுமையாக.

“இன்னைக்குத் தானே வண்டி பிடிச்சு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தேன். முதலே சொல்லியிருந்தால் இதையும் சேர்த்து அப்பவே வாங்கியிருக்கலாமே!” என்று மாரிமுத்து கொஞ்சம் அலுத்துக் கொண்டான்.

அதற்குப் பாக்கியம், “இது நானும் என் அண்ணாவும் நேர்ல போய், எங்க அண்ணிக்கு பிடிச்சமானதை ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்து வாங்கப்போறோம்" என்று உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார்.

நேற்று அன்பிற்கினியனுக்குக் காலில் அடிபட்டதாலும், அவனுடன் தென்னவனும் சேர்ந்து அலைந்து திரிந்து வந்ததாலும், அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் அதிகாலையிலேயே சந்தைக்குப் போகலாம் என்று நீலகண்டனைப் மாரிமுத்து அழைத்தான். ஆனால் நீலகண்டனோ, “நீ மட்டும் போனால் போதாதா? நான் எதுக்கு?” என்று பின்வாங்கிவிட்டார். இப்பொழுது பார்த்தால் அவரும் தங்கையுமாக வேறு ஏதோ பிளான் போட்டு இருக்கிறார்கள்.

“நாம அந்தச் சமையல்காரர் சமைக்கிறதையே சாமிக்குப் படைச்சால் ஆகாதா?” என்று மாரிமுத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.

அதற்குப் பாக்கியம் சட்டென்று, “அவருக்கு எப்படி என் அண்ணிக்கு பிடிச்சது எதுன்னு தெரியும்? எனக்கும் என் அண்ணனுக்கும் தானே அதெல்லாம் தெரியும்!” என்று எட்டிக்குப் போட்டியாகப் பதில் சொன்னார்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பிற்கினியன், “டேய் மாரி... அவங்க இரண்டு பேரும் ஒரு முடிவோடதான் இருக்காங்க. அவங்க யார் பிள்ளைகள்? அந்த மங்கம்மாவோட பிள்ளைகள்! அப்புறம் சொல்லவா வேணும்... பிடிச்ச முயலுக்கு மூணேகால் கால்னு தான் நிப்பாங்க. நீ இவங்களோட மல்லுக்கட்டி நேரத்தை வீணாக்காதே" என்றான் நக்கலாக.

“வீட்டில் ஏற்கனவே எவ்வளவு வேலை கிடக்கு... இதுல தனியா இன்னுமொரு சமையல்னா எப்படி?” என்று அவன் முணுமுணுத்தான்.

அவனைத் தட்டிக்கொடுத்த தென்னவன், “விடுடா மாரி... அவங்களுக்குத் தன் கையாலேயே சமைச்சுப் படைக்கிறதுல தான் ஏதோ ஒரு திருப்தி போல இருக்கு. ஆசைப்படுறாங்க இல்ல... செய்யட்டும் விடு" என்று சமாதானம் செய்தான்.
 
Top Bottom