ஆழியே மெளனம் ஏனோ - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,677
7,113
113
மௌனம் -1

“எல்லோரும் வந்தாச்சா?” என்று தன்னுடைய கணீர் குரலில் வினவினார் லட்சுமிலிங்கம்.

அந்த வீட்டின் மூத்த தலைமுறை.

எழுபத்தி ஐந்து வயது என்று சொன்னால் யாராலும் நம்பவே முடியாது. அந்தக் காலத்துமனுஷி. திடக்காத்திரமாக நடை உடை பாவனையுடன் மொத்த குடும்பத்தையும் தன் கண்பார்வையில் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது கணவர் இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. அவரது மறைவிற்குப் பின்பு அவரது இடத்தில் இருந்து குடும்பத்தை வழி நடத்துபவர்.

அவருக்கு மூன்று மக்கள்‌. மூத்த மகள் உமா. அவளது கணவன் வேந்தன். பிள்ளைகள் விகாஷ், தன்ஷிகா. இருவருக்கும் தனது மகன்களின் வீட்டிலே சம்பந்தம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை.

அவரது ஆசைப்படியே விகாஷ் தனது மாமன் மகளை மணந்து கொண்டான். ஆனால் தன்ஷிகாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. லட்சுமியின் கனவு கானாலானது.

அவர்கள் எல்லோரும் குடும்பத்துடன் அருகருகே உள்ள வீட்டில் வசித்தனர். தொழிலில் எல்லோருமே பார்ட்னர். ஆனால் வீடு மட்டும் தனித்தனியாக தான் ஆரம்பத்தில் இருந்து வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்த மகன் அகிலன், அவனது மனைவி சுமதி, மகள் சிந்தூரா‌.

அடுத்த மகன் இனியன், மனைவி கவிதா மகன் வியன்செழியன், மகள் நித்யமயூரி.

இன்று அவர் முக்கியமான விஷயத்தை பற்றி பேசுவதற்காக மாலை நேரத்தில் பெரிய வீட்டிற்கு அனைவரையும் வரச் சொல்லியிருந்தார்.

அதற்காகத்தான் எல்லோரும் வந்தாச்சா என்று லட்சுமி வினவ.

அங்கு கிச்சனில் சுமதி மாலை காஃபி, பலகாரம் செய்யச் சொல்லி வேலையாட்களிடம் கூறிக் கொண்டிருந்தார்‌.

“அக்கா! எதுக்கு அத்தை இன்னைக்கு எல்லாரையும் மீட்டிங்கு கூப்பிட்டு இருக்காங்க?” என்று கவிதா வினவ.

“ கவி! வாய வெச்சுட்டு சும்மா இரு.” என்று அதட்டினார் சுமதி.

“இங்க நீங்களும், நானும் தானே இருக்கோம்கா. எதுக்கு பயப்படுறீங்க.”

“ப்ச்! கவி கல்யாணம் ஆகி இங்கே வந்து முப்பது வருஷமாச்சு. இன்னும் இந்த வீட்டைப் பத்தி முழுசா புரிஞ்சுக்கல. இந்த வீட்ல செவுத்துக்குக்கூட காது உண்டு. அத்தைக்கு மட்டும் நீ இப்படி கிண்டல் பண்றது தெரிஞ்சா அவ்வளவுதான்.”

“அது உண்மைதான்கா. இவ்வளவு வயசு ஆகியும் சிங்கம் மாதிரி இருந்துட்டு நம்மளை ஆட்டி படைக்கிறாங்க.”
என்று பெருமூச்சுடன் கூறினார் கவிதா.

“அப்படி இருக்குறதால தான் இந்த குடும்பத்தை நல்லா நடத்த முடியுது.”

“அதுவும் சரிதான்கா. ஆமாம் சிந்து வந்துட்டாளா?”

“இன்னும் யாரும் வரலை. அதான் அத்தை வேற சத்தம் போடுவாங்களேன்னு கிச்சனுக்கு வந்துட்டேன்.”

“தன்ஷிகா வருவாளா? மாட்டாளா?” என்று கேட்க.

“அது தெரியலையே கவி. நம்ம ஒன்னும் அவளை வரக்கூடாதுன்னு சொல்லலையே‌‌. அவளாக தான் வராம இருக்கா.” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க.

“ எல்லாரும் வந்தாச்சு! ஆனால் இந்த வீட்டு மருமக பொண்ணுங்களை மட்டும் காணோம். வீட்ல தான் இத்தனை வேலைக்காரங்க இருக்காங்க. இருந்தாலும் என்னதான் அந்த கிச்சன்ல பண்றாங்களோ தெரியலையே.” என்று அவர் சத்தம் போட.

அவரது சத்தத்தில் வேகமாக இருவரும் ஹாலிற்கு வந்தனர்.

“அது வந்து அத்தை! டீ, ஸ்நாக்ஸ் ரெடி பண்ண சொல்லிட்டு இருந்தோம்.” என்று சுமதி கூற.

“அதை சொல்றதுக்கு ரெண்டு பேரும் அங்கேயே நிக்கணுமா? ஏம்மா கவிதா உன் மருமக எங்க? அவளை வேறத் தனியா வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சா தான் வருவாளா?” என்று லட்சுமி அங்கலாய்க்க.

அப்பொழுது தான் ஆழினி அங்கு இல்லாததையே கவனித்த கவிதாவோ, தன் மகனைப் பார்க்க.

அவனும் தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு தலையசைத்தவாறே அவளை அழைப்பதற்காக மாடி ஏறினான்.

நீண்ட கால்களை வேக, வேகமாக எட்டு வைத்து செல்ல.

அவனையே வைத்த விழி மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்ஷிகா.

அவள் பார்வை போகும் இடத்தை பார்த்த அவளது அன்னையோ பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

****************

ஆழினியோ ஃபோனில் அவளது தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“சாரி மது! இன்னைக்கு என்னால வர முடியாது.” என்று தயக்கத்துடன் கூறினாள்.

“எனக்கு தெரியும்டி.” என்று அந்த பக்கம் சிறு சிரிப்புடன் கூறினாள் மதுரா.

“மது! நீ நினைக்கிறது போல இல்லை.” என்று சற்று கோபமாகக் கூறினாள் ஆழினி.

“ நான் என்னை நினைக்கிறேனு உனக்கு தெரியுமா ஆழி? நீ எதுவும் மந்திர வித்தை புதுசா கத்துக்கிட்டியா?” என்று நக்கலாக வினவ.

“ப்ச்! நான் முடிவு பண்ணது, பண்ணது தான். திடீர்னு எங்க வீட்ல மந்திர ஆலோசனை ஏற்பாடு செஞ்சுட்டாங்க.”

“என்னடி உளறுற?”

“உளறலைடி. எங்க வீட்டு ராஜாமாதா! அதான் லட்சுமி பாட்டி! எல்லோரையும் கூப்பிட்டு ஏதோ ஆலோசனை பண்ணப் போறாங்களாம். அதான் எல்லோரையும் ஆறுமணிக்கு ஹால்ல ஆஜராக சொல்லியிருக்காங்க.”

“ஓ! நீ வேற ப்ளான்ல இருக்கேன்னு சொல்லிட்டு வர வேண்டியது தானே.”

“ஐயையோ! இந்த வீட்ல பாட்டியின் கட்டளையை மீற முடியாது. அவ்வளவு தான்.” என்றவாறே திரும்ப.

அங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் வியன்செழியன்.

அவனைப் பார்த்து அதிர்ந்தவள், “நான் நாளைக்கு வரேன் டி. பை!”என்று விட்டு வைத்தவாறு அவனைப் பார்க்க.

‘நம்மக் கிட்ட மட்டும் வாயே திறக்கமாட்டா! அவ ஃப்ரெண்டுக்கு கிட்ட மட்டும் வாய் கிழியுது.’ என்று எண்ணியவனோ, ஒன்றும் கூறாமல், “பாட்டி கீழ கூப்பிடறாங்க!” என்று விட்டு திரும்பிச் செல்ல.

அவளோ அவனை வெறித்துப் பார்த்தாள். இது தான் அவளுக்கு பிரச்சனை. ‘ கோபத்தைக் கூட காட்டாமல் செல்கிறானே! கோபம் காட்ட கூட உரிமை இல்லாமல் நாம இருக்கிறோமா! என்ன வாழ்க்கையோ!’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டவள், அவன் பின்னாலே சென்றாள்.

அவள் தான் அவனது மனைவி ஆழினி.

கீழே வந்தவளைப் பார்த்ததும்,”வாடி மா! ஆறு மணிக்கு கீழே இருக்கணும்னு சொன்னது உனக்குத் தெரியாதா? பெரியவங்க பேச்சை மதிக்கிறது கிடையாது. பெத்தவங்க வளர்த்தா சொல்லி வளர்த்திருப்பாங்க. உன்னை குத்தம் சொல்லியும் ஒன்னும் மாறப் போறதில்லை.” என்று லட்சுமி கூற.

ஆழினியின் முகமோ கருத்துப் போனது. எல்லோரும் தன்னையே கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்தவளது கண்கள் கலங்கியது. ‘தாய், தந்தை இல்லாதது எனது தவறா?’ என்று எண்ணியவள், எப்பவும் போல மௌனமாக இருக்க.

கேள்விக் கேட்க வேண்டியவனும் அமைதியாக இருந்தான்.

“அம்மா! இதைப் பத்தி பேசத் தான் கூப்பிட்டீங்களா?” என்று அவளது மாமனார் இனியன் தாயை கண்டிக்க.

“உன் மருமகளை ஒன்னும் சொல்லலை. நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத் தான் கூப்பிட்டேன். நம்ம செழியனுக்கு கல்யாணம் தான் எப்படியெப்படியோ நடந்திருச்சு. அதுக்கு அப்புறமாவது அவனுக்கு ஏதாவது ஒரு விசேஷம் பண்ணுவோம்னு பார்த்தால் அவன் நேரம் எதுவும் அமையல.

அதான் அவங்களோட அஞ்சாவது வருஷ கல்யாண நாளை பெருசா கொண்டாடலாம்னு பாக்குறேன். நம்ம சிந்து கூட சொன்னால்ல இப்பெல்லாம் மொத வருஷ கல்யாண நாளையே பிரம்மாண்டமா எல்லாரும் கொண்டாடுறாங்களாமே. அதான் அடுத்த மாசம் அவங்களுக்கு கல்யாணநாள் வருதில்ல அதை விஷேசம செய்யலாம்னு இருக்கேன்.

உங்க எல்லோருக்கும் சம்மதமா?நீங்க எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க. அதுக்காகத்தான் இன்னைக்கு கூப்பிட்டேன்.” என்றார்.

அவர் கூறி முடித்ததும் அந்த இடமே அமைதியாக இருந்தது.

‘ ஏய் கிழவி! சும்மா இருக்காமல் என்னை வேற கோர்த்து விட்டுட்டியே. நான் எனக்கு பத்தாவது வருஷம் கல்யாணம் நாள் செய்வதற்காக சொன்னதை, இப்போ போய் சொல்லிருக்கியே! நான் என்னமோ என் தம்பியோட கல்யாண நாள கிராண்டா கொண்டாடணும் ஆசைப்பட்டு செஞ்ச மாதிரி இந்தக் குடும்பத்துல காண்பிச்சு என்னை வில்லி ஆக்கிட்டியே பாட்டி. சும்மாவே என் நாத்தனார்‌! அதான் உன் செல்ல பேத்தி ஆடுவா. இப்ப சலங்கை வேற கட்டியிருக்க. என்ன நடக்க போகுதோ’என்று மனதிற்குள் நினைத்தவாறு தன்ஷிகாவைப் பார்க்க.

அவளோ வியன்செழியனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உமாவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த நயனிகா தூக்கத்திலிருந்து விழித்தவள், அம்மா என்று அழ.

தன்ஷிகாவின் கவனம் மகளிடம் திரும்பியது.

“ஸ்வீட்டி! எதுக்குடா அழற?” என்றவாறு உமாவிடமிருந்து குழந்தையைத் தூக்கினாள்.

அப்போது தான் குழந்தை சுற்றிப் பார்த்தாள்.அவள் கையில் இருந்து துள்ளிக் குதித்து,” டாடி!” என்றவாறு வியன்செழியனை நோக்கி ஓடினாள் அந்த மூன்று வயது குழந்தை.

அதைக் கேட்டதும் எப்பொழுதும் போல் முகம் கருக்க திரும்பினாள் ஆழினி.

குழந்தையை தூக்காமல் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். குழந்தையோ,”டாடி!” என்று சிணுங்கியது.

அவன் அப்பொழுதும் தூக்காமல் இருப்பதை பார்த்த லட்சுமி,” செழியா! பாப்பா அழறா பாரு!’ என்று சத்தமாக அழைக்க.

வேறு வழியில்லாமல் குழந்தையை பார்த்தவன் தூக்கி சமாதானம் செய்தான்.

அதை பார்த்ததும் தன்ஷிகாவின் முகத்தில் புன்னகை வந்து அமர்ந்தது. கேலியாக ஆழினியை பார்த்தாள்.

ஆழினியோ விறு, விறுவென அவளது அறைக்குச் சென்று விட்டாள்.

அதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த லட்சுமியோ,” என்ன சுமதி! கவிதா! ரெண்டு பேரும் நின்னுகிட்டு இருக்கீங்க. வந்தவங்கள கவனிங்க!” என்றுக் கூற.

அவர்கள் இருவரும் கிச்சனுக்கு விரைந்தனர்.

இனியனும்‍, அகிலனும் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

வேந்தனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை குழந்தைக்காக தான் அவரும் பொறுமையாக இருக்கிறார். குழந்தை தந்தையை நினைத்து ஏங்கக் கூடாது என்று நினைத்து, அவரது மனைவியையும், மகளையும் கண்டிக்காமல் இருக்க.

அது இன்னொரு பெண்ணின் உணர்ச்சியுடன் விளையாடுவதை அவர் பெரியதாக நினைக்கவில்லை.
*************
டீ கொண்டு வந்த கவிதாவிடம், “கவிதா! ஆனாலும் உன் மருமகளுக்கு ரொம்ப தான் திமிரு. என்னையும், என் பெண்ணையும் வான்னு சொல்லல.”

“ அவ சின்ன பொண்ணு தானே அண்ணி! அதான் நாங்க கூப்பிட்டோமே. அதுவும் இல்லாமல் இது நம்ம வீடு. அவக் கூப்பிடணும்னு அவசியமில்லையே.” என்று சுமதியிடம் கவிதா சமாதானமாக கூற.

“ மருமகளை விட்டே கொடுத்துடாதே. கல்யாணம் ஆகி வந்து எவ்வளவு நாளாச்சு இன்னும் நம்ம குடும்பத்து பழக்கத்தை கத்துக்கிட்ட மாதிரி தெரியல. பாவம் நம்ம செழியன். அவசரப்பட்டு அவன் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க.” என்று உமா கூற.

“ யாரோட அவசரத்தில் அவன் வாழ்க்கை இப்படியானது .” என்றுக் கேட்க கவிதாவின் நாக்கு துடித்தது.

அவளை அடக்கினார் சுமதி.

அறைக்குச் சென்ற ஆழினியோ, மீண்டும் தனது தோழி மதுவிற்கு அழைத்தாள்.

“மது! நாளைக்கு பத்து மணிக்கு கட்டாயம் பார்க்க வர்றேன்.” என்று அழைத்துக் கூறியவள், காலையில் நேரத்தோடு தயாரானாள்.

அவள் கிளம்புவதை ஓரப்பார்வையால் பார்த்துக் கொண்டிருந்த வியன்செழியனோ, அதிசயத்திலும், அதிசயமாக”எங்க போகணும் சொல்லு. நான் டிராப் பண்றேன்.” என்றான்.

‘யார் கிட்ட பேசுறான்?’ என்பது போல் சுற்றிப் பார்த்தாள்.

“உன்கிட்ட தான் கேட்கிறேன். நேத்தே உன் ஃப்ரெண்டைப் பார்க்கணும்னு சொன்னியே. போக முடியலை. இன்னைக்கும் போக முடியலைன்னா என்ன பண்றது. அதான் நானே விட்டுட்டு போறேன்.”என்றான்.

“ சரி!”என்று தலையாட்டிவளோ, வேகமாக கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

‘இவனோட போனா என்ன, ஏதுன்னு யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. இல்லன்னா ஒவ்வொரு ஆளுக்கும், விளக்கம் சொல்லிகிட்டு இருக்கணும். அதுக்குள்ள நமக்கு டைம் ஆகிடும். ஃபைனலி இவரால எனக்கு ஒரு நல்லது நடக்கப் போகுது.’ என்று எண்ணிய பெருமூச்சுவிட்டவாறே அவனுடன் காரில் ஏறினாள்.

அவள் எதற்காக செல்கிறாள் என்றுத் தெரியாமலே அவளை அழைத்துச் சென்றான். அவள் அவனிடமிருந்து இருந்து விடுதலை பத்திரம் வாங்குவதற்காக செல்கிறாள் என்பது மட்டும் தெரிந்திருந்தால் வியன்செழியனின் எதிர்வினை எப்படி இருந்திருக்குமோ?
 

Author: Vishakini
Article Title: ஆழியே மெளனம் ஏனோ - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra