மௌனம் -3
அன்று…
கல்லூரியில் இறுதி வருடம். மாணவ, மாணவியர் எல்லோரும் கண்கள் கலங்க ஊருக்கு கிளம்ப முயல.
ஒருத்தி மட்டும் மகிழ்ச்சியாக கிளம்பினாள். அவள் தான் நித்யமயூரி.
“ஹே! நித்தி… நீ தான் உன் ஃப்ரெண்ட் ஆழியை விட்டு பிரியறதை நினைச்சு, பிழிய பிழிய அழுவேன்னு நினைச்சா, ஜாலியா அவள விட்டு கிளம்பறதுல முதல் ஆளா ஜிங்குன்னு கிளம்பி நிக்குற?” என்று ஒருத்தி வினவ.
ஆழினியும் மனதிற்குள் நித்யமயூரியை அப்படித்தான் திட்டிக் கொண்டிருந்தாள்.
அதை ஒருத்தி நேரடியாகவே வினவினாள்.
“அடியே மய்யூ! நீ நம்ம ஆழியை விட்டுட்டு போறதுக்கு பீல் பண்ணுவ ன்னு நினைச்சேன்டி.ஆனால் நீ எந்த பீலிங்கும் இல்லாமல் ஜாலியா இப்டி கிளம்புவன்னு நினைக்கல?” என்று வினவ.
“நான் அவளை விட்டுட்டு போனா தானே பீல் பண்றதுக்கு… அவளை நான் என் கூடவே கூட்டிட்டு போறேன்.” என்றாள் நித்யமயூரி.
“ என்னது?” என்பது போல் புரியாமல் பார்த்தாள் ஆழினி.
“எங்க அண்ணனுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம். தெரியும் தானேடி.”
“தெரியும். அதுக்கென்ன மய்யூ?”
“அதான் உன்னையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போறேன்.”
“நான் வரல! வேலையில் வேற ஜாயின் பண்ணனும்.”
“ஆழி! நீ வேலைக்கு சேர இன்னும் ஒரு மாசம் டைமிருக்கு தானே.”
“நான் அதுக்கான ஏற்பாடு எல்லாம் செய்யணும்.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் ஆழினி.
“ரொம்ப பிகு பண்ணாதடி. எங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நானே வந்து உனக்கு ஹெல்ப் பண்றேன்.” என்று நித்யமயூரி கூற.
“இல்லடி. அது சரி வராது.” என்றவளது குரல் தடுமாற.
இவ்வளவு நேரம் தோழியைப் பார்க்காதவளோ, இப்பொழுது ஆராய்ச்சியாக பார்க்க.
“என்னடி! இப்படி பாக்குற.”
“ நீ தான் சொல்லணும். ஏன் எங்க வீட்டு வர மாட்டேங்குற. எங்க அண்ணன் கல்யாணத்துக்கு வரதுல உனக்கு என்னப் பிரச்சனை?” என்றவள், பின் அதிர்ந்து தோழியைப் பார்த்தாள், “ஹேய் ஆழி! நீ இன்னும் பழசை மறக்கலையா? அதான் எங்க அண்ணன் கல்யாணத்துக்கு வர மாட்டேங்கிறியா?” என்று அதிர்ச்சியாக வினவினாள் நித்யமயூரி.
“ஹேய் லூசு! எதையாவது கற்பனை பண்ணாதே.அதெல்லாம் இல்லை.” என்று வேகமாக மறுத்தாள் ஆழினி.
“நீ வர மாட்டேனு சொல்றதைப் பார்த்தா அப்படிதான் தோணுது.எனக்கு வேற படபடப்பாக இருக்கே.”என்று நித்யமயூரி ஏதோ கூற வர.
“அதெல்லாம் எதுவும் இல்லடி. அது சின்ன வயசுல. எதுவும் அறியாத வயசு வேறடி. அதுவுமில்லாமல் எங்க ஆஸ்ரமத்துல ஒரு பொருள் எங்களுக்கு கிடைக்கலைன்னா, அதுக்கு அப்புறம் திரும்பியே பார்க்கக் கூடாதுன்னு மதர் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால நீ பயப்படாதே தாயே.”
“அப்போ எனக்காக கல்யாணத்துக்கு வாடி.”
“மதர் ஏதாவது சொல்லுவாங்க மய்யூ. இன்னும் நான் ஆஸ்ரமத்துல தான் இருக்கேன். முதல் மாச சம்பளம் வாங்கவும் தான் ஆஸ்டலுக்கு அனுப்பிடுவாங்க. அது வரைக்கும் இங்க உள்ள ரூல்ஸை ஃபாலோ பண்ணனும்.”
“ மதர் கிட்ட பர்மிஷன் வாங்குறது என்னோட பொறுப்பு.”என்றவள், உடனே தனது அக்காவிற்கு அழைத்து விட்டாள்.
“மய்யூக்குட்டி! ஊருக்கு எல்லாத்தையும் பேக் பண்ணிட்டியா? ட்ரைவரும், சித்தாப்பாவும் கிளம்பிட்டாங்க. கல்யாண வேலை இல்லைன்னா அக்காவும் வந்திருப்பேன்.” என்று படப்படவென சிந்தூரா கூற.
“ஐயோ! அக்கா… கொஞ்சம் என்னையும் பேச விடுக்கா. அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ணேங்குறதே மறந்திடும்.”என்றாள் மயூரி.
“சரி சொல்லுங்க மேடம். எதுக்காக கால் பண்ணீங்க.”என்று தங்கையை கேலி செய்தாள் சிந்தூரா.
“அக்கா…” என்று சிணுங்கினாள் நித்யமயூரி.
“சரி! சரி! எதுக்குடா ஃபோன் போட்ட?”
“அக்கா! என் ஃப்ரெண்ட் ஆழியை நம்ம அண்ணானோட கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரணும். அதுக்கு மதர் கிட்ட பர்மிஷன் கேக்கணும். உனக்கு அவங்களோட பழக்கம் இருக்கு தானே. நீ சொன்னா அவங்கக் கேட்பாங்க.”
“அது…” என்ற சிந்தூராவிற்கு, ‘ஆழினியை கல்யாணத்திற்கு அழைத்து வருவது அவசியமா? தேவையில்லாத பிரச்சனையை இந்த மய்யூ ஏன் தான் இழுத்து விடுறான்னு தெரியல. இவளைப் பார்த்தா நம்ம செழியன் வேற டென்ஷனாகப் போறான்.’ என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க.
அதற்குள் நித்யமயூரியின் பொறுமை காற்றில் பறந்தோடியது.
“அக்கா! ப்ளீஸ் அக்கா.” என்றுப் படபடத்தாள்.
“சரி! சரி! டென்ஷனாகதே. நான் மதர் கிட்ட பேசிட்டு சொல்றேன்.” என்றவள், சற்று நேரத்திலே ஆழினி இருக்கும் அனாதை ஆசிரமத்தின் பார்த்துக் கொள்ளும் மதரிடம் பேசி பத்து நாட்கள் இவர்கள் வீட்டில் தங்குவதற்கு அனுமதி வாங்கி விட்டாள்.
சிந்தூராவிடம் பேசி முடித்த நித்யமயூரியோ, “எங்க அக்கா மதர் கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டாங்க. இப்போ நீ ஆஸ்ரமத்துக்கு போயிட்டு உன்னோட திங்ஸைப் பேக் பண்ற. நானும் ஹாஸ்டலுக்கு போய் ரெடியாகிட்டு அங்க வரேன். அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க. நாம கிளம்பலாம்.”
“பிடிச்சா பிடிவாதம்டி மய்யூ. சரி மதர் கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன். நம்ம வக்கீல் அம்மா கல்யாணத்துக்கு வராங்களா? இல்லையா?” என்று ஆழினி வினவ.
“அவ வராமலா? அவ நாளைக்கு வந்திடுவா. ஆனா அவன் இன்னும் வக்கீலாகல. மேடம் அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.”
“ ஆமா இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு இருக்கு. பட் அவ வருங்கால வக்கீல் தானே.” என்று ஆழினி சிரிக்க.
“நீ சொல்றதும் கரெக்ட் தான். ஆனால் இப்பவே மேடம் சென்னையில் படிக்கும் போதே கையில பிடிக்க முடியல. ரொம்ப சீன் போடுறா. இதுல வக்கீலானா அவ்வளவு தான்.”
“எங்க போனாலும் கடைசியா நம்ம இருக்கிற இடத்துக்கு வந்து தானே ஆகணும்.”
“நம்ம இருக்கிற இடம் இல்லை. நீ இருக்குற திருப்பூருக்கு அவ வந்து தான் ஆகணும். அப்போ வச்சு செஞ்சுடலாம்.” என்று ஆழினி கூற.
“ சரி! சரி! மேடம் மலை மேல இருக்குறதை மறந்துட்டு ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.” என்று நித்யமயூரி சிரிக்க.
ஆழினியும் சிரித்தாள்.
ஆழினி சிறு வயதிலே பெற்றோரை இழந்தவள். காதல் திருமணம் செய்த அவளது பெற்றோர், சொந்தப் பந்தத்திற்கு பயந்து ஊட்டியில் வந்து அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர். ஏழு வயது வரை ஆழினி அவர்களின் கண்ணின் கருமணியாக வளர்ந்தாள்.
அதற்குப் பிறகு அவளது வாழ்க்கையில் விதி விளையாடியது.
ஒரு மழை நாளில், அவளது பெற்றோர் வேலைக்கு சென்றவர்கள், திரும்பி வரவே இல்லை. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
பள்ளி விட்டு திரும்பி வந்து தவித்த ஆழினியை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் தான் அருகில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர்.
சிறு வயதிலிருந்தே பிரபல பள்ளியில் படித்தவள் தான், புத்திக்கூர்மையுடன் இருப்பவளும் கூட.
நன்கு படிப்பவள் என்பதால் ஸ்காலர்ஷிப் மூலம் அவளுக்கு அந்த தனியார் பள்ளியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதாவது வசதியானவர்கள் ஏதாவது ஒரு குழந்தையை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான படிப்பு, உடை எல்லாவற்றையும் அவர்களே செய்வார்கள்.
அந்தக் குழந்தை தன் சொந்தக்காலில் நிற்கும் வரை இந்த உதவி தொடரும்.
ஆழினிக்கும் இது போல் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அங்கு தான் மதுரா, நித்யமயூரி ஆழினி மூவரும் நெருங்கிய தோழியாகினர்.
மதுராவுக்கும், நித்யமயூரிக்கும் திருப்பூர் தான் சொந்த ஊர். சிறந்தப் படிப்புக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் அவர்கள் குடும்பத்தினர் அவர்களை சேர்த்து விட்டிருந்ததனர்.
பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஆழினி பேஷன் டிசைனிங்கைத் தேர்ந்தெடுக்க. அவளை விட்டு பிரிய மனம் இல்லாத மயூரியும் அதே படிப்பைத்தேர்ந்தெடுத்தாள்.
மயூரியின் குடும்பத்தினரும் அவளது விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை.
அவர்களது குடும்பத் தொழிலோடு, அவளது படிப்புக்கும் தொடர்பிருக்க. மகிழ்வுடனே அவளை ஃபேஷன் டிசைனிங்கில் சேர்த்து விட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் ஊட்டியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் படிக்க.
மதுராவோ எப்போதும் அதிகமாக பேசுவதும், மற்றவர்களுடன் ஆர்குயூ மென்ட் பண்ணுவதில் வல்லவள் என்பதால் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். பன்னிரண்டாவது முடித்துமே சேர்ந்து விட்டாள். மொத்தம் ஐந்து வருட படிப்பு.
இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டனர். ஆழினிக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் திருப்பூரிலே வேலைக் கிடைத்து விட்டது. மயூரிக்கு மேலே படிக்க ஆசை. மதுராவோ இன்னும் படிப்பை முடிக்கவில்லை.
மதுராவும் வருவதால் அதற்குப் பிறகு ஆழினி எதுவும் கூறாமல் நித்யமயூரியின் அண்ணன் திருமணத்திற்காக கிளம்பினாள்.
அவளை கிளப்புவதற்குள் மயூரிக்கு போதும், போதும் என்று ஆகிவிட்டது.
“மதுரா என்னைக்கு வருவா? இன்னைக்கே வந்துருவாளா? இல்லை நாளைக்குத் தான் வருவாளா? சென்னையிலிருந்து நேரா உங்க வீட்டுக்கு வருவாளா, இல்லை அவங்க வீட்டுக்கு போயிட்டு வருவாளா.” என்றுக் கேள்வி மேல் கேள்வி கேட்க.
“ அடியே! உனக்கு வாயே வலிக்காதா? தொணத் தொணன்னு கேள்விக் கேட்டுட்டே இருக்க. அவ முன்னாடியே வந்துட்டா. நமக்காக வெயிட் பண்றா. நம்ம போய் திருப்பூர்ல காலடி வச்சா போதும். அவளும் வந்திடுவா.” என்று ஆழினியை முறைத்தாள் நித்யமயூரி.
நித்யமயூரியின் கோபத்தைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள் ஆழினி.
மௌனமாக வந்தத் தோழியைப் பார்த்த நித்யமயூரியோ,” இன்னும் எத்தனை செகண்ட்டுக்கு அமைதியா வர்றேனுப் பார்க்குறேன்.” என்று கேலி செய்தாள்.
ஆனால் அவளுக்குத் தெரியவில்லை. இனி இந்த மௌனம் தான் ஆழினியின் மொழியாக இருக்கப் போவதை…