மௌனம் -6
இனியன் மகனின் அறைக்குள் நுழைய, அங்கோ கவிதா மகனின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
அதை பார்த்ததும், ‘ எப்படி இருக்க வேண்டிய நாள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு இருக்கிறதுக்கு பதிலா இப்படி எல்லாரும் அழுதிட்டு இருக்கிறோமே.’ என்று எண்ணியவருக்கு வலித்தது.
அவருடைய ஃபோனோ விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மண்டபத்தில் இருந்து சமையல்காரர் தான் அழைத்திருந்தார்.
இன்று இரவிலிருந்து சமையலுக்கு சொல்லி இருக்க. அவர் கடமை தவறாமல் அழைத்திருந்தார்.
பெருமூச்சு விட்டுக் கொண்டவரோ, ஃபோனை அட்டென்ட் செய்தார்.
“ம்! சொல்லுங்க. நீங்க உங்களுக்கு மட்டும் சமைச்சுக்கோங்க. அங்கே ரூம் இருக்கும். தங்கிக்கோங்க. மத்த விஷயத்தை நாளைக்கு வந்து நேர்ல பேசுறேன்.” என்றுக் கூற.
அதைக் கேட்டதும் செழியனின் முகம் இறுகியது.
இனியன் ஃபோனை வைத்ததும் நிமிர்ந்து அவரை கூர்ந்து பார்த்தவன், “ எதுக்கு இன்னமும் டிலே பண்ணிட்டு இருக்கீங்க. கல்யாணம் நின்னுடுச்சுனு சொல்லி, அவங்களுக்கு செட்டில் பண்ணி அனுப்ப வேண்டியது தானே.”என்றுக் கூற.
அதைக் கேட்டதும் கவிதாவின் அழுகை இன்னும் கூடியது.
‘பார்த்து, பார்த்து ஒவ்வொன்னையும் ஏற்பாடு பண்ணோமே. இந்த தனு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாளே. அமைதியான பொண்ணுன்னு எவ்வளவு பெருமையா சொல்விருப்போம். ஆனால் எப்படிப்பட்ட துரோகத்தை என் பையனுக்கு செஞ்சுட்டுப் போயிட்டா.’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தார்.
இனியனோ,” உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றுக் கூற.
“சொல்லுங்கப்பா!”
“நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத் தான் செய்வேன்.”
“தெரியும்பா.”
“இப்போ உனக்கு அதே தேதியில் வேறொரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.” என்று இனியன் கூற.
“என்னப்பா சொல்றீங்க.”என்றவன், தனது காதைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.
கவிதாவோ அழுகையை நிறுத்தி விட்டு,’ இதெல்லாம் நடக்குமா?’ என்பது போல் ஆர்வமும், கவலையுமாக இனியனைப் பார்க்க
“நீ சரியா தான் கேட்டுருக்க செழியன்.” என்றார் இனியன்.
“அப்பா! விளையாடதீங்க.” என்று எரிச்சலுடன் கூறினான் வியன் செழியன்.
“உண்மையா தான்டா சொல்றேன் செழியா.” என்றவரின் குரலில் இருந்த உறுதியிலே திகைத்துப் போனான் வியன்செழியன்.
“அப்பா! எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்க மாட்டேன். ஆனா இப்ப வேண்டாம்.”
“என் மேல நம்பிக்கை இல்லையா செழியா. நான் எடுக்கும் முடிவு தப்பா இருக்கும்னு நினைக்கிறியா.” என்று அவனைப் வலியுடன் பார்த்தார் இனியன்.
அவரது முகத்தைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் மறுத்து சொல்ல முடியவில்லை.
“ உங்க இஷ்டம்!” என்றான்.
‘எப்படியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காது.’ என்று எண்ணினான். ஆனால் அவனது தந்தையின் வேகத்தை அவன் அறியவில்லை.
மகனது சம்மதம் கிடைத்த உடனே கீழே சென்றவர், அன்னையின் அறைக்குத் தான் சென்றார்.
அங்க சென்று தன்னுடைய விருப்பத்தை சொல்ல.
“ அது என் பேத்தி இருக்க வேண்டிய இடம்.” என்று லட்சுமி கண் கலங்கினார்.
“ உங்கப் பேத்தி தான் உங்க ஆசையில மண் அள்ளிப் போட்டுட்டு போயாச்சே. அப்புறம் ஏன் அதைப் பத்தியே பேசுறீங்க.” என்று சற்று எரிச்சலாகக் கூறினார் இனியன்.
“அவ குழந்தை. அவளுக்கு என்னத் தெரியும். அவ மனசை கலைச்சிக் கூட்டிட்டு போயிட்டான் அந்த எடுப்பட்ட பய. அவன் யாரோ? எப்படிப்பட்டவனோ தெரியலையே? அவளை எப்படியாச்சும் கூட்டிட்டு வந்து நம்ம செழியனுக்கே திரும்ப கட்டி வைப்போம் டா. தனு நம்ம வளர்த்தப் பொண்ணு.” என்று லட்சுமி, மகனின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்ச.
“ இங்க பாருங்கமா. இந்த ஃபோட்டோவை பாருங்க. பிடிக்காம கல்யாணம் பண்ண மாதிரியா இருக்கா. நம்ம தனு அந்தப் பையனோட கையை எவ்வளவு இறுக்கமா பிடிச்சிருக்கானு பார்த்தீங்களா? இதைப் பார்த்தும் அவ அந்தப் பையனை விட்டுட்டு வருவான்னு உங்களுக்க்குத் தோணுதா?” என்றவாறு அந்த ஃபோட்டோவை காட்டினார்.
தன்ஷிகா அனுப்பிய ஃபோட்டாவைப் பார்த்தால், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்தது போலவே இல்லை. கொஞ்சம் கூட பயமோ, குற்ற உணர்வோ இல்லாமல் இவர்களுடைய முறைப்படி சிவப்பு வண்ணப் புடவை அணிந்து, பூரிப்பும், வெட்கமுமாக உரிமையோடு அவனுடைய கைப்பற்றி இருக்க. . இது பெண்ணின் விருப்பத்தோடு கூடிய திருமணம் என்று அதைப் பார்த்த எல்லாருக்குமே புரியும். லட்சுமிக்கும் புரிந்தது. ஆனால் மனம் தான் ஏற்றுக் கொள்ள மறுத்தது.
“அதுக்காக என் பேத்தியை தேடாமல் விட்டுடுவீங்களா. அவ வாயால நடந்ததை கேட்டாத் தான் நான் நம்புவேன்.”
“தனுவை தேடுறது என் பொறுப்பு. அதான் அந்தப் பையனோட ஃபோட்டோ இருக்கே. அதை வச்சு விசாரிக்கலாம். அதேப் போல என் பையனுக்கு நம்ம முடிவுப் பண்ண அதே தேதியில கல்யாணம் நடக்கணும். நடக்கும். எவ்வளவு ஏற்பாடு பண்ணி, ஊர் முழுவதும் பத்திரிகை கொடுத்து வச்சிருக்கோம். நம்ம சொந்தப் பந்தம் எல்லோரும் வருவாங்க. ஒவ்வொருத்தவங்கக் கிட்ட போய் இந்த கல்யாணம் நடக்காதுனு சொல்ல முடியாது. இது நம்மக் குடும்பத்தோட கௌவுரப் பிரச்சனை.” என்றுக் கூற.
இவ்வளவு நேரம் தம்பி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அகிலன், “இனியா! கௌவுரவத்துக்காக அவசரப்பட்டு நம்ம செழியன் வாழ்க்கையில் விளையாடதே.”என்றார்.
“அண்ணா! அதுக்காக மட்டும் சொல்லல. இப்போ விட்டா, அவன் அப்புறம் கல்யாணத்துக்கே ஒத்துக்க மாட்டான்.” என்று இனியன் கூற.
“ஆமாங்க! தம்பி சொல்றது சரிதான்.” என்று சுமதியும் கூற.
அங்கு நடப்பதையெல்லாம் பார்த்த லட்சுமியோ, ‘எல்லாம் எ
தன் கை மீறி போகுதே.’ என்று எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவரோ, திடீரென்று ஏதோ தோன்ற,
“பொண்ணுக்கு எங்கடா போவ?” என்று வேகமாக வினவினார்.
“நம்ம சொந்தத்துல இருக்குற பொண்ணுங்களைப் பற்றி விசாரிக்கணும்.” என்று இனியன் கூற.
“கவிதாவோட அண்ணன் பொண்ணை கேட்போமா?” என்று சுமதி கூற.
“ஆமாம் நம்ம செழியனோட தாய்மாமாவாச்சே. பொண்ணை தர மாட்டாங்களா?” என்று அகிலனும் கூற.
கவிதாவோ தயக்கத்தோடு, “அதெல்லாம் சரி வராது.
என் அண்ணன் என்னோட சம்மந்தம் போடணும்னு ஆசையோடு இந்த வீட்டு படியேறி வந்தாங்க. ஆனால் அவங்களை அவமானப்படுத்திட்டு இப்போ எந்த மூஞ்ச வச்சுட்டு கேட்பேன்.” என்றுக் கூற.
அங்கிருந்தவர்களுக்கு கவிதாவின் உணர்வு புரிந்தது.
பாட்டியின் அருகே இருந்த நித்யமயூரிக்கோ ஒரு எண்ணம் உதித்தது.
“அப்பா! எனக்கு ஒரு யோசனை தோணுது. சொல்லட்டுமா?” என்று வினவ.
“சொல்லுடா!”
“நம்ம ரிலேட்டிவ்ஸ் கிட்ட கேட்டா அவங்களுக்கெல்லாம் என்ன ஏதுன்னு விளக்கம் சொல்லிட்டு இருக்கணும். அதுவுமில்லாமல் ஊர் ஃபுல்லா விஷயத்தை பரப்புவாங்களேத் தவிர, நமக்கு உதவ மாட்டாங்க. பேசாமல் என் ஃப்ரெண்டை நம்ம அண்ணனுக்கு பார்க்கலாமா?” என்று நித்யமயூரி கூற.
“ஆமா இது கூட நல்ல ஐடியாவே இருக்கு. மதுவோட அப்பா கூட எனக்கு ப்ரெண்ட் தான்.” என்று அகிலன் கூற.
“ ஐயோ! பெரியப்பா மதுவோட ஆம்பிஷன் வேற. அவ ஒத்துக்க மாட்டா. நான் சொன்னது ஆழினி. அவளுக்குன்னு சொந்த, பந்தம் யாரும் இல்லை. அவளோட சம்மதம் இருந்தாலே போதும். ரொம்ப, ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ.”என்றாள்.
அகிலனும், இனியனும் ஒருவரை, ஒருவர் யோசனையுடன் பார்க்க.
கவிதாவோ, “ஆழினி! ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளைப் பிடிக்கும். அவளையே நம்ப செழியனுக்கு கேளுங்க.” என்றார்.
“ஆமாம்! ஆழினி நம்ம செழியனுக்கு பொருத்தமா இருப்பா.” என்று சுமதியும் கூற.
“ சரிமா ஆழினியை வரச் சொல்லு. நாங்க பேசுறோம்.” என்று அகிலன் கூற.
“சரிங்க பெரியப்பா கூட்டிட்டு வர்றேன்.” என்றவள், தடதடவென மாடியேறி, ஆழினி இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
தோழியை நினைத்து ஆழினியும், மதுவும் கவலையுடன் பேசிக் கொண்டிருக்க.
மயூரியோ மூச்சிறைக்க வந்தாள். முகமோ மகிழ்ச்சியில் பளபளத்தது.
தோழியின் கோலத்தைப் பார்த்து, “என்னாச்சுடி? எதுக்கு இப்படி ஓடி வர்ற?” என்று அவர்கள் பதற.
“ ஒன்னும் இல்லடி!” என்றவள் மூச்சு வாங்கக் கூற.
ஆழினி வேகமாக தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பருகியவளோ, “தேங்க்ஸ் டி!“ என்று விட்டு, “ம்கூம் இனிமே அப்படி சொல்லக்கூடாது. அண்ணினு தான் சொல்லணும்.”என்றுக் கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் ஆழினி.
“எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என்று வினவினாள் நித்யமயூரி.
‘எப்படியும் அவள் சம்மதம் தான் சொல்லுவாள்.’ என்று உறுதியோடு நினைக்க.
அவளோ, “என்னடி லூசுத்தனமா உளறுற?”என்று பதறினாள்.
“உண்மையாக தான் சொல்றேன். அப்பா அதே தேதியில் கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க. எங்க ரிலேட்டிவ் சைட்ல பொண்ணு பார்க்கணும்னு பேசினாங்க. ஆனால் நான் தான் உன்னையே அண்ணனுக்கு கேட்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். இதைச் சொன்னதும், உன் முகத்துல வர்ற சந்தோஷத்தை பார்க்கலாம்னு வந்தா, நீ என்னென்னா கேள்வி மேல கேள்விக் கேட்குற.” என்றுக் குறைப்பட்டுக் கொண்டாள் நித்யமயூரி.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஆழினி தடுமாற.
“இதெல்லாம் சரி வராது மய்யூ!” என்று பட்டென்று கூறினாள் மதுரா.
“இந்த சான்ஸ் நமக்கு மறுபடியும் கிடைக்காது மது.” என்று மயூரி கூற.
“ நீ புரிஞ்சுதான் பேசுறியா? இல்ல புரியாம பேசுறியா? ஏற்கனவே ஒரு தடவை லவ் பண்றேன்னு சொல்லி அவ காயப்பட்டு, இப்பத் தான் அதிலிருந்து வெளிவந்திருக்கா.”
“எனக்கும் தெரியும் டி. இப்போ தான் அண்ணன் கல்யாணம் நின்னுடுச்சே.”
“மய்யூ! இவளோட லவ்வை உங்க அண்ணன் மறுத்துட்டார் தானே. இவளைப் பத்தி பேச்சே எடுக்கக் கூடாதுனு சொன்னார்னு நீதானே சொன்ன.”
“ஆமாம் டி. ஆனால் நம்ம ஆழி தான் எங்க வீட்டு மருமகள்னு அப்பா முடிவுப் பண்ணிட்டா, எங்க அப்பா பேச்ச அண்ணன் மீற மாட்டார்.”
“மய்யூ! உங்கண்ணனுக்கு இவளைப் பிடிக்காது. உங்க அத்தை பொண்ணைத் தான் பிடிக்கும்னு தெரியும். இப்ப அவரை கார்னர் பண்ணி ஆழினியை கட்டி வச்சா, அதோட பிரச்சனை முடிஞ்சிடுமா? அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சியாடி நீ. உங்க அண்ணனை மட்டும் நினைக்கிறியே! ஆழினியோட மனநிலை எப்படி இருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”என்று கொஞ்சம் கோபமாகவே வினவினாள் மதுரா.
“ நான் ஆழியைப் பத்தி யோசிக்காமல் முடிவேடுத்தேன்னு நினைக்கிறாயாடி. எங்க அண்ணனை மட்டும் நா நினைக்கல. இவளுக்காகத்தான் முக்கியமா யோசிக்கிறேன். இவ இன்னும் என் அண்ணன நினைச்சுட்டு தான் இருக்கா. அதுவே இந்தக் கல்யாணத்துக்கு கூப்பிடும் போது தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு.
நீ வேணும்னா ஆழி கிட்ட கேளு. இப்ப வேணா எங்க அண்ணனுக்கு அவமேல விருப்பம் இல்லைன்னாலும், போகப், போக நம்ம ஆழியைப் பத்தி அண்ணா புரிஞ்சிப்பாங்க. ஆனால் இந்த வாய்ப்பு விட்டா, வேற எந்தப் பொண்ணையாவது வீட்ல எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அவன் லைஃப் எப்படியும் ஸ்மூத்தா மாறிடும். ஆனா இவளோட லைஃப் அதுக்காக தான் யோசிக்கிறேன்.
இப்ப இந்த கல்யாணம் நடந்தா நானும், ஆழியும் எப்பவும் ஒண்ணா இருக்கலாம். அவளை நான் பாத்துப்பேன். அவளும் படிச்சுட்டு எங்க கம்பெனிய பார்த்துப்பா, நானும் நா ஆசைப்பட்ட மாதிரி என் மேல் படிப்பை முடிச்சிட்டு எங்க கம்பெனிக்கு வருவேன். மேடம் அதுக்குள்ள பெரிய பொறுப்பில இருப்பாங்க. அது எல்லாம் நடக்கணும்னா அதுக்கு ஓரே வழி ஆழி இந்த க்ல்யாணத்துக்கு ஓகே சொல்லணும்.”
நித்யமயூரியின் பேச்சைக் கேட்டு மறுக்க முடியாமல் தலையசைத்தாள் ஆழினி.
மதுராவிற்கோ, ‘ப்ச்! ஆழினி சொன்னபோதே இங்கிருந்து கிளம்பி இருக்கணும். இப்போ தேவையில்லாமல் அவளை பிரச்சனையில் இழுத்து விட்டோமே.’ என்று எண்ணித் தவித்தாள்.
“என்னடி ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறீங்க.” என்று நித்யமயூரி வினவ.
“ அது வந்து மய்யூ! ஒரு நிமிஷம் நான் ஆழி கிட்ட தனியா பேசணும்.” என்றுக் கூறி ஆழினியை பால்கனிக்கு அழைத்துச் சென்றாள் மதுரா.
“ஆழி! நீ யாருக்காகவும் பார்க்காதே. உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா? இல்லையா?”
“மய்யூ…” என்று ஆழினி ஆரம்பிக்க.
“ப்ச்! அவ சொல்றதுக்காக எல்லாம் நீ தலையாட்டணும்னு அவசியம் கிடையாது. உனக்கு இந்தக் கல்யாணத்துல முழு விருப்பம் இருந்தா மட்டும் ஓகே சொல்லு. உனக்காக மட்டும் சொல்லல. மய்யூ அண்ணனுக்காகவும் தான் சொல்றேன். ஏற்கனவே அவர் காயப்பட்டிருக்காரு. அந்தக் கோபம் எல்லாம் உன் கிட்ட தான் பாயும். நீ அதுக்கு எல்லாம் தயாரா இருக்கணும். நான் சொல்றது புரியுதா?” என்றுக் கூற.
“புரியுது. நான் இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்றதுக்கு ஒரே காரணம். செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்குத் தான்.” என்றுக் கூற.
அதைக் கேட்டதும் அவளை இரக்கமாகப் பார்த்தாள் மதுரா.
அந்த அறைக்கு அருகே இருந்த பால்கனியில் இருட்டில் கைக் கட்டிக் கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வியன் செழியனின் காதுகளில் அவளது வார்த்தைகள் விழுந்தன.
அவர்கள் இருவரும் அடுத்தறையில் அவன் இருப்பான் என்பதை அறியாமல் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட செழியன் முகம் இறுகி நின்றான்.