• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆழியே மெளனம் ஏனோ - 9

Vishakini

Moderator
Staff member
மௌனம் – 9

ஐந்து வருடங்களுக்கு முன்பு...

கல்யாண மண்டபத்திற்கு அனைவரும் வந்து விட்டனர்.

தன்ஷிகா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வர மாட்டேன் என்றுக் கூறியது எல்லாருக்கும் வருத்தமே. அதை வெளிக் காட்டாமல் அனைவரும் சிரித்த முகத்துடன் இருக்க முயன்றனர்.

"வரமாட்டேன்" என்று கூறிய உமாவை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தனர். லட்சுமியின் அருகில் உமாவும், உமாவின் அருகில் சிந்துஜாவும் அமர்ந்திருந்தனர். ஆனால், உமாவின் மனமோ மகள் கூறிய வார்த்தையிலேயே சிக்கித் தவித்தது.

‘எப்படி எல்லாம் வளர்த்தோம்... எப்பவுமே அமைதியாக இருப்பவள், இப்படிப் பண்ணிட்டாளே! எங்களை விட அவன்தான் முக்கியம்னு போயிட்டாளே…’ என்று மனம் வலிக்க வருந்திக் கொண்டே அங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

மண்டபத்தில் கல்யாணக் களையே இல்லாமல் இருந்தது. அந்தச் சூழலை மாற்றுவதற்காக நித்யமயூரி பல முயற்சிகள் செய்து கொண்டிருந்தாள்.

ஆழினியை அண்ணனுக்கு மணம் முடிக்க முடிவு எடுத்தவுடன், அவர்களுடைய நட்பூக்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் புதிதாக ஒரு அழைப்பிதழை தயாரித்து அனுப்பியிருந்தாள்.

திருமணத்தன்று வருவதாக இருந்த அவர்களும், ஆழினியின் திருமணம் என்றதும் முன்னதாகவே கிளம்பி வந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த மண்டபமே கலகலப்பால் நிரம்பியது.

ஹல்தி, மெஹந்தி எல்லாம் ஒரு வழியாக நடந்து முடிந்திருக்க.

சங்கீத் நிகழ்ச்சி தொடங்கியது. டிஜே பாடல்களை ஒலிக்க விட, முதலில் நித்யமயூரி நடனமாட ஆரம்பித்தாள்.

அவளுடன் சேர்ந்து அவர்களது தோழர், தோழிகளும் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். அவர்களின் ஆட்டம், பாட்டத்தில் ஆழினியின் முகத்திலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அவளையும் இழுத்து ஆட விட்டனர். முதலில் தயக்கத்துடன் இருந்த ஆழினி, பிறகு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றாள்.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உமா, தன் அருகில் இருந்த சிந்துஜாவிடம்,

" இவங்க எல்லாம் யாரு?" என்று வினவ.

"நம்ம மய்யுவோட ஃபிரெண்ட்ஸ் அத்தை." என்றாள் சிந்துஜா.

"அப்படியா..." என்று மெதுவாகச் சொன்ன உமா, சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், பிறகு லட்சுமியிடம் திரும்பி
"அம்மா!எதுக்கும் உங்க சின்ன பேத்தி மேலயும் ஒரு கண்ணு வச்சுக்கோங்க. நம்ம தனு அமைதியானவ. அவளே நம்மளை ஏமாத்திட்டு போயிட்டா‌. இது போல இன்னொரு ஏமாற்றத்தை நம்மளால தாங்க முடியுமா? அங்க பாருங்க... ஆம்பள பசங்களோட சேர்ந்து அவ எப்படி ஆட்டம் போட்டுட்டு இருக்கா..." என்றார்.

அதைக் கேட்ட சிந்துஜாவோ " அத்தை! இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம் தான். இவங்க எல்லாம் மய்யூவோட ஃப்ரெண்ட்ஸ். நம்ம மய்யூவும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது," என்றாள்.

"நானும் என் பொண்ணை அப்படித்தான் நினைச்சேன். ஆனா, அவ என்னை ஏமாத்திட்டா. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.

இதுல படிக்க வேற வெளிநாட்டுக்குப் போகணும்னு சொல்றா. இங்க கண்ணு முன்னாடியே இருக்கும்போது அடங்க மாட்டேங்குறா. என்னவோ போங்க... என் அண்ணன் மக மேல இருக்கிற ஆதங்கத்துலதான் சொன்னேன்." என்றுக் கூறிவிட்டு எழுந்துச் சென்றார்.

உமா சென்ற திசையையே யோசனையுடன் பார்த்த
லட்சுமியின் மனதில் ஒரு சிறிய அதிர்வு உண்டானது.

உமாவை தனியாக விடாமல் சிந்துஜாவும் அவரின் பின்னே சென்றாள்.

லட்சுமி இப்பொழுது மயூரியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் ஒரு திட்டம் தோன்றிவிட்டது. அதை வெளியில் கூறாமல் அமைதியாக இருந்தார்.

திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிந்து, குறித்த தேதியில், குறித்த நேரத்தில், உறவினர்களின் அடங்கிய முணுமுணுப்புடன் வியன் செழியன், ஆழினியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

வீடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

கவிதாவிற்கு மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் நிம்மதி. ஆழினியை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஆனால் செழியனின் முகத்தில் இன்னும் சிரிப்பு வரவில்லை என்பது மட்டுமே அவருக்கு ஒரே குறை. இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கிவிட்டார்களா இல்லையா என்பது கூட அவருக்குத் தெரியாமல் குழம்பிப்போயிருந்தார்.

ஆனால் தினமும் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு சுறுசுறுப்பாக வளைய வரும் மருமகளை நினைத்து அவருக்கு பெருமையாகவே இருந்தது.

‘கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகப் போகிறது. இன்னும் வெளியே எங்கேயும் போகல. ஹனிமூனுக்காவது அனுப்பலாம். அப்போதாவது இருவரும் மனம் விட்டு பேச வாய்ப்பு இருக்கு. அத்தைக் கிட்ட இதைப் பத்தி பேசணும்.’ என்று எண்ணியவர் லட்சுமியைத் தேடிச் சென்றார்.

ஆனால் லட்சுமியோ,

"உன் பையனைப் பத்தி மட்டுமே யோசிட்டு இருக்கியே. உன் பொண்ணைப் பத்தி ஏதாவது யோசிக்கிறியா?”

“மய்யூவைப் பத்தி யோசிக்கிறதுக்கு இப்போ என்ன அவசரம் அத்தை?”

“ நான் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். உடனே கல்யாணமும் பண்ணலாம்னு இருக்கேன்," என்று கூறினார்.

"மய்யூ சின்னப் பொண்ணு அத்தை?" என்று கவிதா கூற.

"என்ன சின்னப் பொண்ணு? அவ வயசுதானே நம்ம தனுவுக்கும். அப்புறம் அந்தப் பொண்ணு ஆழினிக்கும்..."என்று கூறினார்.

அந்தப் பொண்ணு என்றுக் கூறுவதிலே அவர் இன்னும் ஆழினியை மருமகளாக முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார் என்பது கவிதாவிற்கு புரிந்தது.

அதைப் பத்தி கவலைப்படுவதா, இல்லை பாரிஸ்ல ஃபேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்று கனவுகளை வளர்த்திட்டு இருக்க மகளை நினைத்து கவலைப்படுவதா என்று குழம்பி போயிருந்தார்.

"சாயங்காலம் எல்லாரையும் வரச் சொல்லு. அப்போ பேசுவோம். உன் பொண்ணு கிட்ட இப்போ எதுவும் சொல்லாத," என்று லட்சுமி கூறினார்.

"ஐயோ... சாயங்காலம் என்ன நடக்கப் போகுதோ!" என்று மனக்குழப்பத்துடன் அங்கிருந்து சென்றார் கவிதா.

முகமெல்லாம் பயம், குழப்பம், தயக்கம் என பல உணர்வுகள் கலந்தபடி ஆழினி கவிதாவை தேடிக் கொண்டு வந்தாள்.

"அத்தை..." என்று ஏதோ சொல்லத் தொடங்க.

அவளை நிமிர்ந்து பார்த்த கவிதா,

"என்னம்மா?" என்றார்.

"அது வந்து... ஈவினிங்..."
என்று அவள் ஆரம்பிக்க,

"எங்கயாவது வெளியே போணுமா? இன்னைக்கு வேண்டாம்‌டா. பாட்டி எல்லார்கிட்டயும் பேசணும்னு சொல்லியிருக்காங்க. இன்னொரு நாள் போகலாம்," என்று அவள் சொல்ல வந்ததை முழுவதுமாகக் கேட்காமல் கூறிவிட்டு, தன் கணவரைத் தேடிச் சென்றார் கவிதா.

ஆழினியின் முகமும் உடனே மாறிவிட்டது. கண்கள் கலங்குவது போல இருந்தது. ‘எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. அதுவும் இல்லாமல் அடிக்கடி குமட்டுகிறது. தனக்கு என்னவோ ஆச்சு. என்னன்னு தெரியல. ஹாஸ்பிடலுக்கு போகலாம்னு அத்தை கிட்ட சொல்லலாம்னு பார்த்தா, அவங்க கேட்க கூட இல்ல. சரி மய்யூ கிட்டயாவது சொல்லுவோம்.’ என்று எண்ணியவள், அவளைத் தேடிச் சென்றாள்.

ஆனால் மயூரியோ வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

"எங்கடி கிளம்புற?" என்று ஆழினி வினவ.

"நான் நம்ம மேமை பார்த்துட்டு வரேன். ஸ்டடீஸ் பற்றி டீடெயில்ஸ் கேக்கணும்."

"ஊட்டிக்கா போற? அத்தை கிட்ட சொல்லிட்டியா? பாட்டி வேற ஏதோ ஈவினிங் பேசணும்னு சொன்னாங்களாம்." என்று ஆழினி கூற.

"அடியாத்தி... அப்போ நான் உடனே கிளம்புறேன். நம்ம அருணோட தான் போறேன். சீக்கிரம் வந்துடுறேன். இப்போ போய் அம்மா கிட்ட வெளியே போறேன்னு சொன்னா விட மாட்டாங்க. நான் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணிடுறேன். எங்கேன்னு கேட்டா சொல்லு. எப்படியும் அஞ்சு மணிக்குள்ள வந்துடுவேன்."
என்று ஆழினியின் மறுமொழியை எதிர்ப்பார்க்காமல் அவசரமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள் மயூரி .

ஏற்கனவே தனக்கு என்னவோ ஏதோ என்று பயந்து கொண்டிருந்த ஆழினியோ, மயூரியின் செயலில் பயம் இன்னும் அதிகமானது. என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் போல் தன் அறைக்குச் சென்று ஒதுங்கிக் கொண்டாள்.

அங்கு கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த செழியன் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

அவன் பார்வையைப் புரிந்துகொண்ட ஆழினி, "டயர்டா இருக்கு..." என்று சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,"உடம்பு சரியில்லைனா, அம்மாவோடவாவது‍, மயூரியையாவது கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்குப் போ..." என்றுக் கூறி, அவனது கடமை முடிந்து விட்டதென கிளம்பிவிட்டான்.

அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். "அதிசயமா இன்னைக்கு இரண்டு வார்த்தைக் கூட பேசிட்டார். இதுவே அதிகம்." என்று நினைத்தவளுக்கு, தன்னுடைய வாழ்க்கையை எண்ணி கவலையாக இருந்தது.

எதை எதையோ யோசித்தபடியே அப்படியே உறங்கிவிட்டாள்.

காலையிலிருந்து அவள் எதுவும் சாப்பிடவில்லை. அதைக்கூட யாரும் கவனிக்கவில்லை. எப்போது கவனிக்கும் கவிதாவோ, அன்று தன் மாமியார் போட்ட குண்டில் பயந்துபோயிருந்தார்.

சுமதியும் வெளியூருக்குச் சென்றிருந்ததால், என்ன செய்வது என்று கவிதாவுக்குத் தெரியவில்லை.

மாலையில் வீட்டில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கப் போவதாக எல்லோரிடமும் லட்சுமி கூறினார்.

அந்த நேரத்தில் சுமதியும் வீட்டிற்கு வந்தது, கவிதாவிற்கு ஒரே ஆறுதலாக இருந்தது.

ஒருவழியாக மதிய நேரத்தில் விழித்த ஆழினி கீழே இறங்கி வந்தாள். கீழே வீடே பரபரப்பாக இருந்தது.

"வாடியம்மா... நல்லா ரெஸ்ட் எடுத்தியா? உனக்கென்ன மகாராணி நல்லா தூங்கிட்டு வர. இங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு எதையும் கவனிக்கிறது இல்ல." என்றுக் கடிந்துக் கொண்டார் லட்சுமி.

"பாட்டி... அது வந்து..." என்று அவள் தயக்கத்துடன் ஆரம்பிக்க,

"உன் கதையைக் கேட்க இப்போ நேரமில்லை. இங்க வீடே ரெண்டுபட்டு கிடக்குது. கொஞ்சமாச்சும் உன் குடும்பத்து மேல அக்கறை இருக்கா?" என்று கோபமாக வினவ.

"என்ன ஆச்சு பாட்டி?" என்று அவளும் பயத்துடன் கேட்டாள்.

"உன் ஃப்ரெண்டைக் காலையிலிருந்து காணோம். ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு. வாட்ச்மேனிடம் கேட்டா, ஒரு பையனோட பைக்கில் போனதா சொல்றாரு. அந்த பைக் யாரோடது, அவன் யாருன்னு விசாரிச்சுட்டு இருக்கோம்," என்றார்.

அப்போதுதான் நிலைமையின் தீவிரம் அவளுக்குப் புரிந்தது.

அங்கே கவிதா அழுதுகொண்டிருந்தார். செழியன் யாருக்கோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

பயத்துடன் கவிதாவிடம் சென்ற ஆழினி,"அத்தை…” என்று தயக்கத்துடன் அழைத்தாள்.

“என்னம்மா? பாட்டி பேசுறதை பெருசா எடுத்துக்காதே." என்றார்.

" அது இல்லத்தை. மய்யூ மேடமைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனா. “ என்று தயங்கியவாறே கூறினாள்.

“என்ன சொல்ற ஆழினி?" என்று கவிதா கலங்கிய குரலில் கேட்டார்.

"ஆமா அத்தை... படிப்பு விஷயமா அவங்கக் கிட்ட பேசணும்னு சொல்லிட்டு போனா. சாயங்காலம் வந்துடுவேன்னு சொன்னா."

"ஏம்மா, இதை வீட்டுல சொல்ல மாட்டியா? எல்லாரும் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா?" என்று கவிதா கண்டித்தார்.

அவளோ ஒன்றும் சொல்லாமல் கண்கலங்க நிற்க.

அவளருகே வந்த செழியனோ,"உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? இல்லையா?" என்று கேட்க.

அவனது கோபத்தில் பயந்தவளோ, ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.

செழியனோ அவளது செயலில் முறைத்தான்.

"எனக்கு எதுவும் தெரியாது. அவ என்கிட்டயும் எதுவும் சொல்லல. அத்தைக்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைச்சேன்," என்றாள்.

இதுவரை அவளிடம் கடிந்து பேசாத அமுதனும், இனியனும் கூட

"ஏம்மா, இன்னும் கொஞ்சம் நீ பொறுப்பா இருக்கணும். அவ விளையாட்டுத்தனமா சொல்லாமல் போயிட்டா. நீயாவது எங்கக் கிட்ட சொல்லியிருக்க வேண்டாமா?" என்று மாறி மாறிக் கேட்டனர்.

அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழினியின் மனதை குத்தியது. குற்ற உணர்வில் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அப்போது லட்சுமி கோபமாக,

"என்ன சொல்லிட்டாங்கன்னு அழற? குடும்பமா வளர்ந்திருந்தா தானே பொறுப்பு தெரியும்! நினைச்ச நேரம் கீழே வர, நினைச்ச நேரம் தூங்குற. வேலை இருக்கோ இல்லையோ, எல்லாரிடமும் பேசிக்கிட்டு இருக்கணும். உன் அத்தைகளெல்லாம் எப்பவும் ரூம்ல தான் இருந்தாங்களா?” என்று ஆழினியை கடிந்தவர்,

“சரி... சரி... அதான் மய்யூ இருக்குற இடம் தெரிஞ்சிருச்சே. எல்லோரும் அவங்க, அவங்க வேலையைப் பாருங்க. செழியா! எதுக்கும் அவங்க மேடமுக்கு ஃபோன் போட்டு விசாரி. அப்படியே அந்தப் பொண்ணுக் கிட்ட பேசி நேரத்தோடு வரச் சொல்லு. நான் எடுத்த முடிவு சரிதான்னு சாயந்திரம் எல்லோருக்கும் புரியும்." என்றார்.

லட்சுமியின் வார்த்தைகளைக் கேட்ட கவிதாவுக்குமே, தன் அத்தை கூறியது சரிதான் என்று தோன்றியது. இதற்கு மேல் மகளின் விஷயத்தில் தினமும் பயந்து வாழ உடம்பிலும் மனதிலும் தெம்பு இல்லை.

அன்றைய மாலை உற்சாகமாக வீட்டிற்கு வந்த நித்யமயூரிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
 
Top Bottom