• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
இரவு பத்து மணியை தாண்டிக் கொண்டிருந்தது.
அடுத்தடுத்து தன் வாழ்க்கை தந்த திருப்புமுனைகளை நினைத்து நொந்து கொண்டிருந்தாள் மீரா.மாலம்மா என்ற பெண்ணுடன் அவன் சொன்ன இடத்துக்கு வந்திருந்தாள்.அது ராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பங்கள் வாழும் குவாட்டஸ் பகுதி என்பதால் பார்ப்பதற்கு மிகவும் சுத்தமானதாகவும் அதே நேரம் பாதுகாப்பானதாகவும் இருந்தது.

அளவான ஒரு சிறிய ஹால்.கிச்சன், பெரிய பெட் ரூம்.அதற்கு எதிரே இன்னொரு சிறிய அறை.ஒரு பாத்ரூம் என மிகவும் கச்சிதமானதாகவும், நேர்த்தியாகவும் அந்த குவாட்டர்ஸ் இருந்தது.

வந்த உடனேயே அவளை அமரவைத்து ஃபேனை தட்டிவிட்டவர், உள்ளேசென்று தண்ணி கொண்டு வந்து கொடுத்தார்.அவளுக்கு அது தேவையாகவே இருந்ததால் கடகடவென்று குடித்து டம்ளரை அவரிடம் நீட்டினாள்.அவர் விழிகள் கருணையுடன் அவளைப் பார்த்தது.

“நான் வொஷ் ரூம் போகனும்” என தயங்கிக் கொண்டே சொன்னாள் மீரா.அது அவருக்கு புரியாததால் சைகை மொழிக்கு மாறி புரியவைத்தாள்.அவளுக்கு குளிக்க வேண்டும் போலிருந்தது.
உடம்பெல்லாம் ஒரே கசகசப்பு.
கிட்டத்தட்ட ஆறு நாட்களாக ஒரே ஆடை.இடையில் முகம் மட்டுமே கழுவினாள்.அவளுக்கே அருவெறுப்பாக இருந்தது.
அந்த ஆடையுடன் அவள் கழித்த ஹாஸ்பிடல்,பிணவறை, என காட்சிகள் வந்துபோனது. மாற்றுத்துணி கூட இல்லாத தன் நிலையை நினைக்க நினைக்க கழிவிரக்கம் பெருகியது.யாரிடம் சொல்லி எப்படி வாங்குவது??

முகத்தை மட்டும் அடித்துக் கழுவியவள் வெளியே வந்தாள்.அவள் அழுததை முகச் சிவப்பு காட்டிக்கொடுத்ததோ? சமையல் அறையிலிருந்து கைகளை துடைத்தபடி வெளியே வந்த மாலம்மா இவள் முகத்தைப் பார்த்ததும் பதறிவிட்டார்.

“மொகத்த துவே?” எய் அன்டுவ?”மொனவக் ப்ரஷ்னயக்த? மட கியன்ன.ஒயா அன்தன்ன எபா. மம இன்னவா ஒயாட்ட”
(மகள் என்ன நடந்த?.ஏன் அழுறீங்க? ஏதாவது பிரச்சினையா?
எனக்குச் சொல்லுங்க.நீங்க அழாதீங்க.நான் உங்களுடன் இருக்கன்.)

மொழி தெரியாவிட்டாலும் அவர் கேட்பது புரிந்தது.என்னவென்று பதில் சொல்வாள்.நின்றிருந்த அழுகை மீண்டும் ஆரம்பித்தது.

”எனக்கு ட்ரெஸ் கூட இல்லை ம்மா..இது ரொம்ப அழுக்காகிட்டு. ஒரு மாதிரி நாற்றம் அடிக்குது.” கோபால் வீட்டு மகாராணி அவள்.அவளால் கொஞ்சமும் இந்த நிலையை ஏற்க முடியவில்லை.

சமாதானப்படுத்தியவர் ஓடிச்சென்று யாருடனோ ஃபோன் பேசினார்.
அவருக்கோ சுத்தமாக தமிழ் தெரியாது.அவள் கை பிடித்து அழைத்து வந்து உட்காரவைத்தவர், ,சுடச்சுட இடியாப்பமும் சம்பலும் தயாராகிக் கொண்டு வந்தார். கூடவே பாலும் இருந்தது.அவளுக்கு கொலைப்பசி இருந்தாலும் இந்த நாற்றமடிக்கும் உடையுடன் சாப்பிட பிடிக்கவில்லை.அறவே மறுத்துவிட்டாள்.

ஒருவாறாக தன்னை ஆசுவாசப்படுத்திய மீராவுக்கு உடம்பு அவ்வளவு களைப்பாக இருந்தது.
தூங்கினால் போதும் என்று கெஞ்சிய தனது கண்ணை கஷ்டப்பட்டு பிரித்து வைத்திருந்தாள்.எதிரே இருந்தவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.அவருக்கும் அதே நிலைமை தான்.பேரை மட்டும் தெரிந்து கொண்டார்.தான் சொன்னதை அவர் புரிந்தாரோ இல்லையோ மனது விட்டு ஒருத்தரிடம் பேசிவிட்டோமே என்ற ஒரு ஆறுதல் மீராவுக்கு இருந்தது.

சற்று நேரத்தில் ஒரு ஹாரன் ஒலி கேட்க, மாலம்மா எழுந்து சென்று கதவை திறந்தார்.முதலில் மீராவுக்கு ஏன் என்று காரணம் தெரியவில்லை.
உள்ளே வந்த ரொஷனை கண்டதும் தான் அவசரமாக எழுந்தாள்.அவன் பார்வை ஒரு நிமிடம் இவளை நிதானமாக பார்த்தது.மாலாம்மா அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் அவரிடம் ஒரு பேக்கை நீட்டினான்.அதை வாங்கி மீராவிடம் தர, குழப்பமான பார்வையுடன் வாங்கிக் கொண்டாள்.

அவள் தயங்கி நிற்கவும்,அவரே அதைப்பிரித்து உள்ளே இருந்த உடையை அவளுக்குக் கொடுத்தார்.
அது ஆகாய நிறத்திலான ஒரு டீசர்ட் டொப்.அவளுக்கு எப்படியும் முழங்காலைத் தாண்டி வரும்.
இதற்கு நன்றி என்ற வார்த்தை கூட போதாது.கைகூப்பி வணங்கியபடி அவரைப் பார்த்தாள் மீரா.வாங்கிக் கொண்டு வந்த அவனுக்கும் தானே நன்றி சொல்ல வேண்டும்.கண்களை சுழலவிட்டாள்.ஆனால்,அங்கே ரொஷான் இல்லை.ஏதோ சொல்லியபடி அவள் கையை கீழே இறக்கினார் மாலாம்மா.

அணிந்திருந்த உடையை துவைத்து
ஆற அமரக் குளித்து அவன் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்தாள் மீரா.பாதிப்பிரச்சினை தீர்ந்தது போல் மனது அவ்வளவு புத்துணர்வாக இருந்தது.சுத்தம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று தோன்றியது.

கால்களைத் தொடும் அவளின் நீளக்கூந்தலை மாலாம்மா தந்த வெண்ணிறத்துண்டால் ஓரளவு துடைத்தவளுக்கு,வெளியே வர கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.துப்பட்டா இல்லாமல் அதுவும் இப்படி கணுக்கால் தெரியுமளவிற்கு அவள் உடை அணிந்ததில்லை.வழியில்லாமல், முடியை முன் பின்னே விரித்துப்போட்டபடி வந்தவளைக்கண்ட மாலாம்மா நாடியில் கைவைத்தார்.காரணம் அவளது நீளக்கூந்தல்.
அதை கண்வைக்காதவரே இல்லை என்னுமளவிற்கு அவ்வளவு நீளமாகவும் அழகாகவும் இருக்கும்.

அவர் பரிமாறிய சாப்பாடு அவளுக்கு அமிர்தமாக இருந்தது.சாப்பிட்டு முடிக்கும் வரை அவள் நிமிரவே இல்லை.அவ்வளவு பசி.தன் கண்முன்னே இருக்கின்ற அத்தனை சிக்கல்களையும் அந்தப்பசி மறக்கடித்திருந்ததோ? எதுவும்
பேசாமல் நிதானமாக சாப்பிட்டவளின் அழகை ரொஷானின் விழிகள் இன்ச் இன்சாய் பருகிக் கொண்டிருந்ததைக்
கூட அவள் கவனிக்கவில்லையே.

அவள் கைகழுவி விட்டு திரும்பி வரும்போது அவனிடம் ஏதோ, சொல்லிக் கொண்டிருந்த மாலா,மீராவிடம் வந்து காலையில் வருவதாக சொல்கிறார் என்பதனை அவர் சொன்ன Morning என்ற வார்த்தையிலேயே புரிந்து கொண்டாள்.

மீராவிற்கோ இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.கடவுளே இது என்ன சோதனை.ஒவ்வொரு நேரமும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறேனே.இது என்ன ஊர் என்று கூட எனக்கு தெரியாது.இவனோட முழு பேர் கூட தெரியாது.இவன் கூட எப்டி தனியா? எனக்கு பயமா இருக்குது ஏதாச்சும் பண்ணேன் கடவுளே.மாலாம்மாவை என்ன சொல்லி தன்கூட தங்கவைப்பாள்.சரி என்று தலையாட்டித் தான் அனுப்பி வைத்தாள்.அவன் பார்வை வேறு அவளை தவிக்கவைத்தது.

மீராவோ, டென்ஷன் மிகுதியில் தன் கூந்தலை விரல்களில் சுற்றி முறுக்கிக் கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் அப்பட்டமாக பயம் தெரிந்தது.தான் இருந்த கதிரைக்கு பின்னால் நின்று கொண்டு இடைக்கிடையே கண்களை உருட்டி உருட்டி அவனைப் பார்த்த விதம் எந்த ஆணையும் ரசிக்க செய்யும்.அவளது செய்கையில் அவளை விட அவன்தான் முழித்துக் கொண்டிருந்தான் என்றே கூற வேண்டும்.அவளது கூந்தல், அவளது நிறத்தை தூக்கியடிக்கும் உடையின் நிறம்,அந்தப் பார்வை இன்னும் என்னவெல்லாமோ சொல்லலாம்.

என்ன நினைத்தானோ, ஒரு பெரிய மூச்சை இழுத்து வெளியே விட்டவன் தலையை குலுக்கிக் கொண்டான். பின்னர், “மீரா ரைட்?....” என்றான்.

ஹ்ம்ம்ம்ம்…ம்ம்ம் என்றபடி தலையை ஆட்டிவைத்தாள் மூச்சுவாங்க.
அந்தக்கண்களில் பனியாய் துளித்திருந்த நீர் அவனை,அவளை நோக்கி நெருங்கி வர வைத்தது.
அவளோ பதறிக் கொண்டு பின்னே சென்றாள்.அவளுக்கு அவனைப் பற்றி தெரிந்த நாளிலிருந்து அவன் கண்ணியமானவன்தான் என்று அவள் உள்ளம் சொன்னாலும் ,இந்த சூழலில் எல்லாம் மறந்து போனது.மளமளவென்று அவள் கண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்க “நான்…நான் வீட்டுக்கு போகணும்”என சிறு பிள்ளையாய் அழத்தொடங்கினாள் மீரா.

அவளைப் பொறுத்தவரை அவள் தைரியமானவள் தான்.எந்த சூழலையும் சமாளிக்கும் திறமை அவளுக்கு இருக்கும்.தனக்கு அம்மா இல்லை என்று உணர்ந்த நாளிலிருந்து எதையுமே தனியாகத்தான் முகம் கொடுத்திருக்கிறாள்.
“அப்பா எனக்கு பயமா இருக்கு துணைக்கு வாங்க “ என்று ஒரு தடவை கூட அவள் அழைத்ததில்லை.
அப்படிப்பட்டவளுக்கு சில நாட்களாக எல்லாமே தலைகீழாய் மாறி இருந்தது.“பே…பி என சொல்ல வந்தவனோ அதை நிறுத்திவிட்டு “மீரா அழாதீங்க.பயமில்ல.நான் தொந்தரவு பண்றல்ல..ரிலெக்ஸ்.சாப்பாடு நல்லமா?” என அவளை இயல்பாக்க முயன்றான்

அவனது அரைகுறை தமிழ் கொஞ்சம் அவளை பேச வைத்தது.

ஹ்ம்ம்..என்றாள்.நான் எப்ப வீட்டுக்கு போற? குரல் வரவேயில்லை.
தொண்டை அடைத்தது.

“எல்லாம் சரியாகும் போகலாம்.இப்போ சிட்டுவேஷன் சரில்ல.நான் ட்ரை பண்றன்.எனக்கு விளக்கமா எதுவும் சொல்ல முடியா.ஆனாலும் போகலாம்.இப்ப அந்த ரூம் போய் தூங்கலாம்” என்றவன்,திரும்பியே பாராமல் மற்ற அறைக்கு சென்றுவிட்டான்.அவன் சென்ற அறைக்கு கதவு இருக்கவில்லை.திரைச்சீலை கொண்டே மறைக்கப்பட்டிருந்தது.
அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறைக்கு கதவு, லாக் என்பன சரியாக இருப்பதைக் கண்டதும் தான் அவளுக்கு மூச்சு சரியாக வந்தது.அவசரமாக சென்று தாளிட்டுக்கொண்டாள்.

தன் முகத்தில் ஏதோ சுடுவது போன்ற உணர்வு அவளைத்தட்டி எழுப்ப மெல்லக்கண்விழித்தாள் மீரா.அவள் எப்போதுமே அதிகாலை எழும்பி பழக்கப்பட்டவள்.படிக்கும் காலத்திலிருந்து அதற்கே பழகிவிட்டாள்.கேம்பஸில் கூட முதல் ஆளாய் எழுந்துவிடுவாள்.ஆனால் இன்று வழமைக்கு மாற்றமாய் எழும்பியது அவளுக்கே ஒருமாதிரியாக இருந்தது. சே….. எப்படியும் மணி ஒரு ஒன்பதைத் தாண்டியிருக்குமே.வெளிய யாரு இருப்பா?? என்று யோசித்தபடியே கதவைத்திறந்து எட்டிப்பார்த்தவளுக்கு மாலாம்மா வீட்டைப் பெருக்குவதைக் கண்டதும் ஆறுதலாக இருந்தது.

இவளைக்கண்டதும் அவர் மென்மையாக சிரித்துக்கொண்டே வந்தவர் "வந்து குளிச்சிட்டு சாப்பிடு" என்று அவளை அழைத்துச் சென்றார்.அவர் பேசியது சுத்தமாக விளங்கவில்லை என்றாலும் அவரது அன்பான சைகை மொழி அவளை பின்தொடரவைத்தது.

மறக்காமல் வாங்கி வந்திருக்கிறாரே என மனதார நெகிழ்து போனவள்,அவர் கையைப் பிடித்து “நன்றிம்மா” என உணர்ச்சி
வசப்பட்டாள்.ஆம்.மாலாம்மா அவளுக்காக சில புதிய உடைகள் வாங்கி வந்திருந்தார்.உள்ளாடை உட்பட.

“ரொஷான் சார்க்கு சொல்லுங்க.
அவர்தான் காசு தந்து வாங்கிட்டு வர சொன்னார்.”என மாலா பேசியது அவளுக்கு விளங்கவில்லை என்றாலும், இது ரொஷானின் ஏற்பாடு என்று தெரிந்தது.

நீளமான பாவாடையும் தோள்வரையும் சுருங்கிக்கிடந்த சட்டையும் அவளுக்கு அளவாக இருந்தாலும்,சங்கடமாக உணர்ந்தாள்.அரைக் கைக்கும் குறைவாக எப்போதுமே அவள் அணிந்ததில்லை.கேம்பஸில் பட்டிக்காடு என்று அவள் நண்பர்கள் அவளைக் கலாய்த்தாலும் கண்டுகொள்ளவே மாட்டாள்.
இன்று அவளது சூழல்
இந்த உடையைத்தவிர வேறெந்த தேர்வும் அவளுக்கில்லை.
மாற்றுத்துணி கூட இல்லாதிருந்த அவளது நிலைக்கு இது எவ்வளவோ மேல்.

சிங்களவர்கள் அநேகமாக இது மாதிரியான உடையைத்தான் அணிவார்கள் என்பதால் அவரது தெரிவும் அதற்கேற்பவே இருந்தது.
நேற்று வாங்கிக் கொடுத்ததே போதுமென்று இருந்தவளுக்கு இன்று வாங்கிவந்தது எவ்வளவு பெரிய உதவி.

குளித்துவிட்டு வந்தவளுக்கு சூடான பிட்டும், பருப்புக்கறியும் தயாராக இருந்தது.பொதுவாக மீராவுக்கு அமைதியாக இருக்கவே பிடிக்காது.எதையாவது பேசிக்கிட்டே இருக்கவேண்டும்.பத்து நிமிஷத்திற்கு மேல் பேசாமல் அவளால் தாக்குப்பிடிக்கவே முடியாது.ஆனால் இங்க வந்து அரைநாள் கடந்தாயிற்று. அவளுக்கும் மாலாம்மாவுக்கும் இடையில் புன்சிரிப்பைத் தவிர வேறு எந்த தொடர்பாடலும் இல்லை.

முடிவுக்கு வந்தவளாய் “மாலாம்மா சாப்பிடவா? பசிக்கிது.”என்றாள்.

அவளது பேச்சு அவருக்கு புரியவில்லை என்றாலும் அவள் சைகையில் புரிந்து கொண்டவர் உடனே அவள் அருகில் வந்து அமரவைத்து சாப்பாடை வைத்தார்.அவளுக்கோ பாட்டியின் நினைவு வர லேசாக கண் கலங்கினாள்.

“அழாத.ரொஷான் எல்லாத்தையும் சரிபண்ணுவார்.
நீ போகும்வரைக்கும் உனக்கு நான் ரொஷான் எல்லாரும் துணையா இருப்போம்.நீ தைரியமா இரு.” என்றார்.அவளுக்கு கொஞ்சமாக புரிந்தது.

“வாங்க நீங்களும் சாப்பிடுங்க” என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டை எடுத்துவந்து அவருக்கும் பரிமாறினாள்.மாலா எவ்வளவு மறுத்து பார்த்தும் மீரா விடவில்லை.”நீங்க சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்” என்று குழந்தை போல அடம் பிடித்தவளை நெகிழ்ச்சியாக பார்த்தார்.

அன்றிலிருந்து மீராவுக்கும் அவருக்கும் இடையே ஒரு நல்ல நெருக்கம் வந்தது.எங்கு இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது மீராவின் குணம்.இப்படியான சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று கடவுள் அவள் தலையில் எழுதி இருக்கிறார்.ஆனாலும் இதுவும் வெகு சீக்கிரத்தில் கடந்து போய்விடும்.நினைவுகளாக கூட மாறிவிடும்.நாம இருக்கும் நொடிகள் பிடிக்காவிட்டாலும் கூட நமக்கு ஏற்றபடி அதை மாற்றிக் கொண்டால் எல்லா பிரச்சினைகளையும் ஈசியாக கடந்து விடலாம்.

அவள் இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் இதைத்தான் நினைத்துக் கொள்வாள்.கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நம்மளை சோதிக்கிறார்.ஆனாலும் அவள் இருக்கும் சூழல் அந்த அளவுக்கு மோசமாக ஒன்றும் இல்லையே.

அவள் ரொஷானையே சந்திப்பது மிகவும் குறைவு.எப்படியும் இரவு 11 தாண்டி வீட்டிற்கு வருபவன் ஆறு மணிக்கு முதலே திரும்பவும் சென்று விடுவான்.மாலம்மா அவனுக்கு காலை இரவு என இரண்டு வேளை சாப்பாடு மட்டுமே செய்து வைப்பது வழக்கம்.இரவில் அவர் சமைப்பதை ஹாட் பாக்சில் போட்டு மூடி வைத்து சென்று விடுவார்.அதிகாலை 5 மணிக்கு அவர் வருவதால் காலை சாப்பாடை செய்து அவனுக்கு கொடுப்பார்.சில நாட்களில் அவன் வருவதேயில்லை.

ஒரு தாயைப் போல அவனை கவனித்துக் கொண்டு வருபவருக்கு ரொஷான் மீது அவ்வளவு பாசம்.அவனுக்கு அல்சர் பிரச்சனை இருப்பதால் கடை சாப்பாடு ஒத்துப் போவதில்லை என்று சொல்வார்.

மீரா மீதும் அதே அளவு பாசம் அவருக்கு.மீரா இங்கு வந்ததன் பிறகுதான் பகல் சாப்பாடு அவளுக்காகவே சமைப்பது.அவரது சமையல் அவ்வளவு ருசியாக இருக்கும் பாட்டியின் கைவரிசை போல என்று நினைத்துக் கொள்வாள்.

அவளை எந்த வேலையும் அவர் செய்ய விடுவதில்லை.அவள் தான் சும்மா இருக்க அலுப்பாக இருக்கிறது என்று பிடுங்கி செய்வாள்.ஆனால் கடைசியில் அந்த வேலை சொதப்பலாகவே முடியும்.அதை சமாளிக்க அவள் படும்பாடு மாலாவுக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கும்.இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தது.

இடைக்கிடையே குழம்பும் மனதை அவளாக சமாதானப்படுத்திக் கொள்வாள்.கொஞ்ச நாள்தானே பொறுமையாக இரு மனமே என்று அவளுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.அதைத் தவிர வேறு வழியில்லையே.

இங்கு வந்த நாளில் இருந்து அப்பாவுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்.ஆனால் அவரது நம்பர் வேலை செய்யவேயில்லை.
சித்தியின் நம்பருக்கும் அதே பதிலைத் தான் சொன்னது.இந்த இரு நம்பரைத் தவிர எதுவும் அவளுக்குத் தெரியாதே.ராசு அண்ணாவின் நம்பரைக்கூட மனதில் வைக்காத தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள் மீரா.

அந்த குவாட்டஸ் பகுதி முழுக்க காய்த்துத் தொங்கும் புளியங்காய்கள் மட்டும் அவளை சலனப்படுத்தும்.பழுத்துத்தொங்கும் காய்களை எப்போதும் போல பொறாமையாகப் பார்த்தபடி தலை துவட்டிக்கொண்டிருந்தாள்.அவளது நீளமான கூந்தலுக்கு அந்த சின்ன டவல் கொஞ்சமும் போதவில்லை.
கூந்தலை வகிடெடுத்து பொறுமையாக துடைத்தாள்.
அவளுக்கு ஒரு பக்கம் பசித்தது.
வழமையாக நேரத்தோடு வரும் மாலாம்மாவை கூட காணவில்லை. “சே….ஒரு டீ போட்டு கூட குடிக்க தெரியாதவளா இருக்கோமே.”

காலை ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.துடைத்த துண்டை வெளியே காய வைத்து விட்டு வேகமாக உள்ளே வந்தவளின் தலை நச்சென்று ஏதோ ஒன்றில் மோதிக்கொண்டது.ஸ்ஸ்ஸ்ஸ்…. என்றபடி நிமிர்ந்து பார்த்தவளுக்கு முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி. இவனா..? எப்படி உள்ளே வந்தான்.அவனது தோற்றத்தில் அப்படி ஒரு அயர்ச்சி இருந்தது. அவனது மேல் சட்டை பட்டர்ன்கள் பாதி திறந்திருந்தது.அப்போ இவன் இரவு வராமல் இப்பதான் வந்திருக்கான் போல.அவன் வந்த சத்தமே கேட்கல்லியே என நினைத்தாள்.

அவள் நெற்றியை மெல்லமாய் வருடியவன் Sorry என்றான்..அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.தலையை பின்னால் சாய்த்தபடி அவனைத் தாண்டிச் சென்று,திரும்பிப் பார்த்தவளுக்கு அவன் கைகளில் கட்டி இருக்கும் பேன்டேஜை அவிழ்ப்பது தெரிந்தது.

கண்டுகொள்ளாமல் போக அவளுக்கு மனதுவரவில்லை.அவன் செய்த உதவிகள் அதற்கு சம்மதிக்கவில்லை.அவனை நோக்கி வந்தாள்.அவன் கைகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

“ஐயோ இரத்தம் வருது என்ன செய்த?” முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடையே ஏதோ ஒன்று கிழித்திருந்தது.அவனோ முதலுதவி பெட்டியை திறந்து ஒற்றை கையால் மருந்தை தேடிக் கொண்டிருந்தான்.அவளது கேள்வியில் அவன் முகத்தில் ஆச்சர்யம்

“குடுங்க நான் போட்டு விடுறன்.பயப்பட வேணாம். நான் நல்லாவே மருந்து கட்டுவன்.
கேம்பஸ்லதான் எனக்கு அந்த ட்ரெயினிங் தந்தாங்க.என்னோட பிரெண்ட்ஸ்க்கு இரத்தம் என்டாலே பயம்.எனக்கு அப்படி இல்லை.
யாருக்கு என்ன காயம் வந்தாலும் என்னிடம் தான் வருவாங்க.”அவள் பேசிக்கொண்டே அவனுக்கு மருந்து கட்டி விட்டாள்.

அவள் உதட்டை குவித்து வாயால் ஊதி ஊதி மருந்து கட்டுவதை அவன் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனது வாழ்நாளில் இதுவரைக்கும் எந்த பெண்ணும் செய்யாத ஒன்றை அவள் செய்து கொண்டிருந்தாள்.
"ஓகே…முடிச்சிட்டன்" என்ற அவளது பேச்சில்தான் நிதானத்திற்கு வந்தான்.அவளையறியாமல் அவனோடு இயல்பாக பேசியிருந்தாள் மீரா.
 
Top Bottom