• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 14

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் என உலகம் முழுக்க போதித்தவர்தான் புத்தர்.ஆனால் எல்லாமே வெறும் போதனையாகவே கேட்கிறார்கள் தவிர யாருமே தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில்லை.
கண்களை மூடி தியானத்திலிருந்தான் ரொஷான்.
தன்னுடைய 31 வருட வாழ்க்கையில் நிறையவே கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்.ஆனால் இப்படி ஒரு மன அழுத்தத்தை ஒரு நாளும் அவன் உணர்ந்ததில்லை.சில நாட்களாக அவனுக்கே அவன் புதிதாக தெரிந்தான்.எதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினான் என்றே கூற வேண்டும்.குழந்தையைப் போல கண்களை இறுக மூடியிருந்த ரொஷானை அழைத்தார் அந்த பிக்கு.

மனது குழப்பமான தருணங்களில் எல்லாம் அவரைப்பார்க்க கண்டிக்கு வந்துவிடுவான்.அப்போதெல்லாம் என்ன காரணமென்று அவன் வாய்விட்டு சொல்லுவதில்லை.
அவரும் எதுவும் கேட்காமல் அவனுக்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில் சில போதனைகளை கூறுவார்.ஆனால் இன்று அவன் மனது ஒருநிலையில் இல்லை என்பதை புரிந்துகொண்டவர் என்ன பிரச்சினை ரொஷான்? என்றார்

அவனது பிறப்பிடம் நுவரேலியா.சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் தன் தாயும் தந்தையும் சண்டையிட்டுப் பிரிந்த துயரை அனுபவித்தான்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எஸ்டேட்,லட்சங்களில் அரசாங்க வரி கட்டுமளவிற்கு வருமானம் என அத்தனை செல்வம் இருந்தும் ஒரு சின்ன சந்தோஷத்தைக் கூட அவன் அனுபவித்ததில்லை.
யாருமில்லாமல் அநாதையாக தனித்துவிடப்பட்ட அவனுக்கு தன் பெயரிலிருந்த தாத்தா வழி சொத்துக்களை நிர்வகிக்குமளவிற்கு அவனுக்கு வயதும் அப்போதில்லை.கார்டியன் என்ற பெயரில் யாரோ ஒருத்தரின் கண்காணிப்பில் வளர்ந்தான்.

அவன் சிறுவயதாக இருக்கும்போதே தன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பன்சலைக்கு (விகாரை)அடிக்கடி செல்லும் பழக்கம் கொண்டவன்.அங்கிருக்கும் தலைமை பிக்கான விமலதர்மனுக்கு இவன் மீது தனிப்பிரியம்.

அவர்தான் பெற்றோர்களின் இழப்புக்கு பின்னால் தனித்து விடப்பட்ட ரொஷானுக்கு பக்கபலமாக நின்றார்.அவன் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.அவனைப் படிக்க வழிகாட்டினார்.அவனுடைய வயதிலிருக்கும் நண்பர்கள் ஊர் சுற்றித்திரிந்து வாழ்க்கையை அனுபவிக்க ரொஷான் தன் பெயரில் மாதாமாதம் வந்து கொண்டிருக்கும் பெருந்தொகைப் பணத்தை அநாதை இல்லம் ஒன்றுக்கு நன்கொடையாக்கினான்.
இன்று வரைக்கும் அவனுடைய பணத்தில் எத்தனையோ பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவன் ஹாஸ்டலில் தங்கியிருந்து படிக்கும் காலத்திலேயே ராணுவம் ரோந்து போவதையும் பயிற்சிகள் செய்வதையும் பார்த்துக் கொண்டிருப்பான்.அவனது பொழுது போக்காகவே அது மாறியிருந்தது.
அவ்வப்போது சில தலைமைத்துவப் பயிற்சிகளை எடுத்திருந்தான்.
இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் அவனுக்கு இந்தத் துறையில் தான் ஈடுபாடு இருந்தது.அசாத்திய உயரமும் அதற்கேற்ற உடல் அமைப்பை கொண்டவன் என்றபடியால் அவனுடைய திறமைக்கும் தகமைக்கும் ஏற்றபடியே ராணுவத்தில் சேர்ந்து சிறிதுகாலத்திற்குள் பதவியுயர்வினைப் பெற்றான்.
அவனது கடந்த காலம் தந்த தனிமையின் வலிகளை மறப்பதற்கு ஏற்றவாறே அந்தத்தொழிலும் இருந்தது.அடிக்கடி இடமாற்றம். நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பான்.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பது அவனுக்கே பொருந்தும்.

எப்போதும் தனக்கேற்பவே அவன் வாழ்க்கையை தீர்மானித்துக் கொண்டான்.அவனுடைய எந்த விஷயத்திலும் யாரும் தலையிடவும் முடியாது. கேள்வி கேட்கவும் முடியாது.அவனுடைய வாழ்க்கையில் அவன் அனுமதித்த ஒரே ஒரு நபர் இந்த விமலதர்மர் மட்டும் தான்.மற்றபடி அவன் யாருக்கும் பயந்ததும் கிடையாது.சுயஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தால் யாரும் தலைகுனியத் தேவையில்லையே.
பிக்குவின் நேர்த்தியான அறிவுரைகளும் புத்தரின் போதனைகளும் தான் அவனின் இருகண்கள்.கூடவே வாழ்க்கை அவனுக்குக் கொடுத்த தனிமைகள் அவனை அதிகம் பக்குவப்படுத்தியிருந்தது.

“உன் கண்ணுல ஏதோ அலைக்கழிப்பு தெரியுது? நீ நிதானமா இல்ல.என்ன நடந்த?”
காவி உடையில் சாந்தமாக விசாரித்த அவரை நிமிர்ந்து பார்த்தான்.

அவர் முகத்தில் தெரிந்த பரிவும் அமைதியும் அவனுக்கு அவ்வளவு தேவையாக இருந்தது.மறைப்பதற்கு அவசியமில்லை என்றபடியால் மீராவைப் பற்றி அத்தனையையும் ஒப்புவித்தான்.

நல்லது. ரொஷான்…நீ நல்லது மட்டும்தான் பண்ணியிருக்க.அந்தப் பெண் உன்ன மனதளவில் நிறைய பாதிச்சிருக்கா.நீ முதன்முதலா சலனப்பட்டு நான் பார்க்குறன் என்றார்.

“உனக்கு நான் எதுவும் சொல்லத்தேவையில்ல.இத்தனை வருடங்களா தனியாகத்தான் உன் வாழ்க்கையின் முடிவுகளை தீர்மானித்தாய்..அதுமாதிரியே உன் மனதுக்கு, இப்போதைக்கு எது சரியென்று சொல்லுதோ அதை செய்.அது எப்போதுமே உன்னை தவறாக வழிப்படுத்தாது.புத்தரின் போதனை நிறைஞ்சிருக்குற உன் மனதுதான் எப்போதும் உனக்குத் துணை” என்றார்.

“கொஞ்சநேரம் உன் மனதை ஒருநிலைப்படுத்து ரொஷான்..
எல்லாப் பிரச்சினையும் உனக்குக் கட்டுப்படும்.அமைதியா இரு.நீ தேடுற விஷயம் உனக்கு நல்லதா இருந்தா நிச்சயமா கிடைக்கும். ஆனா அதுக்காக நிறைய போராடனும்.தயாரா இரு” என்று சென்றுவிட்டார்..

அவரது பேச்சு அவனை அமைதிப்படுத்தினாலும் கொஞ்சம் கவலையைத் தந்தது.பிக்கு வேறு எதையும் பற்றிப் பெரிதாக எதுவும் பேசவில்லை.ரொஷானின் நேர்மையில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கையிருந்தது.

அன்று முழுவதும் தியானத்திலிருந்தவன் வீட்டுக்குச்செல்ல நன்றாகவே நேரமாகியிருக்க ,பூமி இரண்டாகப்பிழந்து விடுமோ என்னுமளவிற்கு இடியும் மின்னலுமாய் மழை அருவியாய்க் கொட்டிக்கொண்டு இருந்தது.

மீரா…..மீரா… தட்தட்டென்ற கதவை யாரோ அடிக்கும் சத்தத்தில் மீரா கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தாள்.மணி காலை 5.45 எனக்காட்டியது.இடிமின்னலுக்குப் பயந்து அவள் இரவு தூங்கவேயில்லை.எப்போது தூங்கினாள் என்றே தெரியாது.

“அதுக்கிடையால விடிஞ்சிட்டா? மாலம்மா ஏன் இப்படித் தட்றாங்க.” தூக்கக் கலக்கத்துடனேயே கண்களைக் கசக்கிக் கொண்டு கதவைத்திறந்தாள்.குளிர்காற்று குப்பென்று அவளைத் தளுவ கைகளைத்தேய்த்துக் கொண்டாள்.
எதிரே நின்ற மாலாவின் முகத்தில் அவ்வளவு கோபம்.அவர் கோபப்பட்டு அவள் பார்த்ததேயில்லை.

என்ன மாலாம்மா?? என்றாள். ரொஷானிடமும் மாலாவிடமும் மாற்றுக் கீ இருப்பதால் கதவை அவர்களே திறந்து கொள்வார்கள்.ஆனால் நேற்றிரவு இடி மழையியால் மீரா கதவின் கொழுக்கியை உள்ளே மாட்டிவிட்டாள்.பிறகு எடுத்துவிடலாம் என்று நினைத்தவளுக்கு அது மறந்தேவிட்டது.

ஒரு வேளை அவர் கதவு திறபடாததால்தான் இந்தக்கோபமோ என சிந்தித்தவள்
அப்போதுதான் பார்த்தாள் ரொஷான் ஜீப்பிற்குள்ளிருந்து இறங்கி ககைகால்களை உதறிக்கொண்டிருந்தான்.அவன் கண்கள் இரத்தமாய் சிவந்திருந்தது.

தான் செய்த தவறு உடனே விளங்க
“சாரி ம்மா…நான் வேண்டுமென்டே செய்யல.தூங்கிட்டன்.இரவு முழுக்க சரியான இடியும் மழையும்.அதான் கதவை உள்ளுக்க லாக் பண்ணினன்.” அவளுக்கு ரொஷானைப் பார்க்க பாவமாக இருந்தது.கழுத்தை சாய்த்து கையால் அழுத்திக்கொண்டிருந்தான்.
அவனது ஜீப் ஹார்ன் ஒலி கேட்டாலும் தூக்கக் கலக்கத்தில் கதவை உள்ளே லாக் செய்ததையே மறந்துவிட்டாள்.ஜீப்குள்ளேயே தூங்கியிருக்கான் போல.அவனோட உயரத்துக்கு கஷ்டமாத்தான் இருந்திருக்கும்.

மாலா முணுமுணுத்தபடி உள்ளே சென்றார்.அவளது கதையை அவர் காதில்கூட வாங்கவில்லை.
ரொஷான் மேலிருக்கும் கோபத்தால் அவள் வேண்டுமென்றே செய்ததாக .எண்ணுகிறார் போல.அவளும் அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்படித்தான் நடந்துகொண்டாள்.அவனை முறைப்பதும்,அவன் ஏதும் சொல்ல வந்தால் கூட கணக்கே எடுக்காமல் கதவை அறைந்து சாத்துவதும் என கொஞ்சம் திமிராகவே நடந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
பொதுவாக மீராவிற்கு இந்த
குணமேயில்லை.இத்தனை வருடங்களில் யார்கூடவும் இப்படி நடந்திருக்கவே மாட்டாள்.

அவனோ அடுக்கடுக்காய் தும்மிக்கொண்டிருந்தான்.

“சாரி….எனக்கு சரியா நித்திரை அதான்..நீங்க தட்டினது உண்மையாவே விளங்கல்ல.” குற்ற உணர்வாய் தடுமாறி தலை குனிந்தாள் மீரா.அவன் எதுவுமே பேசவில்லை. நிலம்தொட்ட அவள்கூந்தலும்,கெண்டைக்கால் தெரியுமளவிற்கு குட்டைக்கையுடைய நீளமான வெள்ளை கவுனும் என குட்டி தேவதையாக அவன் கண்ணுக்குத் தெரிந்தாள்.

அருகில் வந்தவனோ, அவள் மூக்கைப் பற்றினான்.
அவளோ திகைத்து அவனை அண்ணாந்து பார்த்தாள். கண்களை உருட்டினாள்.அவள் இதழ்களை கைகளால் வருடியவன் அவள் தலையில் முத்தமிட்டு உள்ளே சென்றான்.மீராவிற்கு குளிரிலும் உடல் சூடாகியது.அவளுக்கு அந்த இடத்தைவிட்டு அசைய சிறிது நேரம் தேவைப்பட்டது.இவன் ஏன் இப்படி நடக்ந்துக்குறான்.அவன் பக்கத்தில் வந்தாலே அவள் மூளை இடைநிறுத்தம் செய்வதை உணர்ந்தாள்.அவளுக்கு கொஞ்சமும் கோபம் வரவில்லை.இது என்ன மாதிரியான உணர்வு.தீவிரமான சுயவிசாரணை செய்தும் கூட அவளுக்கு எதுவும் விளங்கவில்லை.

தொடர்ந்து மூன்று நாட்கள் ரொஷானிற்கு கடும் காய்ச்சல்.மாலா அவர் வீட்டிற்குக்கூட செல்லாமல் ஒரு அன்னையாய் அவனைக் கவனித்துக் கொண்டார்."இப்படி வளந்திருக்கான் ஒரு சின்னக் காய்ச்சலை தாங்கமாட்டானா? கொஞ்சம் ஓவராத்தான் பண்றாங்க.இந்த மாலாம்மா."அவளுக்கு கொஞ்சம் கோபம் கூட வந்தது.அவரின் பட்டும்படாத பேச்சும், அவர் சொல்லும் புத்திமதியும் "இப்போ என்ன வேண்டும்னுதான் செய்தன்.என்ன செய்யப் போறீங்கன்னு கத்தனும் போல இருந்தது.பெரிய்ய்ய்ய ரொஷான் சேர்.என்னை வீட்டுக்கு அனுப்பாம திருட்டுக்கல்யாணம் போல ஏதோ பண்ணிருக்கான்..இவனை இன்னமும் நம்பனுமா?? “இவனுக்கு நல்லா காய்ச்சல் வரணும்”அவள் சுயநலமாய் மனதிற்குள் பட்டிமன்றம் செய்தாளே தவிர அவன் ஏன் அப்படி செய்தான் என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லை.

***************
மாலாவின் வெற்றிடம் மீராவுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.ஆன்மீக பற்றுடைய அவர் தனது ஒரேயொரு மகனைக்கூட பிக்குவாக்கினார்.தனது மகனின் அழைப்புக்கிணங்க ஆன்மீகப் பயணம் செல்லப்போவதாக அவர் சொன்னதும் அவளுக்கு கவலைதான்.அவர் இல்லாவிட்டால் பேசக்கூட யாருமில்லாமல் அவள் மட்டும் தனித்துவிடுவாளே.தனது பாதுகாப்புப் பற்றி அவள் பயப்படவில்லை.ஆனாலும் ஏதோ ஒரு ஆறுதலை இழந்தது போல் உணர்வு.மீராவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு கண்ணீருடன் அவர் விடைபெற்ற போது அவளும் அழுதுவிட்டாள்.

வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம்.எல்லோரும் நிரந்தரமாக நம்முடன் தங்கிவிடுவதில்லையே.அதிலும் நமக்குப் பிடித்தமாக இருப்பவர்களை பிரித்துப்பார்ப்பதில் கடவுளுக்கு அப்படியொரு சந்தோசம் போல.மீராவிற்கு வாழ்க்கை நினைக்க நினைக்க அவ்வளவு சலிப்பாக இருந்தது.இப்படியே செத்துப் போய்விடுவோமோ? தன் வாழ்க்கையில் கண்ட கனவு என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?அவளுக்கு கொஞ்சமும் லாஜிக் புரிபடவேல்லை.
எல்லாத்துக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கிறது என்று நம்புபவளுக்கு அவள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் குழப்பமாகவே இருந்தது.

அவள் இந்த வீட்டிற்கு வந்து சரியாக இரண்டரை மாதம்.எத்தனையோ தடவை அப்பாவுக்கும் வீட்டிலிருக்கும் சித்திக்கும் கால் செய்துவிட்டாள்.எதுவும் வேலை செய்யவில்லை.வேறு யாருடைய நம்பரும் அவளுக்குத் தெரியாது.கடிதம் எழுத ரொஷான் அனுமதிக்கவில்லை.காரணம் அவள் இருப்பதோ ராணுவங்கள் வசிக்கும் பகுதி என்பதால் அந்த முகவரியைத்தான் போட வேண்டும்.அது உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வாழும் குவாட்டஸ் வேறு.இதனால் யாருக்கும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்றான்.

வெளியே நடக்கும் கலவரங்களும் போரின் உக்கிரமும் அவளுக்கு அறவே விளங்கவில்லை.டிவி நியூஸ்,பேப்பர்களில் படிக்கும்போதுதான் நாட்டின் நிலவரம் புரிந்தது.தான் மட்டும் பாதுகாப்பாக இருந்து என்ன பயன்? பெருமூச்சுடன் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள்.சந்தேகத்தின் பெயரில் கைது செய்திருக்கும் இளம் பெண்களின் நிலை என்ன?மட்டு நகரில் போராட்டம் என்ற தலைப்புச் செய்தி கண்ணில்பட்டது.
தாய்மார்கள் கண்ணீருடன் கையில் பதாதைகள் ஏந்தி நிற்பதை புகைப்படமாக எடுத்திருந்தார்கள்.மீராவிற்கு உண்மையிலேயே இதை பார்த்து கஷ்டமாக இருந்தது.

ஒரு பக்கம் மரணம் இன்னொரு பக்கம் கைது.என்னதான் நடக்கிறது.எல்லோரும் மனித இனம்தான் என்பதை மறந்துவிட்டார்களா? எரிச்சலுடன் பத்திரிகையை தூக்கிப்போட்டாள்.சாவுகளின் எண்ணிக்கையை பெருமையாகவும் அதை செய்தவர்களை வீரர்களாகவும் எழுதியிருந்தார்கள்.அழகான இயற்கை அழகு நிறைஞ்ச நாடு.என்ன பயன்? ரசிப்பதற்கு பதிலாய் இந்த நாட்டில் பிறந்ததே சாபமாய் நினைக்க வைத்து விட்டார்களே.அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே ராணுவ உடையில் யாரைக் கண்டாலும் அவ்வளவு பிடிக்காது.அவர்கள் என்றைக்குமே நமக்குப் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று நினைப்பாள்.சிங்களவர்கள் மேல் நல்ல எண்ணம் வருவதேயில்லை.ஆனால் இன்று அவள் இருப்பதே ஒரு ராணுவத்தின் வீட்டில்.இந்த ரொஷான் கொஞ்சம் நல்லவனாகவே அவளுக்குத் தெரிந்தான்.சோமாவதி, மாலாம்மா இவர்களெல்லாம் அவளின் கற்பனைக்கு முரணானவர்களாக இருந்தார்கள்.அவள் வாழ்க்கையில் என்றைக்குமே இவர்களை மறக்க முடியாது. சிலபேரின் தவறால் எல்லோரையும் குற்றம் சொல்ல முடியாதுதான்.
 
Top Bottom