• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
4.
பச்சைப் பசேலென பரந்து விரிந்த அந்த வயலின் கதிர் நுனிகளில் மஞ்சள்
தாவணி வருடிச் செல்ல செருப்பு இரண்டையும் கையில் தூக்கிக்கொண்டு
வேகமாய் வரப்புகளில் நடந்து கொண்டிருந்தாள் மீரா.அவள் எப்போதும்
வரப்புகளில் நடக்கும் பொழுதும் சரி ,வயலுக்குள் கால் வைத்தாலும் சரி தன்
பாதணிகளை கழட்டிவிட்டே நடப்பாள்.
வரப்புகளில் நடக்கும் பொழுது வலது பக்கமாக அவர்களுக்குச் சொந்தமான
மாந்தோப்பு கண்களுக்குத் தென்படும். தோப்புக்கு போக வேண்டும் என்றால்
அதற்கென்று வேறு வழி உள்ளது. ஆனால் மீராவுக்கு இப்படி சுற்றிக்கொண்டு
நடப்பதே அலாதி இன்பம். கதிர் வாசகங்களை தனக்குள் நிரப்பிக்கொண்டு
நடப்பது அவ்வளவு சுகமாக இருக்கும்.
தூரத்தில் இரண்டு லாரிகள் நிற்க நான்கு பேர் சேர்ந்து இரண்டிலும்
மாங்காய்களை மூட்டையாக ஏற்றிக் கொண்டிருந்தனர். கோபால் அதுதான்,
அவளது அப்பா மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறையாக கையில்
பேனாவுடன் ஒரு நோட்டு சகிதம் பரபரப்பாக இருப்பது மீராவிற்கு நன்றாக
புரிந்தது.
அடக்கப்பட்ட சிரிப்புடன் அவரை நெருங்கிய மீரா, “என்னப்பா கணக்கு ரொம்ப
கஷ்டம் போல? எனக் கிண்டல் அடித்தாள்.இப்படி நடக்கும் என்று
தெரிந்துதான் அவள் அவசர அவசரமாக சாப்பிடாமல் வந்தது
இது மாங்காய்கள் அதிகமாக காய்க்கும் காலமென்பதால் மாந்தோப்பு
முழுக்க மாங்காய்களின் சாம்ராஜ்யத்தை காணக்கூடியதாக இருந்தது.
அணில் குருவி காக்கா என கடித்து தின்றது போக நன்றாக முற்றிய
மாங்காய்களை மூட்டைகளில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
பழுத்த மாங்காய்களை வேறாகத் தரம்பிரித்து ஊரிலுள்ள சந்தைக்கு அனுப்பி
வைப்பார் கோபால்.

எத்தனை முறை பேப்பரில் கணக்கு எழுதி வைத்திருந்தாலும் கடைசியில்
குழம்பிவிடுவார்.
“டேய் ராசு இந்த லாரியில் மொத்தம் எத்தனை மூட்டை ஏற்றியிருக்காய்?
ஒரு மூட்டையில் எத்தனை மாங்காய் போட்டிருக்கானோ தெரியாது” என
முணுமுணுப்பார்.
வேலை செய்பவர்கள் கடுப்பாகி விடும் அளவுக்கு சந்தேகம் கேட்டு
வைப்பதில் கோபால் கெட்டிக்காரர்.
ஆனால், எத்தனை பேர் சேர்ந்து வேலை செய்தாலும் கடைசியில் மீரா
சொல்லும் கணக்கில் தான் திருப்தி அடைவார்.
“அப்பா எத்தனை முறைதான் கணக்கு பார்ப்பீங்க? அதான் நேற்று இரவே
எல்லாம் சொல்லிட்டேனே.
எனக்குத் தெரியும் திரும்பவும் நீங்க குழம்புவீங்கன்னு.அதான் நேர்ல பார்க்க
வந்தேன்.”என்றவள்,ராசுவைப் பார்த்து “ராசு அண்ணா நான் அப்பாகிட்ட
கொடுத்த துண்டை பார்த்தீங்க தானே?
“பார்த்தேன் மா. எல்லாம் சரியாத்தான் இருக்கு என் மச்சானுக்கு தான்
கணக்கு புரியவில்லை. நான் எத்தனை முறை சொன்னாலும் திருப்பி திருப்பி
கேட்டுக்கிட்டே இருக்கான். நல்ல வேளை நீ வந்த தப்பிச்சேன்.”அவர்
முகத்தில் அவ்வளவு நிம்மதி அவள் வருகையினால்.
சிரித்தாள் மீரா. “பாருங்கப்பா உங்களை எப்படி நக்கல் பண்றார் என்டு”
“அய்யோ ஏம்மா இப்படி சொல்றாய்? இந்த வெயிலிலே ஏற்கனவே
எல்லாரையும் கடிக்கிறான். இதுல நீ வேறயா”.
“ஹாஹா...சும்மா சொன்னேன் விடுங்க விடுங்கண்ணா”

“ப்பா... நீங்க போயி அங்க இருங்க நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
மறுப்பேதும் சொல்லாமல் போய் அமர்ந்தார் கோபால். தன் மகள் வந்து
விட்டாள் என்ற திருப்தியில் அமர்ந்து இளநீர் குடித்தார்.சற்று நேரம் கழித்து
அவர் பக்கத்தில் அமர்ந்த மீரா கணக்கை விவரித்தாள் பத்தாவது முறையாக.
“இனிமே எல்லாமே சரி.இந்தாங்க பணம்.நான் எண்ணி
பார்த்துட்டேன்.ஒருக்கா நீங்களும் செக் பண்ணிக்கோங்கப்பா.”
“அதான் நீ பார்த்துட்ட தானே.பிறகென்ன? பத்திரமா வச்சுக்கம்மா” என்றார்
அப்போது ராசு இன்னொரு இளநீர் கொண்டு வந்தார்.
“தேங்க்ஸ் அண்ணா” என வாங்கி இஞ்சி இஞ்சாக தொண்டையில் ரசித்து
இறக்கினாள் மீரா.
எப்பம்மா பேராதனை போற?
“அது தெரியாது. ஃபைனல் செம் எக்ஸாம் முடிஞ்சது.நல்ல ரிஷல்ட்டும்
எடுத்திட்டன். இனி ஏதும்னா லெட்டர் அனுப்புவாங்க.கொஞ்ச நாளைக்கு
படிப்பு தொல்லை இல்லாம ஊருல நிம்மதியா இருக்கலாம்”என்றாள் மீரா.
“ஆமாம் மா நீ சொல்லுற சரிதான். என்ன மச்சான் புள்ளைக்கு படிப்பு
முடியுது. மேற்கொண்டு ஏதும் பாக்கலையா? நம்ம மீராவோட தகுதிக்கு
இந்த ஊருல எவனாவது இருக்கானா?
“நீ சொல்லுவது சரிதாண்டா. நானே உன்கிட்ட சொல்லனும்னு நினைத்தது
தான். நீயே ஆரம்பிச்சுட்டே”.
“என்னப்பா எனக்கு கல்யாணம் பண்ணி தள்ளிவிட ப்ளேன் போறீங்களா?
இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்லை.”

“அப்போ எப்பம்மா பண்ண போற தலைமுடி நரைத்து பொறவா? நம்ம
ஊரிலேயே அதிகமா படிச்ச பொண்ணு நீ தான்.அதுக்காக இன்னும் இன்னும்
படிச்சுக்கிட்டே இருக்கனுமா? ஒரு கட்டத்தில எல்லாரும் கல்யாணம் பண்ணி
தானே ஆகணும்”.
“பார்க்கலாம் அண்ணா. நீங்க கவலைப்படாதீங்க நான் கல்யாணம்
பண்ணிப்பேன்.ஆனா இந்த ஊருல தான் இருப்பேன்”
“இதுதாண்டா எப்போவும் சொல்லுறா. இந்த ஊருல எவன் தான்
இருக்கான்.நீயே சொல்லு” என அங்கலாய்த்தார் கோபால்
“எனக்குத் தெரிஞ்சு இந்த ஊர்ல கவர்மேந்து உத்தியோகம் பாக்குறவன்டா
நம்ம செந்தூரத்தின் மவன் மதன் தான்.”
“எவ அவன் எனக்கு தெரியாம?”
“ஹா ஹா உனக்கு தெரியாது மா.நீதான் ஊரிலேயே இருக்கிறது
இல்லையே.கேம்பஸ் போயிடுவ.டீச்சரா இருக்கான்” என்றார்.
“ஐயோ ரூல்ஸ் அதிகமா இருக்குமே…. அதெல்லாம் வேணாம் பா.ஆனா
ஒன்னு நான் இந்த ஊருல தான் இருப்பேன்.எனக்கு பொருத்தமான ஆள்
யாருன்னு எங்கப்பா தேடித் தருவார். அதுக்கு முன்னாடி இன்னும் கொஞ்சம்
படிப்பு, கனவு பாக்கி இருக்கு.அதை முடிச்சுட்டு தான் அடுத்த கட்ட நகர்வை
யோசிக்கணும் அண்ணா.” என்றவள்,
“ப்பா நான் போறன்.நீங்க சீக்கிரமா வாங்க.சாப்பிடலாம்.”
“சரிம்மா. பத்திரமா போ.நா வந்திடுறன்.”
அவள் பேச்சில் தெரிந்த தெளிவைப் பார்த்து வியந்தார் ராசு. மீராவின் மீது

எப்போதும் உயர்ந்த எண்ணம் அவருக்கு.அவள் பார்வையில் எப்போதும்
நேர்மை இருப்பதாய் அடிக்கடி கோபாலிடம் சொல்லுவார்.
“நீ அதிர்ஷ்டக்காரன் டா. உனக்கு போய் இப்படி ஒரு மகளா?..என
பொறாமைப் படுவார். அவ அம்மா இருந்திருக்க எவ்வளவு
சந்தோசப்பட்டிருப்பா? அவ மாதிரியே எல்லார் கூடவும் ஒட்டிக்கிற குணம்
தான் மீராவுக்கும்.
கோபாலுக்கும் தன் மகளை நினைக்கும் போது பெருமைதான்.படிப்பறிவு
குறைந்த அந்தக் கிராமத்தில் தன் மகள் நல்ல பெறுபேறு பெற்று கேம்பஸ்
போனது சாதனை தானே.வீட்டில் சொல்லிக் கொடுக்கவும்
யாருமில்லை.எதையாவது நச்சரித்துக் கொண்டே இருக்கும் விசாலாட்சியின்
தொணதொணப்புக்கு மத்தியிலும் நன்றாகப் படித்தவளல்லவா?
சின்ன வயதிலிருந்தே எப்போதும் கேள்வி கேட்டு அதற்கான பதிலை அறிய
வேண்டுமென்பதில் ஆர்வமாக இருப்பாள் மீரா.அப்பா ஏன் வானம் நீலமா
இருக்கு? ஏன்பா புலி புல்லு சாப்பிடாதுன்னு சொன்னீங்க? என அவள்
கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தெரியாது திணறிப்போவார்
கோபால்.பொய்யெல்லாம் சொல்லிச் சமாளிக்கவும் அவருக்குப்
பிடிக்காது.நிறைய அறிவியல் புத்தகங்களை வாங்கிப் படிக்க
வைப்பார்.இதனால் படிப்பில் மட்டுமன்றி நிறையப் போட்டி நிகழ்ச்சியிலும்
பங்குபற்றி வெற்றியடைந்து விடுவாள்.
சின்னக் கிராமம் என்பதால் உயர்தரம் வரை ஒரே ஒரு பாடசாலைதான்
இருந்தது.நிறையப் பேர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவர்.மீராவுக்கு
கனவு கேம்பஸ் போக வேண்டுமென்று. அதற்காக,மனதில் உறுதிகொண்டு
படித்து மாவட்ட மட்டத்தில் இரண்டாம் ரேங்க் எடுத்து சித்தியடைந்தாள்.
அளவில்லாத பெருமையில் கோபாலுக்கு கண்ணீர் வந்தது.
கேம்பஸிற்குப் போகும் முதல் நாள் எல்லா அப்பாவைப் போலவும் அவருக்கு
பயமிருக்கவில்லை. காரணம் அவளிடம் கொண்ட நம்பிக்கை.

“அப்பா..அட்வைஸ் பண்ண மாட்டிங்களா? ஹாஸ்டல்ல போய் தங்கப்
போறன்.முதன்முறையா ஊர் விட்டு ஊர் வேற போறன்.” என்றவளின்
தலையை வருடியவர்
“நீ சாதாரண பெண் இல்லை.பக்குவமான தைரியமான ,தெளிவான
பெண்.நீதான் எல்லார்க்கும் புத்திமதி சொல்லும்படி நடந்துப்ப.”என்றார்
“அப்பா...என்றவளின் கண்கள் பனித்தது.உங்க நம்பிக்கை மட்டும்
போதும்.எதையும் சாதிப்பேன்” என்றாள்.
நான்கு வருடங்களாக ஹாஸ்டல் வாசம் தான்.எதாவது ஸ்ட்ரைக் , நீண்ட
விடுமுறை என்றால் மட்டுமே ஊருக்கு வருவாள்.யுத்த சூழல் என்றபடியால்
அடிக்கடி ஊர் வருவது அவ்வளவு நல்லதல்ல என கோபால்
சொல்லியிருக்கிறார்.
ஒரு வழியாக கேம்பஸ் முடித்துவிட்டாள்.எல்லா செமஸ்டரிலும் அவள்
பெர்ஸ்ட் க்லாஸ் என்றபடியால் பார்ட் டைம் லெக்சர் (demonstrator)
கிடைப்பதற்கு வாய்ப்பதிகம்.அந்த இன்டர்வியூ லெட்டர்க்காகத் தான்
காத்திருக்கிறாள்.
மீராவிற்கு ஊர்ப்பற்று மிக அதிகம்.அதுவும் இப்போதுதானே கேம்பஸ்
முடிந்திருக்கிறது.இன்னும் கொஞ்சம் தனியா லைப் என்ஜாய்
பண்ணணும்.அதுக்குப் பிறகு தான் கல்யாணம். தன் எதிர்காலக் கணவன்
பற்றி நிறைய எதிர்பார்ப்புக்கள் வைத்திருக்கிறாள். ஹாஸ்டல் அரட்டைகளில்
திருமணப் பேச்சு நிறைய வருவதுண்டு.அவள் தோழிகள் நிறையப் பேருக்கு
ஆண் நண்பர்கள் இருக்கும்.அது காதலா நட்பா என பிரித்து ஆராய
முடியாதளவு பழகுவார்கள். கடைசியில் பாய் சொல்லிப் பிரிந்து விடுவார்கள்.
நிறைய லவ் ப்ரொபோசல்கள் மீராவிற்கு வந்தபோதிலும் அவள் எதற்கும்
சலனப்படாமல் இலகுவாய்க் கடந்துவிட்டாள்.இந்த டைம் பாஸ் காதலில்
அவளுக்கு நம்பிக்கையில்லை.அவள் கனவுகளின் நாயகன் வேறு.அவள்
தேடும் வாழ்க்கை வேறு.
********

பாட்டிம்மா…நீ எத்தனா வகுப்பு படிச்ச?
எதுக்கு? வேலை தரப்போறியா? நா மட்டும் படிச்சி இருந்தன்னா..?
இருந்தன்னா ஆஆஆ???? என சேர்ந்து இழுத்தாள் மீரா.
இன்னேரத்துக்கு லண்டனுல புஸ் புஸ்ஸுனு இங்லீஸ் பேசிருட்டுருப்பன்..
ஹாஹாஹா….எப்டி பாட்டி புஸ்ஸு புஸ்ஸு ன்னா??
ம்ம் உனக்கென்ன வயசானாலும் அழகும் கம்பீரமும் அப்டீயே தானே
இருக்கு.
அப்போது அங்கே பச்சை கலர் சல்வாருக்கு ஜவ்வு மிட்டாய் கலர்
துப்பட்டாவை போட்டபடி வந்து கொண்டிருந்தாள் இந்திரா…
ஹேய்..இந்து இங்க வா.எங்க போயிட்டு வர்ர?
நா எங்க போனா உனக்கென்ன? என்றவள் திருதிருவென முழித்தாள்.
அடி கழுதை. அவ உனக்கு அக்கா.கேட்டா பதில சொல்லு.பாட்டியின்
அதட்டலில் முகம் கோண நின்றாள்.
திட்டாத பாட்டி.இந்து இரு வர்ரேன என்றபடி உள்ளே சென்றவள் கையில்
ஒரு சிறிய பார்சலுடன் வந்தாள். இந்தா உனக்குத் தான்.
எனக்கா? என்ன இது? என்றபடி பிரித்தவளின் கண்களின் கொள்ளை ஆர்வம்.
அக்கா! எனக்கா இது? தங்க நிறக் கைக்கடிகாரம் பளபளத்தது. எங்க
வாங்கின? அம்மாகிட்ட வாங்கி தர சொல்லிக் கேட்டன்.நீ எந்த படிப்புக்குப்
போகப்போற? மணிக்கூடு ஒன்னுதான் குறைன்னு திட்டினாங்க என்றாள்
இந்திரா.

அவ எப்போ சரியா பேசியிருக்கா? என்று வெற்றிலையை குதப்பியபடி
சொன்னார் கமலம்.
அவங்க சரியாத் தான் சொல்லியிருக்காங்க பாட்டி என்ற மீரா ,நீ எங்க
படிக்கப் போன ?
நான் வேணும்னா படிக்க மாட்டேன்னு சொன்னன். மண்டையில
ஏறல்லியே.இனி எங்க படிக்கிற. என்றாள் இந்திரா.
அதெல்லாம் ஏறியிருக்கும். நீ விருப்பம் வைத்து படிக்கல்ல. படிப்புக்கு
வயசில்ல இந்து. நா சொல்ற மாதிரி கேட்பியா??
மணிக்கூட்டை ஆசையாக பார்த்துக் கொண்டே இருந்தவள் ம்ம்ம் என்றாள்.
சரி..நம்ம ஊர்ல அரசாங்கத்தால புதுசா நிறைய கோர்ஸ் ஆரம்பிச்சு
இருக்காங்க. ஆங்கிலம், தையல், கம்பியூட்டர்னு.நீயும் போககலாம்.நிறைய
புது விஷயம் தெரியவரும்.நான் உன் டீடெய்ல்ஸ் எல்லாம் நிரப்பிட்டன்.நீ
சைன் பண்ணிட்டா போதும்.
பேனாவையும் ஃபோர்மையும் நீட்டினாள் மீரா.குழப்பத்துடன் தயங்கியவளை,
என்னத்துக்கு யோசனை? மீரா மாதிரி நீயும் அறிவாளியா ஆகலாம்.
உங்கம்மாக்கு விபரமா இருக்கு.பாட்டி சொல்றன் போடு தங்கம்.
“சரி” என்று சைன் பண்ணினாள் இந்து.
என்னடி அது? சைன் எல்லாம் பண்ற? படிப்பு இல்லனு இங்கிலிஸ்ல எழுதி
ஏமாத்துவா. அவசரப்பட்டு போட்டுட்டியா? என்றபடி வந்தாள் விசாலம்.
சிரிப்பு வந்தாலும் மறைத்துக் கொண்டு விபரித்தாள் மீரா.
என் பெண்ணுக்கு எப்போ எத செய்யனும் என்டு எனக்குத் தெரியும்.
இதெல்லாம் வேண்டாம்.என ஃபோர்மை கிழித்து எறிந்தாள் விசாலம்.

உன்ன மாதிரியே அவளயும் முட்டாளாக்க முடிவு பண்ணிட்டியா? என்ற
கமலத்தை முறைத்த விசாலம் இந்திராவின் தலையில் “நங்”கென்று
வைத்தாள்.
ஏன்டி.. யாரு என்ன கொடுத்தாலும் வாங்கிட்டு சரின்னு கேட்பியா?
அம்மா.. எதுக்கு அடிக்கிற. ஒரு சைன் தானே போட்டன்.அதுக்கு இப்டிக்
குதிக்கிற.
அம்மாடி… படிப்புன்னு ஆரம்பிக்கல்ல இவ்வளவு வாய். படிச்சா? இதெல்லாம்
குடும்பத்துக்கு ஆகாது.பொண்ணுன்னா வீட்டோட அடங்கனும்.உங்க மூத்த
பேத்தி போல அவுத்த மாடு மாதிரி திரி…
விசாலம்… என்றபடி ஆத்திரத்தோடு அடிக்க நெருங்கினார் கோபால்.
வயலுக்குப் போயிருக்கிறார் என்ற தைரியத்தில் தான் விசாலம்
பேசியது.கோபாலை கொஞ்சமும் அங்கே எதிர்பார்க்கவில்லை.
 
Top Bottom