• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-2



கதவைத் திறந்தவளின் கட்டழகில் மயங்கித்தான் போனான் தர்சன். அத்தை மகள் அழகியாக இருப்பாள் என்பது அவன் ஊகித்ததுதான்! ஆனால் இவ்வளவு அழகை அவனே எதிர்பார்க்கவில்லை.

தாயைக் கேள்வியோடு நோக்கியவளின் விற்புருவங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளத் துடிக்க, அவற்றுக்கு நடுநாயகமாகச் சிறிய கறுப்புப்பொட்டு ஒன்று வீற்றிருந்தது. புருவங்களின் கீழே கூர்விழிகள் இரண்டு நட்சத்திரங்களென ஒளிவீச, இமைக் குடைகள் விசிறியாய் விரிந்து நின்றன. நேரான நாசியும் பவள இதழ்களுமாக நின்றவளின் மேனியோ, பொய்யோ எனும் இடையாளை அவனுக்கு நினைவூட்டியது!

சுற்றுச் சூழலை மறந்து, பக்கத்தில் நிற்கும் அத்தையையும் மறந்து அவளையே பார்த்தபடி தர்சன் நிற்க, “இவர்கள் யார் என்று சொல் பார்க்கலாம்?” என்று, மகளிடம் கேட்ட மகேஸ்வரியின் குரலில் அளவில்லாத துள்ளல் நிறைந்திருந்தது.

தாயின் முகத்தில் இருந்த வெளிச்சத்தையும், குரலில் தெரிந்த உற்சாகத்தையும் பார்த்த வெண்பாவின் முகம் சற்றே சுருங்கியது.

என்றும் இல்லாத வகையில் இன்று அம்மா இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமான இவர்கள் யார்? அந்த வீட்டு ஆட்களோ என்று எண்ணியதுமே அவள் முகமும் மனமும் கடுத்தது.

“தெரிந்தால் சொல்லமாட்டேனா?” என்றாள் வெடுக்கென.

இதென்ன இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாளே என்று எண்ணியபடி ராகினி நிற்க, விமலனின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது!

அவளையே பார்த்தபடி நின்ற தர்சனின் விழிகள் ஒருமுறை ஒளிர்ந்து பின் வழமைக்குத் திரும்ப, “என்னடி, என் அத்தையையே மிரட்டுகிறாய்?” என்று அதட்டினான்.

மகேஸ்வரியின் முகத்தில் பெருமிதமாய் ஒரு புன்னகை மின்ன, திடீரென அவன் அப்படிக் கேட்டதில் முதலில் அதிர்ந்துதான் போனாள் வெண்பா. உடனேயே அவள் முகத்தில் சினத்தின் அடையாளங்கள் தோன்றின.

“என் அம்மாவை மிரட்டுவேன், எதுவும் செய்வேன். அதைக் கண்டவனும் வந்து கேட்க முடியாது. அதோடு டி போடும் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்.” என்றாள் துடுக்காக.

“டி போட்டால் என்னடி செய்வாய்?” என்றபடி வீட்டு வாசலில் கால் வைத்தான் தர்சன்.

அதுவரை வாசலிலேயே நின்றவள் பின்னால் நகர்ந்தபோதும், “கன்னத்தைப் பழுக்க வைப்பேன்!” என்று சொல்லவும் தவறவில்லை.

“எங்கே, பழுக்க வை பார்க்கலாம்?” என்றபடி, தர்சன் அவளை நெருங்கினான்.

அதைப் பார்த்துவிட்டு, “அத்தையின் மகள் என்றாலும் உங்கள் தம்பி ஒரு பெண்ணிடம் இப்படி நடப்பது சரியில்லை..” என்று கணவனின் காதில் முணுமுணுத்தாள் ராகினி.

“அவர்கள் இருவரும் எப்போதுமே இப்படித்தான். நீ அதைப் பெரிதாக எடுக்காதே.” என்று விமலன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே தர்சனை நோக்கி வெண்பா கையை உயர்த்த, வேகமாக வந்து அவளின் கையைப் பற்றினார் மகேஸ்வரி.

“வெண்பா! என்ன செய்கிறாய் நீ? அவன் உன் தர்சன் மச்சான்! ”

“மச்சானும் கச்சானும்! இவர்களெல்லாம் இங்கே வரவில்லை என்று யார் அழுதது? இதற்குத்தான் கிளிநொச்சிக்கே வரவேண்டாம், கொழும்பிலேயே இருக்கலாம் என்று சொன்னேன், கேட்டீர்களா? இப்போதானால் உங்கள் சொந்தக்காரர்களைக் கண்டதும் என்னையே திட்டுகிறீர்கள்.” என்றவளுக்கு ஆத்திரத்தில் அழுகை வரப்பார்த்தது.

“போடி விசரி! அவர்கள் என் சொந்தமில்லை. நம் சொந்தம். உன் மாமாவின் மக்கள். சின்ன வயதில் அவர்களோடு சேர்ந்து விளையாடியதை எல்லாம் மறந்துவிட்டாயா?”

நடந்தது எதையும் மறக்கவில்லை என்று நினைத்தவளின் விழிகளோ தர்சனை வெறுப்புடன் முறைத்தன.

“இவ்வளவு நாளும் இவர்கள் இல்லாமல் சந்தோசமாகத் தானேம்மா இருந்தோம். இப்போது எதற்கு இங்கே வந்து இருக்கிறார்கள், எங்கள் நிம்மதியைக் கெடுக்கவா?” என்று வெறுப்போடு சொன்னவளை,

“வாயை மூடு!” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அதட்டினார் மகேஸ்வரி.

என்றுமில்லாதவாறு அன்று தாய் அதட்டியதில் கண்கள் கலங்கியது அவளுக்கு.

அதற்கு மேலும் வாயைத் திறக்க முடியாமல் ஆத்திரத்திலும் அழுகையிலும் உதடுகள் நடுங்க நின்றவளைக் கவனியாது, அவசரமாகத் தர்சனின் புறம் திரும்பினார் மகேஸ்வரி.

“அவள் பேச்சை காதில் எடுக்காதே தர்சா. அதிகச் செல்லம் கொடுத்து நானே கெடுத்துவிட்டேன்.” என்றவரை, விமலனின் பேச்சுத் தடுத்தது.

“அத்தை! முதலில் நீங்கள் எதையும் பெரிதாக எடுக்காதீர்கள். இவனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சின்ன வயதிலேயே வெண்பாவுடன் சண்டை பிடிப்பதுதானே இவன் தொழில்! இன்றும் வந்ததும் வராததுமாக அவளை வம்புக்கிழுத்தால் சும்மா இருப்பாளா. அதனால் அவளைத் திட்டாதீர்கள். பாருங்கள் அவளை, விட்டால் அழுதுவிடுவாள் போலிருக்கிறது.” என்றவன், “இவனை நீ கணக்கில் எடுக்காதே வெண்பா. நான் எப்போதும் உன் பக்கம்தான் சரியா..” என்றான் அவளிடமும் சமாதானமாக.

விமலனை அவளுக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை என்றாலும் பிடிக்காது என்று சொல்லவும் முடியாது என்பதால், மனமின்றிச் சும்மா தலையை ஆட்டி வைத்தாள் வெண்பா.

“என்ன, தலை பலமாக ஆடுகிறது. அவன் உனக்கு ஆதரவாக இருப்பான் என்றால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா? உன் வாய்க்கு இருக்கடி என் அத்தை மகளே!” என்றவனைப் பார்த்து மகேஸ்வரி சிரிக்க, அவர் மகளோ முறைத்தாள்.

திரும்பவும் வெண்பாவிடம் வம்பிழுத்த தம்பியை, “சும்மா இருடா!” என்று அதட்டிய விமலன், “அத்தை, நேரமாகிறது, வாருங்கள் போகலாம்.” என்றான்.

“ஏதாவது குடித்துவிட்டுப் போகலாமே விமல். ராகினி முதன் முதலாக இங்கே வந்திருக்கிறாள்..”

“இல்லை அம்மா. உடனேயே போனால்தான் மாமாவைக் காணமுடியும். இல்லையானால் அவர் மீட்டிங்குக்குச் சென்றுவிடுவார்.” என்றாள் ராகினி.

“ஓ.. அப்போ உடனேயே போவோம்..” என்ற மகேஸ்வரி, “கிளம்பு..” என்றார் மகளிடம்.

“எங்கேம்மா?” சினந்த குரலில் கேட்டாள் மகள்.

“மாமா வீட்டுக்கு..” வீட்டைப் பூட்டுவதற்காகத் திறப்பை எடுத்தபடி சொன்னார் தாயார்.

“நான் வரவில்லை!”

“அடிதான் வாங்கப் போகிறாய் வெண்பா. எனக்கு எரிச்சலைக் கிளப்பாமல் கிளம்பு!”

“முடியாது!” என்றபடி, பிடிவாதம் முகத்தில் துலங்க முரட்டுக் குதிரையாக நின்றவளை அடக்கிப் பார்க்கும் வேகம் எழுந்தது தர்சனுக்குள்.

பெரிய பெண்ணாக வளர்ந்தபிறகும் அந்தப் பத்துவயதில் இருந்த சிறுபிள்ளைத் தனமும், பிடிவாதமும், அழுத்தமும் இன்னும் அவளிடம் அப்படியே இருந்ததில் அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆவல் அவனுக்கு இன்னுமின்னும் உண்டானது.

“அத்தை, அவளாக வந்தால் நடந்து வருவாள். இல்லையானால் நான் தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றுகிறேன். நீங்கள் நடவுங்கள்!” என்று சொன்ன தர்சன், “என்ன நீயாக வருகிறாயா அல்லது தூக்கவா?” என்று கேட்டபடி அவளை நெருங்கினான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனைப் பற்றி அறிந்திருந்த மற்றவர்கள் அவனின் பொய் மிரட்டலை எண்ணிப் புன்னகையுடன் பார்த்திருக்க, வெண்பாவோ சற்று அதிர்ந்துதான் போனாள்.

அவன் அவளுக்குச் சொந்தம் என்பதனாலேயே அவளைத் தூக்குவதாகச் சொல்லலாமா என்கிற ஆத்திரத்துடன் தாயைப் பார்த்தவளுக்கு அவரின் சிரித்த முகம் இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது .

எப்போதும் ஆண்களோடு அளவுக்கு அதிகமாகப் பேசாதே, பழகாதே, சிரிக்காதே என்று சொல்லும் தாயாருக்கு இது பிழையாகப் படவில்லையா என்று நினைத்த மாத்திரத்தில், அண்ணன் மக்களைக் கண்டதும் தாய் தன்னைத் தூரத்தில் நிறுத்திவிட்டது போன்ற மாயை தோன்றியது அவளுள்.

“நானே வருகிறேன்..” என்று அவள் முணுமுணுக்க, “அது!” என்றான் தர்சன் வெற்றிக் களிப்புடன்.

விமலனும் ராகினியும் தர்சனும் காரை நோக்கி நடக்க, வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டிருந்த தாயோடு தேங்கி நின்றாள் வெண்பா.

அங்கே காருக்குள் விமலன் முன்னால் ஏற முனைய, “நீ அண்ணியுடன் போய்ப் பின்னால் ஏறு.” என்றான் தர்சன்.

“பெண்கள் மூவரும் பின்னால் இருக்கட்டும் தர்சா..” என்றான் அவன்.

“சொன்னதைச் செய். இல்லையானால் உன்னை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.”

“என்னவோ செய்து தொலை!” என்றுவிட்டு மனைவியின் அருகில் ஏறிக்கொண்டான் விமலன்.

தாயும் மகளுமாக வந்தவர்களிடம், “அத்தை! நீங்கள் அண்ணியின் அருகில் ஏறுங்கள்.” என்றான்.

மகேஸ்வரி பின்னால் அமரப் போக, அவரோடு செல்லத் திரும்பியவளை, “இங்கே ஏறு..” என்றான், முன்பக்கக் கதவைத் திறந்தபடி.

அவனை உறுத்து விழித்துவிட்டு, “அம்மா..” என்று ஆரம்பித்தவளின் கையைப் பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக முன்னிருக்கையில் அமர வைத்துவிட்டு மறுபுறம் சென்று அமர்ந்து காரை இயக்கினான் தர்சன்.

அவனின் செய்கையால் ஒருகணம் அதிர்ந்து அசைவற்றுப் போனாள் வெண்பா.

தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டவனைக் கண்டிக்கமாட்டாரா என்கிற கேள்வியோடு தாயை அவள் திரும்பிப் பார்க்க, அவரோ இவளைக் கவனியாது ராகினியோடு அளவளாவத் தொடங்கியிருந்தார்.

தர்சனோ அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.

அதில் வெகுண்ட மனதை அடக்க முடியாமல் அவன் புறமாக ஒரு அக்கினிப் பார்வையை அவள் வீச, அவனோ ஒற்றைப் புருவத்தைத் தூக்கினான் மிதப்பாக!

மனம் வெறுத்தவள் அவனைப் பார்க்கவே பிடிக்காமல் பார்வையைப் பாதையில் பதித்தாள்.

கார் போகும் பாதை அவள் அறிந்ததுதான். பிறந்து நடைபழகிய நாளில் இருந்து அவள் சுற்றித்திரிந்த ஊர்தான். இந்த ஊரில் இருக்கும் அத்தனை சந்துகளும் பொந்துகளும் அவளுக்கு அத்துப்படிதான்!

ஆனால், அவற்றை நினைக்கையில் மகிழ்ச்சிக்குப் பதிலாக எரிச்சலும் ஆத்திரமும்தான் வந்தது.

எத்தனை நாட்கள் அருகில் அமர்ந்து கார் ஓட்டிக்கொண்டு வந்தவனின் கையால் குட்டு வாங்கியிருப்பாள்.

எத்தனை தடவை அவனால் தாயிடம் அடி வாங்கியிருப்பாள். அவள் அடிவாங்கியதைப் பார்த்து அவன் நகைக்கையில் அந்தப் பிஞ்சு வயதிலேயே எப்படியெல்லாம் துடித்திருப்பாள்.

ஆத்திரத்தில் ஒருநாள் அவன் சட்டையை ‘அயர்ன்பாக்ஸ்’னால் அவள் எரித்ததும், அதைக் கண்டவன் அதே ‘அயர்ன்பாக்ஸ்’ஐ அவள் முகத்தில் வைக்கக் கொண்டுவந்ததும், பயத்தில் அலறியவள் பல நாட்கள் காய்ச்சலில் கிடந்ததும் என்று நடந்த சம்பவங்கள் ஒன்றா இரண்டா...

அழுதுகொண்டு சென்று அப்பாவிடம் சொன்னால் கூட “அது உன் மச்சான்மா. உன் மேலிருக்கும் அன்பில்தான் உன்னோடு அப்படி விளையாடுகிறான்..” என்று அவர் சொன்ன சமாதானங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், எத்தனை நாட்கள் அந்தச் சின்ன வயதிலேயே மனதுக்குள் புளுங்கியிருப்பாள்.

அந்த அப்பா மூளைக் காய்ச்சலால் திடீரென்று இறந்துபோனதும், அதன் பிறகு தர்சனின் ஆட்டம் இன்னும் அதிகரித்துத்தானே போனது.

இறந்துபோன அப்பாவின் நினைவில் அழுதுகொண்டிருந்த அம்மாவிடம் எதையும் சொல்ல முடியாமல் அவள் தவித்திருக்க, ஒருநாள், “நாம் இந்த வீட்டை விட்டு வேறு எங்காவது போய்விடலாமா?” என்று தாய் கேட்டபோது எவ்வளவு மகிழ்ச்சியாகத் தலையாட்டினாள்.

அங்கிருந்து வெளியேறிய தினத்தில் இருந்து இந்தக் கிளிநொச்சிக்கு மீண்டும் திரும்பி வரும்வரை அவள் அறிந்தது சொர்க்கம் மட்டுமே!

அவ்வளவு பாசமாக அல்லவா கண்ணுக்குள் பொத்திவைத்துப் பார்த்துக்கொண்டார் அவளின் அன்னை.

அதே அம்மா இன்று நடந்துகொள்ளும் முறையைப் பார்த்தவளுக்கு மனதுக்குள் வலித்தது.

திடீரெனக் கார் நின்றதும், நினைவுகள் கலைந்து நிமிர்ந்து பார்த்தவளுக்கு அந்த வீட்டுக்குள் செல்லவே பிடிக்கவில்லை.

அந்த வீட்டையே வெறித்தபடி அவளிருக்க, பின்னால் இருந்தவர்கள் இறங்கியதைக் கவனித்துவிட்டு, “தாயும் மகளுமாகச் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டா ஓடினீர்கள். பார்த்தாயா, திரும்பப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டோம். இனி இங்கிருந்து ஓட நினைத்தாலே காலை உடைத்துவிடுவேன்!” என்றான் தர்சன் மிரட்டலாக.

திடுக்கிட்டுத் திரும்பினாள் வெண்பா.

அவள் விழிகளில் தெரிந்த அதிர்ச்சியில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “என்ன பார்வை? இறங்கு! இனி இதுதான் உன் வீடு!” என்றான் அவன்.

உறைந்துபோய் அமர்ந்திருந்தவள், “சொன்னது புரியவில்லை? இறங்கு!” என்றவனின் அதட்டலில் விழுந்தடித்துக்கொண்டு இறங்கினாள்.

அங்கே, வீட்டினுள்ளே ராஜசேகர், மஞ்சுளா, மகேஸ்வரி மூவரும் பேச்சுக்கள் மறந்து ஒருவரை ஒருவர் கலங்கிய விழிகளுடன் பார்த்தபடி நிற்க, உள்ளே நுழைந்த வெண்பாவைக் கண்டதும் மஞ்சுளாவின் விழிகள் விரிந்தன.

“இவள் வெண்பா தானே மகி. எவ்வளவு அழகாக இருக்கிறாள். என் கண்ணே பட்டுவிடப் போகிறது..” என்றவர், ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டார்.

அந்த அணைப்புக்குள் மனமுவந்து அடங்க முடியாமல் நின்ற வெண்பா சிரமப்பட்டு ஒரு புன்னகையைப் பொய்யாகச் சிந்தினாள்.

“ஆமாம் அண்ணி..” அடைத்த தொண்டையில் இருந்து தளுதளுத்தபடி சொன்னார் மகேஸ்வரி.

பின்னர்த் தமையனின் புறம் திரும்பி, “அண்ணா.. என் மேல் கோபமில்லையே..” என்றார் மெல்ல.

அதுவரை வார்த்தைகள் இன்றி நின்றவரும் தன்னைச் சமாளித்துக் கொண்டார் போலும். பனித்த விழிகளோடு, “கோபம், ஆத்திரம், கவலை, வருத்தம் எல்லாம் இருந்ததுதான். ஆனால், அதையெல்லாம் இப்போது காட்டி என்ன செய்யச் சொல்கிறாய்? யாரிடமும் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையையும் தூக்கிக்கொண்டு போகுமளவுக்கு அப்படி என்ன நடந்தது? உனக்கு என்ன குறை வைத்தேன் நான்? அல்லது உன் மகளுக்கு ஏதாவது குறை வைத்தேனா? அப்படியே ஏதாவது இருந்திருந்தாலும் அதை நீ என்னிடம் சொல்லியிருக்கலாமே. அந்த உரிமையைக் கூட உனக்கு நான் தரவில்லையா?” என்றார் வேதனையும் வருத்தமும் தோய்ந்த குரலில்.

எந்தக் கேள்வியைத் தமையன் கேட்டால் தன்னிடம் பதிலில்லை என்று இதுநாள் வரை தவித்தாரோ.. அந்தக் கேள்வி இன்று அவர் முன் வைக்கப்பட, எதையும் வாய்விட்டுச் சொல்லமுடியாமல் நின்றார் மகேஸ்வரி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மஞ்சுளாவோ ஒருவிதப் பதட்டத்துடனும் பயத்துடனும் கணவரின் தங்கையையே பார்த்திருந்தார்.

ஆனால் மகேஸ்வரியோ தமையனின் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லாது, “என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா..” என்றார் மெல்ல.

தங்கையின் முகத்தையே கூர்ந்தார் ராஜசேகர்.

தமையனின் விழிகளைச் சந்திக்கும் திராணியற்றுத் தலையைக் குனிந்துகொண்டார் மகேஸ்வரி.

ராகினி எல்லோருக்கும் குடிக்கக் கொண்டு வருவதற்காகச் சமையலறைக்குச் சென்றுவிட, விமலன் ஒருபக்கமாக நிற்க, தாயின் அணைப்பில் நின்ற வெண்பாவை விழிகளால் விழுங்கியபடி நின்றான் தர்சன்.

ராஜசேகரே அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தார்.

“சரி, எதற்காகவோ வெளியே போனவள் நன்றாக இருக்கிறேன் என்றாவது எங்களுக்குத் தெரிவித்திருக்கலாம் இல்லையா. குழந்தையுடன் எந்தத் துணையும் இல்லாமல் போனவள் எங்கே எப்படி இருக்கிறாள் என்று தெரியாமல் நாங்கள் தவிப்போம் என்று கூடவா நீ நினைக்கவில்லை?”

“அது அண்ணா…” என்று இழுத்த மகேஸ்வரி ஏதோ முடிவெடுத்தவராய் தமையனை நிமிர்ந்து பார்த்தார்.

“அண்ணா, பழையவைகளைத் திரும்பப் பேசவேண்டாமே! நான்தான் ஏதோ முட்டாள் தனமாய், எதையும் யோசியாது இந்த வீட்டை விட்டு வெளியேறினேன். அது எவ்வளவு பெரிய தப்பு என்பதை இந்தப் பத்து வருடத்தில் மிக நன்றாகவே உணர்ந்துகொண்டேன். நான் செய்த தவறுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். மற்றும்படி நீங்களோ அண்ணியோ எனக்கு எந்தக் குறையுமே வைக்கவில்லை.” என்றவரை நன்றியோடு பார்த்தார் மஞ்சுளா.

அன்று, கணவனை இழந்து அண்ணனே கதி என்று வந்த மகேஸ்வரியை “ஏற்கனவே ஒன்றுக்கு மூன்று பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன். இதில் இன்னொரு குடும்பத்தையும் பார்ப்பது என்றால் எங்கேதான் போவது..” என்று அவ்வப்போது சாடையாகச் சாடினார் மஞ்சுளா.

அவரின் முணுமுணுப்புக்களையும், முகத்திருப்பலையும் கணவனை இழந்த சோகத்தில் இருந்தவருக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

ரோஷமும் பொங்கிவிடவே அடுத்தவருக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்று நினைத்தவர், உழைத்து முன்னுக்குவந்து சொந்தக் காலில் நின்று காட்டவேண்டும் என்கிற உறுதியுடன் மகளோடு அந்த வீட்டை விட்டே வெளியேறினார்.

அப்படிக் கிளிநொச்சியை விட்டு வெளியேறியவர் சென்றது கொழும்பில் இருக்கும் தன் தோழியின் வீட்டுக்கு. தோழியின் துணையுடன் தனியாக வீடுபார்த்துச் சென்றவர், தமிழ் இலக்கியத்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்ததில் ஒருவழியாக ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகவும் வேலையைப் பெற்றுக்கொண்டார்.

எல்லாமே நன்றாக அமைந்தபோதும், இந்த உலகம் அதன்பிறகே அவருக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது.

அவரும் மகளும் வேலியில்லாப் பயிர் என்று அறிந்த காமுகர் பலர் அந்தப் பயிரை மேய்ந்துவிட முயன்றதும், ஆண் துணை இல்லாத பெண்ணென்று எண்ணி சக ஆண் ஆசிரியர்களில் ஒருசிலர் கூட அவரைச் சீண்டிப் பார்க்க முயன்றதும் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இப்படிப் பல சம்பவங்கள் அண்ணன் வீட்டிலிருந்து வெளியேறியது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவருக்கு உணர்த்தியது.

அண்ணனோடு இருந்தபடியே தொழிலைத் தேடி, சுயமாக வாழ்ந்திருக்க அண்ணியும் பேசாமல் இருந்திருப்பார் என்பது அதன்பிறகே உறைத்தது.

காலம் கடந்து உணர்ந்ததை வைத்துச் செய்துவிட்ட தவறை நேர் செய்யத் துணிவின்றி எப்படியோ இந்தப் பத்துவருட காலத்தை ஓட்டியிருந்தார் அவர்.

இதோ இன்று கடவுளின் அருளால் திரும்ப அண்ணனின் வீட்டுக்கு வந்தவரை மலர்ந்த முகத்தோடு வரவேற்ற அண்ணியின் முகமே, அவரும் செய்த தவறை உணர்ந்திருக்கிறார் என்பதை உணர்த்தியது.

நடந்தவைகள் எல்லாம் முடிந்தவைகளாக இருக்கையில், அவற்றைத் திரும்பப் பேசி அண்ணனின் குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டுபண்ண விரும்பவில்லை மகேஸ்வரி.

அதோடு, இனியும் எக்காரணம் கொண்டும் அண்ணனை விட்டுப் பிரியவும் அவர் தயாராக இல்லை.

எனவே தமையனிடம் எதையும் சொல்லாமலேயே அந்த விஷயத்தை முடிக்க முயன்றார்.

ஆனால் ராஜசேகரோ, “இப்போதும் எதற்காக இந்த வீட்டை விட்டுப் போனாய் என்று உன்னால் என்னிடம் சொல்ல முடியவில்லை, அப்படித்தானே?” என்று விடாமல் கேட்டார் வறண்ட குரலில்.

ஒரேயொரு தங்கை, அதுவும் கணவனை இழந்தவள் எங்கே என்றில்லாமல் போனதும், அவள் முதலில் இந்த உலகத்தின் எந்த ஒரு மூலையிலாவது உயிரோடு இருக்கிறாள் தானா என்று இவ்வளவு நாளும் துடித்தவருக்கு அப்படி அவள் மறைந்த காரணத்தைச் சிறியதாக எண்ணி விட முடியவில்லை.

அவரை அறிந்த அவர் மனையாளோ, “அதுதான் அவள் திரும்ப வந்துவிட்டாளே. பிறகும் ஏன் அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்? விடுங்கள்!” என்று அதட்டினார்.

மகேஸ்வரியின் புறம் திரும்பி, “இனி எந்தக் காலத்திலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டை விட்டு நீ போகக்கூடாது மகி.” என்றவர், தன் மனதை மிகத் தெளிவாகவே அவருக்கு உணர்த்தினார்.

முகம் மலர, விழிகள் பனிக்க, “போகமாட்டேன் அண்ணி. எனக்கும் வெண்பாவுக்கும் இனி எல்லாமே நீங்கள்தான்.” என்றார் அவரும்.

“அவளே சொல்லிவிட்டாள் பார்த்தீர்களா.. இனியாவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக இருங்கள்.” என்று கணவரிடம் சொன்ன மஞ்சுளா, வெண்பாவை பார்த்த கணத்திலிருந்து மனதில் தோன்றிய ஆசையை வெளிப்படையாகக் கேட்டார்.

“மகி, உன் மகளை இந்த வீட்டுக்கே மருமகளாகத் தா.”

“அண்ணி..!?!” ஆனந்தமும் அதிர்ச்சியுமாகக் கூவினார் மகேஸ்வரி.

சற்றேனும் சிந்தித்துப் பாராத ஒன்றை மஞ்சுளா கேட்டதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் அவர்.

பேச்சின்றி நின்றவரிடம், “நீ என்ன தருவது, நானே சொல்கிறேன். இவள் என்வீட்டு மருமகள்! வேறு வீட்டுக்கு அனுப்ப நான் விடமாட்டேன்.” என்றார் உறுதியான குரலில் மஞ்சுளா.

எந்த மகனுக்கு அவளை மனைவியாக்கப் போகிறேன் என்று அவரும் சொல்லவில்லை. மகேஸ்வரியும் அதைப்பற்றிக் கேட்கவில்லை!

ஆனால், வெண்பாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் சிலையாகி நிற்க, தர்சனோ ஆனந்தத்தில் அவளையே பார்த்தபடி நின்றான்.
 
Top Bottom