அத்தியாயம் 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
பன்னிரெண்டாவது நாள் உதயத்தில், இவர்கள் தயாராகி வர, வினித், பெரியவரின் பேரன் பேத்தியோடும் வேந்தனும் வரச் சரியாகவிருந்தது.
வந்ததும் அவன் பார்வை இலக்கியாவைத் தேடியோடியது. அவள் பார்வையும் அவனில்தான். சட்டென்று கைபேசியைப் பார்க்கவும் செய்தாள்.

“நேற்றிரவு கதைச்சிக்கொண்டிருந்திட்டுத் தூங்கப் போகவே நடுச்சாமம் ஆகிட்டு!" சொன்னவன் பார்வை அவள் விழிகளை உரசி மீண்டிட்டு!

‘என்ன எண்டாலும்...இரவு எவ்வளவு நேரம் முழிச்சிருந்தன்!’ அவள் மனம் முணுமுணுப்போடிருந்தது. அதனிடையில் பிரயாணம் பற்றிய கதை எழுந்தது.

“ கிராண்ட் கண்யன் ‘ஸ்கை வோக்’ அருமையான வியூதான்; அதேபோலவே இன்னும் நிறைய இடமிருக்கு!" வேந்தன் சொல்ல, “ஓம், நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாருமாச் சேர்ந்து ரிம் ட்ரயல், கன்யன் நஷனல் பார்க், அன்டிலோப் கன்யன் எல்லாம் போயிருக்கிறம், வளர்ந்தவேதான் நல்லா ரசிப்பினம் அண்ணா." என்றான் வினித்.

"இவையல் ஓகே டா. கவின் கூட நல்லா சந்தோசமா நடப்பார். ஆனா... ஒரே நாளில எல்லா இடமும் போறது எண்டது ஏலாத வேல. ஒரு கிழமை நிண்டு எல்லாம் பார்க்க வேணும். ரெயின்போ பிரிஜ், அதோட போட் டூர், ஹெலி டூர் எண்டு ஒவ்வொண்டுமே அற்புதமா இருக்கும்!" பதிலிறுத்தான், வேந்தன்.

"இன்னொருமுறை இங்க வரேக்கப் பார்க்கலாம்.” என்றார் சுகுணா.

“கட்டாயம் போவம். ‘ரிம் ட்ரையல்’ போன போது வானம் கிட்ட இருக்கிறது போல நான் ஃபீல் பண்ணியிருக்கிறன். அவ்வளவு உயரத்தில் நடந்து க்ராண்ட் கண்ணியன் முழுதையும் பார்க்கலாம். அதோட ‘அன்டிலோப் கன்யன்’ சொல்ல வார்த்தையில்ல; சிவப்பு நிறக் குகைகள்...கடவுளே! அது ஒரு அற்புதமான உணர்வு. அடுத்த முறை கட்டாயம் போவம்." தொடர்ந்தாள், பெரியவரின் பேத்தி.

"இப்ப இப்பிடி மாறி மாறிச் சொல்லி எங்களுக்கு ஆசையைத் துண்டுறீங்க! அப்பப் பேசாம ‘அன்டிலோப் கன்யன்’ போவம். ‘ஸ்கை வோக்’ பிறகு வரேக்கப் போகலாம். அல்லது போட் டூர் போவமா?" இடையிட்டாள், கவி.

"இல்ல அக்கா ஸ்கை வோக் போவம் ப்ளீஸ்!" இலக்கி சொல்ல, "ஓம், திட்டம் போட்டபடி ஸ்கை வோக் போகலாம்; மற்றதுகளுக்கு இன்னொருக்கா வரலாம்." என்றான் வேந்தன்.

"சரி, அப்ப அடுத்தமுறை நீங்களே கூட்டிக்கொண்டு வாங்கோ என்ன?" உரிமையோடு சொன்னாள், கவி.

"அதுக்கென்ன கட்டாயம்." சாதாரணமாகச் சொன்னானவன்.

"அதுதான் சொன்னனே, யாழ் டிராவல்ஸ்ல ஒரு வாகனம் உங்களுக்கெண்டு ஒதுக்கியாச்சி!" என்ற வினித் பார்வை மின்னலென இலக்கியாவில் படிந்து விலகியது. அவன் பார்ப்பது புரிந்ததும் வலு கவனமாக வானகத்தில் ஏறுவதில் முனைப்பாக இருந்தாளவள்.

"சரி சரி கதைச்சுக்கொண்டு நிக்காமல் வெளிக்கிடுவம்.” மாறன் சொல்ல, "எங்களோட ஆரு வரப்போறீங்க?" கேட்டாள் பெரியவர் பேத்தி.

"நான் உங்களோட வாறன்." ஏறியமர்ந்திருந்த இலக்கியா இறங்கிச் செல்ல, வேந்தன் "ஏனடி!" அவன் புறமாக இறங்கியவளுக்குக் கேட்கவேதான் சலித்துக்கொண்டான்.

'நேற்று அவ்வளவு சொல்ல சொல்லப் போனார் எல்லா? இப்ப நான் அந்தக் கார்ல வாறன்' அவள் மனதுள் முணுமுணுத்தபடி நகர முயல, "இலக்கியா நீர் ஓடப் போறிரோ?" என்றிருந்தான், வேந்தன்.

சட்டென்று நின்றவள் விழிகளில், 'அது...' மின்னல்! இதழ்களில் மலர்ந்திட்ட அழகிய முறுவலோடு ஏற முனைய, "இது நல்ல பகிடி! நான் ஓடுறன். அவள் அண்டைக்கும் நிறையத் தூரம் ஓடினவள்." இலக்கியாவைத் தள்ளிக்கொண்டு இறங்கியிருந்தாள், கவி.

“தம்பி இவை இப்பிடித்தான் மல்லுக்கு நிப்பினம், நீங்களே எடுங்கோ!" இடையிட்டது சுகுணாவின் குரல்.

"இல்ல இல்ல நான் தான் ஓடுவன்." வேந்தனை இழுத்து இறக்காத குறையா வெளியேற வைத்துத் தான் ஏறியமர்ந்துவிட்டாள், கவி. முகம் சுருங்கிப் போக விறுவிறுவென்று நகர்ந்துவிட்டாள், இலக்கியா.

கவிக்கோ, அவ்வளவு சந்தோசம். மனதில் புதுவகை உற்சாகம். "இண்டைக்கு முழுநாளும் கார் எனக்குச் சரியோ!" என்றபடி வாகனத்தை எடுக்க, "நல்லவேளை அப்பிடியே சொந்தமா வச்சிருக்கிறன் எண்டு சொல்லாமல் விட்டிங்களே அக்கா!" ஆரூரன் கடித்தான்.

"ஆங்! அப்பிடிச் சொன்னா வேந்தன் தரமாட்டாரா என்ன?" மகள் வேந்தனின் முகம் பார்த்துக் கேட்க, வேந்தனை ஆராய்ந்தது, சுகுணாவின் பார்வை. மகளுக்கு வேந்தனைப் பிடித்திருக்கோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றதே!

கைபேசியில் பார்வையிருக்க, "அதுக்கென்ன வச்சிருங்க." என்றானவன். அதுவே கவிக்குப் போதுமாக இருந்தது. முகம் மலர்ந்திட்டு!

"எப்பிடி?" சகோதரனைப் பார்த்துச் சொன்னபடி அவள் வாகனமோட்ட, வேந்தனோ, இலக்கியாவுக்குக் குறுஞ்செய்தி தட்டுவதில் கவனமாக இருந்தான்.

‘விட்டுட்டுப் போய்ட்டீர் என்ன? நீர் செய்த வேல கொஞ்சமும் சரியில்ல!’

‘அத நேற்றே செய்தது நீங்க!’ தாமதிக்காது பதில் வந்தது.

"அதெல்லாம் செல்லாது, அது தூங்கிற நேரம் தானே?"

‘ஆனா நான் தூங்கேல்ல சரியோ?’

‘சொறி டா. நல்லா நேரம் போயிட்டு, தூங்கி இருப்பீர் எண்டுதான் சத்தம் போடேல்ல.’

‘ம்ம்... எல்லாத்துக்கும் ஒரு சாட்டு!’ கணம் தாமதிக்காது பதில் வந்து விழ, அவள் அருகிலிருக்கும் உணர்வு அவனுள்.

‘ஆர் நானோ? நீர்தான் அப்பிடி!’

‘நான் என்ன செய்தன்?’ கோப ஸ்மைலியோடு குதித்தோடியது இலக்கியாவின் பதில்.

‘நான் சொன்னதுக்கு இன்னும் பதில் சொல்லேல்ல. அதோட, என்னட்ட இருந்து ஒரு செய்தியும் வராட்டி அப்பிடியே விடுவீரா? நீர் ஒரு ஹை போட்டிருக்கலாமே!’ அவனும் ஒரு கோப முகத்தை அனுப்பி வைத்தான்.

‘ஹா...ஹா...’ தட்டிய இலக்கியின் முகமும் மென்னகையில் கனிந்திட்டு!

அடிக்கடி அவளையே பார்த்தபடி வந்த வினித், "ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" செருமலோடு சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள், இலக்கியா.
 
Last edited:

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
"என்ன நடக்கட்டும்? ஆருக்குச் சொன்னீங்க?" அவனருகில் அமர்ந்திருந்த பெரியவரின் பேத்தி கேட்ட மறுநொடியே, வினித் பார்வை பின்னால் பாய்ந்தது.

இலக்கியாதான் அவஸ்தையில் நெளிந்தாள். 'வேந்தன் எல்லாம் சொல்லிட்டார் போல!' எண்ணியவளால் இயல்பாகவிருக்க முடியவில்லை. 'இப்ப இவர் எல்லாருக்கும் சொல்லிட்டா!' பதற்றம் வியாபிக்க, குப்பென்று முகம் வியர்த்துப்போனாள்.

"ம்ம்...பின்னால ஒருக்காப் பாருமன்!" வினித் ஆரம்பிக்வே, மடியிலிருந்த கைப்பையினுள் பேசியைத் திணித்தும்விட்டாள். அதைக்கண்ட வினித் வாய்விட்டே சிரித்தான்.

"நான் உங்கள மட்டும் சொல்லேல்ல, இலக்கியா.” சீண்டலாகத் தொடங்கி, “நீங்க தாராளமா மெசேஜ் அனுப்புங்கோ; கதைக்கவும் செய்யலாம் சரியோ!" அடக்கிக்கொண்ட முறுவலோடு சொன்னவன், "வெளிக்கிட்ட கையோட மூண்டு பேரும் ஃபோனில பிசி. நான் ஒருத்தன் கார் ஓடுறன், அதைத்தான் பொதுவாச் சொன்னன். வந்தது ரோட் ட்ரிப்...ம்ம்ம்." என்றான், சமாளிப்பாக.

"வேணுமெண்டா என்னட்டத் தந்திட்டு நீங்க ஃபோனில இருங்க வினித்!" மைத்துனனைச் சீண்டினான், பெரியவரின் பேரன்.

"அதானே? ஏதோ இவர் ஃபோனே பார்க்காத ஆள் கணக்கில!" அவன் தொடையில் ஒன்று போட்டாள், வருங்கால மனைவி.

அப்படியே அவர்கள் அரட்டையைத் தொடர, சொல்லாமல் கொள்ளாமல் கைபேசியை வைத்துவிட்டோமேயென்ற அவஸ்த்தையோடே, முன்னால் செல்லும் காரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள், இலக்கியா.

அவளையும் பேச்சில் இழுத்து விட்டார்கள்தான், அவளால்தான் முழுமையாக ஒன்ற முடியவில்லை.

அந்நேரம், இலக்கியாவின் கைபேசி இசையெழுப்பியது. யாரென்று நன்றாகவே தெரியும். அதுவே, எடுப்பதா இல்லையா என்ற தடுமாற்றம் கொடுத்தது. 'முதல் அங்க இருந்து எப்பிடிக் கதைப்பார்? இவர...' மனதுள் செல்லமாக முறைத்தும் கொண்டாள்.

அங்கோ, "பச்!" வெளிப்படையாகவே சலிப்பைக் காட்டியவனைத் திரும்பிப் பார்த்தாள், கவி. இன்றையபொழுது நீண்ட பிரயாணம் இல்லையென்றாலும் அவனருகில் அமரக் கிடைத்த பொழுதை அளவளாவிக்கொண்டே கடக்க விரும்பியது அவளுள்ளம். அது பார்த்தால் ஏறிய நேரம் தொடக்கம் கைபேசியையே குடைந்து கொண்டிருந்தால்?

"என்ன வேந்தன், ஆருக்கு ட்ரை பண்ணிகொண்டே இருக்கிறீங்க? ஆன்ட்டிக்கா?” உரிமையோடு கேட்டவளை அவன் ஏறிடவில்லை. மனதுள் அவள்பால் மிகுந்த எரிச்சல்!

மீண்டும் மீண்டும் அவள் பார்வை தன்னில் பட்டதை வைத்து, பதிலுக்காகக் காத்திருக்கிறாள் என்பதையுணர்ந்து, "ம்ம்...வீட்டுக்குத்தான்." என்றவன் பதிலில் அசிரத்தை ஒட்டிக்கிடந்தது.

“ஏதும் வேலையா இருப்பினம் போல, கொஞ்சத்தில் எடுங்க."

'அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்; நீங்க ஆசையா விளுந்தடிச்சு வாங்கின வாகனத்த ஒழுங்கா ஓட்டுங்க!' வேந்தன் மனம் அதட்டியது. அதேகணம் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

"பின்னால வருகீனம் தம்பி." அவன் பார்வைக்குப் பதில் சொன்னார், நாதன்.

சிறு தலையாட்டலோடு ஊன்றிப் பார்த்தான். இலக்கியாவின் உரு மங்கலாகத் தெரிந்தது. அவளும் முன்னால்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று திரும்பியவன் மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தான். அவள் எடுக்கவேயில்லை. உண்மையில் சுறுசுறுவென்று எரிச்சல்தான் உருவாக்கிட்டு! அது முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்திட்டு.

கைபேசியை வைத்துவிட்டு நேர முன்னால் பார்த்தபடி அவனிருந்த விதம் கவிக்கு ஒரு மாதிரி இருந்தது.

“தம்பி ஒகே தானே...என்னவோ போல இருக்கிறீங்க?” கவியின் பின்னாலமர்ந்திருந்த நாதனும் அவனைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.

“இல்ல இல்ல ஒண்ணும் இல்ல அங்கிள்.” பட்டென்று சொல்லி மெதுவாகச் சிரித்தவன், அதன் பிறகு நாதனோடும் மாறனோடும் பொதுவாகக் கதைத்தபடி வந்தாலும், கவி இடையிட்டுக் கதைத்ததின் பெரும்பகுதியைக் காதில் வாங்காத பாவனையில் கடந்தும் விட்டான்.

இடையில் நின்று மினக்கடாது ‘கிராண்ட் கன்யன் ஈகள் பொயிண்ட்’ வந்திறங்கி, வாகனத்தை நிறுத்திவிட்டு வினித் வரும் வரை காத்து நிற்கும் பாவனையில் பின்தங்கி நின்றான், வேந்தன்.

அவனில் தான் இலக்கியாவின் பார்வையிருந்தது. அதுவே, அவன், இவள் புறம் திரும்பவும் பட்டென்று சுற்றத்தைப் பார்க்கும் பாவனையில் விழிகளைத் திருப்பி விட்டாள்.

பார்வைக்கெட்டிய தூரமெல்லாம் செந்நிற மலைகள் பரந்து படர்ந்து கிடந்தன! மற்றுமொருமுறை, இயற்கையில் அற்புதக் கைவண்ணம் கரம் விரித்து வரவேற்றுக்கொண்டிருந்தது!

"அதுசரி...எங்கள மட்டும் கண்ணில தெரியுதில்ல போல!" அடிக்குரலில் சொன்னான் வேந்தன். கேட்டவள் பார்வை, பின்னால் வரும் வினித் ஆட்களையும் முன்னால் செல்லும் தன் குடும்பத்தையும் தான் நோக்கிற்று.

"எத்தினைக்கு? எப்ப எண்டாலும் தெரியத்தான் போகுது!" வேந்தனுக்குப் பொறுமையே போயிருந்தது.

"வேந்தன் ப்ளீஸ்! இந்தப் பயணம் முதல் முடியட்டும்." கண்களில் கெஞ்சலோடு வார்த்தைகளை உதிர்த்தவள் தாண்டி நடக்க, அவளையும் முந்திக்கொண்டு விரைந்தான் அவன்.

அவன் சென்ற விதம் அவளைப் பாதிக்கவே செய்தது. அதேநேரம், 'இப்ப என்னத்துக்கு இந்த சீன் போடுறார்? கோல் பண்ணினா எப்பிடி எடுத்துக் கதைக்கிறது, அதைவிட அவர் எப்பிடிக் கதைப்பார்? பின்னால வீட்டாக்கள் பக்கத்தில கவிக்கா...இவர!' மனதில் முணுமுணுப்பு இருந்தாலும், "அம்மாடியோவ்!" ஆர்ப்பரிப்போடு நகர்ந்த கவியைத் தொடர்ந்து சென்று, சுற்றிலும் கொட்டிக்கிடந்த பேரழகை இரசித்தபடி கைபேசியில் பத்திரப்படுத்தத் தொடங்கினாள்.

"ஒரு காலத்தில பிரமாண்டமான கல்லுப் பாறைகளாலான தட்டையான இடமா இருந்தது, இது. கிட்டத்தட்ட 17 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலா தொடர்ச்சியாப் பெய்த மழை, பனி, புயல் காற்று எண்டதுகளோட கொலராடோ ஆறும் சேர்ந்து அந்தப் பாறைகளை அரிச்சு அரிச்சு இப்பிடிப் பாறை மலைகளா மாறி இருக்குது." என்ற வினித்தைப் பார்த்து எல்லோருமே முறுவல் செய்தார்கள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
"ஏன்பா! உண்மையாவே கிராண்ட் கண்யன் உருவானது அப்பிடித்தான்." அவன்.

“ஹா...ஹா..." வாய்விட்டே சிரித்துவிட்ட கவி, “இந்தப் பயணம் தொடங்கினத்தில இருந்து இப்பிடி கூகிள் வேலை செய்யிறது எங்கட வேந்தன் தான். அதை இப்ப நீங்க செய்யச் சிரிச்சிட்டம். மற்றும் படி ஒண்டுமில்ல." என்றவள் பார்வை, சற்றே அதிகப்படி வேந்தனில் படிந்து விலகியதைக் கவனித்தாள், இலக்கியா.

கவி பொதுவாகத்தான் ‘எங்கட வேந்தன்’ என்றாள்; ஆனால், இலக்கியாவின் மனதுள் அது கலவரத்தையே உண்டுபண்ணியது. வேந்தன் அமைதியாகவே நின்றவன், "முதல் ஸ்கை வோக் போயிட்டு வந்து இதெல்லாம் பார்க்கலாம். இப்பவே சனம் வரத் தொடங்கிற்று." கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி சொல்ல, " தம்பி சொல்லுறதும் சரிதான், வாங்க முதல் அங்க போயிட்டு வரலாம்." அவனோடு நகர்ந்தார், நாதன்.

படிகளால் மேலேறிச் சென்று கால்களுக்கான பொலித்தின் உறைகளை அணிந்தபடி ஒவ்வொருவராக முன்னால் செல்ல, முதலில் நின்ற வேந்தன் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான், மிக்க இயல்பாக.

"வாவ்! வேற கிரகத்துக்கு வந்தது போல இருக்கே!" கண்ணாடியிலான ஸ்கை வோக்கில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து கொண்டிருந்த கவி, கரமிரண்டையும் விரித்தபடி வெகு சந்தோசமாகச் சொன்னாள்.

"உண்மைதான்! கடவுளே...பயமாவும் இருக்கு!” என்றார், நான்கைந்தே அடிகள் வைத்து முன்னேறியிருந்த சுகுணா. கீழே சரிந்து விரிந்திருந்த இயற்கை பயம் காட்டி மெல்லிதாகத் தலையையே சுற்ற வைத்தது.

மதியப் பொழுதை எட்டிக் கொண்டிருந்தாலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் எட்டாயிரம் அடிகள் உயரத்திலிருக்கும் கண்யனைத் தழுவிச் சென்ற காற்றில் கலந்து கிடந்த இதமான குளிர்ச்சி அங்கிருந்தவர்களுள்ளும் நிறைந்து போயிற்று. யாரும் யாரையும் கவனிக்கவில்லை. தம்மைச் சுற்றி விரிந்து பரந்து கிடந்த மிக மிக அழகான பாறை நிலக்காட்சியை சிறு விழிகள் கொண்டு தம்முள் அடக்கிக்கொள்ள முனைந்து கொண்டிருந்தார்கள்.

"கவின விட்டுராதீங்க மாறன்!" எச்சரித்தாலும் மனம் கேளவில்லை அஜிக்கு. தானும் சென்று மகன் கரத்தைப் பற்றி நின்றவளுக்குத் தாம் மூவர் மட்டுமாக நின்று அக்கொள்ளை அழகை இரசிக்கும் உணர்வு! மொத்தக் குடும்பத்தோடு வருகையில் என் கணவன் குழந்தையென்று ஓட்டிக்கொண்டே இரசிக்க முடியுமா என்ன? இப்படிச் சின்னதாகச் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை விடுவதும் இல்லை. “வா...” அவள் தோளில் கைபோட்டு அருகில் வரவைத்த மாறன் அப்படியே தம் மூவரையுமாக ஒரு கிளிக்கில் அடக்கியிருந்தான்.

“லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்...” இராகம் இழுத்தபடி கடந்து சென்ற கவி, “வேண்டுவாயம்மா!” மாறனின் செல்ல அதட்டலை சிறு கண் சிமிட்டலில் பெற்றுக்கொண்டே சற்றே தள்ளி நின்ற ஆரூரன் குடும்பத்தோடு இணைந்துகொண்டாள். ராஜியின் பிள்ளைகளும் அவர்களோடுதான் நின்றிருந்தார்கள். எல்லோரும் கண்களுக்கும் கைகளிலிருந்த கைபேசிக்கும் வேலை கொடுப்பதில் முனைப்பாகவிருந்தார்கள்.

"அண்ணா என்ன இதில நிக்கிறீங்க? வெயிட்டிங்...சரி சரி விளங்குது!" விசமமாகச் சொன்னபடி கடந்து சென்றான், வினித்.

"போடா டேய்!" என்ற வேந்தன், தொடர்ந்த பெரியவரின் பேத்தி பேரனுக்குப் பின்னால் கடைசியாளாக இலக்கியா வருவாளென்று தெரிந்தும் திரும்பிப் பார்க்கவில்லை. சில நிமிடங்களேனும் அவளருகில் நின்று இவ்வழகை இரசித்திட வேண்டுமென்ற ஆவலே அவனைத் தங்கி நிற்க வைத்திருந்தது. இருந்தாலும், ‘அவள் விறுவிறுவென்று சென்று தன்ர குடும்பத்தாரோட நிற்க விரும்பினால்’ என்ற எண்ணவோட்டம் குறுக்கிட்டதில் நிதானமாகச் சில அடிகள் எடுத்துவைத்து முன்னேறியவன் பட்டென்று மோதிய குளிர்ச்சிக்குப் போட்டியாக, அதேவேகத்தில் வெம்மையால் தாக்கப்பட்டான்.

பின்னால் நெருங்கி நின்றிருந்த இலக்கியாவின் கரமிரண்டும் அவன் டீ செர்ட்டை கொத்தாகப் பிடித்து நகரவிடாமல் செய்திருந்தது. மறுநொடியே, முகத்தில் முறுவல் விளைய பின்புறமாக நகர்ந்து அவள் கரத்தைப் பற்றிக் கொண்டது, அவன் இடக்கை!

"எல்லாரும் இருக்கேக்க எப்பிடி கோல் எடுத்துக் கதைக்கிறது? உங்கட தம்பி வேற சாடை மாடையா கிண்டல் அடிச்சுக்கொண்டு இருந்தார். அதுக்கு அப்பிடி முகம் நீட்டுறிங்க!" மெல்லிய குரலில் சொன்னவளை நோக்கித் திரும்ப எத்தனிக்கையில், "அய்யோம்மா நான் வரேல்ல...தலைதான் சுத்துது!" திரும்பி வந்த சுகுணா, அவனை அப்படியே நிற்க வைத்துவிட்டார்.

சட்டென்று விலக முயன்ற இலக்கியாவின் கரத்தை அவன் விடவேயில்லை. இழுத்துப் பார்த்தவள், அவன் இறுக்கிப் பிடிக்கவும், பதைபதைத்துப் போனாள். குட்டிக்கரணம் போட்ட இதயம் தொண்டைக்குள் வந்துவிட்டது போலிருந்தது. சற்றுமுன் வரை, சில்லிட்டுத் தழுவிய தென்றலுக்குப் போட்டியாக வெப்பத்தையும் உணர்ந்தவள் குப்பென்று வியர்த்துப் போக, "விடுங்க வேந்தன்!” அடிக்குரலில் சொன்னபடி, ஒரே உதறிலில் கரத்தை விடுவித்துக்கொண்டு ஒரு அடியேனும் பின் தள்ளிப் போயிருப்பாள்.

சுகுணாவோ இதையெதையுமே கவனிக்கும் நிலையிலிருக்கவில்லை. மனதுள் பயம் போட்டுப்படுத்திய பாட்டில் அந்தக் கண்ணாடிப் பாதையைவிட்டுப் போனால் போதுமென்றிருந்தது, அவருக்கு.

இலக்கியா பட்டுவிட்ட பாடு பார்த்து வேந்தன் முகத்தில் முறுவல் நெளிந்தது. அதே முறுவலோடு, "எங்க ஆன்ட்டி ஓடுறிங்க? அப்பிடியெல்லாம் ஓட முடியாது, வாங்கோ!" அவர் கையைப் பற்றிக்கொண்டு முன்னேற முயல, "சிரிக்காதீங்க தம்பி, எனக்கு தலைசுத்துறது போல இருக்கு. வேணாம், நான் அங்க போய் நிக்கிறன் நீங்க எல்லாரும் பார்த்திட்டு வாங்கோ!" முன்னேறி அடியெடுத்து வைக்கத் தயங்கினார், சுகுணா.

சிலகணங்கள் அப்படியே நின்றுவிட்டு, தாயின் மறுபுறமாகச் சென்று பிடித்துக் கொண்டாள், இலக்கியா.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“சும்மா பயப்படாமல் வாங்கோம்மா. நெடுகவா வரப் போறம்! கீழ கீழ பார்க்காமல் முதல் சுற்றத்தப் பாருங்க. பிறகு கீழ எல்லாம் பார்க்கலாம்." மெல்ல மெல்ல அவரை நடத்திக்கொண்டு சென்றவளில் தான் வேந்தன் பார்வை. அதைக் கவனித்தவள் புருவமுயர்த்தி என்னவென்பதாகக் கேட்டுவிட்டு, "இதில இப்பிடியே நிண்டு ஒரு செல்ஃபி எடுப்பமா மா?" தாயிடம் கேட்டாலும் வேந்தனோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்துவிடும் அவா அவளுள்.

"இதெல்லாம் கேட்கிறதா, எடு!" என்றார் சுகுணா.

"இப்பிடி நில்லுங்க!" தாயை நிறுத்திவிட்டு, "இங்க நிண்டு எடுத்தாத்தான் பின்னால கண்யன் முழுசும் கவர் ஆகும்." சொல்லிக்கொண்டே வேந்தனருகில் சென்று நின்று கொண்டவளை முறுவலோடு பார்த்தானவன். அவள் அவனைப் பாராது புகைப்படமெடுக்க முனைய, "தோளில ஒரு கை போடவோ!" பின்புறம் திரும்புவதுபோல் திரும்பி அவளுக்கு மட்டும் கேக்கும் விதமாகச் சொல்ல, இயல்பாக அவனை நோக்கித் திரும்பிவிட்டது அவள் தலை. அதுவும் முறைப்போடு!

"என்னம்மா? கெதியா எடன்." இடையிட்டிருந்தார், சுகுணா.

"எடுக்கப் பார்த்தா வேந்தன் பின்னுக்குப் பார்த்தார். அதான்...” சடுதியில் சமாளித்துவிட்டவள், "ரெண்டு பேரும் இங்க பாருங்க" எடுக்க முனைய, "ஏய் ஏய் இலக்கி பொறு பொறு, நல்ல ஆள் நீ, என்ன விட்டுட்டு எடுக்கிற!" ஓடி வந்திருந்தாள், கவி; வந்த வேகத்தில் சும்மாவும் இருக்கவில்லை, மிகவும் இயல்பாக இலக்கியாவை முன்னால் நகர்த்திவிட்டு, அவள் நின்றிருந்த இடத்தைத் தனதாக்கிக் கொண்டாள்.

"இனி எடு!" இலக்கியின் தோளில் ஒரு கை இருக்க, மலர்ந்த சிரிப்போடு சொன்னாள்.

இலக்கிக்குதான் வாய்க்கு வந்தது கையோடு போனவுணர்வு. கைபேசியின் ஊடாக வேந்தனைப் பார்த்தாள். அவன் முகம் இறுகிப் போயிருந்தது. எரிச்சலை மறைக்கவும் இல்லை, அவன்.

புகைப்படம் எடுக்க முடியாதென்று விலகி நடக்கவா முடியும்? சிலவற்றை எடுத்துவிட்டு நகர, கவியோ வேந்தனோடு கதைக்க முயன்றபடி அவனருகிலேயே வந்தாள். விறுவிறுவென்று முன்னால் நடந்துவிட்டாள், இலக்கியா. தாயைக் கூட அவள் பார்க்கவில்லை. வேந்தனால் அப்படிச் செல்ல முடியவில்லை. சுகுணாவின் கரம் ஒன்று அவன் பிடிக்குள். இலக்கியாவைப் பார்வையால் மட்டுமே தொடர முடிந்தது.

குதிரை லாட வடிவில் அமைந்திருந்த ஸ்கை வோக்கின் கீழே பார்த்த இலக்கியாவுக்குப் பயம் வரவில்லை. காரணம், வெளிப்பார்வைக்கு அவள் அந்த இயற்கையை இரசிப்பதாகத் தோன்றினாலும் உள்ளமோ தன் தமக்கையையே நினைத்துக் கொண்டிருந்தது, மிகுந்த குழப்பத்தோடு.

அவர்கள் அந்தப் பாதையின் ஆரம்ப வளைவில் நிற்க இவள் அப்படியே ஒதுங்கி கடைசிப்பகுதிக்கு வந்திருந்தவள், மீண்டும் அவர்களை நோக்கித் திரும்ப எத்தனிக்கையில், "இப்ப என்னத்துக்கு நீ தள்ளி தள்ளி ஓடுற இலக்கி?" அவளருகில் வந்திருந்தான் வேந்தன்.

சிடுசிடுப்போடு கேட்டவனைக் கணம் தான் பார்த்திருப்பாள், விழிகள் கலங்கிப் போயின.

"பச்! அப்படியெல்லாம் ஒண்டும் இல்ல, நான் இந்தப்பக்கமா வந்து ஃபோட்டோ எடுக்க ..." அவள் முடிக்கவில்லை "வேந்தன் அண்ணா." வந்து சேர்ந்தான், ஆரூரன்.

அவளையே பார்த்திருந்தவன் விழிகளைக் கணம் சந்தித்துவிட்டு, வெவ்வேறு நிறங்களில் அடுக்கடுக்காகப் படிந்து உருவாகி நின்ற கற்பாறைகளில் படிந்தன, இலக்கியாவின் விழிகள்.

"அண்ணா, ‘அன்டிலோப் கன்யன்’ போயிட்டு ஹொட்டல் போக ஏலுமா?" வந்த ஆரூரன் கேட்க, "என்ன திடீரென்று? அது இந்தப் பக்கம் இருக்கு. எப்பிடியும் ரெண்டு ரெண்டரை மணித்தியால ஓட்டம். பிறகு அங்க இருந்து ஹொட்டல் போக ஐஞ்சு மணித்தியாலத்துக்கும் மேலாவே பிடிக்கும். ஏனெண்டா இங்க இருந்து ஹோட்டல் போறதுக்கே மூண்டு மணித்தியாலத்துக்கும் கூடவே பிடிக்கும்." என்றான், வேந்தன்.

"இல்ல, வினித் அண்ணாதான் அதைப் பார்க்காமல் மிஸ் பண்ணப் போறிங்களோ எண்டு கேட்டார். சரியான வடிவா இருக்கும் எண்டு திரும்பவும் சொன்னாரா அதான்." என்றானவன், இறங்கிவிட்ட குரலில்.

"ம்ம்ம்...செங்குகைகள்...அது ஒரு வடிவுதான். ஆனா...இப்ப ..." அவன் யோசிக்க, "அவையல் சொல்லுவினம் நீங்க அதையெல்லாம் கேட்காதீங்க தம்பி!" என்றபடி வந்திருந்த நாதன், "அதுக்கு இன்னொருமுற வரலாம். இப்ப இங்க பார்க்கக்கூடியதப் பார்த்திட்டு வெளிக்கிடுவம்." முடித்துவிட்டிருந்தார்.

"அப்பாக்கு... உங்களுக்கு எல்லாத்துக்கு அவசரம்...இப்ப மணியப் பாருங்க, நாம நினைச்சாப் போகலாம்." ஆரூரன் விடுவதாக இல்லை.

"எல்லாம் இவன் வினித் செய்யிற வேல!" என்ற வேந்தன், "இன்னும் என்ன என்ன இங்க பார்க்கலாம் எண்டு சொன்னன், இப்பவே போகலாம் எண்டு சொன்னனா என்ன? நீங்க பேசாமல் ரெண்டு நாள் எங்களோட நில்லுங்க, எல்லாமே பார்த்திட்டுப் போகலாம்." என்றபடி வந்த வினித்தை முறைத்தான்.

"அண்ணா உங்களுக்கு கொஞ்சமும் விருப்பமே இல்ல என்ன?" என்றுவிட்டு வினித் கண்ணடித்தைப் பார்த்த இலக்கியா மெல்ல நகர்ந்துவிட, "உனக்கு!" அவன் முதுகில் ஒரு தட்டுப் போட்டவன், ஆருரணின் தோளில் கைபோட்டபடி, “இன்னொருமுறைக்குப் பார்ப்பம் என்ன?" சமாதானமாகச் சொல்ல, “டேய் தம்பி, அதான் வேந்தன் கூட்டிக்கொண்டு வருவன் எண்டு சொல்லி இருக்கிறாரே... கவலையை விடு!" இடைபுகுந்தது கவியின் குரல்.

"அத நீதான் கா அடிக்கடிச் சொல்லுற, வேந்தன் அண்ணா வாயே திறக்கேல்ல!" தமக்கையைக் கடித்தான், ஆரூரன்.

"செய்யிற ஆக்கள் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிராயினம் என்ன வேந்தன்?" கவி வினவ, வேந்தனிடமிருந்து சிறு முறுவலே பதிலாக வந்தது. ஆரூரன் வாய்விட்டே சிரித்து விட்டதில் கவிக்குத்தான் முகம் சிணுங்கிற்று!

"சரி சரி...இதிலேயே நிக்காமல் வெளியில போயும் பார்க்கலாம், நடந்துகொண்டே கதையுங்கோ!" மாறன் நகர, தானும் சேர்ந்து நகர்ந்தான் வேந்தன்.