• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 25

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-25


கட்டிலில் சோர்ந்துபோய்ப் படுத்திருந்தாள் இலக்கியா. அவள் தாய்மை அடைந்திருக்கிறாள், அதுவும் அவளது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கணவனின் குழந்தையைச் சுமக்கிறாள் என்கிற செய்தியை அறிந்தபோது அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஒரு பெண்ணுக்கு இதைவிட வேறு என்ன பெரும்பேறு வேண்டும்? கிடைத்தற்கரிய வரம் கிட்டியதில் எல்லையில்லா சந்தோசத்தில் மிதந்தவள், அந்தக் குழந்தையின் தந்தையை எண்ணியதும் வேதனையில் துடித்தாள்.

அவன் கொட்டிய வார்த்தைகளும், காலையில் கைநீட்டி அடித்துவிட்டு அவள் என்னவானாள் என்று கூடத் திரும்பியும் பாராமல் சென்றவனின் அலட்சியத்திலும் மனம் ஊமையாகக் கண்ணீர் வடித்தது.

கதவு திறக்கும் ஓசையில் நினைவுகள் கலைய திரும்பிப் பார்த்தாள் இலக்கியா. அங்கே, முகம் முழுவதும் சந்தோசத்தில் பிரகாசிக்க, “லயா..” என்று ஆவலும் ஆசையுமாக அழைத்துக்கொண்டே இரண்டெட்டில் அவளிடம் பாய்ந்து வந்தான் தர்சன்.

அவள் கன்னங்கள் இரண்டையும் கைகளில் தாங்கி, “என்னிடம் நீ சொல்லவே இல்லையே..” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டவன், தன்னுடைய உதடுகளை அவளுடைய பட்டான நெற்றியில் அழுத்தமாகப் பதித்தெடுத்தான்.

கணவன் மேல் கோபத்தில் இருந்த அந்த நேரத்திலும் அவன் தந்த முத்தம் அவளது உயிரின் ஆழம்வரை சென்று தாக்கியதில், அவள் விழிகள் தாமாக மூடின!

அவனது உதடுகள் நெற்றியில் மட்டுமல்லாமல் அவளின் மலர் விழிகளைத் தடவி, சதைப் பிடிப்பான கன்னங்களில் புதைந்து, நாசியில் படிந்து, தாடையில் அழுந்தி என்று அவள் முகம் முழுவதும் தன்னுடைய முத்திரையை வேக வேகமாகப் பதிந்தன.

அப்போதும் அவனது மகிழ்ச்சி கட்டுக்கடங்காததில் கட்டிலில் கிடந்தவளை அப்படியே அணைத்துத்தூக்கி, தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கக் கட்டிக்கொண்டான். “நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன் தெரியுமா? அப்பா ஆகப்போகிறேன் என்று நினைக்கவே உடம்பெல்லாம் என்னவோ செய்கிறது லயா..” என்றான் பூரிப்புடன்.

அவன் பேச்சில் சட்டென விழிகளைத் திறந்தவள், கணவனை வெறித்தாள். ஆக, இந்தச் சந்தோசம், மகிழ்ச்சி எல்லாம் அவன் அப்பா ஆகப்போகிறான் என்பதால் வந்தது. அவள்மேல் உள்ள பாசத்தால் இல்லை என்று நினைக்கையிலேயே, என்றைக்குத்தான் அவள் மீது பாசமாக இருந்திருக்கிறான் என்கிற கேள்வி எழுந்து அவளை விரக்தி கொள்ளச் செய்தது.

மனைவியின் பெயரைச் சொல்வதற்கே மூன்று மாதகாலத்தை எடுத்துக்கொண்டவன் அல்லவா இவன்..

அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் பூப்போல அவளை மீண்டும் கட்டிலில் கிடத்தினான் தர்சன். அவளது மணிவயிற்றை மறைத்த சேலையை விலக்கி, அங்கேயும் தன் உதடுகளை ஆசையோடு பதித்தான். இலக்கியாவின் மேனி கூசிச் சிலிர்த்தது.

இன்னொருத்தியை மனதில் சுமப்பவனின் அருகாமையில் தான் இன்னும் மயங்குகிறோமே, தடுமாறுகிறோமே என்று நினைத்துத் தன்னையே வெறுத்தவளின் செவியோரங்களைக் கண்ணீர் நனைத்தது.

முத்தம் இட்டுவிட்டு நிமிர்ந்தவனின் பார்வையில் அவளது கண்ணீர் பட, “லயாம்மா… என்னடா? என்ன செய்கிறது? எங்கேயாவது வலிக்கிறதா?” என்று பதறினான்.

காலையில் அவளை ஒரு பொருட்டாக மதியாமல் உதறிவிட்டுப் போனவனின் அந்தக் கரிசனத்தில் இன்னும் அழுகை கூடியது அவளுக்கு. விழிகளை இறுக்கமாக மூடி, வெடிக்கப்பார்த்த விம்மலை உதட்டைக் கடித்து அடக்கப் பெரும் முயற்சி செய்தாள்.

தர்சனோ பதைபதைத்துப் போனான். “எதற்கு அழுகிறாய் லயா? சொன்னால் தானே எனக்குத் தெரியும். அம்மாவை.. அல்லது டாக்டரை கூப்பிடவா..” என்று கேட்டுக்கொண்டே அவன் வெளியே செல்ல முயல, “இல்லை.. வேண்டாம். எனக்கு ஒன்றுமில்லை.” என்றாள் அழுகையின் ஊடே.

“பின்னே ஏன் அழுகிறாய்?”

உன் பிள்ளைக்காக நீ என்மீது காட்டும் கரிசனம் வலிக்கிறது என்றா சொல்லமுடியும்? உனக்கு நான் முக்கியமில்லை, உன் பிள்ளைதான் முக்கியம் என்றா கேட்க முடியும்?

எதையும் வாய்விட்டுச் சொல்லவோ கேட்கவோ முடியாமல் மறுபக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் இலக்கியா.

அப்போதுதான் அவனது விரல் தடங்கள் படிந்து சிவந்து வீங்கிக் கிடந்த கன்னம் அவன் பார்வையில் பட்டது. அப்படியே காலையில் நடந்த சண்டையும், தான் அவளை அறைந்ததும் மீண்டும் நினைவில் வந்தது.

தன் பிள்ளையைச் சுமப்பவளிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டோமே என்று தன்னையே நொந்தவன், “ப்ச்! நான் ஒரு மடையன்!” என்றபடி, தன் நெற்றியில் அறைந்துகொண்டான்.

திகைப்போடு அவள் கணவனைத் திரும்பிப் பார்க்க, விரல் தடம் பதிந்திருந்த கன்னத்தை மிக மென்மையாக வருடினான் தர்சன்.

“வலித்ததா?” என்று கேட்டான் வலி நிறைந்த குரலில். “எனக்கே கை எரிந்தது. உனக்கு வலிக்காமல் இருந்திருக்குமா.” என்றான் தொடர்ந்து தன் மீதே வெறுப்புக் கொண்டவனாய்.

அவனது அந்தச் சுயவெறுப்பும், கோபமும் மனதுக்குச் சற்று இதமாக இருக்க, கணவனையே பார்த்தாள் இலக்கியா. கலங்கிச் சிவந்திருந்த விழிகள், கன்னத்தில் வாங்கிய அறையை விட மனதில் பட்ட அடியின் வலி அதிகம் என்று அவனிடம் சொல்லாமல் சொல்லின.

அதை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியாதபோதும், அந்தப் பார்வையில் உருகி, “நீதான் ஏதோ கோபத்தில் பேசினாய் என்றால் நானாவது பொறுத்துப் போயிருக்கலாம். எங்கே? எனக்குப் பொறுமை இருந்தால் தானே. ஆத்திரத்தில் அவசரப்பட்டு அடித்துவிட்டேன். சா..” என்று சொல்லிக்கொண்டு இருந்தவனின் உதடுகளை அவளுடைய தளிர்விரல்கள் வேகமாக மூடின. தலையோ மறுப்பாக அசைந்தது.

அந்த மாசற்ற அன்பில் கரைந்து, “உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்கக் கூடாதா?” என்று கேட்டான் அவன்.

அப்போதும் மறுப்பாக அசைந்தது அவள் தலை.

தர்சனுக்குத் தொண்டையில் எதுவோ அடைத்தது. தன் மனவேதனையை அவளுக்குக் காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொண்டான். அவள் தலையைக் கோதிப் புன்னகைத்தவன், சிவந்துகிடந்த கன்னத்தில் தன்னுடைய உதடுகளால் ஒத்தனம் கொடுத்தான். “இனி ஒருநாளும் இப்படி நடந்துகொள்ள மாட்டேன் லயா..” என்றான் கரகரத்த குரலில்.

அங்கிருந்த நாற்காலி ஒன்றை அருகே இழுத்துப்போட்டு அதில் அமர்ந்துகொண்டவனின் ஒரு கரம் மனைவியின் வயிற்றைத் தடவிக்கொடுத்தது. “எனக்கு இப்போதே நம் குழந்தையைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது லயா..” என்றான் ஆவலோடு.

குழந்தையை எண்ணியதும் மற்ற நினைவுகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட மெல்லப் புன்னகைத்தாள் இலக்கியா.

தன் வயிற்றின் மேலே உலாவிக்கொண்டிருந்த அவனுடைய கரத்தைப் பற்றி, “யா..ராவது வ..ந்துவிடப் போகிறார்கள்..” என்றாள் கதவைக் கண்களால் காட்டி.

தன் கரத்தை அகற்றாது, அவளின் விரல்களோடு தன்னுடைய விரல்களை இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டு, “யாரும் வரமாட்டார்கள்..” என்றான் அவன் மனைவியின் தடுமாற்றத்தை ரசித்தபடி.

“டாக்டர் என்ன சொன்னார்? எத்தனை மாதமாம்?” என்று விசாரித்தான் தர்சன்.

“பதினொரு வாரமாம்..”

“பதினொரு வாரமா.. கிட்டத்தட்ட மூன்று மாதம். நம் திருமணம் நடந்தும் மூன்று மாதம் தானே..” என்றான் அவன் விஷமமாக.

கணவன் சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டவளுக்கு அவன் விழிகளைச் சந்திக்கவே முடியவில்லை. கன்னங்கள் சூடாகிச் சிவந்தன.

தர்சனோ சந்தோசத்தில் நன்றாகவே உரக்க நகைத்தான். ஆவலோடு திரும்பிப் பார்த்தாள் இலக்கியா. கரிய நிற அடர்ந்த மீசைக்குக் கீழே, அழுத்தமான உதடுகளுக்கு நடுவே, வெண்ணிறப் பற்கள் பளீரிட கம்பீரம் குன்றாது சிரித்த கணவனின் முகத்தை ரசித்தவளின் மனம், பிள்ளை என்றதும் இவனுக்குச் சிரிப்பெல்லாம் வருகிறதே என்று வாடியது.

அதைக் காட்டிக்கொள்ளாமல், “வெளியே எல்லோரும் நிற்கிறார்கள்..” என்றாள் மெல்லிய குரலில்.

தர்சனுக்கு, அவன் இருந்த சந்தோசத்தில் எல்லாமே விளையாட்டாகத் தெரிந்ததில், “நின்றால் என்னவாம்?” என்றான் வீம்புக்குரலில்.

பதில் சொல்ல முடியாமல் அவள் தவிக்க, “தர்சா..” என்றபடி, கதவை மெதுவாகத் தட்டினார் மஞ்சுளா.

அதுவரை நேரமும், அவள் வயிற்றின் மேலே அவள் கரத்தோடு பிணைந்திருந்த தன் கரத்தை அவன் விலக்க, இலக்கியா அவசரமாகச் சேலையைச் சரி செய்துகொண்டாள்.

கதவு பக்கமாகத் திரும்பி, “வாங்கம்மா..” என்று குரல் கொடுத்தான் தர்சன். மஞ்சுளாவும், அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

“நான் சந்தோசமாக இருந்தால் உங்களுக்குப் பொறுக்காதே..” தாயை பார்த்து சிரிப்புடன் சொன்னான் தர்சன்.

கணவன் மாமியாரை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது புரிய இலக்கியாவின் இதழ்களில் மெல்லிய புன்னகை நெளிந்தது. அதைக் கவனித்த மஞ்சுளாவுக்கு, அதுவரை நேரமும் அழுதுவடிந்த மருமகளின் முகத்தில் இருந்த தெளிவை பார்க்க ஆறுதலாக இருந்தது. அவரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“கட்டிய மனைவியைக் கண்கலங்காமல் வைத்திருக்கத் தெரியாத உனக்கு எதற்குடா ஒரு சந்தோசம் வேண்டிக் கிடக்கிறது.” என்றவர், மகனின் முதுகில் ஒன்று போடவும் தவறவில்லை.

“பெண்களுக்குக் கையை நீட்டுபவன் மனிதனே இல்லை தர்சன்! அதை நீ நன்றாகப் புரிந்துகொள்! அங்கே அவள் உங்கள் அறையில் மயங்கிக் கிடந்தாள் . ராகினி எதற்கோ போனபடியால் பார்த்தாள். இல்லாவிட்டால் என்ன ஆகிறது?” என்றவரால், மகனின் செயலை மன்னிக்கவே முடியவில்லை.

மயங்கிக் கிடந்தாளா என்கிற அதிர்ச்சியோடு மனைவியைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் தவிப்போடு மன்னிப்பை யாசித்தன அவளிடம்.

“சொல்லுடா, ஏன் அடித்தாய் அவளை?” அவரோ அவனை விடுவதாக இல்லை.

தாயின் பேச்சை காதில் விழுத்தாமல், “நீங்கள் எல்லோரும் அவளோடு இருங்கள். நான்போய் டாக்டரிடம் பேசிவிட்டு வருகிறேன்..” என்றபடி அவன் நகர,

“நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டுப் போ தர்சன்!” என்றார் அன்னை.

அப்படி அவர் கேட்டு அவன் பதில் சொல்லிவிட்டால் அது பிரியதர்சன் அல்லவே!

“என்னம்மா கேட்டீர்கள்? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே..” என்று, பொய்யாகக் காதைக் குடைந்தபடி சிரிப்போடு சொன்னவன், கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

“பாருங்கள் அவனை. எவ்வளவு பிடிவாதம். அவளை அடித்ததற்குக் காரணமே சொல்லாமல் போகிறான். இனி அப்படிச் செய்யமாட்டேன் அம்மா என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே. நீங்களும் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? என்ன பழக்கமப்பா இதெல்லாம்?” என்று கணவரிடம் பொரிந்தார் மஞ்சுளா.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
ராஜசேகர் இலக்கியாவை ஒருதடவை பார்த்துவிட்டு மனைவியின் புறமாகத் திரும்ப, “அது.. என்னில் தான் பிழை மாமி..” என்றாள் இலக்கியா மெல்லிய குரலில்.

“சரி! நீ பிழை செய்ததாகவே இருக்கட்டும். அதற்காக அவன் உடனே கையை நீட்டுவானா?” என்றார் கோபத்துடன் மஞ்சுளா.

பதில் சொல்லமுடியாமல் அவள் நிற்க, “நீ கொடுத்த இடம்தான் அவனை இப்படி எல்லாம் செய்ய வைத்திருக்கிறது. திருப்பி நீ இரண்டு அப்பு அப்பியிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டாய் லக்கி.” என்றவரை விழிகள் விரியப் பார்த்தாள் இலக்கியா.

கணவனை அவள் அடிப்பதா? நடக்கிற காரியமா இதெல்லாம்? அன்று காலையில் அவனோடு சண்டையிட்டதே அவளளவில் பாரிய விஷயம் அல்லவா.

அவளின் பாவனையில் மஞ்சுளாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது. “அவன் ஒரு முரடன் லக்கி. வீட்டில் கடைசி என்று நான்தான் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டேன். இப்படி இனி நடந்து கொள்ளக்கூடாது என்று அவனைக் கண்டிக்கிறேன். நீ கவலைப்படாதே என்ன..” என்றார் அவளிடம் ஆறுதலாக.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
மனம் நெகிழ சரி என்பதாகத் தலையை ஆட்டினாள் இலக்கியா.

“அத்தை, அவளின் வீட்டுக்கு நாம் இன்னும் சொல்லவில்லையே..” என்று நினைவுபடுத்தினாள் ராகினி.

“எல்லாம் இந்தத் தர்சனால் வந்தது. அவன் செய்த வேலையால் என் மூளையே குழம்பிவிட்டது. “ என்றவர், “எங்கே கைபேசி? கொண்டுவா சம்பந்தி வீட்டுக்கு அழைப்போம்.” என்றபடி கையை நீட்டினார்.

“மாமி, நா..ளைக்குச் சொல்லலாமே..” என்று தயங்கிய குரலில் இடையிட்டாள் இலக்கியா.

அதைக்கேட்டபடி உள்ளே வந்த தர்சன், “ஏன்?” என்று கேட்டான். “இப்போதே சொன்னால் அவர்களும் சந்தோசப்படுவார்களே.”

பதில் சொல்லாமல் இலக்கியா அமைதியாக இருக்க, மருமகளின் முகத்தை ஒருதடவை கூர்ந்தார் மஞ்சுளா.

“வேறு எதற்கு? நீ அடித்த அடியில் உன் விரல் அடையாளம் அப்படியே அவள் கன்னத்தில் பதிந்து இருக்கிறது. அதை அவர்கள் வீட்டில் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அதுதான் அவள் அப்படிச் சொல்கிறாள். இப்படி எல்லாப் பக்கமும் உன்னைப் பாதுகாக்கும் மனைவியைத்தான் நீ அடித்திருக்கிறாய்!” என்றார் மஞ்சுளா கோபமான குரலில்.

தர்சன் ஒன்றுமே சொல்லாமல் மனைவியையே பார்க்க, “சரி விடு மஞ்சு. அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு நிற்பாயா? மனைவியை எப்படி நடத்தவேண்டும் என்று அவனுக்குத் தெரியும். இனி இப்படியான தவறு நடக்காது!” என்றார் ராஜசேகர், மகனை கண்டிப்பான பார்வை பார்த்தபடி.

ஒருவழியாக அந்தப் பெரியகுடும்பம் அவர்களின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. மஞ்சுளா விருந்து சமைக்க, ராகினியும் ஆரணியும் அவருக்கு உதவியாக இருந்தனர். ராஜசேகர், விமலன், அமலன் மூவரும் வேலைகளைப் பார்க்க கிளம்பிவிட, அன்று முழுவதும் தர்சன் மனைவியுடனே இருந்தான்.

உடலில் இருந்த மொத்த சக்தியுமே வடிந்தது போலிருந்தது லக்கிக்கு. மனதிலும் சோர்வு. உடலிலும் சோர்வு. இதில் காலையில் கணவனோடு சண்டைபிடித்து அழுததில் தலை வேறு வலித்தது. அறைக்குள் சென்று கட்டிலில் முடங்கிக்கொண்டாள்.

மனைவியைப் பார்க்க தர்சனுக்குப் பாவமாக இருந்தது. அவளின் அருகில் சென்று அமர்ந்து, “ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டான்.

பெரிய அக்கறை என்று பொருமியது அவள் மனது. கண்களைத் திறக்காமலேயே மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

“குடிக்கத் தரட்டுமா?”

அப்போதும் அவள் மறுக்க, “பலவீனமாக இருக்கிறாய், நன்றாகக் குடிக்கச் சாப்பிடக் கொடுங்கள் என்கிறார் டாக்டர். நீயானால் ஒன்றும் வேண்டாம் என்கிறாயே. பிறகு எப்படி நம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.” என்று அக்கறையோடு அதட்டினான் அவன்.

விழிகளைத் திறந்து கணவனைப் பார்த்தாள் இலக்கியா. இநதக் கவனிப்பு கூட அவனது குழந்தை மீதான பாசத்தில் உருவானதுதானே என்று அப்போதும் மருகியது அவள் மனம்.

“நம் தோட்டத்திலேயே விளைந்த பழங்களில் செய்த பழச்சாறு அம்மா கொண்டுவந்து தந்தார். அதைக் குடித்துவிட்டு பிறகு படுத்துக்கொள்.” என்றபடி, அவளைப் பற்றி எழுப்ப அவன் முயல, அவனுடைய கரங்களைத் தடுத்துவிட்டு தானே எழுந்து அமர்ந்தாள் இலக்கியா.

பழச்சாறை எடுத்து மனைவியின் உதட்டருகே கொண்டுசென்று, “கொஞ்சம் கொஞ்சமாகக் குடி.” என்றான் தன்மையாக.

விழிகளை உயர்த்திக் கணவனைப் பார்த்தாள் இலக்கியா. இந்த அக்கறையை, பாசத்தை அன்று ‘எவனுடனும் ஓடப்போகிறாயா’ என்று கேட்கும்போது எங்கே வைத்திருந்தான்? காலையில் தன்னுடைய இரும்புக் கரத்தால் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தானே, அப்போது எங்கே போனது இதெல்லாம்?

“என்ன பார்க்கிறாய்? குடி..” என்று இன்னும் அவளின் உதட்டின் அருகே கிளாசை அவன் கொண்டுசெல்ல, அவளே அதை வாங்கிப் பருகத் தொடங்கினாள்.

மனைவியையே விழி அகற்றாது பார்த்திருந்தான் தர்சன். அவனது பார்வையை உணர்ந்தபோதும் அந்தக் கிளாசில் இருந்து பார்வையை உயர்த்தவில்லை அவள்.

அவள் அருந்தி முடித்ததும், “ம்.. இது நல்ல பிள்ளைக்கு அழகு. நீ உன்னைக் கவனித்துக்கொண்டால் தானே பிறக்கும் நம் குழந்தை உன்னைப்போலச் சிவப்பாக, அழகாக இருக்கும்..” என்றவனுக்கு, பதில் ஏதும் சொல்லாமல் அவனிடமிருந்து சற்றுத் தள்ளிக் கட்டிலில் படுத்தாள் இலக்கியா.

“என்னிடம் வா..” என்றபடி, அவன் அவளைத் தன்னருகே இழுக்க, “இல்லை. வேண்டாம்.” என்று மறுத்தாள் மனைவி.

“என்ன வேண்டாம். வா..! உனக்குத்தான் என் நெஞ்சில் சாய்ந்துகொள்ளப் பிடிக்குமே.” என்றவன், வலுக்கட்டாயமாக அவளை இழுத்துத் தன் நெஞ்சில் போட்டுக்கொண்டான்.

அது அப்போது.. முட்டாளின் சொர்க்கத்தில் நான் திளைத்தபோது என்று கதறியது அவள் மனது. ஆனாலும், அவனிடமிருந்து தன்னைப் பிடிவாதமாகப் பிரித்தெடுக்கும் வலு இல்லாததில் அப்படியே கிடந்தாள் இலக்கியா.

மனைவியை, நெஞ்சின் உள்ளும் புறமும் சுமந்தபடி கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டான் தர்சன். அவ்வப்போது அவளின் உச்சியில் இதழ் பதிப்பவன் சில நேரங்களில் தன் கன்னத்தை அவள் நெற்றியில் புதைத்துக் கொண்டான்.

கருவைத் தாங்கி நின்றவளுக்குக் கணவனின் அருகாமை தேவையாக இருந்த அதேவேளையில் அவனுடைய முதல் திருமண வாழ்க்கையின் நினைவுகள் வந்து அதே அருகாமையை நரகமாகவும் மாற்றியது!

உடலின் சோர்வோடு மனப்போராட்டமும் சேர்ந்து கொண்டதில் மிகவும் களைத்துப் போனாள் இலக்கியா.

தர்சனின் கை முதுகை வருடிக் கொடுத்த இதத்திலும், களைப்பிலும் அப்படியே கண்ணயர்ந்து போனாள்.

அடுத்தநாள் அவளின் தாய் வீட்டுக்கு அவள் கருவுற்ற செய்தி பறந்தது. அவர்களும் ஓடிவந்தார்கள். அன்றைய நாள் முழுவதும் மகளோடு இருந்து அவளைச் சீராட்டிவிட்டு சென்றனர்.
 
Top Bottom