இன்னுயிராவாய் என்னுயிரே - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அத்தியாயம்-29


மாலை நேரக்காற்று சிலுசிலு என்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. அதைக் கொஞ்சமும் உணராது, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் தர்சன். விழிகளோ வான்வெளியில் எங்கோ நிலைத்திருந்தன.

மனமோ பிரிந்து சென்றுவிட்ட மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தது. அவன் சொன்னதையும் மீறி அவள் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை அவனால்!

திருமணமான புதிதில், மனம் ஒன்றாமல் அவனோடு வாழ்ந்த போதிலும் சரி, பின்னர் அவனையே நாய்க்குட்டி மாதிரி சுற்றிச் சுற்றி வந்த காலத்திலும் சரி, அவன் தன்னுடைய கோபங்களையும் ஆத்திரங்களையும் காட்டிய தருணங்களிலும் சரி, அவன் பேச்சை அவள் மீறியதே இல்லை.

அப்படியானவள் இன்று வீட்டைவிட்டு, அவனைவிட்டு சென்றிருக்கிறாளே! காரணம் என்ன என்று புரியாமல் இல்லை. ஆனால்….

அதற்குமேல் சிந்திக்க இயலவில்லை அவனால்!

அவன் மனதின் காயங்களை, ஆறா வடுக்களை, அவமானத்தின் சுவடுகளை அவனாலும் வாய்விட்டு சொல்ல இயலவில்லையே! அதற்குப் பரிசு மனைவியின் பிரிவா?

அவளை எப்படியாவது சமாதானப் படுத்திவிட வேண்டும் என்கிற ஆவலுடன், வேலை முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தவனிடம் “லக்கி அவள் அம்மா வீட்டுக்கு போய்விட்டாள் தர்ஷா.” என்று அன்னை சொன்னபோது, அதிர்ந்து நின்றுவிட்டான் தர்சன்.

அவன் மனைவியா? நம்ப முடியவில்லை.

அவனைப் பிரிந்து அவளால் இருக்க இயலுமா?

அவள் இல்லாமல் ஒருகணமும் இருக்க முடியாமல் தவிக்கிறானே.. அவளால் மட்டும் எப்படி?

மனைவி கொடுத்த அந்தப் பிரிவின் வலியில்தான், தான் தன் மனைவியை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதே அவனுக்குப் புரிந்தது.

புரிந்த நொடியில் அதைப் பகிர்ந்துகொள்ள அவள்தான் இல்லாமல் போனாள்!

கனத்த மனதின் பாரத்தை ஒரு பெருமூச்சாக வெளியேற்றியபடி, சிகையை அவன் இரண்டு கைகளாலும் கோதிக் கொடுத்தபோது, “சாரி..” என்று, தயக்கத்துடன் கூடிய மெல்லிய குரல் கேட்டது.

சட்டெனத் திரும்பிப் பார்த்தான் தர்சன்.

அங்கே, கைகளை ஒன்றோடு ஒன்றைப் பற்றியபடி தயங்கிநின்ற வெண்பாவைக் கண்டதும், வெறுப்பின் அடையாளமாக முகத்தைச் சுளித்தான்.

அதில் கன்றிவிட்ட முகத்தோடு அவள் நிற்க, அவனது அடர்ந்த கரிய புருவங்கள், கேள்வியாகச் சுருங்கின.

“அது.. என்னால் தானே.. நான் வந்ததால் தானே உங்கள் மனைவி வீட்டைவிட்டுப் போனாள். அதுதான்...” என்றாள் வெண்பா மெல்ல.

அதைக்கேட்டு அவன் இதழ்கடையோரம் ஏளனமாக வளைய, “உன்னால் என் மனைவி போனாளா? அதுவும் வீட்டை விட்டு? உன் கற்பனை அபாரம்தான்!” என்றான் ஏளனமாக.

இலக்கியா வெளியேறியதற்கு அவள் காரணமில்லையா? பிறகு?

“பிற..கு ஏன் திடீரென்று போனாள்? அதுவும் நீங்கள் இல்லாத நேரத்தில்..” என்று அவள் கேட்டபோது, மனைவியின் மீது கோபம்தான் வந்தது தர்சனுக்கு.

பின்னே, இவள் எல்லாம் கேள்வி கேட்கும் அளவுக்கு வைத்துவிட்டாளே!

“நான் இல்லாத நேரம் போனால் என்ன? இருக்கும் நேரம் போனால் என்ன? அவள் போயிருப்பது தாய் வீட்டுக்கு. ஊரைவிட்டோ வீட்டை விட்டோ ஓடிப்போகவில்லை. அப்படிப் பட்டவளும் இல்லை என் மனைவி. கணவனை உயர்வாக ஈஈமதிப்பவள்!” என்றான் அழுத்தமான குரலில்.

அவமானக் கன்றலில் சிவந்தது வெண்பாவின் முகம். காலையில் அவனைக் கண்டதும் என்ன சொல்வானோ, எப்படி நடந்துகொள்வானோ என்று அவள் பயந்து நடுங்கியது என்னவோ உண்மைதான். ஆனால், சிரித்த முகமாக அவன் வரவேற்றபோது, சற்றே ஆறுதல் கொண்டவள், ஒன்றும் சொல்லமாட்டான் என்கிற தைரியத்தில் தான் இப்போது பேச வந்ததே!

அவனோ, காலையில் செய்ய மறந்ததை இப்போது செய்துகொண்டிருந்தான்.

“உங்களுக்கு என் மீதிருக்கும் கோபம் புரிகிறது. அதேபோல, நான் செய்தவைகள் எல்லாம் எவ்வளவு பெரிய தப்பு என்றும் உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.” என்றாள், உண்மையாகவே தவறை உணர்ந்துகொண்ட சின்னக்குரலில்.

“இதென்ன அடுத்தப் புதுக்கதை? உன்மேல் எனக்குக் கோபமா? அப்படிக் கோபப்படும் அளவுக்கு எனக்கு நீ யார்?” என்று, அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அவன் கேட்டபோது, திரும்பவும் அவமானப்பட்டு நின்றாள் வெண்பா.

“பிறகு ஏன் கோபமும் குத்தலுமாகப் பேசுகிறீர்கள்?”

“இந்தக் கோபம் உன் மீதல்ல! உன் பேச்சின் மீது!” என்றான் தர்சன் தெளிவாக.

“என் மனைவியைப் பற்றித் தெரியாமல், அவளின் நல்ல குணம் பற்றி அறியாமல் நீ குறை சொல்வாய். அதை நான் கேட்டுக்கொண்டு இருப்பேன் என்று நினைத்தாயா? முதலில், அவளைப்பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று அவன் கேட்டபோது, கூனிக் குறுகிப்போனாள் வெண்பா.

அவள் செய்தது பெரும் தப்பாகவே இருந்தபோதிலும், இலக்கியாவோடு ஒப்பிட்டு அவளைக் கேவலப்படுத்தியதில், மிகவும் அவமானமாக உணர்ந்தவளுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் மண்டையில் உறைத்தது!

இப்படித்தானே அன்று விஜயனோடு ஒப்பிட்டு இதே தர்சனை அவள் கேவலமாகப் பேசினாள்!

மனதளவில் குன்றியபோதும், அதை அவனுக்குக் காட்டாது, “உங்கள் மனைவியைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. என்னைக் கண்டதும் அவள் உங்களைப் பிரிந்து சென்றதால் வந்த குற்ற உணர்ச்சியில் தான் கேட்டேன். நான் உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் செய்ததே போதும், இதில் இது வேறா என்றிருந்தது.” என்றாள் வேதனை நிறைந்த குரலில்.

“முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்துகொள். அவள் என்னைவிட்டுப் பிரிந்து போகவில்லை. போகவும் மாட்டாள்! அப்படிப் பிரிய நானும் விடமாட்டேன்! எங்கள் இருவரையும் பிரிக்கும் சக்தி அந்த மரணத்துக்கு மட்டுமே உண்டு!” என்று உறுதியான குரலில் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டு போனவனுக்கு அப்போதுதான் அவன் மனதே அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக உறைத்தது.

அது உறைத்த நொடியில், தன்னை நினைத்து, தன் மனதை நினைத்து ஆச்சரியமாக உணர்ந்தான்!

பின்னே, எவ்வளவு தூரத்துக்கு மனைவியை அவன் நேசிக்கிறான். இதை அறியாமல் இவ்வளவு நாளும் மூடனாக இருந்துவிட்டானே!

மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும், தன் முன்னால் நிற்பவளைக் கருத்தில்கொண்டு, தன் காதலை தானே உணர்ந்துகொண்ட பூரிப்போடு குரலில் பெருமை துலங்கச் சொன்னான்.

“நான் இல்லாமல் அவளால் வாழவே முடியாது! அவளின் உயிர்ப்பும் துடிப்புமாக நான் இருக்கையில், எப்படி என்னைப் பிரிவாள் என் மனைவி?” என்று, மனைவியின் மனதில் நீக்கமற நிறைந்துவிட்ட கர்வத்தில் அவன் கேட்டபோது, வெண்பா வாயடைத்துப்போய் நின்றாள்.

“என்னாலும் அவள் இல்லாமல் வாழவே முடியாது! வாழ்வது என்ன, அப்படியொரு வாழ்க்கையை நினைத்துக்கூடப் ஈஈபார்க்கமுடியாது. அப்படி என் உயிரிலும் உணர்விலும் கலந்து விட்டவளைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்டு, நீ பரிதாபப்படும் இடத்திலோ, நீ கவலைப்படும் இடத்திலோ நான் இல்லை என்று காட்டினான் தர்சன்.

நீ இட்ட சாபத்தினால் எனக்கு வரம்தான் கிட்டியது என்று அவன் சொல்லாமல் சொன்னபோது, வியப்பும் அதிசயமுமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.

அவனை எண்ணி அதிசயமாக இருந்த போதிலும் மனதில் ஒரு ஆறுதலும் கிட்டியது. அவள் செய்த காரியத்தால் அவன் வாழ்க்கைக்கு எதுவும் நடந்துவிடவில்லை. அவளைப்போலவே மணவாழ்க்கை அவனுக்கும் நன்றாகவே அமைந்திருக்கிறது.

“நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மெய்யாகவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றாள், ஏதோ ஒரு கட்டிலிருந்து விடுபட்ட உணர்வோடு..

“உன் மகிழ்ச்சி எனக்கு முக்கியமில்லை.” என்றான் பட்டெனத் தர்சன். “இனியும் நீ தேவையில்லாமல் என் மனைவியைப் பற்றிக் கண்டதும் பேசக்கூடாது என்பதற்காகச் சொன்னேன்!” என்றான், கண்டிப்பான குரலில்.

“அத்தையின் மகளாக மட்டுமே இங்கே நீ வந்திருக்கிறாய்! அதற்காக, இப்படி மன்னித்துவிடுங்கள் மறந்துவிடுங்கள் என்று கண்டதையும் சொல்லிக்கொண்டு என் முன்னால் வந்து நிற்காதே! உங்களின் வீடு கிடைத்ததும் அங்கே போய்ச் சேருகிற வழியைப்பார்!” என்றவன், விக்கித்து நின்றவளை அலட்சியம் செய்து நடந்தான்.

வெளியே போ என்று சொல்லாமல் சொன்னவனின் வார்த்தைகளால் உண்டான காயத்தால் வெண்பாவின் கண்களில் நிறைந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து நிலத்தில் சிந்தியது.

சிறு வயதுமுதல் அவன்மேல் அவள் வளர்த்துக்கொண்ட வெறுப்பும், தந்தையை இழந்தபோதும் கஷ்டமே இல்லாமல் வளர்ந்ததில் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாமல் போன அறியாமையும், கூடவே விஜயன் மீதான காதலும் சேர்ந்துகொண்டதில், அசட்டுத் துணிச்சலில் அனைத்தையும் செய்துவிட்டாள் தான்.

இல்லாவிட்டாலும், விஜயன் அன்றி வேறு ஒருவரோடு- அது யாராக இருந்தாலும் அவளால் வாழமுடியாது என்பதும் மெய்யே!

இருந்தாலும், கணவனும் கணவன் வீட்டினரும் அவளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று எண்ணி விஜயனை அவள் கைப்பிடித்தபோது, வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்ந்தாள்.

ஆனால், திருமணத்தைப் பற்றியும், அதன் பிறகான வாழ்க்கையைப் பற்றியும் நாம் காணும் கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வேற்றுமைகள் பல உண்டன்றோ! அதை இந்த இரண்டரை வருடங்கள் அவளுக்கு மெல்ல மெல்லப் புகட்டின.

அது மட்டுமல்ல, அவள் செய்துவிட்டு வந்த காரியத்தின் வீரியமும்!

கணவன் மனைவி இருவரும் முதல் ஆறு மாதங்களையும், ஒரு தேனிலவைப் போன்று இனிமையாகக் கழித்தபோது, கணவன் வீட்டினர் அவளை ஏற்கவில்லை என்பது ஒரு விசயமாகவே அவளுக்குத் தோன்றவில்லை.

அந்தளவுக்கு மகிழ்ச்சிக் கடலில் முத்துக்குளிக்க வைத்தான் விஜயன்.

அந்த மகிழ்ச்சியான இல்லறத்தின் பரிசாக அவள் தாய்மை அடைந்துவிட, கணவனுக்கும் வேலையில் மாற்றல் கிட்டியது.

அவனும் சென்றுவிட, தனிமை வாழ்க்கையில் குடும்பப் பொறுப்பைத் தானே சுமக்கவேண்டிய சூழ்நிலையும், அதுகொடுத்த பொறுப்புணர்வும் என்று, அவள் மனமும் மெல்ல மெல்ல முதிரலாயிற்று!

அந்த முதிர்ச்சியும், தனிமையும் சிந்தனைகளைத் தூண்ட, தான் செய்தவைகள் சரிதானா என்கிற கேள்வி, முதன் முதலாக அப்போதுதான் அவளுள் எழுந்தது.

முதலில் வீட்டை விட்டு ஓடும் எண்ணம் அவளுக்கு இல்லாமல் இருந்தாலும், தர்சன் கட்டிய தாலி அப்படியான ஒரு நிலையை அவளுக்கு உருவாக்கினாலும், தர்சனுக்கு எரிச்சல் ஊட்டுவதற்காக அமலனுடன் நெருங்குவது போன்று அவள் ஆடிய நாடகமே அவனை அப்படிச் செய்யவைத்தது என்று விளங்கிக் கொண்டபோது கூசிப்போனாள் வெண்பா.

எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டோம்..

தோளில் படிந்த ஒரு கரம் அவளுள் ஓடிய சிந்தனையைத் தடுக்கத் திரும்பிப் பார்த்தாள் வெண்பா.

“இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டபடி அங்கே நின்றிருந்தார் மகேஸ்வரி.

நனைந்த விழிகளோடு, “ஏன்மா என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள். இப்படி எல்லோரும் என்னை அவமானப் படுத்தவா? கொழும்பில் வைத்தே சொன்னேன் தானே, இவர்களால் என்னை என்றுமே மன்னிக்கவே முடியாது, அதனால் வரவில்லை என்று. நீங்கள்தான் அடம்பிடித்து, இதிலாவது அம்மா சொல்வதைக் கேள் என்று சொல்லி, அவரிடமும் பேசி சம்மதம் வாங்கி, ஒற்றைக் காலில் நின்று கூட்டி வந்தீர்கள். இப்போது பாருங்கள், எல்லோருமாகச் சேர்ந்து என்னை ஒதுக்குகிறார்கள்.” என்றாள் கண்ணீர் குரலில்.
 
Last edited by a moderator:

Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
“நான் செய்தது மன்னிக்கவே முடியாத பிழைதான். அது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், இந்த அவமானத்தையும் ஒதுக்கலையும் என்னால் தாங்கவே முடியவில்லை அம்மா. மாமா என்னவென்றால், இன்னும் என்ன திட்டத்தோடு இங்கே வந்தாய் என்று கேட்கிறார். சின்ன வயதில் இருந்து என்னோடு நட்பாகப் பழகிய அமலன் மச்சான் முகமே பார்க்காமல் போகிறார். விமலன் மச்சான் மட்டும் பெயருக்குப் பொய்யாகப் புன்னகைக்கிறார். அத்தை என்னோடு கதைக்கவே இல்லை. தர்சன் மச்சான் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லாமல் சொல்கிறார்.” என்றபோது, விம்மல் ஒன்று வெடித்தது அவளுக்கு.

“இப்படி எல்லோரும் அவமானப்படுத்தவா என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள்?” என்று திரும்பவும் கேட்டாள் வெண்பா.

மகளின் கண்ணீர் மனதைப் பிசைந்தாலும், “நீ அவர்களுக்கு உண்டாக்கிய அவமானத்தை விடவா இது பெரிய அவமானம்?” என்று மறுகேள்வி கேட்டார் அவள் அன்னை.

“நீங்களும் என்னைக் குத்திக் காட்டி, வேதனைப் படுத்துகிறீர்களே அம்மா. அதுதான் நான் செய்தது பிழைதான் என்று சொல்கிறேனே.” என்று விசும்பினாள் அவள்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
“உன்னைக் குத்திக்காட்டி நான் காணப்போவது என்ன வெண்பா? பிள்ளைகள் என்றுமே தங்களுடைய சந்தோசத்தை மட்டுமேதான் நினைப்பார்கள். ஆனால், எல்லா அம்மாக்களும் பிள்ளைகளின் நலனை மட்டுமேதான் யோசிப்பார்கள். அப்படித்தான் நானும்!” என்று அவர் சொன்னபோது, அன்று தாயைப் பற்றிச் சிந்தியாமல் வெளியேறிய தன்னுடைய சுயநலத்தை எண்ணி வெட்கினாள் வெண்பா.

“கொழும்புக்கு வந்தபோது, உன்னையும் பேத்தியையும் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் வந்தேன். அங்கே வந்த பிறகுதானே தெரிந்தது, உன் புருஷன் வீட்டார் உன்னை ஒதுக்கி வைத்திருப்பது. கையிலும் வயிற்றிலும் குழந்தைகளை வைத்துக்கொண்டு, கணவனும் இல்லாமல் இருக்கும் இந்த நிலையிலும் உன்னைச் சேர்க்காதவர்கள் இனி எந்தக் காலத்திலும் சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியே சேர்த்தாலும் மதிப்போடு நடத்துவார்களா என்று யோசி.” என்றபோது, தாயின் பேச்சை மறுத்து எதுவுமே சொல்ல முடியவில்லை அவளால்.

“இப்படிப் பிறந்தவீட்டுச் சொந்தமும் இல்லாமல், புகுந்த வீட்டின் அரவணைப்பும் இல்லாமல் உன்னால் எப்படி வாழமுடியும்?” என்று அவர் கேட்டபோது,

“எனக்கு என் விஜயன் மட்டுமே போதும். அவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்.” என்றாள் வெண்பா ரோசத்தோடு.

“பார்த்துக்கொண்டால் சந்தோசம் தான். ஆனால், அதுமட்டுமே வாழ்க்கை இல்லை வெண்பா.” என்றார் அழுத்தமான குரலில்.

“இன்று உன் குடும்பம் சந்தோசமாகத்தான் இருக்கிறது. உன் கணவன் உன்னை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால், நாளைக்கு என்ன நடக்கும் என்று உன்னால் சொல்ல முடியுமா? நாளைக்கு ஒரு அநாதரவான நிலை உனக்கு வந்தால் எங்குப் போவாய்? ஒரு பிரச்சினை என்று வந்தால் யாரிடம் போய் நிற்பாய்? ஒரு சபை சந்தியில் என் சொந்தம் என்று யாரை அறிமுகப் படுத்துவாய்? நான் இன்னும் எவ்வளவு காலத்துக்கு உயிரோடு இருப்பேனோ தெரியாது. என் காலத்துக்குப் பிறகு உன் நிலை? யாருமே இல்லாமல் அனாதையாக நிற்பாயா?”

“அப்படி, உங்களுக்கு ஒன்றும் நடக்காதம்மா!” என்றாள் கோபத்தோடு வேகமாக.

“ஏன், நான் என்ன சாகா வரம் வாங்கி வந்தவளா?” என்று கேட்டவர் தொடர்ந்தார்.

“புகுந்த வீடுதான் இல்லை என்று ஆயிற்று. பிறந்த வீட்டுச் சொந்தம் என்று யாராவது இருந்தால் தான் உனக்கு என்றைக்குமே பலம். ஒரு ஆறுதலுக்கோ, அரவணைப்புக்கோ, ஒரு ஆத்திரம் அவசரத்துக்கோ உனக்கென்று சொந்தங்கள் வேண்டாமா? ஒரு உதவி தேவை என்றாலும் யாரிடம் போய் நிற்பாய்? பிறந்த வீட்டுச் சொந்தம் உன்னோடு இருந்தால் தான் புகுந்த வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும். இங்கேயே உன்னைச் சேர்த்துக்கொண்டார்கள் என்றால், காலப்போக்கில் உன் கணவர் வீட்டினரும் உன்னை ஏற்றுக் கொள்வார்கள் பார்!” என்றவர் தொடர்ந்தார்.

“அன்று நான் உன் அப்பாவை இழந்துவிட்டுத் தவித்தபோது என்னைத் தாங்கியது அண்ணா. அவர் இருந்தபடியால் தான் நானும் நீயுமே தப்பினோம். அண்ணா அண்ணியின் அருமை தெரியாமல், அண்ணிதானே எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும் என்று எண்ணாமல், அந்த இளம் வயதில் நான் எடுத்த அவசர முடிவால் பட்ட அதே துன்பங்களை நீயும் படக்கூடாது. வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும். அதேபோல, எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியும் இருக்க மாட்டார்கள். எல்லோரையும் சேர்த்துத்தான் நாம் நடக்கவேண்டும். இதை அன்று எனக்குச் சொல்ல யாரும் இருக்கவில்லை. அதனால் பட்டுத் தெளிந்தேன். இன்று, உனக்குச் சொல்லித்தர நான் இருக்கிறேன். அதனால் அம்மா சொல்வதைக் கேள்.” என்று அவர் சொன்னபோது,

“சரிம்மா. ஆனால், நான் மன்னிப்புக் கேட்டும் எல்லோருமே என்மீது கோபமாக இருக்கிறார்களே..” என்றாள் வேதனையோடு.

“தப்பு செய்த உனக்கே அவர்களின் கோபம் இந்தளவுக்குப் பாதிக்கிறது என்றால், உன்னால் அவர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்று யோசி. அதோடு, கோபத்தில் ஒதுங்கித்தான் போகிறார்களே தவிர உன்னை ஒதுக்கவில்லையே! வெளியே போ என்று துரத்தவில்லையே. அதுவே பெரிய விஷயம் தானே. அதனால் நீதான் கொஞ்சம் பொறுத்துப் போகவேண்டும். வாயால் மட்டும் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது வெண்பா. உன் ஒவ்வொரு செயலிலும் உணர்த்து. அவர்களின் கோபம் போகிற விதமாக நடந்துகொள்.” என்றவர்,

“இனி நீ நடந்துகொள்ளும் முறையில்தான் இருக்கிறது அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும்.” என்றார் முடிவாக.

அவள் சரி என்பதாகத் தலையை ஆட்டவும், “அம்மாவுக்காக என்று இதுவரை நீ எதுவுமே செய்தது இல்லை. நானும் கேட்டது இல்லை. இன்று கேட்கிறேன், இனி எந்தக் காலத்திலும் என் அண்ணன் குடும்பத்தவர்களின் மனம் நோகும்படிக்கு நீ நடந்துகொள்ளவே கூடாது. உன் அப்பாவும் இல்லாமல் தனியாக நின்று உன்னை வளர்த்த எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தாயானால் இதை மட்டும் செய். இதைக்கூட நான் அவர்களுக்காகக் கேட்கவில்லை. நீ நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் கேட்கிறேன்.” என்று அவர் சொன்னபோது, தாயின் ஒப்பற்ற பாசத்தில் முற்றிலுமாக உடைந்துபோனாள் வெண்பா.

“கட்டாயம் அம்மா. நீங்கள் சொல்கிறபடியே நடக்கிறேன். இதுநாள் வரை உங்கள் மனம் புண்படும் படியாக நடந்துகொண்டதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா..” என்றாள் அழுகையோடு.

“அசடு! அம்மாவிடம் என்ன மன்னிப்பு வேண்டிக்கிடக்கிறது?” என்றபடி, மகளை அணைத்துக்கொண்டவரின் மனம் நிறைந்து கிடந்தது.

எப்படியோ அண்ணன் வீட்டுக்கு மகளைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். இது சுயநலம் தான். ஆனால், பெற்ற மனம் அல்லவா.. அது வேறு என்னதான் செய்யும்?