இமை -1
நீளமாக வளர்ந்திருக்கும் கூந்தலை நிதானமாக வாரி பின்னலிட நேரமின்றி அவசரமாக ஏனோ தானோ என்று பின்னலிட்டாள் சாகம்பரி. இருபத்து எட்டு வயது மங்கை. சராசரி இந்திய பெண்களின் உயரம். நீளமான கூந்தல்.அதை அலுவலகம் செல்லும் பொழுது கொண்டியாக்கிவிடுவாள். நீளமான மூக்கு. அதன் நுனியில் சிவப்பு நிறத்தில் ஒரு மச்சம். அருகே சென்றால் மூக்கின் நுனி நம்மை குத்திவிடும் அபாயம் உண்டு. கண்கள் நம்மை எப்போதும் எடை போடும் பாவம்.அதன் ஆழத்தில் சிக்கினால் மீள்வது கடினம். எப்போதும் சாயமிட்ட உதடுகள். அவை எப்போது சிரிக்கும் என்பது அறிவது கடினம். நிமிர்ந்த நடை ,நேர்கொண்ட பார்வை. யாருக்கும் பயம் கொள்ளாத குணம் .
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தள மேலாளராக வேலை . லகரத்தை தொடப்போகும் சம்பளம். அதிகம் பேச மாட்டாள். இன்னும் திருமணம் ஆகவில்லை.வீட்டில் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரே தடை அவளது நான்கு வயது மகள்.
முதலில் பெங்களூருவில் தான் வேலையாக இருந்தாள். சென்னை வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. பெற்றவர்களால் பெண்ணை விட முடியாது.பெண்ணால் தனது பிடிவாதத்தையும்,குழந்தையையும் விடவே முடியாது. முடிந்த வரை கேட்டு பார்த்துவிட்டார்கள் ,'குழந்தையின் தந்தை யார் என்று ." இன்று வரை அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவ்வளவு அழுத்தக்காரி.குழந்தையின் துணைப்பெயரை "பெங்களூரு "என்றே கொடுத்துவிட்டாள். மகளின் பெயர்
" ஸ்ரீதயா பெங்களூரு" பெற்றவர்கள் மகளின் துணை எழுத்து யார், குழந்தையின் அப்பாவின் பெயரென்ன என்று கேட்ட கேள்விகளுக்கு அவளிடமிருந்து கிடைத்த பதில் வெறும் மௌனம் தான்.
இன்று வரை அவளிடமிருந்து அவளை பெற்றவர்களால் கூட பதிலை பெற முடியவில்லை. அவ்வளவு இரும்பு போல் இறுகி நிற்பவள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு குளுமையாக இருந்தாள் என்று அவளது பெற்றவர்களுக்கு மனம் அடித்துக்கொண்டது எப்போதும் துறுதுறுப்பு. கண்களில் இருக்கும் குறும்பு அவளது பேச்சிலும் வெளிப்படும். ஒரு இடத்தில நிற்கமாட்டாள். நடப்பதே குதித்து குதித்து தான் இருக்கும். முகமே குழந்தைத்தனமாகவும் விளையாட்டு தனமாகவும் இருக்கும்.
இப்போது,எல்லாவற்றையும் எங்கோ தொலைத்துவிட்டு வந்திருக்கிறாள். பெங்களூருவிலிருந்து அவள் சென்னை வரும்பொழுது ஆறு மாத கர்ப்பம். "என்னடி ஆச்சு?எவனாவது ரேப் பண்ணிட்டானா? குழந்தையை எதுக்கு சுமக்குற? உன்னோட வாழ்க்கை என்னாவது?" என்றெல்லாம் மேடிட்ட வயிற்றை பார்த்து அழுது கொண்டிருக்கும் அம்மாவையும்,இதற்கு என்ன பதில் ? யாருடைய பொறுப்பு என்று கண்களால் கேள்விக்கணைகளை தொடுத்த அப்பாவையும் ஆழ்ந்து பார்த்தவள் ,
"இந்த குழந்தைக்கு நா தான் பொறுப்பு. ரொம்ப இஷ்டப்பட்டு இந்த கர்ப்பத்தை சுமக்கிறேன்.என்னை யாரும் ரேப்ல்லாம் பண்ணல.இதுக்கு மேலே இதை பற்றி கேட்க வேணாம் " என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
வெளியே அம்மா பெருங்குரல் எடுத்து அழுவது கேட்டது. அப்பாவிடமிருந்து எந்த சப்தமும் இல்லை. தம்பி வெளியூரில் மூன்றாம் வருட பொறியியல் படிக்கிறான். பெற்றவர்கள் ரஞ்சனி - சுரேஷின் ஒரே மகள் . இவளுக்குப் பிறகு நீண்ட எட்டு வருஷங்களுக்குப் பிறகு பிறந்தவன் தம்பி ராகவன். மகள் சொன்ன பதிலில் பெற்றவர்கள் இருவரும் விக்கித்துப் போய் பார்த்தார்கள். அவர்கள் எதிர்பாராத பதில் இது .
மகளை கண்டாலே பெற்றவள் ரஞ்சனி ஆகார்ஷமானாள். "எவண்டி உனக்கு பிள்ளையை கொடுத்துட்டு ஓடினவன்.சொல்லித்தொலை.நாளைக்கு இந்த குழந்தை வளரும்பொழுது தகப்பனோட துணை வேணும். பெண் குழந்தை பாதுகாப்பா உணர அப்பா வேணும்.பிள்ளைக்கு தோழனா அப்பா வேணும்.இதென்ன கூத்து...கலாச்சாரம்...சிங்கள் மதர்? உன்னோட வாழ்க்கை உன்னோட கையில.உன் வயத்துல இருக்குற பிள்ளையை ஏண்டி பழி வாங்குற ?"
அம்மாவின் கேள்விகள் நியாயமானவை. நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள். ஆனால் எப்படி சொல்ல முடியும்? "அம்மா..நா ஏமாற்றப்படலை. என்னை விரும்பித்தான் அவர்கிட்டே கொடுத்தேன்.'என்று.
ஆம், அவள் விரும்பிய அந்த 'அவர்' பலமுறை எடுத்து சொல்லி விட்டார். 'நாம வெறும் நண்பரகளாகவே இருக்கலாம் அம்பரி .அடுத்தகட்டம் வேணாம். எனக்கு வாழ்க்கை முழுசுக்குமான கமிட்மென்ட் இன்டெரெஸ்ட் இல்ல.கல்யாணம் என்னை பொறுத்தவரை எப்போவும் நோ தான்.அண்ட் நீ கன்சர்வேட்டிவ் பேமிலிலேந்து வந்திருக்கே. உன்னை இந்த பீல்டுல அனுமதிச்சிருக்குறதே எனக்கு ஆச்சர்யம். அவங்களோட ஹோப்ஸ் அதை ஸ்பாயில் பண்ண வேணாமே!"
இருவரும் ஒன்றாக தங்கும் முதல்நாள் கூட இதே தான்."நல்லா யோசிச்சு சொல்லு அம்பரி. இப்போவும் ஒன்னும் மாறல. எனக்கு நிச்சயம் இதுல சந்தோசம் தான். உன்னோட இருக்குற ஒவ்வொரு செகண்டும் என்ஜோய் பண்ணுவேன். பட், நீ பின்னால பீல் பண்ணக்கூடாது. நா கர்ப்பமா இருக்கேன்னு என்கிட்ட சொல்லக் கூடாது. சோ ரொம்பவே கேர்புல்லா இருக்கணும் "
அவன் மீது இருந்த காதல் சேர்ந்த மோகம் எல்லாவற்றிற்கும் சரி என்றது. ஹாஸ்டல் அறையில் உடனிருந்த தோழிகள் என்னோட பாய் பிரென்ட் என்று ஒருவனை அறிமுகம் செய்து அவனுடன் சுற்றித்திருவதை பார்த்ததினாலா, அவர்கள் இருவரும் ஆண் நபர்களுடன் இரவு தங்குதலை பற்றி பெரியதாக பேசி சிரிப்பதை ,பெருமையாக சொல்லிக் கொள்வதை கேட்டதாலோ..இல்லை இவ்வளவு வருஷங்களாக பெற்றவர்களின் சிறகுகளுக்குள் பறவைக்குஞ்சாய் பாதுகாப்பாக இருந்துவிட்டு , முன்னூறு கிலோமீட்டர்கள் தொலைவில் தனியாக இருப்பதாலோ ,புதியதாக சம்பள பணத்தை பார்ப்பதாலோ ஏதோ ஒன்று அவரிடம் அவளை உந்தித் தள்ளியது.
ஆரம்பத்தில் சாதாரண அறிமுகம்.அதற்க்கு பிறகு நட்பு,பின்னர் நெருங்கிய நட்பு என்று கடந்து கட்டிலில் ,கூடலில் முடிந்தது. அதன் பலன் ஸ்ரீ தயா.
அவருடன் இருந்த அந்த எட்டு மாதங்களும் ஒரு மஹாராணிபோல் தான் வாழ்ந்தாள். ஒரு ஆதர்ஷ கணவன் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பெண்கள் விரும்புவார்களோ அப்படி இருந்தார் அவர். இருவரும் அவருக்கு சொந்தமான ஒரு அபார்ட்மெண்டில் பிளாட்டில் இருந்தார்கள். குடும்ப வழியில் பல தொழில்கள் அவருக்கு உண்டு.அதில் இவள் வேலை செய்யும் ஹோட்டலும் ஒன்று. ஹோட்டலின் பங்குகள் அவரது சொந்த உழைப்பில் வாங்கியது . அவரை பொறுத்தவரை தனித்துவமானது.
இதை பலமுறை அவர் சொல்லி இவள் கேட்டிருக்கிறாள். "என்னதான் பேமிலி பிசினெஸ் இருக்குன்னாலும் ,அதுலேந்து எனக்கு வந்த ஷேர் அமௌன்ட் சேர்த்து நா வாங்கின ஷேர்ஸ் இந்த ஹோட்டலொடது. நீ எபப்டி எனக்கு ஸ்பெஷலோ,அது மாதிரி இந்த ஹோட்டல் எனக்கு ஸ்பெஷல் தான் .என்று.
அவர் முதலில் அவள் வேலை செய்யும் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரர் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஹோட்டல் ஓனரின் மகனுடன் அடிக்கடி பார்த்திருக்கிறாள். ஹோட்டல் ஓனரின் மகனும் இவளும் ஒன்றாக ஹோட்டல் மேனேஜெமென்ட் பயின்றவர்கள். நல்ல நட்பு உண்டு. அதில்தான் இந்த வேலை சாகம்பரிக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் ட்ரைனிங்கில் இருந்தவளுக்கு தள நிருவாகம் பயிற்றுவிக்கப் பட்டது. அப்போது வெறும் இருபதாயிரம் ரூபாய்கள் தாம் சம்பளமாக கிடைத்தது.
ஆறு மாதங்களில் களப்பணியில் மாறியவளுக்கு இன்னமும் இருபதாயிரம் அதிகமானது. சந்தோசம் தாங்கவில்லை.ஒரேயொரு குறை,அதிகம் விடுப்பு கிடையாது.தீபாவளி சமயம் மூன்று நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும்.அதையும் தினமும் ஒருமணிநேரம் அதிகமாக வேலை செய்து முடித்திட வேண்டும்.
இவள் வேலை பளு தாங்காமல் அங்கே இருக்கும் ஹோட்டலின் காபி ஷாப்பில் அமர்ந்திருக்க அப்படி பின்பக்கமாக மயங்கி சரிந்து விழுந்தவளை தாங்கி பிடித்தவர் சாட்சாத் அவரே தான். பிறகு இருவரும் அறிமுக புன்னகை செய்வது வழக்கமானது.
இத்தனை நேரமாக நான் ' அவர்' என்றே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருக்கும் நம் சாகரிக்கும் பத்து வயது வித்யாசம். அவர் வித்யாசாகர். பெங்களூருவில் பெரிய தொழில் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது புகைப்படங்கள் கூட அதிகமாக வெளியே வராது. அமைதி,மென்மை இரண்டும் அவரது அடையாளங்கள்.சோசியல் மீடியாக்கள் அவரை பற்றிய கிசுகிசுக்களை தாங்கி வந்ததில்லை. " வெரி க்ளீன் இமேஜ் "என்பார்களே! அதை அவரிடம் பார்க்கலாம்.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டிருந்தது. இவளுடன் இருந்த பொழுது அவர் சொன்னது,"ஏற்கனவே அவளுக்கு அவளோட காலேஜ்மெட்டோட காதல் இருந்தது.அவன் பெரிய பணக்கார ,தொழில் குடும்பம் இல்ல. சாதாரண வேலை தான். ரெண்டுபேரும் அஞ்சு வருஷம் லவ் பண்ணியிருக்காங்க. அவன் மேலே எம்பிஏ படிக்கிறான்னுதான் அவளும் எம்பிஏ படிச்சது.அவ்ளோ லவ்.வீட்டுல சொல்ல பயம். இளிச்சவாய் நா கிடைச்சேன்னு கல்யாணம் செஞ்சுக்கிட்டா. முதலிரவு அன்னிக்கே என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டா.பிடிக்காத பெண்ணை நிறுத்தி வைக்கறதுல எனக்கும் விருப்பம் இல்ல.இப்போ அவங்களுக்கு ஆறு வயசுல குழந்தை இருக்கு.அவங்க வீட்டுலயும் சரின்னு ஏத்துக்கிட்டாங்க" என்றவர் மேலும் தொடர்ந்தார்," எனக்கு கல்யாண வாழ்க்கை சுத்தமா செட் ஆகாதுன்னு தோணிச்சு.பெண்கள் கூட இருக்க முயற்சி செஞ்சிருக்கேன்.பட், வெறும் முயற்சிதான். என்னோட முதல் கூடல் உன்னோடதான்." என்றவரை கட்டியணைத்துக்கொண்டது பெண்மை.
அவளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.எப்படியும் அவரை மனம் மாற்றி திருமணம் செய்து கொண்டுவிடலாம் என்று. ஆனால்,ஏனோ வித்யாசாகரின் அடிபட்ட மனம் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை.
இன்று நினைத்தாலும் அவரோடான அந்தக் காதல் நாட்கள் இனிப்பாகத்தான் தொண்டையில் இனிக்கிறது. அவரை ஒரு நொடியும் சாகம்பரி வெறுத்தது இல்லை கசிந்துருகும் அவர் மீதான காதலை மறக்க முடியாமல் தனிமையில் அவளது இதயம் இரத்தக்கண்ணீர் விடுவதை அவள் தலையணை மட்டுமே அறியும்.
வீட்டில் இவளது திருமணம் பற்றிய நச்சரிப்பு தாங்காமல் தான் 'சரி' பாருங்கள் என்று சொல்லிவிட்டாள். தன் நெஞ்சறிய பொய்யற்க,அவளால் இன்னொரு ஆடவனை நினைத்தும் பார்க்க முடியாது. பார்க்கலாம்.கதையின் ஓட்டத்தில் அவளது மனம் மாறுமா என்று.
Author: ரோசி கஜன்
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.