• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே 21

Stn49

New member

"இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்."


ஒருநாள் முழுவதும் காத்திருந்து விட்டு ,இன்னும் சுந்தரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று வெகுவாக சோர்ந்து போனான் வித்யாசாகர். சுந்தருக்கு மீண்டும் அழைக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. காத்திருப்பதை தவிர வேறு எதுவும் வழி இருக்கவில்லை.இரவு முழுவதும் உறக்கம் அவனை அண்டவே இல்லை. மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்ல அவன் தயாராகிக் கொண்டிருக்க ,சுந்தர் அழைத்து விட்டான்.

வித்யாசாகர் கையில் இருந்த ஹேர் ட்ரையரை அப்படியே டேபிளின் மீது வைத்துவிட்டு சுந்தரின் வார்த்தைகளில் கவனமானான். சுந்தரின் குரல் விட்டு விட்டு கேட்டது. லேசான கரகரப்பு வேறு.

"சுந்தர் ,ஆர் யூ தேர்? உங்க குரல் ஏன் விட்டுவிட்டு கேக்குது? எனி இஸிஸ்? சுந்தர் அங்கே பேசியது வித்யாசாகருக்கு சுத்தமாக காதில் விழவில்லை. சுந்தர் வாட்ஸாப்பில் செய்தி அனுப்பினான். 'நேத்துலேந்து இங்கே சிக்னல் விட்டுவிட்டு கிடைக்குது. கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்து பேசறேன்."என்று. வித்யாசாகருக்கு கிடைக்காத சிக்னலின் மீது அளவுக்கு அதிகமாக கோவம் வந்தது.(?)நான் நிச்சயம் சாகம்பரியிடமிருந்து திருமணத்திற்கு கிடைக்காத சிக்கனலை குறிப்பிடவில்லை என்பது உங்களுக்கே தெரியும்!

ஒருவழியாக அன்றும் அலுவலகம் கிளம்பிச் சென்றான். வீட்டில் அமர்ந்து எப்பொழுதடா சுந்தர் அழைப்பான் என்றெல்லாம் அமர்ந்திருக்கும் பொறுமை இப்போது வித்யாசாகருக்கு இல்லை. இவன் இறங்கி கீழே வரும் சமயம் ஆண்கள் எல்லோரும் அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தனர். வீட்டுப் பெண்கள் கிளம்பி பெண்பார்க்க நல்ல நாள் பார்த்துக்கொண்டு வர ஜோசியரிடம் சென்றிருந்தார்கள்.

ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து பாட்டி ஏதோ ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தார். இவன் செண்டு பாட்டியின் கால்களை தொட்டு வணங்கி விட்டு டைனிங் ஹாலில் சென்று அமர்ந்து கொண்டான். இவன் பாட்டி ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது பேச மாட்டார்.கைகளை மட்டும் உயர்த்தி இவனை 'நன்றாக'இரு ,என்று ஆசிர்வதித்தார்.

டேபிளில் வைக்கப் பட்டிருந்த பதார்த்தங்களை இவன் திறந்து பார்க்கவும் சமையல்காரர் வந்து இவனுக்குஒ பரிமாறினார். ஏதோ பெயருக்கு வித்யாசாகர் சாப்பிட்டு முடிக்கவும்,பாட்டி எழுந்து கொள்ளவும் சரியாக இருந்தது.அவசரமாக கைகளை கழுவிவிட்டு அவர் அறைக்கு அவர் கூடவே வந்தவனை கேள்வியாக பார்த்துவைத்தார் பாட்டி.

அதை பெரியதாக கண்டுகொள்ளாதவனாக .'பாட்டி , வீட்டுல அம்மா,சித்தி யாரையுமே காணுமே!என்றான். அவனை ஒரு பார்வை பார்த்தவர்,"ஆக்க பொறுத்தவனுக்கு ஆகப் பொறுக்கணும் .எல்லாத்துக்கும் அவசர படாதே!உன் அவசரத்துக்கு இங்கே ஒண்ணும் ஆகாது. நீ போயி உன்னோட வேலையை பாரு. ஏதாவது தகவல்ன்னா நாங்களே உன்னை கூப்பிட்டு பேசுவோம்.பெண்ணை பெத்தவரே வீட்டுப் பெரியவர்களை கூட்டிட்டு வான்னு சொல்லி அனுப்பிட்டாரு தானே!"என்று முடித்துக் கொண்டார்.

'இதை வேறு ஏன் சொன்னோம் .சொல்லாமல் இருந்திருக்கலாம் ' என்று யோசித்துக் கொண்டே கிளம்பினான். இவன் வாசலுக்கு வரும் நேரத்திற்க்கு இவனது காரும் அங்கே வந்து நின்றது.ட்ரைவர் வந்து காரை திறந்து விட்டார். பின் சீட்டில் அமர்ந்து கொண்டு வித்தியாசகர் தனது லேப்டாபில் கவனத்தை செலுத்த தொடங்கிய நேரத்தில் திரும்பவும் சுந்தரின் அழைப்பு வந்தது.

சுந்தரிடம் திரும்பவும் அழைப்பதாகக் கூறிவிட்டு, காரோட்டியிடம் ," டிரைவர், வேண்டிய நியர்பை ரெஸ்டோரெண்ட் எதுலயாவது நிறுத்துங்க"என்று சொல்லிவிட்டு தனது மடிக்கணினியை மூடி வைத்தான்.அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் ஒரு ரெஸ்டா ரெண்ட் முன்பு வந்து வண்டி நின்றது. அப்ப்டோது தான் திறந்திருந்த அந்த ரெஸ்டாரெண்ட்டில் இன்னமும் யாரும் வந்திருக்கவில்லை. அங்கே கார்னரில் இருக்கும் ஒரு டேபிளின் இருக்கையில் சென்று அமர்ந்தவனுக்கு ஒன்றும் சாப்பிடும் எண்ணம் வரவில்லை.ஆனாலும் ஒரு காபிலேட்டே ஆர்டர் செய்துவிட்டு சுந்தருக்கு அழைத்தான்.

வித்யாசாகரின் அழைப்புக்காக காத்திருந்த சுந்தர் முதல் ரிங்கில் அழைப்பை எடுத்து விட்டான். சுந்தர் இப்போது சென்னை பெசன்ட் நகர் கடற்கரை ஓரமாக போடப்பட்டிருந்த நிழற்குடையில் அடியில் அமர்ந்திருந்தான். வெயில் அவ்வளவாக இல்லை .கடற்கரையின் உப்புக்காற்று இவனது உதடுகளை உப்பை கொண்டு நிரப்பி சென்று கொண்டிருந்ததில் ,தாகம் அதிகமாக இருப்பதான உணர்வு. அந்தக் கடற்கரை உப்புக்கு கொஞ்சமும் குறைவு இல்லை அவன் சொன்ன விஷயங்களில்.

சுந்தரை தங்களது வீட்டில் கண்ட சாகம்பரிக்கு முதலில் திகைப்புத்தான்.ஆனாலும் சட்டென தன்னை மீட்டுக் கொண்டவளுக்கு இவன் இங்கே இப்போது வந்திருப்பது நிச்சயம் தனது பெற்றவர்களின் வேலைதான் என்பது புரிந்தது. அவனிடம் சகஜமாக பேச முயன்று தோற்றவள்,நேராகவே கேட்டுவிட்டாள் ,"இப்போ தான் என்னோட அப்பா போன் செஞ்ச பிறகு என்னை பார்க்கணும். உனக்கு சாகம்பரின்னு ஒரு பிரண்ட் உண்டுன்னு ஞாபகம் வந்துச்சா. கல்யாணம் ஆனா ஈஸியா தோழமைகளை மறந்துடறோம் இல்ல?" என்றாள் .

அவள் வார்த்தைகளில் இருந்த கோவமும் வீரியம் நிச்சயம் அவளது குரலில் இல்லை. அவள் தன்னை தைரியமாகவும்,நிமிர்வாகவும் காட்டிக்கொள்ள முயன்றும் அது முடியாமல் குரல் வெகுவாக நடுங்கியது. சுந்தர் சாகம்பரியை இழுத்து அணைத்துக் கொண்டான்.

"அப்படி இல்லை சாகி. இதோ ,இப்ப கூட உனக்கு பிரச்சனைன்னு உங்க அப்பா நேத்து போன் போட்டதுமே இன்னிக்கு காலைல வந்துட்டேன் தானே. தினமும் போன் செஞ்சு சாப்பிட்டியா...தூங்கினியான்னு கேட்டாத்தான் நட்பா...ஒனக்கு ஒரு பிரச்சனைன்னு கேட்டதும் இங்கே வந்திட்டேனே அது போதாதா...?"என்றான்.

அவனது தோளில் முகம் புதைத்து அழுதவளை தலையை வருடிக் கொடுத்து சமாதானம் செய்தான். ஸ்ரீ தயா தொலைவில் நின்று கொண்டு அம்மா அழுவதியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முதல் நாளில் இருந்து அம்மா அழுது கொண்டே இருப்பதும்,அம்மாவின் கண்கள் வீங்கி ,சிவந்து இருப்பதையும் பார்த்து பயமாக இருந்தது.அவளுக்கும் அழ வேண்டும் போல இருந்தது. பாட்டியும் தாத்தாவும் அவளை சமாளித்துக் கொண்டிருந்தார்கள் . தயாவும் இன்னமும் சாப்பிட்டு இருக்கவில்லை. அவளுக்கு அம்மா அழுவதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்.

சுந்தர் தயாவை அருகில் அழைத்து ,அவளையும் ஒரு கையால் தூக்கிக் கொண்டான். " சாகி,குழந்தை நீ அழுவது பார்த்து பயப்படுறா பாரு. அவளுக்காக தானே இத்தனை விஷயங்களையும் தாங்கிட்டு வாழற.அவளுக்கு பயமா இருக்கு.மனஸு கஷ்டப் படுறா.அழுகையை நிறுத்து"என்றான்.

தயாவை நிமிர்ந்து பார்த்தவள்,மெல்ல தலையை அசைத்து சுதாரித்துக் கொள்ள முயன்றதில் விசும்பலில் வந்து நின்றது."தட்ஸ் குட். நீ போயி தயாவை குளிக்க வச்சி அனுப்பிட்டு நீயும் ரெடி ஆகு.சாப்பிடுவோம்.பிறகு பேசிக்கலாம்" என்று சமாதானம் செய்து அனுப்பியதில் நல்ல பலன் இருந்தது.

நண்பன் சொன்னது போலவே குழந்தையை தயார் செய்து ,"நீ போயி பாட்டிகிட்டே கேட்டு சாப்பிடுவியாம்.அம்மா ரெடி ஆகி வருவேனாம் " என்று சொல்லி அனுப்பிவிட்டு தானும் குளித்து தயாராகி வந்தாள் . மெல்லிய சந்தன நிற காட்டன் சுரிதார். நெற்றியில் சிறிய சிவப்பு நிற போட்டு. தலையை லூசாக பின்னி இருந்தாள் . அதுவே அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தருக்கு திருப்தி பரவியிருந்தது.

"எனக்கு செம்ம பசி.இப்பவே மணி பன்னெண்டு ஆகுது.உங்க அம்மா வெங்காய வத்தக்குழம்பும், வடகமும் வச்சிருக்காங்க.முதல்லே சாப்பிடுவோம்.பிறகு கொஞ்சம் வெளியே போகலாம்" என்றான். ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவள் போல சுந்தர் சின்னவற்றை எல்லாம் செய்தாள் சாகம்பரி. உண்மையில் அவள் சுயமாக எதுவும் யோசிக்கும் நிலையில் இல்லை.

தோழியை சாப்பிட வைத்தவன் ,தானும் சாப்பிட்டான்.என்னதான் சுந்தர் மூன்று நட்சத்திர ஹோட்டல் அதிபராக இருந்தாலும் அவன் என்றுமே வீட்டு சாப்பாட்டுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பான்.இந்த வத்தக்குழம்பு அவனை பொறுத்தவரை நிச்சயம் அமிர்தம் தான். காலையில் சாப்பிட்ட டிபன் அவனுக்கு தராத நிறைவை இந்த குழம்பு சாதம் சரி செய்தது.

சாகம்பரியின் அம்மாவுக்கு சமைக்கும் மூடே இல்லை. எல்லோரும் எதையாவது சாப்பிட்டாக வேண்டுமே என்று தான் சமையல் செய்தது. தயாவுக்கு பருப்பு சாதத்தை குழைத்து ஊட்டி விட்டிருந்தார் .கூடவே ரசம் சாதம் சாப்பிட்டவளை அவளது தாத்தா "நாம கொஞ்சநேரம் படிக்கலாம் வா தயா "என்று சொல்லி உள்ளே தங்களது அறைக்கு அழைத்து சென்றார்.

சாப்பிட்டு முடித்த தோழியை, "நாம ரெண்டுபேரும் கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்.கிளம்பு" என்றான். சாகம்பரிக்கு வெளியே வரவெல்லாம் சிறிதும் இஷ்டம் இல்லை.முதல் நாள் அந்த மானேஜர் பேசும் பொழுது தன்னையும் சுந்தரையும்கூட இணைத்து பேசியது ஞாபகம் வந்தது.

"எனக்கு எங்கேயும் வெளியே வர இஷ்டம் இல்ல. அண்ட் தேங்க்ஸ் இங்கே எனக்காக வந்ததுக்கு. நீ ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பு சுந்தர்"என்றுவிட்டாள் . சுந்தருக்கு பெரிய விஷயம் ஏதோ நடந்திருக்கிறது என்று நன்றாகவே புரிந்தது.அவளை இப்படியே விட்டுவிட அவனுக்கு விருப்பம் இல்லை. அவளிடம் ஏதேதோ பேசி ஒருவழியாக இருவரும் மாயாஜால் வந்தார்கள். ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருப்பதில் தெரிவு செய்து தோழியை அழைத்து கொண்டு சென்றிருந்தான் சுந்தர்.இருவருக்குமே படத்தில் மனம் லயிக்கவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தவர்கள் நேரே சென்றது கடற்கரை ஓரமாக இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு. ஏதோ பெயருக்கு இருவருக்குமான ஆர்டரை செய்துவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அதில் எரிச்சல் அடைந்தவள்,"இப்போ எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்கே. உன்னோட மனைவியை இப்படி பார்த்தாலாவது ஏதாவது பிரயோசனம் இருக்கும்" என்று சுள்ளென விழுந்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன்,"சொல்லு,வித்யாசாகரை கல்யாணம் செஞ்சுக்க உன்னை எது தடுக்குது? உன்னோட ஈகோ..."? அவனது கேள்வியில் தடுமாறியவள்,"வாட்..எனக்கு ஈகோன்னு சொல்லுறியா?ஹெல்... நாதான் முதல்லே அவர்கிட்டே ப்ரொபோஸ் பண்ணேன். கல்யாணத்துக்கு கேட்டேன். முதல்முறை மறுத்தார் சரி.எட்டு மாசம் அவரோட வாழ்ந்தேனே .அப்போகூட அவரால என்னை புரிஞ்சுக்க முடியலையா...? இப்போ என்ன ஞானம் வந்ததுன்னு கல்யாணம் செஞ்சுக்க கேக்குறார்? இவர் கேட்ட உடனே நா தயாரா மண மேடைல நிக்கணுமா என்ன? இவரால் நா இழந்தது எவ்ளோ தெரியுமா?என்று பொரிந்தாள் சாகம்பரி.

சுந்தர் சிரித்துக் கொண்டே சொன்னான்,ஞானம் இல்ல.. காதல்.உன்னை மட்டுமே வாழ்நாள் முழுவதும் மனசுல சுமக்கிற காதல்.அவருக்கு இருந்த பயம் தன்னோட உன்மீதான காதலை வெளியே சொல்ல தயக்கம். அவர் முடியாதுன்னு விலகி தானே போனாரு.நீதானே வாழ்ந்து பாக்கலாம்னு சொன்னே. லிவ் இன் விதிமுறைகள் தெரியும்தானே? எதிர்பார்ப்புகள் நிச்சயம் கூடாது. இப்போ எதுக்கு அவரை குறை சொல்லுறே.."

சுந்தரின் வார்த்தைகளில் இருந்த நியாயம் சுட்டது.அவள் குரல் பலவீனமாக ஒலித்தது." வேணா சுந்தர். இது வேணா. என்னை பற்றி எப்படி பேசுறாங்க தெரியுமா..என்று ஆரம்பித்தவளால் நிச்சயம் நிறுத்த முடியவில்லை.அவள் சொன்னவற்றை கேட்டவனுக்கு இரத்த அழுத்தம் கூடியது.அவன் மனதில் சீக்கிரம் இவள் வித்யாசாகரை மணம் செய்துகொள்வது தான் சரி "என்று தோன்றியது.தோழியின் மன நிலை புரிந்தவனாக அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

அன்று இரவு சாகம்பரியும் தயாவும் தூங்க சென்ற பிறகு அவள் வேலையை விடப் போவதையும்,அதன் காரணத்தையும் சாகம்பரியின் பெற்றவர்களிடம் விவரித்தவன்,"எனக்கென்னவோ நீங்க வேறே எந்த காரணமும் சொல்லாம சீக்கிரம் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறது சரின்னு தோணுது. நீங்க வேறே மாப்பிள்ளை பார்த்தாலும் அவ நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.நிம்மதியா வாழ்வாளான்னு சொல்ல முடியாது. அவரோ கல்யாணம் செஞ்சுக்க கேக்குறாரு. முடியாதுன்னு சொல்லவும் காரணம் இல்லை. என்னை நம்புங்க வித்தியாசாகர் ரொம்பவே நல்ல மனுஷன்.எங்க ஹோட்டல் ஷேர் ஹோல்டர் கூட. பர்சனல் ரிலேஷன்ஷிப் வச்சிருக்கோம். எனக்கு அவங்க குடும்பத்தை நல்லாவே தெரியும்." என்றுவிட்டு ,"நா நாளைக்கு அவரிடம் பேசறேன். மேற்கொண்டு ப்ரொசீட் பண்ணுங்க "என்றுவிட்டான்.

சகமபரியின் பெற்றவர்கள் யோசனையுடனே கிளம்பி தூங்க சென்றார்கள்.சுந்தரின் மனதில் எத்தனை பேரின் வாயை மூட முடியும்? இதற்க்கு நிரந்தர தீர்வு அவசியம் என்று தோன்றியது. வித்யாசாகரிடம் நடந்த எல்லா விஷயங்களையும் மறைக்காமல் சொன்னவன் " நீங்க சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க வித்யாசாகர்.இது சரியான நேரம்.நா நாளைக்கு மோர்னிங் பெங்களூரு கிளம்பறேன்.என்னோட மனைவி என்னை பார்க்காம பீல் ஆகுறா."என்றுவிட்டு வைத்துவிட்டான்.

வித்யாசாகருக்கு ஏக்கமாக இருந்தது.
 
Top Bottom