• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இருளில் ஓர் மோட்சம் 3

STN - 100

New member
அத்தியாயம் 3

"இங்கே இருந்து போங்க..." என்ற சத்தத்தில் பயந்து சாப்பிட எடுத்து வந்து பணியாளர் கூட பயந்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டார்.

கையில் மீண்டும் சாப்பாடு தட்டுடன் வெளியே வந்த பணியாளை எதிர் கொண்டான் விஷ்வா.

"என்ன ஆச்சி.. திரும்ப கொண்டு வந்துடீங்க??" யோசனையுடன் கேட்டிட,

"வழக்கம் போல தான் சார்.." என்றார் தயங்கியவாறு.

அவனும் ஒரு பெருமூச்சுடன், "சரி கொடுங்க.. நான் கொண்டு போறேன்.." என்று அவர் கையில் இருந்து இவன் வாங்கிக் கொண்டு மாடிப்படி ஏறினான் விஷ்வா.

கதவை திறக்கும் சத்தம் கேட்டு, "நான் தான் போங்கன்னு சொன்னேன்ல.." என்று அறையின் உள்ளே இருந்து மீண்டும் சத்தம் கேட்க, அதை எல்லாம் சட்டை செய்யாமல் உள்ளே சென்று கதவை தாழ்ப்பாள் போட, உள்ளே இருந்தவன் கண்டு கொண்டான்.

வந்தது வேலையாள் அல்ல. விஷ்வா என்று.

"எதுக்கு இப்போ சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தா வேண்டாம்னு சொன்ன. நீ போடுற சத்தத்துல எல்லாரும் பயப்படுறாங்க.." என்று ஒரு வித ஆதங்கத்தில் பேச, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

விஷ்வா நெருங்கி வந்து, சாப்பாடு தட்டை நீட்ட, அதை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்.

"ப்ச்.." என்ற ஒரு வித சலிப்புடன் விஷ்வாவே, பிசைந்து வாயிற்கு அருகில் கொண்டு சொல்ல மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

அவ்வளவு பசி போல. சிறிது நேரத்தில் தட்டு முழுவதும் காலி.

"இவ்ளோ பசி வச்சிக்கிட்டு, எதுக்கு வேண்டாம்னு சொல்ற??" என்று கேட்டவன் கையை கழுவி விட்டு வந்த பிறகு அவனருகில் அமர்ந்து கொண்டான்.

அவனோ சாப்பிட்டு முடித்ததும், தன் வேலை முடிந்தது என்று படுத்துக் கொண்டான்.

விஷ்வா, அவனின் தலையை மெல்ல தடவிக் கொடுக்க அந்த சுகத்தில் நன்றாக கண் அயர்ந்தான் அவன்.

அவன் தான் சாணக்கியன். விஷ்வாவின் அண்ணன். விஷ்வாவை விட ஒரு வயது பெரியவன்.

காசிராஜனின் உடன் பிறந்த அண்ணன் வேல்முருகன் அன்னபூரணி தம்பதியின் மகன் தான் சாணக்கியன்.

வேல்முருகனும் அன்னபூரணியும் காலமாகி விட, காசிராஜன் தான் விஷ்வாவைப் போல சாணக்கியனையும் பார்த்துக் கொண்டார்.

விஷ்வாவும் சாணக்கியனும் சிறு வயதில் இருந்தே உடன் பிறந்த சகோதர்கள் போலவும், நல்ல நண்பர்களை போலவும் தான் பழகி வந்தனர்.

காலத்தின் கோலத்தால், சாணக்கியனுக்கு காரில் செல்லும் போது தலையில் அடிபட்டு சுய நினைவு இழந்து சிறு பிள்ளை போல நடக்க ஆரம்பித்து விட்டான்.

விஷ்வாவின் மருத்துவமனையிலேயே இருந்த திறமை வாய்ந்த சைக்கார்ட்டிஸ்ட் மூலம் அவனுக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

இத்தோடு முழுதாக ஐந்து வருடம் முடிந்து விட்டன.

இன்னும் அவனிடத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. முன்பை விட இப்பொழுது அதிகமா கத்தி கூச்சல் போடுவது அதிமாகி இருக்கின்றது அவனுக்கு.

விஷ்வாவின் நெஞ்சில் ஏதோ பாரம் அழுத்தியது போன்ற உணர்வு.

எப்படி சாணக்கியனை பழைய நிலைக்கு மீட்டு எடுப்பது என்றே தெரியவில்லை.

ஒரு பெருமூச்சுடன், கலங்கிய கண்களை சரி செய்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

மாடியில் இருந்து கீழே வந்த விஷ்வாவைக் கண்ட அவனது அத்தை அம்பிகா "என்னப்பா மேல இருந்து வர்ற.. ஹாஸ்பிடல் போகல??" என்று யோசனையுடன் கேட்டார்.

"போய்ட்டு வந்துட்டேன். வரும் போது மாணிக்கம் மேல சாப்பிட கொண்டு போயிட்டு திரும்ப அப்படியே கொண்டு வந்தாரு. அதான் நான் வாங்கி ஊட்டி விட்டுட்டு வரேன்.." என்றான் ஒரு பெருமூச்சுடன்.

"ம்ம்ம். " என்றவர் கடந்து செல்ல, "அத்தை.. அப்பா எதுவும் சொன்னாரா??" என்று அவரைப் பார்த்து கேட்டான்.

"என்னப்பா.. எதை பத்தி??" அவன் அத்தை புரியாமல் கேட்டார்.

"அம்மாவுக்கு..." என்று ஆரம்பிக்கவும் அதை புரிந்து கொண்ட அம்பிகா,

"எந்த இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லனு சொல்லிட்டாங்க.." என்றார் வருத்தமாக.

அவனது முகம் அப்படியே வாடிப் போக, அதைப் பார்த்துவிட்டு, வருத்தமாக அவனது தோளில் தட்டி விட்டுச் சென்றார்.

நன்றாக சுற்றித் திரிந்த அம்மா, பக்கவாதம் வந்து படுத்து விட்டார்.

அவனுக்கோ மனதில் அவ்வளவு அழுத்தம்.

யாரிடமாவது தன் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கலாம் என்று நினைத்தால், அவன் தோள் சாயவும் மடி சாயவும் தான் ஆள் இல்லாமல் உள்ளுக்குள் சிறு குழந்தை போல ஏங்கித் தவிக்கின்றான்.

தான் அதிகமா நேசிக்கும் அனைவரும் தன்னை விட்டு ஏதோ ஒரு விதத்தில் தூரமாகிப் போவதை எண்ணி அவனே தன்னை நினைத்து கழிவிரக்கம் கொண்டான்.

முகத்தை அழுந்த துடைத்தவன் நேரத்தைப் பார்க்க, அது மதியத்தை எட்டி இருந்தது.

பணியாளர் ஒருவர் வந்து சாப்பிட அழைக்க அவனுக்கு சாப்பிடும் எண்ணமே இல்ல.

"இல்லண்ணா. வேண்டாம். நீங்க போங்க.." என்று அவரை அனுப்பி வைத்தி விட்டு, அவன் மீண்டும் வேறு கிளையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றான்.

******************

தாமரைக்கு ஓரளவு உடல் நலம் தேறி இருக்க, மாலை போல எழுந்து மெல்ல மெல்ல வேலைகளை கவனித்தாள்.

அருணும் கல்லூரியில் இருந்தும், அருந்ததியும் பள்ளியில் இருந்து வந்து இருந்தார்கள்.

வந்தவர்கள் முதலில் சென்றது தாமரையை தேடித் தான்.

அதனைக் கண்ட சொர்ணத்திற்கு உள்ளுக்குள் கடு கடு என்று இருந்தது.

"வந்ததும் அக்காளும் தம்பியும் அந்த சிரிக்கியைத் தான் பாக்க போறாங்க. " என்று நொடித்துக் கொண்டார்.

"தாமரை.. இப்போ பரவாயில்லையா.." என்று அவளது கழுத்தில் கையை வைத்து தொட்டுப் பார்த்துக் கொண்டே கேட்க, "ம்ம். இப்போ பரவாயில்லை. இந்தாங்க டீ.." என்று எப்பொழுதும் வரும் நேரத்தில் தயார் செய்து வைத்து இருந்த தேநீரை அருந்தக் கொடுத்தாள் தாமரை.

அதனை வாங்கிக் கொண்டவள், "சரி.. நான் ரெப்பிரேஷ் ஆகிட்டு வந்து குடிச்சிக்கிறேன்.." என்ற படியே அவளது அறைக்கு கொண்டு சென்றாள்.

"என்னடா.. நீ குடிக்கிறியா?? இல்ல குளிச்சிட்டு வரியா??" என்று அருணைப் பார்த்து கேட்க, அவனும், "கச கசனு இருக்கு க்கா. குளிச்சிட்டு வந்தே வாங்கிக்கிறேன்.." என்ற படியே அவனும் சென்று விட்டான்.

ஒரு பெருமூச்சுடன் சொர்ணத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தாள்.

அப்பொழுது தான் அவரது கணவர் கூறிய புரோக்கர் சிங்காரம் வந்தார்.

"அம்மா.. ஐயா இல்லையா?? ஜாதகம் கொடுக்கிறேன்னு சொன்னாங்க.." என்று வந்தவரை,

"உக்காருங்க.. கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.." என்று அவரிடம் கூறி விட்டு, "தாமரை.. குடிக்கத் தண்ணி கொண்டு வா. " என்று அவளை அழைத்தார்.

அவளும் கொண்டு வந்து சொர்ணத்திடம் நீட்ட, அவரோ, "அவருக்கு கொடு.." என்று புரோக்கரை காட்டினார்.

அவளும் சிறு புன்னகையுடன் "வாங்க.." என்று கூறி விட்டு தண்ணீரை கொடுத்து விட்டுச் சென்றார்.

"உங்க பொண்ணா??" என்று புரோக்கர் சிரித்துக் கொண்டே கேட்க,

"சே சே.. இவ என் பொண்ணா.. அவளுக்கே யாரும் இல்லாம, அவளே இங்க வந்து ஒண்டிட்டு இருக்கா.. " என்று கூறியதும் புரோக்கருக்கு என்னமோ போல் ஆகி விட்டது.

அதற்குப் பிறகு அவர் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தவரிடம், சொர்ணமே ஆரம்பித்தார்..

"என் பொண்ணு பேரு அருந்ததி.. அவளுக்கு நல்ல வரனா பாருங்க." என்று கூற, "சரிம்மா.. " என்றதோடு முடித்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் வடுவேலனும் வந்து விட, "வாங்க சிங்காரம்.. வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சா. " என்று வெளியில் வைத்து இருந்த தண்ணீரில் காலை கழுவியபடி அவரிடம் கேட்டு விட்டு, "வாங்க உள்ள போலாம்.." என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

" சொர்ணம்.. ரெண்டு ஜாதகத்தை எடுத்துட்டு வா.. " என்று ஒரு வித அழுத்தத்துடன் கூற, அதனை புரிந்து கொண்ட சொர்ணம், "ம்ம்க்கும்.." என்று உதட்டை சுழித்தப்படி எடுத்து வந்து கொடுத்தார்.

"இதுல என் ரெண்டு பொண்ணுங்க ஜாதகமும் இருக்கு. மூத்தவ அருந்ததி.. இளையவ தாமரை.." என்றவர், ஜாதகத்தை வாங்கி புரோக்கரிடம் கொடுக்க, "உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்களா??" சற்று முன் அவரின் மனைவி கூறியது நினைவில் வர, மனதில் எழுந்த சந்தேகத்தில் கேட்க,

வடிவேலுவும் "ஆமா.." என்றார்.

சிங்காரம், முகத்தை திருப்பி சொர்ணத்தைப் பார்க்க, அவரோ முகத்தை திருப்பிக் கொண்டார்.

பின் இருவரது ஜாதகத்தையும் பார்க்க, அதில் தாய் தகப்பன் பெயர் வேறு வேறாக இருந்தது.

அதனைப் பார்த்து குழம்பியவர், "இது அம்மா அப்பா பேரு வேற வேற இருக்கே.." என்று யோசனையுடன் கேட்டார்.

வடிவேலன் ஒரு பெருமூச்சுடன், "தாமரை.. என் தம்பி பொண்ணு. இப்போ அவங்க ரெண்டு பேருமே இல்ல. நாங்க தான் அவளை பார்த்துகிறோம். அவளுக்கு நாங்க தான் அம்மா அப்பா. எங்க பொண்ணு மாதிரி தான் அவ. மாதிரினா இல்ல. எங்க பொண்ணு தான். " என்றார்.

அவருக்கு சொர்ணம் கூறியதின் அர்த்தம் இப்பொழுது தான் விளங்கியது.

"ரெண்டு பேருக்கும் நல்ல இடமா பாருங்க." என்று சிரித்த முகத்துடன் கூற, "சரிங்க ஐயா.." என்று கூறி விட்டு அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்.

அதே சமயம், அங்கே காசிராஜன் அவரது தங்கை அம்பிகா மற்றும் அவரது கணவன் தியாகராஜன் மூவரும் அவர்களது ஆஸ்தான ஜோசியரின் முன்பு அமர்ந்து இருந்தார்கள்.

"ஜோசியரே.. என் பையன் விஷ்வா ஜாதகத்துக்கும், என் தங்கச்சிப் பொண்ணு ரேகாவுக்கும் ஜாதகப் பொருத்தம் இருக்கானு பார்த்து சொல்லுங்க.." என்றார் காசிராஜன்.

காசிராஜனுக்கு தனது தங்கை மகளை மகனுக்கு மணம் முடித்து வைக்க விருப்பம்.

அந்த விருப்பத்தை அவர்களிடம் கூட அவர்களுக்கும் சம்மதம் தான்.

ரேகாவிற்கும் அதில் சம்மதமே. விஷ்வாவை சிறு வயதில் இருந்தே அவளுக்கு பிடிக்கும். ஆனால் அந்த பிடித்தம் என்ன மாதிரி என்பது அவளுக்குத் தான் அது வெளிச்சம்.

அது போக, இன்னொரு வீட்டிற்குச் சென்று அங்கு இருப்பவர்கள் யார் எப்படி என்று தெரிந்து கொண்டு நடப்பதற்கு, தான் பிறந்து வளர்ந்த இடத்திலேயே திருமணம் செய்து கொள்ள கசக்குமா என்ன??

ஆனால் விஷ்வாவிற்கு, இந்த ஏற்பாடுகள் எல்லாம் தெரிந்தால் அவன் ஏற்பனா?? பொறுத்து இருந்து பார்ப்போம்.


மோட்சம் தொடரும்...
 
Top Bottom