• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உந்தன் நெஞ்சில் உயிராக 16

STN - 03

Member
Staff member
உந்தன் உயிராக 16

திகழோவியன் எனது மகனில்லை... அவன்தான் உன்னுடைய இரண்டாவது மகன்... நீ இறந்துவிட்டதாக நினைத்திருக்கும் மகன் என்று கோவிந்தன் உணர்த்திய வார்த்தைகளில் உலகம் தட்டாமாலையாக சுழற்றிட சிலையென நின்றார் காமாட்சி.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித அதிர்வில் மீள முடியாது உறைந்திருந்தனர்.

நாராயணன் இதில் தலையிடுவதற்கு தங்களுக்கு உரிமையில்லையென அமைதியாக நின்றிருந்தார். ஆனால் அவருக்குமே அச்சூழல் கடினமாகத்தான் தெரிந்தது. அவருக்கே அப்படியென்றால் அவனுக்கு?

செந்தாழினியை சொல்லவும் வேண்டுமா?

திகழோவியனுக்கு தனது வாழ்வில் இன்னும் என்ன தனக்கென காத்திருக்கிறதென்ற விரக்தி எண்ணம் மேலோங்கிட, எழ முடியாது மணியின் உதவியோடு கோவிந்தனின் அருகில் வந்தான்.

"ப்பா..." அவன் முடித்திடும் முன்பு,

"உன்ற வார்த்தைக்கு சொந்தக்காரன் அக்கட்டி நிக்கிறான் பாரு" என்று ராஜேந்திரனை கை காண்பித்திருந்தார் கோவிந்தன்.

திகழோவியனின் பார்வை ராஜேந்திரனை துளைக்க, அவரோ தாழ்ந்த முகத்தை நிமிர்த்தவில்லை. அதுவே திகழோவியனுக்கு உள்ளே இடியை உண்டாக்கியது.

'உண்மையோ?' எனும் வினா எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

"என்னங் மாமா சொல்றீங்கங்? அதெப்படி சாத்தியம்?"

சூழல் புரிந்து சுகிர்தன் தான் அவரிடம் என்னவென்று கேட்டிருந்தான்.

"என்னடா நான் சொல்றது புரியலையா உன்ற மூளைக்கு" என்ற கோவிந்தன், "அவன் உன்ற கூட பொறந்த பொறப்பு. வனவாசம் மாதிரி இங்க வளர வேண்டியதாகிப்போச்சு. அதுக்கு முழுக்க காரணம் உன்ற ஐயனும், என்ற பொண்டாட்டியும்" என்றார்.

நின்றிருந்த காமாட்சி நெஞ்சில் கை வைத்தவராக தரையில் தொப்பென்று அமர்ந்தார்.

"அத்தை" என்று சுவிதா வந்து தாங்கிட,

"ஒண்ணுமில்ல கண்ணு" என்று முகத்தை துடைத்து எழுந்த காமாட்சி, "நீங்க சொல்றது உண்மைங்ளாண்ணா?" என கோவிந்தனிடம் கேட்டார்.

"உன்ற புருஷன் தான் பதில் சொல்லணும் காமாட்சி" என்ற கோவிந்தன், இதற்கு மேல் மூடி மறைத்து பலனில்லையென தன்னளவில் தன்னிடம் உள்ள உண்மைகளைக் கூறினார்.

"கல்யாணி உண்டாயிருக்காண்ணு சொல்லும்போது எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க. ஆனால் என்னால மட்டும் முடியல. எனக்குதான் உண்மை தெரியுமே! வாய்ப்பேயில்லைன்னு!" என்று நிறுத்தியவர், "ஆனாலும் ஒரு நப்பாசை. சின்ன நம்பிக்கை. மெடிக்கல் மிராக்கில் அப்படின்னு டாக்டர்ஸ் சொல்லுவாங்களே அது மாதிரி என்னமும் நடந்து கல்யாணியால பிள்ளை பெற முடியாதுங்கிற குறை தன்னால சரியாகிப்போச்சோன்னு அம்புட்டுக்கு சந்தோஷப்பட்டுப்போனேன்" என்று கோவிந்தன் சொல்லிட...

"குறை என்ட்ர தங்கச்சிக்குங்ளா?" என்று அதிர்ச்சியில் வாய் திறந்திருந்தார் ராஜேந்திரன்.

வேகமாக தன்னுடைய அறைக்குச் சென்ற கோவிந்தன், அப்போது இருவருக்கும் முறையாக செய்த மருத்துவ பரிசோதனை கோப்புகளை கொண்டுவந்து ராஜேந்திரனின் கைகளில் திணித்தார்.

அவர் கொண்டு வந்து கொடுத்த வேகமே, அதுதான் உண்மையென அனைவருக்கும் புரிய வைத்திருந்தது.

'என்ட்ரகிட்ட உங்களுக்குதாங் குறைன்னு அவள் சொன்னாளே!' மனதில் நினைத்தாலும் ராஜேந்திரன் வெளியில் சொல்லவில்லை. இதற்குமேல் இதனை சொல்லி இறந்துபோனவளை மேலும் கெட்டவளாகக் காட்டிட தங்கைப்பாசம் இடமளிக்கவில்லை.

"முழுகாம இருக்கன்னு சொன்னவ, ஓய்வு அவசியமுங்க சொல்லி தனி ரூமுக்கு போயிட்டா... எதுக்காகன்னு கொஞ்ச மாசத்துக்கு பொறவு தான் தெரிஞ்சுது. வயித்துல புள்ளையே இல்லாம, அது தெரியாம இருக்க சுத்திக்கிற துணி மூட்டை தெரிஞ்சப்போடக் கூடாதுன்னு என்னைவிட்டு தள்ளியிருந்திருக்கா? ஒருநாளு ராத்திரி, பொறக்கவே பொறக்காதுன்னு சொன்ன எம்புள்ளையை தொட்டு பார்க்க ஆசையா இருக்கவும், முழிச்சிருக்க நேரந்தான் வயித்துல இருக்க புள்ளைக்கிட்ட பேச விடமாட்டேங்கிறான்னு, அவள் அறைக்கு போனேன். பொறவுதான் தெரிஞ்சுது அங்கிருக்கிறது புள்ளையில்லை துணி மூட்டைன்னு. அப்போகூட எனக்கு அவள் மேல கோவம் வரல. ஊர் குழந்தையில்லைன்னு பேசுனப்பேச்சு, என்ட்ர அம்மா அவளுக்குக் கொடுத்த கொடுமைக்கெல்லாம் இனியும் இதெல்லாம் தாங்க முடியாதுன்னு பயந்து இப்படி பண்ணிப்போட்டா... எப்படியும் கொஞ்ச மாசத்துல உண்மையை சொல்லித்தான ஆவணும். அதுவரைக்கும் அவள் விருப்பத்துக்கு நிம்மதியா இருந்துக்கிட்டும் அமைதியா இருந்தேன். எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு அவளுக்கும் தெரிஞ்சுப்போச்சு. நான் அமைதியா போனது அவளுக்கு பலமாகிப்போச்சு. ஆனா, ஒருநாள் ராத்திரி வலிக்குதுன்னு கத்தி கதறி துடிச்சா! எனக்கு இதெப்படி சாத்தியம்ன்னு சுத்தமா புரியல. குழப்பத்துல இப்போ என்ன பண்ணனும் ஒன்னும் புரியுமா நான் நின்னதை பார்த்து என்ட்ர அம்மா என்னைய திட்டிப்போட்டு அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அதுக்கு முன்னாடி அவள் ஹாஸ்பிடல் போன மாதிரியே எனக்குத் தெரியல. அம்மா எதுக்கேட்டாலும் காட்டிக்கிட்டு தான் வர்றேன். நீங்க கேட்ட மாதிரி புள்ளை உங்க கைக்கு வரும். அதுவரைக்கும் என்னை நொச்சு பண்ணாம இருங்கன்னு ஒருநாள் எரிஞ்சு விழுந்தா. அந்த நேரத்துல அவள் அப்படி நடந்துகிறது புள்ளைக்கு ஆவாதுன்னு, அம்மா அதுக்கு பொறவு அவகிட்ட எதுவும் கேட்டுக்கவே இல்லை. வலி வந்துதான் ஹாஸ்பிடல் போனாங்க. உண்மை தெரிஞ்ச எனக்கு போக மனசில்லை. அங்க புள்ளை இல்லாம அவமானப்பட்டு வரணுமே. அதுக்கு என்ட்ர மனசு இடம் கொடுக்கல. அடுத்தநாள் காலையில வூட்டுக்கு வந்த என்ற அம்மா, உனக்கு பையன் பொறந்திருக்கான் சொல்றாங்க. புள்ளைக்கு எப்படி ஏற்பாடு பண்ணான்னு பெரிய குழப்பம். இவ்வளவு செஞ்சவ இதுக்கும் ஏதும் செஞ்சிருப்பான்னு நான் அமைதியா விட்டுட்டேன். ஒவ்வொரு இடத்திலும் நான் அமைதியா போனதுதான் திகழு வாழ்க்கையில பெரிய தப்பா முடிஞ்சுப்போச்சு. அன்னைக்கே கொஞ்ச நேரத்துல காமாட்சிக்கு பொறந்த புள்ளை செத்துப்போச்சுன்னு தகவல் வருது. என் மனசு அப்படியும் இருக்குமோன்னு கணக்குப் போட்டுச்சு. எனக்கு பையன் பொறந்திருக்கான்னு சொன்னப்போ கூட அங்க போவாமா இருந்த நான், காமாட்சி புள்ளை செத்துப்போச்சுன்னு சொன்னதும் உண்மையை தெரிஞ்சிக்கனும்னு பதறியடிச்சுப் போனான். அங்க காமாட்சியும், ராஜேந்திரனும் தலையிலயும் மாருலையும் அடிச்சிக்கிட்டு அழுததைப் பார்த்து அப்படியிருக்காதுன்னு நம்புனேன். எந்தவொரு ஐயனும் அம்புட்டு லேசுல செய்யுற விஷயமில்லையே இது. அதனால கல்யாணி கைக்கு வந்த குழந்தை வேற யாரோ ஒருத்தரோடதுன்னு நினைச்சேன். அவள் ஆசைப்பட்ட மாதிரி ஒரு குழந்தை கிடைச்சிருக்கு. புள்ளை வரத்துக்கு ஏங்கினவ, நிம்மதியா இருந்துட்டுப்போவட்டும்ன்னு இருந்துட்டேன். திகழோட சாதாரணமா அவள் இருந்திருந்தாக்கா, என்னோட சேர விட்டிருந்தாக்கா, நான்தான் அவனுக்கு ஐயன்னு என்னை காட்டி அவளோட சேர்த்திருந்தாக்கா, எனக்கும் அவன் மேல புள்ளை பாசம் வந்திருக்குமோ என்னமோ? கடைசி வர வராமலே போயிடுச்சு. திகழோட இருபதாவது பொறந்தநாளு முடிஞ்சு ரெண்டு நாளுல கோவிந்தன் வூட்டுக்கு வந்தாங்கங். அப்போதான் காமாட்சி புள்ளைய வச்சு ரெண்டு பேரும் நாடகம் போட்டதே எனக்கு தெரிஞ்சுது. நான் வூட்ல இருக்கிறது ரெண்டு பேருக்கும் தெரியல. அன்னைக்குத்தான் திகழு அம்மாவான கல்யாணியோட உண்மையான முகம் தெரிஞ்சுது" என்று முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்தவராக பெருமூச்சோடு அனைவரையும் ஏறிட்டார். அவ்வளவுதான் என்பதைப்போன்று.

அத்தனை வருட மனதின் அழுத்தமெல்லாம் விலகியிருக்க, அன்று தான் மனம் லேசாக உணர்ந்தார்.

தன்னுடைய பிறப்பே இங்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது எனும் உண்மை திகழோவியனை உயிரிருந்தும் கூடாக மாற்றியிருந்தது.

அவனால் தான் உயிரோடுதான் இருக்கின்றோமா, தன்னால் சுவாசிக்க முடிகிறதா? என்பதையே நம்ப முடியவில்லை.

கீழே சரிய இருந்தவனை மணியும், சுகிர்தனனும் தாங்கிப் பிடித்தனர்.

"அய்யோ... அய்யோ... என்ட்ர புள்ளை உசுரோடிருந்தும் இத்தனை வருஷம் தெவசம் கொடுத்து நானே கொன்னுக்கிட்டு இருந்திருக்கிறனே" என்று, அன்று அவன் பிறந்து இறந்த செய்திக்கேட்டு துடித்த துடிப்பிற்கு சற்றும் குறையாது இன்று கத்தி கதறினார் காமாட்சி.

"நான் தினம் அழுவுற அழுவையை பார்த்தும் உன்ற மனசு இறங்கிவரலையே... பாவி மனுஷா! அன்னைக்கு பெத்த அப்பனா எம்புட்டு துடிச்ச, அவ்ளோவுக்கும் நடிப்பு நடிச்சிருக்கல்ல நீ" என்று ராஜேந்திரனின் சட்டையை பிடித்து கேள்வி கேட்ட காமாட்சி,

"அய்யோ என் சாமி" என்று திகழோவியனின் அருகில் செல்ல, அவனது வெறுமையானப் பார்வை அவரை நெருங்கவிடாது தள்ளியே நிற்க வைத்தது.

அப்படியே தரையில் அமர்ந்தவர்,

"பெத்த புள்ளை உசுரோட இருந்துச்சா, உண்மைக்கும் செத்துதான் பொறந்துச்சான்னுகூட தெரிஞ்சிக்காம இருந்துப்புட்டனே..." தலையில் அடித்துக்கொண்டு அழுதார். சுவிதாவும், தேவகியும் எவ்வளவோ தடுத்தும் அவரை ஆற்றுப்படுத்த முடியவில்லை.

"இன்னமும் என்னத்துக்குங் இப்படி மரமாட்டம் நின்னுட்டு இருக்கீங்... எப்படிப்பட்ட பாவத்தை செஞ்சிருக்கீங்க... ஒரு உறவு கஷ்டமில்லாம வாழ வைக்கிறேன்னு, எத்தனை உறவு மாத்தி அமைச்சிருக்கீங்" என்று ராஜேந்திரனிடம் சுகிர்தன் வெகுண்டுவிட்டான்.

"பொறந்த உறவு இல்லாம, அண்ணனை கூப்பிட வேண்டிய என்னைய மாமான்னு கூப்பிட வச்சிருக்கீங்க... அம்மாங்குற நெஞ்சுக்கூட்டை தீ வைச்ச எரிச்சிப்புட்டீங்கங்... அம்மாவை அத்தைன்னு அவன் கூப்பிடும் போது உம்மட நெஞ்சு அறுக்கல" என்று கொதித்த சுகிர்தன், "எப்புடி அறுக்கும்... உம்ம அவன் மாமான்னு கூப்பிடுறதையே ஏத்துக்க முடிஞ்ச ஆளுதானுங்" என்றான்.

"உன்ற பொண்டாட்டியா வாக்கப்பட்டு வந்ததுல இருந்து... உம்ம சொல்லைமீறி எதுவும் செஞ்சிருக்கனாங்... உம்மால எப்படிங் முடிஞ்சுது. உயிரோட இருந்தவனை ஒரு நாளு ஒரு பொழுது இந்த கையாள அள்ளித் தூக்கினது இல்லையே! என்ட்ர மாரு வலிச்ச வலி உம்மட நெஞ்சுக்குத் தெரியுமாங். என்ற மவன் செத்த நாளுல இவன் பொறந்தான்னு, என்ட்ர பையனா நெனச்சு பால் குடிக்க தூக்கினப்புள்ளையை வெடுக்குன்னு புடுங்கிக்கிட்டு போனவ, கடைசி வரைக்கும் என்ட்ரகிட்ட புள்ளையை ஏன் அண்ட விடுலன்னு இப்போதானுங் தெரியுது. என் பெத்த வயிறு இறுவிப்போற வலி தெரியுதாங்கங்" என அழுது கரைந்த காமாட்சி தரையோடு நகர்ந்தவராக, இறுகி அமர்ந்திருந்த திகழோவியனின் பாதத்தில் கைகள் வைத்து தலை கவிழ்ந்திட...

"என்ன காரியம் பண்றீங்கங் அத்தை..." என்றவன், தான் சொல்லிய வார்த்தையில் தொண்டை அடைக்க, நரம்புகள் புடைக்க கைகளை இறுக்கி மூடி ஆவென்று ஆவேசமாகக் கத்திட...

அவனுள் மோதிக்கொண்டிருக்கும் வலியை அனைவராலும் உணர முடிந்தது.

மணி எவ்வளவோ முயன்றும் அவனின் ஆக்ரோஷத்தை அமைதிப்படுத்த முடியவில்லை.

அத்தை மகனென்ற போதே அத்தனை விருப்பமானவன் திகழோவியன். இப்போது அவன் தான் உடன் பிறந்தவன் என்று தெரிந்த பிறகு சுகிர்தனனால் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்.

முந்தைய எட்ட நின்றல் யாவும் கல்யாணி என்பவரால் மட்டுமே!

தனது ரத்தம் கதறும் ஓலம் பார்க்க முடியாது...

"திகழு" என்று தாவி அணைத்து, இறுக்கம் கூட்டி இன்னும் இன்னுமென தனது நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டான்.

"முடியலங்கங்... அத்தைன்னு தான கூப்பிட வருது. நொடியில எல்லாம் மாறிப்போவுங்களா. இம்புட்டு வருஷமா வளர்ந்த வாழ்ந்த இடம் எனக்கானதில்லை... என்ட்ர உரிமைக்கானதில்லைன்னு எப்படிங்கங் ஒரு நொடியில ஏத்துக்க முடியும்.

வலிக்குதுங் மா..." என்று நிறுத்திய திகழோவியன், "அய்யோ அய்யோ வலிக்குதுங்க" என்று சுகிர்தன் பிடியிலிருந்து விலக திமிறினான்.

அண்ணன் என்பவனை மாமா என்றழைக்கும் வலி.

"திகழு திகழு பொறுமையா இரு சாமி. என்ட்ர கண்ணுல... அண்ணன் அண்ணன் நானிருக்கேன். வருஷம் எத்தனை ஆனா என்ன உறவு மாறாது என்னைக்கும். இத்தனை வருஷம் புள்ளையில்லாத அத்தைக்கு புள்ளையா இருந்தன்னு மனசை தேத்திக்க தங்கம்" என்று கண்ணில் நீர் இறங்க தன்னுடைய அணைப்பில் மேலும் அழுத்தம் கொடுத்தான்.

நடக்கும் யாவும் செந்தாழினிக்கு தன்னவனுக்கு நிகரான வலியை கொடுத்தது.

"கொஞ்ச காலம் பொறுமையா இருப்போம்!" அன்று திகழோவியன் சொல்லியது இன்று செவி தீண்டியது. உடன் அதற்கான அவளின் பதிலும்.

"பொறுமையா இருந்தா மட்டும் எல்லாம் மாறிப்போவுங்களா?"

அன்று அவ்வாறு கேட்டதற்கு இன்று தன்னையே அறைந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.

அவனை வாழ்வில் முன்னோக்கி நடக்க வைக்க வேண்டுமென நினைத்து தெரிந்தே எல்லாம் பேசியவளால், எட்டு மாதங்களாகியும் அவனைத் தாண்டி அடி வைத்திட முடிந்திருக்கவில்லையே. அப்படி சென்றிட வேண்டுமென்றும் அவள் நினைக்கவில்லை.

தான் நன்றாக இல்லையென்றாலும் நாம் விரும்புவோர் நல்லாயிருக்க வேண்டுமென்று எண்ணுவோமே, அந்த எண்ணமே அன்று அவளுக்கு.

அவன் வாழ வேண்டுமென்று நினைத்தவள், தான் வாழ வேண்டுமென இத்தனை மாதங்களில் ஒரு நொடியும் முயற்சிக்கவில்லை.

காதலாய் அவனுடன் திரிந்த நாட்கள் மனதிற்கு ஆறுதலாய் முன் வந்து நிற்க, அறிந்திட்ட உறவின் மதிப்பிற்காக நினைவுகளை மட்டுமே விரட்டியடிக்க முயன்றவளாள் மனம் முழுவதும் நிறைந்திருப்பவனை அசைக்கக்கூட இயலவில்லை.

அன்று அவனுக்காக செய்தது... இன்று அவளை குற்றவாளியாக்கியது.

'இப்போது அவன் தன்னை காதலில் இணைத்துக் கொள்வானா? அவனுடன் சேர வேண்டுமென தான் நினைப்பது சரிதானா?'


சரியான உறவுமுறை தெரிந்திடவே தன்னவன் தனக்கு சகோதர பந்தமில்லை என்பது எத்தனை பெரும் ஆசுவாசத்தையும், நிம்மதியையும் தந்ததோ, அதே அளவுக்கு அன்று தான் பேசி வைத்த வார்த்தைகளின் எதிர்வினை இன்று எவ்வாறு இருக்குமென்று அச்சம் கொள்ளவும் வைத்தது.

தொடர்ச்சி கீழே👇🏻
 
Last edited:

STN - 03

Member
Staff member
அழுது கரைந்து ஓய்ந்து ஆங்காங்கே சுருண்டு கிடப்பவர்களை அமைதியாகப் பார்த்து நின்ற ராஜேந்திரன்...

"அதான் தெரிய வேண்டியதெல்லாம் தெரிஞ்சாச்சே! இம்புட்டு வருஷமா புள்ளை செத்துப்போச்சுன்னு அழுத... அதான் அவன் உசுரோடதான் இருக்கான் தெரிஞ்சிப்புடுச்சே! கூட்டிக்கிட்டு கிளம்புங்க" என்று துண்டை உதறி தோளில் போட்டவராக நகர்ந்தார்.

"மனுஷனா நீயெல்லாம்!"

இன்னமும் தன்னை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் சுகிர்தன் பிடியிலிருந்து உதறி வெளிவந்த திகழோவியன் கர்ஜித்திருந்தான்.

"என்னடா துள்ளுற... நான் உன்ற ஐயன். அடங்கி இரு. உண்மை தெரிஞ்சதுல, எனக்குள்ள உறுத்தல் அடங்கி போயிருக்கு. அதுவரை என்ட்ர மனசுக்கு ஆறுதல் தான். அதுக்காக நான் பண்ணது தப்புன்னு எவனாவது அதிகம் பேசுனீங்க..." என்று விரல் நீட்டி எச்சரித்தார்.

"ச்சீய்..." சுகிர்தன் அவரின் முகத்திற்கு நேரே கூற,

"இப்போ என்னங்டா... என்ட்ர தங்கச்சி நல்லாயிருக்கணும் நெனச்சேன்... அதுக்காக செஞ்சேன். இருந்தவரைக்கும் சொந்த புள்ளைக்கு மேலாதான பார்த்துக்கிட்டா... கஞ்சி ஊத்தாம தெருவுல நிறுத்திப்புடலையே" என்ற ராஜேந்திரன், "பெத்த இவளால கூட என்ட்ர தங்கச்சி உன்னை பார்த்துக்கிட்ட மாதிரி பார்த்திருக்க முடியாது. புள்ளையே பொறக்காதுன்னு மாமியார் பேசுனப்பேச்சு தாங்காம என்னைத்தேடி வந்தவ, மனசு ஆறுதலுக்கு என்ட்ரகிட்ட சொல்லி அழுதாலும், ராத்திரி நேரம் எல்லாரும் முடங்கினப் பொறவு தூக்கு மாட்டிக்க பார்த்தாள்" என்று நிறுத்தினார்.

அதுவரை உண்மையை சொல்லியாயிற்று இனி அவர்களுக்குள்ளான பேச்சில் தனக்கு தலையீடு இல்லையென அமைதியாக இருந்த கோவிந்தனிடம், ராஜேந்திரனின் இறுதி வார்த்தையில் உதட்டில் வளைந்த நெளிவு.

"ஏனுங்ண்ணா காப்பாத்துனீங்கங்... நானு உசுரோட இருந்து என்னாவப்போவுதுங்க. என்ட்ர புருஷனுக்கு குறைன்னு வெளிய தெரிஞ்சா ஊர்ல தலைகாட்ட முடியுமாங் அவரால" என்று, அன்று கல்யாணி சொல்லியதை இன்று ராஜேந்திரன் மறைத்தவராக மேற்கொண்டுத் தொடர்ந்தார்.

"அந்த நேரம் உன்ற அம்மா வயித்துல நீ உதிச்சிருந்த. அந்த நேரம் சாவ துடிச்சவளை நிறுத்தி வைக்க, எனக்கு பொறக்குற புள்ளையை உனக்கே கொடுக்கிறேன். நீயே வளர்த்துக்கண்ணு சொன்னேன். நீ கொடுத்தாலும் அது என்ட்ர புள்ளையா ஆவாதுங்களே! ஊரும் உம்ம மவன்னுதான் சொல்லும்... கொடுக்கிறதுன்னா என்ட்ர மவனாவே கொடுன்னு சொன்னாள். அவள் சொன்னது புரியல. ஆனா ஒரு வாரத்துல உண்டாயியிருக்கிறதா தகவல் வந்துது. நானும் உண்மையா இருக்குமோ நெனச்சு தான் பார்க்கப்போனேன். நீதான் புள்ளைய கொடுக்கிறேன் சொன்னீங்களேண்ணா. அது என்ட்ர புள்ளையா தான் எல்லாருக்கும் தெரியணும். அதுக்குதான் இந்த ஏற்பாடுன்னு சொன்னா? புள்ளை இல்லைன்னு இந்த சமூகம் அவளை குத்தி கிழிச்சதெல்லாம் நானும் பார்த்தேனே! அவளுக்கு மறுப்பு சொல்ல முடியல. காமாட்சிக்கு வலி வந்து சேர்த்த ஆஸ்பத்திரிக்கே கல்யாணியையும் வர வச்சு அட்மிட் பண்ணோம். அதுக்கு முன்னாடியே அந்த டாக்டருக்கிட்ட பணம் கொடுத்து பேசி சமாளிச்சு வச்சோம். புள்ளை பொறக்கும் போதே செத்துதான் பொறந்ததுன்னு காமாட்சியை நம்ப வச்சோம். அவகிட்ட புள்ளை பொறந்த சத்தத்தைக்கூட காட்டல. கல்யாணி மாமியார் அசந்த நேரம், பிள்ளையை கொண்டு வந்து கல்யாணிக்கிட்ட கொடுத்துட்டு பொறந்தாச்சுன்னு சொன்ன அதே நேரம், காமாட்சிக்கு பொறந்ததுன்னு செத்துப்போச்சுன்னு சொல்லி நம்ப வச்சி, உசிரில்லாம உடம்பை அவளால பார்க்க முடியாதுன்னு நானே புதைச்சிட்டதா சொன்னேன். நான் செஞ்சது உங்க எல்லாருக்கும் தப்பா தெரியலாம். ஒரு அண்ணனா என்ட்ர தங்கச்சிக்கு நான் செஞ்ச நல்லதை யாரும் குறை சொல்ல ஆவாது" என்றார். அத்தனை திமிர் அவரின் தோற்றத்தில்.

"ஒரு அண்ணனா ஜெயிச்சிட்டேன்... ஒரு அண்ணனா நான் பண்ணது சரி, ஒரு அண்ணனா அண்ணனான்னு நீ பண்ணதெல்லாமே, ஒரு அப்பாவா, ஒரு புருஷனா உம்ம தோற்கடிச்சிருக்கே அது தெரியலையா? வலி கொடுக்கலயா?" என்று கேட்ட சுகிர்தன், "என்னைய எப்படி விட்டுவச்ச!" என்று வார்த்தையாலே சுழன்றடித்திருந்தான்.

பெரும் புயல் வீசி ஓய்ந்தது போலிருந்தது அவ்விடம்.

அதற்கு மேல் யாராலும் நடந்து முடிந்ததை எண்ணி கை சேர்ந்திட்டவனை மீண்டும் தவிக்கவிட மனமில்லை.

உண்மை தெரிந்த பிறகு, இறந்த மகனுக்காக காமாட்சி இன்றளவிலும் படும் வேதனை கோவிந்தனுக்கு ஏற்புடையதாக இல்லை. அத்தோடு சிறு வயது முதல், அன்னை என்ற ஒற்றை பாசத்தில் சிறைகொண்டிருக்கும் திகழோவியனை அவனது கூட்டிற்கு அனுப்பி வைத்திடவே நினைத்தார். அதனாலே உண்மைக்கு பிறகும் அவனுடன் நெருக்கமின்றி இருந்தவர், திகழோவியனை காமாட்சியுடன் சேர்த்து வைப்பதற்காக தகுந்த நேரத்தை எதிர்நோக்கியிருந்தவர், இப்படியொரு சூழலில் அதனை செய்வோமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

துக்கத்தோடு துக்கமாக இந்த துக்கமும் சேர்ந்துக்கொள்ளட்டும். எல்லாம் ஒரே வலியாக மீண்டு வரட்டுமென்றே இன்றைய பொழுதே உண்மையை உடைத்துவிட்டார்.

"நீ கூப்பிட்டா நான் வரணுமா? உம்ம மொவம் பார்க்கவே வெறுப்பா இருக்குதுங். நீங்க இருக்க இடத்துல என்னால இருக்க முடியாதுங்" என்ற திகழோவியன், "இதுக்கு பொறவாவது என்னை விடுங்கங்" என்று அறைக்குள் செல்ல முயல...

"நீ என்ட்ர கூடாலே இருந்தா கல்யாணி எனக்கு செஞ்ச துரோகம் தான் என்ட்ர கண்ணு முன்னாடி சுத்தும். உரிமையில்லாத இடத்துல இல்லாம போறதுதான் எல்லாருக்கும் நல்லது" என்றிருந்தார் கோவிந்தன்.

ஒருநாளும் அவனை நெருங்கி தழுவி பாசம் காண்பித்தது இல்லை. ஆனாலும் அந்த வீட்டில் அவனிருப்பதே கோவிந்தனுக்கு பெரும் ஆறுதல். ஒருவித நிம்மதி. அதற்காக அவனுக்கு கிடைக்க வேண்டிய உறவு உரிமையை தன்னுடனே வைத்துக்கொண்டு கிடைக்கப்பெறாமல் செய்திட அவர் கல்யாணி இல்லையே!

என்ன கூறினால் திகழோவியன் இங்கிருக்கமாட்டானென அறிந்து கூறினார்.

அங்கேயே நின்று திரும்பிய திகழோவியன், அடிப்பட்ட பார்வை ஒன்றை அவரை நோக்கி வீசினான்.

அவரது மனம் துடித்தது உச்சமாய். வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவனறியாது சுகிர்தனுக்கு கண் காட்டினார். புரியாது விழித்தவன் மீண்டும் அவரது பார்வை காட்டிய அழுத்தத்தில் புரிந்துகொண்டவனாக திகழோவியனிடம் அருகில் சென்றான்.

"உடமைப்படாத இடத்துல நீ ஏன்ட்ரா இருக்கோணும். உனக்கு அண்ணன் நானிருக்கேன். அம்மா இருக்காங்கங்" என்றவன், "இனிமேலாவது உன்ற கூட இருக்க பாக்கியத்தை உன்னை பெத்தவளுக்கு கொடு தங்கம்" என்று அவனின் தோளில் கை வைத்திட அவனைக் கட்டிக்கொண்டு மீண்டும் உடைந்து கதறினான் திகழோவியன்.

"அம்மான்னு கூப்பிட வரலன்னாலும் என்ட்ர கண்ணு பார்க்க எங்கூடால இருய்யா. நெருப்புக்குள்ள போற காலம் என்ட்ர நெஞ்சுக்கூடு வேவுற வரத்தை கொடு சாமி" என்று அழுத முகமாக காமாட்சி தனது இரண்டாவது மகனிடம் கையேந்திட,

"போவுமுங்க" என்று வாசல் நோக்கி அடி வைத்த திகழோவியன்,

"இந்த மனுஷன் என்ட்ரகிட்ட கடைசி வரைக்கும் எந்த உரிமையையும் எடுக்கக்கூடாது" என்று ராஜேந்திரனை சுட்டிக் கூறியவன், பிறர் அறியாது, தனது பார்வையை அங்கு கண்ணீர் முகமாக நின்றிருந்த செந்தாழினியின் மீது தீயாய் வீசி வெளியேறியிருந்தான்.

திகழோவியன் பின்னால் அவனது உறவுகள் சென்றிட, ராஜேந்திரனும் பின் சென்றார்.

மணி செந்தாழினியை பார்த்தபடி நின்றிருக்க...

"புள்ளையா உன்ற வண்டியில கூட்டியாந்துரு மணி. ராத்திரியில மூணு பேரும் ஒட்டுக்கா போவ ஆவாது" என்றவர், "தைரியமா இருங்கங். அடிக்கடி வரப்போவ தம்பி நானிருக்கேங்" என்று கோவிந்தன் கையில் அழுத்திக் கொடுத்து தேவகியை கூட்டிக்கொண்டு நாராயணன் புறப்பட்டார்.

திகழோவியன் வீசிச் சென்றப் பார்வையில் உள்ளம் சுட்டவள், அழுகையை அடக்கியபடி... மணி கை பிடித்து வெளியில் அழைத்து வந்ததைக்கூட உணராது நின்றாள் செந்தாழினி.

"இங்க பொறுமைக்கு பெரிய சக்தி இருக்குது செந்தா. அன்னைக்கு அவன் கேட்டுக்கிட்டதுக்காகவாவது வார்த்தையை வீசாம நிதானமா இருந்திருக்கலாம். பொறுமையா இருந்தா மட்டும் எல்லாம் மாறிப்போவுமா கேட்டியே... அவனோட பொறுமைக்கு எவ்ளோ பெரிய மாத்தம் அவன் வாழ்க்கையில நடந்திருக்குப் பார்த்தியா? இந்த மாத்தம் கூட உங்க காதலுக்காகத்தான்னு தோணுது. ஆனாலும் நீ பேசுன வார்த்தை வேதனையில அவன் சொல்லிக்கேட்ட எனக்கே அம்புட்டு கோவம் வந்துச்சு. அவன் எப்படி தாங்கியிருப்பான். இப்பவும் அவனா சொல்றதா நெனச்சிக்க... உண்மைன்னு நெனச்சது பொய்யாகிப்போச்சு, அவன்கிட்ட மன்னிப்பை கேட்போம்ன்னு முன்ன போய் நிக்காத. பொறுமையா இரு. நீ பேசின வார்த்தையோட வீரியத்தை அவன் மனசிலிருந்து அந்த காலமே ஆத்தும். அதுவரைக்கும் பொறுமையா இரு. உம்மட காதலுக்காக அந்த காதலே இறங்கி வரும்" என்றான்.

"அன்னைக்கு வேணுமுன்னுதான் பேசுனேன் மணிண்ணா" என்றவள் தன்னுடைய எண்ணத்தை அழுகையோடு பகிர்ந்திருக்க...

"அவன் நல்லாயிருக்கணும் நீ நெனச்சது தப்பில்லை செந்தா. ஆனா சொன்ன வார்த்தையில கவனமிருந்திருக்கணுங்கிறேன். இருக்குன்னது இல்லைன்னு ஆகிப்போனப் பொறவும் அவன்கிட்ட உன்னால நெருங்க முடியாமப்போச்சு பார்த்தியா?" என்ற மணி... "அவனுக்காக வெயிட் பண்ணமாட்டியா?" என அவளைத் தேற்றி வீடு வந்து சேர்த்திருந்தான்.

நாட்கள் விரைந்திட, திகழோவியன் அனைத்தும் ஏற்க பழகி ஓரளவு தனது வீடு என்ற நிலையில் நடமாடத் துவங்கிட, தற்போது அவனுள் பெரும் பாரமாய் குடிகொண்டிருந்தது அவனது காதல்.

செந்தாழினி தன்னிடம் கூறியதை திகழோவியனிடம் சில நாட்களில் மணி சொல்லியிருந்தான். அவளின் மனம் தெரிந்த பின்னராவது அந்த நாளின் அவள்மீதான கோபத்தை அவன் விடுப்பானென நினைத்தான்.

ஆனால் அவளின் காரணம் புரிந்தாலும், இன்றளவிலும் அவள் அன்று தங்கள் காதல் அசிங்கமென்று குறிப்பிட்டதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

கோபத்தோடு எட்டியே நிற்கின்றான்.

தன்னை அவள் நெருங்கி வர முயற்சி செய்திட, அவனது கோபம் பல மடங்காகியது தான் மிச்சம்.

காதல் நிறைந்தும் அவள் அசிங்கமென்று குறிப்பிட்ட அந்த காதலை அவள் யாசித்தாலும் திருப்பிக்கொடுக்கக் கூடாதென வீம்பு பிடித்து இருந்தவனால், இரவில் தன்னிடம் அழுது கெஞ்சியவளின் முகம் கண்டு அந்த வீம்பை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

இரவு முழுக்க அவளின் கண்ணீர் முகமும், கெஞ்சலும் அவனின் மனதை சற்று இளகச்செய்திருக்க,

காலை, அவளிடம் மனம்விட்டு பேசினாலே ஒரு சுமூக முடிவுக்கு வரலாமென நினைத்துக்கொண்டு வந்தவனிடம் தான் பெண் பார்க்க செல்ல வேண்டுமெனக் கூறி சண்டையை உருவாக்கியிருந்தார் ராஜேந்திரன்.

நடந்த வாதத்தில் திகழோவியன் தனது காதல் மூழ்க அவர்தான் காரணமெனக் கூறி, தன்னவளின் பெயரை சொல்ல முற்பட, தனக்காக அவள் இப்படியொன்றை செய்யத் துணிவாளென திகழோவியன் சற்றும் நினைக்கவில்லை.

தான் தடுக்காவிட்டால், நாராயணன் பேச்சுக்கு கட்டுப்பட்டு திருமணத்திற்கு உடன்படுவாள் என்றே திகழோவியன் நினைத்திருக்க, அவளோ பெண் பார்க்கும் படலத்தை நிறுத்த தன்னையே காயப்படுத்திக்கொள்வாளென கொஞ்சமும் நினைக்கவில்லை.

சோகங்களின் நினைவலை மெல்ல கலைந்திட, அவனது மனமும் தெளிந்திருந்தது.

எதுவாக இருப்பினும் காதல் மன்னிக்கவே முயன்றிடும். தான் இறங்கி செல்வதால் தங்களது காதல் உயிர்த்திடுமென்றால் அதில் தவறில்லை எனும் எண்ணம் அக்கணம் அவனிடம்.

'அவளின் எல்லாம் தனக்காகத்தானே! அவளை மன்னிக்க முடியவில்லையென்றால் எனக்கென்ன அவள்மீது அப்படியொரு காதல்!'


வெகு நேரம் நிகழ் மறந்து திண்ணையில் அமர்ந்திருந்தவன், அவளின் நிலையறிய மருத்துவமனை நோக்கிச் சென்றிருந்தான்.

நெஞ்சில் உயிர் நிறையும்...
 
Last edited:
Top Bottom