உந்தன் நெஞ்சில் உயிராக 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
125
33
Chennai
உந்தன் உயிராக 5

திகழோவியன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். அவனின் அருகில் அவன் பக்கமாகத் திரும்பி படுத்திருந்த காமாட்சியின் கரம் அவனது மார்பில் மென்மையாய் தட்டிக் கொண்டிருக்க, அந்த இருள் வெளிச்சத்தில் மகனின் முகத்தையே கனிவுடன் பார்த்திருந்தார்.

இப்படியொரு தருணம் அவருக்கு அவனிடத்தில் கிடைக்காத ஒன்றல்லவா!

நெஞ்சம் நெகிழ, கிடைத்திடாத வரம் கிட்டிய மகிழ்வில் காமாட்சி விழித்திருந்தார்.

திகழிடம் மென் அசைவு தெரிந்திட...

எழுந்தமர்ந்த காமாட்சி, "தூங்கு கண்ணு... தூங்கு" என்று தட்டிக் கொடுத்தவராக, முன் நெற்றியில் தவழும் கேசத்தை கோதி கொடுத்தார்.

திகழ் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிட... எழுந்து பால்கனி பக்கம் சென்று மூத்த மகனுக்கு அழைத்தார்.

"சுகிரு..."

அன்னை இந்நேரத்தில் அழைத்தது சிறிய படபடப்பைக் கொடுத்திட, சற்று முன்னர் தான் சுவிதா வீட்டில் நடந்ததைக் கூறியிருந்ததால்,

"அம்மா... என்னங்ம்மா? திகழ்... திகழு ஓகேதானுங்க இப்போ?" என்றான்.

"மனசு நெறஞ்சி கெடக்கு சுகிர்தா" என்று கரகரத்த காமாட்சி, "இன்னைக்கு அவன் வாய் நிறைய அம்மான்னு கூப்பிட்டான்! பெத்த வயிறு குளிர்ந்துப்போச்சுப்பா" என்றார்.

"என்... என் பக்கத்துல படுக்க வச்சு தூங்க வச்சேன் சுகிர்தா. அவனை மடியில போட்டு சீராட்டுனதில்லை. அந்த கவலை உள்ளுக்குள்ள கொடுத்த வேதனையாட்டுக்கு" என்று அடைத்த தொண்டையை சரி செய்தவர், "இன்னைக்கு உன்ற ஐயன் ஒரு விஷயம் பேசினாரு. திகழு வேணாம் சொன்னாலும் எனக்கு அது சரின்னுப்படுது" என்றார்.

"கல்யாணம் செய்யணுமா அவனுக்கு?" என்ற சுகிர்தன், "அவன் ஏன் வேணாம் சொன்னான் தெரியலங்களேங்ம்மா" என்றான்.

"நீதான் கேட்கோணும் சுகிர்தா" என்ற காமாட்சி, "உனக்கு எப்போ வேலை முடியுது" எனக் கேட்டார்.

"நாளைக்கு வந்திடுவேனுங்க" என்றவன், "உங்களுக்கு தூக்கம் வரலையாங்க?" என்றான்.

"என்னவோ அவன் மொவத்தை பார்த்துக்கிட்டே இருக்கோணும் தோணுது. இந்த சாமம் விடியாலாகவேக் கூடாதுன்னு ஆசைப்படுறேன் கண்ணு" என்றார் காமாட்சி.

சுகிர்தனனுக்கு காமாட்சியின் மனம் புரியத்தான் செய்தது. முகம் பார்த்து பேசவே விலகி நின்றவன், அவனை அரவணைக்கும் வாய்ப்பைக் கொடுத்திட அன்னையாய் அவர்கொள்ளும் மகிழ்வு எத்தகையதாக இருக்கும். ஈடு இணையற்றது.

"இனிமே சின்ன கன்னுக்குட்டி போதுங்களே உங்களுக்கு" என்ற சுகிர்தனனிடம் இல்லாத பொறாமை வார்த்தையில் மட்டுமே இருந்தது.

"ஆமா... இருக்காதா பின்ன" என்று வேகமாக சொல்ல, "உன்னைய ஆசை தீரமட்டும் வளர்த்துப்புட்டேன். அவனை வளக்குற கொடுப்பினை எனக்கு கிடைக்கலையே! இனிமேலு என்ட்ர இளைய மவன் பின்னாடியே ஓட வேண்டியதுதான்" என்றார்.

"ஹ்ம்ம்... ரொம்பத்தானுங்க சின்ன மவன் மேல பாசம் பொங்குதுங். ஒரு ஓரத்துல என்னையும் கவனிச்சுக்கோங்" என்ற சுகிர்தன், மேலும் சிறிது நேரம் அவருடன் பேசி, அவர் இயல்புக்கு திரும்பிய பின்னர் தான் அழைப்பை வைத்தான்.

*******************

அந்த இரவு நேரத்திலும் செந்தாழினியின் வீட்டில் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.

நாராயணன் இருக்கையில் அமர்ந்திருக்க, தேவகி முற்றத்து தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.

நடுநாயகமாக செந்தாழினி சுருங்கிய வதனத்துடன் நின்றிருந்தாள்.

"இப்போ முடிவாட்டு என்ன சொல்ற நீ?" அதுவரையிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்தவராக நாராயணன் சத்தமாகக் கேட்டிருந்தார்.

"எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்னங்ப்பா அவசரம். வேணாமுங்க" என்ற செந்தாழினியின் குரல் மெல்ல ஒலித்தாலும் வார்த்தைகளில் அதீத அழுத்தம்.

"என்ன அவசரமா வயசு இருபத்தி அஞ்சு முடியப்போவுது. இருபத்தி மூணுலே வரன் வந்தது பண்ணிப்புடனும் சொன்னதுக்கு, அப்பவும் இப்படித்தான் ஏதேதோ இல்லாத பொல்லாத காரணம் சொல்லி தட்டிக்கழிச்ச. இதுக்குமேல கட்டிக்கொடுக்காம வச்சிருந்தாக்கா ஊர்ல அவனவனும் பொம்பளை புள்ளைக்கு கல்யாணம் பண்ண வக்கில்லாத வெறும்பயன்னு என்னைய பேசுவானுங்க" என்ற நாராயணன், "மேல்படிப்பு படிக்கணும் சொன்ன. சரின்னு சொன்னேன். இப்போ கல்யாணம் வேணாம்ங்க, ரெண்டு வருஷம் உங்கக்கூட இருந்துக்கிறேனுங்க சொன்ன, அதுக்கும் சரின்னு சொன்னேன். இப்படி உன்ற பேச்சுக்கெல்லாத்தும் மண்டைய ஆட்டுனதும் என்னைய மொத்தமா ஆட்டி வைக்கலாம் பாக்குறியா" என்றார்.

"அய்யோ... அப்படி இல்லிங்ப்பா" என்ற செந்தாழினி, "விருப்பமில்லங்..." என்று கண்ணிலிருந்து வழிந்த நீரை புறங்கை கொண்டு துடைத்திட்டாள்.

"அழுவுறதால எடுத்த பேச்சு வார்த்தையை நிறுத்திப்புடுவேன்னு நினைக்காத செந்தா. மனச கல்யாணத்துக்கு தேத்த முயற்சி பண்ணு" என்றவர், "விருப்பமில்லங்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லு" என்றார்.

'நான் திகழை விரும்புறேனுங்க' என கத்தி சொல்ல வேண்டுமென அவளின் மனம் உந்தித்தள்ள, மூளையோ அவளை அடக்கி வைத்தது.

அவள் மீதிருக்கும் வெறுப்புக்கு, நிச்சயம் காதலை அவன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அதோடு நாராயணன், ராஜேந்திரன் இருவரிடையேயும் இருக்கும் காரணமற்ற பகை... தன்னுடைய காதல் வெளியில் தெரிவதும் வீண் பிரச்சனைகளுக்கே வழி வகுக்குமென வாய் திறக்காது நின்றிருந்தாள்.

"படிச்ச புள்ள நீ! டீச்சராவும் இருக்க. பசங்களுக்கு நல்லது கெட்டது சொல்லித்தர உனக்கு நான் எதுவும் சொல்லித்தரவேணாம். புரிஞ்சு நடந்துக்க" என்ற நாராயணன், "நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ உம்முன்னே இருந்தாக்கா என்ன அர்த்தம். உன்ற பங்குக்கு நீயும் நாலு புத்திமதி சொல்லேன் தேவகி" என மனைவியிடம் கூறினார்.

"உங்கட பேச்சுக்கே சட்டமா நிக்கிறா. இதுல நானென்னத்தங் சொல்றது" என்ற தேவகி, "அதெல்லாம் அவள் சம்மதிப்பாங்க" என்றார்.

"என்னவோ சொல்ற நீ" என்று துண்டை உதறி தோளில் போட்டவராக இருக்கையை விட்டு எழுந்த நாராயணன், "உம்மட மேல இருக்க நம்பிக்கையிலதான் நாளன்னைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லியிருக்கேன் கண்ணு. பள்ளிக்கூடத்துல நாளைக்கு லீவு சொல்லிப்புட்டு வந்துப்புடு" என்றவராக, "போய் தூங்குங்க" என அறைக்குள் சென்றுவிட்டார்.

நாராயணன் தலை மறைந்ததும், வேகமாக தேவகியின் முன் மண்டியிட்டு அமர்ந்த செந்தாழினி,

"எனக்கு இந்த கல்யாணம் வேணாமுங்ம்மா. ஐயன் கிட்ட பேசுங்" என்று அவரின் கரத்தைப் பிடித்துக்கொண்டு மன்றாடினாள்.

"என்னன்னு காரணம் சொல்லு பேசறேன். சும்மா நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு அப்படிங்கிற கணக்கா வேணாம் வேணாம்னு சொன்னதே சொல்லிக்கிட்டு இருந்தா நானென்னன்னு சொல்றது" என்ற தேவகி, "அம்மாகிட்ட எதையும் மறைக்காம சொல்லோணும்" என்றார்.

"என்னதுங்ம்மா...?"

"யாரையும் விரும்புறியா சாமி?"

"ம்ம்மா..." உதடு துடிக்க கண்ணில் நீர் நிறைந்தது. வேகமாக எழுந்து ஓடிவிட்டாள்.

'கேட்கக்கூடாததை கேட்டு மகளை வருந்தச் செய்திட்டோமோ' என நினைத்த தேவகி, "இவளுக்கு அவ்வளவுக்கு தைரியமிருக்காது" என சொல்லியபடி எழுந்துச் சென்றார்.

தேவகிக்குமே பையன் வீட்டிலிருந்து வரும் தகவல் சிறிது முன்தான் நாராயணன் சொல்லியிருந்தார்.

நேற்றுதான் மகளின் திருமணத்தைப்பற்றி பேசியிருந்தார். அதற்குள் எப்படியென கேட்க துருதுருத்த வாயினை நாராயணனின் அதட்டலுக்கு பயந்தே தேவகி கேட்டுக்கொள்ளவில்லை.

என்னதான் கருத்துக்களை சொல்லென்றாலும் முடிவு அவருடையதுதான். அதோடு முடிவெடுத்துவிட்டு வந்து பேசுபவரிடம் என்ன பேசுவதென தேவகி அமைதியாக இருந்துவிட்டார். எப்படியும் கணவர் மகளுக்கு நல்லதுதான் செய்வார் எனும் நம்பிக்கையில்.

நாராயணன் சொல்லியவரை பார்த்திருக்கும் பையன் நல்லவனாகத் தெரிய, தேவகிக்குமே மகள் இதற்கு சம்மதிக்க வேண்டுமென்ற எண்ணம் தான். அவரின் விருப்பம் திகழாக இருந்தாலும் அது நடக்க சாத்தியமில்லை என்பதால், கிடைத்திருக்கும் நல்ல வரன் தகைய வேண்டுமென நினைத்தார்.

அறைக்குள் வந்து கதவினை வேகமாக மூடி தாழிட்ட செந்தாழினி, வாய் மீது இரு கைகளையும் வைத்து பொத்தியவளாக சத்தமின்றி கதறி அழுதாள்.

அலைபேசியை எடுத்தவள் திகழோவியனுக்கு அழைக்க நினைத்து அவனது எண்ணை எடுக்க... அடுத்த கணம் வேண்டாமென அலைபேசியை மெத்தையில் தூக்கிப்போட்டாள்.

"எடுக்கமாட்டாங்க" என்றவள், மீண்டும் அலைபேசியை கையிலெடுத்து சுகிர்தனனுக்கு அழைத்தாள்.

அப்போதுதான் காமாட்சியிடம் பேசிவிட்டு சுகிர்தன் படுக்கச் சென்றான்.

அருகருகேயான வீடு தான். இருப்பினும் சுகிர்தனனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை செந்தாழினி. காரணம் தந்தையரின் அரத்தமற்ற பகை. காமாட்சியுடன் பழக்கமென்பதால், அதனை சுகிர்தனனும் அறிந்திருந்தமையால் பார்க்க நேரிட்டால் பரஸ்பர புன்னகையை காட்டிடுவர்.

எப்படியும் தானென்றால் சுகிர்தன் தவிர்க்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் அழைப்பு விடுத்திட்டாள். சற்றும் யோசிக்கவில்லை.

நிதன்யாவின் வகுப்பு ஆசிரியை என்பதால், குழந்தையின் தந்தை என்ற அடிப்படையில் சுகிர்தனின் அலைபேசி எண் அவளிடமிருந்தது.

அந்த நேரத்தில் செந்தாழினியின் எண் "நிதன்யா கிளாஸ் மிஸ்" என்ற பெயரோடு திரை ஒளிர சுகிர்தன் யோசனையானான்.

நிதன்யா குறித்துப் பேச்சென்றால் சுவிதாவிற்கு தான் அழைப்பு வரும். அதிலும் இருவரும் நல்ல பழக்கம் வேறு. அப்படியிருக்கையில் தனக்கு இந்நேரத்தில் எதற்கென யோசனையோடு அழைப்பை ஏற்றிருந்தான். முடியும் தருவாயில்.

"ஹலோ... ஹலோ நான் செந்தாழினி பேசுறேனுங்" என்று அவன் எடுத்து பேசும் முன்பு தன்னை சொல்லியிருந்தாள்.

"தெரியுதுங்க... சொல்லுங்" என்ற சுகிர்தன், "நிதன்யா கிளாஸ்ல வம்பு ஏதும் பண்ணிப்போட்டாளாங்?" எனக் கேட்டாள்.

"இல்லை இல்லைங்" என்ற செந்தாழினியின் குரலை சுகிர்தன் அப்போதுதான் தெளிவாக உள்வாங்கியிருந்தான்.

பதற்றமும், தவிப்புமாக.

"ஏதும் பிரச்சனையாம்மா?" அவளின் குரல் கமறல் அவனையும் பதற்றமடையச் செய்தது.

"உங்கடகிட்ட ஒரு விஷயம் சொல்லணுமுங்" என்ற செந்தாழினி மூச்சினை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்துவதை அவனால் உணர முடிந்தது.

"எனக்கு வீட்ல கல்யாணம் பண்ண முடிவாயிருக்குங்க" என்றவள் முடிக்கும் முன்பு, 'இவள் இதையேன் என்கிட்ட சொல்லணும்' நினைத்திருந்தான் சுகிர்தன்.

"உங்கடகிட்ட சொல்ல காரணமிருக்குங்." அவனின் எண்ணவோட்டம் புரிந்தவளாக அவள் சொல்லியிருக்க...

"என்ன காரணம்?" எனக் கேட்டான்.

"உங்கட தம்பியை நான் விரும்புறேனுங்க. அவங்களும் என்னைய விரும்புறாங்க. ஆனா இப்போ மூணு வருஷத்துக்கு மேல நாங்க பேசிக்கிறதுக்கூட இல்லைங். தப்பெல்லாம் என்ட்ர மேலதான். அவங்க கோவம் போவ என்ன செய்யணும் தெரியலங்ளே" என்றாள்.

அவள் சொல்வதை சுகிர்தனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"கோவமா இருந்தாலும் என்ட்ர கழுத்துல தாலியை கட்டிப்போட்டு கோவமா இருந்துக்க சொல்லுங். அவங்க இல்லாம முடியாதுங்கங். இதை அவங்ககிட்டவே சொல்லியிருக்கலாம். ஆனா நான் போன் போட்டு அவங்க எடுக்கமாட்டாங்கங்" என்றாள்.

சுகிர்தனனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

செந்தாழினி சொல்வதைப் பார்த்தால், இப்போது திகழோவியனுக்கு அவள் மீது காதல் இருக்குமா என்பதே சந்தேகமாகத் தோன்றியது.

"அவங்களுக்கு இப்போ என்ட்ர மேல காதலிருக்கா தெரியாதுங். ஆனா எம்மடத் தவிர வேற யாரையும் அவங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கங்" என்று அத்தனை உறுதியாகக் கூறினாள்.

அக்கணம், "அவன் கல்யாணம் வேணாம் சொல்லிட்டான் கண்ணு" என்று காமாட்சி சொல்லியது சுகிர்தன் நினைவுக்கு வந்தது.

'கல்யாணம் வேணாம் சொன்னதுக்கு இதுதான் காரணமா?' என நினைத்த சுகிர்தன், செந்தாழினி தன்னுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறாள் என்பதை உணர்ந்து...

"இதுல நானென்ன செய்ய இருக்குது" என்றான்.

"உங்கட தம்பி காலத்துக்கும் சந்தோஷமா இருக்கணும் நினைச்சா என்னை கட்டி வைங்கங்" என்றாள்.

"ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தையே இல்லை. நம்மட அய்யங்களை மீறி இதெப்படி நடக்கும்?" என்று கேட்டான்.

"வூட்டை விட்டு வரணமுன்னாலும் எனக்கு சம்மதமுங்" என்றவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

"இப்படி யாருமில்லாம திருட்டுத்தனமா வேணாம் ஆழினி. வீட்டை விட்டு வரதுலாம் தப்பு" என அன்று திகழோவியன் சொல்லியதும்,

"உங்களை இழந்திடுவனோன்னு பயமா இருக்குதுங் மாமா. அதுவும் இப்போ தெரிஞ்ச நம்ம" என்று சொல்ல முடியாது நிறுத்திய அவளின் பேச்சும் மனதில் நின்றது.

வீட்டை விட்டு வரவும் சம்மதமென அவள் சொல்லியதில் சுகிர்தன் அதிர்வுக்குள்ளாகினான்.

"என்னம்மா சொல்ற நீ?"

"வேற வழி இல்லைங். என்ட்ர ஐயனை என்னால இதுக்குமேல சமாளிக்க முடியலங்க" என்றாள்.

"இப்போ என்ட்ரகிட்ட சொல்றதை உன்ற ஐயன் கிட்ட சொல்ல வேண்டியதுதான?"

"சொல்ல முடியலங். நான் சொல்லி உங்கட தம்பி இல்லைன்னு சொல்லிட்டா?"

"உனக்கே அவன் ஒத்துக்கமாட்டான் தெரியுதே! அப்புறம் என்னத்துக்கு இந்த முடிவு" என்ற சுகிர்தன், "வெறுப்பு இருக்கும்போது ஒண்ணு சேர்ந்தா வாழ்க்கை நல்லாயிருக்குமா? நீ உன்ற அய்யன் சொல்ற பையனையே கட்டிக்கிறதுதான் சரின்னுப்படுது" என்றான்.

"யாரை கட்டிக்கிட்டாலும் நான் சந்தோஷமா இறுக்கமாட்டேனுங். ஆனா உங்கட தம்பியை கட்டிக்கிட்டா நிம்மதியா இருப்பேனுங். உதவி பண்ணுங்" என்றாள்.

அவளின் நிம்மதி எனும் வார்த்தையில் சுகிர்தன் அவள் பக்கம் நிற்க முடிவு செய்திருந்தான்.

"நான் திகழுகிட்ட பேசிட்டு சொல்றேன். அப்புறம் ஒரு முடிவு எடுப்போம்" என்றான்.

"கண்டிப்பா அவங்க நான் வேணாந்தான் சொல்லுவாங்க." பட்டென்று சொல்லியிருந்தாள்.

"அவன் மனசுலயும் என்னயிருக்குன்னு பார்க்கணுமே" என்ற சுகிர்தன், "நான் கரூர்ல இருக்கேன். நாளைக்கு சாயந்திரம் வந்துப்புடுவேன். பார்ப்போம்" எனக்கூறி வைத்திட்டான்.

இப்போதுதான் தனது உடன் பிறந்தவன் வாழ்வில் அனைத்தும் சரியாகிவிட்டதென நினைத்திருக்க, இல்லை அவன் அனுபவிக்க இன்னும் இருக்கிறதெனும் விதமாக தொடங்கியிருக்கிறது என்று வருத்தமாக நினைத்த சுகிர்தன் பெருமூச்சோடு தலையை உலுக்கிக்கொண்டான்.

"அப்படியென்ன பிரச்சினையா இருக்கும்?" என்று யோசித்த சுகிர்தன் நிச்சயம் இருவரும் பிரிந்திட காரணமான ஒன்று இதுவாக இருக்குமென்று நினைத்திருக்கக்கூட மாட்டான்.

திகழோவியனின் வாழ்வு மட்டுமல்ல, அவனது காதலும் வலி சுமந்து நிற்பதற்கு ராஜேந்திரன் மட்டுமே காரணம். அவர் செய்த செயலே காரணம். இதனை ராஜேந்திரனும் அறிந்திருக்கமாட்டார்.

"மூணு வருஷத்துக்கு முன்னவே லவ்வுன்னா... காலேஜ் படிக்கும்போதா இருக்கும்" என்று சொல்லிக்கொண்ட சுகிர்தன், நேரத்தைப் பார்த்தவனாக, "நாளைக்கு ஊருக்கு போனதும் மொத வேலை அவன்கிட்ட பேசுறதுதான்" என்றவனாக படுக்கையில் விழுந்தான்.

நெஞ்சில் உயிர் நிறையும்...
 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
காமு பீலிங் புரிஞ்சிக்க முடியுது.....
ராஜன் ரொம்ப மோசம்