உந்தன் நெஞ்சில் உயிராக 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
125
33
Chennai
உந்தன் உயிராக 6

செந்தாழினிக்கு அன்றைய நாள் முழுக்க ஒருவித படபடப்புடன் தான் கழிந்தது.

தான் பேசியதற்கு பின்பு சுகிர்தன் தனக்கு உதவி செய்வானென்று அத்தனை நம்பிக்கையாக இருந்தவளுக்கு, மாலை பள்ளி முடித்து வந்ததும்,

"வேலை சம்மந்தமா கரூர் போன பெரியவன் இன்னும் கிளம்பவே இல்லை. ராத்திரிக்குத்தான் கிளம்புரான்" என்று தன்னுடைய வீட்டுக்குப் பின்னால் மதில் சுவற்றை தடையாகக் கொண்டு வழக்கம்போல் கதை பேசிக்கொண்டிருந்த தேவகியிடம் காமாட்சி சொல்லியதைக் கேட்டதும், நாளை என்ன நடக்குமோ எனும் பயம் நெஞ்சத்தை கவ்விப் பிடித்தது.

வேகமாக முகம் கழுவி வந்து ஆடை மாற்றியவள் சுகிர்தனனுக்கு அழைத்துவிட்டாள்.

"நீங்க வரலையாங் இன்னும்" என்றவள் அதீத பதற்றத்தை சுகிர்தன் உணர்வதாய்.

"வேலை சட்டுன்னு முடிஞ்சிப்போவும், கிளம்பிப்புடுவோன்னு இருந்தேன். கொஞ்சம் இழுத்திடுச்சு" என்ற சுகிர்தன், "ராத்திரிக்கு கெளம்பி கோழிக்கூப்பிட வூடு வந்துடுவேன். இது போன்லயும் பேசுற விசயமில்லையே. வந்ததும் திகழுகிட்ட பேசிப்போட்டு உனக்கு பதில் சொல்றேன்" என்றான்.

"அய்யோ என் நிலைமை புரியலையாங் உங்களுக்கு" என்றவள், "நாளைக்கு காலையிலே என்ட்ர அப்பா பையன் வூட்டு ஆளுக வந்திப்புடுவாங்க சொல்லியிருக்காங்கங்" என்றாள்.

"பொண்ணுதான... சும்மா வந்து பார்த்துப்போட்டு போவட்டும். என்னைய நம்பும்மா. நான் பேசுறேன்" என்றான்.

அதற்கு மேல் அவனிடத்தில் தான் அழுத்தம் கொடுக்க முடியாதென நினைத்தவள் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்றாள்.

அங்கிருந்து பார்த்தால் திகழோவியனின் அறை நன்கு தெரியும்.

அவனது அறை பால்கனியின் கதவு மூடியிருக்க, அவன் வீட்டில் இல்லை என்பதை கண்டுகொண்டாள்.

சிறிது நேரம் மாடியிலேயே அங்குமிங்கும் நடந்தவள், மூச்சினை ஆழ்ந்து இழுத்து மணிக்கு அழைத்தாள்.

அவளின் அழைப்பை நம்ப முடியாது ஏற்றிருந்தான் அவன்.

"என்ன எங்க நினைப்பு?" மணி எடுத்ததும் அவ்வாறு கேட்க, அவனிடம் வாதிடும் மனமில்லாததால், "நான் அவங்ககிட்ட பேசணும் மணி" என்றிருந்தாள்.

மணி இருவருக்கும் பொதுவான நண்பன் மட்டுமில்லாது, இருவருக்கிடையே நடைபெற்ற அனைத்தும் அறிந்தவன்.

அவள் யாரை குறிப்பிடுகிறாள் என்பது புரிந்த போதும்,

"அவங்கன்னா எவங்கங்?" என்றான்.

"மணி ப்ளீஸ்..." அவளின் மன்றாடும் குரலில் சீண்டுவதை நிறுத்தி,

"அவன் நெம்பர்தான் உன்கிட்ட இருக்குமே. போன் போட்டு பேச வேண்டியதுதான" என்றான்.

"நான் பண்ணா எடுக்கமாட்டாங்க மணி. நீ உன் போன்ல போட்டு மெர்ஜ் பண்ணு" என்றாள்.

"எதுக்கு அவன் என்னைய ஓடவிட்டு ஒதைக்கவா?" என்ற மணி, "என்ன சங்கட்டம்?" எனக் கேட்டான்.

"மணி... ப்ளிஸ்."

"நான் போடுறேன். அவன் பேசுனா சரி" என்றவன் திகழோவியனுக்கு அழைத்தான்.

தோட்டத்தில் வேலையாக இருந்தவன் அழைப்பு முடியும் தருவாயில் தான் எடுத்திருந்தான்.

"உன்றகிட்ட ஒரு ஆள் பேசணுமாம் டா" என்ற மணி, திகழ் யாரெனக் கேட்கும் முன்பு அழைப்புகளை இணைத்து, "வந்துட்டான் பேசிக்க" என சொல்லி, "நான் என்னை ம்யூட் போட்டுக்கிறேன்" என்று சொன்னதை செய்துமிருந்தான்.

"யாரு?" என்ற திகழின் ஓசை அடங்கும் முன்பு,

"ஓவி" என்ற செந்தாழினியின் குரல் ஒலிக்க பட்டென்று இணைப்பைத் துண்டித்திருந்தான்.

மொத்தமாக சோர்ந்துபோனாள் செந்தாழினி.

கண்ணில் நீர் இறங்க மொட்டை மாடியில் நின்றிருந்தவள் அப்படியே தரையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

நிலவு முளைத்து வெகு நேரமாகியும் அவளிடம் அசைவில்லை. கீழிருந்து உணவு நேரத்திற்கு தேவகி அழைத்திட...

"பசியில்லங்ம்மா" என்றவள், தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

மெத்தையில் சுருண்டு படுத்தவளுக்கு, முன்பு அவனிடமிருந்து திகட்ட திகட்ட கிடைத்த காதலின் நினைவுகள் பெரும் பாரமாய் வலி கொடுத்தது.

"ஒரு வாய்ப்பு கொடுங்க ஓவி" என்று வாய்விட்டுக் கேட்டுக்கொண்டவளுக்கு, அவனின் காதல் தனக்கு மீண்டும் கிடைக்கவே கிடைக்காதோ என்கிற பயம் இக்கணம் அதீதமாய் அதிகரிக்கத் துவங்கியது.

"லவ் யூ மாமா... லவ் யூ" என்று சொல்லிக்கொண்டவள், அவனின் அறையில் விளக்கு ஒளிர்கிறதா என்று பார்த்தாள்.

திரை நீங்கியிருக்க இரவு விளக்கின் வெளிச்சம் சன்னலின் கண்ணாடி கதவு வழி பிரதிபலித்தது.

இம்முறை நேரடியாக அவனது எண்ணிற்கே அழைத்துவிட்டாள்.

ஒன்று, இரண்டு, மூன்றென... அவளின் அழைப்புகள் நீண்டுகொண்டே சென்றது.

திகழோவியன் எடுப்பதாக இல்லை.

செந்தாழினியும் விடுவதாக இல்லை.

அவனின் கோபம் மறைய அவள் விலகி நின்ற கால அவகாசம் போதுமென நினைத்துவிட்டாள் போலும்.

விடிந்தால் தனது வாழ்வின் தடம் மாறிவிடுமென நினைத்தவள் இன்றைய இரவில் அவனின் மன்னிப்பை பெற்றிட வேண்டுமென உறுதி கொண்டாள்.

மீண்டும் அவனுடன் காதலாய் நாட்கள் நகர்ந்திட வேண்டுமென பேராசை சுமந்தாள்.

"உங்ககிட்ட பேசணுங் ஓவி. ஒருமுறை கால் அட்டென்ட் பண்ணுங்கங். எனக்கு இந்த சிக்கலை எப்படி ஹேண்டில் பண்ணனும் கூட தெரியலங்." அவன் எடுக்கவே போறதில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.

அதுவும் பார்க்கப்படாமால் கிடப்பில் கிடந்தது.

நேராகச் சென்று பார்த்துவிடுவோமென முடிவு செய்தாள்.

அதன்படி தன்னுடைய பெற்றோர் உறங்குவதற்காகவும், திகழோவியனின் வீட்டில் மின்விளக்குகள் அணைக்கப்படுவதற்காகவும் காத்திருந்தாள்.

சரியான நேரத்தில் தன்னுடைய வீட்டின் பின் கதவை திறந்து கொண்டு, வயல் வழியாக திகழோவியனின் வீட்டு பின் வாசலில் நின்றவள், சுவிதாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

அப்போதுதான், தான் கிளம்பிவிட்ட தகவலை மனைவிக்கு சொல்வதற்காக அழைத்த சுகிர்தன், மனைவியிடம் செந்தாழினி அழைத்தது பேசியதென மேலோட்டமாக தெரிவித்து வைத்திருந்தான்.

உடனடியாக செந்தாழினியிடமிருந்து அழைப்பு வர, வேகமாக ஏற்றிருந்தாள்.

"நான் உங்க வீட்டு பொறத்தால பக்கம் நிக்கிறேங்க்கா. கதவு திறங்க" என்று சொல்லி வைத்திட்டாள்.

சுவிதாவிற்கு பயந்து வந்தது.

"இந்த நேரத்தில் வீட்டுக்கே வந்துட்டாள். மாமாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான். எதுக்கு வந்திருக்கான்னு தெரியலையே. அதான் மாமா பேசறேன் சொல்லியிருக்காங்களே" என்று புலம்பியவளாக அரவமின்றி மெல்ல சென்று, சத்தமின்றி கதவினை திறந்திருந்தாள்.

"என்ன செந்தா இந்த நேரம் இக்கட்டிக்கு?"

"என் வாழ்க்கை பிரச்சினைக்கா..." என்றவள், இருந்த இடைவெளியில் சுவிதாவை உரசியபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

சுவிதா நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.

"எதுவாயிருந்தாலும் கருக்கல் கலைஞ்சது பேசிக்கலாம் செந்தா. மேல மேல சிக்கலாவப்போவுது" என்று அவளை தடுக்கப் பார்த்தாள்.

"என் வாழ்க்கையைவிட எதுவும் பெரிய சிக்கல் இல்லைங்க்கா" என்றவள், "மெத்தைக்கு படி எங்கிருக்குங்" என்று அவ்விருட்டில் பார்வையை சுழற்றினாள்.

அவ்வீட்டிற்கு அவள் வந்ததே இல்லை. உள்ளே எப்படியிருக்கும் என்பதை முதல்முறையாக அப்போதுதான் இருளில் கண்களுக்கு பழகிய வெளிச்சத்தில் காண்கிறாள்.

"இது சரியில்ல செந்தா" என்று அவளுக்கு முன் வந்து சுவிதா நிற்க,

"படி இங்கிருக்கே" என்றவளாக, "பேசிட்டு வந்திடுவேனுங்க. பதபதக்காம போய் தூங்குங். பாப்பா தனியா படுத்திருக்கால்ள" என்று படியில் அடி வைத்திட்டாள்.

சுவிதா வேகமாக அவளின் கரத்தினைப் பற்றி தடுத்து நிறுத்த,

"யாரும் வந்திடாம நிக்கிறீங்களாக்கும்" என்றவளாக சுவிதாவின் கையை எடுத்துவிட்டவளாக வேகமாக படியேறி மறைந்திருந்தாள்.

"நான் நடவையே திறந்திருக்கக் கூடாது" என்று தலையில் கொட்டிக்கொண்டவள், சுகிர்தனனுக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தாள்.

"இதுவும் நல்லதுக்குதான். அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்" என்றான்.

"என்னங் மாமா சொல்றீங்? உங்கட அப்பாவோ, அம்மாவோ எழுந்து வந்து விஷயம் தெரிஞ்சுதுன்னா என்னவாகும் தெரியுமுங்லா. சந்திச்சு பேச பொழுதா இல்லை" என்றாள்.

"தெரியாமப் பார்த்துக்கடி. உன்ற கொழுந்தன் வாழ்க்கையில நல்லது நடந்தா சந்தோஷப்படமாட்டியா நீ?" என்றிருந்தான் சுகிர்தான்.

"என்னமாச்சும் சொல்லி என் வாயை அடைச்சிடுங்" என்றவள், இணைப்பை முறித்தவளாக, மேலே சென்ற செந்தாழினி கீழிறங்கி வருவதற்காக கீழே இறுதி படியில் அமர்ந்துவிட்டாள்.

*************

திகழோவியன் வேலையை முடித்துக்கொண்டு இரவு உணவு நேரத்திற்குதான் வீடு வந்து சேர்ந்தான்.

காமாட்சியிடமிருந்த பழைய ஒதுக்கம் இப்போது அவனிடத்தில் இல்லை.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவனை அமர வைத்து தானே ஊட்டியும் விட்டார்.

உண்டு முடிக்க,

"எனக்கொரு விஷயம் சரின்னு படுது திகழு. நீ ஒத்துக்கிட்டா நல்லாயிருக்கும்" என்றார்.

"என்னதுங்ம்மா?"

"நேத்து உன்ற ஐயனு சொன்னாருல கண்ணு... அதை செய்வோமா?" என்றார்.

"நீங்க என்ன சொல்றீங் வெளங்குலங்."

"உன்ற கல்யாணம் தான் தம்பி..."

காமாட்சி முடிக்கும் முன்பு,

"எனக்கு விருப்பமில்லங்... திரும்ப கேட்டு கஷ்டப்படுத்தாதீங்" என்று வேகமாக எழுந்து சென்றிருந்தான்.

அறைக்குள் வந்தவன், இனி இந்த திருமணப் பேச்சுக்களையும் சமாளித்தாக வேண்டுமென ஆயாசமாக நினைத்தான்.

அந்நேரம் தான் செந்தாழினி அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர் அவளின் அழைப்பு திரை நிறைக்கிறது.

உணர்வுகளற்று வெறுமையாக அலைபேசி திரையைப் பார்த்திருந்தான்.

மணிக்கும் திட்டியிருந்தான். அப்போது அவள் சொல்லியதற்காக தன்னை இணைப்பில் சேர்த்தற்காக.

"இத்தன நாளில்லாமா இன்னைக்கு மட்டுமென்ன?" என நினைத்தாலும், எடுத்து பேசுவோமென்று எண்ணவில்லை.

எத்தனை முறை உன்னால் அழைக்க முடியுமோ அழைத்துக்கொள் என்று வீம்பாக இருந்தான்.

அழைப்பின் எண்ணிக்கைக் கூடிட, இல்லையென்று தனக்குத்தானே பொய் கூறிக்கொண்ட அவனின் அவளுக்கான தவிப்புகள் அவனது முகத்தில் வெளிப்படையாகின.

"எதுக்கு கூப்பிட்டுட்டே இருக்காள். அவளுக்கு எதுவும் பிரச்சினை இருக்குமோ?" என நினைத்தவன், "அவளுக்கு என்னமேட்டுக்கு இருந்தா என்ன? அவள் என்ட்ர மனசுக்கு யாரோ" என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அலைபேசியை ஓரமாக வைத்திட்டு கண்களை மூடி படுத்துக்கொண்டான்.

அழைப்புகள் நின்றிட...

தகவல் வந்ததற்கு அடையாளமாக ஓசை வர, திறந்து பார்ப்பதை தவிர்த்தவனாக, கண்களுக்கு மேல் கைகளை வைத்து முகத்தை மறைத்தவன், உறங்க முயற்சித்தான்.

உறக்கம் வராது அவனவளின் முகம் அவனை அலைக்கழித்தது.

"ஷிட்" என எழுந்தமர்ந்தவன், இதயத்தை அழுத்தி நீவிக்கொண்டான்.

அலைபேசியை எடுத்து திரையின் மேல் அறிவிப்பு வழியாக செந்தாழினி அனுப்பிய தகவலைப் பார்த்தான்.

திகழோவியனின் நெற்றி சுருங்கியது.

இருப்பினும் என்னவென்று அவளிடம் கேட்டிட அவனுக்கு மனம் வரவில்லை.

எழுந்து பால்கனி கதவினை திறந்து சென்றவன், அவ்விருளில் அவளின் அறையை அவதானிக்க முயற்சித்தான். பலனில்லை.

'என்ன பிரச்சினை அவளுக்கு?' யோசித்தவன் அந்நேரத்திற்கு மணிக்கு அழைத்தான்.

உறக்க கலக்கத்தில் அழைப்பு ஏற்றவன்,

"தூங்கலயாடா? என்ன இந்த ராத்திரியில போனு" என்றான்.

"என்னத்துக்கு அவள் கால் பண்ணா(ள்)?" திகழின் கேள்வியில் புரியாது, "நீ தான்டா கால் பண்ணியிருக்க" என்றான் மணி.

"ம்ப்ச்" என நெற்றியைத் தேய்த்துக்கொண்ட திகழ், "சாயங்காலம் போன் போட்டியே! அவள் பேசணும் சொன்னான்னு" என்றான்.

"அதை அவகிட்டதான் கேட்கணும். அவன் போன் போட்டா நீ எடுக்கம்மாட்டன்னு, என்னை போட்டு உனக்கு கனெக்ட் பண்ண சொன்னாள். என்ன சேதின்னு சொல்லல" என்ற மணி, "அக்கறை இருந்தாக்கா நீயே போன் போட்டு கேளு. இப்போ என்னை தூங்கவுடு" என்று வைத்திட்டான்.

அலைபேசியை உள்ளங்கையில் இறுக்கிப் பிடித்த திகழோவியன்,

"திரும்ப கால் வந்தாக்கா அட்டென்ட் பண்ணுவோம். நாம பேச வேணாம். அவள் பேசுறதை கேட்போம்" என்றவனாக அறைக்குள் வர, கதவு தட்டும் ஓசை அத்தனை மெலிதாக ஒலித்தது.

"அண்ணனும் ஆளில்லை. அப்புறம் இந்த நேரத்துல யாரு?" என்ற யோசனையோடு கதவினை திறந்த திகழோவியன் நிச்சயம் செந்தாழினியை எதிர்பார்க்கவில்லை.

"ஏய்... நீ" என்றவன், மேலிருந்து கீழே எட்டிப்பார்க்க... இறுதி படியில் சுவிதா உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

அவள் வந்தது சுவிதாவுக்கு தெரிந்திருக்கிறதென அறிந்தவன்,

"என்னடி பிரச்சினை உனக்கு?" என்று பற்களைக் கடித்தான்.

"நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க" என்றவள், "வீட்ல பேசுங்கங் மாமா" என்றாள்.

"உன்னை பொண்ணு பார்க்க வந்தா நான் ஏன் வந்து பேசணும்" என்ற திகழ், "ஆமா நீ யாரு எனக்கு?" என்றான்.

"அப்படியெல்லாம் சொல்லாதீங்க" என்றவள், "என்ட்ர மேல இருக்க கோவத்துல என்னை வேணாம் சொல்லாதீங். அப்புறம் சிரமப்பாடு ரெண்டு பேருக்கும்தான்" என்றாள்.

"வலிக்க வச்சு நான் படுற பாட்டுக்கு காரணமான நீ சொல்றது எனக்கு காமெடியா இருக்கு" என்ற திகழோவியன், "இதுல நான் செய்ய ஒண்ணுமில்லைங்க. நீங்க போவலாம்" என்றான்.

"ஓவி..." என்றவளின் முகத்திற்கு நேராக சுட்டு விரலை காட்டி அழுத்தமாக உருத்தவன், "போயிடு" என்றான்.

கண்கள் சிவந்து அவனது முகம் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது.

"அப்பைக்கு சூழல் அப்பனாப்பல இருந்துச்சுங்களேங். எனக்கும் வேற வழி தெரியல. அதான்..." என்றவள் அவன் பார்த்தப் பார்வையில் வார்த்தைகளை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டவளாக,

"நீங்க என்னை மன்னிக்கவே வேண்டாமுங். கல்யாணம் மட்டும் பண்ணிக்கோங். இந்த ரூம்ல ஒரு ஓரத்துல உங்க பக்கட்டிக்கு வாழ்க்கை முழுக்க இருந்திருக்கிறேனுங்" என்றாள்.

"இதுவரைக்கும் கொடுத்த வலியெல்லாம் போதாதுன்னு, மொத்தமா என்னைய சாவடிச்சிடலாம் நினைப்பா?" என்ற திகழோவியன், "உன்னை பார்த்தாலே எரிச்சலா வருதுடி. ஒழுங்கா என் கண்ணு முன்னாடி நிக்காம போயிடு. அடிச்சிடகிடுச்சிடப் போறேன்" என்றான்.

"விடிஞ்சதும் பேசி முடிச்சிட்டாங்கன்னா நீங்க எம்மட பொணத்தைதான் பார்ப்பீங்க" என்றவள் முடிக்கும் முன்பு அவளை அடிக்க கையை ஓங்கியிருந்தான்.

ஓங்கிய கையை வெறுப்புடன் கீழிறக்கியவன்,

"அண்ணி" என்று அதிக சத்தமின்றி அழைத்தான்.

இங்கு கண்ணாக இருந்த சுவிதா, அவனின் குரலுக்கு வேகமாக மேலேறி வந்திருந்தாள்.

"இவளை போவச்சொல்லுங்க" என்றவன், "மொத்தமா எம்மட வாழ்க்கையிலிருந்தே" என்றவனாக அறைக்குள் நுழைந்து கதவினை அடித்து சாற்றியவனாக, தாழிட்டான்.

மூடிய கதவினைப் போன்று மனதிற்கும் பூட்டிட்டுக் கொண்டான்.

வெறுத்த வார்த்தை வீசியும்

விலக மறுக்கும் நேசமாய் நான்...
மூடிய கதவின் பின்னாலும்
உன் நெஞ்சில் உயிராகவே நான்...

நெஞ்சில் உயிர் நிறையும்...
 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
125
33
Chennai
வாட் ப்ரோ...இட்ஸ் ராங்க் ப்ரோ... என்னனாலும் பேசி தீத்துக்கோங்க...
அதான, வாங்க தீர்த்திட்டு பேசுவோம் 🤣🤣🤣