• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உந்தன் நெஞ்சில் உயிராக 7

STN - 03

New member
Staff member
உந்தன் உயிராக 7

திகழோவியனின் அழுத்தமான அழைப்பில் வேகமாக மேலேறி வந்த சுவிதா, அவன் அறைக்குள் சென்று மறைந்ததும் செந்தாழினியை பரிவோடுப் பார்த்தாள்.

செந்தாழினி குளம் கட்டிய விழிகளோடு மூடிய அறையின் கதவை ஏறிட,

"நாளைக்கு பொழுதுல பேசிக்குவோம் செந்தா. இப்போ நீ இக்கட்டிக்கு நிக்கிறது சரியில்லை" என்றாள் சுவிதா.

"நெஞ்செல்லாம் வலிக்குதுங்க்கா. தொண்டை அடைக்குதுங்க. அவங்க தான் வாழ்க்கை. இல்லைங்கிற நிலை" என்று வார்த்தையை நிறுத்தியவள், "உங்களுக்கு புரியுதுங்களாங்?" என்றாள். பெரும் தவிப்போடு. கண்களில் கலக்கத்தின் மிதமிஞ்சல்.

"ஆனா பேச இது நேரமில்ல செந்தா."

"நாளைக்கு விடிஞ்சா என் வாழ்க்கையே இல்லாமப் போயிடுங்க்கா" என்ற செந்தாழினி, "அவங்களால என்னை மன்னிக்கவே முடியாதுங். மன்னிக்கிற தப்பையும் நான் செய்யல. ஆனா அன்னைக்கான என் சூழ்நிலை. நான் பண்ணது சரியா தப்பான்னு இன்னமும் எனக்கு புரியலங்" என்றாள்.

"முடியவே முடியாதுன்னாங்க... நான் தான் ஒத்துக்க வச்சு" என்று உள்ளங்கையால் முகம் மூடி அழுதவள், "நான் வாரேனுங்க" என்று வேகமாக சென்றுவிட்டாள்.

கதவு மூடியிருந்தாலும் செந்தாழினி சுவிதாவிடம் பேசியதெல்லாம் திகழுக்கு கேட்கத்தான் செய்தது.

அவள் வருந்தினாள் அவனுக்கு வலி கொடுப்பது நிஜம். அதற்காக அவளை மன்னிக்க முடியுமென அவனுக்குத் தோன்றவில்லை.

அவர்களுக்குள் நடந்த பிரச்சினைக்கு பின்னர் நடந்தவைகளால் தானாக ஒன்றுமேயில்லாத பிரச்சினையாக முடிவுக்கு வந்திருந்தது. அப்படியே விட்டிருந்தால், அந்நேர அவசர முடிவுகளைத் தவிர்த்து அமைதியாக இருந்திருந்தால், இன்று இந்த வலி, வேதனை இருந்திருக்காது.

காதலும், வாழ்வும் சீராக இன்பமாக சென்றிருக்கும்.

தற்போது பெரும் பிரச்சினையாகத் தெரிந்திட காரணமே அவள் தான். அவளின் முடிவால் அதிகம் காயப்பட்டது திகழ் தான். அவனின் காதல் உடைந்து துண்டங்களாகியிருக்க, மீண்டும் ஒட்ட வைத்திடும் மார்க்கமின்றி, அவளை முழுதாக தூக்கி எறியவும் முடியாது வதை சுமக்கின்றான்.

அவள் சென்றுவிட்டது தெரிந்து தன்னுடைய அறை பால்கனிக்கு வந்து நின்றான். இருளில் நிலவு வெளிச்சத்தில் இரு வீட்டிற்கும் நடுவிலிருக்கும் வயல்களின் வரப்பு மீது கண்ணீர் சிந்தும் விழிகளை இரு கைகளாலும் மாற்றி மாற்றி துடைத்தவளாக அவள் செல்வது தெரிந்தது.

அழுத்தமாக அவளைப் பார்த்திருந்தான்.

எப்படியெல்லாம் நெஞ்சில் சுமந்த நேசம். அவனிடத்தில் பெரும் மூச்சு, வற்றாத ஏக்கங்களின் தவிப்புகளாக.

வீட்டின் பின் வாசல் கதவை திறந்து உள்ளே செல்ல அடி வைத்தவளின் பார்வை, திகழோவியனின் அறை மீது திரும்பியது.

அவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மனதால் உணர்ந்துதான் விழிகளை அவன் பக்கம் திருப்பியிருந்தாள்.

அவளோ தான் பார்த்ததும் வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டு சென்றிடுவானென நினைக்க, அவனோ வழக்கத்திற்கு மாறாக அசையாது நின்றிருந்தான்.

கோபம் என்னவாக இருந்தாலும் தன்னை ஏற்றுக்கொண்டால் போதுமென பார்த்திருந்தாள்.

இருளில் உருவம் மட்டும் ஒருவருக்கொருவர் வரி வடிவமாகத் தெரிந்திட, பார்வையின் அணைப்பை உணர முடிந்தது.

"இந்த நேரத்துல என்ன கண்ணு இங்க நின்னுட்டு இருக்க?" திடீரென அருகில் ஒலித்த அன்னையின் குரலில் பதற்றம் சுமந்த செந்தாழினி,

"தூக்கம் வரலங்ம்மா. அதானுங்மா தோட்டத்துல நடக்கலாம் வந்தேன்" என்றவள், திகழின் மீதான பார்வையை பெரும் மன்றாடலோடு விலக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.

கட்டிலில் விழுந்த திகழோவியனுக்கு நெஞ்சமெல்லாம் அழுத்தும் பாரம் பெரும் வலியை கொடுத்திட, வேகமாக எழுந்து கீழே சென்றவன்,

காமாட்சி உறங்கிக் கொண்டிருக்கும் அறை கதவினை தட்டினான்.

கதவினை திறந்தது ராஜேந்திரன்.

"என்ன?"

பதில் சொல்லாது அவரை விலக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தவன், தரையில் பாய் விரித்துப் படுத்திருந்த காமாட்சியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

திகழ் அருகில் படுத்ததும் விழித்துக்கொண்ட காமாட்சி,

"திகழு" என்க...

"தூங்கணுங்ம்மா" என்று மேலும் அவரை ஒண்டினான்.

ராஜேந்திரன் பார்த்துக்கொண்டே நிற்க...

"எதுவும் கெட்ட கெனா கண்டிருப்பான். நீங்க படுங்கங்க" என்றார் காமாட்சி.

"கல்யாணம் கட்டியிருந்தா இப்படி பாதி ராத்திரிக்கு ஓடிவர வேண்டியிருக்குமா?" என்றவர் கட்டிலில் சென்று படுத்து கண்களை மூடியவராக, "சீக்கிரமே நான் சொன்ன பொண்ணை போய் பார்த்துப்போட்டு வந்துப்புடுவோம். எல்லாம் முடிஞ்சப்புறமும் மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு எல்லாத்தையும் பறிக்கொடுத்தவன் மாதிரியே திரியுறான். கல்யாணன்னு ஒண்ணு ஆனாதான் இவன் சரிப்பட்டு வருவான்" என்று அவர் போக்கில் பேசிக்கொண்டிருந்தார்.

காமாட்சி, ராஜேந்திரன் இருவருமே அவரின் பேச்சை காதில் வாங்கவில்லை. காமாட்சி தட்டிக்கொடுக்க, திகழோவியன் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றான்.

என்னதான் செந்தாழினி மீது கோபம் இருப்பினும், அதைவிட அதிகமான காதல் அவளிடம் அவனுக்கு. அவள் அழுது பார்த்தது, இரவு முழுக்க உறங்கவிடாது என்பதற்காகவே அன்னை மடி சேர்ந்திருந்தான்.

முன்பு கிடைக்காத ஒன்று இன்று அகம் நிறைக்கும் சுகமாய். வலி தாங்கும் ஆறுதலாய்.

துன்பம் போக்கிட... உன் ரணம் தீர்த்திட... உன்னை மீட்டெடுத்திட... அன்னை மடிக்கு ஈடு இணை உண்டோ!

*************************

விடியலிலே... இருள் பிரியும் முன்பு சுகிர்தன் வந்துவிட்டான்.

அந்த நேரத்திற்கு விழித்துவிட்ட சுவிதா வாசலில் கோலமிட்டுக்கொண்டிருக்க... காமாட்சி சமையலில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்.

வாசலில் நிற்க வைத்தே கணவனிடம் பாதி இரவில் நடந்த நிகழ்வை சுவிதா சொல்லிவிட்டாள்.

"பேசுவோம் சுவி" என்ற சுகிர்தன், "அம்மாவும் அவனுக்கு கல்யாணம் பண்ணோணும் சொல்றாங்க. அவன்கிட்ட பேசிப்போட்டு நாம ஒரு முடிவுக்கு வருவோம்" என்று வீட்டிற்குள் சென்றான்.

வரும்போதே ஸ்லீப்பர் கோச் பேருந்தில் நன்கு உறங்கிக்கொண்டுதான் வந்தான். அத்தோடு செந்தாழினியின் நிலை நெருக்கடியாக இருந்திட ஓய்வெடுக்க நேரமில்லையென அறைக்குள் சென்ற பத்தாவது நிமிடம் குளித்து தயாராகி வெளியில் வந்தான் சுகிர்தன்.

இந்நேரத்தில் காமாட்சி சமயலறையில் தான் இருப்பாரென அங்கு சென்றான்.

அவன் சென்ற நேரம் அடுப்பில் ஏற்றியிருந்த பால் பொங்கி வழிய காத்திருக்க, காமாட்சி ஏதோ யோசனையில் உழன்றவராக தனக்கு முன்னே சுவரை வெறித்திருந்தார்.

"ம்மா!" என்ற அழைப்போடு வேகமாக அருகில் சென்று அடுப்பை அணைத்த சுகிர்தன், அவரை தொட்டு சுயம் மீட்டான்.

"சுகிர்தா... எப்ப கண்ணு வந்த?" என்ற காமாட்சி, "ஓய்வெடுக்கலயா தங்கம்" என்றார்.

"இப்போதான் வந்தேன். இனிமேல எங்கங்மா தூங்குறது" என்ற சுகிர்தன், "திகழுகிட்ட பேசுற வேலை இருக்குங்ம்மா. அதுக்கு முன்ன உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமுங்க" என்றான்.

"நானும் பேசணும் சுகிர்தா" என்ற காமாட்சி, "நம்ம கூடவே இருந்தாலும், நடந்த எதுல இருந்தும் உன்ற தம்பி வெளியவரல கண்ணு. அவனுக்குள்ள இன்னமும் அதெல்லாம் ஆறாத வடுவாட்டம் தேங்கியிருக்குது" என்றார்.

"ராத்திரி உன்ற ஐயன் அவன் கல்யாண விஷயமா பேசுனாரு சொன்னீங்க. இப்போ என்னங்ம்மா பெருசா எதுவோ சொல்றமாரி இருக்குது" என்றான் சுகிர்தன்.

"மனசு ஓய்ஞ்சு இருக்கான் சுகிர்தா" என்ற காமாட்சி பாதி இரவுக்கு மேல் திகழ் தன்னுடன் வந்து உறங்கியதையும், அவனது முகத்தில் அந்நேரம் அமிழ்ந்திருந்த சோகத்தையும் கூறி, கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.

ஏற்கனவே சுவிதா, செந்தாழினி வந்து சென்றதை சொல்லியிருக்க, அந்நேரத்தில் தம்பியின் அலைப்புறுதல் எதனாலென அறிந்த சுகிர்தனனுக்கு இதை எப்படி சரி செய்வதென்று மலைப்பாக இருந்தது. செந்தாழினி பகிர்ந்தவை அத்தனை நல்லதாக இல்லாததால், திகழோவியனை என்னவென்று மீட்டு, அவனது நிலையை சீர் செய்வதென இரு நாட்களுக்காக தனக்குள்ளே பல்வேறு யோசனைகளை உருப்போட்டுக் கொண்டிருக்கிறான்.

"என்னயிருந்தாலும் அவனால நம்மகிட்ட ஒட்ட முடியல தம்பி... அவனுக்குன்னு ஒருத்தி வந்துபுட்டா, மனசு சஞ்சலமில்லாம வாழ்வான். இந்த விஷயத்துல உன்ற ஐயனுக்கு சப்போர்ட் பண்ணலாம் சாமி" என்றார் காமாட்சி.

"இப்போவாவது நான் சொல்றது சரின்னு படுதே" என்று குரல் கேட்டு இருவரும் திரும்பிட, ராஜேந்திரன் நின்றிருந்தார். சமையலறை வாயிலில்.

இருவரும் பதில் பேசாது நின்றிருக்க...

"பொண்ணு வீட்ல ரெண்டு நாள்ல வரோம்ன்னு விசயம் சொல்லி அனுப்பறேன். அதுக்குள்ள உன்ற மவனை சம்மதிக்க வை" என்று ராஜேந்திரன் நகர்ந்தார்.

"நீதான் கண்ணு உன்ற தம்பிக்கிட்ட பேசணும்" என்றார் காமாட்சி.

"பேசனுங்தாங்ம்மா! ஆனா ஐயன் சொல்லிப்போன விசயமா இல்லைங்ம்மா" என்ற சுகிர்தன், அடுத்து சொல்லியதில் காமாட்சி நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.

"என்ன கண்ணு சொல்ற?"

"ஆமாங்ம்மா" என்ற சுகிர்தன், சென்ற ராஜேந்திரன் திரும்பி வந்துவிடுவாரோ என வெளியில் ஒரு கண் வைத்து தனக்கு தெரிந்த அனைத்தும் சொல்லி முடிக்க, சுவிதாவும் வந்து,

"ஆமாங்கத்தை நைட்டு வந்து செந்தா நிக்கவும் எனக்கு கை காலெல்லாம் வெடவெடத்துப்போச்சு" என்றாள்.

"காலேஜ் படிக்கும்போதே விரும்பியிருக்காங்கன்னா எதனாலா பிரிஞ்சியிருக்கணும்?" என்றார் காமாட்சி.

"அதுக்கு என்ன காரணம் தெரியல. திகழுகிட்ட பேசணும். செந்தாழினி சொன்னதை வச்சு மட்டும் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும் முடிவுக்கு நாம வர முடியாதுங்க" என்ற சுகிர்தன் உட்பட, கூடத்தில் கேட்ட திடீர் சத்தத்தில் மூவரும் என்னவென்று வந்தனர்.

திகழின் காலுக்கு கீழே முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி உடைந்து கிடக்க, அவனுக்கு எதிரே நின்றிருந்த ராஜேந்திரனை தீயாய் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

"என்னாச்சு சாமி?" காமாட்சி அவனின் கரம் பற்றி வினவினார்.

"என் வாழ்க்கையை நரகமாக்குனது உம்மட வீட்டுக்காரருக்கு போதலங்கலாங்ம்மா. இன்னும் என்ன செய்யுறதுக்கு என் கல்யாண விஷயத்துல முடிவு எடுக்கிறாங்க? நான் தான் நேத்தே சொன்னனே! தேவையில்லைன்னு. அப்புறம் என்னத்துக்குங்" என்ற திகழோவியன், "என்னை ஆளை விடுங்க" என்றிருந்தான்.

ராஜேந்திரன், காமாட்சி மற்றும் சுகிர்தனனிடம் சொல்லிவிட்டு, சமையலறையிலிருந்து வெளியில்வர, திகழ் கீழே உறங்கிய அறையிலிருந்து வெளியில் வந்தான்.

அவர் இரண்டு நாளில் பெண் பார்க்க செல்ல இருப்பதாக சொல்லிட, அதனை காதில் வாங்காதவனாக நகர்ந்தவனை பிடித்து நிறுத்தி...

"நான் உன்ற ஐயன் டா! போனாப்போகட்டுன்னு பொறுத்துப்போனா ரொம்ப ஆடுற" என்று ராஜேந்திரன் பேசிட...

"யாருக்கு யாருங் ஐயன்? நீங்களாங்க?" எனக்கேட்டு அடுத்து மனதில் உதித்த வார்த்தையை வாயில் உதிர்க்க முடியாது பூந்தொட்டியை தூக்கிப்போட்டு உடைத்திருந்தான். அந்த சத்தம் கேட்டுதான் மூவரும் வந்திருந்தனர்.

"என்னயிருந்தாலும் உன்ற நல்லதுக்குதான் சாமி. எனக்கும் உன்ற கல்யாணக் கோலத்தைப் பார்க்கணும் ஆசை சாமி" என்றார் காமாட்சி.

அவரை உணர்வற்றுப் பார்த்த திகழோவியன்,

"என்னை இப்படியே விட்டுடுங்ம்மா" என்றான்.

"அதெப்படி விட முடியும்? அது அது நடக்க வேண்டிய காலத்துல நடந்துதான ஆவணும்" என்றார் ராஜேந்திரன்.

"நீங்க என்ற விஷயத்துல தலையிட வேணாமுங்" என்று வெடுக்கென பதில் பேசிய திகழ், "உங்களால எனக்கு எந்த நல்லதும் நடந்ததில்லைங். இனியும் நடக்க வேணாங்க. ஆளை விடுங்கங்க" என்றான்.

"என்ன பேச்சு பேசுறான். அய்யங்குற நினைப்பு கொஞ்சமாச்சும் இருக்கா பாரு" என்று ராஜேந்திரன் மனைவியிடம் குற்றம்சாட்டும் விதமாகக் கூற, சுகிர்தன், சுவிதாவுக்கு சூழல் எல்லைமீறி செல்வதாகத் தோன்றியது.

"யாருங் என்ற ஐயன்?" என்ற திகழ் சத்தமிட்டு சிரிக்க... ராஜேந்திரனின் முகம் கருத்தது.

"திகழு வேணாம் டா" என்று சுகிர்தன் அருகில் செல்ல,

"இவரு எனக்கு ஐயனாங்ண்ணா" என மேலும் சத்தமிட்டு சிரித்தான் திகழோவியன்.

அவனின் சிரிப்பில் ராஜேந்திரனின் கோபம் தூண்டப்பட...

"இல்லைன்னு சொல்லுவியா நீ?" என்றார்.

"அப்படின்னு நான் சொல்லலங். ஊருக்கே தெரியுமே நான் உங்க மகனில்லை, நீங்க என் ஐயனில்லைன்னு" என்று வார்த்தைகளை நிறுத்தி, " இருபத்தி மூணு வருஷமா அப்படித்தானுங் சொல்லி வச்சிருந்தீங்க" என்றான்.

"இருபத்தி மூணு வருஷமா பெத்த மவனுக்கு மாமாவா இருந்தது இந்த உலகத்திலே நீங்க மட்டுமாதாங்க இருப்பீங்க" என்று புருவத்தை தூக்கியவன், "நான் மாமான்னு கூப்பிடும் போதெல்லாம் உங்களுக்கு உறுத்தல? உள்ள குற்றவுணர்வா வரலங்லா" எனக் கேட்டான்.

"திகழ் போதும்டா... அண்ணன் சொல்றத கேளுடா" என்று சுகிர்தன் திகழின் பேச்சினை அடக்க முயற்சிக்க...

"ஆமா நீங்க எனக்கு அண்ணனா மாமாவா? இப்போ நான் உங்களை எப்படிங்க கூப்பிடணும்?" எனக் கேட்டு சுகிர்தனனை கலங்கச் செய்திருந்தான் திகழோவியன்.

"பெத்த அம்மாவை அத்தைன்னு கூப்பிட்டிட்டு இருந்திருக்கேன். அப்பவும் இவருக்கு உண்மையை சொல்லணும் தோணல. எனக்கு ஓரளவு வயசு வந்த அப்புறமாவது உண்மையை சொல்லியிருக்கலாமேங்க" என்ற திகழோவியன், "இருபத்தி மூணு வருஷமா நான் பிறந்த வீடு, என் அம்மா அப்பா, என் ஊருன்னு நினைச்சிருந்த எதுவும் என்னோடது இல்லைன்னு தெரிஞ்ச நொடி... அதுவும் தெரிஞ்ச விதம்... அத்தனை வருஷம் நான் வாழ்ந்த வாழ்க்கை, எனக்குன்னு இருந்த அடையாளம் எதுவுமே எனக்கு உரிமையானது இல்லைன்னு தெரிஞ்சப்போ" என மூச்சினை ஆழ்ந்து சுவாசித்தவன், "அந்த வலி கொடுமைங்ண்ணா" என்று தரையில் சரிந்து தூணில் சாய்ந்து அமர்ந்தான்.

அவனின் அந்தத் தோற்றம் பெத்தவளுக்கும், உடன் பிறந்தவனுக்கும் உயிர் வேதனை அளிக்க, அவனின் இருபக்கமும் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டனர்.

"என்மேல அவ்ளோ பாசம். என்னை வெளியவே விட மாட்டாங்க. எந்த நேரமும் என்னை கைக்குள்ளவே வச்சிருப்பாங்க. என்மேல ரொம்ப பாசம் நினைச்சாலும், வளர வளர என்னை அவங்க பாசங்கிற கூட்டுக்குள்ள கட்டி வச்சிருக்காங்கன்னு புரிஞ்சுது. அவங்க சொல்லை மீற முடியாதளவுக்கு பாசத்தைக்காட்டி அடிமையா கட்டி வச்சிருக்காங்கன்னு அப்போ புரியல. ஆனால் அதுக்கான காரணம், அவங்க மகனில்லங்கிற உண்மை தெரிஞ்சிடக் கூடாதுன்னு என்னை பொத்தி வச்சிருக்காங்க. இங்கக்கூட என்னை லீவுக்கு அனுப்பனதில்லை. இப்போ நினைக்கும் போது அவங்க எம்மேல காட்டுன பாசமெல்லாம் என்னை தக்க வச்சிக்க அவங்க செய்ததுன்னு சாதாரணமாதான் நினைக்கத் தோணுது. உண்மையான அன்பு கிடைக்க வேண்டிய வயசுல எனக்கு கிடைக்கவே இல்லைங்களே" என திகழ் புலம்ப புலம்ப மற்றவர்களுக்கு ஜீவன் வற்றியது.

"இதனால என் காதல் கூட எனக்கு இல்லாமப் போச்சு" என்று கண்களை மூடியவன் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

"காதலா?" அதுவரை திகழ் இதயம் உடைந்திட பேசிய உணர்வின் வலியை பின்னுக்குத் தள்ளி அவன் சொல்லிய காதல் என்பதை மட்டும் பிடித்துக்கொண்டு கோபமாக வினவினார் ராஜேந்திரன்.

"ஆமாங்... காதல் தான் இப்போ என்னங்க?" என்றவனிடத்தில் அப்படியொரு ஆக்ரோஷம்.

"அதெல்லாம் நமக்கு ஒத்துவராது!" ராஜேந்திரன் கூறிட,

"ஏனுங் ஒத்துவராது. அதெல்லாம் ஒத்து வரும்" என்ற திகழ், "உம்மட எண்ணம் இப்ப என்ட்ர கல்யாணம் தானங்க. அப்ப எனக்கு புடிச்ச, நான் சொல்ற பொண்ணை போய் கேளுங்க" என்றான்.

"மொத பொண்ணு யாருன்னு சொல்லு... இந்த வூட்டுக்கு ஏத்தவளா இல்லையான்னு தெரிஞ்சிக்கிட்டு என் முடிவை சொல்றேன்" என்றார் ராஜேந்திரன்.

"கண்ணு வேணாம்" என்று காமாட்சி மகனின் கையைப் பிடித்தார்.

தன்மீது மிகுந்த கோபம், வெறுப்பில் இருக்கும் மகனின் காதலை சேர்த்து வைத்து அவனை நெருங்க நினைத்தார். காதலின் மீது விருப்பமே இல்லையென்றாலும். தன்மீதான கோபத்தால் தான், தான் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய முடியாதென்கிறான் என்ற அவரின் எண்ணத்துக்கு மாறாக அவன் காதலெனக் கூற, கோபம் வந்து கத்தியிருந்தாலும், நொடியில் மகனை தன் பக்கம் இழுத்திட திட்டம் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

தான் தன்மையாகக் கேட்டால் சொல்லமாட்டானென்றே கோபத்தோடு அவனைத் தூண்டிவிடுகிறார்.

ஆனால் பெண் யாரென்று திகழ் கூறிவிட்டால் அவரின் எண்ணம் என்னவாகும்?

திகழுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்த வேண்டுமென்ற மனமில்லை. வலி நிறைந்து மனதின் ரணத்தை கொட்டும் வேகத்தில் காதலையும் கொட்டிவிட்டான்.

அதனை ராஜேந்திரன் பிடித்துக்கொண்டு கேட்கவும், ஓயாது திருமணமென்று கடுப்பை ஏற்படுத்தவரை இப்பேச்சையே எடுக்க விடக்கூடாதென தனது காதலை சொல்ல நினைத்துவிட்டான்.

அவன் காதலிக்கும் பெண் யாரென்று தெரிந்தால் அவரே வாய் மூடிக்கொள்வாரே! அந்த எண்ணம் திகழோவியனுக்கு.

"சொன்னன்னா உறுதியா சேர்த்து வைக்கோணும்... சம்மதங்ளா?" என்றான். வேட்டியை மடித்துக்கட்டி.

"உம்மட இஷ்டத்துக்கு நான் வளைய முடியாது. பொண்ணு குடும்பம் தோதுப்படும்னா சம்மதம் சொல்லுவேன்" என்று ராஜேந்திரனும் துண்டை உதறி தோளில் போட்டார்.

"உங்கட சம்மதம் எனக்கு தேவையில்லங்... ஆனாலும் இந்த வூட்டுக்கு நீங்கதானுங் பெரிய மனுஷன். அந்த மருவாதிக்கு உங்கடகிட்ட சொல்றேனுங்க" என்ற திகழோவியன்,

"நான் விரும்புற பொண்ணு செந்தா..." என்று முழுப்பெயரையும் சொல்லி முடிக்கும் முன்பு,

வெளியில் கேட்ட பலவிதமான களேபர குரலில், தேவகியின் அழுகுரல் தனித்து முதன்மையாய் கேட்டிட காமாட்சி பதறி வெளியில் ஓடினார். அவரைத் தொடர்ந்து அனைவரும். ராஜேந்திரனைத் தவிர்த்து.

"அய்யோ பாவிமவ இப்படி செஞ்சிட்டாளே. என்ட்ர கொலை நடுங்குதே" என்று தேவகி தலையில் அடித்துக்கொண்டு அவரது வீட்டு வாயிலில் தரையில் அமர்ந்திருந்தார்.

அவரின் அரட்டலில் செந்தாழினி தான் என்னவோ செய்துகொண்டாள் என்பது விளங்கியது.

"விடிஞ்சதும் பேசி முடிச்சிட்டாங்கன்னா நீங்க எம்மட பொணத்தைதான் பார்ப்பீங்க" என்று நேற்றைய இரவு செந்தாழினி சொல்லியது காதுக்குள் ஒலித்திட, தளர்ந்து திண்ணையில் சரிந்து தூணில் சாய்ந்திருந்தான் திகழோவியன்.

நெஞ்சில் உயிர் நிறையும்...
 

ஷமீம்

Active member
திடீரென ஒரு நாள் நாம் வாழ்ந்த வாழ்க்கை , நமக்கான அடையாளம் எதுவுமே நமக்கு உரிமையானது இல்லைன்னு தெரியும் போது அனுபவிக்கிற வலி கொடுமையானது.அதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்..
 
Top Bottom