• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னிடத்தில் மனம் மயங்குதே - 10

Vishakini

Moderator
Staff member

உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -10


ரேவதியும் விதுனும் அங்கிருந்து கிளம்பிய பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு தாத்தாவும் பப்புவும் வீட்டிற்கு வந்தார்கள்.


சாரல் வேலையை முடித்து விட்டு குளிக்கச் சென்று உடைமாற்றிக் கொண்டிருந்தாள்.தனது அறையில் இருக்கவும் வீட்டிற்கு வந்த தாத்தா சத்தமாக “சாரல் சீக்கிரம் வந்து சாப்பாடு வைம்மா நல்லா பசிக்குது மக்கா ” என்றார்.



சாரல் தலையில் கட்டிய துண்டுடன் சின்னதாய் சிமிக்கி அணிந்து வானத்து நீலநிறத்தில் சல்வாரையும் தோளின் மேல் தாவணி அணிந்து வெளியே வரவேற்பறைக்கு வந்தாள்.அங்கே உட்கார்ந்து இருப்பவனைக் கண்டு ஆச்சரியத்தில் விழிகளை விரித்து “ஹேய்… இது நம்ம பப்புவா ஆளே அடையாளம் தெரியலை எழுந்திரு பார்ப்போம்” என்று உரிமையாய் அவனின் கரங்களை பிடித்து நிறுத்தியவள் அவனை ஒருமுறை மேலும் கீழுமாக பார்த்தபடி வலம் வந்தாள்.



இத்தனை நாட்களாக பப்பு பார்த்த சாரலுக்கும் இன்று அவனின் விழிகள் ஏனோ அவளிடமிருந்து விலகிக் கொள்ளாமல் அப்படியே அவள் மீதே நிலைத்து இருந்தது.



நேராக அவனருகில் நின்றவள் “தாத்தா நாம வாங்குன டிரெஸ் பப்புக்கு சரியா இருக்குல்ல எப்படி என்னோட செலக்ஷன் சூப்பரா இருக்கு ஆளே மாறிட்டான்” என்று பப்புவை பார்த்து கேட்டாள்.



அவனோ “ம்ம்… நல்லா இருக்கு,எனக்கும் பிடிச்சிருக்கு” என்று சொன்னான்.


முகத்தை கழுவிக் கொண்டு வந்த தாத்தா “அட நீ வேறம்மா அவனுக்கு வாங்கின டிரெஸ்ஸை அப்புறமா அளவெடுத்துக்கலாம் மக்கா முதல்ல சாப்பாட்டை வை” என்றார்.


“இதோ தாத்தா பசின்னு வந்துட்டா தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிடுவே,சரி வா வந்து ஹெல்ப் பண்ணு” என்று பப்புவை அருகில் இருக்கும் சமையலறைக்கு அழைத்தாள்.


பப்பு திருதிருவென்று விழித்தவாறு “நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?” என்று புரியாமல் கேட்டான்.


“ம்ம்… அதுவா நான் கொடுக்கிற சட்டி எல்லாம் எடுத்து அங்கே இருக்கிற நடு ஹால்ல வை” என்று சொல்லவும் அவள் சொன்னது போலவே எல்லாவற்றையும் எடுத்து வைத்தவன் சின்ன செம்பில் தண்ணீரையும் வைத்துக் கொண்டு அமர்ந்தான்.


சாரல் “சாப்பாட்டை எடுத்து சில்வர் தட்டில் வைத்தவள் அதன் மேல் தால்சாவையும் ஓரமாக கறி சால்னாவையும் அதில் வைத்து அவனிடம் நீட்டினாள்.



அதை வாங்கியவன் கையில் வைத்துக் கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.தாத்தா அவனிடம் “சாப்பிடு தம்பி கூச்சப்படாதே! நாங்க தானே நல்லா இருக்குமான்னு யோசிக்காதே சாரல் நல்லா சமைப்பாள்” என்றார்.


ஆனாலும் அவன் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து “என்னாச்சு பப்பு ஏன் ஒரு மாதிரி இருக்கே?நீ இப்படி

சாப்பிட்டதாக நினைவு இல்லையா என்ன?” என்று கேட்டாள்.



அவனும் வேகமாக “ஆமாம் சாரல் நான் இப்படி சாப்பிடதாக நினைவே இல்லை.நான் இந்த மாதிரி சாப்பிட மாட்டேன்” என்றான்.



உடனே சாரல் “பேரு,ஊரைத் தான் மறந்தேன்னு பார்த்தேன்,சாப்பிட முறையையும் மறந்துட்டியா?” என்று அவனுக்கு கொடுத்த தட்டை வாங்கி அந்ந சாப்பாட்டை சிறுபிள்ளைகளுக்கு கொடுப்பது போல் சோற்றையும் சால்னாவும் ஒன்றாக கலக்கி அவனிடம் “இதை அப்படியே எடுத்து சாப்பிடு சூப்பரா இருக்கும்” என்றாள்.



அவனும் அவள் கொடுத்த தட்டை ஒரு நிமிடம் உற்றுப் பார்க்கவும் இதை கவனித்த சாரல் “ஹேய் பப்பு இப்போ நீ மரியாதையா ஒழுங்கா சாப்பிடலை அவ்வளவுதான்” என்று மிரட்டினாள்.



பப்புவிற்கு என்ன தோன்றியதோ அடுத்த நொடி சாப்பிட ஆரம்பித்தான்.

அவனுக்கு அந்த சுவை பிடித்து இருந்தது.இதுவரைக்கும் அவன் சோறு சாப்பிட்டதாக நினைவு இருக்கிறது.ஆனால் இப்படி சாப்பிட்டதாக நினைவு இல்லை.அவன் வேகமாக சாப்பிடவும் தாத்தாவும் சாரலும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.


தாத்தா மெதுவாக “நான் சொன்னது நினைவு இருக்கட்டும் பப்பு, நீ என்னோட ப்ரெண்ட் பேரன் தான் சொல்லனும் ஹாஸ்பிடல்ல இருந்த கதையை எல்லாம் யாருகிட்டயும் சொல்லக் கூடாது” என்று சொன்னார்.


எல்லாவற்றையும் கேட்டு சரியென்பது போல் தலையசைத்தான்.


ஏற்கனவே இரண்டு நாட்களாக பப்பு தன்னைப் பற்றிய பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.அதனால் மருத்துவர் உளவியல் மருத்துவரிடம் பேசி பப்புவிடம் அவனுடைய நிலைமையைப் பற்றி கொஞ்சம் பொய்யும் நிறைய உண்மையையும் சொன்னார்கள்.


அதாவது அவனுக்கு தலையில் அடிப்பட்டு இருப்பதால் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டது.அதனால் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடச் சொன்னார்கள்.


மேலும் அவனுடைய குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.தற்போது தனது நண்பனின் பேரனைப் போல் இருப்பதால் கோபாலன் தன் வீட்டில் பார்த்துக் கொள்வதாக ஒத்துக் கொள்வதால் அவர்களோடு அவன் இருக்க போவதாகவும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கும் போதும் மனநிலையில் மாற்றம் வரும் போது அவனைப் பற்றிய விவரங்கள் தெரிய வரலாம் என்று மருத்துவர் விவரமாக சொல்லி இருந்தார்.அதனால் பப்புவும் அதை ஏற்றுக் கொண்டு அங்கே இவர்களுடன் இருக்க வந்து இருந்தான்.



சாரல் கோபாலனிடம் “தாத்தா நீ கவலைப்படாதே! அவனை என் பக்கத்துலயே வைச்சுக்கிறேன் அதனால எதையும் சொல்ல மாட்டான்” என்றாள்.



இவர்கள் வயிறார சாப்பிட்டு முடித்ததும் சாரல் ஆளுக்கு ஒரு கடலை மிட்டாய் கொடுக்கவும் மூன்று பேரும் எதிரே தெரியும் கடலைப் பார்த்து அமர்ந்தனர்.


தாத்தா அவருக்கான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க சாரலும் பப்புவும் அங்கே கிடந்த பழைய உடைந்த படகின் மேல் அமர்ந்திருந்தனர்.


கடல்காற்று மெதுவாக அவர்களை வருடிச் சென்றது.தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து ஈரமான தன் கூந்தலை விரித்து உலர்த்திக் கொண்டிருந்தாள்.



அருகில் இருந்த பப்புவும் சாரலை இரசிக்க ஆரம்பித்தான்.கண்களை மூடி கையை நீட்டி சாரல் “எத்தனை நாளாக நான் இந்த டைம்மை மிஸ் செய்றேன் தெரியுமா?” என்று சொன்னாள்.


பப்பு “ஏன் என்னாச்சு? இத்தனை நாளா எங்கே போனே?”என்று கேட்டான்.


சாரல் அவனைப் பார்த்து முறைத்து “ம்ம்… ஏன் என்னை பார்த்து இந்த கேள்வி கேட்கமாட்டே? இத்தனை நாளா உன்கூடத் தானே இருந்தேன்.அதனால இந்த நேரம் கிடைக்கலை” என்றாள்.



அதைக் கேட்டு “ஹோ அப்படியா! சாரி” என்றான்.


அவளோ சிரித்துக் கொண்டே “சரி பரவாயில்லை.இனி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இதே மாதிரி காத்து வாங்கலாம்” என்றதற்கு அவனும் சரியென்று சொன்னான்.



அப்போது அங்கே வந்த குமார் சித்தப்பு இவனைப் பார்த்து “தம்பி பப்பு எப்படி இருக்கே? உடம்பு பரவாயில்லையா?” என்று கேட்டான்.


சாரல் உடனே வேகமாக எழுந்து “சித்தப்பு யாரோ நினைச்சு பேசிட்டு போறே. உனக்கு இவரைத் தெரியுமா?” என்று கேட்டாள்.


உடனே சித்தப்பு சாரலைப் பார்த்து “எனக்கு யாருன்னு தெரியும் சாரல் அன்னைக்கு காப்பாத்துன பையன் தானே” என்று சொல்லவும் சாரல் அதிர்ச்சியில் எழுந்து நின்றுக் கொண்டாள்.



தாத்தா “ஹேய் மக்கா ரொம்ப ஷாக் ஆகாதே! நான் தான் குமார்கிட்டே சொன்னேன்.பப்பு அங்கே தானே தங்கப் போறான் அதனாலத் தான்” என்ரார்.


சாரல் தாத்தாவிடம் “யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு பேசிட்டு இப்போ பாரு என்ன பண்ணி வைச்சு இருக்கே” என்று கடிந்துக் கொண்டாள்.



குமார் சித்தப்பு “சாரலு பயப்படாதே! நான் யாருட்டையும் சொல்ல மாட்டேன் என்னை நம்பு” என்றான்.


சாரல் “வெளியே ஏதும் ஒரு வார்த்தை பேசு அப்புறம் இருக்கு உனக்கு” என்றாள்.


இப்போது சித்தப்பு பப்புவின் அருகில் உட்கார்ந்தவர் “சாரல் பையன் பார்க்க நல்ல வடிவா இருக்கான்,முடி எல்லாம் அழகா இருக்கு” என்று தொட்டு பார்த்தவர் அவன் கையில் வைத்திருந்த கடலை மிட்டாய் வாங்கி இவர் வாயில் போட்டுக் கொண்டார்.


இதைப் பார்த்த சாரல் சித்தப்புவிடம் “வந்த உடனே உன் வேலையை ஆரம்பிச்சிடு,அது நான் அவனுக்கு கொடுத்தது நீ ஏன் வாங்கி சாப்பிடுறே” என்று அவரை ரெண்டு திட்டு திட்டி விட்டு தனக்காக வைத்திருந்த கடலை மிட்டாயை எடுத்து அதை உடைத்து அதில் ஒன்றை அவனிடம் நீட்டினாள்.


பப்பு அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் கவனித்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு இதைப் பார்க்கவும் யாரோ ஒருவரின் நினைவு வந்து போனது.



கையில் கொடுக்க போனவள் என்ன நினைத்தாளோ சட்டென்று அவனிடம் “ஹேய் பப்பு வாயை திற” என்றதும் அவனும் ஆஆ என்று திறந்தான்.அவன் வாயில் போட்டவள் சித்தப்புவை பார்த்து “இப்போ எப்படி வாங்கிச் சாப்படுவே உனக்கு கிடையாது” என்று இன்னொரு துண்டு கடலை மிட்டாயை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டவள் சித்தப்புவை பார்த்து வம்பு செய்து சிரித்தாள்.



இதை எல்லாம் பார்த்த பப்புவிற்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் வித்தியாசமாகவும் இருந்தது.இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் என்று ஒவ்வொருவராக வந்து பப்புவை விசாரிக்க ஆரம்பித்தார்கள்.


தாத்தாவும் பேத்தியும் எல்லோருடைய கேள்விக்கும் மாறி மாறி பதில் சொன்னார்கள்.ஆனால் பப்புவை பேச விடவே இல்லை.அவன் எல்லோரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.


ரேவதி மெதுவாக சாரலை அழைத்து “பார்க்கவே ஆள் ரொம்ப அழகா இருக்கான்ல” என்று கேட்டாள்.


சாரலோ மனதினுள் ‘நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ் போடவும் அவன் வடிவாகத் தெரியுறான் இது தெரியலை இவளுக்கு' என்று நினைத்தவள் “ஆமாம் ஆமாம்” என்று தலையசைத்தாள்.


ரேவதி தொடர்ந்து “இன்னும் இரண்டு நாள்ல ராகவன் ஊருக்கு வரான்” என்று சொன்னாள்.


சாரல் “ராகவன் வந்ததும் நீயும் ஊருக்கு போய்டுவியா?” என்று கேட்டாள்.


ரேவதி மெலிதாக புன்னகைத்து “அது சந்தேகம் தான் சாரல், இரண்டாவது பாப்பா வயிற்றுல இருக்கு இரண்டு மாசம் ஆகப் போகுது, இப்போத் தான் நாள் கணக்கு பண்ணேன்,நீ கொடுத்த சாப்பாடு சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல ஒரே வாந்தி.அம்மா நாள் கணக்கு கேட்கவும் தான் நினைவு வந்துச்சு” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.



உடனே சாரல் மகிழ்ச்சியாக “வாழ்த்துக்கள்” என்று விதுனை தூக்கி தட்டாமலை சுற்றியவள் “விதுனு உனக்கு இப்பவே அண்ணனாக பெரிய பதவி கிடைக்கப் போகுது சந்தோஷம்” என்று சிரித்தாள்.



பப்பு சாரலையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவளின் முகத்தில் புன்னகை வரும் பொழுது இவன் முகத்திலும் அதற்கான பிரதிபலிப்பாக உதட்டில் புன்னகை வரத் தொடங்கியது.



பப்பு வந்து இங்கு வந்து ஒரு வாரமாகிப் போனது.சாரலும் பப்புவும் எல்லா இடத்திற்கும் ஒன்றாக சுற்றினார்கள்.

கூடவே சாரலோடு அவளுடைய சிறுவர் படையும் இல்லையென்றால் சித்தப்புவும் உடன் இருந்தார்.



சித்தப்பு செய்த வேலைகளை இப்பொழுது பப்பு செய்துக் கொண்டிருந்தான்.கடைத் தெருவிற்கு சென்றால் பையை தூக்கிக் கொண்டு வருவது,மீன் மார்க்கெட்டில் அவளோடு உடன் செல்வது,விடியற்காலையில் மீனை விற்கும் போது நின்று வியாபாரம் பேசும் போது துணையாக நிற்பது என்று தாத்தா மற்றும் பேத்தியின் வாழ்வினில் இப்போது பப்புவும் அவர்களோடு ஒருவனாகிப் போனான்.



ராகவன் ஊருக்கு வந்த பிறகு சாரல் பப்புவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.அவனைப் பார்த்த ராகவன் “சாரல் நீ சொல்ற எதுவும் எனக்கு நம்பவே தோன்றலை,என்னவோ நீ பொய் சொல்றியோன்னு தோணுது” என்று நேராகவே அவளிடம் சொன்னான்.


சாரல் “ஏன் என்னாச்சு? இப்படி பேசுறே ராகவன்? நான் ஏன் உன்கிட்டே பொய் சொல்லப் போறேன்” என்று கேட்டாள்.



ராகவன் சிலநிமிட அமைதிக்குப் பிறகு பெருமூச்சுவிட்டப்படி “தெரியலை சாரல் என் மனசுக்கு என்னவோ சரின்னு படலை.எதுவாக இருந்தாலும் ரொம்ப நாளைக்கு அவனை இங்கே வைச்சுக்காதே! ஏன்னா அவனை பார்த்தால் நம்ம ஆட்களைப் போல் இல்லை.ரொம்ப வசதியானவனைப் போல் தெரியுது,என்னாத் தான் அவன் உன் கூட இருந்தாலும் அவன் பேசுற விதமே ரொம்ப வித்தியாசமா இருக்கு.

ஆனால் உன்கிட்டே அவன் நடந்துக்கிற விதம் வேற மாதிரி இருக்கு” என்று சொன்னான்.



ராகவன் சொன்னதைக் கேட்டு சாரல் திருதிருவென்று விழித்தாள்.பப்புவின் உண்மையைப் பற்றி சொல்லி விடலாமா? என்று யோசித்தாள்.ஆனால் ராகவனுக்கு உண்மை தெரிந்தால் அடுத்த நிமிடமே அவனை இங்கிருந்து வெளியே அனுப்பி விடுவான்.அவனை தடுப்பதும் ரொம்ப சிரமமாகி விடும் அதனால் அவள் அமைதியாக இருந்தாள்.



ராகவன் தொடர்ந்து “பப்புவை முதல்ல அவனை அறிமுகப்படுத்தும் போதே அவன் பார்வை ஏதோ ஒன்றை அவன் யோசித்து இருந்தான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது,அதோட இந்த ஒரு வாரமா நான் அவனை கவனித்தேன் சாரல்.அவன் செய்யுற வேலையில் ஒரு நேர்த்தி இருக்கு பேசுற வார்த்தைகள் கூட ரொம்ப யோசிச்சு பேசுறான்.நேத்துக் கூட ரெண்டு வெளிநாட்டுக்காரங்க அவன்கிட்டே ஆங்கிலத்துல ரொம்ப சாதாரணமாக பேசுறதைப் பார்த்தேன்” என்றான்.



சாரல் ராகவனை சமாளிக்கும் விதமாக “அவனுக்கு பேசத் தெரியுமான்னு இருக்கும் அதுக்கு என்ன?” என்று கேட்டாள்.


ராகவன் விடாமல் “இவ்வளவு துல்லியமா பேச திறமை இருக்கிறவன் எப்படி இங்கே உங்களோடு இருக்கிறான்? என்பது தான் என்னோட கேள்வி” என்று கேட்டான்.



சாரல் பொறுக்க முடியாமல் “ராகவன் நீ எல்லாத்தையும் சந்தேகமா பார்க்கிறே அதான்.தேவையில்லாத சந்தேகத்தை விடு எனக்கு வேலை இருக்கு நான் அப்புறமா பேசுறேன்” என்று அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடினாள்.



நேராக வீட்டிற்கு சென்றவள் “பப்பு ஹேய் பப்பு” என்று அழைத்தாள்.அவன் அங்கு இல்லை.வேறு எங்கே சென்று இருப்பான் என்று தேடினாள்.



கடலின் அருகே சென்று பார்த்தாள்.அங்கே அவன் நீச்சலடித்துக் கொண்டிருந்தான். அதை அப்படியே அதிர்ச்சியாகப் பார்த்த சாரல் மனதினுள் ‘'பப்புவுக்கு நீச்சல் அடிக்கத் தெரியுமா?’ என்ற யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



கடலலையின் வேகத்தில் நீந்திக் கொண்டிருந்தவன் கொஞ்சம் இளைப்பாறலாம் என்று எதிரே தெரிந்த கரையைப் பார்த்தான்.அங்கே சாரலைக் கண்டவன் தன்னைத் தேடித் தான் வந்து இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன் அவளை நோக்கி நீந்தி வந்தான்.



கரைக்கு அருகில் வரவும் எழுந்து நடந்து வந்தான் பப்பு.மேலே எந்தவொரு உள் சட்டையும் அணியாமல் கட்டுக் கோப்பான உடலோடு இடுப்பில் ஒரு முட்டிவரை முக்கால் பேண்ட் அணிந்தபடி தன் முன்னால் விழுந்த தலைமுடியை சரி செய்தபடி அவளைப் பார்த்து புன்னகைத்து வந்த பப்புவைப் பார்த்ததும் சாரலுக்கு அவன் வித்தியாசமாகத் தெரிய ஆரம்பித்தான் பப்பு என்கிற ஆதித்யா.
 
Top Bottom