உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -13
கோபாலன் தாத்தா சொன்னதைக் கேட்ட ராகவன் “உங்க பொண்ணுக்கு நடந்த மாதிரியே சாரலுக்கும் நடந்துடும் பயப்படுறீங்க தாத்தா.சாரலுக்கு நாங்க எல்லோரும் இருக்கோம் அவளை அப்படியே கவனிக்காமல் விட மாட்டேன்” என்றான்.
தாத்தா சிரித்துக் கொண்டே “உன் மேல நம்பிக்கை இல்லாமல் இந்த முடிவை நான் எடுக்கலை ராகவன்.சாரலுடைய கைகள் பிடித்துக் கொடுக்கப் போகிற கரங்கள் மேல எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.
தாத்தா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான ராகவன் “என்ன சொல்லுறீங்க தாத்தா? சாரல் விரும்புற பப்புவை பத்தி சொல்லுறீங்களா? அவனைத் தான் உங்களுக்குத் தெரியும் தானே அவன்கிட்ட கெட்ட பழக்கம் ஏதும் இருக்கோ?” என்று கேட்டான்.
தாத்தா தன் தலையை தாழ்த்தி “பப்பு பத்தி எனக்கு மட்டும் இல்லை சாரலுக்கும் ஒன்னும் தெரியாது” என்று சொன்னார்.
ராகவன் புரியாமல் “யாருக்குமே தெரியாதுன்னா அவன் எப்படி இங்கே இருக்கான்?என்ன விஷயம்னு விவரமா சொல்லுங்க” என்று கேட்டான்.
தாத்தா நடந்த எல்லாத்தையும் விவரமாகச் சொன்னார்.அதைக் கேட்டு அவன் அதிர்ச்சியில் தன் தலையில் கைவைத்தவன் “என்ன தாத்தா நீங்க? இவ்வளவு பெரிய விஷயத்தை செய்து வைச்சு இருக்கீங்க? ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருக்கலாம்,
இதுக்காக எதாவது ஒரு வழியை நாம யோசிச்சு இருக்கலாம். யாருன்னு தெரியாத ஒருத்தனை இப்படி வீட்ல வைச்சதே தப்பு,இப்போ சாரல் விரும்புற வரை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க,இப்பவே நான் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புறேன்” என்று ஆவேசமாக பேசினான் ராகவன்.
தாத்தா அவனது தோளைப் பிடித்து நிறுத்தியவர் “அவசரப்படாதே ராகவா கொஞ்சம் நிதானம் தேவை,இப்போ நீ நேராக போய் பப்புகிட்டே கேட்டாலும் அவனை அடிச்சாலும் அது அவனை பாதிக்க போறது இல்லை.கட்டாயம் அதை சாரலைத் தான் பாதிக்கும்.உண்மை உனக்கு தெரிஞ்சிடுச்சு அதான் நீ
இப்படி நடந்துக்கிறேன்னு உன் மேல கோபம் தான் கொள்வாள்” என்று சொன்னார்.
ராகவன் பொறுக்க முடியாமல் “அப்போ யாருன்னே தெரியாத ஒருத்தனை சாரல் லவ் பண்ணிட்டு இருப்பா,நாம அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கனுமா?”
தாத்தா “இல்லை நான் எல்லோருக்கும் நல்லதே நடக்கும் விதமாக பேசுறேன்.முதல்ல பப்புகிட்டே பேசி அவனை இங்கிருந்து அனுப்புறேன்.அப்புறமாக நாம் சாரல்கிட்டே நிதர்சனத்தை பேசி புரிய வைக்கலாம்.நான் கொள்வாள்” என்று நம்பிக்கையோடு பேசிறார்.
தாத்தா பேச்சில் ராகவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அதனால் அவன் “நீங்க சொல்றதுனால இப்போதைக்கு நான் அமைதியா இருப்பேன்,ஆனால் ரொம்ப நாளைக்கு இதை நீடிக்க விடாதீங்க” என்று கவலையோடு சொன்னான்.
தாத்தா அவனிடம் “நீ கவலைப்படாதே மக்கா எல்லாம் நல்ல படியா நடக்கும்” என்று ஆறுதல் சொன்னார்.
கோபாலன் என்ன தான் அவனை சமாதானம் செய்து அனுப்பினாலும் ராகவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது சாரலும் அவனும் எப்போதும் போல் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.அதைக் கண்டவன் பப்புவிடம் “ஹேய் பப்பு உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் எந்த பொண்ணுகிட்டயாவது நின்னு வழிஞ்சிட்டு நிற்பியோ?” என்று கோபமாக கத்திக் கேட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத இருவரும் அவனை அதிர்ச்சியில் பார்த்தனர்.
சாரல் “ராகவா ஏன் இப்படி பேசுறே? பப்பு யார்கிட்டயும் அப்படி பேசுற ஆள் இல்லை.ஒழுங்கா பேசு” என்று பதில் சொன்னாள்.
அதைக் கேட்ட ராகவன் கோபத்தோடு “ஒழுங்கா பொண்ணா லட்சணமா வீட்ல இரு சாரல்,எல்லாத்துலயும் வந்து தலையிடாதே!” என்று யோசிக்காமல் வார்த்தைகளை விட ஆரம்பித்தான் ராகவன்.
அவன் அப்படிச் சொன்னதும் சாரலுக்கு வருத்தம் மேலிட அழுகை வந்து முட்டி நின்றது.அதை கவனித்த பப்பு சாரலிடம் மெதுவாக “நீ உள்ளே போ சாரல், நான் அப்புறமா வரேன்.தேவையில்லாத மனஸ்தாபம் வேண்டாம்” என்று எந்த பதிலும் ராகவனைப் பார்த்து பேசாமல் அங்கிருந்து சென்றான் பப்பு.
அப்பொழுது அங்கே வந்த ரேவதி அங்கிருந்த சூழ்நிலை சரியில்லாததால் ஏதோ நிலைமை சரியில்லை என்று புரிந்தவள் ராகவனிடம் “ராகவா விதுன் உன்னைத் தேடி அப்பா அப்பான்னு அழுறான். வா உள்ளே போகலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டுச் சென்றான்.
சாரல் உள்ளே போய் கதவை தாழிட்டுக் கொண்டாள்.
அன்றைய மாலை ஆரம்பிக்கும் நேரம் சாரல் கடற்ரையில் ஓரமாக இருந்த சிறிய பாறையின் மேல் ஓரமாக உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.
நேரங்கள் கடந்து இருந்தாலும் ராகவனின் வார்த்தையின் விரீயம் அவளை வதைத்துக் கொண்டிருந்தது.அதனால் தனிமையில் அமர்ந்திருந்தாள்.
சாரலின் முகத்தைப் பார்த்து அவளது மனநிலை சரியில்லை என்று புரிந்துக் கொண்ட பப்பு அவளைத் தேடி வந்தான்.இறுதியில் பாறையின் மேல் உட்கார்ந்து இருப்பவளைக் கண்டுக் கொண்டவன் சாரலிடம் “அங்கே என்னச் செய்யுறே சாரல்” என்று கேட்டான்.
சாரல் “எனக்கு இந்த மாதிரி கொஞ்சம் உயரமான இடம்னா எனக்கு பிடிக்கும்” என்றாள்.
பப்பு சிரித்துக் கொண்டே “அப்படியா! என் கூட வா இதை விட அழகான ஒரு இடத்தை நான் காட்டுறேன்” என்று சொன்னான்.
சாரல் “இப்போ வேண்டாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்” என்று மறுத்தாள்.
பப்பு விடாமல் “ஒரு விஷயத்தை நாளைக்குன்னு தள்ளி போடுறதை விட உடனே செய்றது தான் நல்லது.நான் அழைச்சா நீ வர மாட்டியா சாரல்?என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று அவன் வார்த்தையிலேயே வருத்தத்தைக் கொட்டி வைத்துக் கேட்டான்.
அவன் அப்படிக் கேட்கவும் சாரலால் மறுக்க முடியவில்லை.அதனால் “சரி வரேன் வா போகலாம்” என்று அவளும் சரியென்று சொன்னதும் “நீ இங்கேயே வெயிட் பண்ணு இதோ வரேன்” என்று வேகமாக ஓடினான்.
சாரல் மெதுவாக அந்த பாறையில் இருந்து இறங்கினாள்.மனதினுள் ‘போற முன்னாடி என் கையைப் பிடிச்சு இறக்கி விட்டுப் போய் இருக்கலாம்ல அத்தனை அவசரமா என்ன?’என்று தன்னுள்ளே எண்ணிக் கொண்டாள்.
கடலலையில் கால்களை நனைத்துக் கொண்டிருந்தாள்.
பதினைந்து நிமிடம் கழித்து வந்தான் பப்பு.தோளில் ஏதோ ஒரு பையை மாட்டிக் கொண்டு வந்தவன் “போலாமா?” என்று கேட்டான்.
சாரல் அவனை மேலும் கீழுமாக பார்த்து சிரித்தவள் “இந்த ஊர்ல பிறந்து வளர்ந்தே எனக்கே இங்கே அழகான ஒரு இடத்தை காட்டப் போறியா? சரி வா போகலாம்” என்று சொன்னாள்.
பப்புவும் அவளும் கொஞ்சம் இடைவெளி விட்டு அந்த கடலலையின் சில்லிட்ட நீரில் பாதங்கள் நனைய மணலில் புதையுண்ட பாங்களை தூக்கி வைத்தப்படி நடந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நடந்தனர்.ஒரு பதினைந்து நிமிட கடலோரமாய் நடந்த பிறகு சின்னதாக ஒரு மேடு வந்தது.
அதில் பப்பு முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து அவளும் சென்றாள்.பெரிய கற்களாக இல்லாமல் கொஞ்சம் சிறிய கற்கள் இருக்க அதில் ஏறி நடக்க வேண்டும்.
பப்பு அவனது கரங்களை நீட்டி “என்னைப் பிடிச்சிக் கோ சாரல் இதுக்கு மேல ஏறிப் போனால் தான் நல்லா இருக்கும்” என்று சொன்னான்.
எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அவனது கரங்களை சாரல் பிடிக்கவும் அழுத்தமாய் பிடித்துக் கொடவனின் அந்த தொடுஉணர்வு அதே நேரம் சாரலுக்கு அவன் மீது ஒரு நம்பிக்கையை தந்தது.
இருவரின் முகத்திலும் புன்னகை நிறைந்து இருக்க அதில் ஏறினார்கள்.சாரலுக்கு மூச்சு வாங்கியது.
“ரொம்ப கஷ்டமா இருக்கு பப்பு” என்று சொன்னாள்.
அவனோ “அதான் நான் இருக்கேன்ல நான் வேணும்னா உன்னை என் முதுகுல போட்டு தூக்கட்டுமா?” என்று கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் வெட்கம் அவளை மொத்தமாக ஆட்கொண்டிருந்தது.உடனே இவளோ “ஆசையைப் பாரு” என்றதும் அவனோ “சாரல் இந்த நாளை நீ என்றைக்கும் மறக்க மாட்டே பாரு.ஏன்னா கஷ்டப்பட்டு செய்யுற எந்த விஷயமும் சீக்கிரம் மறக்கவும் மாட்டோம்,அதே நேரம் அது நிலைச்சும் இருக்கும்” என்றான்.
இருவரும் பேசியபடியே அங்கே மேலே ஏறும் பொழுது பப்புவிற்கு லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது.அதை பெரிதாக அவன் பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை.
சூரியன் மங்கலாக நேரமானது.இருவரும் மலைமுகட்டின் முனை பக்கம் வரும் போது கீழே கடலும் எல்லையற்ற நீலநிற வானமும் ஒன்றாக இருப்பதை இருவரும் பார்த்து இரசித்தனர்.சுற்றி எங்கும் சிறு சிறு செடிகள்,கொடிகள் எல்லாம் படர்ந்து கிடந்தது.
சாரல் “பப்பு எனக்கு ரொம்ப தாகமா இருக்கு” என்று சொன்னாள்.உடனே தான் போட்டு வந்த பையை கழற்றி அதில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கி குடித்தவள் “எல்லா ஏற்பாடுகளோடும் வந்தியா?”
அவனோ ஆமாம் என்று தலையசைத்தான்.அங்கே அவர்கள் இருவரும் உட்காருவதற்கு சின்னதாக ஒரு விரிப்பை விரித்தான்.
பின்னர் அவளுக்கு பிடித்த சில நொறுக்கு தீனிகளை எடுத்து வைத்தான்.அங்கே ஒரு சிறிய மின்விளக்கையும் அருகில் வைத்தான்.
“இந்த சாப்பிடு சாரல் நல்ல பசிக்கும்” என்று ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
சாரல் அவன் செய்வதை எல்லாம் ஆச்சரியமாக பார்த்தவள் “எப்படி உன்னால இவ்வளவு முன்னெச்சரிக்கையா வரனும் தெரிஞ்சது?” என்று கேட்டாள்.
பப்பு “தெரியலை சாரல்.ஆனால் இப்படி மலையேறி வருவது எனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.
இருவரும் சின்ன இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
இருவருக்குள்ளும் அமைதி தொடர்ந்தது.பப்பு சாரலிடம் “உன்னுடைய ஆசை என்ன?” என்று கேட்டான்.
சாரல் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
பப்பு “சொல்லு நான் எதுவும் கிண்டலாகச் சொல்ல மாட்டேன்” என்றான்.
சாரல் “இதுவரைக்கும் யாரும் என்கிட்டே இந்த மாதிரி கேட்டதில்லை பப்பு.நீ தான் முதல் தடவை இப்படி கேட்கிறே. அந்த மாதிரி எதுவும் இதுவரைக்கும் எதுவும் தோன்றியது இல்லை” என்றாள்.
சாரலைப் பார்த்து சிரித்தான் பப்பு.“இந்த மாதிரி இடம் இருக்குன்னு யாருமே சொன்னது இல்லை.நானும் வந்தது இல்லை பப்பு ரொம்ப தாங்ஸ்,உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்” என்று கேட்டாள்.
பப்பு “இந்த மாதிரி அமைதியான இடம் பிடிக்கும்.அப்புறம் நல்ல அழகா டிரெஸ் பண்ண பிடிக்கும்”
சாரல் ஆச்சரியமாய் “அப்படியா! எப்படி இந்த ஹீரோஸ் போடுற மாதிரியா?” என்று கேட்டாள்.
“இல்லை அதை விட வித்தியாசமா போட்டு இதோ இப்படி நடக்கனும்”என்று பப்பு வித்தியாசமாக நடந்து காட்டினான்.
சாரல் அவன் செய்வதை எல்லாம் விழிகளை அசைக்காமல் ஆச்சரியமாக பார்த்தாள்.பப்பு திடீரென்று அவளருகில் வந்து குனிந்து நின்றவன் “உன்னுடைய ஆசை என்னன்னு நான் கேட்டேன்ல நீ ஏன் என்னுடைய விருப்பத்தைப் பத்தி கேட்கலை” என்று கேள்வி கேட்டான்.
அவன் அப்படி நெருங்கி வந்து கேட்கவும் அவளுடைய இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது சாரல் மெதுவாக “சொல்லு பப்பு உன்னுடைய ஆசை என்ன?” என்று கேட்டாள்.
அவள் கேட்ட அடுத்த நொடி எதைப் பற்றியும் யோசிக்காமல் பப்பு சட்டென்று தனது கரங்களால் அவளது முகத்தினை தாங்கிக் கொண்டவன் “என் உயிர் இருக்கும் வரை எப்பொழுதும் என்றைக்கும் என் கண்கள் நிறைவா நான் உன்னை பார்த்துட்டே இருக்கனும் சாரல்” என்று தன் உதடுகளால் அவளுடைய நெற்றியில் தன் முத்திரையைப் பதித்தான் பப்பு என்கிற ஆதித்யா.
இதை சற்றும் எதிர்பார்க்காத சாரல் அந்த அன்பினை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தவளுக்கு பதில் தெரியாமல் விழிகளில் இருந்து கண்ணீர மட்டும் வெளியானது.
அவளது கண்ணீர் அவனது கரங்களை நனைக்கும் போது பதறியபடி சாரலின் முகத்தை பார்த்தவன் “என்னாச்சு சாரல் என்னை உனக்கு பிடிக்கலையா? ஏன் அழுகிறே?” என்று அவன் மனம் ஏதோ தவறு இழைத்தது போல் அவளது முகத்திலிருந்து தன் கரங்களை விலக்கிக் கொள்ளவும் அதே வேகத்தில் அவனது கரங்களைப் பிடித்து தன் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டாள்.
அவன் புரியாமல் பார்த்தான்.சாரல் விழிகளை திறக்காமல் “பப்பு இந்த நேசத்தை ஏற்றுக் கொள்ள எனக்கு பயமா இருக்கு.ஏன்னு நீ யோசிக்கலாம்.உன் வாழ்க்கையின் பெரும்பகுதியா இருந்தவங்களையும் உன்னையும் மறந்த உன்னால உன்னுடைய வாழ்வில் சிறு பகுதியா இல்லை சிறுபக்கமா இருக்கிற என்னை நினைவுப்படுத்த முடியுமா?” என்று கேட்டாள்.
எந்த ஒரு பதிலும் சொல்லாமல் திரும்பவும் அவளது விழிகளில் முத்தமிட்டவன் “மூளை வேண்டுமானால் நினைவுகளை மறக்கலாம் சாரல்.என் மனம் கொண்ட நேசம் மறக்காது,மறந்தாலும் அது எப்படியோ தன்னை மீட்டிக் கொள்ளும் சாரல்.இந்த காதலும் ஒருவரிடம் மட்டும் தான் உண்மையாய் நேசித்துக் கொள்ளும் அது என்றைக்கும் நீ மட்டும் தான் சாரல்” என்று சொல்லும் போது அவனுடைய விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவளின் கன்னத்தை தொட்டது.
அவன் சொன்ன வார்த்தைகளில் சாரலின் அந்த கரங்களின் பிடிப்பு இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுத்ததை அவனும் உணர்ந்துக் கொண்டான்.
நடந்தவை எல்லாம் அவனின் நினைவுகள் முழுமையாக மீட்டிக் கொள்ளவும் நிகழ்காலத்தில் தூக்கத்தில் இருந்து விழிகளை திறந்து எழுந்தவனை போல் எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையில் இருந்த கைப்பேசியில் இருந்த புகைப்படத்தைக் கண்டவன் “சாரல் சாரல் நீ தான் நான் தொலைத்த என் பொக்கிஷம் இதோ உன்னைத் தேடி வரேன்” என்று சொன்னவன் சாரல் சென்ற வீட்டை புகைப்படம் எடுத்தது நினைவுக்கு வர அங்கே போய் விடியற்காலையில் நின்றான் ஆதித்யா.