உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -15
ராகவன் அடித்ததும் பப்பு அதை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றான்.
சாரல் ஓடி வந்து பப்புவின் அருகில் நின்றவள் ராகவனிடம் “எதுக்காக இப்போ நீ பப்புவை அடிச்சே ராகவா அவன்கிட்டே மன்னிப்பு கேளு” என்று சொன்னாள்.
ராகவன் முறைத்துக் கொண்டு “இவன்கிட்டே நான் மன்னிப்பு கேட்கனுமா? முடியாது தப்பு செஞ்சவன் அவன் தானே யார்கிட்ட அனுமதி கேட்டுட்டு உன்னை அவனோடு அழைச்சிட்டு போவான்?” என்று கேட்டான்.
சாரல் கொஞ்சமும் யோசிக்காமல் “அவன் என்கிட்ட அனுமதி கேட்டுட்டு தான் அழைச்சிட்டு போனான். அப்படி அடிக்கனும்னா நீ என்னை தான் முதல்ல அடிக்கனும் அடி” என்று கோபத்தில் கத்தினாள்.
தாத்தா சுற்றும் முற்றும் பார்த்தார்.இவர்கள் சண்டையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.உடனே தாத்தா “சாரல் காலையிலே எல்லாம் பேசிக்கலாம்.இப்போ நீ உள்ளே வா” என்று சொன்னார்.
ஆனால் ராகவன் சாரல் கேட்ட கேள்வியில் இன்னும் கோபமானவன் “அவனுக்காக நீ என்னையே எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டியா சாரல்?” என்று கேட்கவும் ரேவதி அங்கே வந்தாள்.
சாரல் விடாமல் “நீ என்ன செய்தாலும் அதை நான் அமைதியா பார்த்துட்டு இருக்க முடியாது.நீ முதல்ல பப்புகிட்டே சாரி கேளு” என்று சொன்னதும் ரேவதி உடனே ராகவனுக்கு ஆதரவாக “சாரல் என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியலை.ஆனால் ராகவனை விட யாரென்றே தெரியாத பப்பு தான் உனக்கு முக்கியமா? அவரை எதுக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லுறே?” என்று கேட்டாள்.
சாரல் கொஞ்சமும் தயங்காமல் “இனி நான் செய்யனும்? செய்யக் கூடாதுன்னு சொல்ல இங்கே யாருக்கும் உரிமையில்லை.அதனால தேவையில்லாமல் என் விஷயத்துல தலையிடாதே ராகவன். பப்பு நீ உள்ளே வா” என்று அவனை அழைக்க அவனோ “இப்போ நான் இங்கே இருப்பது சரியில்லை சாரல்” என்று சென்று விட்டான் பப்பு.
ராகவனுக்கும் ரேவதிக்கும் சாரலின் பேச்சு ஒரு மாதிரியாகிப் போனது.அதனால் தாத்தாவிடம் ராகவன் கோபமாக “தாத்தா இனி அவள் விஷயமா எதுவும் என்கிட்டே வந்து பேசாதீங்க.நல்லது நினைக்கிற நாங்க அவளுக்கு எப்பவோ வேண்டாதவளாக ஆகி விட்டோம்” என்று ரேவதியை தன்னோடு அழைத்துச் சென்றான்.
தாத்தா என்ன பேசுவதென்று புரியாமல் அப்படியே அங்கிருந்த இருக்கையில் அயர்ச்சியில் அமர்ந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன் தாத்தாவின் காதில் ஏதோ ஒன்றை சொல்லிப் போனான்.தாத்தாவின் முகமே மொத்தமாக மாறிப்போனது
அன்றைக்கு இரவு யாரும் யாருடனும் பேசவில்லை.எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி அங்கே மறைந்து போய் பேரமைதி நிலவியது.
மறுநாள் காலை தாத்தா சாரலிடம் வந்து “சாரல் இன்னைக்கு எதுவும் சமைக்க வேண்டாம்.நான் வெளியே போயிட்டு வரும் போது சாப்பாடு வாங்கிட்டு வரேன்.வீட்டை சுத்தம் செய்து வை சொந்தக்காரங்க நோட்டீஸ் வைக்க வராங்க” என்று நேற்று நடந்த பிரச்சினைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் நடந்துக் கொண்டார்.
சாரல் “தாத்தா கொஞ்ச நேரம் இருங்க, நான் உங்ககிட்டே பேசனும்” என்றாள்.
தாத்தாவோ “முக்கியமான வேலை இருக்கு, சீக்கிரம் வந்துடுவேன் அப்போ பேசலாம்” என்றார்.
சாரலும் சரியென்று தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.பப்புவையும் காலையில் இருந்து பார்க்கவில்லை.மீனை பெட்டியில் அடுக்க வேண்டிய வேலை இருக்கிறது என்று சித்தப்பு சொன்னார்.அதனால் அவரும் பப்புவும் வீட்டிற்கு தற்போது வர முடியாது என்று கைப்பேசியில் பேசும் போது சொன்னார்.
நண்பகல் நேரத்தில் தாத்தா சாரலுக்கு பிரியாணி வாங்கி கொண்டு வந்துக் கொடுத்து இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
சாரல் அடுத்து பேச வாயெடுக்கவும் தாத்தா “சாரல் நோட்டிஸ் வைக்க வந்தவங்களுக்கு கொடுக்க எதாவது டீக்கு வைக்க பலகாரம் வாங்கிட்டு வரேன்.நீ டீ போட்டு வை மக்கா ” என்று சென்று இருந்தார்.
தாத்தாவின் உறவுக் காரர்கள் யாராவது வீட்டிற்கு வருவதாக இருந்தால் சாரலை நல்ல உடையை அணிந்து இருக்கச் சொல்வார்.ஏனென்றால் அவரை யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்று. அதே போல் தலைமுடியை பின்னலிட்டு நல்ல உடையை அணிந்துக் கொண்டு நின்றாள்.
தாத்தா வரும் பொழுதே அவர் சொன்ன உறவுக்காரர்களும் வந்து இருந்தார்கள்.நாலைந்து பெண்களும் இரு ஆண்களும் வந்து இருந்தார்கள்.தாத்தா எல்லோரையும் வரவேற்று உட்கார வைத்தார்.
சாரல் அவளது அறையின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்தாள்.பொதுவான பேச்சுகள் எல்லாம் நடந்துக் கொண்டிருந்தது.
தாத்தா சிறிது நேரம் கழியவும் “சாரல் டீ எடுத்துட்டு வா மக்கா” என்று சொன்னார்.
சாரல் தேநீரை எடுத்து வந்து ஒவ்வொருவருக்காக கொடுத்து முடியவும் கடைசியாக இருந்தவனிடம் கொடுக்கும் போது பக்கத்தில் இருந்த பெண்மணி “சாரல் மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோம்மா.அப்புறமா மாப்பிள்ளை யாருன்னு கேட்காதே” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
அந்த பெண்மணி சொன்ன வார்த்தையைக் கேட்டதும் சாரல் பிடித்து இருந்த தட்டு பதற்றத்தில் நடுக்கத் தொடங்கியது.அந்த நடுக்கத்தோடு கொடுத்து விட்டு திரும்பி தாத்தாவைப் பார்த்தாள்.
அவரோ சாரலைப் பார்க்காமல் முகத்தை வேறுபக்கமாக திருப்பி நின்றுக் கொண்டிருந்தார்.சாரலுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.கீழ் உதட்டை மடக்கி அடக்கியபடி நின்று இருந்தாள்.இத்தனை வருடமாக வளர்த்த தாத்தாவின் மரியாதையை இப்போது எல்லோர் முன்னிலையில் கத்தி கூச்சலிட்டு அதை கெடுக்க விரும்பாமல் அமைதியாக நின்றாள்.
அங்கே வந்த நபரில் ஒருவர் “மாப்பிள்ளைக்கும் பொண்ணை பிடிச்சி இருக்காம்.நீங்களும் சம்மதம்னு சொன்னால் தாம்பூலம் இப்பொழுதே மாற்றிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.
சாரல் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவரோ அவளைப் பார்க்காமல் “எங்களுக்கும் முழுசம்மதம் தான்.தாம்பூலம் இப்பொழுதே மாற்றிக் கொள்ளலாம்” என்று உடனடியாக தேங்காய்,பூ,பழங்கள் நிறைந்த தாம்பூலத்தை இருவரும் மாற்றிக் கொண்டார்கள்.
வந்திருந்த எல்லோரும் தேநீர் குடித்து விட்டு “மத்த விஷயங்களை போனில் பேசலாம்” என்று சென்று இருந்தார்கள்.
அவர்கள் போகும் வரை சாரல் எங்கே நின்றுக் கொண்டிருந்தாளோ அங்கே அப்படியே நின்றாள்.தாத்தா அவள் இருப்பதை பார்த்து ஒரு வார்த்தைக் கூட என்னவென்று கேட்காமல் அமைதியாக இருந்தார்.
சாரலுக்கு உலகமே இருண்டது போல் இருந்தது.இத்தனை வருடங்களாக அவள் வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் இந்த நொடி மொத்தமாக உடைந்தது போல் இருந்தது.தாத்தாவிற்கு தான் பப்புவை விரும்பியது தெரிந்து இருக்கிறது.
அவளிடம் இதைப் பற்றிய எதாவது கேட்டு முடிவெடுத்து இருக்கலாம்.ஆனால் தன் தாத்தா எதையும் அவளிடம் பேசாமல் அவரே முடிவெடுப்பது அவருக்கு அவள் மீதான நம்பிக்கை குறைந்து இருக்கிறது என்று புரிந்துக் கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
ஆனால் பப்புவோ இங்கு நடப்பது எதுவும் தெரியாமல் இருந்தான்.அன்றைக்கான பொழுது வேலையில் சென்றது.
மறுநாள் காலை சாரலைப் பார்க்கலாம் என்று பப்பு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தான்.ஆனால் சித்தப்பு அவனுக்கு அடுத்தடுத்த வேலைகளை வைத்திருந்தார்.கடைசியாக சித்தப்பு பப்புவிடம் “பப்பு இன்னைக்கு கடைத்தெருவிற்கு போறேன்.நீயும் என்கூட வாயேன்” என்று அழைத்தார்.
அவனால் மறுக்க முடியவில்லை.அதனால் இருவரும் கடைத் தெருவிற்கு ஒரு மணிநேரம் பயணம் மேற் கொண்டனர்.
எப்போதும் சிரிப்பும் பேச்சும் நிறைந்திருந்த வீட்டில் இப்போது அமைதி மட்டுமே இருந்தது.நேற்று ராகவனை பேசியதால் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் வரும் ரேவதி இன்று சாரலைப் பற்றி கேட்டு வரவில்லை.
தாத்தா சாரலிடம் பேச வந்தால் சாரல் எந்த பதிலும் சொல்லும் அமைதியாக இருந்தாள்.பப்புவும் சாரலிடம் பேசவில்லை.சாரலுக்கு அழுகையாக வந்தது.அதை அப்படியே அடக்கிக் கொண்டாள்.
அவள் செய்த சாப்பாடு எல்லாம் அப்படியே இருந்தது.யாரும் எதுவும் சாப்பிடவில்லை.சூரியன் மறையும் நேரம் செல்லம்மா கோபாலனை பார்க்க வந்தார்.அவருடன் ரேவதியும் இருந்தாள்.
செல்லம்மா கோபாலனை பார்த்து “சித்தப்பா ஊர்ல பேசிக்கிறது உண்மையா?” என்று கேட்டார்.
“நீயும் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்பேன்னு நான் நினைக்கலை” என்று மேலே பார்த்தப்படி சொன்னார்.
“இல்லை அது வந்து” என்று இழுத்தார்.சாரல் என்னவென்று புரியாமல் விழித்தாள்.
“இந்த பேச்சு மேலும் வளரக் கூடாதுன்னு தான் சாரலுக்கு ஒரு வரனைப் பார்த்து முடிச்சி இருக்கேன்” என்றார்.
செல்லம்மா “அதுக்கு உங்க பிள்ளையா இந்த வீட்டோட இருக்கிற பப்புவையே சாரலுக்கு கல்யாணம் செய்து வைச்சு இருக்கலாமே” என்றார்.
தாத்தா எதுவும் பேசவில்லை.
“இதுல எனக்கு விருப்பம் இல்லை.அதோட நீ சொன்ன மாதிரி பப்புக்கு திருமணம் முடித்து வைத்தால் ஊர் வாய் பேசுனது உண்மைன்னு ஆகிடாதா?” என்று கேட்டார்.
சாரலுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.நேராக உள்ளே இருந்த அறையில் போய் இருந்தாள்.இதை எல்லாம் கவனித்த ரேவதி நேராக சாரலைப் பார்த்தவள் அவளருகில் சென்று தோள்களில் கைவைத்தவள் “சாரல் பப்புவும் நீயும் தாத்தாகிட்டே மனம் விட்டு பேசுங்க.தாத்தா உன் நிலைமையை புரிந்துக் கொள்வார்” என்றாள்.
ரேவதி அப்படி பேசியதும் அவளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் சாரல்.
“என்னை மன்னிச்சிடு ரேவதி.உன்னையும் ராகவனையும் நான் எப்படி பேசினேன்?அதை எதையும் மனசுல வைச்சுக்காமல் நீ மட்டும் எனக்கு எப்பவும் நல்லது தான் நினைக்கிறே நான் தான் முட்டாள் புரிஞ்சுக்காமல் பேசிட்டேன்”என்று அழுதாள்.
அவளது தோள்களை ஆதரவாக வருடிக் கொடுத்த ரேவதி “யார் மேல பாசம் அதிகமா வைச்சு இருக்கோமோ அவங்க மேலத் தான் கோபப்பட முடியும்.எல்லார்கிட்டயும் அன்பையும் காட்டுவோமா? நமக்கு பிடிச்சவங்க மேலத் தானே.அது போலத் தான் கோபமும் சரியா? இப்போ இது முக்கியமில்லை சாரல்.உன் வாழ்க்கைத் தான் முக்கியம்.ஊர் முழுக்க ஒரே தப்பான பேச்சு நடந்துட்டு இருக்கு” என்று சொன்னாள்.
சாரல் புரியாமல் ரேவதியை பார்த்தாள்.ரேவதி “நேத்து நீயும் பப்புவும் அந்த மலை பக்கமா போனதை யாரோ ரெண்டு பேர் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வைச்சு தேவையில்லாத கட்டுக்கதை எல்லாம் ஊர் முழுக்க பரவி இருக்கு.ஏற்கனவே எப்படா எவன் சிக்குவான்னு இருந்த இந்த சனங்களுக்கு இப்போ நீயும் பப்புவும் தான் முக்கிய செய்தியா போயிட்டீங்க. அதனால உடனே பப்புவை இங்கே வரச் சொல்லு” என்றாள்.
பப்புவிடம் கைப்பேசி இல்லாததால் சித்தப்புவின் எண்ணிற்கு அழைத்தாள்.அந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதில் வந்தது.
ரேவதி “நான் ஆள் அனுப்பி விட்டு என்னன்னு பார்க்கிறேன் சாரல்.நீ கவலைப்படாதே!” என்று ஆறுதல் படுத்தினாள்.
அன்றைய இரவு பன்னிரெண்டு மணி ஆகியும் பப்புவும் சித்தப்புவும் யாரும் வீட்டிற்கு வரவும் இல்லை.அவர்கள் இருவரையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று ரேவதி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
நிறைய தேடலோடும் ஏக்கத்தோடும் அன்றைய இரவு கழிந்தது.மறுநாள் காலையில் வாசல் கதவை தட்டு சத்தம் கேட்டது.சாரல் எழுந்து போய் கதவை திறந்தாள்.
அங்கே ரேவதியும் ராகவனும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
ராகவன் “தாத்தா உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லனும்”
“என்னன்னு சொல்லு மக்கா”
“தாத்தா சித்தப்புவும் பப்புவும் போன வண்டி நேத்து ஆக்ஸிடென்ட் ஆகி போச்சு” என்றான்.தாத்தாவும் சாரலும் பதறியபடி அவனருகில் வந்தார்கள்.தாத்தா “என்ன சொல்றே? எப்போ இது நடந்திச்சு” என்று கேட்டார்.
“நேத்து இரவு நடந்து இருக்கு தாத்தா.இதுல முக்கியமான விஷயம் என்னன்னா அடி பட்டதில் சித்தப்பு மயக்கம் போட்டு விழுந்து இன்றைக்கு காலையில் கண் விழிச்சு இருக்காரு.அருகில் இருந்த பப்புவை காணலையாம்,பக்கத்தில் எல்லோர்கிட்டயும் விசாரித்து இருக்காரு நேத்து இரவே எழுந்து தன்னாலேயே வெளியே போய் விட்டான்னு சொல்லுறாங்க” என்றான்.
சாரலுக்கு கேட்பது அனைத்தும் உண்மையா? பொய்யா? என்ற நிலைமையில் அவளுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது.