• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே (இறுதி அத்தியாயம்)

STN - 71

Member
Staff member
இறுதி அத்தியாயம்

அன்று தருணேஷிற்குத் திருமணம். அந்த மண்டபமே விருந்தாளிகளின் வருகையால் திருவிழாக் கோலம் பூண்டு, மகிழ்ச்சியில் நிறைந்து காணப்பட்டது. மணமேடையில் மணமகன் தருணேஷ் மற்றும் மணமகள் சாந்தினியோடு, குடும்பத்தினர் முகத்திலும் பேரானந்தம் தவழ, மங்கல வாத்தியங்கள் முழங்க, அந்த சந்தோஷத்துடனேயே சாந்தினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, அவளை தன் சரிபாதியாக்கிக் கொண்டான் தருணேஷ்.

தன் தமையனின் திருமண நிகழ்வை, அந்த புனிதமான தருணத்தைப் பார்த்த கணம், பவித்ராவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவளுக்காகத் தானே தன் வாழ்க்கையையே தள்ளிப் போட்டான், தன் அன்பு தமையனை இப்போது மணமேடையில் அவன் சரிபாதியோடு அமர்ந்து இருப்பதை பார்த்த சந்தோஷம் கண்ணீராய் அவள் கன்னத்தில் வழிய, அதை கவனித்த கௌதம், அவளது கண்ணீரை மென்மையாகத் தன் விரல்களால் துடைத்துவிட்டு, அவளைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டான்.

தன் கணவனின் அரவணைப்பில், அந்த பாதுகாப்பான உணர்வில் பவித்ராவின் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பிட, அந்த சந்தோசத்தோடு அண்ணனின் வாழ்வு சிறக்க வேண்டும் என்றும் மனதார வேண்டிக்கொண்டு, கௌதமின் தோளில் சாய்ந்து திருமண நிகழ்வை ரசிக்கத் தொடங்கினாள்.

நாட்கள் மெல்ல நகர, தருணேஷ் சாந்தினியின் இல்லற வாழ்வு மிகவும் அழகாக மலர்ந்தது. சாந்தினி, ஒரு பொறுப்பான மனைவியாகத் தன் கணவனை அன்பால் கட்டிப்போட்டது மட்டுமன்றி, தன் மாமனார் மாமியாரிடம் மருமகள் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு மகளாகவே மாறி அவர்களின் அன்பை பரிபூரணமாகப் பெற்றாள்.

அதேபோல், பவித்ராவும் சாந்தினியும் வெறும் நாத்தனார் அண்ணி என்ற உறவோடு நின்றுவிடவில்லை. இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். தங்கள் மனதிலிருக்கும் சிறு சிறு விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ளும் அளவிற்க்கு அவர்களிடையே ஒரு அழகான புரிதல் வளர்ந்தது.

இந்நிலையில், சரண்யாவின் கணவன் வசந்தும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பியிருந்தான். அவன் வெறும் விடுமுறைக்காக வரவில்லை, தன் மனைவி மற்றும் மகளுக்காக வெளிநாட்டு வாழ்க்கையை நிரந்தரமாக முடித்துவிட்டு, இனி ஊரிலேயே செட்டில் ஆகும் முடிவோடுதான் வந்திருந்தான்.

தன் தந்தையைக் கண்ட அதிதி, துள்ளிக்குதித்து ஓடிச் சென்று அவரை இறுகக் கட்டிக்கொண்டாள். அந்தக் காட்சியைக் கண்டு சரண்யாவின் கண்கள் பனிக்க, பல வருட ஏக்கம் கரைந்து போவதை உணர்ந்தாள் அவள், பவித்ராவும் வசந்தை முதன்முறையாகச் சந்திக்கிறாள் அல்லவா! அவள் முகத்திலும் பேரானந்தம். பொதுவாக, புது மனிதர்களிடம் பேசும்போது பவித்ராவுக்கு ஒரு தயக்கம் இருக்கும். ஆனால், வசந்தின் கனிவான பேச்சும், அந்த வீட்டின் மீதான அவனது உரிமையும் பவித்ராவை உடனே அவனிடம் ஒட்ட வைத்தது. அண்ணன் தங்கை போல இருவரும் அவ்வளவு இயல்பாகப் பேசிக்கொண்டதைக் கண்டு மற்றவர்கள் வியந்து போயினர்.

ஜானகி, தன் மருமகன் குடும்பத்தோடு மீண்டும் இணைந்ததைக் கண்டு மனதார மகிழ்ந்து, அவருக்கு பிடித்தமான உணவுகளைச் சமைக்கத் தொடங்கினார். கௌதமுக்கும் தன் மாமா ஊருக்கு வந்தது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது. அவன் மாமா மீது அவனுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதையும், பாசமும் உண்டல்லவா!

அன்று இரவு, "கௌதம், இனிமே நான் இங்கேயே தான் இருக்கப் போறேன். சும்மா வீட்ல இருக்க முடியாது, தனியாவும் பிஸ்னஸ் பண்ண முடியும்னு எனக்கு தோணல, அதனால நீ பண்ற பிஸ்னஸ்ல நானும் பார்ட்னரா ஜாயின் பண்ணிக்கவா?" என்று கேட்க, கௌதமிற்க்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வசந்தின் அனுபவம் தங்கள் தொழிலுக்குப் பெரிய பலமாக இருக்கும் என்று நம்பியவன், "மாமா, நீங்க என் கூட பார்ட்னரா வர்றதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும்" என்று இன்முகத்தோடு சம்மதம் தெரிவித்தவன், அவனிடம் பணம் வேண்டாம் என்று கூறினால் ஒத்துக்கொள்ள மாட்டான் என்பதால் அவன் திருப்திக்காக அதற்கும் சம்மதித்தான்,..

அன்று விடுமுறை நாள் என்பதால், வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசுகியின் குடும்பத்தினர் கௌதமின் வீட்டிற்கு வந்திருக்க, அந்த இடமே கலகலப்பாக மாறியிருந்தது. அவர்களுடன் தருணேஷ் மற்றும் சாந்தினியும் தங்கையின் புகுந்த வீட்டிற்கு வந்திருக்க, வீடு அன்பாலும் பாசத்தாலும் நிரம்பி வழிந்தது.

அதிதியின் மழலை சிரிப்பும், வசந்த் கௌதம் மற்றும் தருணேஷின் தொழில் ரீதியான உற்சாகமான உரையாடல்களும், வாசுகி குடும்பத்தினர் கொண்டு வந்திருந்த பலகாரங்களின் வாசனையும் சேர்ந்து அந்த வீட்டை ஒரு சொர்க்கமாக மாற்றியிருந்தது.

சரண்யாவும் சாந்தினியும் சமையலறையில் புகுந்து வகை வகையான உணவுகளைத் தயார் செய்து கொண்டிருக்க, வாசுகியும் ஜானகியும் பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்தனர். பவித்ராவின் முகத்தில் தெரிந்த அந்தப் பொலிவு, அவள் இப்போது தன் வாழ்க்கையில் எவ்வளவு மனநிறைவோடு இருக்கிறாள் என்பதற்குச் சாட்சியாக இருந்தது.

அதிதி விளையாட வரும் படி அழைத்த காரணத்தினால் பவித்ரா, ஜீவிதா, சாந்தினி மூவரும் அவளோடு கார்டனில் விளையாடி விட்டு, கொஞ்ச நேரம் இருக்கையில் அமர்ந்தனர்.

அந்த நேரம் "என்ன அண்ணி... உங்க முகம் இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கு! உடம்பு எதுவும் முடியலையா?" என்று சாந்தினி அக்கறையுடன் வினவ, பவித்ரா மெலிதாகப் புன்னகைத்தபடி, "என்னன்னு தெரியல சாந்தினி, காலையில எழுந்ததுல இருந்தே ஒரு மாதிரி டயர்டா இருக்கு," என்றாள்.

பக்கத்தில் இருந்த ஜீவிதா, "அக்கா... பேசாம நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க," என்று கவலையுடன் கூறிட, ஆனால் பவித்ராவோ, "இல்ல ஜீவி, ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல, நான் ஓகே தான்," என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே, திடீரென அவளுக்குக் குமட்டல் எடுக்கவே, பதறியடித்துக்கொண்டு பாத்ரூமை நோக்கி ஓடினாள்.

அதிர்ச்சியடைந்த சாந்தினியும் அவள் பின்னாடியே ஓட, ஜீவிதா பதற்றத்துடன் வீட்டிற்குள் இருந்தவர்களை நோக்கி, "சரண்யா அண்ணி! அத்த! அம்மா!" என்று கத்தி அழைத்திட, அனைவரும் ஜீவிதாவின் அலறல் கேட்டு விரைந்து வந்தனர்.

"என்னாச்சு ஜீவிமா, ஏன் இப்படிப் பதறிட்டு கத்துற?" என்று சரவணன் கேட்க, "பவி அக்காவுக்கு உடம்பு முடியல, வாந்தி வருதுன்னு பாத்ரூம் போனாங்க," என்று அவள் சொல்லவும், அடுத்த நொடி கௌதம் தன் மனைவியைத் தேடி ஓடினான்.

அந்த கணம் "ஐயோ! அண்ணி மயங்கிட்டாங்க!" என்று சாந்தினி வேறு கத்த, அனைவருக்கும் மேலும் பதட்டமானது, கௌதம் தன் மனைவியை சென்றடைந்தபோது, பாத்ரூம் வாசலில் சாந்தினியின் மடியில் மயங்கிக் கிடந்தாள் பவித்ரா, அதனை கண்ட கௌதமின் இதயம் நின்றது போன்ற உணர்வு, தன் மனைவியின் அருகில் மண்டியிட்டவன், அவள் கன்னங்களைத் தட்டி, "பவித்ரா! பவி! என்னாச்சு? கண்ணைத் திற பவி!" என்று பதற்றத்துடன் அழைத்தான்.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட வசந்த், "கௌதம், பதட்டப்படாதே! முதல்ல பவித்ராவைத் தூக்கிக்கிட்டுப் போய் ரூம்ல படுக்க வை, நான் உடனே டாக்டருக்குப் போன் பண்றேன்," என்று கூறிட,
அந்த வீடே கலவரத்தில் மூழ்கியது.

கௌதம் அவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்திட, வாசுகி நீர் எடுத்து வந்து தெளித்தார். சிறிது நேரத்தில் மருத்துவரும் வந்து விட, அனைவரும் பதற்றத்துடன் மருத்துவர் பவித்ராவைப் பரிசோதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த வீடே பதற்றத்தில் ஆழ்ந்திருக்க, அந்த நேரம் பவித்ராவும் மெல்லக் கண் விழித்தாள். அவளிடம் சில கேள்விகளைக் கேட்டு உறுதி செய்துகொண்ட மருத்துவர், புன்னகையுடன் நிமிர்ந்தார்.

பதற்றத்துடன் காத்திருந்த கௌதமோ "டாக்டர்... என்னாச்சு? அவளுக்கு ஏன் மயக்கம் வந்துச்சு?" என்று படபடப்புடன் வினவிட...
மருத்துவர் சிரித்துக்கொண்டே, "பயப்படுறதுக்கு எதுவும் இல்லை மிஸ்டர் கௌதம். சந்தோஷமான விஷயம் தான், கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க அப்பாவாக்கிட்டீங்க," என்ற நற்செய்தியை அறிவித்திட,
அந்த வார்த்தையைக் கேட்ட கௌதமின் இதழ்கள் தாராளமாக விரிந்து பரவசத்தில் திளைத்தன. அவனது கண்களில் தெரிந்த மகிழ்ச்சி, அவனது மனதின் ஆழமான பூரிப்பை உணர்த்தியது.

அவனது இதழ்கள் மட்டுமல்ல, பவித்ராவின் இதழ்களும் வெட்கத்தோடும் மகிழ்ச்சியோடும் மலர்ந்திட, அவளைப் பார்த்த கௌதமின் கண்களில் ஒரு துளி ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

சுற்றி நின்றிருந்த அனைவருக்கும் அந்தச் செய்தி பேரானந்தத்தைத் தந்தது. ஜானகிக்குத் தன் மருமகள் அம்மாவாகப் போகிறாள் என்ற செய்தியைக் கேட்டதும் சந்தோஷத்தில் கண்களே கலங்கிப்போய்விட்டன. நீண்ட நாட்களாக அவர் எதிர்பார்த்து ஏங்கிய தருணம் அல்லவா இது.

உடனே இறைவனுக்கு மனதார நன்றி கூறியவர், பவித்ராவின் அருகே சென்று அவளை உச்சி முகர்ந்து ஆசிர்வதித்தார். ஜானகியைத் தொடர்ந்து, தருணேஷ், சாந்தினி, சரண்யா மற்றும் அங்கிருந்த அனைவரும் அந்த தம்பதிகளுக்குத் தங்கள் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்திட, அந்த அறையே அன்பினாலும், வரப்போகும் புதிய உயிர் குறித்த எதிர்பார்ப்பாலும் நெகிழ்ந்து போயிருந்தது.

அதன் பின்னர் அனைவரும் அவர்களின் தனிமையை உணர்ந்து மெல்ல வெளியேற,
அவர்கள் வெளியேறிய அடுத்த கணம், பவித்ரா கண்களில் ஆனந்த கண்ணீரோடு தன்னவனை தாவி அணைத்துக் கொண்டாள், நீண்ட நாட்களாக அவள் ஏங்கிய தருணம் அல்லவா இது.

கௌதமும் அவளது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டது போல், அவளது முதுகை மென்மையாக வருடிவிட்டு அவளது உச்சியில் நன்றியையும் காதலையும் கலந்த ஒரு முத்தத்தைப் பதித்தான்.

அடுத்த நாளே பவித்ரா கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தி கேள்விபட்டு, அவளுடைய பெற்றோர் மாணிக்கம் மற்றும் லலிதா மிகுந்த மகிழ்ச்சியுடன் உடனே புறப்பட்டு வந்தனர். அவர்கள் மட்டும் அல்ல அவளுடைய பெரியம்மா, சித்தி பெரியம்மா மகள் என அவர்களும் பவித்ராவைப் பார்க்கத் திரண்டு வந்தனர்.

பவித்ராவின் வாழ்க்கை என்னாகுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, அவள் வயிற்றில் வளரும் இந்த புதிய உயிர் பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தர, வீடே உறவுகளின் வருகையாலும், ஆசீர்வாதங்களாலும் மகிழ்ச்சியில் திளைத்தது.

நாட்கள் நகர, பவித்ராவை ஒரு குழந்தை போல தாங்கிக்கொண்டான் கௌதம். ஒவ்வொரு மாத மருத்துவப் பரிசோதனைக்கும் அவனது கரம் பற்றி தான் சென்று வருவாள் அவனின் மனையாள். வளரும் அந்த சிறு உயிருடன் சேர்த்து, கௌதம் தன் தந்தையுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினான்.

ஒரு நாள், பவித்ராவின் வயிற்றில் தன் குழந்தையைப் முதல்முறையாகத் தன் கைகளால் தொட்டு பார்த்து உணர்ந்த அந்த நொடி... அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, இருவரின் முகத்திலும் அது கரைபுரண்டு ஓடியது.

காலத்தின் கனிந்த வருகையால், பவித்ராவின் சீமந்த விழா உறவுகளின் கூச்சலும், மங்கல வாத்தியங்களின் முழக்கமுமாய் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஒரு காலத்தில் கண்ணீரும், தனிமையுமே துணையாக இருந்த அந்த வீட்டில், இன்று சந்தோஷத்தின் வாசனை நறுமணமாக வீசியது.

வாழ்க்கை முழுவதும் கசந்து போய், மீண்டும் ஒளிர வாய்ப்பே இல்லை என்று நினைத்த இரு உயிர்கள், இன்று அன்பினாலும், உறுதியான காதலினாலும் உலகையே வென்றிருந்தனர்.

ஒரு அழகான நாளில், அவர்களின் காதலுக்குச் சாட்சியாய், அவர்களின் செல்வப் புதல்வனும் மண்ணில் ஜனித்தான். கௌதம் தன் மகனை முதன்முதலில் கையில் ஏந்திய அந்த தருணம், அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அன்பின் அடையாளமாக இருந்தது. அவனது கைகளில் அந்த மழலை மென்மையாகத் தவழ, அதை கண்ட பவித்ராவின் மனம் பரவசத்தில் மிதந்தது.

அருகில் நின்றிருந்த அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அந்த அழகியக் காட்சியை நெகிழ்ச்சியுடன் பார்க்க, கண்ணீரும் புன்னகையும் கலந்த அவர்களின் முகங்களில், ஒரு முழுமையான குடும்பத்தின் மகிழ்ச்சி குடிபுகுந்திருந்தது.

'இத்தனை நாள் பட்ட அவர்களின் வலிகளுக்கு எல்லாம், இன்று இந்த சின்னஞ்சிறு உயிர் ஒரு பெரிய பரிசாய் கிடைத்துவிட்டது' என்று ஒவ்வொருவரும் மனதார நெகிழ்ந்தனர்.

இருண்ட காலத்தின் முடிவில், அன்பின் வெளிச்சம் அவர்கள் இல்லம் முழுவதும் நிரம்பி வழிய, கௌதம் பவித்ராவின் வாழ்க்கை எனும் காவியம், தங்கள் மகனின் சிரிப்பொலியோடு இனிதே தொடர்ந்தது.

சுபம்.
 

ஷமீம்

Well-known member
கௌதம், பவித்ராவுக்கு புரிதலுடன் கூடிய மறுமணத்தில் அருமையான வாழ்க்கை அமைந்துள்ளது.. இனிதான நிறைவு..💜💛💕💕💕💕💕வாழ்த்துகள்..💐💐💐💐💐
 

STN - 71

Member
Staff member
கௌதம், பவித்ராவுக்கு புரிதலுடன் கூடிய மறுமணத்தில் அருமையான வாழ்க்கை அமைந்துள்ளது.. இனிதான நிறைவு..💜💛💕💕💕💕💕வாழ்த்துகள்..💐💐💐💐💐
மிக்க நன்றி 😍😍😍😍
 

Magizh kutty

New member
Arumaiyana story. Nalla positive energy. Gowthamoda purithal, anbu love aprm familyoda purithal ellame super. Very very positive story. Congratulations 💐💐💐💐💖💖💖💖💖💖💖
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom