• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 11

STN - 71

New member
Staff member
அத்தியாயம் - 11

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வழக்கத்தை விட சீக்கிரமே வீடு திரும்பியிருந்த கௌதமின் முகம் வந்ததிலிருந்தே ஏனோ வாட்டமாகவே காணப்பட்டது. ஏதோ ஒரு சிந்தனையில், ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதை கவனித்த பவித்ரா, அவனுக்காக சூடாக டீ போட்டு எடுத்துக்கொண்டு போய்அவனிடம் டீயைக் கொடுத்தவள், மெல்ல அவன் அருகில் அமர்ந்து, "என்னாச்சுங்க... ஏதாவது பிரச்சனையா?" என்று மென்மையாக விசாரித்தாள்.

தன்னை இவ்வளவு கூர்ந்து கவனித்து, தன் மனநிலையைப் புரிந்து கொண்டு கேட்கும் அவளை ஒரு நிமிடம் மெச்சும் பார்வை பார்த்த கௌதம், அவள் தந்த தேநீரைப் பருகியபடியே, "இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வொர்க் முடிய ரொம்ப டிலே ஆகுது பவித்ரா. சரியான நேரத்துக்கு டெலிவரி கொடுக்க முடியுமான்னு ஒரு பதட்டம், அதான் கொஞ்சம் டென்ஷன்," என்று அவனும் மறைக்காமல் வெளிப்படையாகக் கூறினான்.

அவள் அவனைத் தேற்றும் விதமாக,.. "இதற்கெல்லாம் டென்ஷன் ஆனா எப்படி? இன்னைக்கு டிலே ஆனா, நாளைக்கு அது சரியா முடிஞ்சிடும். மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க," என்று ஆறுதலாகக் கூற, "ம்ம்..." என்று சற்று இறுக்கம் தளர தலையசைத்தவனோ, "மனசு கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு, நாம வெளியே போயிட்டு வருவோமா?" என்று வினவிட, அவள் மறுப்பாளா உடனே சம்மதமாக தலையசைத்தாள்.

இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர். வண்டியை ஸ்டார்ட் செய்த கௌதம், "எங்கே போலாம்?" என்றான். அவனுக்கு எங்கேயாவது போனால் மனம் லேசாகும் என்று தோன்றியதே தவிர, குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. அதனால்தான் அவளிடமே யோசனை கேட்டான்.

பவித்ரா சற்று யோசித்துவிட்டு, "நம்ம **** மாலுக்குப் போலாமா? அதிதி அவளுக்குப் பார்பி டால் வேணும்னு ஆசையாக் கேட்டா. அந்த மால்ல தான் அது கிடைக்கும்னு சரண்யா அண்ணி சொன்னாங்க. அதிதி இன்னும் ஸ்கூல் விட்டு வரல, இல்லைனா அவளையும் கூப்பிட்டுப் போயிருக்கலாம். ஆனா பரவாயில்லை, அவளுக்குப் பிடிச்ச டால் வாங்கிட்டு வந்து நாம சர்ப்ரைஸ் பண்ணலாம்," என்று கூறிட, கௌதமும் அந்த மாலிற்கே வண்டியை விட்டான்.

காரில் செல்லும்போது மெல்லிய இசை ஒலிக்க, பவித்ரா அவனிடம் இயல்பாகப் பேசிக்கொண்டு வந்தாள். அலுவலக விஷயங்களைத் தாண்டி, வீட்டில் நடந்த சிறு சிறு சுவாரசியமான விஷயங்களை அவள் சொல்ல சொல்ல, கௌதமின் முகம் மெல்ல மலர்ந்தது.

சற்று நேரத்திற்கு பின் அந்த பிரம்மாண்டமான மாலின் ஒளிவெள்ளத்தில் இருவரும் உள்ளே நுழைந்தனர். பவித்ரா இதற்கு முன்பு தன் குடும்பத்தினருடன் இங்கே வந்திருந்தாலும், கௌதமுடன் வருவது இதுவே முதல் முறை என்பதால் அவளுக்குள் ஒரு சிறிய பரவசம் இருந்தது.

மாலுக்குள் நடந்தபோது, "உனக்கும் ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ பவித்ரா" என்று அவன் கூறிட, அவளோ, "இப்போதைக்கு எதுவும் வேணாம்ங்க" என்று சொல்லிவிட்டு, நேராக விளையாட்டு பொம்மைகள் இருக்கும் கடைக்கு தான் அவனை அழைத்துச் சென்றாள்.

அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளுக்கு நடுவே, அதிதிக்கு எது பிடிக்கும் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து அவள் தேர்ந்தெடுக்க, கௌதம் ஒரு ஓரமாக நின்றபடி, ஒரு குழந்தையைப் போல ஆர்வமாகப் பொம்மை தேடும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஒரு பொம்மையை எடுக்க இவ்வளவு நேரமா?' என்று அவன் நினைத்தாலும், அவளது அந்த ஈடுபாட்டைக் கண்டு அவனது இதழ்கள் மெல்லப் புன்னகைத்துக் கொண்டன.

கடைசியில் ஒருவழியாக ஒரு அழகான பார்பி டாலைத் தேர்ந்தெடுத்தவள், அவனிடம் காட்டி "இது ஓகேவா?" என்று கேட்க, அவனும் "ரொம்ப நல்லா இருக்கு" என்று சொல்லியபடி அதனை அங்கேயே பில் போட்டு வாங்கிக் கொண்டான்.

கடையை விட்டு வெளியே வந்ததும், "ஏதாவது சாப்பிடுறியா?" என்று அவன் கேட்க, அவளோ... "நீங்க சாப்பிடுறீங்கனா நானும் சாப்பிடுறேன்" என்று சொல்ல, மெல்ல புன்னகைத்தவன், "சரி வா, மேல போலாம்" என்று அவளோடு மேல் தளத்தில் இருக்கும் ஃபுட்கோர்ட்டை நோக்கி நடந்தான்.

அங்கே பலதரப்பட்ட உணவுகளின் மணம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. கௌதம் தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு அவளோடு அமர்ந்தான்,..

"இப்போ டென்ஷன் எல்லாம் குறைஞ்சுதா?" என்று பவித்ரா அக்கறையாகக் கேட்க, கௌதம் அவளை ஆழமாகப் பார்த்துவிட்டு, "ம்ம்.. உன் கூட இருக்கிற நேரம் எப்போதும் ரிலீஃபா தான் ஃபீல் பண்றேன்" என்றான். அவனது அந்த நேரடியான பாராட்டில், பவித்ராவின் முகத்தில் சந்தோஷத்துடன் கூடிய வெட்கம் படர்ந்தது.

கௌதம் இதுவரை அவளை ரசித்ததில்லை. ஆனால், இன்று அந்தப் பிரகாசமான விளக்குகளின் ஒளியில் அவள் வெட்கப்படும் அழகைக் கண்டு அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவனது விழிகள் சில கணங்கள் அவள் மீதே நிலைத்து நிற்க, அவள் சங்கடப்படுவாளோ என்றெண்ணி அடுத்த கணம் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அதன் பிறகு ஆர்டர் செய்த உணவை வாங்கி வந்தவன், அவளோடு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். பவித்ரா ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்தவள், "நான் இதை இப்போதான் ட்ரை பண்றேன். அவ்வளவா நல்லா இருக்காதுன்னு நினைச்சேன், ஆனா டேஸ்ட் ரொம்ப டிஃபரண்ட்டா, நல்லா இருக்கு" என்று ரசித்து சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள்.

"எப்போதும் ஒரே மாதிரி உணவையே சாப்பிடக் கூடாது பவித்ரா. நான் வெளியே வந்தா எப்பவும் டிஃபரண்ட்டா தான் ட்ரை பண்ணுவேன். அதனாலதான் உனக்கு பிடிக்குமான்னு கேட்காமலேயே ஒரு மாற்றத்துக்காக இதையே ஆர்டர் பண்ணினேன்" என்றவன், சாப்பிடும்போது, அவளது உதட்டோரத்தில் லேசாக உணவு ஒட்டி இருப்பதை கவனித்து, ஒருவிதமான உரிமையில், யோசிக்காமல் கையை நீட்டி அதை மெல்ல எடுத்துவிட, பவித்ரா இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தத் தீண்டலில் அவளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது. வெட்கமா? அல்லது சங்கடமா? என்று புரியாத ஒரு உணர்வில் அவனை நோக்கினாள்.

அவனோ அவளது பார்வையைத் தவறாகப் புரிந்துகொண்டு... "ஸாரி... ஏதோ ஒரு எண்ணத்துல கை போயிடுச்சு" என்று அவசரமாகக் கூற, பவித்ரா சட்டென்று இடைமறித்து, "ஐயோ பரவாயில்லைங்க... இதுக்கு எதுக்கு ஸாரியெல்லாம்?" என்று சொல்லிவிட்டுத் தலைகுனிந்து சாப்பிடத் தொடங்கினாள். அவள் முகத்தில் மறைக்க முடியாத ஒரு நாணப் புன்னகை அரும்பியிருந்தது. அவனது அந்த சின்னஞ்சிறு செய்கை, அவளுக்குள் ஒரு பெரிய நெருக்கத்தை உண்டாக்கியிருந்தது.

அவளது அந்தப் புன்னகையைக் கவனித்த கௌதமிற்கு, இப்போது மனதிலிருந்த பாரமெல்லாம் நீங்கி, ஒரு புதுவிதமான உற்சாகம் தொற்றிக்கொண்டது.

சாப்பிட்டு முடித்துக் கையைத் துடைத்துக் கொண்டதும், "போலாமா?" என்று அவன் கேட்க, "ம்ம்..." என்று அவனது அருகிலேயே மிகவும் நெருக்கமாக நடந்து வந்தாள் பவித்ரா.

அவளுக்கு எஸ்கலேட்டரில் ஏறி இறங்கப் பிடிக்கும் என்பதை அவளது செய்கையிலேயே கண்டுகொண்ட கௌதம், லிஃப்டில் செல்லாமல் ஒவ்வொரு தளத்திற்கும் அவளோடு எஸ்கலேட்டரிலேயே இறங்கியவன், அந்த சிறிய பயணத்தில் அவளது முகத்தில் இருந்த அந்த மழலைத்தனமான மகிழ்ச்சியை ரசித்துக்கொண்டே வந்தான்.

அன்று மிகவும் சந்தோசமாக தன் மனைவியோடு நேரம் செலவிட்டு, கீழே இறங்கி கொண்டிருந்த கௌதம், தன் முன்னால் வந்து நின்ற ஓர் உருவத்தைக் கண்டு சட்டென்று அங்கேயே சிலையாக நின்றான். அவனது முகம் கோபத்தில் கருத்துப் போனது, கண்கள் சிவந்தன. ஆனால், அந்தப் பெண்ணோ அவனை ஒருவித இகழ்ச்சியுடன் பார்த்தபடி நிற்க, பவித்ரா நடப்பது புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், அந்த பெண் யார் என்பதும் தெரியாமல் அவளை அளவிடத் தொடங்கினாள்.

தொடை வரை மட்டுமே இருக்கும் ஒரு நவநாகரீக உடையில் அதுவும் கைகளில்லாத ஸ்லீவ்லெஸ் மாடலில் முகம் முழுக்க அதிகப்படியான மேக்கப்புடன் இருந்தவளை பார்த்ததுமே ஏனோ பவித்ராவிற்குப் பிடிக்கவில்லை. அவளது தோற்றம் அவளுக்கு முகம் சுளிக்க வைத்தது..

"ஹலோ மிஸ்டர் கௌதம், எப்படி இருக்கீங்க?" அந்தப் பெண் ஏளனக் குரலில் வினவ, கௌதமிற்கு ஆத்திரத்தில் கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்தன.

"ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதா கேள்விப்பட்டேனே..." என்று சொன்னவளின் பார்வை, அவனுக்கு அருகில் நின்ற பவித்ராவின் மீது வந்து நிலைத்தது. "ஓ... இவதான் உன் ரெண்டாவது பொண்டாட்டியா?" என்று கேட்டவள், அவளைத் தலை முதல் கால் வரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "என் அளவுக்கு இல்லைனாலும்... ம்ம்... பரவாயில்லை," என்று பவித்ராவைப் பார்த்து ஒரு கேலிப் புன்னகை பூத்தவள்.. "இன்னொரு கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டேன்னு நினைச்சேன்... ம்ம்... உனக்கும் உடல் தேவைகள் எல்லாம் இருக்கும் தானே?" என்று அவள் பவித்ராவின் முன்னாலேயே அநாகரீகமாக பேச, கௌதமின் பொறுமை எல்லை கடந்தது.

"ஏய்!" என்று கர்ஜித்தவன், "ச்சீ... உன் பக்கத்துல நின்னா கூட எங்களுக்குத்தான் அசிங்கம்!" என்று வெடித்துவிட்டு, அவளது முகத்தைப் பார்க்கக்கூட அருவருப்பது போல் பவித்ராவின் கரத்தை இறுகப் பற்றி அங்கிருந்து நகர முயல, ஆனால் அவள் விடவில்லை.

அவன் முன்னால் வந்து வழிமறைத்து நின்றவள், "அசிங்கமா? இந்த அசிங்கத்துக்கூடத்தான் ரெண்டு வருஷம் குடும்பம் நடத்தின... என்ன மறந்து போச்சா?" என்று விஷமத்தனமாக வினவினாள்.

அவளது அந்த வார்த்தைகள் பவித்ராவின் காதில் விழுந்ததும் இடி தாக்கியது போல் நின்றாள். அந்த வார்த்தைகளே கௌதமின் முதல் மனைவிதான் இவள் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அவனோ அவளது கேள்விக்கு பதில் சொல்ல பிடிக்க்காமல்..."மரியாதையா வழியை விட்டு நில்லு, இல்ல நடக்குறதே வேற!" என்று கர்ஜிக்கும் குரலில் எச்சரிக்க, ஏளனமாக சிரித்தவளோ.. "என்ன பண்ணிடுவ நீ? நான் உன்கூட வாழ்ந்துட்டு இருக்கும்போதே ரகசியமா இன்னொருத்தன் கூட தொடர்பு வச்சிருந்தேன்னு தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல... அவன் தான் வேணும்னு உன்னை விட்டுப் போன போதும் எதுவும் பண்ணல. அப்போதெல்லாம் ஒன்னும் பண்ணாதவன் இப்போ என்னத்த கிழிச்சிடப் போற?" என்று அவள் ஏளனமாக பேச, அவளது வார்த்தைகளில் தன் சுயக்கட்டுப்பாட்டை இழந்தவன்
சுற்றி இருப்பவர்கள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல், ஆத்திரத்தில் அவளது கழுத்தைப் பிடித்து நெறிக்கத் தொடங்கினான்.

அவனது கண்கள் சிவந்து, முகம் கோபத்தில் துடிக்க, இதனை எதிர்பார்காத கௌசல்யாவோ மூச்சுக்கு திணறினாள்.

அவனுக்கு அவள் செய்த துரோகத்திற்கு அன்று அவன் அமைதியாக இருந்ததற்குக் காரணம் அவன் அடைந்த அதிர்ச்சியும், காயமுமே. ஆனால், பவித்ரா அவன் வாழ்வில் நுழைந்த பிறகு அந்த வடுக்கள் மெல்ல மறையத் தொடங்கி இருந்த நிலையில் இப்போது மீண்டும் அவளே வந்து வம்புக்கு நின்றால் அவனால் எப்படிப் பொறுமையாக இருக்க முடியும்?

அந்தப் பெண் மூச்சு விடத் திணறுவதைக் கண்டும் கௌதம் கையை விடுவதாக இல்லை. மாலில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றனர்.

பவித்ராவிற்குப் பயமாக இருந்தது. கௌதமின் இந்தப் புதிய கோப முகம் அவளை மிரட்டினாலும், அவன் எந்த பிரட்சனையிலும் மாட்டிக் கொள்ள கூடாது என்று,..
"விடுங்க...ப்ளீஸ்ங்க விட்டுடுங்க!" என்று அவனது மற்றொரு கரத்தை பற்றி கெஞ்ச,
அவளது மென்மையான ஸ்பரிசத்திலும் கலங்கிய குரலிலும் சட்டென்று சுயநினைவுக்கு வந்து, ஆத்திரத்தில் இழந்த நிதானத்தை மீட்டவன், கௌசல்யாவின் கழுத்திலிருந்து தன் கரத்தை எடுத்துவிட்டு.. . "இது வரைக்கும் என்னை எதிர்த்தவங்களை நான் சும்மா விட்டதில்ல, ஆனா எனக்கு நம்பிகை துரோகம் பண்ண உன்னை சும்மா விட்டேன்ல? அதான் திரும்ப வந்து நிற்கிற, இனி நீ எப்படி நிம்மதியா வாழறேன்னு பார்க்கிறேன்" என்று இடி முழக்கமாய் எச்சரித்தவன்,
அதற்கு மேலும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டு நிற்க விரும்பாமல், பவித்ராவின் கரத்தை பற்றி இழுத்து சென்றுவிட, கௌசல்யாவோ கௌதமின் இந்த விஸ்வரூபக் கோபத்தைக் கண்டு முகம் வெளிறி, அங்கேயே சிலையாக நின்றிருந்தாள்.

 
Top Bottom