உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 13

அழகான ஒரு புரிதலோடு வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலையில், அன்று காலை வழக்கம்போல முதலில் விழித்துக் கொண்ட கௌதம், பக்கவாட்டில் திரும்பி பார்க்க பவித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் குளிரில் சுருண்டு படுத்திருப்பதை கவனித்தவன், அவளுக்குப் போர்வையைச் சரியாகப் போர்த்திவிட நெருங்கிய போது தான், சற்று விலகியிருந்த உடையின் வழியாக அவள் காலில் இருந்த ஆழமான தழும்பு அவன் கண்ணில் பட்டது. திடுக்கிட்டுப் போனவன், ஆர்வக்கோளாறால் அந்தத் தழும்பின் அளவைப் பார்க்க உடையைச் சற்று மேலே தூக்கியவனுக்கு தூக்கி வாரிப்போட்டது! கிட்டத்தட்ட நான்கு இன்ச் நீளத்திற்கு அந்தத் தழும்பு மிக ஆழமாகப் பதிந்திருந்தது. 'இவ்வளவு பெரிய தழும்பு எப்படி வந்தது?' என்று அவன் அதிர்ச்சியோடு யோசிக்கும் போதே, அவளது உள்ளங்காலியிலும் அதுபோன்ற ஒரு காயத்தின் வடு இருப்பதைக் கண்டான்.

இத்தனை நாட்களாக, தான் இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொன்றாகக் கவனித்துப் பார்த்தவனுக்கு, அவளது முழங்கைக்கு சற்று மேலேயும் ஒரு தழும்பு இருப்பது தெரிந்தது. அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. 'இவ்வளவு தழும்புகள் இருக்க இவளுக்கு என்ன நடந்திருக்கும்?' என்று குழப்பத்திலேயே எழுந்தவனுக்கு அந்த கணம் தருணேஷிடமிருந்து அழைப்பு வர, அதை எடுத்துப் பேசினான்.

தொழில் விஷயமாக பேச தான் அவன் அழைத்திருந்தான், வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தவனின் மனதில் உறுத்திய அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"தருண், ஒரு விஷயம் கேட்கணும்..." என்றவன்,. "பவித்ரா உடம்புல அங்கங்க நிறைய இடத்துல தழும்பா இருக்கே? என்னாச்சு தருண்? அவளுக்கு இதுக்கு முன்னாடி ஏதாவது ஆக்சிடென்ட் ஆச்சா?" என்று படபடப்புடன் கேட்க, மறுமுனையில் தருணேஷிடமிருந்து ஒரு நிமிடம் கனத்த மௌனம் நிலவியது. அந்த அமைதி கௌதமை இன்னும் வதைக்க, "தருண் என்னாச்சு?" என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டான்.

"பவித்ரா உங்ககிட்ட எதுவும் சொல்லலையா மச்சான்?" என்று தருண் கேட்க, "இல்லை... நானே அதை இப்போதான் கவனிச்சேன்," என்றான் கௌதம்.

தருணேஷ் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு,.. "அது அவளோட முதல் வாழ்க்கை அவளுக்குக் கொடுத்த தண்டனை மச்சான்" என்றவன் "அந்த கிஷோர்..." என்று பற்களைக் கடித்து,.. ஆத்திரத்துடன் "சின்னப் பொண்ணுன்னு கூடப் பார்க்காம உடம்புல அத்தனை இடத்துல சூடு வச்சிருக்கான்! அம்மா ஒரு தடவை அவ உடம்புல இருந்த உள் காயங்களை பார்த்துட்டு அப்படி கதறி அழுதாங்க," என்று சொல்லும்போதே தருணின் குரல் உடைந்து கண்ணீர் வெளிப்பட்டது.

இதைக் கேட்ட கௌதமிற்கு ரத்தம் சூடானது. அவன் இதயம் துடிப்பதை நிறுத்தியது போன்ற ஒரு உணர்வு. இந்தப் பூப் போன்ற பெண்ணையா இப்படி சித்திரவதை செய்திருக்கிறான் அந்த மிருகம்?

திருமணத்திற்கு முன்பே தருணேஷ் கிஷோரின் குணத்தைப் பற்றியும், அவன் பவித்ராவை சித்திரவதை செய்ததை பற்றியும் கூறி இருந்தான் தான். ஆனால், ஒரு மனிதன் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி, ஆழமான வடுக்கள் ஏற்படும் அளவிற்கு அவளைத் துன்புறுத்தி இருப்பான் என்று கௌதம் துளியும் எதிர்பார்க்கவில்லை.

அவள் இரவில் தூக்கத்தில் பயந்து அலறியதற்கு திடீரென உடல் நடுங்கி விழிப்பதற்கும் பின்னால் இருந்த கோரமான உண்மை இப்போது அவனுக்கு இன்னும் தெளிவாகப் புரிந்தது. அந்தத் தழும்புகள் வெறும் காயங்கள் அல்ல, அவை ஒவ்வொரு இரவும் அவளைத் துரத்தும் பயங்கரமான நினைவுகளின் சாட்சிகள் என்பது புரிந்தது.

"அவனை நீ சும்மாவா விட்ட?" என்று ரத்தம் கொதிக்கக் கேட்டான் கௌதம்.

"அவனைக் கொல்லுற அளவுக்கு ஆவேசம் வந்தது மச்சான், அரிவாளைத் தூக்கிக்கிட்டுத் தான் கிளம்புனேன். ஆனா அப்பாவும் அம்மாவும் தடுத்துட்டாங்க. 'ஏற்கனவே உன் தங்கச்சி பாதி உசுரா வந்திருக்கா, நீயும் அவனை கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டா அவ செத்துப் போயிடுவாடா'ன்னு சொல்லி அழுதாங்க. அவளுக்காகத்தான் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டு அமைதியானேன்," என்றான் தருண்.

கௌதமின் கண்கள் சிவந்தன. கைகள் ஆத்திரத்தில் முறுக்கின. "சரி, அப்போ நான் பார்த்துக்கிறேன்," என்று கௌதம் ஒருவிதமான உறுதிப்பாட்டுடன் கூறிட, அவன் எதையும் விபரீதமாகச் செய்துவிடுவானோ என்று அஞ்சிய தருண், "வேண்டாம் மச்சான். அந்த மாதிரி ஒரு கழிசடைய நாம தொட்டா நமக்குத்தான் அசிங்கம். விட்டுடுங்க, கடவுள் அவனுக்குத் தண்டனை கொடுப்பான். இப்போ உங்களோட அன்பு மட்டும்தான் என் தங்கச்சிக்குத் தேவை. அவளை அந்த நினைவுகள்ல இருந்து வெளிய கொண்டு வாங்க, அது போதும்," என்று வேண்டுகோளோடு சொல்ல,
கௌதமும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அமைதியாகி விட்டான். ஆனால், அவனது மனதிற்குள் அந்தத் தழும்புகள் பெரும் ரணத்தை உண்டாக்கின. போனை வைத்தவன், உறங்கிக் கொண்டிருந்த பவித்ராவை இமைக்காமல் பார்த்தான்.

இவ்வளவு வலிகளைச் சுமந்து கொண்டுதான் இவள் இத்தனை நாள் அமைதியாக இருந்திருக்கிறாளா? கௌசல்யாவின் துரோகமே பெரியது என்று நினைத்தவனுக்கு, பவித்ராவின் இந்த உடல் ரீதியான மற்றும் மன ரீதியான காயங்களுக்கு முன்னால் தன் வலி ஒன்றுமே இல்லை என்பது புரிந்தது. மெல்ல அவள் அருகில் அமர்ந்தவன், அவளது நெற்றியில் வழிந்த கற்றை முடியை ஒதுக்கிவிட்டான். அவனது பார்வையில் இப்போது அவளைப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு பெரும் வேட்கை மட்டுமே இருந்தது.

அன்று காலை உணவு நேரத்தில் அந்த வீடே கலகலப்பாக இருக்க, ஜானகி மெல்ல... "ஏன்ப்பா கௌதம், பவித்ராவை கூட்டிட்டு டூர் மாதிரி எங்கேயாச்சும் போயிட்டு வரலாம்ல?" என்றார். 'ஹனிமூன் போயிட்டு வா' என்று சொன்னால் மகன் எங்கே கோபப்படுவானோ என்ற பயத்தில், அவர் 'டூர்' என்று வார்த்தையை மாற்றிக் கூறியிருந்தார்.

அவனோ, "இந்த வீக் வொர்க் ரொம்ப டைட்மா, நெக்ஸ்ட் வீக் எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்றேன்," என்று நிதானமாகச் சொல்ல, மகன் மறுப்புச் சொல்லாமல் சம்மதித்ததே ஜானகிக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் பவித்ராவோ வெள்ளந்தியோடு.., "குடும்பமா ஒன்னா போனா ரொம்ப ஜாலியா இருக்கும்ல அத்த!" என்று கூற, 'நாசமா போச்சு' என்று அவர் முணுமுணுத்தது அருகில் இருந்த சரண்யாவின் காதிலும் விழ, அவள் இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது.

"இன்னும் உங்க மருமக சின்ன பிள்ளையாவே இருக்காமா," என்று சரண்யா தாயிடம் ரகசியமாகக் கேலி செய்ய, "அது என்னமோ உண்மைதான்," என்று ஒத்துக்கொண்ட ஜானகி, பவித்ராவிடம், "இப்போ நீங்க மட்டும் போயிட்டு வாங்கமா, இன்னொரு நாள் ஃபேமிலியா போகலாம்," என்று கூற, பவித்ராவும் பிடிவாதம் பிடிக்காமல், "சரிங்கத்த," என்று ஒப்புக்கொண்டாள்.

"மாமாக்கு ஊருக்கு வர ஐடியா இருக்கா இல்லையாமாக்கா?" என்று கௌதம் கேட்க, "அவருக்கு லீவ் கொடுக்க மாட்டேன்கிறாங்கலாம்டா," என்று சரண்யா அதே பழைய பல்லவியை பாடினாள்.

அதைக்கேட்டு உதட்டைச் சுழித்தவன், "யாருக்கு கீழையோ வேலை பார்க்கணும்னு அவசியம் என்ன வந்தது? நம்ம கம்பெனியை வந்து கவனிச்சுக்கலாம்ல? இதை சொல்லி சொல்லி நானும் சலிச்சுப் போயிட்டேன். மாமா எனக்குக் கீழ வேலை பார்க்கணும்னு நினைச்சு பயப்படுறாருன்னு நினைக்கிறேன். வேணும்னா நான் பிஸ்னஸை விட்டு விலகிக்கிறேன், அவரே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும்," என்றான் கௌதம் ஆவேசமாக.

தன் தமக்கை தன் கணவனுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது. வசதி இல்லாதவர்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் கஷ்டப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் எல்லா வசதியும் இருந்தும் மாமா ஏன் அங்கே தனியாகக் கிடக்க வேண்டும் என்பது தான் அவனது நியாயமான கவலை.

"நீ இப்படி சொல்றன்னு உன் மாமாக்கு தெரிஞ்சா வந்து கட்டி வச்சு அடிப்பாரு!" என்று சரண்யா சிரிக்க, "அதுக்காவது வரச் சொல்லு," என்று கௌதம் விளையாட்டாகச் சொன்னாலும், அவனது குரலில் அக்கறை ததும்பியது.

கௌதமின் இந்த குணம்தான் பவித்ராவிற்கு அவன் மீது ஒரு பிடிப்பை உண்டாக்கியது. தன் குடும்பத்தின் மீது அவன் காட்டும் அக்கறையும், அவளுக்குள் இருக்கும் வலியை உணர்ந்து அவன் காட்டும் அந்த மௌனமான பாதுகாப்பும் அவளை மெல்ல மெல்ல அவன்பால் ஈர்த்துக் கொண்டிருந்தது. கௌசல்யாவால் இழந்த நிம்மதியை கௌதமும் இப்போது பவித்ராவால் மீண்டும் பெறத் தொடங்கி இருந்தான்.

நாட்கள் இப்படியே கடக்க, ஒருநாள் காலை கௌதம் பவித்ராவிடம், "ரொம்ப நாளா நீ வீட்லயே இருக்கியே, இன்னைக்கு என் கூட ஆஃபீஸ் வரியா பவித்ரா?" என்று கேட்டான்.

அவளோ ஒருவித அச்சத்துடன், "ஆஃபீஸ்க்கா? ஐயோ அங்கே நிறைய பேர் இருப்பாங்களே, எனக்கு ஒரு மாதிரியா இருக்கும். அண்ணனும் அங்கேதானே இருப்பாரு?" என்று தயங்கிட, "அதனால என்ன? இன்னைக்கு என்னோட கிளம்பு," என்று அவன் கண்டிப்புடன் கூற, அவளும் மேற்கொண்டு மறுக்க முடியாமல் அவனுடன் கிளம்பினாள்.

இருவரும் காரில் அலுவலகம் நோக்கிச் சென்றனர். வழியெல்லாம் பவித்ராவிற்க்கு ஒரே பதட்டம். "அங்கே நிறைய பேர் இருப்பாங்களா? என்கிட்ட எதுவும் பேசுவாங்களோ? ஐயோ, எனக்கு சரளமா இங்கிலீஷ் பேசத் தெரியாதே!" என்று தன் பயத்தைப் புலம்பலாகக் கொட்டிட, அவளது பதட்டத்தைப் புரிந்துகொண்ட கௌதம், "ரிலாக்ஸ்... எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்? நான் தான் உன் பக்கத்துல இருக்கேன்ல," என்றான். அவனது அந்த ஒரு வார்த்தை அவளுக்குப் பெரும் நம்பிக்கையைத் தர, அதன் பிறகு தன் புலம்பலை நிறுத்திக் கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் கௌதமின் அலுவலகம் வந்து சேர்ந்தனர். சூரிய ஒளியில் மின்னிய அந்த ஏழு அடுக்கு மாடி கண்ணாடி கட்டிடத்தைப் பார்த்து மெய்மறந்து நின்றவள், இவ்வளவு பெரிய இடத்திலா தன் கணவன் அதிகாரியாக இருக்கிறான் என்பதை எண்ணி வியந்தாள்.

தனக்கே உரிய இடத்தில் வண்டியை நிறுத்திய கௌதம், காரை விட்டு இறங்கி, "வா..." என்று கூறி, அவளது கரத்தை உரிமையோடு பற்றிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான். அவனது அந்தப் பிடி, அந்தப் பிரம்மாண்டமான இடத்தில் அவளுக்கு ஏற்பட்ட அந்நிய உணர்வை விரட்டி, ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்தது.

அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது, அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் தங்களின் வேலையை நிறுத்திவிட்டு எழுந்து நின்று கௌதமிற்கு மரியாதை செலுத்தினர். கௌதம் அனைவரையும் ஒரு புன்னகையுடன் பார்த்தபடி,..
"ஹாய் காய்ஸ்... மீட் மை வைஃப் பவித்ரா," என்று மிகுந்த பெருமையோடு அறிமுகப்படுத்தினான்.

அவனது அந்த கம்பீரமான அறிமுகத்தைக் கேட்டதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் முகமலர்ச்சியுடன் அவளை வரவேற்றனர். "வெல்கம் மேடம்," "உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் மேடம்," என்று ஒவ்வொருவரும் மரியாதையுடன் பேசினர்.

கௌதமின் இரண்டாவது மனைவிதான் இவள் என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரியும் என்றாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அவர்கள் இன்முகமாகவே அவளிடம் பேசினர். கௌதம் தனது ஊழியர்களிடம் எப்போதும் நட்போடு பழகுவான் என்பதால், அவனது இருண்ட வாழ்க்கைக்கு ஒளியாய் வந்தவளை அவர்கள் மிகுந்த அன்போடு ஏற்றுக்கொண்டனர்.

பவித்ராவிற்கும் ஆரம்பத்தில் இருந்த அந்தப் பதட்டம் மெல்ல மறைந்து, ஒருவிதப் பெருமிதம் அவளுள் குடியேறியது. இவ்வளவு பெரிய இடத்தில், இத்தனை பேருக்குத் தலைவனாக இருக்கும் ஒரு மனிதன், தன்னைத் தன் மனைவி என்று உரிமையோடு அறிமுகப்படுத்துவது அவளுக்கு பெருமையை தந்தது.

அதே அலுவலகத்தில் இருந்த தருணேஷும் தன் தங்கை கௌதமின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, கௌரவமான இடத்தில் நிற்பதைக் கண்டு கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கி போனது, கிஷோர் கொடுத்த அந்த நரக வாழ்க்கையில் சிதைந்து போயிருந்த தன் தங்கை, இன்று ஒரு ராணியைப் போல நடத்தப்படுவதைக் கண்டபோது, அண்ணனாக அவனது மார்பு பெருமிதத்தில் விரிந்தது.

பவித்ரா தருணேஷைப் பார்த்துப் புன்னகைக்க, அவனும் ஒரு சிறு தலையசைப்பின் மூலம் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டான்.
 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.