• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 18

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 18

இருவரும் அறைக்குள் வந்து சேர்ந்ததும், பவித்ரா நேராக சென்று படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். வழக்கமாக அறைக்குள் நுழைந்ததுமே 'குளிர் குளிர்' என்று பதறிக்கொண்டு தடிமனான போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொள்பவள், இன்று அந்த குளிரைக் கூட உணராதவள் போல மரத்துப் போய் படுத்திருந்தாள், போர்வையை எடுத்துப் போர்த்திக் கொள்ளக் கூட அவளுக்குத் தோன்றவில்லை போலும், அவளது கவனம் முழுவதும் எங்கோ சிதறிக் கிடந்தது.

அவளது இந்த விசித்திரமான நடத்தையை ஆழமாக நோக்கிய கௌதமிற்குள் குழப்பமும் கவலையும் இரட்டிப்பானது. "என்ன பிராப்ளம் பவித்ரா? உனக்கு என்னாச்சுன்னு என்கிட்ட சொல்றதுக்கு என்ன?" என்று தன் ஆதங்கத்தை அடக்க முடியாமல், சற்று அழுத்தமான குரலில் வினவினான். அவளது மௌனம் அவனது பொறுமையை சோதித்தது.

அவனது அழுத்தமான குரலில் லேசாக நடுங்கியவள், அவனது முகத்தைப் பார்க்கத் துணிவின்றி, "நான்... நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் ப்ளீஸ்," என்று மட்டும் தழுதழுத்த குரலில் கூறிட, அவளது பதற்றத்தைக் கண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட கௌதம், ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபடி, 'தூங்கி எழுந்தால் அவளது மனநிலை சரியாகிவிடும்' என்ற எண்ணத்தில், "சரி தூங்கு," என்று மென்மையாக கூறிவிட்டு விலகி வந்து விட, அவளும் கண்களை மூடிக் கொண்டாள்.

மாலை ஏழு மணியாகிவிட்டதால், அறைக்குள் பளீரென்று தெரிந்த வெளிச்சம் அவளது தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்று நினைத்து, பெரிய விளக்குகளை அணைத்துவிட்டு, இதமான வெளிச்சம் தரும் ஒரு சின்ன ஜீரோ பல்பை மட்டும் எரிய விட்டான் கௌதம்.

பவித்ராவிற்க்கோ வெகு நேரமாகியும் உறக்கமே வரவில்லை. கண்களை மூடியபடி படுத்திருந்தாளே தவிர, அவளது மனதிற்குள் ஒரு பெரும் புயல் வீசிக்கொண்டிருக்க, ஏரிக்கரையில் தான் பார்த்த அந்த உருவம் தான் அவளது இமைகளுக்குள் வந்து வந்து போய் அவளது தூக்கத்தை மொத்தமாக விரட்டியடித்தது.

ஆம், அவள் அங்கே பார்த்தது அந்த கிஷோரைத்தான்!

கௌதம் தர்பூசணி வாங்கப் போன அந்தச் சில நிமிடங்களில், அவன் சொன்ன இடத்திலேயே அமைதியாக அமர்ந்திருந்தபடி, எதேச்சையாகச் சுற்றிலும் வேடிக்கை பார்த்தவளின் பார்வை, சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தடிக்குச் சென்றது. அங்கே தான் அவளது வாழ்க்கையை நரகமாக்கிய அந்த கிஷோர் நின்று கொண்டிருந்தான். அதுவும் அவளையேதான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னைப்பார்ப்பதை உணர்ந்த அடுத்த நொடி, அவளைப் பார்த்து புன்னகைக்கவும் செய்ய, ஏற்கனவே அவன் என்றாலே அவளுக்குள் ஒரு மரண பயம் இருந்தது. இத்தனை நாட்களுக்குப் பிறகு, அதுவும் தன் கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்தத் தருணத்தில், அவனை எதிர்பாராமல் நேருக்கு நேர் பார்த்ததும் அவளுக்குள் நடுக்கம் தலைக்கேறிவிட்டது.

கௌதம் வந்து கேட்டபோது, அவன் நின்ற திசையை நோக்கித்தான் அவள் கை காட்டினாள். ஆனால் அவன் பார்த்த நேரம் அவன் அங்கு இருக்கவில்லை, ஒரு வேளை நாம் பார்த்தது உண்மை தானா? இல்லை மனபிரம்மையா? என்ற குழப்பத்தில் தான் தேவையில்லாமல் கிஷோரின் பேரை சொல்லி கௌதமின் நிம்மதியையும், இந்த அழகான பயணத்தையும் கெடுக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் அவள் கௌதமிடம் எதையும் சொல்லாமல் மறைத்தாள். ஆனால், கிஷோரைப் பார்த்த அந்த ஒரே ஒரு எண்ணம், கடந்த இத்தனை நாட்களாக அவள் அனுபவித்து வந்த அத்தனை மகிழ்ச்சியையும் நொடிப் பொழுதில் சாம்பலாக்கி இருந்தது.

நெடுநேரம் மனதிற்குள் போராடி, உடலும் மூளையும் சோர்ந்து போன ஒரு கட்டத்தில் மெல்லக் கண் அயர்ந்தாள். ஆனால், அந்த உறக்கமும் அவளுக்கு நிம்மதியைத் தரவில்லை. கிஷோரின் முகமும், அவளது கடந்த காலக் கொடூரங்களும் கனவில் வந்து அவளை அச்சுறுத்த... தூக்கத்திலேயே அவளது உடல் நடுங்கத் தொடங்கி, இறுதியில் பயங்கரமாக அலறத் தொடங்கினாள்.

மெல்லிய ஜீரோ பல்ப் வெளிச்சத்தில் மடிக்கணினியில் ஏதோ முக்கிய வேலை செய்து கொண்டிருந்த கௌதம், அவளது அந்த விபரீதமான அலறல் சத்தத்தைக் கேட்டு திகைத்து போனான்..

"வேண்டாம்... என்னை விட்டுடு! என்னைத் தொடாத... என்னை விட்டுடு!" என்று கைகளால் காற்றைத் தடுத்தபடி, கண்களை மூடிக் கொண்டே பயங்கரமாகப் புலம்பிக் கொண்டிருந்தவளின் அருகில் வேகமாக வந்தவன், "பவித்ரா... பவித்ரா... என்னாச்சு? கண்ணை முழி பவித்ரா!" என்று அவளது நடுங்கிக் கொண்டிருந்த தோள்களைப் பற்றி பலமாக உலுக்கினான்.

அவனது அந்த உலுக்கலில் சட்டென்று சுயம் திரும்பிட, கண் விழித்துப் பார்த்தவள், தனக்கு முன்னால் பதற்றத்தோடு அமர்ந்திருந்த கௌதமை கண்டதும், யோசிக்காமல் அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.

அவர்கள் இருவருக்குமான முதல் அணைப்பு அது! ஆனால், அதை எண்ணி அவனால் சந்தோஷப்பட முடியவில்லை. இத்தனை நாட்கள் தூக்கத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், நிம்மதியாக உறங்கியவளுக்கு இன்று திடீரென என்னவானது என்று அவனுக்குப் புரியவே இல்லை. அவளது இதயம் பயத்தில் தறிகெட்டு அடித்துக் கொள்வது அவனது மார்பில் அப்பட்டமாகத் தெரிந்தது. இன்னமும் உடல் நடுங்கிக் கொண்டிருந்தவளைத் தன் அரவணைப்பிற்குள் இன்னும் இறுக்கிக் கொண்ட கௌதம், அவளது கூந்தலை மென்மையாகக் கோதி விட்டபடி,..
"ஒன்னும் இல்லை பவித்ரா... ஒன்னும் இல்லை" என்று ஆறுதல் படுத்தினான்.

"ப... பயமா இருக்கு... என் பக்கத்துலயே இருங்க ப்ளீஸ்," என்று அழுகையும் நடுக்கமும் கலந்த குரலில் சொன்னவள், அவனது உடலோடு இன்னும் ஆழமாக ஒன்றியபடி அவனை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.

"நான் உன் பக்கத்துல தான் இருக்கேன். உன்னை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்," என்று கூறியபடியே அவளது முதுகை மெல்லத் தடவிக் கொடுத்து அவளை சமாதானப்படுத்திட, அவனது அந்தப் பாதுகாப்பான அரவணைப்பில், அவளது உடலின் நடுக்கமும் பயமும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கின.

கொஞ்ச நேரம் அவனும் எதுவும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. அந்த அறையின் மௌனத்தில் அவளது சீரான மூச்சுக்காற்று மட்டுமே கேட்டது. அவள் ஓரளவுக்கு நிதானத்திற்கு வந்ததை உணர்ந்த பிறகு, மெல்ல அவளிடமிருந்து விலகியது அவன்தான். இத்தனை நாட்கள் எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கியவளுக்கு இன்று என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் அவளது முகத்தைப் பார்த்தவன்... "என்னாச்சு?" என்றான் மிகவும் நிதானமான குரலில்.

"அ.. அவனை... அந்த லேக்ல பார்த்தேன், பார்த்ததுல இருந்து ஒரு மாதிரி பதட்டமாவே இருந்தது " என்று பவித்ரா தன் நடுங்கிய குரலில் கூறிட, அவள் சொன்னதைக் கேட்ட கௌதம், 'யாரை?' என்று அவளிடம் திரும்பிக் கேட்கவில்லை. அவள் கிஷோரை பற்றி தான் சொல்கிறாள் என்பது கௌதமிற்கு நன்றாகவே புரிந்தது. ஆனால், 'அவன் எப்படி இங்கு வந்தான்?' என்று யோசித்தவன், இப்போதைக்கு பவித்ரா பயத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்குவதுதான் முக்கியம் என்று முடிவெடுத்து,
அவளது தலையைக் கோதி, படுக்கையில் மெல்லச் சாய்த்து, "அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம், இப்போ நிம்மதியா தூங்கு" என்று அவளுக்குப் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்தி விட்டான்.

அவன் படுக்கையை விட்டு எழுந்து விடுவானோ என்ற பயத்தில், "நீங்களும் கூடவே இருங்க," பவித்ரா அவனது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு கூற, அவனும் அவளது கையைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டு.. "நான் எங்கே போகப் போறேன் உன்னை விட்டுட்டு?" என்றபடியே, அவளுக்கு அரணாக அவளது அருகிலேயே படுத்துக் கொண்டான். அவனது கரம் அவளது கரத்தைக் கோர்த்திருக்க, அவனது அருகாமை தந்த தைரியத்தில் பவித்ரா மெல்லக் கண்களை மூடினாள். ஆனால் கௌதமோ சிந்தனையோடு விட்டத்தை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை விடிந்தது. ஜன்னல் திரைச்சீலைகளின் வழியே கொடைக்கானலின் இளவெயில் அறைக்குள் எட்டிப் பார்த்தது. தூக்கத்திலிருந்து விழித்த பவித்ராவோ எழ மனமில்லாமல் அப்படியே படுக்கையிலேயே கிடந்தாள். அவளது முகம் இன்னும் நேற்றைய நாளின் சோர்விலிருந்து மீளவில்லை.

அவள் விழித்திருந்தும் எழாமல் படுத்திருப்பதை கண்ட கௌதம்.. "என்ன பவித்ரா... எழுந்திருக்கிற ஐடியா இல்லையா? நேத்து நைட் கூட நீ எதுவும் சாப்பிடாமலேயே தூங்கிட்ட. ஃபிரஷ்அப் ஆகிட்டு வா, சாப்பிட்டு வரலாம்" இரவு நடந்த கசப்பான சம்பவங்களைப் பற்றி ஏதும் பேசாமல், அவளது மனநிலையை மாற்றும் பொருட்டு மிகவும் இயல்பாக பேசினான்.

அவளோ... "எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க..." மெல்லிய குரலில் கூறிட.. "ஏன்... என்னாச்சு?" என்று கேட்டபடியே, கௌதம் அவளது படுக்கையில் வந்து அமர..
"நேத்து நைட்டு நீங்க நல்லா தூங்குனீங்களா?" என்று பவித்ரா அவனது முகத்தைப் பார்த்து வினவினாள்.

"ம்ம்... தூங்குனேனே, ஏன் கேக்குற?" அவன் தன் சோர்வை மறைத்து புன்னகைக்க முயன்றபடி வினவ..
"பொய் சொல்லாதீங்க... உங்க கண்ணெல்லாம் நல்லா சிவந்து போயிருக்கு. என்னால தானே நீங்க நைட் முழுக்கத் தூங்கல, என்னால உங்களுக்கு எப்போவும் கஷ்டம் தான்ல? என்னை மட்டும் நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா... இந்நேரம் நீங்க எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பீங்க..." என்று தன் கடந்த கால பாரத்தை எல்லாம் அவன் மீது சுமத்திவிட்டோமோ என்ற ஆதங்கத்தில் அழத் தொடங்கிட, அவள் அப்படிப் பேசிய அடுத்த நொடி, கௌதமின் முகம் மாறியது. அவளுக்கு மிக அருகில் நெருங்கி அமர்ந்தவன், அவளது இரு கன்னங்களையும் தன் அகன்ற கரங்களால் தாங்கிப் பிடித்து, அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரைத் தன் பெருவிரலால் மென்மையாக துடைத்து விட்டபடி, "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் தான் பவித்ரா நான் நிஜமாவே ரொம்ப நிம்மதியா இருக்கேன். அது உனக்கும் நல்லாத் தெரியும். அப்படி இருக்கும்போது அப்புறம் ஏன் வீணா இப்படிப் பேசுற?" என்று சற்றே அதட்டலும் கனிவும் கலந்த குரலில் கேட்டான்.

"இருந்தாலும்... எனக்கு ஒரு மாதிரி குற்றவுணர்வா இருக்குங்க. என்னோட பழைய நிழல் இன்னும் என்னைத் துரத்திட்டு வந்து உங்க நிம்மதியையும் கெடுக்குதே..." என்று அவள் விசும்பிட.. "அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்றவனோ... "சரி, அதை விடு. நேத்து லேக்ல அவனைப் பார்த்தேன்னு நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?" என்று அவனது மனதில் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டான்.

"நான் உங்ககிட்ட காட்டின போது அங்கே அவன் இல்லைங்க. அதனால, ஒருவேளை அது என்னோட பிரம்மையோ என்னவோன்னு நினைச்சேன். தேவையில்லாம அதை சொல்லி உங்களை டென்ஷன் படுத்த வேண்டாம்னு தான் அப்போ சொல்லல," என்று தன் தரப்பு நியாயத்தைக் கூறியவள், அதற்கு மேல் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனது அகன்ற நெஞ்சில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

அவளது அழுகை அவனது இதயத்தை என்னவோ செய்ய, அவளது முதுகை மென்மையாக வருடி விட்டவன், "இப்போ எதுக்காக அழற? முதல்ல இந்த அழுகையை நிறுத்து பவித்ரா," என்று ஆறுதலாகக் கூறி அவளைத் தேற்றியவன், அவளது அழுகை நின்றதும், "அவனை நீ நேத்து நிஜமாலுமே பார்த்திருந்தா கூட... எதுக்காக நீ அவனைப் பார்த்து இன்னமும் இப்படி பயப்படுற?" என்று வினவினான்.

"பயப்படாம வேற என்னங்க பண்ணுவேன்? அவனால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், இன்னைக்கு நினைச்சா கூட என் உடம்பெல்லாம் நடுங்குது," என்று பவித்ரா பயத்தின் மிச்சத்தோடு நடுங்கும் குரலில் கூறிட, அவளது கைகளைத் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பற்றிக் கொண்ட கௌதம், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்து, "அவனால கஷ்டப்பட்டேன்னு சொல்றியே... நீ ஏன் அவனை அப்போவே எதிர்த்து நிக்கல பவித்ரா?" என்று அவளுக்குள் இருக்கும் தைரியத்தை வரவழைப்பதற்கான முதல் முயற்சியை அந்த கணம் எடுக்க தயாரானான்,..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom