• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 20

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 20

அன்றைய காலை உணவை அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டின் ரெஸ்டாரண்டிலேயே சுடசுட முடித்துக் கொண்டவர்கள், இன்றும் வெளியே சுற்றிப் பார்ப்பதற்காக இருவரும் கிளம்பிவிட்டனர்.

நேற்று இரவு கௌதம் கொடுத்த அந்தப் பேராதரவும், காலையில் அவன் ஊட்டிய தைரியமும் பவித்ராவிற்குள் ஒரு புதிய மனிதரை உருவாக்கியிருந்தது. கிஷோரைப் பற்றிய எந்தவித பயமும் இல்லாமல், தன் கணவனின் கரம் பிடித்து மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவள் இன்று வலம் வந்தாள்.

இன்று கௌதம் அவளைக் கொடைக்கானலின் இயற்கை எழில் கொஞ்சும், அமைதியான சில முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றான்

முதலில் அவர்கள் சென்ற இடம் கொடைக்கானலின் மிக முக்கிய அடையாளமான பில்லர் ராக்ஸ். வானத்தை முட்டும் அளவுக்கு கம்பீரமாக, செங்குத்தாக நிற்கும் மூன்று பிரம்மாண்ட பாறைகளைக் கண்டு பவித்ரா வியந்து போனாள். அந்தப் பாறைகளுக்கு இடையே பனிமூட்டம் மெல்ல மெல்ல நுழைந்து, பிறகு விலகிச் சென்ற அந்த பனி ஆட்டம் அவளுக்குக் கொள்ளை அழகாகத் தெரிந்தது. கௌதம் அவளது கைகளைப் பற்றியபடி, அந்தப் பாறைகளின் பின்னணியில் சில அழகான புகைப்படங்களை எடுத்துக் கொண்டான்.

அடுத்ததாக, பில்லர் ராக்ஸ் அருகிலேயே அமைந்திருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற குணா குகைப் பகுதிக்குச் சென்றனர். ஆழமான, ஆபத்தான அந்தப் பாறைகளின் இடுக்குகளும், அங்கே இருக்கும் மரங்களின் விசித்திரமான வேர்களும் அந்த இடத்திற்கே ஒரு மர்மமான அழகைத் தந்திருந்தன. கௌதம் அவளை மிகவும் பத்திரமாகத் தன் தோளோடு அணைத்தபடி, அங்கிருந்த பாதுகாப்புப் பாதையில் அழைத்துச் சென்று அந்தப் பகுதியைச் சுற்றிக் காட்டினான்.

முன்பு சூசைட் பாயின்ட் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அங்கிருந்து கீழே தெரிந்த ஆழமான பள்ளத்தாக்கின் காட்சி பவித்ராவைச் சற்று மிரளச் செய்தது. ஆனால், கௌதம் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு நின்றதால், அந்த மிரட்சி நொடியில் மறைந்து காட்சியின் அழகை ரசிக்கத் தொடங்கினாள். அடர்ந்த பசுமைப் போர்வை போர்த்தியது போலக் காட்சியளித்த அந்தப் பள்ளத்தாக்கையும், தூரத்தில் தெரிந்த வைகை அணையின் சிறிய தோற்றத்தையும் அவர்கள் ரசித்துப் பார்த்தனர்.

மதிய உணவிற்குப் பிறகு, அவர்கள் நேராகச் சென்றது சினிமாப் படப்பிடிப்புகளுக்குப் புகழ்பெற்ற பைன் காடுகளுக்கு தான். நேராக வானுயர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான பைன் மரங்களுக்கு இடையே, சூரிய ஒளி சாய்வாக விழுந்து கொண்டிருந்த அந்தத் தருணம் மிகவும் ரொமாண்டிக்காக இருந்தது. மரங்களின் இலைகளில் பட்டு வந்த குளிர்ந்த காற்று அவர்களின் உடலைத் தீண்ட, இருவரும் கைகோர்த்தபடி அந்த அமைதியான காட்டுப் பாதையில் மெல்ல நடைபோட்டனர். பவித்ராவின் முகத்தில் தெரிந்த அந்த அமைதியையும் பரவசத்தையும் கௌதம் தன் கண்களாலேயே படம் பிடித்துக் கொண்டான்.

வழியெங்கும் கொடைக்கானலின் ஸ்பெஷல் ஹோம்மேட் சாக்லேட்டுகளையும் சில கைவினைப் பொருட்களையும் ஆசை ஆசையாக வாங்கி கொண்டாள் பவித்ரா, காலையிலிருந்து இடைவிடாமல் தொடர்ந்த இவர்களது சுற்றல், மாலை நேரத்தைக் கடந்து, பனிமூட்டம் நகரை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகுதான் நிறைவடைந்து, மாலை தாண்டிய பின்னர் தான் இருவரும் மீண்டும் தங்களது ரிசார்ட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

இருவரும் அவர்கள் அறையை நோக்கி நடக்க, அந்த சமயம் தான் அங்கே ஒரு சுவாரசியமான சூழல் நிலவியதை கண்டனர், அன்று அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பிறந்தநாள் என்பதால், அவரை சந்தோஷப்படுத்துவதற்காக ரிசார்ட் நிர்வாகம் தங்களது பரந்த கார்டன் பகுதியை வண்ண விளக்குகளாலும், பலூன்களாலும் மிக அழகாக அலங்கரித்திருந்தது.

பிறந்தநாள் கொண்டாடும் அந்த நபரும், அங்கு வந்த கௌதம் மற்றும் பவித்ராவையும் தங்களது கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்க, இவர்களும் தட்டாமல் சந்தோஷமாகப் பங்கேற்றனர்.

ரிசார்ட்டில் தங்கியிருந்த மற்ற அனைத்துக் குடும்பங்களும் அங்கே ஒன்று கூடியிருந்ததால், பாடல்களும் ஆட்டமுமாக அவ்விடம் பார்ப்பதற்கே மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாறியிருந்தது.

கௌதமின் அருகில் நின்றபடி அந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்த நேரம் தான் பவித்ராவின் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தவளுக்கு முகத்தில் புன்னகை. அவளது அன்புத் தாய் தான் கூப்பிட்டிருந்தார், தினமும் அவளுக்குப் போன் செய்து நலம் விசாரிப்பது தான் அந்த தாயின் வழக்கம், அன்றும் அவளிடம் பேசுவதற்காக அழைத்திருக்க, கார்டனில் மியூசிக் சத்தமும், மக்களின் ஆரவாரமும் அதிகமாக இருந்ததால், தாயின் குரல் அவளுக்குச் சரியாகக் காதில் விழவில்லை.

எனவே.. "ஒரு நிமிஷம் இருங்கமா" என்று தாயிடம் கூறியவள்,.. "நான் அப்படியே கொஞ்சம் தள்ளிப் போய் அம்மாக்கிட்ட பேசிட்டு வந்திடுறேங்க," என்று கௌதமிடம் கூறிவிட்டு, சத்தமில்லாத ஒரு அமைதியான பகுதி நோக்கிச் சற்று தள்ளி நடந்து செல்ல, கௌதமும் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

அம்மாவிடம் 'நல்லா இருக்கேன்மா, சாப்பிட்டேன்மா' என்பதோடு இன்று போன இடங்களை பற்றியும் சில நிமிடங்கள் பேசி முடித்துவிட்டு, மொபைலைத் தன் ஹேண்ட்பேகிற்குள் வைத்தபடி திரும்பிய பவித்ரா, அப்படியே உறைந்து போனாள்!

காரணம் அவளது பாதையை மறித்தபடி, அவளுக்கு நேர் முன்னால் நின்றிருந்தான் கிஷோர்!

அவனை இவ்வளவு அருகில், எதிர்பாராத நேரத்தில் பார்த்த கணம் அவளுக்குள் பழைய பயத்தின் நடுக்கம் எட்டிப்பார்த்தது உண்மைதான். ஆனால், அடுத்த ஓரிரு நொடிகளில்.. நேற்று இரவு தன் கண்ணீரைத் துடைத்துத் தன்னைத் தன் மார்போடு அணைத்துக் கொண்ட கௌதமின் முகமும், இன்று காலையில் அவன் தன் கைகளைப் பற்றி, "நீ பயந்து பின்வாங்குற ஒவ்வொரு அடியும் அவனுக்குத் தைரியத்தைக் கொடுக்கும். இனி அந்தத் தப்பை பண்ணக் கூடாது. நிமிர்ந்து நிற்கனும் பவித்ரா!" என்று கணவன் ஊட்டிய அந்த அசாத்திய தைரியமும் அவளது நினைவுக்கு வந்தன.

அவ்வளவுதான்! அவளது பயம் நொடியில் மறைந்து, கண்களில் ஒரு தீப்பொறி பறந்தது. அவனைக் கண்டு நடுங்காமல், தன் புருவங்களைச் சுருக்கி அவனை ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தவள், அவனை ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல், அவனைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயல, அவனோ, அவளது வேகத்தைப் புரிந்து கொண்டு, "பவித்ரா... ப்ளீஸ் ஒரு நிமிஷம், நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்," என்று மிகவும் பாவமான, ஒரு நல்லவனைப் போலப் போலிக் குரலில் பேசியவன்... "எனக்குத் தெரியும் பவித்ரா... நான் கடந்த காலத்துல உனக்கு நிறைய பாவம் பண்ணிட்டேன். உன்னை ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். அந்த பாவத்துக்கெல்லாம் உன்கிட்ட நேர்ல வந்து ஒரு வார்த்தை 'ஸாரி' கேட்கத்தான் இப்போ இவ்வளவு தூரம் வந்தேன்," என்று மிகவும் வருந்துவது போல் கூறிட,
அவளோ அவனை நம்பாதவள் போலத் தான் தன் விழிகளை சுருக்கி, அலட்சியமாகப் பார்த்தாள்.

அவள் எதுவும் பேசாமல் நிற்பதைக் கண்ட கிஷோர், தன் நடிப்பை மேலும் தொடர்ந்தான். தன் கண்களில் போலிக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டவன், "நீ என் கூட இருந்த வரைக்கும் எனக்கு உன்னோட அருமை தெரியல பவித்ரா... நீ என்னை விட்டுப் போன அந்த நிமிஷத்துல இருந்துதான் உன்னோட உண்மையான அன்பு என்னன்னு எனக்குப் புரிஞ்சது. என்னை மன்னிச்சிடு பவித்ரா... தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடு," என்று அவளுக்கு முன்னால் தன் இரு கரங்களையும் கூப்பி மண்டியிடாத குறையாக மன்னிப்புக் கேட்க, அவளுக்கோ அவனின் இந்தத் தந்திரமான மன்னிப்பைக் கேட்டு நெஞ்சில் கொஞ்சமும் சலனமோ, இரக்கமோ ஏற்படவில்லை. ஏனெனில், அவன் எத்தகைய சைக்கோ, எப்படிப்பட்ட கொடூரமான மிருகம் என்பது அவளுக்கு தெரியும். இவன் சும்மா வந்து மன்னிப்புக் கேட்கும் நபர் கிடையாது, இதன் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய சதியும், வக்கிரமான நோக்கமும் ஒளிந்திருக்கிறது என்பதை அவளது அறிவு அவளுக்கு எச்சரித்திட, அதற்கு மேல் அவனது முகத்தைப் பார்க்கவும் பிடிக்காமல், அவனது அருகில் நிற்கவும் விரும்பாமல், விறுவிறுவென்று முன்னேறிச் செல்ல முயன்றாள். ஆனால் கிஷோர் விடவில்லை. மீண்டும் அவளது வழிமறித்து முன்னால் வந்து நின்றவன், "ப்ளீஸ் பவித்ரா... நான் சொல்றதை ஒரே ஒரு நிமிஷம் கொஞ்சம் கேளு," என்று கெஞ்சுவது போல வழிந்தான்.

அவன் வழிமறித்ததும் பவித்ரா பதற்றப்படவோ, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவோ இல்லை. தன் கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, தன் பார்வையில் அசாத்திய திமிரையும் கம்பீரத்தையும் வரவழைத்தபடி, 'அப்படி என்னதான் சொல்லப் போகிறான் இந்த கேடுகெட்ட ஜென்மம்?' என்று பார்ப்பதற்காக, அவனை நேருக்கு நேர் முறைத்தபடி அப்படியே அசையாமல் நின்றாள். அவளது அந்த நிமிர்ந்து நின்ற தோரணை, கிஷோருக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சியைத் தந்தது.

பழைய பவித்ரா என்றால் இந்நேரம் பயத்தில் நடுங்கி, அழுதிருப்பாள் என்றுதான் அவன் கணக்குப்போட்டான். ஆனால், அவளது கண்களில் தெரிந்த இந்த அசாத்திய துணிச்சலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் தன் தந்திரத்தை விடாதவன், போலியாக முகத்தில் கவலையை வரவழைத்துக்கொண்டு, "என் கூடவே திரும்ப வந்துடு பவித்ரா... உன்னை நான் இப்போ ரொம்ப பத்திரமா, கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிறேன்," என்று கூறிட,
அவளது உதடுகளில் ஒரு ஏளனப் புன்னகை அரும்பியது.

"எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு... உனக்கும் அது தெரியும்னு நினைக்கிறேன்," என்றாள் மிகவும் நிதானமான குரலில்

அது அவனுக்கு நன்றாகவே தெரியும், அது தெரிந்தும்தானே அவன் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கிறான்! முதலில் பவித்ராவுக்கு இன்னொரு திருமணம் முடிந்துவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்த கணமே அவனுக்குள் இருந்த வக்கிர புத்தி தலைதூக்கியது. 'என்னை விட்டுப் பிரிந்தவள் எப்படி இன்னொருத்தனுடன் குடும்பம் நடத்தலாம்? அவளுக்கு எப்படி இன்னொரு வாழ்க்கை அமையலாம்?' என்ற ஆவேசமும் வயிற்றெரிச்சலும் அவனுக்குள் எரிமலையாக வெடித்தது.

அவளை எப்படியாவது மீண்டும் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு வந்து, இதற்கு முன்பு அவளை சித்திரவதை செய்ததை விடவும் பல மடங்கு கொடுமைப்படுத்த வேண்டும், அவளது வாழ்க்கையை மொத்தமாக சிதைக்க வேண்டும் என்ற சைக்கோ தனமான எண்ணமே அவனுக்குள் முழுமையாக உருவெடுத்திருந்தது.

ஆனால், கௌதமின் வீட்டிலிருந்து அவள் வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. அப்படியே வந்தாலும், கௌதம் அவளுடனேயே ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவனால் அவளை நெருங்கக் கூட முடியவில்லை. அவர்கள் கொடைக்கானலுக்கு போவதை எப்படியோ மோப்பம் பிடித்துக்கொண்டு தான் அவனும் இங்கு வரை வந்திருந்தான்.

நேற்று ஏரிக்கரையில் அவள் தனியாக அமர்ந்திருந்த அந்த சில நிமிடங்களில், அவளை நெருங்கிப் பேச தான் அவன் நினைத்தான். ஆனால், அதற்குள் கௌதம் வந்துவிடவே அவனால் அவளை நெருங்க முடியாமல் போனது. அதுமட்டுமில்லாமல், நேற்று தூரத்திலிருந்து அவளைப் பார்த்தபோது அவளது கண்களில் தெரிந்த அந்த பயம் கிஷோரை அலாதி சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. 'அவளுக்கு நம் மீதுள்ள பயம் இன்னமும் குறையவில்லை, அது என்றைக்குமே குறையவும் கூடாது' என்ற மோசமான எண்ணமும் அவனுக்குள் இருந்தது.

ஆனால் இன்றோ, கொஞ்சமும் பயமே இல்லாமல் அவள் தன்னை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசுவது அவனுக்குள் நெருடலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் தன் எண்ணத்தை மறைத்துக்கொண்டு
"எனக்குத் தெரியும் பவித்ரா... நீ உன்னோட விருப்பப்பட்டு கண்டிப்பா இந்த கல்யாணத்தை பண்ணியிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லாத் தெரியும். உன் வீட்ல உள்ளவங்க கட்டாயப்படுத்தினதுனால தான் நீ இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டிருப்பேன்னு நான் நம்புறேன்," என்று அவளது மனதைக் கலைக்கப் பார்க்க, அவளோ கைகளைக் கட்டியபடியே, அவனது முகத்தை நேராகப் பார்த்து, "ஆமா... நீ நினைக்கிறது சரிதான். ஆரம்பத்துல என் குடும்பத்துக்காகத்தான் நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன். ஆனா இப்போ... நான் என் கௌதமை உயிரை விட அதிகமா காதலிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்!" என்று மிக அழுத்தமாக, ஆணித்தரமாகக் கூறினாள்.

அவள் வாயால் 'என் கௌதம்' என்ற வார்த்தையையும், 'காதல்' என்ற வார்த்தையையும் கேட்ட அடுத்த நொடி... அவ்வளவு நேரமாக அவன் முகத்தில் பூசி மெழுகியிருந்த அந்த நல்லவன் வேடமும், மென்மையும் காற்றில் பறந்து காணாமல் போய், அவனது அசல் சைக்கோ முகம் அவனறியாமலேயே வெளியே வரத் தொடங்கியது.
 
Top Bottom