• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 21

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 21

"ஏய்! என்னடி... எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே அவனை காதலிக்கிறேன்னு சொல்லுவ? இவ்வளவு நேரம் நல்லவன் மாதிரி பேசவும் நான் உண்மையாலுமே நல்லவனாகிட்டேன்னு நினைச்சியா? இன்னைக்கு உன்னை நார் நாரா கிழிக்கிறேன்டி!" என்று ஆத்திரத்தில் பற்களைக் கடித்தபடி தன் அசல் மிருக குணத்தைக் காட்டியவன், அவளைக் கொடூரமாகத் தாக்க நினைத்து வக்கிரமாய் நெருங்கி வந்தான்.

அவன் நெருங்கி வந்த வேகத்திற்குப் பயந்து அவள் கதறுவாள் என்றுதான் அவன் எதிர்பார்த்தான். ஆனால் பவித்ராவோ, சட்டென்று ஒரு அடி பின்னால் நகர்ந்து தன் உடலை சமநிலைப்படுத்தி கொண்டவள், அடுத்த நொடி... அவன் எதிர்பார்க்காத வண்ணம், தன் வலது கரத்தை ஓங்கி உயர்த்தி, கிஷோரின் கன்னத்திலேயே பளார் என்று அறைந்திட, அந்த சத்தம் அந்த அமைதியான இருட்டுப் பகுதியில் கணீரென்று எதிரொலித்தது.

அடி வாங்கிய அதிர்ச்சியில் கிஷோரின் தலை ஒருபக்கமாகச் சாய, தன் எரியும் கன்னத்தைப் பற்றிக் கொண்டு, அப்படியே ஸ்தம்பித்துப் போய் அவளைப் பார்த்தவன்,.. 'இவளா... எப்போதும் என் காலடியில் விழுந்து கிடந்த இந்த சாதாரணப் பெண்ணா என் மேல் கையை வைத்தாள்?' என்ற ஆவேசமும், அவமானமும் அவனது உச்சந்தலைக்கு ஏறியது. அவனது கண்கள் சிவந்து, கொலவெறியோடு அவளை நோக்கிப் பாய்ந்து வர முயன்ற அந்த விநாடி... அவனுக்கும் பவித்ராவிற்கும் நடுவே, ஒரு இமயமலை போல, தன் மனைவிக்கு அரணாக வந்து நின்றிருந்தான் கௌதம்!

பவித்ரா தனியாக அம்மாவிடம் போன் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றிருந்தாலும், அவளைத் தனியே அனுப்ப கௌதமின் மனம் ஒப்பவில்லை. நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு அவளது பாதுகாப்பில் அவன் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தான். அவள் நகர்ந்த அடுத்த நிமிடமே அவளைத் தொடர்ந்து அவனும் வந்திருந்தான்.

அங்கே இருட்டிற்குள் பவித்ராவின் வழியை மறித்து கிஷோர் நின்றதையும், அவனிடம் பவித்ரா கொஞ்சமும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்திப் பேசிய அத்தனை பேச்சுவார்த்தைகளையும் அவன் ஒரு மரத்தின் ஓரமாக நின்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

பவித்ரா கிஷோரின் கண்களை நேராகப் பார்த்து, தன் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்றபோதே கௌதமின் நெஞ்சம் பெருமிதத்தால் நிறைந்தது. அதைவிட, அவனது முகமூடியைக் கிழிக்கும்படி, 'என் கௌதமை உயிரை விட அதிகமா காதலிக்கிறேன்' என்று சொன்னபோது அவனது இதயம் உருகிப்போனது.

இறுதியில், கிஷோர் அவளைத் தாக்க நெருங்கிய அந்த விநாடி, பவித்ரா சற்றும் தயங்காமல் அவனது கன்னத்திலேயே பளார் என்று ஓங்கி அறைந்த கணத்தில், கௌதமின் இதழ்களில் ஒரு திருப்தியான புன்னகை மலர்ந்தது. அவளது கடந்த காலப் பயத்தின் நிழல் அவளை விட்டு மொத்தமாக விலக வேண்டும், அவளுக்குள் இந்த அசாத்திய தைரியம் பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானே அவனும் இத்தனை நாட்களாய் ஆவலோடு காத்திருந்தான்! இன்று தன் கண்முன்னே தன் மனைவி ஒரு சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நின்றதைக் கண்ட அவனது மனம் அலாதி திருப்தியடைந்தது.

அவளது தைரியத்தை ரசித்தாலும், அதே சமயம் அந்த சைக்கோவால் தன் மனைவிக்கு எந்தவொரு சிறு பாதிப்போ அல்லது ஆபத்தோ வந்துவிடக் கூடாது என்ற கணவனுக்கே உரிய எல்லையற்ற பாதுகாப்பு உணர்வுடன், கிஷோர் அவளை நெருங்கிய அடுத்த மைக்ரோ செகண்டில் புயலென இடையில் புகுந்து அவளுக்கு அரணாக நின்றிருந்தான் கௌதம்.

கௌதமின் அந்த வருகையை கண்டு ஒரு நொடி நிலைகுலைந்தவன், அடுத்த கணம் திமிருடன்.. "மரியாதையா வழியை விட்டுப் போயிடு... இது எங்களுக்குள்ள இருக்குற பிரட்சனை! இதுல நீ தலையிடாத," என்று கௌதமைப் பார்த்து எச்சரிப்பது போலக் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் கௌதமிற்குள் இருந்த சிங்கத்தின் ரௌத்திரம் கண்விழித்தது. அவனது கண்களை நேராக ஊடுருவிப் பார்த்தவன், "என்னது... உங்களுக்குள்ள உள்ள பிரட்சனையா? இவ என் பொண்டாட்டிடா!" என்று ஒவ்வொரு வார்த்தையையும் இடி முழக்கம் போல, அழுத்தத்துடன் கூறினான்.

கௌதமின் அந்த ஆணித்தரமான பதிலும், பவித்ரா கௌதமின் புஜத்தை பற்றிக் கொண்டு அவன் பின்னால் நின்றதும் கிஷோரின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. ஆத்திரத்தில் கௌதமை அடிக்கத் கையை ஓங்கினான், அவனது கை தன்னை தீண்டுவதற்குள்... கௌதமின் வலது கரம் காற்றில் மின்னலெனச் சுழன்று வந்து, கிஷோரின் கன்னத்திலேயே இடி விழுந்தது போல பளார் என்று ஓங்கி அறைந்தது!

அந்த ஒரே ஒரு அடியின் வேகத்தைத் தாங்க முடியாமல் நிலைதடுமாறிப் போன கிஷோர், சில அடி தூரம் தள்ளாடிச் சென்று, நிலத்தில் பொத்தென்று போய் விழுந்தான். அவனின் ஒரு அறைக்கே கண்கள் அப்படியே இருட்டிக்கொண்டு வந்து, உதட்டோரம் லேசாக ரத்தம் கசியத் தொடங்கியது.

தலையைச் சுற்றிய அந்த மயக்கத்திலும், ஆத்திரத்திலும் தன் தலையை பலமாகச் சிலுப்பி விட்டுக்கொண்டு, நிலத்தில் அமர்ந்தபடியே நிமிர்ந்து கௌதமைப் பார்த்தான் கிஷோர்.

கௌதமோ தன் கைகளை மடக்கிக் கொண்டு, கண்களில் அனல் தெறிக்க, கோபத்தின் உச்சியில் ரௌத்திரத்துடன் அவனையே உற்றுப் பார்த்தவன், தரையில் கிடந்தவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து,. "என் பவித்ராவுக்கு நீ பண்ண சித்ரவதைக்கெல்லலாம்... உன்னை இங்கேயே கொன்னு போடத்தான்டா என் ரத்தமெல்லாம் கொதிக்குது! ஆனா உன்னை இங்கேயே கொன்னு போட்டு, என் கையை அசிங்கப்படுத்திக்கிட்டு, நான் தண்டனை அனுபவிக்கிறதை விட... நீ சாகுற வரைக்கும் சட்டத்தோட பிடியில இருந்து ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவிக்கணும்டா! அதுதான்டா உனக்கான சரியான தண்டனை!" என்று கௌதம் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பற்களைக் கடித்தபடி கூறிய
அடுத்த விநாடி... இருட்டிற்குள் இருந்து அவனது போலீஸ் நண்பன் தனது டீமுடன் அங்கே அதிரடியாக நுழைந்தான்.

கௌதம் சற்று நேரத்திற்கு முன்பு கொடுத்த தகவலின்படி, அங்கு விரைந்து வந்திருந்த போலீஸ் படை சரியான நேரத்தில் களமிறங்கி கிஷோரை பிடித்துக் கொண்டது.

போலீசாரைக் கண்டதும் நிலத்தில் கிடந்த கிஷோரின் முகம் பயத்தில் வெளுத்துப் போனது. தன் பண செல்வாக்கை வைத்து பழையபடி தப்பித்துவிடலாம் என்று நினைத்தவனுக்கு, "இதுக்கு முன்னாடி நீ ஈஸியா வெளியே வந்திருக்கலாம், ஆனா என்னை மீறி இனி எப்படி வெளியே வரேன்னு நான் பார்க்கிறேன்" என்ற கௌதமின் நண்பனான அந்த உயர் அதிகாரி கொடுத்த அதிர்ச்சி மரண அடியாக இருந்தது.

அதன் பின் "இவனை ஜீப்ல ஏத்துங்க!" என்று அந்த போலீஸ் அதிகாரி கம்பீரமாகக் உத்தரவிட, கிஷோரின் கைகளில் இரும்பு விலங்கு பூட்டப்பட்டது. பவித்ராவைத் தன் பணபலத்தாலும், அதிகாரத்தாலும் மிரட்டிய அதே கிஷோர், இன்று அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண் முன்னாலேயே
அத்தனை கர்வமும் அடக்கப்பட்டு மிகக் கேவலமாக கைது செய்யப்பட்டான்.

"தேங்க்ஸ்டா" என்று கௌதம் நண்பனின் கரம் பற்றி நெகிழ்ச்சையுடன் நன்றி கூற,.. அவனது தோள்களைத் தட்டி, நட்போடு அணைத்து விடுத்த அந்த அதிகாரி, "இனிமே அவனால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. இதுக்கு அப்புறம் அவனை எப்படி டீல் பண்ணணும்னு எனக்குத் தெரியும், இனி நான் பார்த்துக்கிறேன்," என்று கௌதம் மற்றும் பவித்ரா இருவரையும் பார்த்து உறுதியான குரலில் கூறினான்.

ஏற்கனவே ஒரு முக்கிய கேஸ் விஷயமாகக் கொடைக்கானல் வரை வந்திருந்த கௌதமின் நண்பன், இப்போது இந்த சைக்கோ கிஷோரையும் தங்களது பிடியில் கொண்டு வந்த திருப்தியோடு, அவனைத் தன் ஜீப்பில் அழைத்துக் கொண்டு அவனது ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டான்.

அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் மனதில் அளவில்லா நிம்மதி படர்ந்தது, கௌதமின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவளின் மனதில் இருந்த அத்தனை மாத பாரமும், கடந்த காலத்தின் நிழலும் அந்த நள்ளிரவுப் பனியோடு காற்றில் கரைந்து போவது போல் இருந்தது. அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட கௌதம், இனி அவளது வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே இருக்கும் என்பதை அவளது கண்களைப் பார்த்து ஆணித்தரமாக உணர்த்தினான்.

அடுத்த இரண்டு நாட்கள் எந்தவித கவலையும் பயமும் இல்லாமல், கொடைக்கானலின் எஞ்சிய அழகிய இடங்களை எல்லாம் மனநிறைவோடு சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பினர். பவித்ராவின் முகத்தில் இப்போது புதுமணப் பெண்ணுக்கே உரிய பேரொளியும் சந்தோஷமும் மட்டுமே நிறைந்திருந்தது.

தன் அத்தை மற்றும் மாமாவின் வருகையைக் கண்ட அதிதி ஓடிவந்து "அத்தை... மாமா... எனக்காக அங்கே இருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?" என்று வீட்டிற்குள் நுழைந்ததுமே தன் சுட்டித்தனத்தை ஆரம்பித்துவிட்டாள்.

"என் அதிதி குட்டிக்காக நிறைய திங்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம்!" என்று ஆசையோடு தன் அக்கா மகளைத் தூக்கிக் கொஞ்சிய கௌதம், அவளது நெற்றியில் கைவைத்து, "நேத்து உனக்கு ஜுரம்னு அம்மா போன்ல சொன்னாங்க. இப்போ உடம்பு பரவாயில்லையாடா செல்லம்?" என்று பாசத்துடன் வினவினான்.

அவளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், "அதெல்லாம் இப்போ நல்லா சரியாகிடுச்சு மாமா... நீங்க பேச்சை மாத்தாம முதல்ல எனக்காக வாங்கிட்டு வந்த திங்ஸைக் கொடுங்க," என்று தன் பரிசுகளிலேயே முழு குறியாய் இருந்தாள்.

அவளது மழலைத் தனத்தைக் கண்டு பெரிதாய் சிரித்த கௌதம், "நான் எங்கேம்மா பேச்சை மாத்தினேன்? என் செல்லக் குட்டிக்கு உடம்பு எப்படி இருக்குன்னு விசாரிக்கக் கூடாதா?" என்று அவளுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, பவித்ரா அங்கே ஒரு ஓரமாகப் பெட்டியைத் திறந்து, அதிதிக்காகக் கொடைக்கானலில் இருந்து ஆசை ஆசையாக வாங்கி வந்திருந்த பொம்மைகளையும், தீவனங்களையும் ஒவ்வொன்றாக வெளியே எடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

"அதிதி... ரொம்பத் தூரம் டிராவல் பண்ணி டயர்டா வந்தவங்களை கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம, வந்த உடனே இப்படிப் படுத்திட்டு இருக்க?" என்று சரண்யா தன் மகளிடம் செல்லமாக அதட்டிட,.. "ஐயோ... டயர்ட்லாம் ஒன்னும் இல்லை அண்ணி! அவளை ஒன்னும் சொல்லாதீங்க," என்று சரண்யாவை தடுத்த பவித்ரா, அதிதிக்காக வாங்கி வந்த அழகான அந்தப் பரிசுப் பொருளை அவளிடம் நீட்டிட, அதனை கண்ட சிறுமியின் கண்கள் விரிந்தன,..

"தேங்க்ஸ் அத்தை!" என்று கூச்சலிட்டபடி மிகவும் உற்சாகமாக அதைத் தன் பிஞ்சுக்கரங்களால் வாங்கிக் கொண்டவள், தன் அத்தை மற்றும் மாமாவிற்கு ஆசையாக கன்னத்தில் முத்தம் கொடுக்கவும் மறக்கவில்லை. அவளது அந்த மழலை முத்தத்தில் கௌதம் மற்றும் பவித்ராவின் பயணக் களைப்பு மொத்தமாகப் பறந்து போனது.

அங்கே சுற்றிலும் நடக்கும் இந்தச் சந்தோஷக் கொண்டாட்டங்களுக்கு நடுவே, ஜானகியோ தனது மகன் மற்றும் மருமகளைத்தான் மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் கிளம்பும்போது பவித்ராவின் முகத்தில் இருந்த ஒருவித தயக்கமும் பயமும் இப்போது முற்றிலும் மறைந்து, அதற்குப் பதிலாக அவளது முகத்தில் ஒரு புதிய தெளிவும், பேரொளியும் குடியேறியிருந்தது.

அவர்கள் இருவரும் பேசாமல் நின்றிருந்தாலும், அவ்வப்போது தங்களுக்குள் மௌனமாகப் பார்வைகளைப் பரிமாறிக் கொண்ட விதமும், அந்தப் பார்வையில் அப்பட்டமாகத் தெரிந்த காதலும், கௌதம் பவித்ராவை எவ்வளவு பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறான் என்பதை ஜானகிக்குத் தெளிவாகப் புரிய வைத்தது.

தன் மகன் ஒரு நல்ல கணவனாகப் பவித்ராவின் மனதில் இடம் பிடித்துவிட்டான் என்பதும், தங்களது குடும்பத்து மருமகள் இப்போது இந்த வீட்டில் முழு சந்தோஷத்துடன் இருக்கிறாள் என்பதும் புரிந்த கணத்தில், அந்த தாயுள்ளம் நிம்மதியால் குளிர்ந்து போக, மனதிற்குள் இறைவனுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றியைக் கூறிக்கொண்டார் ஜானகி...
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom