உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 22

நாட்கள் மெல்ல நகர, அன்று தருணேஷிற்காகப் பார்த்திருக்கும் பெண்ணைப் பார்க்க, பெண் பார்க்கும் படலம் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கௌதம் குடும்பத்தினர் அனைவரும் அங்கு செல்வதற்காகக் காலையிலிருந்தே பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தனர். மாணிக்கமும் லலிதாவும் தங்களது மாப்பிள்ளை குடும்பத்தையும் இந்த விசேஷத்திற்கு அழைத்திருந்ததால், வாசுகியும் ஜீவிதாவும் கூட காலையிலேயே ஆவலோடு கிளம்பி வந்துவிட்டனர். சரணனுக்கு மட்டும் அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்ததால், அவரால் அன்று வர முடியாமல் போனது.

அனைவரும் தயாரானதும், ஒட்டுமொத்தக் குடும்பமும் முதலில் பவித்ராவின் வீட்டிற்கு தான் சென்றனர். தங்களது சம்மந்தி வீட்டாரைக் கண்டதும் பவித்ராவின் குடும்ப உறுப்பினர்கள் முகமலர்ச்சியோடு ஓடிவந்து, அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர்.

கோமதி, வனஜா, கவிதா என பவித்ராவின் சொந்தங்கள் அனைவரும் அங்குதான் கூடியிருந்தனர். அன்று கௌதமும் பவித்ராவும் ஒருவருக்கொருவர் காட்டிய நெருக்கமும், அன்பான பேச்சுகளும், இருவரின் காதல் கலந்த பார்வை பரிமாற்றங்களும் அங்கே இருந்த அனைவரது கண்களிலும் பட, அவள் தன் கணவனுடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அவளது குடும்பத்தினருக்கு பேரானந்தமாக இருந்தது.

அதன் பிறகு, பெண் வீட்டிற்குச் செல்வதற்காக ஒரு பெரிய வேன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொந்தங்கள் அனைவரும் அந்த வேனுக்குள் ஏறி அமர, வண்டி பெண் வீட்டை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.

வண்டியில் கூட்டம் அள்ளியதைப் பார்த்த ஜானகி, லலிதாவைப் பார்த்து, "லலிதா... நாம நம்ம ஒட்டுமொத்தக் குடும்பத்தோட இப்படிப் பட்டாளமா வர்றதைப் பார்த்து, அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க பயந்துடாம இருக்கணும்!" என்று நையாண்டியாகக் கிண்டல் செய்ய,
அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த லலிதாவோ, "அட போங்க அண்ணி... நம்ம குடும்பம் எவ்வளவு பெருசு, நாம எவ்வளவு ஒற்றுமையா இருக்கோம்னு அவங்களும் தெரிஞ்சுக்கட்டும். அதுவும் நல்லதுக்குத்தான்!" என்றார் பெருமிதத்துடன்.

அப்போது வாசுகி கவிதாவைப் பார்த்து, "ஏம்மா கவிதா, விசேஷத்துக்கு உன் பையனையும் கூடவே கூப்பிட்டு வந்திருக்கலாம்ல?" என்று வினவிட, "அவனுக்கு இந்த மாதிரி விசேஷங்கள்ல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இருக்காது சித்தி. 'நான் வெளியே பிரண்ட்ஸோட விளையாடப் போறேன்மா... அப்படியே வீட்டுக்கு வந்தாலும் அப்பா இன்னைக்கு வீட்லதானே இருப்பாரு, நான் அவர் கூடவே இருந்துக்கிறேன்'னு சொல்லிட்டான். அவனுக்கு விளையாடக் கிடைச்சா போதும், அதான் நானும் சரிட்டு விட்டுட்டு வந்துட்டேன்," என்று தன் பன்னிரெண்டு வயது மகனின் சுட்டித்தனத்தைப் பற்றி புன்னகையுடன் கூறினாள் கவிதா.

மறுபுறம், மாணிக்கம் ஜீவிதாவிடம் பாசமாக, "ஏம்மா ஜீவிதா, உன்னோட படிப்பு எப்போ முடியுது?" என்று விசாரித்திட,...
"அது முடியறதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு பெரியப்பா," என்று ஜீவிதா ஒரு பக்கம் அவரோடு சகஜமாகப் பேசிக் கொண்டு வர, வேனின் இன்னொரு பகுதியில் கௌதமும் தருணேஷும் தீவிரமாகப் பேசிக் கொண்டு வந்தனர்.

உண்மையில், தருணேஷிற்கு இப்போது பார்த்திருக்கும் பெண், கௌதமிற்கு மிக நெருக்கமாகத் தெரிந்த நண்பனான வசந்தின் தங்கைதான்! தருணேஷிற்குப் பொருத்தமான பெண் கிடைக்காமல் குடும்பத்தினர் அல்லல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கௌதமே நேரடியாகப் பெண் தேடும் படலத்தில் இறங்கினான். அப்போதுதான் வசந்தின் மூலம், அவனது தங்கைக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. பெண் கள்ளம்கபடமில்லாத நல்ல குணம் கொண்டவள் என்பதால், கௌதம் உடனே இரு வீட்டாரிடமும் பேசி, இந்த வரனை அசுர வேகத்தில் முடித்து வைத்திருந்தான்.

இவர்களுக்கெல்லாம் நடுவே, பவித்ராவோ தன் நாத்தனார் மகளான அதிதியைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு, சரண்யாவுடன் சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வர... அந்த வேனிற்க்குள் சிரிப்பிற்கும், அரட்டைகளுக்கும், கலகலப்பிற்கும் பஞ்சமே இல்லாமல் பயணம் மிக இனிமையாகத் தொடர்ந்தது...

ஓரிரு நிமிடங்களில் பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர். தருணேஷிற்குப் பார்த்திருக்கும் சாந்தினியின் குடும்பமும் பெரிய கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது. பெண்ணின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி மற்றும் அப்பா வழி பாட்டி என பெரிய பட்டாளமே இருந்தார்கள்.

வந்தவர்கள் அனைவரையும் இன்முகமாக வரவேற்ற பெண் வீட்டினர், அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று உபசரித்தனர். இரு வீட்டாரும் சோபாக்களிலும் நாற்காலிகளிலும் அமர்ந்து, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு மிகவும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்தச் சமயம் பார்த்து வாசுகி கிண்டலாக "நாமளே இப்படிப் பேசிக்கிட்டு இருந்தா எப்படி? பொண்ணை வர சொல்லுங்க பார்த்துடலாம்... பாவம், மாப்பிள்ளையும் ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்காரு!" என்று அவர் தருணேஷை பார்த்துக் கண்ணடிக்க, தருணேஷிற்கு முகம் சட்டென்று சிவந்து, லேசாக வெட்கம் வந்துவிட்டது.

"ஏன் சித்தி இப்படிப் பண்றீங்க?" என்று அவன் மெல்லிய குரலில் முணுமுணுக்க, "ஏன்டா... அப்போ பொண்ணைப் பார்க்க உனக்கு ஆசையே இல்லையா?" என்று கவிதா தன் பங்குக்கு அவனை வாரிவிட, அவளை திரும்பிப் பார்த்து, "அக்கா..." என்று சிணுங்கியவனோ,.. "நான் எதுவும் சொல்லலப்பா, ஆளை விடுங்க!" என்று கைகளைக் கூப்பிக் கெஞ்சிட, அவனது வெட்கத்தைப் பார்த்து அங்கு கூடிருந்த ஒட்டுமொத்தக் குடும்பமும்
கொல்லென்று சிரித்தது.

அதன் பின், உள்ளே இருந்து பட்டுப்புடவையில் அழகாக நடந்து வந்த சாந்தினி, அங்கே அமர்ந்திருந்த அனைவருக்கும் கைகளைக் குவித்து, முகத்தில் மெல்லிய புன்னகையுடன் வணக்கம் சொல்லிவிட்டு அமைதியாக நின்றாள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத, அமைதியான சாந்தமான அழகுடன் இருந்த சாந்தினியைப் பார்த்த முதல் நொடியிலேயே மாப்பிளை குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது.

அவள் வந்ததும் தருணேஷின் அருகில் அமர்ந்திருந்த கௌதமும் அவனது தோளை இடித்து, "பொண்ணை நல்லா பார்த்துக்கோ தருணேஷ்... அப்புறமா வீட்டிற்குப் போய் 'நான் சரியா பார்க்கல'ன்னு சொல்லக் கூடாது, ஆமா!" என்று ரகசியமாகக் கிண்டல் செய்ய,.. "மச்சான்... நீங்களுமா இப்படி?" என்று தருணேஷ் கௌதமைப் பார்த்துப் புலம்பினாலும், அவனது கண்கள் சாந்தினியைத்தான் ரசித்துக் கொண்டிருந்தன. அவனுக்கும் அவளை முதல் பார்வையிலேயே ரொம்பவும் பிடித்துவிட்டது.

கௌதம் மெல்ல தன் மனைவியின் காதருகே, "பவித்ரா, பொண்ணு எப்படி இருக்கா?" என்று மெதுவான குரலில் கேட்க, அதற்குப் பவித்ராவும் கணவனைப் பார்த்துப் புன்னகைத்து, "எனக்கு வரப் போற அண்ணி ரொம்பவே அழகா, லட்சணமா இருக்காங்க!" என்று புன்னகையோடு கூறினாள்.

இருவீட்டாரும் பேசி முடித்ததும் ஜானகி, "மாப்பிள்ளை பொண்ணுகூடத் தனியா பேச ஆசைப்படுவார்ல? கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படிப் பேசிக்கிட்டா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இன்னும் ஏதுவாக இருக்கும்," என்று பக்குவமாக எடுத்துரைக்க,..
"நீங்க சொல்றது ரொம்ப சரிதான்மா," என்று வழிமொழிந்த பெண்ணின் தகப்பன், சாந்தினியைப் பார்த்து, "சாந்தினி... மாப்பிள்ளையை மாடிக்குக் கூப்பிட்டுப் போம்மா, அங்கே போய் ரிலாக்ஸா பேசட்டும்," என்று கூறிட, சாந்தினியும் வெட்கத்துடன் தன் சிறு தலையசைப்பால் சம்மதம் தெரிவித்துவிட்டு மாடிப் படியை நோக்கி முன்னேற, தருணேஷும் அவளது பின்னாடியே ஆவலோடும் எதிர்பார்ப்போடும் மாடிக்குச் சென்றான்.

மாப்பிள்ளையும் பெண்ணும் தனியாகப் பேசுவதற்காக மாடிக்குச் சென்றதும், கீழே இரு குடும்பத்தினரும் இன்னும் நெருக்கமாக ஒன்றிணைந்து அரட்டையடிக்கத் தொடங்கிட, ஆனால் பவித்ராவின் கவனமெல்லாம் வந்ததிலிருந்தே
சாந்தினியின் அக்காவான மேகலாவின் மடியில் தவழ்ந்து கொண்டிருந்த அந்த ஆறு மாதக் குட்டியின் மீது தான் இருந்தது.

கௌதம் தன் நண்பனும் பெண்ணின் அண்ணனுமான வசந்திடமும், மற்ற பெரியவர்கள் ஆளுக்கொரு பக்கமாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, பவித்ரா மெல்ல மேகலாவின் அருகில் நகர்ந்து சென்றவள்.. அந்தக் குழந்தையின் பிஞ்சுப் பாதங்களையும், சிரிப்பையும் ஆசையோடு பார்த்தபடியே, "உங்க பையனா அக்கா?" என்று மெதுவான குரலில் வினவிட, பவித்ராவின் முகத்தில் தெரிந்த அந்தத் தாயன்பைக் கண்ட மேகலா புன்னகையுடன், "ஆமாப்பா... என் ரெண்டாவது பையன். முதல்ல ஒரு பொண்ணு இருக்கா, அவ இப்போ தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறா," என்று கூறியவள், பவித்ரா குழந்தையைத் தொடத் துடிக்கும் அந்த ஆசையை உணர்ந்தது போல்.. "இந்தாங்க... பிடிங்க," என்று குழந்தையை அவளிடம் நீட்டினாள்.

பவித்ராவும் ஆசையுடன், தன் கரங்களை ஏந்தி, பஞ்சு போலக் கொழுகொழுவென்று அழகாக இருந்த அந்த ஆண் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்து வாங்கிக் கொண்டாள்.

அவள் மடியில் அமர்ந்ததும் அந்த வாண்டு தன் பிஞ்சுப் பிஞ்சுக் கைகளால் பவித்ராவின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து, எச்சில் ஒழுக 'இஹி' என்று மழலையாகச் சிரிக்க, பவித்ராவிற்கு உலகத்தையே வென்ற சந்தோஷம் வந்தது. அவளது முகம் பிரகாசமாக மாறியது.

அவள் அந்தக் குழந்தையைத் தூக்கி வைத்து, அதன் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சிக் கொண்டிருப்பதை கண்ட சாந்தினியின் பாட்டி.. "சீக்கிரமே நீயும் இதே மாதிரி ஒரு அழகான பிள்ளையைப் பெத்துக்கோ கண்ணு!" என்று கூற,
பெரியவர் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்ட அவளின் முகம் சட்டென்று வெட்கத்தால் சிவந்து போக, தன் கன்னக் குழிகள் குழிய அப்படியே தலைகுனிந்து புன்னகைத்தவளின் பார்வை, இயல்பாகவே கௌதமை நோக்கி நகர்ந்தது.

என்ன ஆச்சரியம்! அவளது மன அலைகளை அப்படியே உள்வாங்கியது போல, கௌதமும் அதே விநாடி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். வசந்த் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அதை கவனிப்பது போலத் தலையசைத்தாலும், அவனது கண்கள் என்னவோ தன் மனைவியின் மீதே நிலைத்திருந்தன.

குழந்தையைக் கைகளில் ஏந்தி, வெட்கத்தில் முகம் சிவந்து நின்ற பவித்ராவைக் கண்ட கௌதமின் பார்வையில் ஒரு ஆழமான காதலும், மென்மையும் குடியேறியது. 'சீக்கிரமே நமக்கும் இப்படி ஒரு மழலை செல்வம் பிறக்கும்' என்பதைப் போல அவளது கண்களைப் பார்த்து அவன் லேசாகப் புன்னகைக்க... அந்தப் பார்வை பரிமாற்றத்தில் பவித்ராவிற்குள் இன்னும் நூறு மடங்கு வெட்கம் தலைதூக்கியது.

இருவரின் இந்த மெளனக் காதலை அங்கே இருந்த ஜானகியும், லலிதாவும் கவனித்துவிட்டுத் தங்களுக்குள் அர்த்தமுள்ளதாகப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

அதன் பின், மாடியில் தங்களுக்குள் பேசி முடித்துவிட்டுப் பெண்ணும் மாப்பிள்ளையும் புன்னகைத்த முகத்தோடு கீழே இறங்கி வந்து சேர்ந்தனர். இருவரின் முக மலர்ச்சியுமே அவர்கள் ஒருவரையொருவர் மனதார ஏற்றுக் கொண்டதை இரு வீட்டாரும் புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இருப்பினும், முறைப்படி பெரியவர்கள் இருவரையும் அருகில் அழைத்து அவர்களது சம்மதத்தைப் பற்றிக் கேட்க, தருணேஷ் லேசான வெட்கத்துடன் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, சாந்தினியும் தன் அழகான விழிகளை நிலத்தில் பதித்து, மெல்லிய தலை அசைப்புடன்
சம்மதம் என்று கூறினாள்.

இருவரின் பதிலைக் கேட்டதும் அந்த வீடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தது. வரன் இருதரப்பிற்கும் கச்சிதமாகப் பொருந்திவிட்டதால், அடுத்தடுத்த காரியங்களை உடனே தள்ளிப்போடாமல்.. "நல்ல காரியத்தை ஏன் தள்ளிப் போடணும்? இன்னைக்கே பொண்ணுக்குப் பூ வச்சிடலாம்" என்று ஜானகி சொல்ல, பெண் வீட்டாரும் அதற்க்கு மிகுந்த சந்தோஷத்தோடு ஆமோதித்தனர்.

அன்றே, அங்கிருந்த சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கூடி, மங்களகரமான மஞ்சள், குங்குமம் இட்டு, சாந்தினியின் கூந்தலில் நறுமணம் வீசும் மல்லிகைப் பூவைச் சூட்டி, பூ முடித்தல் விழாவை முடித்தனர். பவித்ரா தன் அண்ணனுக்காகப் பார்த்திருக்கும் பெண்ணுக்கு அன்போடு பூவைத்து தன் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டாள்.

அதனைத் தொடர்ந்து, இரு வீட்டுப் பெரியவர்களும் அமர்ந்து, ஜோதிடரைக் கலந்தாலோசித்து, ஒரு சுபமுகூர்த்த நாளில் திருமண தேதியையும் சுபமாகக் குறித்து முடித்தனர்.

தங்களுடைய மூத்த மகனின் திருமண நிச்சயம் இவ்வளவு அழகாக, எந்தவித தடங்கலும் இல்லாமல் முடிந்த திருப்தியில் மாணிக்கம் மற்றும் லலிதாவின் நெஞ்சம் நிறைந்துபோக, விரைவில் திருமணப் பந்தலில் சந்திப்போம் என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தங்களது இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டனர்.

 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
சூப்பர் சூப்பர் தருணுக்கும் மேரேஜ் fix ஆகிட்டு.....
அவளோ ஆசையா குழந்தை மேல் பவி🥰🥰🥰🥰🥰
இந்த கௌசல்யாவை ஒன்னும் செய்யலையா