• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 23

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 23

அன்றைய மாலை, வழக்கம்போல அலுவலக வேலைகளை முடித்துவிட்டுத் தன் அறைக்கு வந்த கௌதம், குளிப்பதற்காகத் தனது இரவு உடையை அலமாரியின் முன்பு நின்று எடுத்துக் கொண்டிருந்தான். அந்த அமைதியான தருணத்தில், எதிர்பாராத விதமாகப் பின்னாடி இருந்து அவனது முதுகோடு சேர்த்து மென்மையான கரங்கள் வந்து கட்டி அணைக்க, கௌதமின் இதழ்கள் அழகாய் விரிந்து கொண்டது.

உலகில் எத்தனையோ ஸ்பரிசங்கள் இருக்கலாம், ஆனால் தன் ஆன்மாவை உலுக்கும் இந்த ஒற்றை அணைப்பு... இது யாருடையது என்று அவன் அறியாததா என்ன? தன் ஆயுள் முழுமைக்கும் தனக்கு மட்டுமே சொந்தமான தன்னவளின் அணைப்பு என்பதை அவன் உணராமல் போவானா?

தன் மார்பின் குறுக்கே படிந்திருந்த அவளது பிஞ்சுக்கரங்களை வளைத்துப் பிடித்தவன், அவளை இன்னும் தன்னோடு இறுக நெருக்கமாக்கிக் கொண்டபடி, அவளது மென்மையான கையின் பின்புறத்தில் தன் இதழ்களைப் பதித்தவன்... "என்ன விஷயம்? இன்னைக்கு மேடம் ஏதோ வேற மூட்ல இருக்கிற மாதிரி இருக்கு?" முகத்தில் அரும்பிய குறும்புப் புன்னகையுடன் கேட்க, அவன் அப்படிக் கேட்டதும் பவித்ராவின் முகம் தக்காளிப் பழமாய் சிவந்து போனது. வெட்கம் தாங்க முடியாமல் அவனது அகன்ற முதுகிலேயே தன் முகத்தை இன்னும் நன்றாகப் புதைத்துக் கொண்டவள், சில நொடிகள் மௌனத்திற்குப் பின், "நாமளும்... நாமளும் ஒரு குழந்தை பெத்துக்கலாமாங்க?" தன் நெஞ்சுக்குள் முட்டி மோதிக்கொண்டிருந்த அந்த ஆசையை, தன் வெட்கத்தை எல்லாம் மொத்தமாகத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, நேரடியாகவே அவனது முதுகைப் பார்த்துக் கேட்டுவிட்டாள்!

உண்மையில், நேற்று சாந்தினியின் வீட்டில் மேகலாவின் குழந்தையைக் கைகளில் ஏந்தி விளையாடிய அந்த நிமிடத்திலிருந்தே, பவித்ராவின் அடிமனதிற்குள் தாய்மையின் ஈர்ப்பும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற எல்லையற்ற ஆசையும் ஆழமாக பதிந்துவிட்டிருந்தது. நேற்று அங்கிருந்து வீடு திரும்பியதிலிருந்தே கௌதமிடம் இதைப்பற்றிப் பேச வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால், அவளுக்குள் இருந்த பெண்ணுக்கே உரிய வெட்கம் அவளது நாக்கைக் கட்டிப்போடவே, நேற்று இரவு எதைப் பற்றியும் பேச முடியாமல் அமைதியாகவே படுத்து உறங்கிவிட்டாள். ஆனால், இன்று நாள் முழுக்க அவளது நினைவில் அந்தக் குழந்தையும், பாட்டி சொன்ன வார்த்தைகளும், கௌதமின் காதலும் மட்டுமே வட்டமடித்துக் கொண்டிருந்ததால், அவளால் இன்று தன்னைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது.

அவர்கள் கொடைக்கானலுக்குப் போனதிலிருந்தே இருவருக்கும் இடையே கணவன் மனைவிக்கான அந்த அழகான நெருக்கம் மலர்ந்திருந்தது உண்மைதான். ஆனால், அந்த நெருக்கம் என்பது லேசாகக் கட்டி அணைத்துக் கொள்வதிலும், கைகளைப் பற்றிக் கொள்வதிலும், நெற்றியில் பாசமாய் முத்தம் கொடுப்பதிலும் மட்டுமே நின்று போயிருந்தது. அதை தாண்டி தாம்பத்தியம் என்ற எல்லையை இருவரும் இன்னும் தொட்டிருக்கவில்லை.

கௌதமிற்குத் தன் மனைவியோடு முழுமையாக இணைந்து வாழ வேண்டும் என்ற எல்லை இல்லா ஆசை இருந்தாலும், அவளது கடந்த காலக் காயங்களை அறிவான் என்பதால், பவித்ரா என்றைக்குத் தன் மனதாலும் உடலாலும் முழுமையாகத் தயாராகி, தன்னை நோக்கி வருகிறாளோ... அன்றைக்குத்தான் அவளோடு இல்லற வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஒரு உன்னதமான கணவனாக அவளுக்காகக் காத்திருந்தான்.

ஆனால் இன்றோ... அவளே தன் வாய் திறந்து, தங்களது காதலின் சாட்சியாக ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்டுவிட்ட பிறகு, அவனும் காலத்தைக் கடத்துவானா என்ன?

அவளது வார்த்தைகள் அவனது காதுகளில் தேனாகப் பாய, மெல்லத் திரும்பி அவளைத் தன் பக்கம் இழுத்தவன், தலைகுனிந்து நின்ற அவளது முகத்தைத் தன் இரு கரங்களாலும் ஏந்தி, அவளது காந்த விழிகளைத் தன் காதலின் வெம்மையோடு நேருக்கு நேராகப் பார்த்தான் கௌதம்.

அவனது கண்களில் தெரிந்த அந்த எல்லையற்ற காதலையும், காமத்தையும் தாங்க முடியாமல், கூச்சத்தின் உச்சத்திற்க்கே சென்ற பெண்ணவள், தன் நீண்ட கண் இமைகளைத் தாழ்த்தி விழிகளை இறுக்கமாக மூடிக் கொள்ள,
அவனோ அவளது தவிப்பை ரசித்தபடி, அவளது மென்மையான கன்னத்தில் ஆரம்பித்து நெற்றி, மூக்கு, கண்கள் என முகம் முழுக்க மெல்லத் தன் இதழ்களைப் பதிக்கத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு முத்தத்தின் வெம்மையிலும் உடல் சிலிர்த்துப் போனவள், தாளாத மயக்கத்தில் அவனது மார்புச் சட்டையைத் தன் பிஞ்சுக்கரங்களால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

அவளது அந்த சிறு நடுக்கம் அவனுக்குள் இருந்த தாபத்தை இன்னும் தூண்ட, அதன் பின் அவளது செவ்விதழ்களைத் தன் இதழ்களுக்குள் சிறைபிடித்துக் கொண்டான், இருவருக்குமான அந்த முதல் முத்தம் விவரிக்க முடியாத பேரழகோடு, மிகவும் மென்மையாகவே ஆரம்பித்து, அதே மென்மையோடு நிறைவடைந்தது.

அந்த முத்தம் கொடுத்த ஈர்ப்பில் தன் உணர்வுகளை அவனால் அடக்க முடியவில்லை. அவளை அப்படியே தன் கரங்களில் அள்ளிக் கொண்டு போய், பஞ்சு மெத்தையில் மெதுவாகக் கிடத்தி, மெல்ல அவளோடு சரிந்தவன், பெண்ணவளின் கழுத்தினடியில் முகம் புதைத்து ஆழமாக சுவாசிக்க, அவனது தலைக் கேசத்தை விரல்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டவளோ, அவனது அத்தனை செயல்களிலும் முழுமையாக சிலிர்த்துத்தான் போனாள்.

அதன் பின்... அவளது சம்மதத்தோடு அடுத்த கட்டத்திற்கு நகர நினைத்த கௌதமின் கரம், அவளது மார்பின் மீது மெல்லப் பதிந்து, அங்கிருந்த ஆடையை லேசாக விலக்க முயல, அதுவரை அவன் காட்டிய காதலின் வேகத்தில் கிறங்கிப் போய், உலகத்தையே மறந்து கிடந்தவள், அவனது கரம் பட்டு ஆடை விலகிய அந்த நொடியில், சட்டென்று ஏதோவொரு இனம் புரியாத பயத்தில் விழிகளை அகலத் திறந்து அடுத்த விநாடி, பதற்றத்தோடு அவனது கரத்தை அப்படியே இறுகத் தடுத்துப் பிடித்தாள்.

தன் கையை அவள் தடுத்ததும் திடுக்கிட்டுப் போன கௌதம், அவளது முகத்தைப் பார்த்து, "என்னாச்சு பவித்ரா?" என்று குழப்பத்துடன் வினவிட, அவளோ உள்ளுக்குள் ஏதோவொரு பழைய நினைவின் கோரப் பிடியில் தவித்துப்போனவளாய், "வே... வேண்டாம்." என்று நடுங்கும் குரலில் கூறவும், கௌதமின் நெற்றி சுருங்கியது. அவளது முழு சம்மதத்திற்குப் பிறகுதான் அவன் அவளைத் தீண்டவே ஆரம்பித்தான், ஆனால் இவ்வளவு தூரம் நகர்ந்த பிறகு, இப்போது திடீரென்று வேண்டாம் என்று அவள் மறுக்கவும், அவனுக்குள் ஏமாற்றமும் ஒருவித அதிருப்தியும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

"ஏன் வேண்டாம் பவித்ரா? எல்லாம் ஓகே தானே?" என்று அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த அந்தத் திடீர் பதட்டத்தைக் கண்டு சற்று அழுத்தமான குரலில் வினவிட, "ஓகே இல்லைங்க, இ.. இப்போ வேண்டாம் ப்ளீஸ்" என்று கூறியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் மடமடவென்று கன்னங்களில் வழிந்தோடியது.

அவளது அந்தக் கண்ணீரைக் கண்டதும், கௌதமிற்கு அதுவரை உச்சத்திலிருந்த அவனது உணர்வுகள் மொத்தமும் அப்படியே சுருங்கி வடிந்து போனது போன்ற ஒரு உணர்வு. இருப்பினும் தன் ஆசையை விட அவளது கண்ணீரும், அவள் படும் தவிப்பும் அவனுக்குப் பெரிதாகத் தெரிந்ததால், அவளது சம்மதமில்லாமல் அவளை மேலும் நெருங்க அவனது ஆண்மை இடம் கொடுக்கவில்லை.

"சரி வேண்டாம்..." என்று சற்றே விரக்தியும் ஏமாற்றமும் கலந்த குரலில் கூறியவன், அவளை வற்புறுத்த விரும்பாமல், அவளை விட்டு மொத்தமாக விலகிப் படுக்கையின் மறுபுறம் சென்று அமர்ந்து கொண்டான். அந்த அறையில் திடீரென்று ஒரு கனத்த மௌனம் வந்து குடியேறியது.

மௌனமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவளுக்கோ, கௌதமின் அந்த திடீர் விலகலும், அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றமும் நெஞ்சைக் கத்தியால் அறுப்பது போல இருந்தது. அவளது உடலும் மனமும் அவனது தூய்மையான காதலை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும், அவன் கரம் பட்டு ஆடை விலகிய அந்த ஒரு செகண்டில் அவளது கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளும், கிஷோர் அவளை வலுக்கட்டாயமாக சித்திரவதை செய்ய முயன்ற அந்த அசிங்கமான நிழலும் அவளறியாமலேயே விஸ்வரூபம் எடுத்து வந்து அவளது கண்ணை மறைத்திருந்தது.

கௌதமின் உன்னதமான ஸ்பரிசத்திற்கும், அந்தப் பாவியின் வக்கிரமான தீண்டலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவளது அறிவு உணர்ந்தாலும், அவளது ஆழ்மனதில் உறைந்திருந்த அந்த பழைய பயம், அவளையே அறியாமல் அவளைப் பின்வாங்கச் செய்துவிட்டது.

அறைக்குள் நிலவிய அந்த நிசப்தத்தில், கட்டிலின் ஓரத்தில் தன் முதுகைக்காட்டி அமர்ந்திருந்த கௌதமின் மௌனம் அவளை குற்ற உணர்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு சென்றது. 'தன்னை உயிராக நினைக்கும் கணவனுக்கு இப்படி ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டோமே, அவன் நம்மைத் தவறாக நினைத்துவிட்டானோ' என்ற தவிப்பு இன்னும் அதிகமானது.

மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து நகர்ந்தவள், "எ... என்னை மன்னிச்சிடுங்கங்க..." அவளது குரல் உடைந்து வெளிவர, அவளது அழுகைக் குரல் கேட்டு கௌதம் லேசாக அசைந்தாலும் திரும்பவில்லை. அதைக்கண்டு இன்னும் பதறியவள், அவனது முதுகில் தன் நெற்றியைத் முட்டி, "நிஜமாவே எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்ங்க... என் மனசுக்கும் உடம்புக்கும் நீங்க மட்டும்தான்... ஆனா, நீங்க என் ட்ரெஸ்ஸை தொட்ட அந்த ஒரு நொடியில, எனக்கு அந்த பழைய ஞாபகம் வந்து என் கண்ணை மறைச்சிடுச்சுங்க. என்னால அந்த பயத்துல இருந்து இன்னமும் முழுசா வெளியே வர முடியல... ப்ளீஸ் என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க..." என்று தன் இயலாமையை கண்ணீராகக் கொட்டினாள்.

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கௌதமின் காதுகளில் விழுந்த அடுத்த நொடி, அவனுக்குள் இருந்த ஏமாற்றமும் சிறு கோபமும் பனி போலக் கரைந்து மறைந்தன. அவளுக்குள் இன்னும் ஆறாமல் இருக்கும் அந்த பழைய காயத்தின் வடுதான் இதற்குக் காரணம் என்று புரிந்தபோது, அவனுக்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது.

'அவளை இன்னும் நாம் முழுமையாக அந்த பயத்தின் பிடியில் இருந்து மீட்கவில்லையே, அதற்குள் நாம் அவசரப்பட்டு அவளது மனதைக் காயப்படுத்திவிட்டோமோ' என்று தனக்குள்ளேயே வருந்தி, சட்டென்று அவள் பக்கம் திரும்பியவன், முகத்தை மூடிக் கொண்டு அழுதுகொண்டிருந்த பவித்ராவின் கையை தன் இரும்புப் பிடிக்குள் ஏந்திக் கொண்டு, அவளது முகத்தை நிமிர்த்தி, அவளது கலங்கிய விழிகளைத் தன் கட்டை விரல்களால் மென்மையாக துடைத்துவிட்டு, அவளது நெற்றியில் மிகவும் ஆழமாக, ஆறுதலாக ஒரு முத்தத்தைப் பதித்து.. "இங்க பாரு பவித்ரா... என்கிட்ட இதுக்காக எப்பவும் மன்னிப்பெல்லாம் கேட்காத. தப்பு என் மேலதான்... உனக்கு இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுதுன்னு எனக்குத் தெரியும், நான்தான் உன்னோட இந்தத் தவிப்பைப் புரிஞ்சுக்காம அவசரப்பட்டுட்டேன். உன்னை முழுசா அந்த பயத்துல இருந்து மீட்டெடுக்காம, உன்னோட இந்த அழுகையைத் தாண்டி எனக்கு எந்த சந்தோஷமும் வேண்டாம்," என்று அவளது தலையைக் கோதி, அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் கௌதம்.

அவனது மார்பின் சூட்டிலும், அந்தப் பாதுகாப்பான அணைப்பிலும் பவித்ராவின் நடுக்கம் மெல்ல மெல்ல குறைந்து, அவளது மனதில் ஒரு பேரமைதி குடியேறத் தொடங்கியது.
 
Top Bottom