• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 24

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 24

இரு நாட்கள் இயல்பாகவே கடந்தது. கௌதம் அவளிடம் எப்போதும் போல அன்பாகவும், எந்தக் குறையும் வைக்காமல் இயல்பாகவும் பேசி நடந்து கொண்டான். ஆனால், பவித்ராவிற்கோ உள்ளுக்குள் குற்றவுணர்ச்சிப் புழுவாக அரித்துக் கொண்டிருந்தது. 'தன்னை உயிராக நினைக்கும் கணவனை, இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிப் பயந்து கொண்டே விலக்கி வைப்பது?' என்று நினைத்து நினைத்து வருந்தியவள், தனது தவிப்பிற்கு இன்றே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உறுதியெடுத்து, அன்றைய இரவு படுக்கைக்கு வந்த கௌதமிடம், "இன்னைக்கு நான் நல்லாத்தான் இருக்கேன்ங்க..." என்றாள் மெதுவான குரலில்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவளது மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியைப் போக்கத்தான் அவள் முயற்சிக்கிறாள் என்பதை உணர்ந்தவன், இன்னும் சில நாட்கள் அவளுக்கு அவகாசம் கொடுக்க நினைத்தான். ஆனால் அவளோ, இந்த முறை கௌதமை தவிக்கவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அவனே எதிர்பாராத விதமாகத் தாவி அவனது கழுத்தைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது இந்தத் திடீர் நெருக்கமும், அவளது உடலின் வெம்மையும் கௌதமிற்குள் தூங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை அசுர வேகத்தில் ஏற்றிவிட, அதற்கு மேல் அவனாலும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளது இதழ்களைத் தன் இதழ்களுக்குள் கவ்வி ஆழமாக இளைப்பாற ஆரம்பித்தவனின் கரம் அவளது இடையிலும் உடலிலும் மென்மையாகக் கோலம் போட ஆரம்பித்தது. அவனது ஒவ்வொரு தீண்டலுக்கும் கிறங்கிப் போனாள் அவள். அவளது சம்மதத்தை அவளது மூச்சுக்காற்றே உணர்த்த, கௌதமின் கரம் மெல்ல நகர்ந்து, அவளது தோளில் குத்தியிருந்த புடவையின் பின்னைக் கழற்றி, அவளது புடவையை விலக்கப் போன, அதே விநாடி... மீண்டும் அவளுக்குள் அந்த இனம் புரியாத நடுக்கம் எட்டிப் பார்த்தது. கடந்த காலத்தின் அந்த பயங்கரமான கரம் தன் ஆடையைத் தொடுவது போன்ற ஒரு பிரம்மை அவளது ஆழ்மனதைத் தாக்க, நடுங்கிப் போனாலும் இந்த முறை எப்படியாவது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு, கௌதமின் காதலுக்குள் தஞ்சமடைந்துவிட வேண்டும் என்று அவளது அறிவு போராடியது. ஆனால், அவளது உடலும் பயந்த சுபாவமும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவளது போராட்டமெல்லாம் தோற்றுப் போக, சட்டென்று அவளது கண்களிலிருந்து கண்ணீர் மடமடவென்று வழிந்தோடியது.

அவளது கண்ணீரின் ஈரம் தன் கைகளில் பட்டதும், கௌதமின் உணர்வுகள் அனைத்தும் சட்டென்று உறைந்து போனது. ஆழமான ஏமாற்றத்துடனும், அனல் பறக்கும் மூச்சுடனும் சட்டென்று அவளை விட்டு விலகியவன், படுக்கையை விட்டு எழுந்து நேராகப் பால்கனிக்குச் சென்றுவிட்டான்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக அவனது உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு சென்று தூண்டிவிட்டு, கடைசிக் கட்டத்தில் இப்படிப் பயந்து பின்வாங்கினால் அவனும் மனிதன்தானே என்னதான் செய்வான்? உள்ளுக்குள் ஏமாற்றமும், ஆத்திரமும் ஒரு சேர, எங்கே அவளை ஏதாவது வார்த்தைகளால் பேசி காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில்தான், தன்னை தடுத்துக் கொள்ள அவன் பால்கனிக்கு வந்து விட்டான்.

அங்கே படுக்கையில் கிடந்த பவித்ராவிற்கோ கண்கள் குளமாகிக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உணர்வுகளின் உச்சியில் இருக்கும் கணவனை இப்படிப் பாதியில் நிறுத்தி அவனது ஆண்மையைக் காயப்படுத்திவிட்டோமே என்று நினைக்க நினைக்க அவளுக்குத் தன் மீதே சொல்லொணாாக் கோபம் வந்தது.

அவன் தன் பாட்டிற்குத் தள்ளித்தானே இருந்தான், அவளுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்றுதானே நினைத்தான்? அவள்தானே வளுக்கட்டாயமாக அவனைக் கூடலுக்கு இழுத்தாள்? ஆசையைக் காட்டிவிட்டு மோசம் செய்தது போல தன் செயலை நினைத்து மனமெல்லாம் ரணமாகியது.

நெடுநேரம் அழுது ஓய்ந்தவள், தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மெல்லப் பால்கனிக்கு வர,
அவனோ அங்கே நின்றபடி, நள்ளிரவு நிலவைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அனல் பறக்கும் மூச்சுக்காற்று பால்கனியின் குளிர்ந்த காற்றிலும் சூடாக வெளிவந்து கொண்டிருந்தது.

அவனது அருகில் போய் மிகத் தயக்கத்துடன் நின்றவள், "ஸாரிங்க..." என்று தழுதழுத்த குரலில் கூறிட, அவளது குரல் கேட்டு, ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அவளை நோக்கித் திரும்பியவனோ, அவளது அழுகை முகத்தைப் பார்க்கச் சகிக்காமல், "போய் தூங்கு..." என்றான் மிகவும் சுருக்கமான குரலில்.

"என் மேல ரொம்பக் கோபமா இருக்கீங்களா?" என்று அவள் தவிப்புடன் வினவ... "உன் மேல கோபம் இல்லை, என் மேலதான் எனக்குக் கோபம்!" என்று சட்டென்று தன் குரலைத் தாழ்த்தியவன், "உனக்கு டைம் இன்னும் நிறைய கொடுக்கணும்னுதான் நான் நினைச்சேன். ஆனா, உன்னோட அணைப்பால என்னோட ஆசையைக் கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம நான் தான் அவசரப்பட்டுட்டேன்," என்று அவளது பாரத்தைக் குறைப்பதற்காகத் அந்தத் தவறை தன் மீதே சுமத்திக் கொண்டவன்,.. "நீ போய் படு," என்று நிதானமாகக் கூறினான்.

"நீங்க வரலையா?" என்று அவள் வினவ... "எனக்கு இப்போதைக்கு தூக்கம் வரல பவித்ரா... கொஞ்ச நேரத்துல வந்துடறேன்," என்றான் நிலவைப் பார்த்தபடி. அதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், பவித்ராவும் கனத்த இதயத்தோடு அறைக்குள் வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அந்த இரவு இருவருக்குமே தூக்கமில்லாத ஒரு நீண்ட இரவாகவே விடிந்தது...

நாட்கள் மெல்ல நகர, அவளுக்கோ ஒவ்வொரு நாளும் கடக்கக் கடக்க, மனம் ரணமாகிக் கொண்டே வந்தது. கௌதம் இப்போதும் அவளிடம் அன்பாகத்தான் இருக்கிறான். ஆனால், அதற்குள் இருக்கும் ஒருவிதத் தவிப்பும் ஏமாற்றமும் பவித்ராவின் மனதை ஒவ்வொரு நொடியும் கொன்று கொண்டிருந்தது.

வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் பவித்ராவின் முகம் இப்போதெல்லாம் அடிக்கடி வாடிப் போவதையும், அவளது கண்கள் ஏதோ ஒரு சிந்தனையில் தொலைவதையும் ஜானகி கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஒருநாள் பவித்ரா சமையலறையில் தனியாக நின்றிருந்த போது அவளருகே வந்த ஜானகி, அவளது தோளைத் தொட்டு, "என்னாச்சுமா பவித்ரா? இப்போதெல்லாம் உன் முகம் சரியாவே இல்லையே... அப்படி என்ன கவலை உனக்கு?" என்று கனிவோடு கேட்டிட... அவளால் எப்படி தங்களின் தாம்பத்திய ரகசியத்தை பற்றி அத்தையிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியும்?

"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அத்தை! சும்மா ஏதோ ஒரு சோர்வு, அவ்ளோதான்," என்று தன் தவிப்பை மனதிற்குள் மறைத்துக் கொண்டு மழுப்பலாகச் சமாளித்தாள்.

ஜானகியிடம் அவள் சமாளித்துவிட்டாலும், அவளது நாத்தனார் சரண்யாவை அவளால் அத்தனை எளிதாக ஏமாற்ற முடியவில்லை. பவித்ராவின் அமைதிக்கு பின்னால் ஏதோ ஒரு பெரிய மனப்போராட்டம் இருப்பதை உணர்ந்த சரண்யா, அன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து பவித்ராவை தனியாக பிடித்துக் கொண்டு.. "என்னாச்சுன்னு என்கிட்டயாச்சும் சொல்லு பவித்ரா... உன் மனசுல அப்படி என்னதான் பாரம் இருக்கு? உன்னைப் பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு, கௌதம் கிட்ட கேட்டாலும் 'அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா, அவ நல்லாத்தான் இருக்கா'ன்னு சாதிக்கிறான். நீங்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் நல்லாத்தான் பேசிக்கிறீங்க, ஆனா உன் முகமே நீ ஏதோ பிரச்சினையில இருக்க மாதிரி காட்டுதேடா... என்னை உன் அண்ணியா நினைக்காம உன் தோழியா நினைச்சு என்கிட்ட சொல்லு, என்னால முடிஞ்ச உதவியை நான் பண்ணுறேன்" என்று சரண்யா உருக்கத்துடன் வினவ, சரண்யாவின் அந்த தூய்மையான பாசத்தின் முன்னால் பவித்ராவால் அதற்கு மேல் தன் துக்கத்தைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. அணை உடைந்த வெள்ளமாக அவளது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. சரண்யாவைத் தன் சொந்த அக்கா போலவும், தோழியாகவும் நினைத்து, தனக்குள் பூட்டி வைத்திருந்த அத்தனை பாரத்தையும், தவிப்பையும் அப்படியே கொட்டித் தீர்த்தவள்.. "அவருக்கு... அவருக்கு என்னால சந்தோஷத்தை கொடுக்க முடியல அண்ணி!" என்று நெஞ்சு வெடிக்கக் கண்ணீர் விட்டு அழுதாள் பவித்ரா.

"அவர் என் மேல உயிரையே வச்சிருக்காரு... எனக்காக எவ்ளோ நாள் வேணாலும் காத்துட்டு இருக்கத் தயாரா இருக்காரு. ஆனா எனக்கு தான் ரொம்ப குற்றவுணர்வா இருக்கு, ஒவ்வொரு முறையும் நாங்க நெருங்க வரும்போது... அந்த கிஷோர் எனக்குக் கொடுத்த அந்தப் பழைய கொடுமையான ஞாபகம் வந்து என் கண்ணை மறைக்குது அண்ணி. என்னால அந்த பயத்துல இருந்து வெளியே வர முடியல. ஆசையா வர்ற என் புருஷனைப் பாதியிலேயே தடுத்து நிறுத்தி அவர் மனசை நோகடிச்சிட்டேன், என்னால அவரோட வாழ்க்கையே பாழாயிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு," என்று விம்மி விம்மி அழுதவளைப் பார்க்கவே சரண்யாவிற்கு நெஞ்சம் பதறி வருத்தமாக இருந்தது.

"அழறதை நிறுத்துமா முதல்ல" என்ற சரண்யா, சட்டென்று பவித்ராவைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு அவளது முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

பவித்ராவின் அழுகை கொஞ்சம் அடங்கும் வரை அமைதியாக இருந்தவள், பின்னர் அவளது முகத்தைத் துடைத்துவிட்டு, அவளது கைகளைத் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு.. "இங்க பாரு பவித்ரா, நீ எந்த தப்பும் பண்ணல. முதல்ல இந்த தேவையில்லாத குற்றவுணர்ச்சியை உன் மனசுல இருந்து தூக்கிப் போடு. நீ கௌதமை ஏமாத்தணும்னோ இல்ல அவனோட ஆசையை நிராகரிக்கணும்னோ இதை பண்ணல. அந்தப் பாவி உனக்குக் கொடுத்த ரணமும் பயமும் இன்னும் உன் மனசுல ஆழமா இருக்கு. அதுல இருந்து உன் அறிவு வெளியே வந்தாலும், உன் அடிமனசு இன்னும் முழுசா குணமாகலை, அவ்ளோதான்."

சரண்யா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு விம்மல்களுக்கிடையே அவளை நிமிர்ந்து பார்த்தவள்,.. "ஆனா அண்ணி... எனக்கு ஒரு மாதிரி இருக்கு, அவரை ரொம்ப கஷ்டப்படுத்த மாதிரி தோணுது நான்..." என்று அவள் இழுக்க, அவளது பேச்சைத் தடுத்த சரண்யா, அவளது கன்னங்களை மென்மையாகத் தட்டி, "நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இங்க எதுவும் இல்லமா! நீ முதல்ல இதை பத்தியே யோசிச்சு யோசிச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கிறதை நிறுத்து. எது எப்போ நடக்கணுமோ, அது அப்போ தன்னால நடக்கும். இப்போ யாரும் உன்னை 'நீ இப்போவே உன் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகணும்'னு கட்டாயப்படுத்தல... மனசை ஃப்ரீயா விடு," என்று மிகவும் பக்குவமாக எடுத்துக் கூறினாள்.

சரண்யா பேசப் பேச, பவித்ராவின் கண்கள் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் விரிந்தன. இந்த உலகில் எத்தனை நாத்தனார் தன் தம்பியின் பக்க நியாயத்தை மட்டும் பேசாமல், மருமகளின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு இப்படி ஆதரவாகப் பேசுவார்?

வேறு யாராவது இருந்தால், 'கல்யாணம் ஆகி இத்தனை நாளாகியும் என் தம்பிக்கு இந்த சின்ன சந்தோஷத்தைக் கூடக் கொடுக்க வக்கில்லையா?' என்று குத்தலாகக் கேட்டு நெஞ்சைக் காயப்படுத்தியிருப்பார்கள். ஆனால், சரண்யாவோ இவ்வளவு அன்போடு தனக்குத் துணையாக நிற்பதைக் கண்டு பவித்ராவின் நெஞ்சம் நெகிழ்ந்து போனது. அவளது உள்ளத்தில் இருந்த பாரமெல்லாம் பாதியாகக் குறைந்தது போன்ற ஒரு நிம்மதி அவளுக்குள் ஏற்பட்டது.

"உங்களைப் போல ஒரு அண்ணி கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும் அண்ணி," என்று பவித்ரா நெகிழ்ச்சியோடு சரண்யாவின் கைகளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொள்ள... சரண்யாவும் புன்னகையோடு அவளைத் தழுவிக் கொண்டாள்.

அந்தக் கணம், சரண்யாவின் காதுகளுக்குள்... 'நீயெல்லாம் ஒரு நாத்தனாரா? நான் இவளை அண்ணின்னு வேற கூப்பிடனுமாம்!' என்று கௌசல்யா பலமுறை விஷத்தைக் கக்கி, தன்னை அவமானப்படுத்திப் பேசிய பழைய வார்த்தைகள் சட்டென்று ரீங்காரமிட்டன.

கௌசல்யாவிடம் கிடைக்காத அந்த உண்மையான பாசமும் மரியாதையும், இன்று பவித்ராவின் வடிவில் தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி சரண்யா உள்ளுக்குள் நெகிழ்ந்து போனாள்.


 
Top Bottom