அத்தியாயம் - 7
அன்றைய இரவு உணவு முடிந்து அனைவரும் தத்தம் அறைகளுக்கு செல்ல, பவித்ரா ஒருவிதமான மனப்போராட்டத்துடன் தான் அறைக்குள் நுழைந்தாள். பெரியம்மா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்க, இன்று கௌதமிடம் பேசி ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட வேண்டும் என அவள் மனம் உந்தியது. உள்ளுக்குள் பதட்டம் அவளைத் தடுத்தாலும், இன்று அந்த அச்சத்தைத் துணிச்சலால் ஓரம் கட்டிவிட்டு, "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." என்றாள் அவனது முன்பு போய் நின்று...
அப்போதுதான் இரவு உடைக்கு மாறித் தனது தலைமுடியைக் கோதியபடி வந்த கௌதம், அவளை ஒரு விசித்திரமான பார்வை பார்த்தான். இதுவரை அவனை நிமிர்ந்து பார்க்கக்கூடத் தயங்கியவள், இன்று தானாக முன்வந்து பேச வேண்டும் என்று சொல்வது அவனுக்கு வியப்பை அளிக்க,.. 'என்னவாக இருக்கும்?' என்ற யோசனையுடனே, "ம்ம்... சொல்லு" என்றான்.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவள் இதழ்கள் துடித்தன. சில நொடிகள் விழிகளை மூடித் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவள், சட்டென, "எ... எனக்கு எல்லாமே ஓகே தான்," என்றாள் திக்கித் திணறி.
கௌதமிற்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை. புருவத்தைச் சுருக்கி அவளைக் குழப்பமாக ஏறிட்டவன், "புரியல... என்ன ஓகே?" என்று கேட்டான்.
அவள் தன் முந்தானையை விரல்களால் பிசைந்துகொண்டே, "எனக்கு உங்ககூட வாழப் பரிபூரண சம்மதம். எனக்காக நீங்க விலகி இருக்க வேண்டாம். இன்னைக்கே நாம நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிடலாம்," என்று மூச்சு வாங்க ஒரு வழியாக சொல்லி முடித்ததும் அறையில் ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது. கௌதமிற்கு இப்போது விஷயம் தெளிவாகப் புரிந்தது. அவளது இந்தத் திடீர் மனமாற்றத்திற்கும், இவ்வளவு அவசரமாகச் சம்மதம் சொல்வதற்கும் இன்று வீட்டிற்கு வந்த அவளது உறவினர்கள் தான் காரணம் என்பது புரிந்தது.
அவனுக்கோ அவளுடன் உடனே ஓர் இல்லற வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை எதுவும் இருக்கவில்லை. அவனது நோக்கம் எல்லாம், இரவில் அவள் நடுங்குவதற்குக் காரணமான அந்தத் தீராத மனப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பது மட்டுமே.
அவளை தீர்க்கமாக நோக்கியவன், நிதானமான குரலில்.. "எனக்கு இதுல இப்போதைக்கு இன்ட்ரஸ்ட் இல்ல பவித்ரா. நீ ஏதோ பெரிய குழப்பத்துல இருக்கேன்னு நினைக்கிறேன். வீட்ல இருக்கிறவங்க ஆயிரம் சொல்லத்தான் செய்வாங்க. அவங்களுக்காக எல்லாம் வாழ்க்கையை சட்டுனு தொடங்கிட முடியாது." என்றவன் அவள் கண்களை நேராகப் பார்த்து மேலும்.. "நீயும் சரி, நானும் சரி... நம்மளோட பாஸ்ட் லைஃப்ல ரொம்ப அடிபட்டுத் தான் இங்கே வந்து நிக்கிறோம். அப்படி இருக்கும்போது அவசர அவசரமா எதையும் ஆரம்பிச்சிட முடியாது. முதல்ல நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும். அதுக்கு நாம நண்பர்களா பழகணும். ஃபர்ஸ்ட் பழகலாம்... அப்புறம் மத்ததை யோசிக்கலாம்" என்று தெளிவாகக் கூறினான்.
கௌதமின் இந்த முதிர்ச்சியான பேச்சும், அவளது உணர்வுகளுக்கு அவன் கொடுத்த மதிப்பும் பவித்ராவிற்கு அவன் மீது ஒரு புதிய மரியாதையை உருவாக்கியது. தன்னை ஒரு போகப் பொருளாக நினைக்காமல், தன் மனதிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவனது குணத்தில் நெகிழ்ந்து போனவளுக்கு. அந்த கணம் அவளுள் இருந்த பதட்டமும் குறைந்து, ஒரு நிம்மதியான உணர்வு அவள் மனதை ஆட்கொள்ள மெல்ல இதழ் விரியலுடன் தலையசைத்தாள்.
அன்று இரவு அவள் கௌதம் கூறியதை நினைத்தபடி நிம்மதியாகத்தான் தூங்கினாள். ஆனால், அந்த நிம்மதி நீடிக்கவில்லை. நள்ளிரவில் மீண்டும் அதே பயங்கரக் கனவு, அதே கதறல்... அவள் உடல் மீண்டும் நடுங்கத் தொடங்கியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதமிற்கு, இதற்கு மேலும் தாமதிப்பது சரியாகப் படவில்லை. அவளது மனப் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒரு முடிவிற்கு வந்தவன், மறுநாள் காலை, மெல்ல அவளிடம் "பவித்ரா... இன்னைக்கு ஈவினிங் என்கூட டாக்டர் கிட்ட வர்றியா?" என்று கேட்டான்.
ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தவள்... "ஏன்... என்னாச்சு உங்களுக்கு உடம்பு எதுவும் முடியலையா?" என்று சிறு அக்கறை இழையோட வினவினாள்..
"என் உடம்புக்கு ஒன்னும் இல்லை பட்..." என்று இழுத்தவன், அவளது கண்களை நேராகப் பார்த்து.. "நைட் நீ தூக்கத்துல நடந்துக்குறதெல்லாம் உனக்குத் தெரியுதா பவித்ரா?" என்றான்
அவன் அந்தக் கேள்வியைக் கேட்ட கணமே, அவளது விழிகள் சட்டென்று கலங்கிப் போனது. அவளுக்கும் எல்லாம் தெரியத்தான் செய்தது. ஒவ்வொரு இரவிலும் தான் பயந்து அலறுவதும், அதனால் அவனது தூக்கம் கெடுவதும் அவளுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், அதனைப் பற்றி அவனிடம் பேசவே அவளுக்குப் பெரும் கூச்சமாகவும் பதற்றமாகவும் இருந்தது.
"இப்போ ஏன் அழற?" என்று மிக மென்மையாகக் கேட்டவனிடம்,"உங்களை நான் கஷ்டப்படுத்துறேன் இல்லையா... ஏற்கனவே உங்க லைஃப்ல நீங்க நிறையப் பிரச்சினையை சந்திச்சுட்டீங்க. இப்போ என்னாலயும் உங்களுக்குத் தொந்தரவு..." என்று சொல்லும்போதே அவளது விம்மல் அதிகமானது. கைகள் நடுங்க அவள் அழுவதைக் கண்ட கௌதமிற்கு மனது வலிக்கத்தான் செய்தது.
"ப்ளீஸ் டோன்ட் க்ரை பவித்ரா! உன்னால எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா நீதான் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள கஷ்டப்படுற. எனக்கு ரொம்பத் தெரிஞ்ச ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்காங்க, அவங்ககிட்ட ஒரு தடவை கன்சல்ட் பண்ணிட்டு வரலாமா" அவள் தவறாக நினைத்துக் கொள்வாளோ என்ற தயக்கத்துடன் தான் கேட்டான்.
அவளோ எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையைப் புரிந்துகொண்டவளாக, "சரிங்க... நான் வர்றேன்" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
அவள் சம்மதித்த அந்த நொடிதான் கௌதமிற்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. அவளது காயங்களுக்கு மருந்திட ஒரு வழி கிடைத்துவிட்டதாக உணர்ந்தான். அந்தப் பயணமே அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதை இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
அன்றைய மாலை அவளைத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்டு சென்றவன் மாலை வீடு வந்து சேர்ந்ததும் தன் தாய் மற்றும் தமக்கையிடம், "நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்," என்று ஒருவித தயக்கத்துடன் சொல்ல, அவன் சொன்னதை கேட்ட இருவரின் முகமும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் ஒளிர்வது போல மலர்ந்தது. இதற்காகத்தானே அவர்கள் இத்தனை நாட்களாகக் காத்திருந்தார்கள்!
திருமணத்திற்குப் பிறகு முதன்முதலாகத் தனியே வெளியே செல்கிறார்கள் என்றதும், அவர்கள் ஏதோ ஓர் அவுட்டிங் அல்லது சினிமாவுக்குச் செல்வதாகவே நினைத்துக் கொண்டனர். ஆனால், உண்மை அதுவல்லவே!
பவித்ராவிற்கு இருக்கும் இந்தப் பிரச்சினையைப் பற்றி அவன் இதுவரை தன் தாயிடமோ அல்லது தமக்கையிடமோ ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. சொன்னால் அவர்கள் தேவையில்லாமல் கவலைப்படுவார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் இப்போது அவனது மனைவி. அவளது பலவீனத்தையோ அல்லது தனிப்பட்ட பாதிப்பையோ மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் கௌதமிற்கு விருப்பமில்லை. அவளை ஒரு கவசமாக நின்று காக்க வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கியிருந்தது.
இருவரும் காரில் ஏறினர். கௌதம் காரை செலுத்த, அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தான் பவித்ரா அமர்ந்திருந்தாள். இருவருமே முதன்முறையாக தனியே வெளியே செல்கிறார்கள் என்றாலும், மற்ற தம்பதிகளிடம் இருக்கும் அந்த உற்சாகமோ, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் குறும்புத்தனமோ அவர்கள் முகத்தில் இல்லை.
அமைதி மட்டுமே அந்த காரை ஆக்கிரமித்திருந்தது. கௌதம் அவ்வப்போது அவளை ஓரக்கண்ணால் கவனித்தபடி தான் வந்தான். ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விரல்கள் சேலையின் முந்தானையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தது அவளுக்குள் இருக்கும் பயத்தை அவனுக்குக் காட்டியது.
அவனுக்கு தெரியும், இது சாதாரணப் பயணம் இல்லை என்று. இது அவளது மன இருளை நீக்க அவன் எடுக்கும் முதல் முயற்சி. அதே சமயம் பவித்ராவிற்குள், 'அந்த டாக்டர் என்ன கேட்பாரோ? ஒருவேளை எனக்கு பைத்தியம் என்று சொல்லிவிடுவாரோ?' என்ற இனம் புரியாத அச்சம் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்த மௌனமான பயணத்தில் இருவரது எண்ணங்களும் வெவ்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தன.
ஓரிரு நிமிடங்களில் இருவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். மனதிற்க்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களால் ஏற்பட்ட பதட்டத்தில், பவித்ரா தரையைச் சரியாகக் கவனிக்காமல் நடக்க, அதன் விளைவால் எதிர்பாராத விதமாகக் கால் தடுக்கி விழப்போன அந்த நொடி, கௌதம் மின்னல் வேகத்தில் அவளது கரத்தைப் பற்றித் தாங்கிப் பிடித்தவன் "கேர்ஃபுல்!" என்றான். அவனது கரம் அவளது கரத்தை உறுதியாகப் பற்றியிருந்தது. அவர்கள் திருமணமான பிறகு அவன் அவளைத் தொடும் முதல் ஸ்பரிசம் அது. ஆச்சரியமாக, அந்தத் தொடுதல் அவளுக்கு பதட்டத்தை அளிக்கவில்லை மாறாக, ஒரு மகாசமுத்திரத்தின் நடுவே தத்தளிப்பவளுக்குக் கிடைத்த ஒரு கட்டுமரம் போல, ஒருவிதமான பாதுகாப்பை அவளுக்குள் ஊட்டியது.
"டென்ஷன்லாம் வேண்டாம், சும்மா ஒரு கன்சல்டேஷன் மட்டும்தான்," என்று அவளது முக வாட்டத்தைக் கண்டு ஆறுதல் கூறி உள்ளே அழைத்துச் சென்றான். அது ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனை. மனநலப் பிரிவுக்கு அவளை அழைத்துச் சென்ற கௌதம், அங்கிருந்த நர்ஸிடம் தாங்கள் வந்திருக்கும் தகவலைக் கூறிட, அவர் மருத்துவரிடம் அனுமதி கேட்டு வருவதாக உள்ளே சென்றார்.
ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்த செவிலியர், "உள்ளே போங்க சார்," என்று வழிகாட்ட, கௌதம் பவித்ராவைப் பார்த்து மெல்லத் தலையசைத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு மருத்துவரின் அறைக்குள் நுழைந்தான்.
அறைக்குள் அமர்ந்திருந்தது ஒரு பெண் மருத்துவர். அவரைக் கண்டதுமே பவித்ராவிற்கு பாதி பயம் குறைந்து, ஒருவித நிம்மதி ஏற்பட்டது. கௌதம் அவருக்கு முன்பே அறிமுகமானவர் என்பதால், அவர் இன்முகத்துடன் இருவரையும் வரவேற்றார்.
"ஹெலோ டாக்டர்," என்று கௌதம் சொல்ல, "வாங்க கௌதம், எப்படி இருக்கீங்க?" என்று அவர் நலம் விசாரித்தார்.
"ஐம் குட் டாக்டர். ஷி இஸ் மை வைஃப் பவித்ரா," என்று கௌதம் அவளை அறிமுகம் செய்து வைக்க, மருத்துவரின் கனிவான பார்வை இப்போது பவித்ராவின் மீது வந்து நின்றது. அவளது முகத்தில் இருந்த தயக்கத்தையும், கண்களில் தேங்கியிருந்த அந்த மெல்லிய மிரட்சியையும் தனது அனுபவத்தால் சட்டெனப் புரிந்து கொண்டவர்.. "ஹாய் பவித்ரா! பயப்படாதீங்க, ஜஸ்ட் ரிலாக்ஸா உட்காருங்க," என்று அவர் மிக மென்மையாகக் கூற, பவித்ரா மெல்ல இருக்கையில் அமர்ந்தாள். கௌதம் அவளருகே அமர்ந்து கொண்டு, அவளுக்கு ஒரு மன உறுதியைத் தரும் விதமாகப் பார்த்தான்.