உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 9

அன்றைய இரவு அவளுக்குக் கெட்ட கனவோ, நடுக்கமோ வரவில்லை. மருத்துவர் கொடுத்த மாத்திரையினால் வந்த அமைதியா அல்லது கௌதமின் அக்கறையான வார்த்தைகள் தந்த பாதுகாப்பு உணர்வா என்று தெரியவில்லை அன்று இரவு அவள் நிம்மதியாக உறங்கினாள்.

அடுத்த நாள் அவள் கண்விழிக்கும்போது, "குட் மார்னிங்!" என்ற கௌதமின் இன்முகமான காலை வணக்கத்தில் தான் அவளது பொழுது விடிந்தது. தன்னை கனிவுடன் பார்த்து சொன்ன அவனை கண்டு அழகாக இதழ் விரித்துப் புன்னகைத்து, "குட் மார்னிங்" என்றவள்,. சட்டென்று அவன் அலுவலக உடையில் தயாராக நிற்பதைக் கவனித்து, "நான் இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?" என்று படபடப்புடன் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்ல பவித்ரா... நான் தான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடியாகிட்டேன். நீ நிதானமாவே பிரஷ்-அப் ஆகிட்டு வா, நான் உனக்காக வெயிட் பண்றேன்" என்று அவன் இதமாகச் சொல்ல, அவளும் ஒரு சிறு தலையசைப்புடன் தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் குளித்துத் தயாராகி வந்ததும், "கீழே போலாம்... உங்களுக்கும் லேட்டாகுதுல?" என்று சொல்ல, அவனும் "ம்ம்" என்ற தலையசைப்புடன் அவளோடு கீழே சென்றான். உண்மையில் அவள் இன்று வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிக நேரம் தூங்கிவிட்டாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனால், அந்த விஷயம் அவளது மனதை உறுத்திவிடக் கூடாது என்பதற்காகவே, தானும் அவளுக்காகக் காத்திருந்து, அவளோடு சேர்ந்து கீழே சென்றான்.

மாடிப்படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கி வருவதைக் கண்ட ஜானகிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவர் காணத் துடித்த காட்சி இதுவல்லவா!

"பார்க்கவே எவ்வளவு அழகா இருக்குல்லம்மா?" என்று சரண்யா அவர் காதோரம் ரகசியமாக சொல்ல, "ஆமாம்மா... மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு" என்றார் ஜானகி நெகிழ்ச்சியுடன்.

டைனிங் டேபிளில் அவன் அமர, அன்று எந்தவித பதட்டமும் இல்லாமல் அவனுக்குப் பரிமாறினாள் அவள். கௌதமின் தட்டில் இட்லியை வைத்துவிட்டு அவள் நகரப் போக, "நீயும் உட்காரு பவித்ரா, ஒன்னா சாப்பிடலாம்" என்றான் அவன்.

அவனது அந்த அழைப்பில் ஒரு மென்மை இருந்தது. "இல்ல... நான் அத்தை, அண்ணி கூட அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்" என்று அவள் தயக்கத்துடன் கூறிட, அந்த நேரம் தண்ணீர் ஜக்கை எடுத்துக்கொண்டு அங்கே வந்த சரண்யா, "தினமும் எங்களோட தானே பவி சாப்பிடுற? இன்னைக்கு உன் புருஷன் தான் அவ்வளவு பாசமா கூப்பிடுறாருல, உட்கார்ந்து சாப்பிடு" என்று கண்சிமிட்டி கூற, பவித்ராவால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. மெல்ல அவன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

சரண்யா புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்துவிட, இருவரும் மௌனமாக உண்ணத் தொடங்கினர்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே... "உன்னோட வீட்டுக்கு நீ போய் ரொம்ப நாள் ஆச்சுல்ல? போகணும்னா போயிட்டு வா" என்றான்.

அவன் தன்னைப் போகச் சொல்வது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் தனித்துப் போக அவளுக்கு விருப்பமில்லை. அதனால் "நான் மட்டும் எப்படிப் போறது?" என்று அவள் கேட்ட விதமே, 'நீங்களும் என்னோடு வரவேண்டும்' என்பதை அவனுக்குப் புரிய வைத்தது.

அவளது அந்த எதிர்பார்ப்பை உணர்ந்துகொண்ட கௌதம், "சரி... நான் இன்னைக்கு ஈவினிங் சீக்கிரம் வந்துடுறேன். நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்." என்று சொல்ல, பவித்ராவின் முகம் தாமரை போல மலர்ந்து போனது. திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாகத் தன் கணவனுடன் பிறந்த வீட்டுக்குச் செல்லப் போகிறோம் என்ற எண்ணமே அவளுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.

சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்போது, அவளைத் திரும்பிப் பார்த்தவன், "மறக்காம மாத்திரையைப் போட்டுக்கோ" என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு செல்ல, அவன் கிளம்பியதும் வழக்கம் போல் தன் அத்தை மற்றும் நாத்தனாருடன் அவளது நேரங்கள் கடந்தாலும் உள்ளுக்குள் அந்த மாலை நேரத்திற்காக அவள் ஆவலோடு காத்திருந்தாள். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சிறு மாற்றங்கள், அவளது கடந்த கால ரணங்களை மெல்ல ஆற்றத் தொடங்கியிருப்பதை அவளே உணர்ந்தாள்.

கௌதம் சொன்னது போல அன்று மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தான். பவித்ரா ஏற்கனவே ஒரு அழகான சந்தன நிறச் சேலையில் தயாராக இருக்க, இருவரும் ஜானகி மற்றும் சரண்யாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர்.

அவர்களின் மூன்றாவது கார் பயணம் இது. ஆனால், நேற்று இருந்த அந்த கனத்த அமைதி இன்று அங்கே இல்லை. கௌதம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசிக்கொண்டே வர, அவளும் மெல்லத் தயக்கம் நீங்கி அவனுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள். அவளது பேச்சில் இப்போது ஒரு தெளிவு இருந்தது.

பேச்சு வாக்கில் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டவன் "மேல படிக்கணும்னு உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்திருக்கா பவித்ரா? ஏன்னா, இப்போ நிறைய பேர் கரஸ்ல கூட டிகிரி பண்றாங்க..." என்று மெல்லக் கேட்டான்.

அதைக் கேட்டதும் பவித்ரா ஒரு நிமிடம் யோசித்துவிட்டு,.. "படிப்பு மேலெல்லாம் எனக்கு அவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தது இல்லை. பிளஸ் டூ வரைக்கும் படிக்கவே நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன்" என்று சொல்ல,.. "ஏன்? உனக்கு சப்ஜெக்ட்ஸ் புரியலையா இல்ல ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கலையா?" என்று அவன் புன்னகையுடன் கேட்க, "படிப்பு ஏறலன்னு தான் சொல்லணும். ஆனா எனக்கு வேற சில விஷயங்கள்ல ஆர்வம் அதிகம்," என்றாள்.

"அப்படியா? அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"எனக்கு தையல் வேலை, அப்புறம் இந்த எம்பிராய்டரி பண்றதுன்னா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே என் துணிகளை நானே டிசைன் பண்ணுவேன்" என்று சொல்லும்போதே அவளது குரலில் ஒரு மெல்லிய மகிழ்ச்சி இழையோடியது.

கௌதம் அவளைத் திரும்பி ஒருமுறை பார்த்தவன். "இது ரொம்ப நல்ல விஷயமாச்சே! இதுவும் ஒரு பெரிய கலைதான். உனக்கு உண்மையாவே அதுல விருப்பம் இருந்தா, இப்போ கூட நீ அதை முறையா கத்துக்கலாம். உனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நான் செய்யுறேன்," என்றான் உறுதியாக.

தன் கணவன் தன் விருப்பத்தைப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்புக் கொடுப்பது அவளுக்குப் பெரும் வியப்பைத் தந்தது. "நிஜமாவா சொல்றீங்க?" என்று அவள் கண்கள் விரியக் கேட்க, "கண்டிப்பா! ஒரு மனுஷனுக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்யும்போதுதான் அவங்க மனசு ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்னு டாக்டர் கூடச் சொன்னாங்கல்ல? உனக்கு ஒரு தையல் மெஷின் வேணும்னா கூட இன்னைக்கே வாங்கிடலாம்," என்று அவன் உற்சாகப்படுத்தினான்.

இருவரும் பேசிக்கொண்டே அவளது வீட்டின் அருகே வந்துவிட்டனர். தனது பிறந்த வீட்டைப் பார்த்ததும் பவித்ராவிற்குள் ஒரு புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது. கார் நின்றதும், தன் கணவனுடன் பெருமையாகக் கீழே இறங்கினாள். அவளது தாய் லலிதாவும், தந்தை மாணிக்கமும் இருவரும் ஜோடியாக வருவதைக் கண்டு முகமெல்லாம் மலர அவர்களை வரவேற்றனர்.

மகளின் முகம் இன்று மிகவும் நிம்மதியாகவும், கௌதமுடன் நெருக்கமாகவும் இருப்பதைக் கண்ட அந்தத் தாயின் உள்ளம் குளிர்ந்து போனது,.. "வாங்க மாப்பிள்ளை... வாமா பவி," என்று அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர்கள், திருமணத்திற்குப் பிறகு முதன்முதலாகத் தங்கள் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையை மிகவும் அன்போடு உபசரித்தனர்.

அவர்களுடையது ஒரு நடுத்தர வர்க்கத்து வீடுதான். ஆனால், அதனை எண்ணி சிறு சுணக்கம் கூடக் காட்டாமல், கௌதம் அவர்களை உரிமையோடு 'அத்தை, மாமா' என்று அழைத்து இயல்பாகப் பேசினான். அவனது இந்த எளிமையும் பண்பும் மாணிக்கத்திற்கு அவன் மீது இருந்த மரியாதையை இன்னும் அதிகரித்தது.

பவித்ராவின் அண்ணன் தருணேஷும் அங்குதான் இருந்தான். தனது தங்கையின் முகத்தில் தெரிந்த அந்த நிஜமான சந்தோஷத்தைக் கண்டபோது, அவனது மனதிலிருந்த பாரமெல்லாம் குறைந்து போனது. தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது.

பெரியவர்கள் இருவரும் பவித்ராவிடம் ஆவலாகப் பேசிக் கொண்டிருக்க, கௌதமின் அருகில் அமர்ந்திருந்த தருணேஷ் மெல்லக் குனிந்து.. "இப்போ பவி எப்படி இருக்கா மச்சான்? நைட்டெல்லாம் நல்லா தூங்குறாளா?" என்றான்

அவனது குரலில் இருந்த அக்கறையை உணர்ந்த கௌதம், "ம்ம்... நேத்து டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு வந்ததுல இருந்து நல்லாத்தான் இருக்கா. நேத்து நைட் எந்தப் பதட்டமும் இல்லாம நிம்மதியாத் தூங்கினா," என்று மெல்லக் கூறினான்.

"அது அப்படியே தொடரணும்..." என்று பெருமூச்சு விட்டுக்கொண்ட தருணேஷின் கண்கள் லேசாக கலங்கின. தன் தங்கைக்கு ஏற்பட்ட அந்தப் பாதிப்புகளை நினைத்து அவனுக்குள் இருந்த வருத்தம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை கௌதம் கவனித்தான்.

"சரி தருண்... நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க? மாமா உன்னை பத்தி சொல்லிப் புலம்பிட்டு இருந்தாரு" என்று கௌதம் பேச்சை மாற்றிட, தருணேஷ் ஒரு சிறு புன்னகையுடன், "பண்ணிக்கலாம் மச்சான்," என்றான் சுருக்கமாக.

"பண்ணிக்கலாம்னா என்ன அர்த்தம்? உனக்கும் கல்யாண வயசை தாண்டிடுச்சுல்ல? அப்புறம் ஏன் லேட் பண்ணுற?" என்று கௌதம் உரிமையுடன் கேட்க, தருணேஷ் ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு, "என் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி வச்ச அப்புறம்தான் நான் பண்ணிக்கணும்னு உறுதியா இருந்தேன் மச்சான். ஆனா, அதுக்குப் பிறகு அவ அந்த வாழ்க்கையில நிறையக் கஷ்டப்பட்டுட்டா. அவளைப் பத்திக் கவலைப்படுறதுலயும், அவ வாழ்க்கையை இனி எப்படி சரிப்படுத்தப் போறோம்ங்கிற எண்ணத்திலையுமே எனக்குக் காலம் ஓடிடுச்சு. ஒரு அண்ணனா அவளை இந்த நிலைமையில விட்டுட்டு என்னால என் வாழ்க்கையை பத்தி யோசிக்கவே முடியல. ஆனா, இப்போ அவ முகத்துல தெரியுற இந்த நிஜமான சந்தோஷத்தைப் பார்த்த பிறகுதான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு மச்சான். எனக்குள்ள இருந்த பாரமெல்லாம் இன்னைக்கு நீங்கிடுச்சு. நீங்க அவளைத் தாங்குவீங்கங்கிற நம்பிக்கை வந்துடுச்சு. சோ, இனிமே தடையில்ல... சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிறேன்," என்று அவன் சொல்ல, கௌதமிற்குத் தருணேஷின் தியாகமும் பாசமும் நெகிழ்ச்சியைத் தந்தது.

"கண்டிப்பா தருண்... உனக்கு ஏத்த மாதிரி நல்ல பொண்ணா அத்தை மாமாகிட்ட பார்க்க சொல்லிடலாம்" என்று கௌதம் சொல்ல, இரு மச்சான்களுக்குள்ளும் ஒரு புரிதல் உருவானது.

கிளம்பும் நேரம் வந்தது. தன் வீட்டினர்களிடம் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்த பவித்ரா,.. "அண்ணன் என்ன சொன்னான்?" என்று ஆர்வமாகக் கேட்க, "உனக்கு அண்ணியா ஒருத்தரைச் சீக்கிரம் கூட்டிட்டு வரேன்னு சொன்னான்" என்று கௌதம் விளையாட்டாகச் சொல்ல, பவித்ரா கலகலவெனச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு கௌதமிற்கு ஒரு சங்கீதம் போல ஒலித்தது.
 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.