உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 11
சொல்ல இஷ்டம் இல்லைனா எதுவும் நான் கேட்கல. நீங்க சொல்லவும் வேண்டாம். ஆனா என்னால அதை பார்த்த அப்புறம் அப்படி சாதாரணமா இருக்க முடியல. நான் கேட்காமலே என்னை பிரண்ட்னு சொல்லி நீங்களே தான் என்கிட்ட எல்லாம் ஷேர் பண்ண ஸ்டார்ட் பண்ணீங்க. ஆனா அஞ்சனா அண்ணா? அவங்களை எப்படி உங்களுக்கு தெரியும்? அப்போ அஞ்சனாவையும் அவ பேமிலியையும் தெரியுமா? இல்ல நான் தான் எதுவும் தப்பா புரிஞ்சிகிட்டேனா?" என்று அதிரனிடம் கேட்ட தாமஸ்,
"என்னவோ எனக்கு நீங்க என்கிட்ட மறைக்குறிங்களானு ஒரு மாதிரி கஷ்டமாகிடுச்சு. அதான் சைலன்ட்டா விலகிப் பார்த்தேன். அதையும் பெருசா எடுத்துக்காம நீங்களே வாண்டட்டா வந்து பேசுறிங்க. என்ன கோபம்னு கேட்குறீங்க. ஆனா நான் கேட்டா மட்டும் பதில் சொல்ல மாட்டுரிங்களேன்னு தான் எனக்கு கோபமே!" என்று சொல்லி முடிக்க, அதிரன் கார் சாவியை கீழே வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான் அவன் இருக்கையில்.
"ஓகே! கிளம்புங்க சார். நானும் கிளம்புறேன். நாளைக்கு பார்க்கலாம்!" நீண்ட நேரமாய் அதிரன் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கவும் தாமஸ் இப்படி சொல்ல,
"இரேன் டா! படபடன்னு நிக்குற! ரொம்பத்தான்!" என முறைத்தான் அதிரன் அவனை.
"இவ்வளவு நல்லா கேள்வி கேட்க தெரியுதே என்னை? இதை தான் முதல் நாள் வந்தப்ப இருந்து கேட்குறேன். இப்ப தான் கொஞ்சமா கோவமெல்லாம் காட்ட தெரியுது உனக்கு!" என்ற அதிரன்,
"அப்போ மதியம் சாப்பிட்டியா இல்ல என்னை அவாய்ட் பண்ணணுமேனு சாப்பிடவே இல்லையா?" என்று கேட்க, இப்பவும் அவன் பேச்சை மாற்றுகிறான் என்பதினை நன்றாய் உணர்ந்தான் தாமஸ்.
ஆனாலும் அதற்கு மேல் கேட்க தோன்றவில்லை. எதுவுமில்லை என தலையை மட்டும் ஆட்டிவிட்டு திரும்ப, அங்கே ஹரிச்சந்திரன் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
"உங்க அப்பா வர்ராங்க சார்!" தாமஸ் அதிரனிடம் சொல்ல,
"அவர் போனா தானே வர்றதுக்கு!" என அசட்டையாய் கூறி கார் சாவியை மீண்டும் கையில் அதிரன் எடுக்க,
"அதி! அம்மா வர்றா! எங்க வர சொல்லணும்? வீடு எங்க இருக்கு?" என்றார் வந்த வேகத்தில் ஹரிச்சந்திரன்.
"யார் வீடு?" அதிரன் கேட்க,
"நீ வாடகை வீட்டுல தானே தங்கி இருக்க? இவன் தான் அன்னைக்கு எனக்கு போன்ல சொன்னானே!" என தாமஸ்ஸை அவர் கைகாட்ட, இப்பொழுது தாமஸ்ஸை முறைத்தான் அதிரன்.
"அம்மா வந்தா உங்களுக்கு எங்க கம்ஃபோர்ட்னு தோணுதோ அங்க தங்கிக்கோங்க. என்னோட வீட்டுல இடம் இல்ல" என்றவனை தாமஸ் அதிர்ச்சியாய் பார்த்தான்.
"அதி! நான் ரொம்ப பொறுமையா உன்னை ஹண்ட்ல் பண்றேன். நீ ரொம்ப பண்ற! அதுவும் போயும் போயும் அந்த பொண்ணுக்காக!" என்ற ஹரிச்சந்திரன்,
"சொல்லு! அந்த பொண்ணு கூட தான் இருக்கியா? அதனால தான் இப்படியெல்லாம் நடந்துக்குறியா?" என்று கேட்க,
"போதும்! ரொம்ப பேசிட்டிங்க. இப்பவும் பேசுறீங்க. எனக்கு உங்ககிட்ட பேச விருப்பமில்ல. நீங்க போகலாம்!" என்ற அதிரன்,
"வா தாமஸ்!" என அவனை அழைத்துக் கொண்டு நடந்தான்.
"அந்த பொண்ணு எங்களை வீட்டுக்குள்ள சேர்க்க கூடாதுன்னு சொல்லி இருக்காளா?" என மீண்டும் அவர் கேட்கவும்,
"ஜஸ்ட் ஸ்டாப் இட் பா!" என்று நிறுத்திவிட்டான் அதிரன்.
"என்ன அந்த பொண்ணு இந்த பொண்ணு? அவ யார் எனக்குன்னு உங்களுக்கு தெரியாதா?" என்று அவரை நெருங்கிவிட்ட அதிரன்,
"அவ மட்டும் இப்ப உன் அம்மா அப்பா வேண்டாம் வா தனியா போவோம்னு சொன்னா யோசிக்கவே மாட்டேன். சரின்னு போய்டுவேன்!" என்று அத்தனை கோபமாய் சொல்லவும் தாமஸ் வைத்த கண் வாங்காமல் பார்க்க,
"நான் அதுக்கே வழியில்லாம தான் இருக்கேன். பேசாம ஊருக்கு கிளம்புற வழியைப் பாருங்க. உங்களால எதாவது இதுக்கு மேலயும் பிரச்சனை வந்துச்சு" என்றவன் தாமஸ் கைப்பிடித்து இழுத்து செல்ல,
"நீ பேசுவ டா பேசுவ. இதெல்லாம் அவ குடுக்குற தைரியம் தானே! பேசு. என்ன பன்றேன்னு மட்டும் பாரு!" என்றார் ஹரிச்சந்திரனுமே.
"இருக்குற டென்ஷன்க்கு இவர் வேற! இப்ப நான் வீட்டுக்கு போனா பின்னாடியே ஃபால்லோ பண்ணி வீட்டை கண்டுபிடிக்க ட்ரை பண்ணுவார். அதுக்கு வேற சுத்தல்ல விடணும்!" என தலையில் அதிரன் தட்டிக் கொள்ள, எதுவும் புரியாமல் வாசல் வரை உடன் வந்தான் தாமஸ்.
"இப்போ குளுகுளுன்னு இருக்குதா உனக்கு?" என்று தாமஸ்ஸிடமும் அதிரன் கேட்க,
"சார்! யாரை சொல்றாங்க உங்க அப்பா? எந்த பொண்ணு?" என்ற தாமஸ் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.
'யாராய் இருக்கும். நிச்சயம் அதிரனை தவறாய் எல்லாம் நினைக்க தோன்றவே இல்லை. அனல் அவன் தந்தையிடம் பேசிய முறை தான் தவறு என்று தோன்றியது. கூடவே ஒரு பெண்ணை வைத்து தான் இருவருக்குள்ளும் சண்டை என்றால்?' என அதிகத்திற்கும் யோசிக்க ஆரம்பித்துவிட்டான் தாமஸ்.
"ஏன் தெரிஞ்சா கல்யாணம் பண்ணி வச்சுடுவியா?" நொடி நேரத்தில் தாமஸ் அவ்வளவு சிந்திக்கும் பொழுதே அதிரன் இப்படி கேட்டு வைக்க, இன்னுமே அதிர்ந்து விழித்தான் தாமஸ்.
"கார்ல ஏறு!" என்று அதிரன் சொல்லிய பின் தான் பேச்சு வார்த்தைகளோடு அவன் அழைத்து வந்திருந்ததும் தெரிந்தது.
"இல்ல நான் நடந்து போய்க்குறேன்!" தாமஸ் வேகமாய் மறுக்க,
"ஏறு டா!" என தள்ளிவிட்ட அதிரன் முன்பக்கம் வந்து காரை ஸ்டார்ட் செய்ய, திரும்பி ஹரிச்சந்திரன் வருகிறாரா எனப் பார்த்தான் தாமஸ்.
"வருவாரு!" அதிரன் சொல்ல, அவரும் பின்னால் வர தான் செய்தார்.
"என்ன பாவம் பண்ணினேனோ! நான் ஒன்னை தேடி ஓடினா சனி என்னைத் தேடி ஓடி வருது!" என புலம்பலோடு வந்து ஓரிடத்தில் அதிரன் நிற்கவும் அந்த இடத்தைப் பார்த்த தாமஸ்,
"இங்க தான் உங்களை நேத்து கண்ணனோட பார்த்தேன்!" என்றான் மெதுவாய்.
"சரி போ!" என்றான் நின்றுவிட்ட அதிரன்,
"என்ன?" என அதிர்ந்து தாமஸ் கேட்க,
"இறங்கி போ டா!" என்றான் அதிரன் மீண்டும்.
"இங்கேயா?" என விழித்தவன்,
"ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு அஞ்சு நிமிஷம் தான். நடந்தே போயிருப்பேன். உங்க அப்பாவை சுத்தல்ல விடுறேன்னு என்னை இங்க விட்டுட்டு போகறீங்க!" என முணுமுணுத்த தாமஸ் இப்போதும் கூட அதிரன் தன்னிடம் எதையும் சொல்லவில்லை தானே என நினைத்தபடி இறங்க,
தாமஸ் முனகல் எல்லாம் கேட்டு அவன் இறங்கும் வரை அமைதியாய் அமர்ந்திருந்த அதிரன்,
"உள்ள போய் டேபிள் பாரு. நான் கார் பார்க் பண்ணிட்டு வர்றேன்!" என்று சொல்லி அவனை முறைத்துவிட்டும் போக, சட்டென ஒரு வெளிச்சம் தாமஸ்ஸிடம்.
என்னவோ தன்னிடம் சொல்ல போகிறான் போல. அதற்காக தான் அழைத்து வந்துருக்கிறான் என அவனே நினைத்துக் கொண்டவன், 'அதுக்குள்ள அவசரப் பட்டுட்டியே டா தாமஸ்!' என தனக்கு தானே தலையில் தட்டிக் கொண்டான்.
தாமஸ் ஓரிடத்தில் அமர்ந்திருக்க, இருவருக்குமான காபியை வாங்கிக் கொண்டு அவனருகில் வந்து அமர்ந்தான் அதிரன்.
தாமஸ் குடித்து முடித்து அதிரன் பேச காத்திருக்க, "இங்கருந்து தூரமா யார் கண்ணுலயும் படாத இடத்துக்கு போகணும்னா எங்க டா போகலாம்?" என்ற அதிரன் கேள்வியில் எதுவும் புரியாமல் தாமஸ் அதிர்ந்து விழித்தான்.
"மனுஷங்களே இருக்க கூடாது. ஒரே ஒரு நாள்னா கூட போதும். நிம்மதியா வாழ்ந்திட்டு செத்து போகுற மாதிரி ஒரு பிளேஸ் எதாவது தெரிஞ்சா சொல்லு!" என்றான் அதிரன்.
"சார்!" என்ற தாமஸ் துவண்டு தான் போனான். ஏற்கனவே நடந்த நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கே காரணம் தெரியாமல் தான் மனம் குழம்பி வருந்தி காலை முதல் பைத்தியமாய் சுற்றி இருக்க, இப்பொழுது இவன் பேச்சில் இன்னும் தலைவலி வரும் போல் ஆனது.
யார் எப்படி போனால் என்ன என்று போகவும் முடியவில்லை. அதிரனின் மேல் இனம் புரியாத அன்பு ஒன்று உருவாகி இருக்க, அதை உடைத்தெறியவும் முடியவில்லை அவனுக்கு.
"நேரா என்னைப் பார்த்து என் கண்ணைப் பார்த்து 'என்னப் பிரச்சனை அதி. என்கிட்ட சொல்லு'ன்னு உரிமையா சொல்றியா நீ?" என அதற்கும் கோபம் தான் கொண்டான் அதிரன்.
"அட போ டா! எனக்குன்னு இருக்க வேண்டியவங்களே நான் யாரோன்ற மாதிரி தான் இருக்காங்க. இதுல உன்கிட்ட கோவப்பட்டு என்னாக போகுது. நான் நிஜமாவே உனக்கு யாரோ தானே?" என்று தலையை பின்னால் சாய்த்து கண் மூடிக் கொண்டான் அதிரன்.
"சார்! என்னனு தான் சொல்லுங்களேன். எதுவும் பெரிய பிரச்சனையா? அப்பாகிட்ட இவ்வளவு ரூடா பேசுறீங்க. அதுவும் பொண்ணுக்காகன்னு உங்க அப்பா சொல்றாங்க. என்ன தான் சார் பிரச்சனை? எதுக்காக இப்படி பண்றீங்க?" என நேரே கேட்டு அதிரன் முகத்தை தாமஸ் பார்க்க,
"சொன்னா சால்வ் பண்ணிடுவியா?" என்றான் அதிரன்.
"முடிஞ்சா நிச்சயம் பண்றேன் சார். என்னனு சொல்லுங்க!" தாமஸ் விஷயத்தை அறிந்திடும் ஆவலோடு கேட்க,
"உன்னால ஒன்னும் பண்ண முடியாது. உன்னால மட்டும் இல்ல யாராலயும் எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. அந்த கடவுளே மனசு வச்சா மட்டும் தான் எனக்கு நல்லது நடக்கும்!" என்றான் அதிரன்.
'சொல்வானா மாட்டானா' என மீண்டும் சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது தாமஸ்ஸிற்கு.
"அங்க பார்த்தியா எங்கப்பாவை?" என அதிரன் கை காட்ட, அங்கே நிஜமாய் அமர்ந்திருந்தார் ஹரிச்சந்திரன்.
"நான் தான் கிடைச்சுட்டேனே. இனி அவ்வளவு சீக்கிரம் என்னை விடமாட்டார்!" என்றான் அப்போதும்.
"அப்படினா? ஏன் வீட்டுக்கு தெரியாம வந்திங்க சார்? ஏதாச்சும் லவ்வா? பொண்ணு ஏமாத்திடுச்சா?" கம்மிவிட்ட குரலில் கேட்டான் தாமஸ்.
"பொண்ணு ஏமாத்தல. அவர் தான் ஏமாத்திட்டார்!" என தந்தையை காட்டிய அதிரன்,
"அவரும் அவங்க வைஃபும் தான் ஏமாத்திட்டாங்க!" என்றான் பல்லைக் கடித்து.
'அவனே சொல்கிறானே!' என தாமஸ் பார்க்க,
"ஆதில இருந்து சொல்லணும். டைம் இருக்கா உனக்கு கேட்க?" என அதிரன் கேட்க,
"நீங்க சொல்லுங்க சார். எதாவது பண்ண முடியுதான்னு பார்க்கலாம்!" என்றான் தாமஸ்.
"அப்போ என்ன நடந்தாலும் என் கூட இருப்பேன்னு ப்ரோமிஸ் பண்ணு!" என்று அதிரன் கை நீட்டவும் உடனே அதில் கைவைக்க சென்ற தாமஸ் சட்டென பின் இழுத்து,
"ஆனா உங்க மேல தப்பில்ல இல்ல?" என கேட்க,
"இந்த சந்தேகப் பழி வேறயா என்மேல?" என அதிரன் முறைத்ததில்,
"இருந்தாலும் நீங்க விஷயத்தை சொல்லுங்க. அப்புறமா ப்ராமிஸ் பண்றேன்!" என எச்சரிக்கையாகி விட்டான் தாமஸ்.