• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உலா வரும் வெண்ணிலா - 15

Vishakini

Moderator
Staff member

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 15

இரவு வீட்டுக்கு வெளிப்புறம் இருந்த முற்றத்தில் தான் பலவித யோசனைகளுடன் அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

இத்தனை நாட்களில் இவ்வளவு அதிகமாய் அவளின் கடந்த காலம் பற்றி யாருமே அவளிடம் கேட்டது இல்லை. இன்று காலை தாமஸ் மீண்டும் மீண்டும் என அதைப் பற்றியே அதிகமாய் கேட்பதாய் உணர்ந்திருந்தாள் அஞ்சனா.

அதன்பின் தான் தானுமே வேறு யாரிடமும் இவ்வளவு தூரம் நெருக்கமாய் பேசிக் கொண்டதில்லை என்றே அவளுக்கும் புரிந்தது.

என்ன தான் அதில் எண்ணத்தை நிறுத்திட கூடாது என்று அவள் நினைத்தாலும் தன்னையும் மீறி எண்ணம் எங்கும் அங்கே தான் சென்று நின்றது.

அதிரன் கூட தாமஸ் அஞ்சனா பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிடவில்லை. ஆனாலும் கவனித்திருப்பான் தானே என தோன்றாமல் இல்லை. அத்தனை தடுமாற்றம் அதைப் பற்றி பேசும்போது. முன்பிருந்த எதுவுமே இப்பொழுது அவளின் நியாபகத்தில் இல்லை. அதை என்னவென்று விவரிக்க முடியும்?

இத்தனை நாட்கள் இல்லாத அளவுக்கு அதை யோசித்தபடி அமர்ந்திருந்தாள். 'என்ன செய்திருப்பேன்? எப்படி இருந்திருப்பேன்' என எண்ணென்னவோ எண்ணவோட்டங்கள்.

"அஞ்சனா!" என தன் தோள் தொட்டு யாரோ உலுக்கும் சத்தத்தில் அவள் மலங்க விழித்துப் பார்க்க, கண்ணன் நின்றிருந்தான் அருகே.

"ண்ணா!" என அப்பொழுது தான் தெளிந்தாள் அஞ்சனாவும்.

"அம்மா கூப்பிட்டுட்டே இருக்காங்க. இங்க என்ன பண்ற?" என்ற கண்ணன்,

"உடம்புக்கு எதாவது பண்ணுதா?" என அவள் நெற்றியில் கைவைத்துப் பார்க்க, கண்ணன் கையில் வைத்திருந்த அலைபேசியில் தொடர்பில் இருந்த அதிரனின் புருவங்கள் நெளிந்தது.

"ஏதுவும் இல்லை ண்ணா!" என்றவள் கண்ணனின் பார்வையில்,

"இன்னைக்கு லஞ்ச் டைம்ல தாமஸ் அண்ணா என்கிட்ட சும்மா என் பாஸ்ட் பத்தி கேட்டாங்க" என்று அவள் சொல்லவுமே ஓரளவு கண்டுகொண்டான் ஏன் அதிரன் அஞ்சனாவிடம் தன்னை பேச கூறினான் என்று.

"ரொம்ப டீப்பா திங்க் பண்ணாத டா" என்றான் கண்ணன்.

"நான் இவ்வளவு நாளும் திங்க் பண்ணவே இல்லையே. அதான்! சும்மா எப்படி இருந்திருப்போம்னு ஒரு தாட்!" என்றவளிடம்,

"ஹ்ம்!" என்றான் அண்ணன்.

"இன்னைக்குன்னு பார்த்து அவ்வளவு கேள்வி தாமஸ் அண்ணா. ஆனா எல்லாம் தெரிஞ்சது தானே! அதான் அப்படியே சொல்லிட்டேன். ஆனா என்னவோ உண்மையை சொல்ல தோணல" என்ற அஞ்சனா,

"சொல்லிட்டா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோனு இருக்கு. ஆனா சொல்லிட்டாலும் உங்களையும் அம்மாவையும் மாதிரி தான் ஓவர் கேர் பண்ணிப்பாங்க இல்ல!" என்று சிரித்தாள்.

"ஏன் இவ்வளவு யோசிக்குற? சொல்லணும் தோணுச்சுன்னா சொல்லிடு. இல்ல வேண்டாம்னு தோணுச்சுன்னா சொல்ல வேண்டாம். அவ்வளவு தான். சொல்லிருக்காங்க தானே ரொம்ப யோசிக்க வேண்டாம்னு!" என்றான் கண்ணன்.

"நான் எங்க யோசிச்சேன்? அதுவா வருது ண்ணா. எப்பவும் எல்லாம் இப்படி இல்ல. இன்னைக்கு தான்..." என்றவள்,

"அதுவும் சார் வேற கூட இருந்தாங்களா.. எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு. ப்ச்! சரி விடுங்க. இனி பேசல!" என்றவளை கனிவுடன் கண்டான் கண்ணன்.

தங்கை பழையபடி நினைவு திரும்பிவிட்டாளே போதும் என்று தான் அவனுக்கும் ஆதங்கமும் ஆயாசமும். ஆனாலும் அது தானாய் நிகழ்ந்தாள் அல்லவா நலம்.

"என்ன டா பேசினியா?" என மீண்டும் அழைத்துவிட்டான் அதிரன் கண்ணனுக்கு.

"என்ன திடிர்னு அதி? இவ்வளவு நேரம் அதையெல்லாம் யோசிக்க மாட்டா. நான் கூப்பிடுறது கூட கேட்காம யோசிச்சுட்டு இருந்தா!" என்றான் கண்ணன்.

"ஹ்ம்! தாமஸ் நமக்கு நல்லது பன்றானாம்!" என அதிரன் புன்னகைக்க,

"அது சரி! அவனும் அஞ்சனாவும் ஒண்ணு தான். சரியான வெகுளிங்க!" என்ற கண்ணன்,

"நீயும் கூட இருந்தியாமே பேசும் போது. அதையும் சொன்னா!" என்றான்.

"ஹ்ம்ம் நானும் அவளை பார்த்தேனே! கொஞ்சம் அன்கம்ஃபார்ட்டாகிட்டா.. ஓகேனு தாமஸ் டாபிக் மாத்திட்டான்!" என்றான் அதிரன்.

"ஓகே டா!" என்றவன் சில நொடிகள் இடைவெளிவிட்டு,

"உன் அப்பா எங்க தங்கி இருக்காங்கனு கண்டுபிடிச்சிட்டேன்!" என்றவன் இடத்தை கூறினான்.

"ஓஹ்! பேயிங் கெஸ்ட்டா? ஊர் முழுக்க தெரிஞ்சவங்க இருக்காங்க போல!" என கிண்டலாய் சொல்லிக் கொண்ட அதிரன்,

"அப்போ இப்போதைக்கு இங்கேருந்து கிளம்புற ஐடியா இல்லை போல இல்ல?" என்றான் யோசனையோடு.

"ஹ்ம்! என்னனு பாரு. பார்த்துக்கோ!" என்று அறிவுரை போல தான் கூறினான் கண்ணனும்.

அடுத்தடுத்த நாட்கள் நகர்ந்ததே தவிர்த்து அதிரனின் இருப்பிடம் மட்டும் அரியவே முடியவில்லை ஹரிச்சந்திரனுக்கு.

எத்தனை முயற்சி செய்துவிட்டார். முழுதாய் அந்த ஏரியாவை மட்டும் அத்தனை சுற்று சுற்றி அவரை தலைகீழாய் தண்ணீர் அருந்த விட்டான் அதிரன்.

"நீங்க போய் பத்து நாள் ஆச்சு. என்ன கிழிச்சிட்டிங்கனு பார்த்துட்டு தானே இருக்கேன்!" என எழிலரசிக்கும் ஹரிசந்திரனுக்கும் சண்டையே வந்துவிட்டது இடையில்.

"என்னை வந்து கூட்டிட்டு போங்க. நான் பாத்துக்குறேன்" என்று மனைவி சொல்ல, வரட்டுமே என்ற நிலைக்கு வந்திருந்தார் ஹரிச்சந்திரனும்.

அதிரன் கூடவே தாமஸ்ஸை கூட சந்தித்து பேச எவ்வளவோ முயற்சி செய்தார் ஹரிச்சந்திரன்.

அதற்கு அதிரன் விட வேண்டுமே! கூடவே அஞ்சனா அருகில் கூட சென்று விட முடியாதபடிக்கு மிரட்டல் என தளர்ந்து தான் போனார் அவர்.

அவன் வாயில் இருந்து எதையும் வாங்க முடியவில்லை. பேசவே மறுத்தான். கம்பெனி உள்ளே வரவும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தான்.

"ஆனாலும் பார்த்தாலும் பார்த்தேன் இந்த ஓனர் மாதிரி ஒரு கல் நெஞ்சு வச்ச மனுஷனை நான் பார்த்ததே இல்லை!" என தாமஸ்ஸிடம் தான் நொந்து நொடித்துக் கொண்டாள் அதிரனை அஞ்சனா.

"எதாவது காரணம் இருக்கும் அஞ்சனா. இப்ப நடக்குறதை மட்டும் வச்சு சொல்லாத. அவர் என்ன அனுபவிச்சாரோ!" என தாமஸ் கொஞ்சம் அதிரன் பக்கம் பேசினால்,

"அப்போ உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு. அதானே உங்க ஆள் உங்களுக்கு சொல்லாம இருப்பாரா?" என அஞ்சனா கேட்கயில் வாயை மூடிக் கொள்ள தான் வேண்டும் அவன்.

"அதெல்லாம் எதுவும் இல்லை டா!" என சமாளித்து வைத்தான்.

"ம்ம்ஹும் என்னவோ பெருசா இருக்கு. என் கெஸ்படி நிச்சயம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு!" என்றவளை உள்ளம் அதிர தாமஸ் பார்க்க,

"கவலைப்படாதீங்க! கேட்டு டார்ச்சர் பண்ண மாட்டேன். நீங்க தான் கம் போட்டு ஒட்டிகிட்ட மாதிரி பிரண்ட்ஸ் ஆகிட்டீங்களே! உங்க சீக்ரெட் எனக்கெதுக்கு?" என்பவள் அனைத்தையும் விளையாட்டாய் சொல்லி வைக்க,

'இவளுக்கு எப்பொழுது நினைவு வந்து எப்பொழுது இவர்கள் வாழ்வில் விடியல் வர?' என அலமலந்து விழித்தது என்னவோ தாமஸ் தான்.

எழிலரசி வந்த முதல் நாளே கணவனிடம் அவர் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.

"நீ போய் பேசினாலும் அவன் நம்மோட வர மாட்டான் எழில்!" என அவர் சொல்ல,

"நான் வந்து பேச என்ன இருக்கு?" என்ற எழிலரசி தீவிர சிந்தனைக்கு பின் தன் யோசனைகளை கூறினார் ஒவ்வொன்றாய்.

"எவ்வளவோ பார்த்துட்டேன். வீட்டை கண்டுபிடிக்க முடியல!" என மீண்டும் அதையே அவர் சொல்ல,

"அவளை ஃபால்லோவ் பண்ணீங்களா?" என்ற கேள்வியில்,

"அவன் தான் அவளை பார்த்தாலே எரிச்சிடுவேன்னு நிக்கிறானே!" என்றார் எரிச்சலாய்.

"அவன் சொல்லுவான். ஏன் அவனுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியுமா? அவனுக்கு தெரியாம உங்களால ஃபால்லோவ் பண்ண முடியாதா? ரெண்டு பேரும் உங்களை முட்டாளாக்கிட்டு இருந்திருக்காங்க இவ்வளவு நாளும்!" என்று சொல்ல,

"அவன் எப்படி சொன்னான்னு எனக்கு தான் தெரியும் எழில். அத்தனை கோவத்துல இருக்கான். கண்ணெல்லாம் சிவந்து அந்த நேரம் நீ பார்திருக்கணுமே! அந்த பொண்ணை பத்தி பேசவே விட மாட்டுறான்!" என்று சொல்ல, தானே அந்த வேலையை கையில் எடுத்தார் எழிலரசி.

அடுத்த இரண்டு நாட்களில் பாதி பாதி தூரம் அஞ்சனாவின் பின்னே சென்று அவள் இருப்பிடத்தை கண்டறிந்துவிட்டார்.

கூடவே கண்ணன், ராஜேஸ்வரி என அவள் குடும்பத்தினரையும் கண்டுவிட்டார்.

"அதி அவங்களோட இல்ல. அவ தனியா தான் அவ பேமிலியோட இருக்கா. ஆனா அதி வாங்கியிருக்க கம்பெனில வேலை பாக்குறா!" என ஒன்றுக்கொன்று முரணாய் இருப்பதை உணர முடியாமல் அவர் குழம்பி யோசித்தபடியே தான் இருந்தார்.

அடுத்த நாள் காலை விடை தேடி கம்பெனிக்கு வர 'வெக்கிறேன் ஆட்களுக்கு அனுமதி இல்லை!' எனும் பதாகை.

கூடவே காவலுக்கு நிற்பவரும் உள்ளே விட மறுக்க, அதிரனின் அன்னை என்று அவர் காட்டிய புகைப்படம் தன் வேலையை செய்து எளிழரசி உள்ளே அழைத்து வரப்பட்டார்.

"அதி!" என்று அத்தனை பாசமாய் அவனருகே சென்று எழிலரசி அழைத்துமே கண்களில் கொஞ்சமும் உணர்வின்றி தான் பார்த்து வைத்தான் அதிரன்.

அதிலேயே அவனின் எண்ணம் புரிந்தது போல சில நொடிகள் அமைதியாய் நின்றவர் பின் அவனை ஆழ்ந்த பார்வை பார்த்து,

"என்ன நடக்குதுன்னு மட்டும் சொல்லு. அவ உன் கூட இல்லை. அது எனக்கு தெரியும். எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ? என்ன பிளான் உன்னோடது? இல்ல உங்களோடது?" என்று நேராய் அவருக்கு வேண்டிய கேள்விகளை எல்லாம் கேட்டு வைத்தார்.

"அவன்னா? யாரை அவனு நீங்க சொல்றிங்க?" என்றவன்,

"ஓஹ்! என்னை தேடி வந்தவளை வீட்டை விட்டு வெளில விரட்டினிங்கல்ல? அவளா? உங்களால இப்போ கஷ்டப்படுறாளே அவளா?" என்றவன் கேள்வியில் பல்லைக் கடித்து அமைதியாய் நின்றார்.

"மொத்தமா என் வாழ்க்கையையே மாத்தி விட்டுட்டு இப்ப இத்தனை கேள்வி? மூளை எல்லாம் அரிக்குது இல்ல? சனா ஏன் அப்படி இருக்கா.. இவன் ஏன் இந்த கம்பெனில வந்து இருக்கான்.. இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா?" என்றவன்,

"எதுக்கும் பதில் சொல்ல மாட்டேன். பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல. நீங்க என்னை பெத்தவங்க. அதை மாத்த முடியாது இல்ல? நினைச்சுட்டே தான் இருப்பேன். அந்த வலி கண்டிப்பா எனக்கு வேணும்!" என்றான்.

"உனக்கு உண்மை முழுசா தெரியாது அதி. நாங்க சொல்றதை கேளு! உனக்கு அவ அவ்வளவு முக்கியமா இருக்கலாம். ஆனா அவளுக்கு என்ன முக்கியம்னு எனக்கு தான் தெரியும்!" என்றவரை கை முஷ்டிகள் இறுகப் பார்த்தான் அதிரன்.

"நீ நினைக்கிற மாதிரி இல்ல அவ. உன்னை மொத்தமா மாத்தி எங்ககிட்ட..." என்று அவர் பேசும் பொழுதே தாமஸ் எண்ணுக்கு அழைத்துவிட்டு அலைபேசியில் அவன் கவனம் வைக்க, எழிலரசியும் பார்த்து தான் நின்றார்.




 
Top Bottom