• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உலா வரும் வெண்ணிலா - 17

Vishakini

Moderator
Staff member

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 17

இன்றோடு மூன்று நாட்களாகி இருந்தது அஞ்சனா அலுவலகம் சென்று. முதல் இரண்டு நாட்களில் தன் எண்ணங்களில் எல்லாம் உடல் அதிர கைகால்கள் எல்லாம் நடுக்கம் பிறக்க, அவ்வளவு அதிர்ச்சியும் நம்பிக்கை இல்லா உருவமில்லா கற்பனையும் என அவள் அவளாய் இல்லவே இல்லை.

கூடவே என்னவோ மனதை அரித்து தான் சிந்திப்பதும் அதன் விடைகளும் என தலைவலியை கூட்டிக் கொண்டே இருக்க, அவளால் அமைதியாய் எதையும் யோசிக்காமலும் இருக்க முடியவில்லை.

யோசித்தால் அது அவள் உடல்நிலையை தான் அதிகமாய் பாதிக்கவும் செய்தது.

எதற்காக தன் மனம் இத்தனை சிந்திக்கிறது என அதுவேறு ஒரு மனவுளைச்சலானது.

எல்லாம் இரண்டு நாட்களுக்கு தான் அடுத்த நாள் கண்ணன் மாலை மருத்துவர் வந்துவிடுவதாய் சொல்லி தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்துவிடுவதாகவும் சொல்லி கிளம்பி இருக்க அவன் சென்ற ஒரு மணி நேரத்தில் எல்லாம் மயங்கி விழுந்திருந்தாள் அஞ்சனா வீட்டிலேயே.

பதறியடித்து ராஜேஸ்வரி மகனுக்கு அழைத்திருக்க, அவனும் மதியமே வந்து சேர்ந்துவிட்டான் வீட்டிற்க்கு.

மயக்கம் தெளிந்த பின்னும் யாரிடமும் பேசிடாத அசாத்திய மௌனம் அஞ்சனாவிடம்.

இந்த இரண்டரை வருடங்களில் இவ்வளவு அவள் என்றும் வலி அனுபவித்தது இல்லவே இல்லை என்பதால் கண்ணனும் ராஜேஸ்வரியும் பயந்து தான் போயிருந்தனர். தலைவலி என்று எப்போதாவது கூறுவாளே தவிர்த்து இப்படி சோர்ந்து போய்விட மாட்டாள் இத்தனை நாட்களில். அது தான் அவர்களின் பயமே.

இதோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து அவள் மருத்துவர் அறையில் அமர்ந்திருக்க, அவர்களோடு அதிரனும் வந்து நின்றதை இமைக் கொட்டாமல் பார்த்து நின்றாள் அஞ்சனா.

"என்னாச்சு டாக்டர்! மூணு நாளா வலில ரொம்ப கஷ்டப்படுறா. இப்படி என்னைக்குமே இருந்தது இல்ல. வீட்டுக்குள்ளேயே இப்படி முடங்கினதும் இல்ல!" கண்ணன் மருத்துவரிடம் கேட்க, அதிரன் மருத்துவரைப் பார்ப்பதும் தன்னை இப்படி பார்த்து வைக்கும் அஞ்சனாவின் பார்வையிலும் என மூச்சடக்கி அங்கே நின்றான்.

"இது நார்மல் தான் மிஸ்டர் கண்ணன்!" என்றதும் அனைவருமே புரியாமல் அவரைப் பார்க்க,

"ரொம்ப வலில அவஸ்தைபட்டாளே டாக்டர்!" என்றார் ராஜேஸ்வரி.

"முன்னாடியும் தலைவலி வரும் தானே?" என்று மருத்துவர் கேட்கவும் ஆமாம் என தலையசைக்க,

"நீங்க வெளில ரெஸ்ட் எடுக்கலாமே அஞ்சனா?" என்றார் மருத்துவர். எதுவும் பேசாமல் தலையசைத்து நகர்ந்துவிட்டாள்.

"அப்ப இவங்க பழசை நியாபகப்படுத்த எந்த ரிஸ்க்கும் எடுக்கல. தலைவலி வந்தா தூங்கிடுவாங்க இல்ல பிடிச்ச விஷயத்துல கான்ஸன்ட்ரெட் பண்ணுவாங்க. சரியா?" என அவள் செல்லவும் மிக சரியாய் கேட்டவர்,

"ஆனா இப்ப தான் முன்னாடி, அதாவது அந்த அச்சிடேன்ட்க்கு முன்னாடி என்ன பண்ணினோம். நமக்கு என்னாச்சுன்னு அவங்க யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க" என்று மருத்துவர் கூறவும் அதிரன் உணர்வுகள் எல்லாம் விழித்துக் கொண்டு வந்தது.

"அவங்க தெரிஞ்சிக்க நினைச்சிருக்கலாம். இல்லை யாரோ இப்படி இருந்தோமே உனக்கு நினைவு இல்லையானு கேட்டிருக்கலாம். இல்ல அவங்களுக்கே கூட தோணியிருக்கலாம்" என்றதும்,

"இதனால பிரச்சனை எதுவும் இல்லையே டாக்டர்?" என்றது அதிரன்.

"இல்லைனு சொல்ல முடியாது. ஆனா நாம பிரஷர் குடுக்குறதை விட அவங்களா தெரிஞ்சிக்க ட்ரை பண்றது பெட்டர். பட் அதுக்காக உடனே மொத்தமா தெரிஞ்சிக்க அவங்க நினைச்சாலும் அது ரிஸ்க்!" என்று அவர் சொல்ல ஆயாசமாய் உணர்ந்தனர் மற்றவர்கள்.

"அப்படினா?"

"மூணு நாளா அதே மைண்ட் செட்ல அவங்க இருக்கலாம். அது தான் ப்ரோப்லேம். வேற ஒரு கான்சென்ட்ரெஷன்க்கு அவங்களை கொண்டு வாங்க!" என்றார்.

"ஒருமாதிரி சைலன்ட்டா இருக்காளே! இப்படி இருந்ததே இல்லையே!" ராஜேஸ்வரி தான் கவலையாய் கேட்டது.

"தலைவலி வர்ற அளவுக்கு யோசிச்சவங்களுக்கு ஏதோ ஒண்ணு... மே பீ இப்ப அவங்களுக்கு பழையது எல்லாம் நியாபகம் வந்திருக்கலாம்" என்றதும் அனைவரின் கண்களிலும் கவலை, கண்ணீர், மகிழ்ச்சி என இருக்க, அதிரனுக்கு தொண்டைகள் எல்லாம் அடைத்து வந்தது அப்படி இருந்தால் எனும் நினைவில்.

"வாய்ப்பிருக்குன்னு தான் சொல்றேன். ஏன் எதுவுமே நியாபகம் வராத விரக்தில கூட இப்படி அமைதியா டல்லா இருக்கலாம். இல்ல சீக்கிரமே எல்லாம் நியாபகம் வரலாம் இன்னைக்கு, நாளைக்கு இல்ல நாளன்னைக்கு.. அவங்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனு தெரியாத இடம் இது. எதுவா இருந்தாலும் அவங்களா வெளிவரட்டும்!" என்றார்.

"நீங்க பேசிப் பார்க்கலாமே டாக்டர்!" அதிரன் கலங்கிய குரலில் கேட்க,

"ஏன் இல்லாம! பேசினேனே!. அவங்களோட பதில் தலையசைப்பா மட்டும் தான் வந்துச்சு. ஒரு கட்டத்துக்கு மேல வற்புறுத்த முடியல" என்றுவிட்டார்.

அதிகமாய் துடித்த மனதை அடக்க வழி தெரியாமல் நடுங்கும் உள்ளத்துடன் தான் நின்றான் அதிரன்.

"இஸ்ஸுஸ் இருக்குன்னு சொல்ற அளவுக்கு அவங்க உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. ஐம் ஷூர்!" என்றவர்,

"அவங்க மனசு தான் எதையோ தேடி களைச்சு போன மாதிரி தோணுது. விடை தெரிஞ்சிட்டா அவங்களே நார்மல் ஆகிடுவாங்கனு நம்புவோம். ஒரு ஒருவாரம் டைம் கொடுப்போம். சரியாகலைனா அதுக்கான ட்ரீட்மென்ட் குடுத்து தான் ஆகணும்!" என தெளிவாய் கூறிய பின் மூவரிடமும் மௌனம் தான்.

சரி என்றும் கூற முடியாமல் உடனே சரியாகி விடாதா எனும் பரிதவிப்பு. அதுவும் மூவரும் வெளி வந்த பின்னும் கூட சாதாரண பார்வை பார்த்து வைத்த அஞ்சனாவிடம் என்ன கேட்பதென்று கூட யாருக்கும் கேள்வியில்லை.

மருத்துவர் என்ன கூறினார் என்றோ ஏன் அதிரன் வந்தான் என்றோ தனக்கு ஏன் தலைவலி என்றோ எந்த கேள்வியும் இன்றி தாங்கள் வந்ததும் எழுந்து புறப்பட தயாராகிவிட்டாள் அஞ்சனா.

"நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ கண்ணா. நான் கால் பண்றேன்!" அதிரன் சொல்ல,

"என்ன சொல்றதுன்னே தெரியல அதி!" என்றான் கண்ணன்.

"நல்லது தான் நடக்கும். நீ பார்த்து கூட்டிட்டு போ!" என்றவன் ராஜேஸ்வரியைப் பார்க்க, அவரும் அவனை தான் பார்த்து நின்றார்.

"அஞ்சனா ஒர்க் பண்ற கம்பெனி எம்டி ம்மா!" கண்ணன் சொல்ல, 'அது நீயா?' எனும் அதிர்வு அவரிடம்.

அதற்காக தான் வந்திருக்கிறான் என கண்ணன் சொல்ல வந்த செய்தியில் ஒரு கசந்த புன்னகை அதிரனிடம். அதை மற்றவர்களும் உணர்ந்தார்கள் என்பது தான் நிஜம்.

"பை கண்ணா!" என்றவன் "வர்றேன் ம்மா!" என்று சொல்லி அஞ்சனாவை ஒரு பார்வை பார்க்க, இப்பொழுது ஆழ்ந்த பார்வை அஞ்சனாவிடம் அதிரன் முகத்தில்.

அதில் மனம் அடித்துக் கொண்ட போதும் என்னவோ ஒரு இதம் தாலாட்டுவதாய் தான் இருந்தது.

மனம் அப்படியே அந்த நாட்களுக்கே சென்று அங்கேயே தொலைந்து நிகழ்ந்த மொத்தத்தையும் கனவாக்கிட போராடியது.

கார் சாவியை கைகளுக்குள் இறுக்கிக் கொண்டு அதிரன் அங்கிருந்து கிளம்பியவன் கண்களில் முதல் முதலில் அஞ்சனாவை பார்த்த நாள் படமாய் விரிய, அவன் செல்வதைப் பார்த்து நின்ற மற்றவர்கள் எண்ணமும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.

"யார் நீங்க என்ன வேணும்?" என கேட்டு வாசலை மறித்து நின்றாள் அஞ்சனா.

"கண்ணா இல்ல?" அதிரன் அவளிடம் கேட்க,

"இல்ல!" உடனே கூறினாள் அவள்.

வீட்டின் முற்றத்தில் தான் அதிரன் நின்றிருந்தான். காலை நேரம் வேறு.

"சரி அம்மாவை கூப்பிடு!" என்றவன் அந்த தெருவில் போவோர் வருவோரைப் பார்க்க,

"அம்மா ஊருக்கு போயிருக்காங்க!" என்றாள். சொல்லியவள் கண்களில் அத்தனை விளையாட்டுத்தனம்.

அதைப் புரிந்தவனுக்கும் புன்னகை வந்தது தான் என்றாலும் இப்படி வாசலில் விளையாடுபவளை அதட்டவும் முடியவில்லை அங்கிருந்து.

உடனே அலைபேசியை எடுத்து கண்ணன் எண்ணுக்கு அழைக்க,

"அவ்ளோ தான் கொஸ்டின்ஸ்ஸா? போன்ல மட்டும் பேச்சு எகிறும்?" என்றாள் கிண்டலாய்.

"சொல்லு டா!" என அலைபேசியை எடுத்தபடி அறையில் இருந்து வெளிவந்த கண்ணன் தங்கை வாசலில் நிற்பதைப் பார்த்து அங்கே வந்தபடி கேட்க,

"டேய் அநியாயம் பன்றா டா!" என்று அதிரன் சொல்லும் போது வாசலுக்கே வந்துவிட்டான் கண்ணன்.

"அதி! எப்ப டா வந்த?" என்றவனைக் கண்டதும் அதிரன் அஞ்சனாவை முறைக்க,

"என்ன பண்ணினா?" என்று சிரித்தபடி வந்து அதிரன் தோளில் கையிட்டு உள்ளே இழுத்து வந்தான் கண்ணன்.

"நீ ஏன் அவகிட்ட பேசிட்டு நிக்குற? நேரா உள்ள வர வேண்டியது தானே?" என அதிரன் சொல்லியதைக் கேட்டு கண்ணன் சிரிக்க,

"காதைப் பிடிச்சு உள்ளேயே இழுத்துட்டு வந்திருப்பேன். ரோட்ல ஆளுங்க வரவும் போகவும் இருந்ததால தப்பிச்சா!" என்று அஞ்சனாவை முறைத்தான் அதிரன்.

அது தான் அதிரன் அஞ்சனாவின் முதல் சந்திப்பு.

கண்ணனும் அதிரனும் ஒரே கல்லூரி ஒரே வகுப்பில் விடுதியில் தங்கிப் படித்திருக்க, பலமுறை இவர்களிடம் அலைபேசியில் பேசி வாயாடி இருந்தாலும் அஞ்சனாவை அன்று தான் முதல்முறை சந்தித்திருந்தான் அதிரன்.

அது அதிரன் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விடுமுறை காலம்.

அன்று தொட்டு அதன்பின் எப்பொழுதும் போல அடுத்த ஆண்டு விடுதி நாட்களிலும் கண்ணன் அஞ்சனா அலைபேசியில் பேசும் நேரம் ஸ்பீக்கர் ஆனில் இருந்தால் அதிரன் குரல் அவ்வபோது எட்டிப் பார்ப்பது உண்டு.

கண்ணனுக்கு தந்தை இல்லை ராஜேஸ்வரி, அஞ்சனா இருவரும் தான் அவனுக்கு உலகமே. அதன்பின் அதிரன்.

இப்படியிருக்க, அதிரனும் எளிதாய் கண்ணன் குடும்பத்தோடு ஒன்றி இருந்தான். ராஜேஸ்வரியும் அன்பாய் தான் பேசினார் அதிரனிடமும்.

அஞ்சனாவை அத்தனை பிடிக்கும் அதிரனுக்கு. கண்ணனுடன் பேசும் பொழுதெல்லாம் அவனிடமும் வாயாடுபவள் அவள்.

நேரில் பார்க்கும் முன்பே அவள் பேச்சில் ஈர்க்கப்பட்டவன் நேரில் பார்த்தபின் இன்னுமே அவள்பால் சாய்ந்திருந்தான்.

முதலில் அவ்வளவு தயக்கம் கொஞ்சம் நண்பனின் தங்கை என்ற எண்ணம் என அவன் அமைதியாய் இருக்க, நாளாக நாளாக பிடித்தம் மட்டும் அதிமாகிக் கொண்டே தான் சென்றது.

ஒரு கட்டத்தின் மேல் மறைக்க இயலாதவன் கண்ணனிடம் கூற, அவனிடம் தான் முதல் மறுப்பு.

"விளையாடாத அதி! அவ கொஞ்சம் ஜாலி டைப். அந்த பேச்சுல தான் உனக்கு இந்த மாதிரி தோணி இருக்கும். மத்தபடி..." என்ற கண்ணன் மறுப்பாய் தலையசைக்க,

" ஓஹ்! உன் சிஸ்டர்க்கு நான் ரொம்ப கம்மி தான் இல்ல?" என்றுவிட்டான் அதிரன் கடுப்பாய்.

"இந்தப் பேச்சை இத்தோட விடு டா!" என்ற கண்ணனுக்கு நன்றாய் தெரியும் அதிரணையும் அவனின் குடும்பத்தையும்.

தனியாய் குடும்பத் தொழில். பரம்பரை பரம்பரையாய் பணக்காரர்கள் என்ற பெரும் செல்வந்தன் வீட்டுப்பிள்ளை அதிரன்.

தானும் தன் குடும்பமும் என சிறு கூடு கண்ணன் அவனது அன்னை, தங்கை.



 
Top Bottom