• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உலா வரும் வெண்ணிலா - 19

Vishakini

Moderator
Staff member

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 19

எண்ணி எண்ணி பேச்சு வார்த்தைகள் என அஞ்சனா அதிரனிடம் பேச ஆரம்பித்து இருக்க, அதன் மாற்றத்தில் இன்னுமே அவளிடம் ரசனையாய் சரிந்திருந்தான் அதிரன்.

கண்ணன் கூறியதும் தானே அத்தனைக்கும் தன்னை அவளிடம் கொடுத்து, "நம்பி என் லைஃப்ல நீ வரலாம் சனா!" என கை விரிக்க,

"ஹ்ம்! எல்லாம் சரியா நடக்கட்டும்!" என்று கண்ணனின் கைப்பிடித்தாள் அஞ்சனா. அதில் கண்ணன் பக்கென்று சிரித்துவிட,

"இவன் முன்னாடி இன்ஸல்ட் பண்றல்ல நீ என்னை?" என முறைத்தாலும் புரியாமல் இல்லை அவளை அதிரன்.

அடுத்தடுத்த நாட்கள் அஞ்சனாவுடன் தானே அழைத்து பேச ஆரம்பித்து இருந்தான் அதிரன்.

மனதில் எந்தவொரு எண்ணமும் அவனைப் பற்றி இல்லாத நாட்களில் அவ்வளவு சாதாரணமாய் அவனை கலாய்த்து, விளையாடி, கிண்டல் செய்து என பேசி இருந்தவள் இப்பொழுது பேச்சுக்கு தடுமாறி நின்றாள்.

"பேசலாம் சனா தப்பில்ல!" என அதிரன் புன்னகையுடன் கேட்டுமே, "என்னவோ சட்டுனு வர்ல. அதுக்குன்னு கிண்டல் பண்ணி சிரிக்காதிங்க!" என்று கூறுபவளுக்கு அடுத்தடுத்த நாட்களில் அதிரன் மேலான நேசம் இன்னுமின்னும் வளர்ந்து கொண்டே தான் இருந்தது.

கண்ணன், ராஜேஸ்வரி என அவர்களிடம் மட்டும் காட்டும் தன் எண்ணங்களை, மனதை என அவனிடமும் வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தாள்.

அடுத்த ஒரு மாதத்திலேயே தன் அன்னை தந்தையிடம் அஞ்சனா மீதான தன் விருப்பத்தை அதிரன் கூற, அத்தனை அதிர்ச்சியும் ஏமாற்றமும் தான் எழிலரசி ஹரிச்சந்திரனிடம்.

"இது பைத்தியக்காரத்தனமான முடிவு அதி!" என எடுத்ததும் எழிலரசி சொல்ல, அத்தனை கூர்மையாய் அன்னையிடம் விழுந்தது அதிரனின் பார்வை.

அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் தன் அதிர்வை துளியும் காட்டிடாமல் அவர்கள் முன் நிற்க,

"இங்க எவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருக்கு. நம்ம கம்பெனில நஷ்டமாகி இருக்கு. அதை சரி பண்ண நாங்க என்ன கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். நீ போய் இப்படி!" என்ற ஹரிச்சந்திரனும் என்னவோ சொல்ல கூடாததை மகன் சொல்லி விட்டதாய் பார்த்து வைக்க, அப்பொழுது தான் கண்ணன் அத்தனை தனக்கு விலக்கிய காரணம் கொஞ்சமாய் புரிந்தது அதிரனுக்கு.

பரம்பரை பரம்பரையான தொழில் தான் என்ற போதிலும் இத்தனை காலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு நஷ்டம். நினைத்தும் பார்க்கவில்லை ஹரிச்சந்திரன். அதை எப்படி சரிகட்டி ஈடு செய்ய என நினைக்கும் பொழுது அதிரனும் படிப்பை முடித்து தொழிலில் காலடி எடுத்து வைத்து ஓரளவு கற்று கொள்ள ஆரம்பித்திருக்க,

தன் கம்பெனியுடன் தொடர்பில் இருக்கும் பங்குதாரர்கள் எல்லாம் அதிரனைக் கண்டபின் சில பேச்சு வார்த்தைகளுக்கு வந்து நின்றனர்.

அவனிடம் இருக்கும் திறமையை சிலர் பாராட்டி அதற்கான தொகையை முதலீடு செய்ய முன்வர சிலர் இருக்க, இன்னும் இரு பங்குதாரர்கள் அவர்கள் பெண்ணைக் கொடுத்து வணிக வியாபாரத்தில் ஈடுபட தயாராகி இருந்தனர்.

அதுவும் அதிரனை அவர்களின் பெண்களில் ஒருவருக்கு கொடுத்தால் கடனோடு பங்கும் என ஆசைகளைக் காட்ட துவங்க, எல்லாம் சரியாகிடும் அனைத்தும் மீட்டு மீண்டும் வரலாம் எனும் எண்ணம் ஆசை என ஒரு முடிவிற்கு எழிலரசி ஹரிச்சந்திரன் வந்திருக்கும் நேரம் தான் அதிரன் அவர்கள் கனவில் கல்லைத் தூக்கிப் போட்ட நேரம்.

கிட்டத்தட்ட தன் வீட்டிற்கான மருமகள் என பெண்ணை கூட தேர்ந்தெடுத்துவிட்டனர் தன் கம்பெனியோடு தொடர்புடைய ஒரு குடும்பத்தில் இருந்து.

அவர்களும் நிச்சயம் இதற்கு சம்மதிக்க கூடும். இரு வீட்டாருக்கும் இதிலிருக்கும் லாபம் அத்தனை முக்கியம்.

பெண் வீட்டார் பொறுத்தவரை மகளுக்கு கொடுத்து மகளோடு மருமகன் என பெயரும் அந்த கம்பெனி உறவும். அதிரன் வீட்டாருக்கு கடன் பிரச்சனை தீறும். கூடவே பெண் வீட்டாரின் சொத்துக்களும் மகனுக்கு வரும் என அத்தனை பெரிய அரசியல் முடிச்சுக்கள் எல்லாம் மகனின் ஒற்றை வார்த்தையில் ஆட்டம் காண்பதாய் இருந்தது.

"ஓகே!" என தலையசைத்தபடி அங்கும் இங்கும் பார்த்த அதிரன்,

"என்னோட மேரேஜ் பிளான் இது. அதை நீங்க வேண்டாம்னு சொல்றிங்க. சோ! உங்ககிட்ட ஏதோ பிளான் இருக்கு ரைட்?" என பொறுமையாய் அதிரன் கேட்க, அன்னையும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே கதை சொல்லியது அதிரனுக்கு.

"நீ உலகம் புரியாம இருக்கிற அதி. அப்படி தான் உன்னை நாங்களும் வளத்துட்டோம். உன்னை வச்சு யாரா இருந்தாலும் ஆதாயம் தேட தான் பார்ப்பாங்க. இது புரியாம காதல் அது இதுன்னு.." என்ற தந்தை பேச்சில்,

"ஓகே ப்பா! அதான் சொல்லிட்டேனே!" என அந்த பேச்சை விட வைத்தவன்,

"சொல்லுங்க! நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கிங்க என் ஃபியூச்சர்க்கு?" என கேட்க,

"நர்மதா! நம்ம பார்ட்னர் பேமிலி தான் பொண்ணு. உனக்காக நாங்க பார்த்து வச்ச பொண்ணு. சும்மா சொல்லல. பொண்ணும் சரி அவங்க குடும்பமும் சரி. ரொம்ப நல்லவங்க. முக்கியமா பணத்துக்கு ஆசைப்படறவங்க இல்ல. நம்மள விட அதிகமாவே அவங்ககட்ட இருக்கு!" என்றார் ஹரிச்சந்திரன்.

"ஓஹ்!" என்றவன்,

"அப்போ! இங்க அவங்களுக்கு நம்மளால ஆதாயம் இல்லை தானே? தென் நமக்கென்ன ஆதாயம்?" நேராய் கெட்டவனை அதிர்ச்சியாய் பார்த்தனர் பெற்றோர்.

"சொல்லுங்க ப்பா. உங்க பாயிண்ட் ஆஃப் வியூபடி நானும் உலகத்தை தெரிஞ்சுக்கறேன்!" என்ற அதிரனிடம் இதை எதிர்பார்க்கவில்லை அவனைப் பெற்றவர்கள்.

"அதி! நீ அதிகமா பேசுற. நாங்க உன் நல்லதுக்கு தான் எல்லாம் பண்ணுவோம்!" அத்தனை அமைதியும் அழுத்தமுமாய் கூறினார் அன்னை.

"என் நல்லது உங்களுக்கு தெரியும் தான் இல்லைனு சொல்ல முடியாது. ஆனா என் பிடித்தமும் தெரியணுமே!" என்றவன்,

"ஓகே! இதைவச்சு இப்ப என்னால பேச முடியாது. ஐ நீட் சம்டைம். டென்ஷன் பிளஸ் இரிடேஷன். நான் அப்புறம் பேசுறேன். அதுக்காக நீங்க சொன்ன பொண்ணை ஓகே சொல்லுவேன்னு நினைச்சுக்க வேண்டாம். சனாவை எப்படி மேரேஜ் பண்ணிக்க போறேன்னு தான் பேசணும். அதை தான் அப்புறமா பேசலாம்னு சொன்னேன் ஓகே?" என்றவன் கோபத்தை காட்டாமல் அமைதியாய் செல்ல, தங்கள் வழிக்கு வந்துவிடுவான் என்றே நம்பி இருந்தனர் பெற்றோர்.

அஞ்சனா அவனிடம் கேட்ட போதும், "ஹ்ம் பேசிட்டேனே! அவங்களுக்கு ஓகே தான். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்று சொல்ல,

"நிஜமாவா?" என்றாள் ஆச்சர் காட்டி.

"ஏன் கண்ணு அவ்ளோ விரியுது உனக்கு?" என கிண்டல் செய்தவன் பெற்றோர் மறுப்பை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை ல். பேசி புரிய வைத்துவிடலாம். அஞ்சனா தவிர வேறு யாரையும் நினைக்க போவதும் இல்லை என்று உறுதியாய் இருந்தான்.

அதனாலேயே அதை தன்னவளிடம் அவன் மறைத்திருக்க, அது தான் வினையாகிப் போனது அதிரனுக்கு.

நாட்கள் அழகாய் அவளுடன் அவள் எண்ணங்களுடன் என அதிரனுக்கு செல்ல, அஞ்சனாவிற்குமே அதிரனை அத்தனை பிடித்துவிட்டது.

எத்தனை விளையாட்டுத்தனமோ அத்தனைக்கு அழுத்தமாய் இருந்தும் அனைத்தையும் சாதித்துக் கொள்வான்.

இடையில் கண்ணன் திருமணம் பற்றி ராஜேஸ்வரி பேச, "அஞ்சனாக்கு அப்புறம் தான் ம்மா எனக்கு!" என்றுவிட்டான் கண்ணன்.

விஷயம் அதிரன் காதுகளுக்கு அஞ்சனா மூலம் வந்து சேர,

"அவன் நல்லவன். நான் பண்ணிக்காம பண்ணிக்க மாட்டான். அவனை வச்சே நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் சனா!" என விளையாட்டாய் கூறியவன் தான் என்றாலும் அதையும் பெற்றோரிடம் எடுத்து சென்றான் அடுத்த சில நாட்களிலேயே.

அதில் அத்தனை கோபம் எழிலரசிக்கு. அவர் பேசும் முன் இடையிட்ட ஹரிச்சந்திரன், "அதை அப்புறமா பார்த்துக்கலாம் அதி! மும்பைல நம்ம ப்ரோடக்ட்ஸ் எல்லாம் கஷ்டம்ஸ்ல ஸ்டாப் பண்ணி வச்சிருக்காங்கலாம். இந்த டைம் நம்ம ஆட்களோட நீயும் போ. அப்போ தான் அதெல்லாம் தெரிஞ்சுக்க முடியும்!" என்று சொல்ல, வேறெந்த எண்ணமும் இல்லை அதிரனிடம்.

"போய்ட்டு ஒன் வீக்ல வந்துடுறேன் சனா!" என அழைத்து அவளிடம் சொல்ல,

"இப்பவேவா?" என்றாள் சஞ்சலமாய். என்னவோ போலானது அந்த நிமிடங்கள் அவளுக்கு.

"பின்ன? ப்ரோப்லேம் என்னனு உடனே பார்க்கணுமே! அதை கிளீயர் பண்ணி அனுப்பி விட்டுட்டு வந்திடுறேன்!" என்றவன்,

"உனக்கெதாச்சும் வேணுமா?" என்று அவளிடம் கேட்க,

"ஹ்ம்!" என்றாள் என்னவோ நினைவோடு.

"என்ன?" என அவன் கேள்வியாய் பார்க்க,

"பத்திரமா போய்ட்டு வாங்க!" என்றதில் புன்னகைத்துக் கொண்டவன்,

"சிம்பாலிக்கா சொல்றியா நான் தான் வேணும்னு!" என்றவன் பேச்சில் அவள் முகத்திலுமே புன்னகை.

காதலிக்க ஆரம்பித்து ஆறு மாதங்களில் இது முதல் முறையாய் அவன் தொலைதூரம் செல்லும் நேரம். அது மனதுக்குள் ஒருவித அல்லாட்டத்தை அவளிடம் கொடுக்க, அதை சொல்லி அதிரனை குழப்பி விடவும் மனதில்லை அஞ்சனாவிற்கு.

வாரம் ஒரு முறை தான் பார்த்துக் கொள்வது என்றாலும் தினமும் அத்தனை அலைபேசி அழைப்புகள் இருவருக்குள்ளும் சின்ன சின்னதாய் சந்தோஷங்களை விதைத்துக் கொண்டிருக்க, அதை அவனிடம் வாய்விட்டும் சொல்லி இருந்தாள்.

"முன்னெல்லாம் அவ்ளோ கலாய்ச்சு விளையாடின பொண்ணா நீ! அப்படியே மாறிட்ட போ!" என கிண்டல் செய்பவன்,

"இந்த வெர்சன்னும் க்யூட் தான் போ!" என அலைபேசிக்கு முத்தம் வைப்பான்.

"ப்ச்! ஷ்ஷூ!" என்று அவள் கூறினால்,

"பதிலுக்கு தானே குடுத்த?" என்று கேட்டு வாயடைக்க வைத்துவிடுவான்.

இப்படி அழகான நாட்களும் நினைவுகளும் என சுமந்தப்படி அவன் மும்பை செல்ல, அடுத்த இரண்டு நாட்களில் கண்ணனுக்கு அழைத்து குடும்பத்துடன் வரும்படி அழைத்துவிட்டார் ஹரிச்சந்திரன்.

என்ன ஏது என்று தெரியவில்லை. அதிரனிடம் கேட்கலாம் என்றால் அவன் ஹார்பரில் நின்றிருக்க சுத்தமாய் தொடர்பில் பிடிக்க முடியவில்லை.

ஏற்கனவே அவன் அன்னை தந்தையிடம் பேசி அவர்கள் விருப்பம் தெரிவித்ததாக அதிரன் சொல்லி இருந்ததால் திருமணம் பற்றி பேச தான் அழைக்கிறார் என்ற கணிப்போடு தான் அன்னையிடம் விஷயத்தை பகிர்ந்தான் கண்ணன்.

அவருக்கு முதலில் அதிர்ச்சி தான். நம்பவே இல்லை. "அதிக்கு நம்ம அஞ்சனாவை ரொம்ப பிடிச்சிருச்சு ம்மா. அவனை மாதிரி யாராலயும் பார்த்துக்கவும் முடியாது. உங்களுக்கும் அவனை தெரியும் தானே?" என கண்ணன் கேட்க,

"சாரி ம்மா!" என அன்னை அருகில் வந்தாள் அஞ்சனாவும்.

அதிரனை அறிந்தவர் என்றாலும் இதை சட்டென்று ஏற்க முடியவில்லை. ஒருவித மன சஞ்சலமும் தயக்கமும் என அவர் யோசிக்க,

"அவங்க அம்மா அப்பாகிட்ட கூட பேசி சம்மதம் வாங்கிட்டான். அவங்க நம்மளை பார்க்க வர சொல்லிருக்காங்க!" என்று கண்ணன் சொல்ல, அதிரனின் குணம் தெரிந்தவர் அவனை மட்டும் நம்பி, அவன் மேல் கொண்ட நம்பிக்கையோடு, அவனை போலவே தான் அவன் பெற்றோரும் என நினைத்து தான் ஹரிச்சந்திரனை காண கிளம்பி சென்றிருந்தார்.
 
Top Bottom