• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 12

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-12


கோவிலுக்குச் சென்ற மகளுக்காக காத்திருந்து களைத்த மரகதத்தின் மனதில் கலவரம் குடிகொண்டது. இப்படி இருட்டும் வரை கோவிலிலேயே இருக்க மாட்டாளே என்று பயந்தவர், தன் பக்கத்து வீட்டுக்கதவைப் பதட்டத்துடன் தட்டினார்.

கதவு தட்டும் ஓசையே ஒருவித பயத்தைக் கொடுக்க, ஜன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு, அவசரமாக வந்து கதவைத் திறந்தாள் தங்கம்.

"தங்கம், கவி கோவிலுக்கு போனாள். இன்னும் வீட்டுக்கு வரவில்லை.. எனக்குப் பயமாக இருக்கிறது தங்கம்..." கலங்கிய கண்களும் பரிதவிப்புமாக நின்றார் மரகதம்.

"என்னது கவியைக் காணவில்லையா? எங்கே போனாள் மரகதமக்கா?"

"கோவிலுக்கு போனாள். இன்னும் காணவில்லை. இவளுடன் மல்லுக்கட்டியே என் சீவன் போகிறது. எங்கு போனாள் என்றே தெரியவில்லை.."

"பதறாதீர்கள் அக்கா! அவளோடு படிப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பாள் அல்லது விளையாடிக்கொண்டு இருப்பாள். அவள் எப்போதும் அப்படித்தானே..."

பக்கத்து வீட்டிலேயே இருந்து எப்போதும் அவளை பார்த்துக்கொண்டு இருப்பவள்தானே தங்கம்....

"என்னதான் விளையாட்டு என்றாலும் இவ்வளவு நேரம் வராமல் இருக்கமாட்டாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்று வீட்டுக்கு வரட்டும் அவள்! அடித்தே காலை முறித்துவிடுகிறேன். கொஞ்சம் கூடப் பயம் கிடையாது அவளுக்கு.." மகளைக் காணாத தவிப்பில் கோபம் கூட வந்தது அவருக்கு!

"சில நேரம் பூசை இன்னும் முடியவில்லையோ தெரியவி...." என்றபடி நேரத்தைப் பார்த்த தங்கம், அது எட்டு என்று காட்டவும், "இல்லையே அக்கா. இவ்வளவு நேரத்துக்கு ஐயரே கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு போயிருப்பாரே..." என்றாள். இப்போது அவளையும் கலவரம் தொற்றிக்கொண்டது.

"ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டாள். இன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த பெண்ணோடு நான் படும் பாடு..." என்றவரின் குரல் கரகரக்க, கண்கள் கண்ணீரைக் கொட்டியது.

மாலையில் பாவாடை தாவணியில் தயாராகி வந்தவளைப் பார்த்து, பெரிய பெண்ணைப் போல் இருக்கிறாளே என்று நினைத்தேனே.... என் கண்ணே பட்டுவிட்டதோ என் மகளுக்கு. மருகியது அவர் உள்ளம்!

தங்கத்துக்கும் என்ன செய்வது என்று புரிய மறுத்தது. கவி தோழிகளைக் கண்டால் தன்னை மறந்து விளையாடுபவள் தான். ஆனாலும் இருட்டும்வரை இருக்கமாட்டாள். இருட்டுக்குப் பயமில்லாதபோதும் தாயின் அடிக்கு மிகுந்த பயம் அவளுக்கு!

"அழவேண்டாம் அக்கா. அப்படி எதுவும் நடக்காது. பயபடாதீர்கள்."

"தங்கம், வேலனை ஒருக்காள் வரச் சொல்கிறாயா? சைக்கிளில் கோவில்வரை போய்ப் பார்த்துவரலாம். எனக்கு நெஞ்சு படபடக்கிறது.." மனதின் வலி தாங்காது தவித்தது அந்தத் தாயுள்ளம்!

"சரிக்கா. கொஞ்சம் பொறுங்கள். உள்ளே வாருங்கள். கவிக்கு ஒன்றும் நடக்காது. பயபடதீர்கள். வந்துவிடுவாள்..." என்று தங்கம் ஆறுதல் சொல்லவும், 'வந்துவிடவேண்டும். என் மகள் என்னிடமே வந்துவிடவேண்டும்! அவளுக்கு எதுவுமே நடந்துவிட கூடாது.....' என்று தனக்குள்ளேயே தவித்தார் அவர்.

உள்ளே சென்ற தங்கம், தன் கணவன் வேலனிடம் விஷயத்தைச் சொல்லிக் கூட்டி வரவும், "மரகதம் அக்கா, கவி ஆடிப்பாடி நடந்துவருவாளாய் இருக்கும். மற்றும்படி நம் ஊரில் அப்படி என்னதான் நடக்க இருக்கிறது. ஒன்றும் நடக்காது, அதனால் பயப்படாதீர்கள்!" என்றபடி வேலன் சைக்கிளை எடுத்தான்.

"என்னையும் கூட்டிப் போகிறாயா வேலா. அவளைக் கண்ணால் கண்டால் தான் எனக்கு இந்தப் பதைப்புப் போகும்..." என்று கண் கலங்கக் கெஞ்சியவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவனுக்கு.

“வாருங்கள், கூட்டிப் போகிறேன்..." என்று அவன் சொல்லவும்,

"அவனவன் இரண்டு மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறான். நான் இவளொருத்தியைப் பெற்றுவிட்டு படும்பாடு இருகிறதே..." ஆற்றாமையோடு புலம்பியபடி வேலனின் சைக்கிளில் ஏறிக்கொண்டார் மரகதம்.

போகும் வழி முழுவதும் அந்த இருட்டில் முடிந்தவரை கண்களைச் சுழற்றி மகளைத் தேடிக்கொண்டு, "கவி.... கவி.... கவி..." என்று அழைத்தபடியே சென்றார் மரகதம்.

என் மகள் கிடைத்துவிடவேண்டும். அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று உருப் போட்டபடியே இருந்தது அவர் மனது.

அவர் வாழ்வின் ஒரே பற்று அவள்! அவர் உயிர் வாழ்வதன் ஒரே அர்த்தமும் அவள்! அவரின் சுவாசம் முதல் உயிர் துடிப்பு வரை அனைத்தும் மையம் கொள்வது அவளிடம் மட்டுமே! அப்படியானவளைக் காணவில்லை என்றால்.. தவித்தது அவர் இதயம்!

வழியில் அவளைக் காணாது கோவிலுக்குச் சென்றவர்களை பூட்டிய கோவில் கதவே வரவேற்றது. வேலன் வழிகாட்ட, அவன் பின்னால் கலவரம் சூழ கண்ணீர் வடிய ஐயரின் வீட்டுக்கு விரைந்தார் மரகதம்.

அங்கே ஐயரிடம் வேலன் கேட்கவும், "இல்லையே, இன்று அந்தப் பெண் வரவில்லையே..." என்றார் ஐயர்.

"அவள் ஒவ்வொரு வெள்ளியும் வருவாளே ஐயா. இன்றும் கோவிலுக்கு வந்தவள் வீட்டுக்கு இன்னும் வந்து சேரவில்லை..." என்று மரகதம் சொல்லவும்,

"இல்லையம்மா. உங்கள் மகளை எனக்கு நன்றாகத் தெரியும்! அவள் இன்று கோவிலுக்கு வரவில்லை!" என்று உறுதியாகச் சொன்னார் ஐயர்.

"அப்படியானால் எங்கே போனாள்...?"

ஐயர் என்ன பதிலை சொல்வார்......

அந்தநொடியில் பெண் பிள்ளைகளுக்கு உலகில் நடக்கும் அனைத்து அசம்பாவிதமும் மரகதத்தின் கண்முன்னால் வந்துபோனது. ஐயோ..! என் மகளுக்கு ஏதாவது நடந்துவிட்டதோ.....

கண்கள் இருட்ட, உடல் நடுங்க அப்படியே நிலத்தில் மடிந்து சரிந்தவரின் கண்களோ கண்ணீரைக் கொட்ட, இதுவரை கடவுள்களை வெறுத்து ஒதுக்கியவரின் கைகள் நடுக்கத்துடன் அம்மனை நோக்கிக் கூப்பியது.

"அம்மா தாயே, என் மகள் எனக்குக் கிடைத்துவிடவேண்டும்! என் வாழ்க்கைதான் நாசமாகிப்போனது என்றால் என் மகளின் வாழ்க்கையிலும் விளையாடி விடாதே. அவளாவது நன்றாக வாழவேண்டும்! அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தேனே.. இப்படித் தொலைத்துவிட்டு நிற்கவா?"

"என்னை அவள் அப்பன் கைவிட்டபோது கூட வாழ்ந்துகாட்டுவேன் என்று சொல்ல உடலிலும் மனதிலும் பலம் இருந்தது. இன்று என் மகள் இல்லாமல் என்னால் முடியாது! எனக்கு என் மகள் வேண்டும். பெற்ற வயிறு பற்றி எரிகிறதே.... என் மகளை என் கண்ணில் காட்டிவிடு. அம்மா தாயே அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது.."

"அவள் நன்றாக வாழ்வதை என் கண்ணால் பார்த்துவிட்டுத்தான் நான் கண்மூட வேண்டும் என்று கனவு கண்டேனே... எல்லாமே பொய்யாகப் போய்விட்டதா.... ஐயோ... எனக்கு மட்டும் ஏன் இப்படிச் சோதனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருகிறாய்? என் பிள்ளையைக் காப்பாற்று! தாயே என் பிள்ளையை காப்பாற்று..." என்று கதறியழுதார் மரகதம்.

பாத்திருந்த வேலனுக்கும் ஐயருக்குமே கண்களில் கண்ணீர் வழிந்தது. எப்போதும் மகளைத் திட்டும் இந்த பெண்மணி மகளில் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா என்று வேலனுக்கு மலைப்பாகக் கூட இருந்தது!

பாசத்தை மட்டுமே காட்ட தெரிந்த ஒரே தெய்வம் தாய் மட்டுமே! அதைக் காட்டும் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய, பாசம் வேறுபடாது என்று புரிந்தது வேலனுக்கு.

"அம்மா, அழாதீர்கள்! கவிக்கு ஒன்றும் ஆகாது. அப்படி எதுவும் நடக்க அவள் கும்பிடும் அம்மன் விடமாட்டாள். அழாதீர்கள்..." என்று ஐயர் சொல்லவும்,

"என் மகளுக்கு ஒன்றும் நடந்திருக்காது இல்லையா? அவள் என்னிடம் வந்துவிடுவாள் தானே..?" என்று உயிரைக் கண்களில் தேக்கி, நல்ல பதிலைச் சொல் என்கிற மன்றாடலை முகத்தில் காட்டிக் கேட்ட அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கமுடியவில்லை ஐயரால்.

"கட்டாயம் அம்மா! மகள் நிச்சயம் உங்களிடம் வந்துவிடுவாள். அழாமல் எழுந்திருங்கள். சிலநேரம் அவள் வீட்டுக்கு போயிருக்கலாம். கவலைப் படாதீர்கள்..."

ஐயர் கவி வீட்டுக்கு போயிருப்பாள் என்றதும் வேகமாக எழுந்த மரகதம், "ஆமாம்! அவள் இப்போது வீட்டுக்கு வந்திருப்பாள்! நான்தான் விசரி மாதிரி இங்கே வந்துவிட்டேன்!" என்று புலம்பியவருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ வேகவேகமாக வீடு நோக்கி நடந்தார்.

"அக்கா, மரகதம் அக்கா, பொறுங்கள்! சைக்கிளில் போகலாம்..." என்ற வேலனின் கத்தல் அவரின் காதில் விழவே இல்லை. ஐயரிடம் சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்து, அவரின் காலடியில் நிறுத்திய வேலன், "ஏறுங்கள் அக்கா. சைக்கிளில் போனால் வேகமாகப் போய்விடலாம்..." என்றான்.

உடனேயே அவன் சைக்கிளில் ஏறிக் கொண்டவர், "வேகமாகப் போ வேலா. பிள்ளை என்னைக் காணவில்லை என்று தேடப்போகிறாள்..." என்றார் தவிப்புடன்.

அங்கே கவி இல்லாவிட்டால் இந்த அக்கா அதைத் தாங்குவாரா என்று யோசனையாக இருந்தது வேலனுக்கு. அவனுக்குத் தெரியுமே அவரைப் பற்றி! எப்போதும் மகளைத் திட்டினாலும், அவரின் பேச்சில் அவள் மட்டுமே இருப்பாள்.

அதைத் தாண்டினால் அவரின் சமையல் பற்றி இருக்கும். அதுகூட மகளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்பதில் வந்து முடியும். அப்படியானவரை எப்படிச் சமாளிப்பது, தப்பித்தவறி கவி இன்னும் வராவிட்டால் அவளை எப்படிக் கண்டு பிடிப்பது? என்ன செய்வது என்றே தெரியவில்லை அவனுக்கு.

ச்சே...இந்தக் கவி எங்கே போய்த் தொலைந்தாள் என்று கோபம் கூட வந்தது. அந்தளவுக்கு, வேலை செய்து மெலிந்த அந்த வயதான மேனி நடுங்க, முடிந்தவரை குரலை உயர்த்தி மகளின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபடி, கண்களில் கண்ணீர் வழிய வந்த மரகதத்தின் கோலம் அவனை வாட்டியது.

வீட்டுக்கு வந்தால் அங்கேயும் இல்லை கவி! மொத்தமாக ஓய்ந்து போனார் அவர்!

தங்கத்தின் கண்கள் கேட்ட கேள்விக்கு, வேலனும் கண்ணாலேயே 'அவள் அங்கும் இல்லை' என்று பதில் சொன்னான்.

"இன்னும் அவள் வரவில்லையே வேலா...." என்றவரின் பரிதாபக்குரலை கேட்க முடியவில்லை அவனால்.

"கட்டாயம் வந்துவிடுவாள் அக்கா, பயப்படாதீர்கள்..."

வேறு என்னதான் சொல்வது அவனும்?

வேலனின் முகத்தில் தூக்கமும் வேலைக் களைப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது. பின்னே, இரத்தத்தை வேர்வையாகச் சிந்தி கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் கூட்டம் அல்லவா அவர்கள்! ஆனாலும் அவனும் தங்கமும் அவருக்கு அருகிலேயே நின்றார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல்.

இருட்டிவிட்டது என்று வேலனும் தங்கமும் சொன்னதைக் கேட்காது, டோர்ச்லைட்டை கையில் எடுத்துக்கொண்டு அந்தச் சின்னக் கிராமத்தையே சுற்றி வந்தார் மரகதம்.

வேலனும் மனம் கேட்காது அந்தக் கிராமத்தையே சைக்கிளில் ஒரு முறை சுற்றி வந்தான். கவி கிடைத்த பாடு இல்லை!

மகள் செல்லக்கூடும் என்று நினைத்த இடமெல்லாம் ஒருமுறைக்கு இருமுறையாக சுற்றி வந்தவரின் உடலோ சோர்ந்து விழுந்தது. உழைத்து ஓடாய்த் தேய்ந்த உடல் அல்லவா..... இதற்கு மேல் எங்கே தேடுவது என்று தெரியாமல் வீட்டு வாசலிலேயே குந்தியவரின் கண்களில் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.

என் மகளைத் தொலைத்துவிட்டேனே. எங்கே எப்படி யாரிடம் மாட்டித் தவிக்கிறாளோ. ஐகடவுளே என் மகளை என் கண்ணில் காட்டு!

அடித்தடித்தே வளர்த்தேனே. அதுக்குத் தண்டனையாக என் மகளை என்னிடம் இருந்து பிரித்துவிடாதே. நான் விட்ட பிழையை அவள் விட்டுவிடக்கூடாது என்றுதானே கண்டித்தேன்! அதற்கு இதுதான் தண்டனையா என்று ஊமையாக அழுதது அவர் உள்ளம்!

வாசலிலேயே அமர்ந்து இருந்தவர், மெல்ல மெல்லத் தன்னை அறியாமலேயே அநாதையாக நிலத்திலேயே சரிந்தார். கண்கள் மட்டும் உடலின் மொத்த உயிர்ப்பையும் தேக்கி வாசலிலேயே தவம் கிடந்தது மகளுக்காக!

அவருக்கு அருகிலேயே அமர்ந்துகொண்ட தங்கமும் வேலனும் கூட இருந்த இடத்திலேயே சரிந்து உறங்கிவிட்டனர். அன்பை மட்டுமே பண்பாகக் கொண்ட உள்ளங்கள்!

சொந்தமின்றி, கட்டிய கணவன் இன்றி, மகளுக்காக மகளை மட்டுமே உறவாக எண்ணி வாழ்ந்த அந்த உயிர், துடிக்கத் துடிக்க உறக்கமின்றிக் கிடந்தது அந்த மண்ணில்!

அவர் பெற்ற மகளோ எப்போது தூங்கினாள் என்று தெரியாது தூங்கிக்கொண்டு இருந்தாள் விடுதியறை கட்டிலில்.

காலைப்பொழுது நன்றாக புலர்ந்தபின்பே ரவிக்கு முழிப்பு வந்தது. தன்மீது கனமாக
ஏதோ ஒன்று இருக்கவும், படக்கென்று விழிகளைத் திறந்து பார்த்தவனின் நெஞ்சில், தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கவி.
 

Vishakini

Moderator
Staff member
ஒரு பக்கக் கன்னம் அவன் மார்பில் அழுந்திக் கிடக்க, கலைந்தமுடியோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளையே பார்த்திருந்தவனின் கைகள் ஆசையோடு அவளை அணைத்துக்கொண்டது.

மனித வாழ்வின் முக்கிய பக்கத்தை அறிந்துகொண்ட திருப்தி அவன் முகத்தில்! நேற்றைய இரவின் சங்கமத்தை நினைத்து உள்ளம் மகிழ்ந்திருக்க, கைகளோ அவளின் முதுகை வருடிக்கொடுத்தது!

அவனின் வருடலில் தூக்கம் மெல்ல மெல்லக் கலைந்தவள், 'அம்மா, இப்படி இதமாகத் தடவ மாட்டாரே. முதுகில் படார் என்று அடியல்லவா விழும். தலையணை வேறு கதகதப்பாக இருக்கிறதே..' என்று தூக்கக் கலக்கத்தில் ஓடிய சிந்தனையுடன் கண்விழித்தவள், மிக நெருக்கத்தில் இருந்த ரவியின் முகத்தைக் கண்டதும், அதிர்ந்துபோனாள்.

"ஏய், நீ எங்கே இங்கே?" என்று கேட்டுக்கொண்டே அவசரமாக எழுந்தமர்ந்தாள். தன் வீட்டுக்கு இவன் எப்படி வந்தான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது!

பபதில் சொல்லாது அவன் அவளையே பாத்திருக்க, அவளுக்கு இருக்குமிடம் வித்தியாசமாகத் தோன்ற, அதுவும் கட்டிலில் இருப்பதை உணர்ந்து, அந்த அறையைச் சுற்றி வலம் வந்த அவள் விழிகள், வேகமாக ரவியில் நிலைத்தது. நடந்தவை மெல்லப் புரிந்ததும் அதிர்ந்து தன்னைத் தானே குனிந்து பார்த்தாள்.

தாவணியற்ற தன் நிலையைப் பார்த்து அதிர்ந்தவள், அவசரமாக அதைத் தேடினாள். கட்டிலின் ஒரு மூலையில் கிடந்த தாவணியை வேகமாக எடுத்து தன்னைப் போர்த்து மூடிக்கொண்டாள்.

விழித்ததில் இருந்து, அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, தன்னிடமிருந்து எதை மறைக்க இவள் இப்படிப் போர்த்து மூடுகிறாள் என்று நினைத்ததும் சிரிப்பு வந்தது!

அவள் உடலைஅறிந்துகொண்டதாலா அல்லது அவளை வெற்றிகொண்டுவிட்டேன் என்கிற மமதையாலா அந்தச் சிரிப்பு? அவனுக்கே தெரியாது! ஆனால் அந்தச் சிரிப்பில் ஒரு நிறைவும் கலந்திருந்தது. மனம் ஒருவித மயக்கத்தில் மயங்கிக் கிடந்தது என்றால், உடலில் வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு சுகம் பரவிக் கிடந்தது.

அவனின் சிரிப்பைப் பார்த்து முறைத்தவளின் முகம் வீங்கி இருப்பது அப்போதுதான் அவன் கண்களில் பட்டது. அவளை இழுத்துத் தன் மேலேயே சரித்து, "முகமெல்லாம் வீங்கி இருக்கிறது கவி. ஏன்?" என்றபடி அவளின் கன்னத்தை தடவியவனுக்கு, அவள் உடலின் சூடு அப்போதுதான் உறைத்தது!

"ஹேய்! என்ன உடல் சுடுகிறது..." என்றபடி அவளின் நெற்றியிலும் கழுத்திலும் அவன் கைவைத்து பார்க்கவும், சூடான கண்ணீர் அவள் கன்னங்களில் இறங்கி அவன் நெஞ்சில் விழுந்தது!

"என்னம்மா? எதற்காக அழுகிறாய்...?" அவள் மீது ஏதோ ஒருவிதச் சொந்தம் தோன்றியதில், அக்கறையோடு அவன் கேட்க, அந்த அக்கறையில் அழுகை இன்னும் பீறிட, "வ..வ..லிக்கிறது..." என்றாள் திக்கியபடி.

"எங்கே....ஏன்?" என்றவன், ஸ்தம்பித்துப் பேச்சை நிறுத்தினான்.

நேற்றைய அவனின் ஆக்கிரமிப்பை அவள் உடல் தாங்கிக்கொள்ளவில்லை என்பது புரியவும், இயலாமையுடன் கண்களை இறுக மூடித்திறந்தான்.

தன்மீதே கோபம் வந்தது. தான் கொண்ட உறவு அவளை வதைத்திருக்கிறது! அதைக் கூட உணர்ந்துகொள்ளாமல் இருந்திருக்கிறான் அவன். ஆனால் இப்போது என்ன செய்து அவள் உடல் வேதனையைப் போக்குவது என்று தெரியவில்லை அவனுக்கு.

"சாரிமா. அழாதே..." அவளை அரவணைத்து, கன்னங்களை வருடி கண்ணீரைத் துடைத்துவிட்டவன், "நீ இப்படியே படுத்திருக்கிறாயா. நான் வெளியே போய் ஏதாவது மருந்து வாங்கி வருகிறேன்..!" என்று இதமாகக் கேட்டான்.

பதில் சொல்லாமல் கண்ணீர் விட்டவளைக் கட்டிலில் கிடத்திவிட்டு, "படுத்திரு கவி. நான் போய் மருந்து வாங்கிக்கொண்டு, சாப்பிடவும் ஏதாவது வாங்கி வருகிறேன்..." என்று இதமாக சொன்னவன், போர்வையை எடுத்து அவளைப் போர்த்திவிட்டான்.

எழுந்து முகம் கழுவி, 'முதலில் இந்த வேட்டிக்கு ஒரு வழி செய்யவேண்டும்' என்று நினைத்துக்கொண்டே தயாராகி வந்தான்.

கவி கண்மூடி இருந்தபோதும், கேட்ட விசிப்புச் சத்தம் அவள் இன்னும் தூங்கவில்லை என்பதை உணர்த்த, அருகே சென்று அவளின் தலையை மென்மையாக வருடினான்.

அந்த வருடலில் விழித்து அவனைப் பார்த்தவளின் நெற்றியில் குனிந்து மென்மையாக இதழ் பதித்து, "இரு...இதோ வருகிறேன்..." என்றான் இதமாக.

"ம்....ம்..." என்றாள் முனகலாக கவி.

வெளியே விரைந்தவன், தனது கைபேசியை மறுபடியும் இயக்க, தாய் பலமுறை இரவும் இப்போதும் அழைத்திருப்பது தெரிந்தது. தற்காலிகமாக மறந்திருந்த குற்ற உணர்வு தலை தூக்க, தாய்க்கு அழைத்தான்.

"ஹலோ..."

தாய் சொன்ன ஹலோவே அவரின் கோபத்தைச் சொன்னது. மற்றும்படி அவனின் நம்பரை கண்டாலே 'ரவி' என்பதாகத்தான் இருக்கும் அவரின் அழைப்பு.

"சாரிமா.. சாரி! சாரி! என்னால் வரமுடியாத நிலைமா. அவன் நிற்கச் சொன்னான். அதை மீறி வரமுடியவில்லை. கை தெரியாமல் பட்டதில் கைபேசியும் அணைந்துவிட்டிருக்கிறது. இப்போதுதான்மா பார்த்தேன். உடனேயே உங்களை அழைக்கிறேன்...." பொய்யை அள்ளி வீசினான்.

"நீ எப்போது வீட்டுக்கு வருகிறாய்...?"

"அம்மா சாரிமா..." என்று அவன் மீண்டும் ஆரம்பிக்கவும்,

"எப்போது வருகிறாய்..?" அவன் மன்னிப்பை அவர் ஏற்கவில்லை என்பது அந்தக் கேள்வியிலேயே தெரிந்தது.

"இப்போது மருந்து வாங்க வெளியே செல்கிறேன் அம்மா. அதை வாங்கிக் கொடுத்துவிட்டு வருகிறேன் அம்மா, சாரிம்மா..." என்றான் உள்ளே போன குரலில்.

"சரி! வைக்கிறேன்!" என்றவர் வைத்துவிட்டிருந்தார்.

மனம் சுட்டது அவனுக்கு! தாயை வருத்தி விட்டோம் என்று நினைக்கையிலேயே குற்ற உணர்ச்சி தாக்கியது.

அவரை எப்படி சமாளிக்க போகிறோம்? கவியை என்ன செய்வது? அவளுக்கு வேறு உடம்பு முடியாமல் இருக்கிறது. மண்டை வெடித்துவிடும்போல் இருந்தது அவனுக்கு!

செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய நினைத்தவன், முதலில் பார்மசிக்கு சென்று, எதை வாங்குவது என்று தெரியாது பரசிட்டமோல் வாங்கிக்கொண்டான்.

அடுத்ததாக புடவைக்கடைக்குச் சென்று தனக்கு ஒரு ஜீன்சும் ஷர்ட்உம் வாங்கியவன், கவிக்கு சுடிதார் வாங்கலாம் என்றால் பணம் பத்தாமல் இருந்ததில் அவளுக்கு வாங்காது, தன் உடைகளை அங்கேயே மாற்றிக்கொண்டு காலை உணவையும் வாங்கிக்கொண்டு விடுதிக்கு விரைந்தான்.

அவன் சென்றபோது கவி நல்ல உறக்கத்தில் இருந்தாள். உணவை மேசையில் வைத்துவிட்டு, அவளின் அருகே சென்று அமர்ந்து, "கவி... எழுந்திரு.." என்று அவளை மெல்லத் தட்டி எழுப்பினான்.

திறக்க முடியாது எரிந்த கண்களைச் சிரமப்பட்டுத் திறந்து பார்த்தவளைத் தூக்கித் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு, "எழுந்திரு கவி. சாப்பிட்டுவிட்டு மாத்திரையையும் விழுங்கிவிட்டு தூங்கு..." என்றான் அக்கறையாக.

"பல்...பல்லு துலக்கவில்லை..."

"சரி எழுந்திரு. பல்லை துலக்கிவிட்டு சாப்பிடு.."

கட்டிலில் இருந்து எழுந்து குளியலறைக்கு நடக்கச் சிரமப்பட்டவளைத் தன் மீதே சாய்த்து அழைத்துச் சென்று, வரும்போது வாங்கிவந்த பற்பசையையும் பிரஷையும் கொடுத்தான்.

பெரும் சிரமத்துக்கு மத்தியில் காலைக் கடன்களை முடித்து வந்தவளை உணவருந்த வைத்து மாத்திரையும் கொடுத்து படுக்க வைத்தான்.

அதன்பின்னர் தானும் உண்டுவிட்டு வந்தவன், கட்டிலில் படுத்திருந்தவளின் அருகே அமர்ந்து, "இப்போது கொஞ்சம் பரவாய் இல்லையா...?" என்றான் இதமாக.

ஒன்றும் சொல்லாது, சோர்ந்த விழிகளைத் திறந்து அவள் பார்க்கவும், "இப்போதுதானே மாத்திரை விழுங்கினாய். தூங்கி எழுந்தாய் என்றால் சரியாகிவிடும்." என்றான் மென்மையாக.

தலையை ஆட்டினாள் கவி, வேறு என்ன செய்வது என்று தெரியாமல்...

உடல்வலி நினைவுகளின் முன்னால் நின்றதில் தாயைப் பற்றி மறந்திருந்தாள். ஒருவித மயக்க நிலையில் இருந்தாள் அவள்.

"தூங்கு. நீ தூங்கியதும் நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்..." என்று ரவி சொல்லவும், சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவளின் விழிகளில் அச்சம் இருந்தது.

கண்கள் கலங்குவது போல் தெரியவும், "அசடு, பயப்படாமல் படு! நீ எழுவதற்குள் நான் வந்துவிடுவேன். வெளியே கொஞ்சம் வேலை இருக்கிறது." என்றான் உள்ளதைச் சொல்லாமல்.

தன்னையும் தன் தாயிடம் கூட்டிப்போ என்று சொல்வாளோ என்று பயந்து, தான் தன் வீட்டுக்கு தாயைப் பார்க்கப் போகப்போவதை மறைத்தான். அவளுக்கோ அவன் போவதைச் சொல்லவும் அழுகை வந்தது.

கண்கள் கலங்க அவன் கையை இறுகப் பற்றியவளின் கை நடுங்கியது. மனம் கரைய, "தூங்கு..!" என்று செல்லமாக அதட்டியவன், தானும் கட்டிலில் சரிந்து அவளைத் தன்புறமாகத் திருப்பி அணைத்துக்கொண்டான்.

யாருமற்ற அந்த நேரத்தில் அவன் மட்டுமே அவளின் உறவாகத் தெரிந்தான் போலும்! அவளும் அவனோடு ஒண்டிக்கொண்டாள்.

பதமாக ரவி அவள் முதுகை வருடிக் கொடுக்க, அந்த வருடலின் இதத்திலும் மாத்திரையின் வேகத்திலும் அவள் விழிகள் மூடிக்கொண்டது.

நன்றாகத் தூங்கிவிட்டாள் என்று தெரிந்ததும், அவளை விட்டு எழுந்தவன், போர்வையால் அவளின் கழுத்துவரை மூடிவிட்டான்.

பூசைத் தட்டு, தனது வேட்டி அனைத்தையும் எடுத்துக்கொண்டு சத்தமின்றி கதவைப் பூட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான் ரவி.

பஸ்ஸில் போகலாம் என்றாலும் அவள் விழிக்க முதல் வந்துவிட வேண்டும் என்பதால் ஆட்டோவில் புறப்பட்டான். மனமோ படபடத்தது. முகம் பாராமல் தொலைபேசியில் தாயிடம் பொய் சொல்ல முடிந்தபோதும், அவரின் முகம் பார்த்துச் சொல்லப்போகும் பொய்களை நினைத்து மனம் நடுங்கியது அவனுக்கு.

ஆட்டோ வீட்டு வாசலில் நின்றதும், இறங்குவதற்கு கால்கள் ஒத்துழைக்க மறுத்தது. உடலிலும் மனதிலும் பயநடுக்கம் ஓடியது ரவிக்கு. 'அம்மாவின் முகம் பார்த்து எப்படி எதைச் சொல்லப்போகிறேன்....' என்று தவித்தவன், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, மனதால் கடவுளை வேண்டிக்கொண்டு இறங்கினான்.

வீட்டுக்குள் சென்று, "அம்மா...." தயக்கத்தோடு அழைத்தான்.

சமையலறையில் இருந்து வெளியே வந்தவர், ஒரு நொடி மகனின் முகத்தை உற்றுப் பார்த்தார். ரவிக்கோ தாயின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சி தாக்க தலையைக் குனிந்துகொண்டான்.

"பூசைத் தட்டை சுவாமி அறைக்குள் வைத்துவிட்டு வா, சாப்பிடலாம்!"

"அம்மா, அது... நான்..." அவனின் சொல்ல வருவதைக் கேட்காது சகுந்தலா சமையலறை செல்லத் திரும்பவும், "நான் இன்னும் குளிக்கவில்லை..." என்றான் ரவி உள்ளே போன குரலில்....

"குளித்துவிட்டுப் பூசைத் தட்டை வைத்துவிட்டு வா..." என்றவர், வேறு எதுவும் பேசாது சமையல் அறைக்குள் புகுந்துகொண்டார்.

எதுவும் செய்ய முடியாமல் தயங்கியவன், பின் பூசைத் தட்டை விறாந்தை(ஹால்) மேசையில் வைத்துவிட்டு, தன்னுடைய அறைக்குச் சென்றான்.

வேகமாகக் குளித்து, வெளியே செல்லத் தயாராகி அவன் அறையை விட்டு வரவும், சகுந்தலா உணவுகளை சாப்பாட்டு மேசையில் வைக்கவும் சரியாக இருந்தது.

திரும்பவும் வெளியே செல்லப் போகிறான் என்று தெரிந்ததும் கோபம் வந்தது அவருக்கு. ஆனாலும் எதுவும் பேசாது, அவனுக்குத் தட்டை எடுத்து வைத்தார்.

பூசைத் தட்டை சுவாமி அறையில் வைத்துவிட்டு, உடனேயே சாப்பிட வந்து அமர்ந்தவனுக்கு கவியின் நினைவு வரவும் முகம் கன்றியது. அங்கே அவள் உணவில்லாமல் தனித்திருக்க, தான் இங்கே சூடான சுவையான உணவை உண்ணபோகிறோம் என்று கவலையாக இருந்தது.

ஒழுங்காக உண்ணாமல் உணவைப் பிசைந்துகொண்டு இருந்தவனைப் பார்த்து, "முதலில் சாப்பிட்டு முடி ரவி! அம்மாவை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்...." என்றவரைப் பரிதாபமாகப் பார்த்து முழித்தான்.
 

Vishakini

Moderator
Staff member
அவனின் அந்த முழி, அவருக்கு சிறு சிரிப்பை உண்டு பண்ணவும், "சாப்பிடுடா...!" என்றார் அதட்டலாக.

"சாரிமா. அம்மா ப்ளீஸ்..." என்றவனின் குரல் அடைத்துக் கரகரத்தது. கண்கள் வேறு கலங்கியது. பிழைகளை செய்தபோது துணிந்து செய்தவனுக்கு, தாயின் முகத்தை இப்போது நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவன் மனதை அவன் மனசாட்சியே வாள் கொண்டு அறுத்தது. தான் செய்தவைகளை தாய் அறிந்தால் என்ன சொல்வார் என்பதை நினைக்கவே பயமாக இருந்தது அவனுக்கு.

இரவு வீட்டுக்கு வராமல் போனதற்காக இவ்வளவு வருந்துகிறான் என்று நினைத்ததும் சகுந்தலாவின் கோபம் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போனது.

"சரிடா, நான் எதுவும் உன்னைத் திட்டவில்லை. முதலில் சாப்பிடு! எனக்கும் பசிக்கிறது." என்றபடி சாப்பிட அமர்ந்தார் சகுந்தலா.

"அச்சோ அம்மா, நீங்களும் சாப்பிடவில்லையா? பசித்தால் நான் கடையிலாவது வாங்கிச் சாப்பிடுவேன். நீங்கள் எனக்காக காத்திருப்பதா..? இனி இப்படி செய்யாதீர்கள்!" என்று கடிந்தவன், மற்றக் கையால் தாய்க்குத் தட்டை எடுத்து வைத்தான்.

"நீ சாப்பிடு ரவி. நானே எனக்கு எடுத்துச் சாப்பிடுகிறேன். உனக்காக காத்திருந்ததாக நினைத்தாயா? நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்குமாம். எனக்கு பசிக்கவில்லை. அதனால் சாப்பிடவில்லை!" என்றவரும் உணவில் வேகமாக இறங்க, இறங்க மறுத்த உணவை முண்டி விழுங்கினான் ரவி.

தான் வீட்டில் இல்லாததால் தாய் சாப்பிடவில்லை என்பது மனதைத் தாக்கினாலும், தாயின் கோபம் போய்விட்டது என்று புரிந்ததும், அவரை இனிச் சமாளிக்கலாம் என்று திடம் கொண்டவனின் மனம் கவியையே சுற்றி வந்தது.

எழுந்திருப்பாளோ? என்னைத் தேடுகிறாளோ? பசிக்கிறதோ? ச்சே! நான் ஒரு முட்டாள்! உணவு ஏதாவது வாங்கி வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே யோசித்தவன், திரும்பிப் போகையில் அவளுக்குச் சாப்பிடவும் ஏதாவது வாங்கிச் செல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும் சோபாவில் சென்று அமர்ந்தவனுக்கு, தாயிடம் என்ன சொல்வது என்கிற யோசனை ஓடியது.

தன் அருகில் வந்து அமர்ந்த தாயை சிறு திடுக்கிடலோடு திரும்பிப் பார்த்தான்.

"என்ன ரவி, எதற்கு ஒரு மாதிரி இருக்கிறாய்? இப்போதாவது சொல்! யாருடைய அம்மாவுக்கு என்ன?" என்றார் கேட்கவேண்டிய விளக்கத்தின் ஆரம்பமாக.....

அவனால் அவரின் முகம் பார்த்துப் பதில் சொல்ல முடியவில்லை!

"அது அம்மா.... அவனை உங்களுக்கு தெரியாது. அங்கே.. பெரியார் மலையில் இருக்கிறான். அவன் அம்மாவுக்கு ஏதோ நெஞ்சு வலி..." தயைப் பார்க்காது பதில் சொன்னான். குற்றம் செய்த நெஞ்சல்லவா குறுகுறுத்தது!

"என்னது? நெஞ்சுவலியா...? இப்போது பரவாய் இல்லையா...?" என்று பதட்டத்துடன் அக்கறையாகக் கேட்ட தாயை நொந்த மனதுடன் பார்த்தவனுக்கு, அப்போதுதான் ஒரு எண்ணம் தோன்றியது.

"இல்லைமா. இன்னும் சரியாகவில்லை. அதனால் நான் திரும்பவும் போகவேண்டும். அவன் அம்மாவுக்கு சுகமாக வேண்டுமே என்கிற கவலையில் இருக்க, நான் வீட்டுக்கு போகிறேன் என்று எப்படிம்மா சொல்வது..."

தாய் தான் சொல்வதை நம்பிவிட்டார் என்றதும், அவரை முழுவதும் நம்ப வைக்கும் முயற்சியாக மேலும் பொய்யைச் சொன்னான்.

"ஓ... மறுபடியும் போகவேண்டுமா..? ஆனாலும்......."

அவன் உடுத்து வந்த உடையை வைத்தே ஓரளவுக்கு ஊகித்து இருந்தபடியால் அவன் சொன்னது பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை அவருக்கு.

அவனை வெளியே விட மனம் இல்லாத போதும், போகவேண்டாம் என்று மறுப்பதற்கும் மனம் வரவில்லை. தன்னைப் போன்ற ஒரு பெண் முடியாமல் இருக்கையில் எப்படி உதவி செய்ய வேண்டாம் என்று மறுப்பது. ஆனாலும் மனதுக்கு அது இதமாகவும் இல்லை.

இதுவரை ரவி இப்படி வெளியே தங்கியது இல்லை என்பதால் தான் தன் மனது ஒரு மாதிரி இருக்கிறது போலும் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டார்.

"சரிதான் ரவி. ஆனால் இன்றாவது இரவுக்கு அங்கேயே நிற்காமல் வந்துவிடு..." என்றவரின் குரலில் சிறு கண்டிப்பும் இருந்தது.

"அம்மா, அவன் அங்கே தனியே இருக்கையில் எப்படி விட்டுவிட்டு வருவது. முடிந்தவரை வர.. வரப் பாக்கிறேன்..." அடைத்த தொண்டையை செருமிப் பதில் சொன்னான் ரவி.

"அப்படி யார்தான்டா உன் நண்பன்? எனக்குத் தெரியாமல்? அவன் அவன் என்று சொல்கிறாயே. யார் அந்த அவன்? அவனுக்கு பெயர் எதுவும் இல்லையா?"

என்னதான் உதவி என்றாலும் மகன் இரவில் வெளியே தங்குவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அது அவரின் குரலில் தெரிந்தது.

ரவிக்கோ வேறு வழி இல்லை. கவியை அங்கே விட்டுவிட்டு அவனால் இங்கே இருக்க முடியாது. எனவே பயப்பந்தை நெஞ்சுக்குள்ளேயே புதைத்து, தடுமாறிய குரலைத் தெளிவாகக் காட்ட முயன்று, "அது.. அங்கே பெரியார் மலையில் இருக்கிறான்...."

"பெயர் என்னடா..?"

பொறுமை இழந்து வந்தது சகுந்தலாவின் கேள்வி.

"பெயராம்மா.. அவன் பெயர் சாந்தன்..."

"இப்படி ஒரு பெயரில் உனக்கொரு நண்பன் இருப்பதாக நான் கேள்வி பட்டதில்லையே....?" சந்தேகத்துடன் கேட்டார் சகுந்தலா.

"அவன் புதிதாக நம் பள்ளிக்கு வந்திருக்கிறான் அம்மா. நம் ராஜுக்கு கூட அவன் நண்பன்..."

"ஓ..." என்றவரின் குரலில் ஒரு இழுவை இருந்தது. 'அவனின் நண்பனா' என்கிற அர்த்தம் தொனித்தது அந்தக் குரலில்....

"என்ன உதவி வேண்டுமானாலும் செய் ரவி. பணம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன். ஆனால் இரவுக்கு அங்கே வைத்தியசாலையில் தங்காதே. அம்மாவால் இங்கே நிம்மதியாகத் தூங்க முடியாது. நேற்று இரவு நான் ஒரு கண் மூடவில்லை.." மகன் மீதான அக்கறை கொண்ட தாய்ப்பாசம் அவரின் குரலில் இருந்தது.

தாயை நேராகப் பார்க்கமுடியாமல் தலையைக் குனிந்துகொண்டவன், "ம்.. கட்டாயம் முயற்சி செய்கிறேன் அம்மா. ஆனால் வராவிட்டால் பயப்படாதீர்கள்..." என்றான் மெல்ல.

அவனை ஒரு பார்வை பார்த்தவர், "எதுவானாலும் இன்று மட்டும் தான் ரவி! நாளன்று பள்ளி இருக்கிறது. நினைவில் இருக்கட்டும்!" என்றவரின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது!

"சரிம்மா..." என்று இழுத்தான் அவன்.

தாய் சம்மதித்ததில் நிம்மதியாக இருந்தாலும் பயம் போகவில்லை அவனுக்கு...

"என்ன ரவி? வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா..?"

"அம்மா.. அது கொஞ்சம் பணம் வேண்டும்...."

பணம் வேண்டுமானால் கேள் என்று அவர் சொன்னதைச் சாக்காக வைத்து, துணிவைத் திரட்டிக் கேட்டுவிட்டான்.

தயக்கமாக கேட்டவனிடம், "அதற்கு எதற்கு முண்டி விழுங்குகிறாய்...? ஆனால் சிலவுக்கு தந்த பணம் எங்கே?"என்று கேட்டார் அவர்.

"அது சிலவாகிவிட்டது அம்மா. அங்கே வைத்தியசாலையில்...."

அவனுக்கே தான் சொல்லும் பொய்களை நினைத்துக் கசப்பாக இருந்தது. ஒரே நாளில் எவ்வளவு பொய்களைச் சொல்கிறோம். அதுவும் அம்மாவிடம்.... கண்களை இறுக மூடித் திறந்தவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

தாய் கொடுத்த பணத்தை வாங்கியவன் அப்படியே சோபாவில் சரிந்துகொண்டான்.

எதையும் சிந்திக்க முடியவில்லை. சிந்திக்கும் வழியும் தெரியவில்லை. அந்தந்த நேரத்தில் தோன்றுவதை செய்துகொண்டு இருந்தான்.

நேரத்தை பார்த்தவன், கவி எழுந்திருப்பாள் என்று நினைத்து எழுந்து, "அம்மா...." என்றான் தயக்கமாக.

அவனை ஒரு பார்வை பார்த்த சகுந்தலா, வெளியே போகும்போது அவன் மனதை சஞ்சல படுத்தவேண்டாம் என்று நினைத்து, "கவனமாக போய்வா. கைபேசியை அப்பப்போ பார்த்துக்கொள். அவசரத்துக்கு கதைக்க முடியாவிட்டால், பிறகு எதற்கு அது? முடிந்தவரை இரவுக்கு வரப்பார். ஏதாவது தேவை என்றால் எந்த நேரம் என்றாலும் பரவாய் இல்லை அம்மாவைக் கூப்பிடு.." என்றார் அக்கறையாக.

அந்தப் பாசமே அவனைக் குத்திகிழித்தது.

"சரிம்மா… வருகிறேன்..." என்றான் அடைத்த குரலில்.

"ம்.. சரிடா. உன் நண்பனின் அம்மாவுக்கு சுகமானதும் எனக்கு ஒருவார்த்தை சொல்லு. மனதுக்குச் சங்கடமாக இருக்கிறதடா. அந்தச் சாந்தனிடமும் சொல்லு, கவலைப்பட வேண்டாம் என்று...! அவன் அம்மா நன்றாகிவிடுவார்கள்..." என்றவரின் பேச்சைக் கேட்க 'ஐயோ' என்று இருந்தது அவனுக்கு.

"ம்.. சரிம்மா.. சரிம்மா...." என்று எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டியவன் விரைந்தான் வேகமாக. அங்கே நின்று தாயின் முகத்தைப் பார்க்கமுடியவில்லை அவனால்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom